بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

99:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا.

99:1. ஏற்கனவே விளக்கப்பட்டது போல் (அத்தியாயம் 69 - 78) இறை வழிகாட்டுதலின்படி சமூக அமைப்பு எற்பட்டு மறுமலர்ச்சி ஏற்படும்போது, நாட்டில் நடைபெற்று வரும் ஏதேச்சாதிகார ஆட்சிமுறை ஆட்டம் கண்டு விடும்.


وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا.

99:2. தம்மை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று மலைகளைப் போல் செல்வங்களைக் குவித்து வைப்பவர்களின் நிலையும் தகர்த்தெறியப்படும்.


وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا.

99:3. (அப்போது) இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று கற்பனை கூட செய்யாத அம்மக்கள் ஆச்சரியப்பட்டு இவை எல்லாம் எப்படி சாத்தியமாயின என்று புலம்புவார்கள்.


يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا.

99:4. இவை எல்லாம் காலத்தின் சுழலில் நிகழ்பவை ஆகும். காலம் காலமாக செய்து வந்த முறைகேடுகளின் விளைவுகள் விஸ்வரூபம் எடுத்து அவர்கள் முன் இப்போது தோற்றத்திற்கு வருபவை ஆகும்.


بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا.

99:5. இவையெல்லாம் இறைவன் வகுத்துள்ள “மனிதச் செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்ட விதிமுறைகளின் பிரகாரமே நடைபெறுபவை ஆகும்.
இறை ஆட்சியமைப்பு ஏற்படும் கால கட்டத்தில், நியாயமான ஆட்சியை நிலைநாட்ட அபாய சங்கொலி முழங்கும்.


يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ.

99:6. அப்போது சமூக நலத்தொண்டர்கள் மற்றும் குற்றவாளிகள் என இரு அணிகளாக பிரிந்து விடுவார்கள். (36:59) அதில் ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் செயல்களுக்கான பலன்களைப் பெற்றுக் கொள்வார்கள்.


فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ.

99:7. அந்த ஆட்சியமைப்பில் கடுகளவு நன்மையான செயல்களை செய்தாலும், அதன் நற்பலன்களை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.


وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ.

99:8. மேலும் கடுகளவு தீமையான செயல்களை செய்தாலும் அதன் தண்டனை கிடைத்தே தீரும்.
பின் குறிப்பு:திருக்குர்ஆனின் அடிப்படையில் உருவாகும் சமூக அமைப்பில் இவ்வுலகிலேயே இவ்வாறு நடக்கும். எனவே இந்த அத்தியாய தொடக்கத்தில் வரும் பூமி என்ற வார்த்தைக்கு மனிதனின் தவறான ஆட்சி முறை எனவும், மலைகள் என்ற வார்த்தைக்கு செல்வத்தை குவித்து அனுபவிப்பவர்கள் எனவும் உவமானமாக பொருள் கொள்கிறோம். நேரடி மொழி பெயர்ப்பு எடுத்துக் கொண்டால் பிரபஞ்சத்தில் ஏற்படவிருக்கும் புரட்சி என்றே தோன்றுகிறது. தற்சமயமுள்ள விஞ்ஞான அறிவைக் கொண்டு அது எவ்வாறு ஏற்படும் என்று கணித்து நாம்மால் கூற இயலவில்லை.