بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

98:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


لَمْ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَٱلْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلْبَيِّنَةُ.

98:1. இறை வேதத்திற்கு சொந்தக்காரர்கள் என்று தம்மைத்தாமே முறையிட்டுக் கொள்பவர்கள், உண்மையில் பொய்யர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இறை வழிகாட்டுதலைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, தாங்களாகவே ஏற்படுத்தி வைத்துள்ள வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அந்தப் பகுதி மக்களில் தன்னிச்சையாக வாழும் முஷ்ரிக்குகளின் நிலைமையும் அவ்வாறே உள்ளது. இறைவன் புறத்திலிருந்து தக்க ஆதாரங்கள் வராத வரையில் இவ்விரு பிரிவினருக்கிடையே நிலவி வரும் பகைமைக்கு தீர்வு கிடைக்காது. அந்த அதாரங்கள் இந்த குர்ஆன் வடிவில் வந்துள்ளன. மக்களிடையே இருக்கும் பகைமை உணர்வை நீக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.(7:157)


رَسُولٌۭ مِّنَ ٱللَّهِ يَتْلُوا۟ صُحُفًۭا مُّطَهَّرَةًۭ.

98:2. இந்த வழகாட்டுதல்கள் இறைத்தூதர் மூலமாக மக்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இதன் ஆகமங்களை வாக்கியங்களாகவும், அத்தியாயங்களாகவும் வடிவமைத்து சட்ட நூலாகத் தரப்படுகிறது. இந்தக் குர்ஆன் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் தூய்மையாக உள்ளது (பார்க்க 18:1)


فِيهَا كُتُبٌۭ قَيِّمَةٌۭ.

98:3. அதாவது இதில் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் யாவும் நிரந்தரமானவை ஆகும். எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியவையாகும். எக்காலத்திலும் மாற்றத்திற்கு உள்ளாகாதவை ஆகும். இவை மனித வாழ்வின் உயர்ந்த இலக்கை அடைய சிறந்த வழிகளை காட்டக் கூடியதாக உள்ளது.


وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَةُ.

98:4. இந்த அளவிற்கு தெளிவான ஆதாரங்கள் வந்த பின்பும், வேதமுடையவர்கள் இந்த குர்ஆனிய வழிகாட்டுதலை சிந்தித்து மனதார ஏற்று, அதன்படி செயல்பட்டு, மனிதகுல ஓருமைப்பாட்டை மலரச் செய்வதற்குப் பதிலாக, சமுதாயத்தில் மென்மேலும் பிளவை ஏற்படுத்தவே முற்படுகிறார்களே!


وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُوا۟ ٱلزَّكَوٰةَ ۚ وَذَٰلِكَ دِينُ ٱلْقَيِّمَةِ.

98:5. மக்கள் இந்த குர்ஆனிலுள்ள வாழ்க்கை வழிகாட்டுதல்களை மட்டும் ஏற்று அதன்படி சிறப்பாக செயல்பட வேண்டும். அவற்றை விட்டுவிட்டு வேறு யாருடைய வழிமுறைகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மக்களுள் உள்ள வேற்றுமை பகைமை உணர்வுகளை நீக்கி, பொதுவான சமூக நலத்திட்டங்களை தீட்டி, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதன்படி சிறந்ததொரு சமூகஅமைப்பை ஏற்படுத்தி, மனிதவள மேம்பாட்டிற்காக அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும். இத்தகைய வழிமுறைகளைக் கொண்டுத்தான் சிறந்ததொரு நாட்டை உருவாக்க முடியும். இவற்றைத தவிர வேறு என்னதான் குர்ஆனில் கட்டளைகள் இருக்கின்றன? இதுவல்லவா ஒரு தூய்மையான என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய மார்க்கமாக (Permanent Values) இருக்க முடியும?


إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَٱلْمُشْرِكِينَ فِى نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ ۚ أُو۟لَٰٓئِكَ هُمْ شَرُّ ٱلْبَرِيَّةِ.

98:6. ஆனால் வேதமுடையவர்களின் வழிமுறைகளோ வேறு விதமாக உள்ளன. சிலரைத் தவிர பெரும்பாலோர் அவற்றை ஏற்க மறுக்கிறார்கள். தன்னிச்சையாக வாழும் முஷ்ரிக்குகளின் நிலைமையும் அதுவே. இப்படிப்பட்டவர்கள் தம் வாழ்நாளில் உழைத்து பெற்ற எல்லாவற்றையும் இழந்து பேரழிவுக்கு ஆளாவர்கள். அதன்பின் தாளா வேதனைகளில் சிக்கி, அவர்கள் அவதிப்படுவார்கள். மேலும் அவ்வேதனைகள் அவர்களுடைய மரணத்திற்கு பின்பும் தொடரும்.


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أُو۟لَٰٓئِكَ هُمْ خَيْرُ ٱلْبَرِيَّةِ.

98:7. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான சமூகநலத் திட்டங்களைத் தீட்டி உழைப்பவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை வசதிககள் கிடைக்கும்.


جَزَآؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّٰتُ عَدْنٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۖ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهُۥ.

98:8. இவையெல்லாம் இறைவன் நிர்ணயித்த “மனித நற்செயல்களுக்கு ஏற்ற பலன்கள்” என்ற விதிமுறைகளின் படி அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற வகையில் கிடைப்பவை ஆகும். மேலும் அவர்களுக்கு எழில் மிக்க வாழ்ககை வசதிகள் பெருகி, அந்த நாடே சுவர்க்க பூமியாகத் திகழும். தனி நபர்கள் பொருத்தவரை இந்த சந்தோஷமான வாழ்க்கை, இவ்வுலகிலும் மரணத்திற்கு பின்பும் தொடரும். (16:30-32) இப்படியாக இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களின் எண்ணங்களும் செயல்பாடுகளும் இறைவனின் நாட்டத்தோடு பொருந்திப் போய் விடுகிறது. எனவே இறைவனின் வாக்குபடி இவர்களுக்கு வேண்டிய சுவனத்திற்கு ஒப்பான வாழ்க்கை கிடைத்துவிடுகிறது.
இதற்கு மாறாக ஒரு சமுதாயம் முறைக்கேடான செயல்களில் ஈடுபடும்போது, அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். அதிலிருந்து தப்பிப்பது முடியாத காரியம். இது இறைவன் வகுத்த செயல் வினைச் சட்டமாகும். இறைவனின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களிடம், இந்த பயம் இருப்பதால் அவர்களுடைய வாழ்வில் உயர்வும் கண்ணியமும் கிடைக்கின்றன.
தனக்கு சிறந்ததொரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகிறான். மனிதனுக்கு சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கை அமைய வேண்டும் என்பது இறைவனின் நாட்டமும் ஆகும். தானும் தம் பிள்ளைகள் மட்டும் நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்பது மனிதனின் இலக்கு. ஆனால் ஒட்டு மொத்த சமுதாயமும் (உலகமும்) சுமுகமாக வாழ மனிதன் வழிவகை செய்யவேண்டும். அப்போது சந்தோஷங்கள் பன்மடங்காகப் பெருகும். அதில் தன் பங்கிற்கு சந்தோஷங்கள் நிச்சயம் வந்து சேரும் என்பது இறைவனின் நிலைப்பாடு.
அதையும் மீறி இறை வழிகாட்டுதலை ஏற்க மறுத்து தன்வரை வாழ்க்கை வசதிகளையும், ஆட்சி அதிகாரங்களையும் ஏற்படுத்திக் கொண்டு, யாரும் தம்மை அசைக்க முடியாது என்ற மமதையில் வாழ்ந்தவர்களின் நிலமை என்னவானது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பாருங்கள்.