بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

100:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன் குறிப்பு:இந்த அத்தியாயத்தின் முதல் ஐந்து வாசகங்களில் வரும் சம்பவ நிகழ்ச்சிகள் எந்த நாட்டில் எப்போது நடந்தவை என்று குறிப்பிடப்படவில்லை. ஆறாவது வாசகத்திற்குப் பின் உள்ள விஷயத்தை வைத்துப் பார்க்கும் போது, குர்ஆனிய ஆட்சிமுறை இல்லாத அக்காலத்தில காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த சமுதாயத்தில் சூரையாடி வந்த கொள்ளையர்களைப் பற்றிய சம்பவ நிகழ்ச்சி என்று யூகிக்க முடிகிறது. எது எப்படி இருந்தாலும் தற்காப்பு விஷயத்தில் மனிதன் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதிலிருந்து கிடைக்கின்ற படிப்பினை ஆகும்.


وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا.

100:1. கொள்ளைக்கார கும்பலைப் பாருங்கள். மக்கள் நிசப்தமாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, குதிரைகளில் மிக வேகமாக மூச்சு தெரிக்க ஒடி வந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.


فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا.

100:2. குதிரைகளின் ஓட்டத்தால் லாடங்களில் ஏற்படும் தீப்பொறியைப் பாருங்கள்.


فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا.

100:3. எங்கிருந்து வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது,அவர்களுடைய தூக்கத்தைக் கலைத்து அனைத்தையும் அழித்து நாசமாக்கி செல்வதைக் கவனியுங்கள்.


فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا.

100:4. அந்த குதிரைகளின் ஓட்டத்தால் எதையும் பார்க்க முடியாத அளவிற்கு புழுதி கிளம்புகிறது.


فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا.

100:5. இப்படியாக நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் ஊரில் நுழைந்து ஒரு பெரும் புயலை உண்டாக்கிச் சென்று விடுகிறார்கள்.


إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ.

100:6 இதிலிருந்து வெளியாகின்ற விஷயம் என்னவென்று தெரிகிறதா?
செல்வத்தின் மீதுள்ள மோகத்தால் மனிதன் பைத்தியம் பிடித்தவன் போல், தான் செய்வது என்ன என்பதையும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவன் மனிதத் தன்மையிலிருந்து கீழிறங்கி மனித நேயத்தின் அஸ்திவாரத்தையே சுக்குநூறாக்கி விடுகின்றான். இப்படியாக அவன் மிருகத்தை விட மோசமாக நடந்து கொள்கிறான். தனக்கு அளிக்கப்பட்ட ஆற்றல்களை வைத்து இறைவனின் அருட்கொடைகளை உழைத்துப் பெற்றுக் கொண்டு, பிறருக்கும் கொடுத்து உதவுவதற்குப் பதிலாக, பிறர் உழைப்பில் கிடைத்த வாழ்வாதாரங்களை கொள்ளையடிப்பதா? இப்படியாகச் செல்வங்களை பெருக்கிக்கொள்வது இறைவனின் சட்ட விதிமுறைக்கு நேர் மாற்றமான நன்றிகெட்ட செயலாயிற்றே!


وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ.

100:7. அது மட்டுமின்றி வேடிக்கை என்னவென்றால் தான் செய்யும் முறைக்கேடான செயல்களுக்கு வெட்கப்பட்டு வருந்துவதற்குப் பதிலாக, தான் செய்வது அனைத்தும் வீர தீரச் செயல்கள் என்று பெருமிதப்பட்டு அத்தகைய செல்வங்களை ஈட்டிக்கொள்வதில் வரம்பு மீறி செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றான்.
தாம் கொள்ளையடிப்பது செல்வத்தின் மீதுள்ள மோகத்தால் அல்ல. மாறாக அதன் குறிக்கோள் வேறு விதமாக இருக்கிறது என்று, தாம் செய்யும் காரியங்களுக்கு ஆயிரம் நியாயத்தை கற்பித்தாலும் இறைவன் விதித்த மனித செயலுக்கேற்ற விளைவுகள் என்ற சட்டம் மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளியாக்கியே தீருமே.


وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ.

100:8. எனவேதான் அவன் சாகும் வரையில் அந்த பேராசையிலேயே மூழ்கி விடுகிறான். (102:1-2)


۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ.

100:9. இறைவன் விதித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டம் புதைந்து கிடக்கும் உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்பதை அவன் கவனிக்கத் தவறி விட்டானா?


وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ.

100:10. ஏக இறைவன் மனிதனின் மனதில் ஊடுருவிச் செல்லும் விஷயங்களையும் அறிந்துகொள்ளும் பேராற்றல் உடையவனாயிற்றே.


إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ.

100:11. இப்படியாக “மனித செயல்களின் விளைவுகள்” தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் அவர்கள் மறைமுகமாகச் செயல்பட்டு வந்தவை எல்லாம் அம்பலமாகிவிடும்.
அவர்கள் செய்து வரும் எல்லா விஷயங்களைப் பற்றிய உண்மை நிலையும் அல்லாஹ்வுக்குத் தெரியும். அவற்றை தெரிவிக்கவும் செய்கின்றான் - அதாவது சொத்துக்களைக் குவிப்பதன் நோக்கம், அவற்றின் மீதுள்ள மோகத்தால் அல்ல என்று அந்த செல்வந்தர்கள் ஆயிரம் காரணங்களைக் காட்டுவார்கள். அப்படி சேகரித்து வைப்பது நல்ல காரியம்தான் என்று பல வகையில் நியாயப்படுத்திப் பேசுவார்கள். இவையெல்லாம் வெறும் வாய்ப் பேச்சுதான் என்பதை அவர்களுடைய செயல்பாடுகளே காட்டிக் கொடுத்து விடுகிறது. ஆனால் சமத்துவ அடிப்படையில் மனிதன் வாழ முற்படும்போது, இப்படிப்பட்டவர்களின் உண்மை நிலை உலகத்தார்க்குப் படம் பிடித்துக் காட்டிவிடும்.
எக்காலத்தில் வாழும் மனிதன் ஆனாலும் சரியே. கொள்ளையடிப்பது என்பது காலம் காலமாக நடந்து வந்த சம்பவ நிகழ்ச்சிகளே. நாகரிகம் வளர வளர அதன் செயல் வடிவங்கள் தான் மாறி இருக்கின்றனவே அன்றி, கொள்ளையடிப்பது இன்னும் இந்த உலகை விட்டு நீங்கவே இல்லை. தற்போதுள்ள நடைமுறை உலகமே இதற்கு சாட்சி. இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும் அனைவருக்கும் என்று சமத்துவம் - சம தர்மம் என்ற அடிப்படையில் எதுவரை மனிதன் வாழ முன்வரவில்லையோ,அது வரையில் இம்மாதிரியான கேடுகள் ஏதாவது ரூபத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.