بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
97:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன் குறிப்பு:" வஹீ" என்னும் இறைவழிகாட்டுதல்கள் காலம் காலமாக தொடர்ந்து ரசூல்கள் எனப்படும் இறைத் தூதர்கள் மூலமாக இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டு வந்தன. அந்த வரிசையில் ஈஸா நபி (அலை) அவர்களுடைய மறைவுக்குப் பின் ஏறத்தாழ 650 ஆண்டுகள் கழிந்து, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக இந்த குர்ஆன் அளிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இறை வேதங்கள் மக்களிடையே இருந்து வந்த போதிலும், அவை நடைமுறையில் இல்லை. மேலும் அவற்றில் பல விஷயங்களை மாற்றி அமைத்துக் கொண்டார்கள் (5:77-78)
ஆக மக்கள் வழி தவறி நடக்கவே உலகமே குழப்பங்களாலும் கலவரங்களாலும் மூழ்கி இருந்தது. (30:41) இதை இருண்டகாலம் (Dark Age) என்றே சொல்லலாம். அப்படி ஒரு நிலையில், உலக மக்கள் புத்துயிர் பெற்று விளங்க, புதிய ஏற்பாடுகளுடன் இந்தக் குர்ஆன், சுடர் விளக்காக இறக்கி அருளப்பட்டது. இதன் அடிப்படையில், முஹம்மது நபி(ஸல்) மற்றும் அவருக்கு துணைப் புரிந்த தியாக உள்ளங்கள் படைத்த சஹாபா பெருமக்களும் உலக வரைப்படத்தையே புதுக் கோலங்களுடன் மாற்றி அமைத்து காட்டி விட்டார்கள். இன்றைக்கும் அது மறுக்க முடியாத ஒரு வரலாறாக பதிந்துவிட்டது. இதை “அசுர வேகத்தில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி” (Emergent Evolution) என்றே சொல்லலாம்.
إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ.
97:1. குழப்பங்களாலும் நாசகர செயல்களினாலும் உலகமே இருளில் மூழ்கியிருந்த அந்தக் கால கட்டத்தில் சுடர் விளக்காய் (14:1) புதிய அளவுகோல்களுடனும், அதிகாரங்களுடனும் இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆக இந்தக் குர்ஆன் எந்த இரவில் முதன் முதலில் இறக்கியருளப்பட்டதோ, “அந்த இரவு”, இந்த உலகை புத்துயிர் அளிக்கக் கூடிய பாக்கியமிக்க இரவாகும். (2:185) (44:1-4) (81:17-19)
وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ.
97:2.“அந்த இரவு” பற்றிய உண்மை என்ன என்பதை இறைவனை விட சிறந்த முறையில் யாரால் விளக்க முடியும் ?
لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ شَهْرٍۢ.
97:3. வஹீ என்னும் இறை வழிகாட்டுதல்கள் இல்லாத காலத்தில் வாழ்ந்த ஆயிரம் மாதங்களையும் விட இந்த வஹீச் செய்திகளின்படி வாழும் ஓர் இரவுப் பொழுது அதிக சிறப்பானதாகும்.
உண்மை விஷயம் என்னவென்றால் இந்தக் குர்ஆன் இறக்கியருள துவங்கிய இரவு, வரவிருக்கும் மாபெரும் எழில்மிக்க வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிப்பதாக உள்ளது. இறைக் கோட்பாடுகளின் அடிப்படையில் படிப்படியாக இந்த உலகம் நடைபெற,
تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍۢ.
97:4. பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய “மலக்கு”களும், இறைவழிகாட்டுதலாகிய “ரூஹ்”வும் ஓருங்கிணைந்து செயல்படும் வகையில் இந்தக் குர்ஆன் இறக்கியருளப்படுகிறது. (பார்க்க 78:38) மேலும் மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட இறைவனின் எல்லா செயல் திட்டங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
எனவே மனிதன் இதனடிப்படையில் பிரபஞ்ச படைப்புகளை ஆய்வு செய்து, அதன் மூலம் கிடைப்பவற்றை இறை வழிகாட்டுதலின் படி பயன்படுத்தினால், மனித பிரச்னைகளுக்கு விடுவுகாலம் பிறக்கும். உதாரணத்திற்கு நீரில் அடங்கியுள்ள சக்தியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி போன்றவற்றைத் தயாரித்து அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் மக்களுக்குப் பலன்கள் கிடைக்கும். அதை சினிமா தொலைக்காட்சி போன்றவற்றில் ஆபாச காட்சிகளை பரப்ப பயன்படுத்தினால் சமூக சீரழிவுதான் ஏற்படும்.
سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ.
97:5. இப்படியாக ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, இதுவரையில் இருந்து வந்த குழப்பங்களும் இரத்த களரிகளும் நீங்கி, உலகில் நிலையான அமைதியும் சாந்தியும் ஏற்பட்டு வரும். மேலும் உலகில் நடைபெற்று வரும் எல்லா வகையான ஒழுங்கீனமும் அநியாயங்களும் நீங்கி இந்த உலகம் இறைவனின் வழிகாட்டுதல்களின் ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும் (39:29)