بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
96:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ.
96:1. சமூக சீர்த்திருத்தவாதியே! அகிலங்கள் அனைத்தையும் படைத்த ஏக இறைவனின் சிறப்பு குணநலன்களில் ஒன்றான பரிபாலன அமைப்பு முறையின் சிறப்புகளைப் பற்றி மக்களிடம் எடுத்துப்பாயாக. அவற்றைப் படைத்த இறைவன் தான் அனைவரின் பரிபாலனத்திற்காகவும் ஏற்பாடு செய்துள்ளான் என்பதையும் மக்களிடம் எடுத்துரைப்பீராக.
“ரப்பு” என்ற சொல் இறைவனைக் குறிக்கும். இது அல்லாஹ்வின் தனி சிறப்பு குணநலங்களில் ஒன்றாகும். ரப்பு என்றால் ஒவ்வொரு படைப்பும் தன் ஆரம்ப நிலையிலிருந்து வளர்ச்சிப் பெற்று இறுதி இலக்கு வரை சென்றடையத் தேவையான அனைத்து உபக்கரணங்களையும் ஏற்படுத்தி தருபவனைக் குறிக்கும் சொல்லாகும்.
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ.
96:2. இறைவனின் செயல் திட்டத்தின் படி மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அலஃக் என்கின்ற இரத்தக் கட்டியின் நிலையிலிருந்து படைக்கப்பட்டான்.
பிரபஞ்சத்திலுள்ள படைப்புகளில் மனிதனுடைய நிலை மட்டும் தனித்து காணப்படுகிறது. ஒரு பக்கம் இவன் கூட்டமைப்பு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து தான் வாழ முடியும் என்றிருக்க, மறுபக்கம் இறை வழிக்காட்டுதலின்றி வாழ்ந்து வந்தால் ஒவ்வொருவரிடமும் சுயநலப் போக்கு மிகைத்து, தத்தம் வாழ்வாதாரங்களைப் பெருக்கிக் கொள்வதிலேயே முழ்கி விடுகிறான். இப்படியாக அவன் மற்றவர்களின் இரத்தத்தை உருஞ்சுபவனாகவே ஆகிவிடுகின்றான். இந்த போக்கிற்கு தீர்வு காண ஒரே ஒரு வழி உண்டு.
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ.
96:3. கண்ணியமிக்க இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட வாழ்க்கை நெறிமுறையைப் பற்றி மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
உலகிலுள்ள ஒட்டு மொத்த (உயிரினங்களும்) மனிதர்களும் சிறப்பாக வாழ இறைவன் புறத்திலிருந்து அளவிலா வாழ்வாதார ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. எனவே “அனைத்தும் அனைவருக்கும் சமமானதே” என்ற ஒரு பொதுவான செயல் திட்டத்தின் (Common Minimum Programme) கீழ் ஒட்டு மொத்த மனித இனத்தையும் ஓரணியாக கொண்டு வந்து, ஒரு சிறந்த ஆட்சிமுறையை ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போதுதான் இந்த இழுபறி நிலைக்கு தீர்வு காணமுடியும். இதுவே இறைவன் வகுத்த வாழ்க்கை நெறிமுறையாகும்.
மனிதனின் இந்தக் குறிக்கோள் நிறைவேறவும், தம் எண்ணங்களை மற்றவர்க்கு எடுத்துரைக்கவும் அவனுக்கு எழுத்து வடிவமைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படியாக தம்மில் இனம் மற்றும் கலாச்சார வேற்றுமை இருக்கும் போதும்
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ.
96:4. உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் கடித போக்குவரத்தின் (Post and Tele-Communication) மூலமாக தத்தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. அத்துடன் உலகம் முழுதும் ஒரு கூட்டுக் குடும்பம் என்பது போல் மனிதனுள் நெருக்கம் ஏற்பட்டு வருகிறது. மேலும் எழுத்து வடிவத்தின் மூலமே மார்க்க உண்மைகளும் உலகம் முழுவதும் பரவுகிறது.
عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ.
96:5. இருப்பினும் இறைவழிகாட்டுதல் மூலமாக அவனுடைய சிந்தனைப் புலன்களுக்கு எட்ட முடியாத விசேஷ ஞானங்களும் இறைவன் புறத்திலிருந்து அருளப்படுகின்றன.
كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ. ᴑ
96:6. ஆனால் மனிதனோ “தன்நலம் காத்துக் கொள்ளுதல்” என்ற அடிப்படையில் சமூகஅமைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றான்.
أ َن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ.ᴑ
96:7. இதனால் இறைவழிகாட்டுதல்கள் எல்லாம் தேவையற்றவை என அவனை எண்ண வைக்கிறது.
அதனால் சமுதாயத்தில் ஒவ்வொருவனும் தனக்காக சுருட்டிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து விடுகின்றான். மற்றவர்களைப் பற்றிய அக்கறை நமக்குத் தேவையில்லை என்ற குணம் அவனுள் வளர்ந்து விடுகிறது. இவ்வாறாக ஒட்டுமொத்த மனிதகுல மேம்பாட்டிற்காக செய்யப்படும் ஆட்சிமுறைக்கு எதிராகச் செயல்படவும் செய்கிறான்.
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ.
96:8. ஆனால் அவன் இறைவழிகாட்டுதலுக்கு எதிராக எவ்வளவு தான் செயல்பட்டாலும், ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த குர்ஆனிய ஆட்சிமுறையின் பக்கம் வந்தே ஆகவேண்டும். அவனுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண இதை விட்டால் அவனுக்கு வேறு எந்த வழிமுறையும் கிடையாது.
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ.ᴑ
96:9. இறை வழிகாட்டுதல்கலை ஏற்க மறுப்பவனுடைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கவனித்தீரா?
عَبْدًا إِذَا صَلَّىٰٓ.ᴑ
96:10. அவன் இறைவழிகாட்டுதலுக்கு மாறு செய்வதோடு மற்றவர்களையும் இதை ஏற்றுக் கொள்ளாதவாறு குறுக்கிடுகிறான்.
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ.ᴑ
96:11. நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! ஒருவர், தானும் நேரான வழியைக் கடைப்பிடித்து, மற்றவர்களையும் அதன் பலன்களை எடுத்துச் சொல்லி
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ.ᴑ
96:12. நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகிறார். அதற்குத் தடை விதிக்க யாருக்குத் தான் உரிமை இருக்க முடியும்?
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ.
96:13. மேலும் இவ்வாறு தடைகளைச் செய்பவர்கள் மக்களிடம், "அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணி காக்கும் ஆட்சிமுறை" என்பதெல்லாம் பொய்யான கற்பனையே. இப்படி ஒருபோதும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தவறான வதந்திகளை பரப்பி, “தனிநபர் நலன் காக்கும் வாழ்க்கை” முறையே சிறந்தது என்று கூறி மனித வளம் வளராதபடி குறுக்கிட்டால் எப்படி நியாயமாகும்?
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ.
96:14. இறைவன் வகுத்துள்ள “மனித செயலுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டம் அவனுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணித்து வருகிறது என்பதை அவன் கவனிக்கவில்லையா?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ.
96:15. இப்படியாக நிரந்தரமாகத் தொடர்ந்து தடைசெய்து கொண்டே செல்லலாம். நம்மை தட்டி கேட்க யாருமில்லை என்ற எண்ணத்தில் இருக்கின்றானா? ஒரு போதுமில்லை. அவனுடைய இந்த போக்கினை கைவிடவில்லை என்றால் எவ்வளவு பெரிய பதவி வகிப்பவனாக இருந்தாலும் சரி! அவனுடைய குடுமியைப் பிடித்து இழுத்து சிறையில் அடைப்போம்.
نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ.
96:16. இப்படி பொய்ப்பிப்பவர்கள் - இறைவனின் ஆட்சியமைப்பை தோல்வியுற செய்பவர்கள் - இறைவன் விதித்த நெறிமுறைக்கு மாறு செய்பவர்கள் - இத்தகைய குற்றவாளிகள் தம்மைத் தாமே உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
فَلْيَدْعُ نَادِيَهُۥ.
96:17. இத்தகையவர்களுக்கு தைரியம் இருந்தால் களத்தில் சந்திக்க தம் தலைவர்களையும் அழைத்துக் கொள்ளட்டும்.
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ.
96:18. தர்மத்தை நிலைநாட்ட இவர்களை எதிர்த்து போராட, சமூக நலனைக் காக்கும் வீரர்களுக்கு அறைகூவல் விடப்படும்.
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩.
96:19. சமுதாய சீர்திருத்தவாதியே! அவர்களுடைய பேச்சுகளுக்கு நீர் செவி சாய்க்க வேண்டியதில்லை. இறை நெறிமுறைகளை முழு அளவில் செயலாக்கம் பெற தீவிரமாக செயல்படுவீராக. இவ்வாறாக உம்முடைய ஒவ்வொரு முயற்சியும் இறைவன் நிர்ணயித்த இலக்கை விரைவில் அடையச் செய்யும்.