بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

95:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன் குறிப்பு: ஏற்கனவே சொல்லப்பட்டது போல தர்மத்தை நிலைநாட்ட அதர்மத்துடன் போராட வேண்டி வரும். ஏனெனில் மனிதனுக்கு சுய அதிகாரமும் சுதந்திரமும் அளிக்கப்பட்டு இருப்பதால், அவன் சுயமாக ஒரு சமூகஅமைப்பை உருவாக்கி அதன்படி வாழ்ந்தும் வருகிறான். அதுதான் தலைச்சிறந்த கலாச்சாரம் என்றும் எண்ணிக் கொள்கிறான்.
அப்படி ஒரு நிலையில் புதிய சித்தாந்தத்தை அவன் முன் கொண்டு வரும்போது, பலருக்கு அதன் பலன்களைப் பற்றி புரியாமல் போய் விடுகிறது. அதனால் மூதாதையர் காலத்து பாரம்பரியத்தை விட்டுவிடுவதா என்ற அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மேலும் சிலர் இந்த புதிய சமூக ஏற்பாட்டினால் தம் பதவி, அந்தஸ்து மற்றும் செல்வமும், சொகுசு வாழ்வும் பறிபோய்விடுமே என்ற அச்சத்தின் காரணத்திற்காகவும் எதிர்ப்பார்கள். இப்படி நடப்பது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக தொன்றுதொட்டு வந்த எதிர்ப்புகள்தான் இவை. எல்லா இறைத் தூதர்கள் விஷயத்திலும் அப்படித் தான் நடந்தன. இப்பவும் அப்படித் தான் நடக்கும். அம்மாதிரியான எதிர்ப்புகள் விஷயமாக வரலாற்று ஆதாரங்களை; முன் வைத்து இந்த அத்தியாயம் தொடங்குகிறது.


وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ.

95:1. சமூக தீர்திருத்தவாதியே! "தீன்" என்னும் மலை அடிவாரத்தில் நூஹ் நபி, மற்றும் "ஜைத்தூன்" என்னும் மலைப் பிரதேசத்தில் ஈஸா நபி இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து சீர்திருத்தங்களை கொண்டுவர முற்பட்ட போதும் -


وَطُورِ سِينِينَ.

95:2. "தூர்" என்னும் மலை பிரதேசத்தில் மூஸா நபி சீர்திருத்தங்களைக் கொண்டுவர முற்பட்ட போதும் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.


وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ.

95:3. அதே போன்று மக்கமா நகர மக்களிடமும் இறை வழிகாட்டுதலை எடுத்துரைத்து சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் போதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அதாவது உலக அமைதிக்காக எடுத்துரைக்கப்படும் இந்த மாபெரும் மார்க்கம் (2:125) இந்த நகரமும் எதிர்ப்புக்குள்ளாகிறது. (6:112) அதே போன்று திருக்குர்ஆனின் போதனைகளை இன்றைய காலகட்டத்தில் எடுத்துரைக்கும் போதும், எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.


لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ.

95:4. ஏனெனில் இறைவன் தன் செயல் திட்டப்படி மனிதனை மிகவும் அழகியமுறையில், சுய சிந்தனையுடன் வாழும் தகுதியை உடைவனாக படைத்துள்ளான்.


ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ.

95:5. ஆனால் அவனுடைய சுயநலப் போக்குகளால், இறைவன் நிர்ணயித்த விதிமுறைப்படி, அவனிடம் இருக்க வேண்டிய மனித நேயம் அவனை விட்டு நீங்கி, அவனுள் தீய பழக்க வழக்கங்கள் வளர்ந்து விடுகிறது. எனவே அவன் அடிமட்ட அளவிற்கு தாழ்ந்து விடுகிறான்.
இறைவனிடமிருந்து பிறப்பிக்கப்படும் இறைவழிகாட்டுதல் அவனுள் மீண்டும் மனித நேயம் வளர வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் சுயநலக்காரக் கூட்டம் அதை ஏற்க மறுத்து அதை எதிர்க்கவே செய்கிறது. இதனால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவர்களுக்கும், அதை எதிர்ப்பவர்களுக்கும் இடையே மோதல் வலுக்கிறது. இறுதியில் உயர் இலட்சியங்களைக் கொண்ட கூட்டம் வெற்றி பெற்று அந்த சமுதாயத்தில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படுகிறது. அதன்பின் காலப் போக்கில் மீண்டும் சுயநலம் அவர்களுள் தலைதூக்க ஆரம்பித்து விடுகிறது. அதனால் மீண்டும் அவர்களுள் அந்த மிருகத் தன்மை வளர்ந்து விடுகிறது. ஆக இப்படியாகத் தான் காலத்தின் சக்கரம் சுழன்று வந்துள்ளது. (பார்க்க 39:23)


إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ.

95:6. மக்களிடையே வளர்ந்துள்ள சுயநலப் போக்கை நிரந்தரமாக நீக்கி, அவர்களை ஒழுக்க மாண்புகளின் உயர்நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்றால், இறைவன் வகுத்துத் தந்துள்ள வழிகாட்டுதலின்படி சமூதாயத்தை உருவாக்க வேண்டும். மேலும் ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வர வழிவகை செய்யவேண்டும். இப்படி அவர்களுடைய தொடர் முயற்சிகளின் பலனாக அந்தச் சமுதாயத்திலுள்ள சீர்கேடுகள் நீங்கி சிறந்த சமுதாயமாக படிப்படியாக உயரும். அவர்களுக்குக் கிடைக்கின்ற இந்த வளர்ச்சி என்றைக்கும் குன்றாது. (11:108) (84:25)
மேலும் கூட்டு ஸலாத் முறையைக் கொண்டு மார்க்கத்தின் சிறப்புகளையும் அதன் பலன்களையும் மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் தொடர்ந்து எடுத்துரைத்து, சமுதாய ஒற்றுமையை கட்டிக்காக்க வேண்டும். அப்போது தான் மேற்சொன்ன இழி நிலைக்கு நிலையான தீர்வு காண முடியும்.


فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ.

95:7. இறைவன் விதித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற விதிமுறைகள் விஷயமாக இந்த அளவிற்கு வரலாற்றுச் சான்றுகளையும், ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்த பின்பும், எந்த ஆதாரங்களை வைத்து அவர்கள் பொய்ப்பிக்க முடியும்?


أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ.

95:8. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் இவ்வுலகில் நடைமுறையில் இல்லை என்பதற்கு அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டமே சாட்சியாக இருக்கும்போது, இறுதியாக நடைபெறவிருக்கும் தீர்ப்பும், இதன் பிரகாரமே ஏற்படும் என்பதில் இனி அவர்களுக்கு என்ன சந்தேகம் இருக்கப் போகிறது ?
பின்குறிப்பு:ஆகவே குர்ஆனிய வழிகாட்டுதலின் கருவூலமே ஒரு தலைசிறந்த சமூக அமைப்பையும் அதனடிப்படையில் ஆட்சிமுறை ஏற்படுத்துவதுமாகும். அந்த ஆட்சியில் ஆதிக்கமும் அதிகாரமும் (Sovereignty) அல்லாஹ் விதித்த சட்டங்களுக்கே உரியதாக இருக்கும் - அந்த சட்டம் என்பது குர்ஆனிய கொள்கை கோட்பாடுகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். இதன் தொடர் போதனைகளைக் கொண்டுதான் மனித மாண்புகள் ஒரு நாட்டில் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்ய முடியும். மக்களுள் சுயநலப்போக்கு வளர்வதிலிருந்து காப்பாற்ற முடியும். இதை விட்டால் மனிதனிடம் வேறு எந்த வழிமுறையும் இல்லை என்பது நமக்குப் புலனாகிறது.