بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

94:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன் குறிப்பு:நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒவ்வொரு இறைத் தூதரும் இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு ஆட்சிமைப்பை உருவாக்கிட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வந்தார்கள். அந்த வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இந்தப் பணியில் தீவரமாகச் செயல்பட்டார். இருப்பினும் பலவகையில் சிரமங்களையும் தடைகளையும் சந்திக்க நேர்ந்தன. அதனால் தன் இலட்சியங்கள் நிறைவேறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. அவருக்கு சற்று மனச் சஞ்சலம் உண்டானது. அவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த அத்தியாயம் அமைந்துள்ளது.
இந்த மாபெரும் அமைப்பை உருவாக்குவதில் இந்த அளவிற்கு அல்லும் பகலும் நீ அயராது உழைத்தும், அதன் பலன்களை அடைவதில் கால தாமதம் ஏற்படுவதை எண்ணி உன் மனம் சஞ்சலப்பட வேண்டியதில்லை. இறைவழிகாட்டுதல்கள் கிடைப்பதற்கு முன்பும், அதைத் தொடர்ந்து இந்த வழிகாட்டுதல்கள் கிடைத்து ஆட்சியமைப்பை உருவாக்;க ஆரம்பிக்கும் போதும் இருந்த சிக்கல்களும் இருள் சூழ்ந்த நிலையும் இப்போது இல்லை.


أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ.ᴑ

94:1. சமூக சீர்திருத்தவாதியே! இந்த வழிகாட்டுதல்கள் கிடைத்த பின்பு நம்மால் செய்ய இயலாது என்று நினைத்திருந்த செயல்திட்டங்களை எல்லாம், உன் தொடர் முயற்சிகளால் செய்து முடிக்க விரிவான வழிகள் பிறந்தன. அதோடு விரிவான அனுபவங்களும், சிந்தனை சக்திகளும் உமக்குள் வளர்ந்தன. மலைபோல் தோன்றிய காரியங்கள் எல்லாம் இப்போது உனக்கு எளிதாகத் தோன்றுகின்றன. அந்த அளவிற்கு தைரியமும் பரந்த மனப்பான்மையும் உமக்குள் வளர்ந்து விட்டது. (20:25)


وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ.ᴑ

94:2. இந்த மார்க்க உண்மைகளை எடுத்துரைத்த போது, தொடக்கக் காலத்தில் இருந்த கடினமான உழைப்பும், அதன் கசப்பான அனுபவங்களையும் எண்ணிப் பார். அப்போது பொறுப்புகளின் சுமைகள் உன் முதுகை முறித்துக் கொண்டிருந்தன.


ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ.ᴑ

94:3. இறைவனின் நியதிப்படி மக்கள் மத்தியில் தோழமை உணர்வு ஏற்பட்டு, அவர்களும் உன் செயல்திட்டத்தில் பங்கேற்றிய பின் சிறுக சிறுக அந்த சுமைகள் குறைய ஆரம்பித்தன.


وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ.

94:4. ஆரம்ப கால கட்டத்தில் உன் பேச்சை ஆர்வத்துடன் கேட்க யாரும் முன் வரவில்லை. அப்படியும் உன் போதனைகள் பரவியபோது, நாலாப் புறத்திலிருந்து ஏளனமும் எதிர்ப்பும் வலுத்தன. ஆனால் சிறுக சிறுக இந்த நிலை மாறி இப்போது உன்னைப் பற்றி பேசினால் மதிப்பும் மறியாதையுடனும் பேசுகிறார்கள். உன்னுடைய பெயரும் புகழும் வெகு தூரம் வரையில் பரவி வருகிறது. நீர் மனிதனாய் பிறவி எடுத்ததன் முழு பலனையும் பெற்று விட்டாய். குர்ஆனிய வழிகாட்டுதலின் புகழ் ஓங்கிய வண்ணம் இருக்கிறது.


فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا.ᴑ

94:5 இப்படியாக உயர்ந்த இலட்சியங்களுக்காக பாடுபடும்போது, ஆரம்பத்தில் சிரமங்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் எத்தனை சிரமங்கள் ஏற்பட்டாலும்; அதை எதிர்கொண்டு சமாளித்து, தம் இலட்சியங்களில் நிலைத்து நின்று செயல்பட்டு வந்தால் (2:153-157)


إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا.ᴑ

94:6.அந்த கஷ்டங்கள் நாளடைவில் தீர்ந்து, சுலபமான வழிமுறைகள் பிறக்கும் என்பதே இறைவன் புறத்திலிருந்து வரும் ஆணித்தரமான செய்தி.


فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ.ᴑ

94:7. மேலும் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள். இந்த இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஆட்சியமைப்பு உருவாகி விட்டால், உன் பணி முடிந்துவிட்டது என்று எண்ணிக் கொள்ளாதீர். இதன்பிறகு புதிய அத்தியாயங்கள் துவங்கும். அதன்படி உலக நாடுகள் முழுதும் இப்படிப்பட்ட சிறப்பான ஆட்சிமுறை ஏற்பட வழிவகை செய்ய வேண்டியிருக்கும். இதற்காகவும் துணிந்து செயல்பட வேண்டி வரும்.


وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب.ᴑ

94:8. ஆக நீ, முதல் படித்தரத்தை கடந்தபின் உமது இறைவனின் செயல்திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராகிவிடு.
பின் குறிப்பு:சிந்தனையாளர்களே ! இந்த அத்தியாயம் நபி (ஸல்) அவர்களை நோக்கி சொல்லப்பட்டிருந்தாலும், யாரெல்லாம் இந்த மாபெரும் இறைச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன் வருகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பொருந்தும். அப்படி செய்ய முன்வருபவர்கள் ஒரு விஷயத்தை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த செயல்திட்டம் வெற்றிபெற்று நடைமுறையில் வரும்போது, அவர்களுடைய கவனம் வேறு திசையை நோக்கி சென்று விடக்கூடாது. அதாவது இந்த உலகில் தோன்றிய மற்ற தலைவர்கள் தம் இலட்சியங்களைக் கொண்டு எழுச்சி பெற்றார்கள். பெரிய பெரிய வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அதில் அவர்கள் வெற்றிபெற்று பதவி அந்தஸ்து என்று உயர்ந்தபோது தம் இலட்சியங்களை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள். இது அவர்கள் செய்த மிகப் பெரிய துரோகமாகும். மூஃமின்களாகிய உங்களுடைய நடத்தை இவ்வாறு இருக்கக்கூடாது. மாறாக சிரமங்கள் பல இருந்தாலும் வெற்றி வாகை சூடினாலும் உங்களுடைய ஒவ்வொரு செயலும் இறைவன் வகுத்த செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இருக்கவேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் அசரக் கூடாது. (110:1-3)