بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

93:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)அன்புடையோனுமாகிய
முன்னுரை - சமூக சீர்திருத்தவாதியே! இறை வழிக்காட்டுதலைப் பின்பற்றி ஆட்சியமைப்பை ஏற்படுத்தினால் மகத்தான மறுமலர்ச்சி ஏற்படும் என்று வாக்களிக்கப்படுகிறது. ஆனால் அந்த இலக்கை அடைய கால தாமதம் ஏற்பட்டு வருவதைக் கவனிக்கும் இறைத் தூதர், தம் கரங்களால் தவறு ஏதாவது நடந்திருந்து அதனால் இறைவனின் வெறுப்பிற்கு ஆளாகி விட்டோமோ? அதனால் தான் இந்த கால தாமதம் ஏற்படுகின்றதா என்ற மனக் கவலையில் இருக்கிறார். இப்படி எதுவும் நடக்கவில்லை.


وَٱلضُّحَىٰ.

93:1. பிரகாசமான ஒளியைக் கொண்டு பொழுது விடியும் போது, இருள் சூழ்ந்த நிலை நீங்கிவிடுவதை நீங்கள் கவனிக்கவில்லையா?


وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ.

93:2. குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கும் இருள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி எல்லாமே பிரகாசிக்கின்றன.


مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ.

93:3. அதே போல உமது இலட்சியங்கள் நிறைவேற அதற்குரிய நேரம் வரவேண்டுமே அன்றி, உன் புறத்திலிருந்து எந்த தவறும் ஏற்படவில்லை. மேலும் உன் இறைவன் உன்னை கைவிடவும் இல்லை. வெறுக்கவும் இல்லை.


وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ.

93:4. உன்னுடைய செயல் திட்டத்தின் ஆரம்ப நிலையில் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது. அதை எதிர்கொள்ள தைரியமும் மன வலிமையும் மிகவும் அவசியமாயின. ஆனால் இப்போது எல்லா வகையான வசதி வாய்ப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.


وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ.

93:5. உன் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித நற்செயல்களுக்கு ஏற்ற பலன்கள்” என்ற சட்டத்தின் படி உம்முடைய அனைத்து இலட்சியங்களும் விரைவில் நிறைவேறி வரும். அதனால் உமக்கு முழு அளவில் திருப்தியும் கிடைக்கும்.


أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ.

93:6. நபியே ! இது விஷயமாக நீர் உன்னுடைய சொந்த வாழ்க்கைப் பற்றியே சற்று சிந்தித்துப் பார். ஒரு கட்டத்தில் நீர் நிராதரவாக தனித்தே இருக்க நேர்ந்ததில்லையா? அதன்பின் உன் இறைவனின் நியதிப்படி உமக்கு பாதுகாப்பு கிடைக்க அனைத்து வசதிகளும் ஏற்படவில்லையா?


وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ.

93:7. அது மட்டுமின்றி வாழ்வின் சரியான பாதையைத் தேடி ஒன்றும் புரியாமல் எங்கெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தீர். அதன் பின் வஹீ என்னும் இறைவழிகாட்டுதல் மூலமாக வாழ்வின் உயர் இலட்சியத்தை அடைய சரியான பாதை உமக்கு அளிக்கப்படவில்லையா?


وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ.

93:8. அது மட்டுமா? நீர் வாழ்வில் ஒரு கட்டத்தில் மிகவும் தேவை உள்ளவராக இருந்தீர். அதன்பின் நீர் யாரையும் சாராது இருக்கும்படி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தன்நிறைவு பெற்றவராக ஆக்கவில்லையா?
இப்படியாக உம்முடைய வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் சிரமங்களுக்குப் பின் விசாலமான வசதிகள் கிடைக்க வாய்ப்புகள் உருவாகவில்லையா? அதே போன்றுதான் இந்த மாபெரும் இலட்சியங்களைக் கொண்ட ஆட்சியமைப்பு விஷயத்திலும் ஏற்படுகிறது. தற்சமயம் சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அவை எல்லாம் நிரந்தரமாக நீடிக்கக்கூடிய ஒன்றல்ல. ஆக நீர் உன் செயல் திட்டத்தில் நிலைத்திருந்து தொடர்ந்து பணியாற்றி வா. அதைக் கொண்டு எல்லா வகையிலும் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகி வரும்.


فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ.

93:9. சமுதாயத்தில் நிராதரவாய் தவிப்பவர்களிடம், யாரும் கடுமையாக நடந்து கொள்ளாதவாறு பார்த்துக்கொள். அப்படிப்பட்ட ஆட்சியமைப்பு சட்டத்தை ஏற்படுத்து.


وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ.

93:10. அதோடு மட்டுமின்றி வறுமையில் இருப்பவர்கள் ஒருபோதும் இழிவிற்குள் ஆகாதவாறு பார்த்துக்கொள். ஏனெனில் சமுதாயத்தில் ஒதுக்கப்படவர்கள், தாம் மனிதனாய் ஏன்தான் பிறவி எடுத்தோமோ என்ற மன வேதனையில் இருப்பார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்.


وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ.

93:11. இந்த குறிக்கோள்கள் நிறைவேற நீர், "இறைவனின் அருட்கொடைகளான வாழ்வாதாரங்கள் எதுவும் தனியார் சொத்துக்கள் அல்ல. அவை எல்லாமே பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமானவை ஆகும். அதன் கதவுகள் ஒவ்வொரு தேவை உள்ளவர்க்கும் திறந்தே வைக்கப்படும்" என்கிற இறைவனின் கோட்பாடுகளை மக்களிடம் பரப்பி வா. (41-10)
குறிப்பு:இந்த அத்தியாயம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நோக்கி சொல்லப்பட்டாலும், இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்க யாரெல்லாம் முன்வருகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் இந்த அறிவுரைகள் பொருந்தும். ஏனெனில் இவை மாபெரும் இலட்சியங்களைக் கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும். இப்படி ஒரு அழகிய சமுதாயம் தாம் வாழும் நாட்டிலும் உருவாகிட வேண்டும் என்பதே ஒவ்வொருவர் வாழ்வின் தலையான இலட்சியமாக இருக்கவேண்டும்.)