بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
92:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ.
92:1. இரவை கவனியுங்கள். அது எல்லா பொருட்களையும் போர்வையாக மூடிக்கொள்வது போல் அமைந்துள்ளது.
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ.
92:2. மறு பக்கம் பகலை எடுத்துக் கொள்ளுங்கள். இரவிற்கு நேர் மாற்றமாக அனைத்துப் பொருட்களையும் பளிச்சிட செய்து விடுகிறது.
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராகத் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. இவை இரண்டும் ஒன்றில் ஏற்படும் குறைகளை மற்றது நீக்கி வருவதாக உள்ளது. இதனால் தான் உயிரினம் இந்த பூமியில் நிலைத்து வாழ்கிறது. பகல் பகலாகவே இருந்தாலோ அல்லது இரவு இரவாகவே இருந்தாலோ உயிரினம் வாழ சாத்தியமில்லை. (3:189-190)
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ.
92:3. அதே போல் உயிரினங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பக்கம் ஆண் என்றால் மறுபக்கம் பெண் என இருவகைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் ஒவ்வொன்றிலும் மாறுபட்ட உடலமைப்பு அமைந்துள்ளது. இதுவும் ஒன்றில் இருக்கின்ற தேவைகளை மற்றது நிறைவு செய்யும்படி படைக்கப்பட்டுள்ளன.
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ.
92:4. அதேபோல் சமுதாயத்திலுள்ள பல்வேறு தொழில்கள் யாவும் (Division of Labour) பங்கிடப்பட்ட செயல்பாடுகளே ஆகும். செயல்பாடுகளின் இந்த பங்கீட்டு முறையால் தான் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன.
உங்களுடைய உழைப்பும் முயற்சியும் - விவசாயம், நெசவுத் தொழில், வணிகம், கல்வி, குடும்பவியல் என பல துறைகளாகப் பிரிந்துள்ளன. இருப்பினும் இவை எல்லாம் ஒன்றிணைந்தால் தான் சமுதாயமாக உருவாக முடியும். ஆக ஒட்டுமொத்த சமுதாயம் என்பது ஒரு கூட்டு குடும்பமே ஆகும். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அந்த வகையில் மொத்த உலகமே ஒரு குடும்பம் என்றாகி விடுகிறது.
மனிதன் தனித்திருந்து தன் வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ள முடியாது. கூட்டு குடும்ப முறையில் தான் வாழமுடியும். காரணம் மனிதன் , தன்னுடைய தேவைகள் அனைத்தையும் தானே நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அவன் அதற்காக பிறர் உழைப்பையும் சார்ந்தவனாகவே இருக்கின்றான். இரவும் பகலும் வெவ்வேறாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவற்றின் ஒன்றில் உள்ள குறைகளை மற்றொன்று சரி செய்து வைப்பதாகவே அமைந்துள்ளது. அதே போல் ஆண் பெண் ஆகிய இருவரும். ஒருவர் மற்றவர் தேவைகளை நிறைவு செய்பவர்களாகவே உள்ளனர். ஆக சமுதாயத்திலுள்ள தொழில் ரீதியான பிரிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை என்று எண்ணிக் கொண்டால் அது உங்களுடைய தவறான எண்ணங்களாகும்.
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ.
92:5. ஆக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ! மனித இனம் ஒன்றே என்றும், தாம் பெற்ற செல்வங்கள் தம் தேவைக்கு போக மிகுதியானவை எல்லாம் அனைவருக்கும் பொதுவானவை என்றும் எண்ணி,தனது உழைப்பில் கிடைத்தவற்றை அனைவரின் முன்னேற்றத்திற்காக கொடுத்து,சமுதாயச் சீர்நிலையைக் கொண்டுவர உழைப்பவர்களும் (92:18-19)
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ.
92:6. சமூகம் மற்றும் பொருளாதார சமச் சீர்நிலையை நிலைநாட்ட உறுதிபட செயல்பட்டு அல்லாஹ்வின் செயல் திட்டங்களை உண்மைப் படுத்துவோரும் -
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ.
92:7. இறைவனின் நியதிப்படி மனித வாழ்வின் எல்லா வளர்ச்சிப் படித்தரங்களையும் வேகமாகக் கடந்து சுவனத்திற்கு ஒப்பான சமுதாயமாக எளிதில் உருவாக்கிக்கொள்ள முடியும்.
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ.
92:8. மாறாக தாம் பெற்ற செல்வம் நமக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மனப்பான்மையுடன் கூடிய சமுதாயமாக உருவெடுக்குமானால் (பார்க்க 96:7)
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ.
92:9. மேலும் சமுதாய சமச்சீர்நிலையை பொய்யாக்கி விட்டால்,
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ.
92:10. அப்படிப்பட்டவர்கள் வாழும் சமுதாயம் ஒவ்வொரு கட்டத்திலும் பல பிரச்னைகளைச் சந்தித்து,சிக்கல் மேல் சிக்கல்கள் உருவாகிக் கொண்டே செல்லும். இறுதியில் அந்த சமுதாயம் அழிவு என்னும் நரக வேதனையில் சிக்கிக் கொள்ளும்.
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ.
92:11. அப்படி ஒரு அழிவை சந்திக்கும் தருவாயில் தாம் சம்பாதித்து வைத்திருந்த செல்வங்களும் அதிகார பலமும் பயனற்று போய்விடும். (69:28) (111:2)
செல்வத்தை திரட்டிக் குவித்துக் கொள்ளும் வழிமுறைகளை மனிதன் தன் சுய அறிவைக் கொண்டு ஏற்படுத்திக் கொண்டவை ஆகும். மனித அறிவு எப்போதும் தன் வரை உள்ள பாதுகாப்பு பற்றிய யோசனையே கூறி வரும். அதற்கு மேல் ஒரு படியும் மேலே செல்லாது.
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ.
92:12. எனவே மனிதனின் சரியான வாழ்க்கைப் பாதையை வஹீ என்னும் இறைவழிகாட்டுதல்கள் மூலமாகத் தான் பெற முடியும்.
وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ.
92:13. இறைவழிகாட்டுதல்கள் மனிதனின் தற்காலிக வாழ்க்கையின் தேவைகளையும்,அவனுடைய வருங்கால நிலையான வாழ்வின் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டே தரப்படுகின்றன.
فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ.
92:14. சமுதாய சீர்திருத்தவாதியே! இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக வாழ்ந்து வருவதால் பல்வேறு சமுதாய சீர்கேடுகள் ஏற்பட்டு அழிவினை சந்திக்க நேரிடும் என்பதை மக்களுக்கு தெளிவாக்கிவிடு. இன்னும் அவர்களுடைய அனைத்து உழைப்பையும், அவர்கள் ஈட்டி வந்த செல்வங்களையும் அவை சுட்டு பொசுக்கி சாம்பலாக்கி விடும் என்பதையும் எச்சரித்து விடு.
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى.
92:15. இறைவன் வகுத்துத் தந்துள்ள வழிகாட்டுதல்களுக்கு மாறு செய்பவர்களே இத்தகைய வேதனைகள் நிறைந்த வாழ்வில் சிக்குவார்கள்.
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ.
92:16. அதாவது இறைவழிகாட்டுதலுக்கு பதிலாக,அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை முறைகளின் படி வாழ்வோர்க்கு இப்படி ஒரு நிலை ஏற்படும்.
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى.
92:17. ஆனால் இறைவனுடைய வழிகாட்டுதலுக்குக் கட்டுபட்டு வாழும் சமுதாயம் இந்த அழிவிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்.
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ.
92:18. அதாவது அவர்களுக்குத் தேவையானதை தமக்காக வைத்துக் கொண்டு (மா லஹு) மீதமுள்ள அனைத்தையும் சமுதாய மேம்பாட்டிற்காக யார் கொடுத்து வருகிறார்களோ, அவர்கள் தாமும் பாதுகாப்பாக இருப்பார்கள். கூடவே அவர்களுள் மனித நேயமும் வளரும். (9:111)
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ.
92:19. அவர்கள் பிறருடைய வளர்ச்சிக்காக கொடுக்கிறார்கள் என்றால் நன்றி விசுவாசத்தை எதிர் பார்த்து கொடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு போதும் செய்யவும் கூடாது. (76:9)
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ.
92:20. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் இறைவனின் ஆட்சியமைப்பு சிறப்பாக செயல்பட, அவர்கள் தம் உதவிக் கரங்களை நீட்டவேண்டும்.
وَلَسَوْفَ يَرْضَىٰ.
92:21. அப்போதுதான் அவர்களுடைய உழைப்புக்குரிய சரியான பலன்கள் இறைவனின் நியதிப்படி உடனுக்குடன் கிடைத்துவரும். இதனால் அவர்களுக்கு மனநிறைவும் ஏற்படும்.