بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

91:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا.

91:1.சூரியனையும்,சுடர் விடும் அதன் கதிர்வீச்சு வெப்பத்தையும், ஒளிக் கிரணங்களையும் ஆராய்ந்து பாருங்கள்.


وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا.

91:2.சூரிய ஒளியின் பிம்பமாகப் பளிச்சிடும் சந்திரன், பூமியை சுற்றி வருவதையும் ஆராய்ந்து பாருங்கள்.


وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا.

91:3. சூரிய ஒளியைக் கொண்டு பகல் ஜொலிப்பதைப் பற்றியும் ஆராய்ந்து பாருங்கள்.


وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا.

91:4. எல்லாவற்றையும் போர்வையாக மூடிக்கொள்ளும் இரவையும் ஆராய்ந்து பாருங்கள்.


وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا.

91:5. வான்மண்டலத்தில் மிக அழகிய முறையில் நீந்தி வரும் வரும் கோள்களையும் நட்சத்திரங்களையும் ஆராய்ந்து பாருங்கள்.


وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا.

91:6. வான் மண்டலங்களை விட்டு இறங்கி, நீங்கள் வாழும் பூமியின் பக்கம் கவனம் செலுத்துங்கள். அது உருண்டை வடிவில் இருந்தும் எவ்வாறு விரிப்பாக்கப்பட்டு அனைத்தும் செங்குத்தாக நின்று செயல்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆராய்ந்து பாருங்கள்.


وَنَفْسٍۢ وَمَا سَوَّىٰهَا.

91:7. இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் மனித படைப்பைப் பற்றியே ஆராய்ந்துப் பாருங்கள். உடலமைப்பு எவ்வாறு சிறந்த முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது என்பதையும் ஆராய்ந்து பாருங்கள்.
இவை எல்லாமே இறைவனின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் செயல்படுபவையாக உள்ளன. எனவே அங்கு எந்தக் குறைப்பாடும் இல்லாமல் செயல்பட்டு வருவதை நீங்கள் காண்பீர்கள். அங்கே எந்த ஒழுங்கீனமும் இல்லை. ஆனால் மனித உலகில் மட்டும் இத்தனை ஒழுங்கீனங்களும், சண்டை சச்சரவுகளும், சிக்கல்களும்! ஏன் அப்படி? இறைவனின் செயல் திட்டத்தின்படி அவனுடைய படைப்புகளில் மனிதனுக்கு மட்டும் முழு சுதந்திரத்துடன் செயல்படும் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதைக் கொண்டு


فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا.

91:8. நன்மை தீமை ஆகிய இரண்டையும் பாகுபடுத்திக் வாழும் ஆற்றல் மனிதனுக்கு கிடைக்கிறது. எனவே தவறான பாதையைக் கடைப்பிடித்து, அவன் பல பிரிவாகப் பிரிந்து, தமக்குள் பகைமையும் போட்டி பொறாமையையும் (Dis-integration of Human Personality) வளர்த்துக் கொண்டு கீழ்த்தரமான நிலைக்கும் செல்லலாம். அல்லது இவற்றிலிருந்து விலகி இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி பாதுகாப்பான வாழ்க்கை முறையை (Secured Life) ஏற்படுத்திக் கொண்டு உயர் நிலைக்கும் செல்லலாம் என்கின்ற இரு நிலைகளும் ஏற்படுகின்றன.


قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا.

91:9. எனவே இறைவழிகாட்டுதலைக் கடைப்பிடித்து மனித நேயத்தை வளர்த்துக் கொள்ளும் சமுதாயம், நிச்சயமாக வெற்றி இலக்கை அடைந்து கொள்ளும். அதனுடைய உழைப்பு ஒருபோதும் வீண்போகாது.


وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا.

91:10. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து மனித ஆற்றல்களை சுயநலக்கார ஆதிக்கத்தின் கீழ் நசுங்க வைத்துக் கொள்ளும் சமுதாயமோ, தம் முயற்சிகளில் தோல்வியையே சந்திக்கும். அப்படிப்பட்ட தவறான முறையால் மனித ஆற்றல்கள் வளராமல் எல்லா வகையான ஒழுங்கீனமும் நடைபெற்று வரும்.


كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ.

91:11. வரலாற்று நிகழ்வுகளே இந்தப் பேருண்மைக்கு சான்றுகளாக இருக்கின்றன. உதாரணமாக சமூது கூட்டத்தாரை எடுத்துக் கொள்ளுங்கள். தாம் செய்து வந்த வரம்பு மீறின செயல்களின் காரணமாக இறை வழிகாட்டுதலைப் பொய்ப்பித்தனர்.


إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا.

91:12. இறைவழிகாட்டுதலை எதிர்ப்பவர்களில் தலைவனாக ஒரு முரடன் விரைந்தோடி வந்தான். தான் செய்வது என்னவென்று அறிந்து கொள்ள முடியாத அறிவிலியாகவே இருந்தான்.


فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا.

91:13. அந்தச் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர், இறைவனின் அருட்கொடையான வாழ்வாதரங்களை அனைவருக்காகவும் பொதுஉடமை ஆக்கவேண்டும் என்று அறிவுரை செய்தார். அதன் அடையாளமாக ஒரு பெண் ஒட்டகத்தை அறிமுகப்படுத்தி, அது தனியார் சொத்து அல்ல. அல்லாஹ்வுடையது - எல்லோருக்கும் பொதுவானது என்றும் கூறினார். - "அல்லாஹ் படைத்த உலகில் அல்லாஹ்வுடைய ஒட்டகம்" அந்த ஒட்டகம் தண்ணீர் குடிக்க தன் சுற்று வரும்போது, அதை பருக அனுமதி கொடுக்கும்படி (7:73,26:155). அந்தத் தலைவனிடம் ஒப்பந்தமும் செய்யப்பட்டது.


فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا.

91:14. அவனும் அவ்வூராரும் அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் தங்கள் ஒப்பந்தத்தில் நிலைத்திருக்கவில்லை. அவர்கள் அந்த ஒட்டகத்தை செயலிழக்கச் செய்து விட்டனர். இவ்வாறாக அவர்கள் அல்லாஹ்வின் வாழ்வாதார பங்கீட்டு முறைக்கு எதிராகச் செயல்படுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை.
அவர்களுடைய தவறான போக்கின் காரணமாக இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டம் அவர்கள் மீது வேதனை என்னும் சாட்டையை அவிழ்த்து விட்டது. மேலும் அவர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாகப் புதைந்து போயினர். இவ்வாறாக அவர்கள் வாழ்ந்த இடம் உலக வரைப் படத்திலிருந்து காணாமல் போயிற்று. இப்போது அது போக்குவரத்து சாலையாக மாறிப் போயிற்று.


وَلَا يَخَافُ عُقْبَٰهَا.

91:15. அநியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்யும்போது, இப்படி ஒரு நிலை தமக்கு ஏற்படும் என்று அவர்கள் அஞ்சவில்லை.
எனவே அவர்களுக்குக் கிடைத்த வேதனைகள் அவர்கள் செய்த கொடுமைக்குத் தண்டனையாகும். தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்டதல்ல. மாறாக அவர்கள் செய்து வந்த அட்டூழியங்களின் விளைவாக அவர்களுக்கு நேர்ந்த பேரழிவு. ஆக அல்லாஹ்வுடைய சட்ட விதிமுறைகளில் சஞ்சலமோ கோணலோ பாரபட்சமோ ஒருபோதும் இருப்பதில்லை. அவன் விதித்த சட்டம் எல்லா காலத்திலும் தன் பணியை செய்தவண்ணம் இருக்கும்.