بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

90:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ.

90:1. சமுதாய சீர்த்திருத்தவாதியே! இந்த மார்க்கத்தை எதிர்க்கும் இவ்வூர் மக்கள் நினைத்திருப்பது போல், தம் திட்டத்தில் வெற்றி பெறவே மாட்டார்கள்.
அதாவது எதிர் நடவடிக்கைகளை எடுத்து ஆட்சியமைப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். இந்த மார்க்க விஷயங்கள் அதுபோன்று அல்லஎன்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.


وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ.

90:2. இந்த மார்க்க உண்மைகளை எடுத்துரைக்கும் நீர் இவ்வூரைச் சேர்ந்தவர் என்பதைப் பற்றியும் எண்ணிப் பார்க்காமல் உமக்கெதிராகப் போர்க்கொடி தொடுக்கின்றனர்.


وَوَالِدٍۢ وَمَا وَلَدَ.

90:3. இதில் தந்தை மகன் என்ற உறவுமுறையும் மிஞ்சி நிற்கவில்லை. அந்த அளவுக்குக் கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர்.


لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ.

90:4. இதனால் அவர்களுடைய வாழ்வு சிரமங்களுக்குள்ளாகி விடுமே! இத்தகைய பலஹீனத்துடன் தானே நாம் மனிதனைப் படைத்துள்ளோம்.
இந்தத் துயரங்களை நீக்கத் தான் இந்த இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றை இறைத் தூதர்கள் எடுத்துரைத்து துயர் துடைப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இதை புரியாமல் அவர்கள் எதிர்க்கின்றனரே!


أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ.

90:5. அப்படியும் தன் மீது அதிகாரம் செலுத்துவோர் எவரும் இல்லை என்று தவறாக எண்ணிக்கொண்டு இவ்வாறு எதிர்மறையாக செயல்படுகின்றார்களா?
அதாவது தம்மைத் தட்டிக்கேட்க எவறும் இல்லை. நாமே சகல அதிகாரங்களையும் படைத்தவர்கள் என்ற மமதையில் இருக்கிறார்களா? எனவே தான் இந்த மார்க்கத்திற்கு எதிராக செயல்படுவதோடு தன்னிடமுள்ள செல்வங்களையும் செலவழிக்கிறார்கள்.


يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا.

90:6. ஆனால்,“நாம் இதற்காக ஏராளமான சொத்துக்களை அழித்து விட்டோமே. எல்லாமே வீணாய் போய்விட்டதே” என்று வருத்தப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ.

90:7. தான் செய்யும் செயல்களை யாரும் கண்காணிப்பதில்லை என்று மனிதன் நினைத்துக் கொண்டானா?


أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ.

90:8. இது அவனுடைய தவறான எண்ணமேயாகும். அவனுடைய அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நாம் அவனுக்கு இரு கண்களை கொடுக்க வில்லையா?


وَلِسَانًۭا وَشَفَتَيْنِ.

90:9. இன்னும் தன் கண்களால் இந்த உலகில் எதைக் கண்டாலும் அதைப் பற்றி பேசுவதற்கும், அதிலுள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு சரியான முறையில் வாழ்வதற்கும், நாவையும் இரண்டு உதடுகளையும் அளிக்கவில்லையா?


وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ.

90:10. ஆக நல்லவை எவை? தீயவை எவை? என்பதை பிரித்துக் காட்டும் பாதைகளை நாம் அறிவித்துத் தரவில்லையா?
உலக படைப்புகளின் ஆராய்ச்சிகளைக் கொண்டு வாழ்வாதரங்களைப் பெறுதல் மற்றும் மனித ஒழுக்க மாண்புகளைக் கட்டிக்காக்க இறைவன் புறத்திலிருந்து வஹீ என்னும் வழிக்காட்டுதல்கள் - ஆகிய இரண்டு பாதைகளை மனிதனுக்கு அளிக்கவில்லையா? எனவே மனிதனே தம் செயல்களுக்கு பொறுப்பாளி ஆகின்றானே! அவன் செய்யும் செயல்களைக் கண்காணிக்கும் சக்தி இவனுக்கு மேல் செயல்பட்டு வருகிறதே! அதை அவன் அறிந்து கொள்ள வேண்டாமா?
அதே போல செல்வங்களையும் புகழையும் ஈட்டிக்கொள்ள அவன் முன் இரண்டு பாதைகள் இருக்கின்றன. அதில் ஒன்று சுய நலத்துடன் பிறர் பொருளை அபகரித்து பிறர் உழைப்பில் சுகம் காணுவது - மனிதனின் அறிவு சுகமான வாழ்க்கை அனுபவிப்பதற்கு இதுதான் சிறந்த வழி என்று சொல்லும். அதில் மற்றொரு பாதை என்பது


فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ.

90:11. கடினமான உழைப்பினாலும் விடா முயற்சியாலும் கிடைக்கின்ற சுகம். அது ஒரு கணவாயைக் கடப்பதற்கு ஒப்பானதாகும். அதற்கு கடின உழைப்பும் விடாமுயற்சியும் மிக மிக அவசியம். தருணம் தப்பினால் மரணம் என்பது போன்றாதாகும்.
அதே சமயத்தில் அவனுடைய உடல் வலிமையும், உறுதிப்பாடும், செயல்திறனும் அவனுள் வளர அவை உதவிகரமாக இருக்கும். அதுபோலத் தான் இறைவழிகாட்டுதல் காட்டும் வாழ்க்கை முறையும். ஆக உண்மை என்னவென்றால் அவன் இன்னும் எந்தக் கணவாயையும் கடந்து செல்லவில்லை.


وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ.

90:12. மலைகளின் நடுவே ஓடும் கணவாயைக் கடப்பது என்றால் என்ன என்பதை இறைவனைத் தவிர யார் தான் உமக்கு விளக்கம் தர முடியும்?


فَكُّ رَقَبَةٍ.

90:13. மனிதன் தன்வரை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு சரி என்று இருந்து விடக்கூடாது. மாறாக அவன் கடன்,வறுமை போன்றவற்றால் அடிமைப்பட்டு தவிப்பவர்களைக் கண்டால் அவர்களை அதிலிருந்து விடுவித்து சுதந்திரமாக வாழ வழிசெய்து தரவேண்டும்.
இதற்காக அவன் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இது முதலாவது கணவாய் கடப்பதாகும்.


أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ.ᴑ

90:14. சமுதாயம்,அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் சிக்கித் தவிக்கும்போது,


يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ. ᴑ

90:15. உணவு பங்கீட்டு முறையில் சீர்கேடுகள் ஏற்பட்டு ஏழை எளிய வகுப்பினர் பசி பட்டினியால் வாடி வருவார்கள்.


أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ.ᴑ

90:16. சமுதாயத்தில் பசியால் வாடுவதோ ஒரு வேளை உணவிற்காக தன் உடலை மண்ணில் புரளுவதோ நேராது. இது இரண்டாவது கட்ட கணவாய் ஆகும்.
இந்தப் புதிய ஆட்சியமைப்பு அம்மக்களின் பசியைப் போக்க, உணவு பங்கீட்டு முறையில் சமச்சீர் நிலையை கொண்டு வரவேண்டும். இப்படியாக தூய சமுதாயத்தை உருவாக்க பல கணவாய்களை கடக்க வேண்டி இருக்கும். அப்போது தான் வெற்றி என்ற இலக்கை அடையமுடியும். எனவே


ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ.

90:17. இந்த கடினமான காரியத்தை நிறைவேற்றி வருவதற்காக, அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் முழுநம்பிக்கைக் கொண்டு, அதில் உறுதிபட நிலைத்து நின்று அதன்படி செயல்பட்டு, ஆங்காங்கே ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண ஒருவரையொருவர் கலந்து ஆலோசனை செய்துகொண்டு, பலனுள்ள திட்டங்களைத் தீட்டி செயல்பட்டால் (பார்க்க 2:177) இந்த கணவாய்களை எளிதில் கடந்துவிடலாம்.


أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ.

90:18. இப்படிப்பட்டவர்களின் முயற்சிகளே வெற்றி எனும் கனிகளை ஈட்டித் தரும். நாளடைவில் அவர்களுக்கு எல்லா வகையான அனுகூலங்களும் கிடைத்து வரும்.


وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ.

90:19. மாறாக இறைவழிகாட்டுதல்களை ஏற்க மறுப்பவர்களின் முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும். அவர்கள் தங்கள் திட்டங்களில் ஒரு போதும் வெற்றி பெறவே முடியாது.


عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ.

90:20. அத்தகையவர்களுக்கு நரக வேதனை தான் மிஞ்சும். அதாவது பிரச்னைகள் நிறைந்த சமுதாயம். அதில் அவர்கள் நீண்ட காலம் வரையில் தங்கி விடுவார்கள். அதிலிருந்து வெளியே வரும் வேறு வழிகளை அவர்களால் காணவே முடியாது. மனிதனின் மரணத்திற்கு பிறகும் இதே நிலைதான் நீடிக்கும்.