بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

89:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
'ஹஜ்' என்னும் உலக நாடுகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் (Inter-National Conference)உலக மக்களுள் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்கும் ஆலோசனைக் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. (பார்க்க 3:97) ஆனால் வஹீ என்னும் வழிகாட்டுதல்கள் இல்லாத அக்கால அரபு நாட்டவர்கள் அந்தக் கூட்டத்தை என்னவாக மாற்றியிருந்தார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.


وَٱلْفَجْرِ.ᴑ

89:1.“ஹஜ்” கூட்டத்தின் தொடக்க பத்து இரவுகளிலும் நடப்பவை என்ன?


وَلَيَالٍ عَشْرٍۢ.ᴑ

89:2. வெறும் களியாட்டங்களும் கொண்டாட்டங்களுமே ஆகும்.


وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ.

89:3. மேலும் எல்லா விதமான தகாத செயல்களும் அங்கு நடை பெறுகின்றன. சூதாட்டமும் சூடு பிடித்து விடுகிறது.


وَٱلَّيْلِ إِذَا يَسْرِ.

89:4. கடைசி பத்தாவது இரவில் இந்தக் கொண்டாட்டம் உச்சநிலையை அடைகிறது. அதன்பின் மறுநாள் காலை அவர்கள் ஹஜ் கூட்டத்தையும் ஒப்புக்காக சடங்காகத் தான் கூடி நடத்துகிறார்கள்.
கூடவே நடக்கக் கூடாத அத்தனை தகாத செயல்களும் அங்கு நடக்கின்றன. குரைஷிய செல்வந்தர்கள் பணத்தை வாரி இறைத்து அந்த நாளை பெருநாளாக கொண்டாடுகிறார்கள். அத்தனைக்கும் அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களில் வாழும் மக்கள், ஒருவேளை உணவும் கிடைக்காமல் கஷ்டப்படுவதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.


هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ.

89:5. சிறிதும் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக செயல்படும் இவர்களுடைய நிலைமை என்னவாகும் என்பதை யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? சற்றே சிந்தித்தாலும் முன்சென்ற சமூகத்தவர்களுக்கு ஏற்பட்ட அதே அழிவுகள் தான் இவர்களுக்கும் நேர்ந்துவிடும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளலாம் அல்லவா?


أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ.ᴑ

89:6. எடுத்துக் காட்டாக "இரம" வம்சத்தை சேர்ந்த "ஆது" சமூகத்தவர்களுடைய நிலைமை என்னவாயிற்று என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அவர்களுக்கு போதுமான வாழ்க்கை வசதிகள் கிடைத்திருந்தன. (26:132-134)


إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ.ᴑ

89:7.அவர்கள் கட்டிடக் கலைகளில் வல்லுனர்களாக இருந்தார்கள். மிக உயரமான நினைவுச் சின்னங்களையும் மாளிகைகளையும் கட்டி வாழ்ந்தார்கள். (26:128)


ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ.

89:8. மற்ற நாடுகளைவிட அவர்களுடைய நாடு செல்வ செழிப்பு மிக்க நாடாக விளங்கியது.


وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ.

89:9. அது மட்டுமா? அந்த சமூது கூட்டத்தாரின் வரலாற்று செய்தியும் உங்களுக்கு கிடைத்திருக்குமே! அவர்களோ பெரிய பெரிய மலைகளையே குடைத்து எடுத்து உறுதியான மாளிகைகளையும் கோட்டைகளையும் கட்டி வந்தார்களே.(7:74, 15:82)


وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ.

89:10. மேலும் பலம் வாய்ந்த ஃபிர்அவுனுடைய சாம்ராஜ்ஜியத்தின் கதி என்னவாயிற்று என்பதை இவர்கள் சிந்தித்தார்களா?


ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ.ᴑ

89:11. அவர்களெல்லாம் இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.


فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ.ᴑ

89:12.அதனால் நாட்டில் ஏற்றத் தாழ்வும் குழப்பங்களும் ஏற்பட்டு அவை சீரழிந்தன.


فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ.

89:13. அப்போது அவர்களுடைய நிலைமை என்னவாயிற்று? உங்களைப் படைத்துப் பரிபாலிப்பவனாகிய இறைவன் ஏற்படுத்திய “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்கின்ற சட்டம் அவர்களை விதவிதமான அழிவுகளை ஏற்படுத்தி விட்டது. அதில் அவர்கள் அனைவரும் அழிந்து போயினர்.


إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ.

89:14. ஏனெனில் இறைவன் வகுத்துள்ள “செயல்வினைச் சட்டம்” என்பது
ஒவ்வொரு நபருடனும் கூடவே தொடர்ந்து வரக்கூடியதாகும். யாருடைய செயலும் அதிலிருந்து தப்பித்துச் செல்லவே முடியாது. ஆக அவர்களுக்கு நேர்ந்த அதே கதிதான் உங்களுக்கும் ஏற்பட்டு விடும்.
அந்த அளவிற்கு (அக்கால) அரபு மக்கள் தகாத செயல்களில் மூழ்கி உள்ளனர். உண்மையில் நடப்பது என்னவென்றால் மனிதன் இறை வழிகாட்டுதல்களை விட்டுவிடும் போது, எதைப்பற்றியும் சிந்தித்து செயலாற்றும் சிந்தனையை இழந்து விடுகின்றான். அதனால் சட்டம் - சட்டவிரோதம் என்ற பாகுபாடே அவனிடம் இல்லாமல் போய்விடுகிறது. நிலைமாறாச் சட்டம் என்பதன் பொருள் என்ன? தனி மனிதனோ அல்லது ஒரு சமுதாயமோ செய்து வரும் செயல்களுக்கேற்ப விளைவுகள் ஏற்பட்டே தீரும் என நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைக்கு சொல்வார்கள். இந்தப் பேருண்மை அவன் கண்களை விட்டு மறைந்துவிட்டால் அதன்பின் நடப்பவை எல்லாம் இயல்பாக நடப்பவையே என்று நினைத்துக் கொள்வான். அந்த விளைவுகளுக்கு, தான் பொறுப்பு அல்ல என்றும் நினைத்துக் கொள்வான். அதன்பின் எல்லாம் இறைவன் செயல் என்றாகிவிடுகிறது. இப்படிப்பட்ட தவறான கண்ணோட்டம் உருவாகி விட்டால் என்ன நேர்கிறது என்பதை கவனியுங்கள்.


فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ.

89:15. மனிதனுக்கு இறைவன் புறத்திலிருந்து வசதி வாய்ப்புகள் கிடைத்தால், அந்த பாக்கியம் யாருடைய உழைப்புகளின் மூலம் கிடைத்தது என்பதை எண்ணிப் பார்க்க மாட்டான். "இவை எல்லாம் இறைவனின் அருட்கொடைகள். யாரை அவன் நாடுகின்றானோ, அவனுக்கு அள்ளி கொடுத்து விடுகின்றான்" என நினைக்கின்றான்.
அதன் பொருள் என்னவாகிறது என்றால் இறைவனிடத்தில் எந்த கொள்கைக் கோட்பாடோ (Principles) அல்லது ஒழுங்குமுறை சட்டமோ (Regulations) இல்லை என்றும், தினம்தினம் தான் நாடுவதை செய்பவனே இறைவன் என்றும் ஆகிவிடுகிறது. மேலும் அவனுடைய வாழ்வில் வசதி வாய்ப்புகள் குறைந்து விட்டால் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை எண்ணிப் பார்க்க மாட்டான். தான் செய்த எந்தத் தவறான செயல்களின் விளைவாக இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும் எண்ணிப் பார்க்க மாட்டான். மாறாக,


وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ.

89:16. "அவனுடைய வாழ்வில் வசதி வாய்ப்புகள் குறைந்து விட்டால், இறைவன் இப்படி அநியாயமாக சிறுமைப்படுத்தி என்னை சோதனைக்குள் ஆக்கிவிட்டானே" என்றுதான் புலம்பிக்கொண்டு இருப்பான்.
இது முற்றிலும் தவறான கண்ணோட்டமாகும் என்பதை அவர்களுக்கு அறிவித்து விடுங்கள். இறைவன் ஒருபோதும் வேண்டும் என்றே யாரையும் இழிவாக்குவதுமில்லை அழிப்பதுமில்லை. (பார்க்க 8:53) நீங்கள் சிறுமைப்பட்டதற்கு காரணம் நீங்களே உருவாக்கி வைத்துள்ள தவறான சமூக அமைப்பே ஆகும். அதனால்


كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ.

89:17. நீங்கள் ஆதரவற்றவர்களின் குறைகளை நீக்குவதைப் பற்றியோ, அல்லது ஏழை எளிய மக்களும் உங்கள் சமூகத்தின் அங்கத்தினர்கள், கண்ணியத்திற்கு உரியவர்கள்தான் என்ற எண்ணமோ உங்களிடம் இருப்பதில்லை.
மாறாக யாரிடம் செல்வமும் அதிகாரமும் மிகைத்திருக்கிறதோ அவர்களே கண்ணியத்திற்கு உரியவர்கள் என்று எண்ணிக் கொள்கிறீர்கள்.


وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ.

89:18. ஒருவருடைய வியாபாரமோ தொழிலோ பாதிப்புக்குள்ளாகி கஷ்டப்பட நேர்ந்தால், வசதிப் படைத்தவர்கள் அவர்களை அதிலிருந்து மீட்க உதவிக் கரங்களை நீட்டுவதில்லை. குறைந்தபட்சம் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதில்லை. நமக்கு என்ன வந்தது? அவன் எப்படியாவது கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கட்டும் என்று இருந்து விடுகிறீர்கள்.


وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًۭا لَّمًّۭا.

89:19. இது மட்டுமின்றி வம்சா வழியாக வந்து சேரும் சொத்துக்களையும் நீங்களே அபகரித்துக் கொள்கிறீர்கள்.


وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا.

89:20. அதுமட்டும்; போதாது என்று பிறருடைய சொத்துக்களையும் அபகரித்து உங்களிடம் வந்து சேர விதவிதமான சூழ்ச்சிகளையும் செய்து வருகிறீர்கள்.
மேட்டு பகுதியில் உள்ள தண்ணீர் பள்ளத்தை நோக்கி செல்வது போல், எல்லோருடைய சொத்துகளையும் களவாடி விடுகிறீர்கள். இப்படியாக சிறிய சிறிய முதலீடுகளை எல்லாம் பெரிய முதலீடுகள் விழுங்கிவிடுகின்றன. அதன்பின் காலப்போக்கில் செல்வமும் அதிகாரங்களும் மிகச் சிலரிடம் சென்று குவிந்துவிடுகிறது. அதனால் அவர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறார்கள். இம்மாதிரியான சமூக அமைப்புமுறை இவ்வுலகில் நீடித்து நிலைக்க முடியாது. எனவே இறுதியில் இழிநிலையை சந்திக்க நேர்கிறது. இவையெல்லாம் அவர்களே உருவாக்கி வைத்திருக்கும் தவறான சமூகஅமைப்பு முறையினால் தான் ஏற்படுகின்றன. இறைவன் இதற்கு பொறுப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் செயல்களுக்கும் எற்ப விளைவுகளை ஏற்படுத்துவதே இறைவனுடைய செயல்திட்டமாகும்.எனவே சமுதாயத் தலைவர்களிடம், “இப்படிப்பட்ட தவறான அமைப்புமுறை உலகில் நீடித்து நிலைக்காது” என்று சொல்லி விடுங்கள்.


كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّۭا دَكًّۭا.

89:21. சமூதாயத்தில் உள்ள மேடு பள்ளங்களை சீராக்கும் கால கட்டம் நெருங்கி விட்டது என்பதை எடுத்துச் சொல்லிவிடுங்கள்.


وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّۭا صَفًّۭا.

89:22. உம்முடைய இறைவனின் ஆட்சியமைப்பும் இந்த பிரபஞ்ச சக்திகளும் ஓரணியில் நின்று உங்கள் சமுதாயத்தை பளிச்சிடச் செய்யும் கால கட்டம் நெருங்கிவிட்டது என்றும் சொல்லிவிடுங்கள்.
அதாவது செல்வமும் ஆட்சி அதிகாரமும் தனியார் கரங்களில் இல்லாமல், மக்களாட்சி உருவாகி அனைத்து தரப்பு மக்களும் சமச்சீர் நிலையில் வளர்ச்சி பெறச் செய்யும் ஆட்சி அமைப்பிற்குப் போய் சேரும்.
மேலும் நரகம் என்பது என்ன? தற்சமயம் செல்வமும் அதிகார துஷ்பிரயோகமும் செய்து, ஏழை எளிய மக்களை நசுக்கி வருபவர்களுக்கு கிடைக்கும் வேதனையே நரகம் என்பதாகும். அதாவது இந்த அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் யார் காரணம் என்று மக்களுக்குத் தற்சமயம் புரியாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் இப்படி அதிகார மமதையில் மூழ்கி இருக்கலாம். ஆனால் ஏழை எளிய மக்கள் தம்முடைய இழிநிலைக்கு யார் காரணம் என்பதை தெரிந்து கொண்டால் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி எடுத்துவிடுவார்கள். அப்போது நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய்விடும்.


وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ.

89:23. அத்தகைய நரக வேதனைகளை அனுபவிக்கப் போகும் சமயத்தில் இந்த செல்வந்தர்களும், அதிகாரக் கூட்டமும் தம் தவறுகளை உணர்ந்து கொள்வார்கள். அப்போது உணர்ந்து என்ன பயன்?


يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى.

89:24. அப்போது, "இப்படி ஒரு நிலை எனக்கு ஏற்படும் என்று தெரிந்திருந்தால், நானும் முன்கூட்டியே நன்மையான காரியத்தில் ஈடுபட்டிருப்பேனே. எனக்கும் உயர்தரமான வாழ்வு கிடைத்திருக்குமே!" என்று வருத்தத்துடன் புலம்பிக் கொண்டுதான் இருப்பான்.


فَيَوْمَئِذٍۢ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌۭ.

89:25. இறைவன் புறத்திலிருந்து கொடுக்கப்படுகின்ற தண்டணையை விட ஒரு கொடிய தண்டனை வேறு எதுவும் இருக்காது.


وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌۭ.

89:26. மேலும் அவர்களுக்கு இவ்வுலகில் கொடுக்கப்படும் சிறைத் தண்டனையும் மிகக் கடினமானதாகவே இருக்கும்.


يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ.

89:27. மனஅமைதியுடன் கூடிய பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடி அலைபவர்களே!
இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பதன் மூலமே மனநிறைவு கிடைக்கும். (13:28). அதாவது நேரான வழிமுறை கிடைத்து அதில் சமச்சீர்நிலையும் ஏற்படுவதால் அந்த சமுதாயம் முன்னேறிக் கொண்டே செல்லும்.(91:9)


ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ.

89:28. இதற்காக "உம்முடைய செயல்கள் இறைவன் வகுத்த நெறிமுறைகளுடன் ஒன்றியே இருக்க வேண்டும். அப்போதுதான் நீ விரும்பும் சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கை, இறைவன் புறத்திலிருந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்" என்று உறுதி அளிக்கும் வகையில் அந்த சமுதாயம் உருவாகும்.


فَٱدْخُلِى فِى عِبَٰدِى.

89:29. சமுதாய சீர்த்திருத்தவாதியே! இந்த வாழ்க்கை வசதிகளை நீ தனிமையில் வாழ்ந்து பெற்றிட முடியாது. கூட்டு வாழ்க்கை முறையின் மூலமாகத் தான் பெறமுடியும். எனவே நீர் இறைவனனுக்கு அடிபணிந்து செயல்படுபவர்களோடு இணைந்து செல்படு.


وَٱدْخُلِى جَنَّتِى.

89:30. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைக் கடைப்பிடிப்பதன் பலனாக உருவாகும் (9:111) சுவனபதியில் நுழைந்துவிடு.
இப்படியாக இவர்களுக்கு இந்த உலக வாழ்வும் இறந்தபின் தொடரும் மறுமை வாழ்வும் சுவர்க்கமே.