அத்தியாயம் - 9 சூர - தவ்பா

9:0.பாவங்களுக்கு மன்னிப்பு தேடுதல்


بَرَآءَةٌۭ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلْمُشْرِكِينَ.

9:1. அல்லாஹ்வுக்கு இணையாக வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் முஷ்ரிக்குகளிடம் செய்து கொண்ட சமூக நல்லிணக்க ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாக அறிவித்து விடுங்கள். அல்லாஹ்வும் இந்த அரசமைப்பும் அந்த உடன்படிக்கையிலிருந்து இனி விலகிக் கொள்ளும்.
ஏனெனில் பொது மக்களுக்கும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு திட்டங்களுக்கும் எதிராக செயல்பட மாட்டோம் என்று அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி (பார்க்க 9:4) அவர்கள் நடந்து கொள்ள வில்லை.


فَسِيحُوا۟ فِى ٱلْأَرْضِ أَرْبَعَةَ أَشْهُرٍۢ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى ٱللَّهِ ۙ وَأَنَّ ٱللَّهَ مُخْزِى ٱلْكَٰفِرِينَ.

9:2. “எனவே இன்றைய நாளிலிருந்து நான்கு மாதங்கள் வரையில் இந்நாட்டில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம். இந்தக் கால அவகாசத்திற்குள் நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள். இந்த அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்வதாக இருந்தால், இங்கு நிரந்தரமாக தங்கிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு இந்த ஆட்சியமைப்பைத் தோல்வியுறச் செய்திடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால், அது உங்களால் ஒருபோதும் முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இறுதியில் நீங்களே தோல்வியுற்று இழிவுக்குள்ளாகி விடுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் அறிவித்துவிடுங்கள்.


وَأَذَٰنٌۭ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلنَّاسِ يَوْمَ ٱلْحَجِّ ٱلْأَكْبَرِ أَنَّ ٱللَّهَ بَرِىٓءٌۭ مِّنَ ٱلْمُشْرِكِينَ ۙ وَرَسُولُهُۥ ۚ فَإِن تُبْتُمْ فَهُوَ خَيْرٌۭ لَّكُمْ ۖ وَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى ٱللَّهِ ۗ وَبَشِّرِ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِعَذَابٍ أَلِيمٍ.

9:3. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பும், அதை வழிநடத்திச் செல்லும் இறைத்தூதரும், முஷ்ரிக்குகளிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாக மக்கள் திரளாகக் கூடும் ஹஜ் பெருநாளில் (International Conference) பகிரங்கமாக அறிவிக்கின்றனர். “நீங்கள் சமூக விரோதச் செயல்களை விட்டு விலகிக் கொண்டால் அது உங்கள் நன்மைக்கே ஆகும். ஆனால் நீங்கள் இந்த அறிவிப்பைப் புறக்கணித்து, சமூக விரோதச் செயல்களை தொடர்ந்து செய்து வந்தால், நீங்கள் இந்த அரசை எதிர்த்துப் போரிட வேண்டி வரும். ஒருபோதும் இந்த அரசை உங்களால் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் சமூக விரோதச் செயலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்”
சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? ஹஜ் கூடும் சமயம் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் உலக விவகாரங்களை அந்த அரசின் சார்பாக எவ்வாறு அறிவிக்கிறார் என்பதைக் கவனித்தீர்களா? எனவே உலக மக்களுள் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே கஅபா எனும் ஐக்கிய நாட்டு சபை நிறுவப்பட்டது. (பார்க்க 3:97)


إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلْمُشْرِكِينَ ثُمَّ لَمْ يَنقُصُوكُمْ شَيْـًۭٔا وَلَمْ يُظَٰهِرُوا۟ عَلَيْكُمْ أَحَدًۭا فَأَتِمُّوٓا۟ إِلَيْهِمْ عَهْدَهُمْ إِلَىٰ مُدَّتِهِمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ.

9:4. ஆனால் முஷ்ரிக்குகளில் சிலர், அந்த உடன்படிக்கையின் படி எவ்வித குறைப்பாடும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்கள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதில்லை. அத்தகையவர்களுக்கு இந்த காலக்கெடு பொருந்தாது. அவர்கள் இங்கு தாராளமாக வாழ்ந்து கொள்ளலாம். அவர்களைத் தவிர மற்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தக் காலக்கெடு பூர்த்தி ஆகும் வரை காத்திருப்போம். நிச்சயமாக அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.


فَإِذَا ٱنسَلَخَ ٱلْأَشْهُرُ ٱلْحُرُمُ فَٱقْتُلُوا۟ ٱلْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَٱحْصُرُوهُمْ وَٱقْعُدُوا۟ لَهُمْ كُلَّ مَرْصَدٍۢ ۚ فَإِن تَابُوا۟ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ فَخَلُّوا۟ سَبِيلَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

9:5. இந்த நான்கு மாத காலக்கெடு முடிவடைந்த பின்பும், முஷ்ரிக்குகள் சமூக விரோத செயல்களைத் தொடர்வதாகத் தெரிந்தால், அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் இந்த அரசின் செயல்திட்டங்கள் நிறைவேறாதவாறு துரோகம் செய்தால், அவர்களை கண்ட இடத்தில் வெட்டி சாய்த்து விடுங்கள். அல்லது அவர்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள். அவர்கள் பதுங்கும் இடங்களில் முற்றுகையிட்டு அவர்களுடைய செயல்களை நோட்டமிடுங்கள்.
ஆனால் அவர்கள் தம் தவறான செயல்களை விட்டுவிடுவதாக வாக்களித்து, இறை நெறிமுறைகளின் படி செயல்பட்டு அரசு நிர்ணயிக்கும் வரிகளை முறைப்படி செலுத்தி வருவதாக ஒப்புக் கொண்டால், அவர்களை விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் யாவும் அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பு கருதியே உருவாக்கப் படுகின்றன. இது அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையாகும்.


كَيْفَ يَكُونُ لِلْمُشْرِكِينَ عَهْدٌ عِندَ ٱللَّهِ وَعِندَ رَسُولِهِۦٓ إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۖ فَمَا ٱسْتَقَٰمُوا۟ لَكُمْ فَٱسْتَقِيمُوا۟ لَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ.

9:6. இந்தக் காலக்கெடுவுக்குப் பின் முஷரிக்குகளில் யாராவது உங்களிடம் புகலிடம் தேடி வந்தால், அவர்களுக்குத் தக்க பாதுகாப்பளித்து அபயம் அளியுங்கள். அதே சமயம் அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
அதன் பின்பும் அவர்கள் இங்கு வாழ பிடிக்காது வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பினால், அவர்களை பத்திரமாக அனுப்பி வையுங்கள். அதாவது அவர்களுக்குப் பயண வசதிகளை செய்து தருவதுடன் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடுகளையும் செய்து தாருங்கள். ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் ஒன்றும் அறியாத பாமர மக்களாக இருக்கின்றனர்.
கவனித்தீர்களா? அவர்கள் அல்லாஹ்வை ஏற்காத முஷ்ரிக்குகள் என்பதால் அவர்களைக் கொன்று குவிப்பதில்லை. சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்களைத் தான் வெட்டிச் சாய்க்கக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அதுவும் இது தனிநபருக்கு கிடைக்கும் அதிகாரம் அல்ல. அரசுக்குக் கிடைக்கும் அதிகாரமாகும். மேலும் பாதுகாப்புத் தேடி வருபவர்களிடம் எந்த அளவிற்குப் பணிவோடு நடந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்பதையும் கவனியுங்கள்.


كَيْفَ وَإِن يَظْهَرُوا۟ عَلَيْكُمْ لَا يَرْقُبُوا۟ فِيكُمْ إِلًّۭا وَلَا ذِمَّةًۭ ۚ يُرْضُونَكُم بِأَفْوَٰهِهِمْ وَتَأْبَىٰ قُلُوبُهُمْ وَأَكْثَرُهُمْ فَٰسِقُونَ.

9:7. அல்லாஹ்வின் ஆட்சியமைப்போடு அந்த முஷரிக்குகள் செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் அடிக்கடி மீறும் போது, அதை எப்படிக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்? மஸ்ஜிதுல் ஹராம் என்னும் தலைமைச் செயலகம் சம்பந்தமாக நீங்கள் செய்த உடன்படிக்கை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் அவர்கள் எதுவரையில் அங்கு நேர்மையாக நடந்து கொள்கிறார்களோ, அதுவரையில் அவர்களுடன் நீங்களும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் அங்கேயும் அத்துமீறி நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களுக்கு மட்டுமே அல்லாஹ்வின் அரவணைப்பு கிடைக்கும்.


ٱشْتَرَوْا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنًۭا قَلِيلًۭا فَصَدُّوا۟ عَن سَبِيلِهِۦٓ ۚ إِنَّهُمْ سَآءَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

9:8. மேலும் ஒருவேளை, அவர்கள் உங்களைக் கட்டுப்படுத்தும் சக்தியைப் பெற்றுவிட்டால், அவர்கள் செய்த உடன்படிக்கையை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டார்கள். அத்துடன் உங்ளிடமுள்ள உறவுமுறைகளை துண்டித்துக் கொள்வதோடு, உங்களுக்கு அவர்கள் நெருக்கடி ஏற்படுத்தவே முனைந்திருப்பார்கள். உங்களைத் திருப்திப்படுத்தவே அவர்கள் நல்லவர்களைப் போல் நடிக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களில் இருப்பது கடும் பகையே ஆகும். இப்படியாக அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கிறார்கள். இத்தகையவர்களிடம் செய்துகொண்ட அந்த உடன்படிக்கை எப்படி ஜீவித்து இருப்பதாகக் கருத முடியும்?


لَا يَرْقُبُونَ فِى مُؤْمِنٍ إِلًّۭا وَلَا ذِمَّةًۭ ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُعْتَدُونَ.

9:9. மேலும் அவர்கள் சொற்ப ஆதாயங்களுக்காக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். மேலும் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் நிறைவேறாதவாறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இப்படி செயல்படுவதைப் பற்றியோ, அதன் பாதிப்புகளைப் பற்றியோ அவர்கள் சிந்தித்துப் பார்க்கிறார்களா?


فَإِن تَابُوا۟ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ فَإِخْوَٰنُكُمْ فِى ٱلدِّينِ ۗ وَنُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْلَمُونَ.

9:10. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சமுதாய மேம்பாட்டிற்காக செயல்படும் மூஃமின்களோடு அவர்கள் ஒத்துழைப்பதும் இல்லை. இவ்விஷயத்தில் அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை எல்லாம் தூக்கி எறிந்து விட்டார்கள். இப்படியாக அவர்கள் எல்லா விஷயங்களிலும் வரம்பு மீறி நடப்பவர்களாகவே இருக்கிறார்கள்.


فَإِن تَابُوا۟ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ فَإِخْوَٰنُكُمْ فِى ٱلدِّينِ ۗ وَنُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْلَمُونَ.

9:11. எனினும் இப்பவும் காலம் கடந்து விடவில்லை. இப்படி தவறாக செயல்படுவதை விட்டுவிட்டு இறை வழிகாட்டுதல்களைக் கற்றுத் தரும் "ஸலாத்"தில் கலந்து கொண்டு, இறையாட்சி நிர்ணயிக்கும் வரிகளை முறைப்படி செலுத்தி, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டால் அவர்களையும் சக தோழர்களாகக் கருத முடியும். சீரிய சிந்தனையுடன் அறிவுரைகளைப் பின்பற்றும் பொருட்டு, சமூகத்தாருக்கு இவை யாவும் விரிவாக விளக்கப்படுகின்றன.


وَإِن نَّكَثُوٓا۟ أَيْمَٰنَهُم مِّنۢ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا۟ فِى دِينِكُمْ فَقَٰتِلُوٓا۟ أَئِمَّةَ ٱلْكُفْرِ ۙ إِنَّهُمْ لَآ أَيْمَٰنَ لَهُمْ لَعَلَّهُمْ يَنتَهُونَ.

9:12. இதை விட்டுவிட்டு அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்துக்கொண்டு, இறைச் செயல் திட்டங்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டு இருந்தால், அத்தகைய விஷமிகளின் தலைவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அத்தகையவர்களைப் பிடித்து மற்றவர்களைப் பணியவைத்து ஒழுங்குபடுத்தி விடலாம்.


أَلَا تُقَٰتِلُونَ قَوْمًۭا نَّكَثُوٓا۟ أَيْمَٰنَهُمْ وَهَمُّوا۟ بِإِخْرَاجِ ٱلرَّسُولِ وَهُم بَدَءُوكُمْ أَوَّلَ مَرَّةٍ ۚ أَتَخْشَوْنَهُمْ ۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

9:13. அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்படுவோரை, நாட்டில் எப்படி விட்டு வைக்க முடியும்? ஒரு கட்டத்தில் இறைத்தூதரை ஊரைவிட்டு வெளியேற்றிவிட திட்டமிட்டவர்கள் தானே அவர்கள். (பார்க்க 8:30) அதனால்தான் இறைத்தூதரும் அவரைச் சார்ந்தவர்களும் மக்காவை விட்டு மதீனாவுக்குச் செல்ல நேர்ந்தது. (17:1) அதோடு அவர்கள் விடவில்லை. அவரைப் பின்தொடர்ந்து தாக்கவே திட்டமிட்டார்கள். அது மட்டுமின்றி அவர்கள் தான் முதன் முதலில் இறைத்தூதர் கொண்டுவந்த ஆட்சிக்கு எதிராகப் படையெடுத்தனர். இப்போதும் அவர்கள் உங்களைத் தாக்கவே திட்டமிடுகின்றனர். அத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க உங்களுக்கு என்ன வந்தது.? நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? அப்படி அல்ல. நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக நீங்கள் கடும் நடவடிக்கை எடுங்கள். நீங்கள் அஞ்ச வேண்டியதெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி தான்.


قَٰتِلُوهُمْ يُعَذِّبْهُمُ ٱللَّهُ بِأَيْدِيكُمْ وَيُخْزِهِمْ وَيَنصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُورَ قَوْمٍۢ مُّؤْمِنِينَ.

9:14. ஏனெனில் எந்த விஷயத்திலும் அல்லாஹ்வின் நேரடி தலையீடு இருப்பதில்லை. எனவே அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க கட்டளை பிறப்பித்ததன் நோக்கமே, அவர்களுக்கு உங்கள் மூலமாக வேதனை அளித்து அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும். மேலும் உங்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்து, நீங்கள் அதில் வெற்றி பெறுவீர்கள். மேலும் உங்களுக்கு மன அமைதியும் கிடைக்கும்.


وَيُذْهِبْ غَيْظَ قُلُوبِهِمْ ۗ وَيَتُوبُ ٱللَّهُ عَلَىٰ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ.

9:15. அவர்களில் எஞ்சியவர்களின் உள்ளங்களில் கொதித்து வந்த வெறுப்பும் கோபமும் தணிந்து, மார்க்கத்தில் இணையவும் முன்வரலாம். அவ்வாறு திருந்தி வர நாடுவோருக்கு, பொது மன்னிப்பு அளித்து மார்க்கத்தில் இணைத்துக் கொள்ளப்படும். அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையைக் கொண்டதே ஆகும்.
கவனித்தீர்களா? இத்தனை அக்கிரமங்களைச் செய்து வந்தவர்களையும் மனந்திருந்தி வந்தால் அல்லாஹ் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பதைக் கவனித்தீர்களா? மக்கள் நலனைப் பேணிக் காப்பதே இஸ்லாத்தின் முக்கிய குறிக்கோளாகும். அதற்கு எதிராகச் செயல்படுபவர்களை விட்டுவைக்கக் கூடாது என்பதே இறைக் கட்டளையாகும்.


أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُوا۟ وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُوا۟ مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا۟ مِن دُونِ ٱللَّهِ وَلَا رَسُولِهِۦ وَلَا ٱلْمُؤْمِنِينَ وَلِيجَةًۭ ۚ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ.

9:16. எனவே இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வையும் இறைத் தூதரையும் ஏற்றுக் கொள்வதோடு விஷயம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டீர்களா?
அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் நிறைவேற தம்மை அர்ப்பணிக்க முன்வருபவர்கள் யார் என்பதையும், அதன் ஆட்சியையும், அதன் செயல் வீரர்களையும் விட்டுவிட்டு, மற்றவர்களிடம் யார் உற்ற நண்பர்களாக்கி இருக்கிறீர்கள் என்பதையும் கவனிக்காமல் விடமுடியுமா? (பார்க்க 2:214, 3:141, 29:1-2)
உங்கள் செயல்கள கண்காணிக்கும் ஏற்பாடுகள் இல்லை என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு விஷயமும் அல்லாஹ்வுக்கு நனகு தெரிந்தே இருக்கிறது.


مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَن يَعْمُرُوا۟ مَسَٰجِدَ ٱللَّهِ شَٰهِدِينَ عَلَىٰٓ أَنفُسِهِم بِٱلْكُفْرِ ۚ أُو۟لَٰٓئِكَ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ وَفِى ٱلنَّارِ هُمْ خَٰلِدُونَ.

9:17. எனவே இறைக்கட்டளைக்கு மாற்றமாகச் செயல்படுபவர்களைப் பற்றிய உண்மைகள் தெளிவான பின், அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றும் செயலகங்களின் நிர்வாகம் (மஸ்ஜிதுகளை) அவர்கள் பொறுப்பில் விட்டு வைக்க முடியுமா? அதன் தலைமைத் தாங்கிச் செல்ல இனி அவர்களுக்கு உரிமை இல்லை. (பார்க்க 72:18)
அவர்களின் செயல்களில் எதுவும் மக்களுக்குப் பலனளிக்கக் கூடியதாக இல்லை என்பதால் அவர்களிடமிருந்து பதவிகளை பரித்து, தக்க நடவடிக்கை எடுத்து, கடும் தண்டனை அளிக்க வேண்டும்.


إِنَّمَا يَعْمُرُ مَسَٰجِدَ ٱللَّهِ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَلَمْ يَخْشَ إِلَّا ٱللَّهَ ۖ فَعَسَىٰٓ أُو۟لَٰٓئِكَ أَن يَكُونُوا۟ مِنَ ٱلْمُهْتَدِينَ.

9:18. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, “மனித செயல்களுக்கு ஏற்ப இறைவன் நிர்ணயித்துள்ள இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று, மனித மாண்புகளைக் கட்டிக்காக்கும் "ஸலாத்" முறையை நிலைநிறுத்தி, சமுதாய மேம்பாட்டிற்காக நிர்ணயிக்கப்படும் வரிகளை முறைப்படி செலுத்தி, அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவர்கள் தாம் இறைச் செயலகத்தை, தலைமைத் தாங்கி வழி நடத்திச் செல்ல தகுதியுடையவர்கள் ஆவர். அவர்களே நேர்வழியில் நிலைத்திருப்பவர்கள் ஆவார்கள்.


۞ أَجَعَلْتُمْ سِقَايَةَ ٱلْحَآجِّ وَعِمَارَةَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ كَمَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَجَٰهَدَ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ لَا يَسْتَوُۥنَ عِندَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

9:19. கஅபா என்கிற தலைமைச் செயலகத்தை நிர்வகிப்பதாகச் சொல்லிக் கொண்டு, வருடந்தோரும் அங்கு ஹஜ்ஜுக்காகத் திரளாகக் கூடும் மக்களுக்குத் தண்ணீரையும் சாப்பாட்டையும் கொடுத்துவிட்டால் மட்டும் போதுமா? அவர்கள் மற்ற எந்த விஷயங்களிலும் அக்கறை கொள்வதில்லையே!
அதே சமயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்கிற ஆஃகிரத்தையும் ஏற்று, சமுதாய மேம்பாட்டிற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு இவர்கள் சமமாகி விடுவார்களா? இவ்விரு சாராரும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள்.
எனவே அவர்களை அந்தச் செயலகத்தை விட்டு வெளியேற்றி விட வேண்டும். நற்செயல்கள் எதையும் செய்யாதவர்களே அநியாயக்காரர்கள் ஆவார்கள். இவர்களுக்கு நேர்வழி கிடைப்பது எப்படி?


ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِندَ ٱللَّهِ ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَآئِزُونَ.

9:20. மேலும் எவர்கள் தம் வீட்டையும் ஊரையும் விட்டு, பொதுவாழ்வில் ஈடுபட்டு அல்லாஹ்வின் செயல் திட்டங்ளை நிறைவேற்ற தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, சமுதாய மேம்பாட்டிற்காகத் தம் செல்வங்களையும் செலவிடுகிறார்களோ, அவர்களிடம்தான் இந்த செயலகத்தின் நிர்வாகப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். அவர்கள் தாம் மகத்தான உயர் பதவிகளுக்கு உரியவர்கள் ஆவார்கள். அவர்கள் தாம் தம் வாழ்வின் வெற்றி இலக்கை அடைபவர்கள்.


يُبَشِّرُهُمْ رَبُّهُم بِرَحْمَةٍۢ مِّنْهُ وَرِضْوَٰنٍۢ وَجَنَّٰتٍۢ لَّهُمْ فِيهَا نَعِيمٌۭ مُّقِيمٌ.

9:21. இத்தகையவர்களுக்கு “இறைவனின் வழிகாட்டுதல்கள்” என்ற அருட்கொடைகளும் கிருபையும் கிடைக்கும். இவர்களின் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே இருக்கும். எனவே அங்கு தாராளமான பொருளாதார வசதிகளுடன் கூடிய நிலையான பாக்கியங்களைக் கொண்ட சுவனத்திற்கு ஒப்பான சமுதாயம் உருவெடுக்கும். இந்தச் சுவன வாழ்க்கை இவர்களின் மரணத்திற்குப் பின்பும் தொடரும்.


خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۚ إِنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌۭ.

9:22. அச்சுவனங்களில் இவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியும் சந்தோஷங்களும் கிடைக்கும். அல்லாஹ்விடத்தில் இத்தகையவர்களுக்கு மகத்தான நற்கூலி நிச்சயம் உண்டு என்ற நற்செய்தியை அவர்களிடம் கூறிவிடுங்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوٓا۟ ءَابَآءَكُمْ وَإِخْوَٰنَكُمْ أَوْلِيَآءَ إِنِ ٱسْتَحَبُّوا۟ ٱلْكُفْرَ عَلَى ٱلْإِيمَٰنِ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.

9:23. மேலும் ஒரு விஷயத்தை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட தகாத செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தந்தை, மகன், அண்ணன், தம்பி, என்ற உறவுமுறை பாகுபாடு இருக்கக் கூடாது. உறவினர்களின் மீதுள்ள பாசம் இதில் குறுக்கிடக்கூடாது. இதையும் மீறி யாராவது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், அவர்களும் அநியாயக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள்.


قُلْ إِن كَانَ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ وَإِخْوَٰنُكُمْ وَأَزْوَٰجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَٰلٌ ٱقْتَرَفْتُمُوهَا وَتِجَٰرَةٌۭ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرْضَوْنَهَآ أَحَبَّ إِلَيْكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٍۢ فِى سَبِيلِهِۦ فَتَرَبَّصُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّهُ بِأَمْرِهِۦ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ.

9:24. மேலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற தம்மை அர்ப்பணித்துக் கொள்ள இறை ஆட்சியமைப்பு வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சமூக நலத் திட்டங்களுக்கு, இரத்த பந்த உறவுமுறைப் பாசங்கள் குறுக்கீடாக இருக்கக் கூடாது. உங்களுடைய பிள்ளைகள், சகோதரர்கள், மனைவி போன்ற குடும்பத்தார்கள் மற்றும் நீங்கள் ஈட்டிய செல்வங்கள் ஆகியவற்றின் மீதுள்ள பாசம், இந்த நற்பணிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது. இவ்வாறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டால், தம் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் பாசத்தோடு பராமரித்து வரும் வீட்டின் மீதுள்ள பற்றுதலும் இந்த நற்பணிகளில் குறுக்கிடக் கூடாது. இவை எல்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுதான். ஆனால் இறை ஆட்சியமைப்புக் கட்டளைகள் என்று வரும்போது, இவற்றை இரண்டாம் பட்சமாகத் தான் கருத வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கு இணங்கி செயல்பட தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் உறவுமுறைப் பாசங்களுக்கு அடிமைப்பட்டு நலப்பணிகளிலும் பாதுகாப்பு விஷயங்களிலும் அக்கறை காட்டாவிட்டால், அதன் விளைவாக சமுதாயச் சிக்கல்கள், பொருளாதாரச் சிக்கல்கள் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய வேதனைகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான். இவ்வாறு இறைச் சட்டதிட்டங்களைப் புறக்கணித்து வேறு பாதையில் செல்பவர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதிலலை.


لَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ فِى مَوَاطِنَ كَثِيرَةٍۢ ۙ وَيَوْمَ حُنَيْنٍ ۙ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْـًۭٔا وَضَاقَتْ عَلَيْكُمُ ٱلْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُم مُّدْبِرِينَ.

9:25. மேற்சொன்ன வாழ்வாதார வசதிகள் மற்றும் உறவுமுறைகளின் துணையின்றி எப்படி வாழ்வது என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது. இவையாவும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளே ஆகும். அதே போல நீங்கள் பங்கெடுத்த பல போர்களிலும் அல்லாஹ்வின் ஏற்பாடுகள் உங்களுக்கு உதவி புரிந்தே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஹுனைன் போரின் போது, போர் வீரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தீர்கள். ஆனால் நீங்கள் வெற்றி பெற்றீர்களா? போரில் திரளான வீரர்கள் இருந்தும் நீங்கள் தோல்வியடைந்து பகைவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள புகலிடம் தேடி அலைந்தீர்கள். இப்படியாக விசாலமாக இருக்கும் இப்பூமியில் உங்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது. அதாவது நீங்கள் புறங்காட்டி பின்வாங்கலானீர்கள்.


ثُمَّ أَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلْمُؤْمِنِينَ وَأَنزَلَ جُنُودًۭا لَّمْ تَرَوْهَا وَعَذَّبَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلْكَٰفِرِينَ.

9:26. இவ்வாறிருந்தும் அல்லாஹ், உங்கள் கண்களுக்குப் புலப்படாத படைகளைக் கொண்டு உங்களுக்குத் துணை புரிய இருப்பதாகவும் அதனால் உங்கள் பகைவர்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என்றும் செய்தியை அனுப்பி, தூதர் மற்றும் மூஃமின்களின் உள்ளங்களை அமைதி பெறச் செய்தான். (மேலும் பார்க்க - 8:10, 9:40, 3:126, 41:30) இதனால் உங்களுள் உற்சாகமும் தைரியமும் ஏற்பட்டு அப்போரில் வெற்றி பெற்றீர்கள். மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு கிடைக்கின்ற கூலியும் கடுமையானதாகும் என்பது உங்களுக்குத் தெளிவானது.
அதாவது குடும்பம், வியாபாரம், வீடு ஆகியவை மட்டுமே உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்குத் துணை நிற்கும் என்பதல்ல. அல்லாஹ்வின் அறிவுரைகளும் அதன்படி உருவாகும் ஆட்சியமைப்பும் உங்களுக்கு என்றென்றைக்கும் துணை நிற்கும் என்பதே இங்கு தெளிவாகிறது. அந்த ஆட்சியமைப்பைக் கட்டிக் காத்து அதன்படி செயல் பட்டால் சிக்கலான சமயங்களிலும் எதையும் சமாளிக்கும் தைரியமும் மன வலிமையும் உங்களுள் வளர்ந்து, அதை எளிதாக சீர் படுத்தி விடுவீர்கள். இதுவே பொது வாழ்வில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களாகும். இதை விட்டுவிட்டு தன் வியாபாரம், தன் குடும்பம் மட்டும் போதுமானவை என்றும், பொதுவாழ்வு தேவையில்லாத ஒன்று என்று சுயநலத்துடன் இருந்தால் ஆபத்து மற்றும் பிரச்சனைகள் ஏற்படும்போது, பாதுகாப்பு கிடைக்காது.


ثُمَّ يَتُوبُ ٱللَّهُ مِنۢ بَعْدِ ذَٰلِكَ عَلَىٰ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

9:27. எனவே ஒருமுறை தவறு செய்து விட்டால் அதற்கு மன்னிப்பே கிடையாது என்பதல்ல. அந்த தவறை உணர்ந்து உடனே சரிசெய்து கொண்டால், அதன் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு வழிகள் பிறக்கும். இதுவே அல்லாஹ்வின் நிலையான சட்டமாகும். (பார்க்க 4:17)


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّمَا ٱلْمُشْرِكُونَ نَجَسٌۭ فَلَا يَقْرَبُوا۟ ٱلْمَسْجِدَ ٱلْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَٰذَا ۚ وَإِنْ خِفْتُمْ عَيْلَةًۭ فَسَوْفَ يُغْنِيكُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦٓ إِن شَآءَ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ حَكِيمٌۭ.

9:28. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! எவ்வித கொள்கையும் இன்றி தம் மனோ இச்சையின் அடிப்படையில் செயல்படும் மாசு படிந்த எண்ணங்களைக் கொண்ட முஷ்ரிக்குகளிடம், இந்தத் தலைமை செயலகத்தின் நிர்வாகப் பொறுப்பு நீடித்திருப்பது முறையாகாது. இந்த ஆண்டிலிருந்து நிர்வாக விஷயத்தில் தலையிடாதவாறு அவர்களை ஒதுக்கி விடுங்கள். ஏனெனில் அவர்களிடம் இருக்கும் எண்ணங்கள் சீர்கேட்டையே விளைவிக்கின்றன. அவர்களை உடனே அகற்றினால், பொருளாதாரச் சிக்கல் ஏற்படும் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா? அல்லாஹ்வின் செயல்திட்டப்படி மாற்று ஏற்பாடுகளைச் செய்தால் உங்களுக்கு வசதி வாய்ப்புகள் விரைவில் பெருகி வரும். ஆக எந்த செயல்களால் என்ன பாதிப்புகள் ஏற்படும்., அதற்கு மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது போன்ற விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.


قَٰتِلُوا۟ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلْحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ حَتَّىٰ يُعْطُوا۟ ٱلْجِزْيَةَ عَن يَدٍۢ وَهُمْ صَٰغِرُونَ.

9:29. இந்த முஷ்ரிக்குகளைத் தவிர்த்து, மற்ற வேதமுடையவர்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று அதன்படி செயல்படுவதில்லை. அல்லாஹ்வும் அதனடிப்படையில் உருவாகியுள்ள ஆட்சியமைப்பும் விதித்துள்ள வரம்புகளை மீறியும் நடக்கிறார்கள். மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான வழியைக் காட்டும் இம்மார்க்கத்தை ஏற்று அதன்படி நடந்து கொள்வதும் இல்லை. அவர்கள் இந்த ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு அடிபணிந்து செயல்படுவதோடு அரசு விதித்த வரிகளை செலுத்தி வந்தால், அவர்களுடைய உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் அல்லவா? ஆனால் இதைப்பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராகப் போரிடுங்கள்.


وَقَالَتِ ٱلْيَهُودُ عُزَيْرٌ ٱبْنُ ٱللَّهِ وَقَالَتِ ٱلنَّصَٰرَى ٱلْمَسِيحُ ٱبْنُ ٱللَّهِ ۖ ذَٰلِكَ قَوْلُهُم بِأَفْوَٰهِهِمْ ۖ يُضَٰهِـُٔونَ قَوْلَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَبْلُ ۚ قَٰتَلَهُمُ ٱللَّهُ ۚ أَنَّىٰ يُؤْفَكُونَ.

9:30. அங்கு வாழும் இஸ்ரவேலர்களைக் கவனியுங்கள். அவர்களுக்கு இறை வழிகாட்டுதல்கள் வந்த பின்பும் காலப்போக்கில் அவற்றை விட்டுவிட்டு அவர்கள் எகிப்து நாட்டின் அரசனாக இருந்த உஜைர் (Osiris) என்பவரை அல்லாஹ்வின் மகனாகப் பாவித்து வணங்க ஆரம்பித்தார்கள். மேலும் கிறிஸ்தவர்களைப் பார்த்தால் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து சீர்திருத்தங்களைச் செய்த ஈஸா நபியை அல்லாஹ்வின் மகனாகக் கருதி அவரை வணங்கி வருகிறார்கள். இவை எல்லாம் அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட கற்பனைக் கதைகளே ஆகும். இவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களும் இப்படிப்பட்ட கற்பனைக் கதைகளை ஏற்படுத்திக் கொண்டு வணங்கி வந்தனர். அவர்களைப் போன்றே இவர்களும் வணங்குகிறார்கள். இத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி அழிவுதான் ஏற்படும். ஏனெனில் அவர்கள் நேர்வழியை விட்டு திசை மாறிச் சென்று விட்டவர்கள்.


ٱتَّخَذُوٓا۟ أَحْبَارَهُمْ وَرُهْبَٰنَهُمْ أَرْبَابًۭا مِّن دُونِ ٱللَّهِ وَٱلْمَسِيحَ ٱبْنَ مَرْيَمَ وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوٓا۟ إِلَٰهًۭا وَٰحِدًۭا ۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَٰنَهُۥ عَمَّا يُشْرِكُونَ.

9:31. அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, அவர்களுடைய பாதிரியார்களையும் சாமியார்களையும் தெய்வங்களாக ஆக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி மர்யமுடைய குமாரர் ஈஸாவையும் கடவுளாகக் கருதி அவர் பெயரில் அவர்களே உருவாக்கிக் கொண்ட வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். உண்மை விஷயம் யாதெனில் அவர் அல்லாஹ்வின் விழிகாட்டுதலைத் தவிர்த்து வேறு எந்த வழிமுறையையும் கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தவே இல்லை. அவர் இப்படிப்பட்ட ஆதாரமற்ற விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ஆவார்.
இருந்தும் ஈஸா நபியின் பெயரைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மதகுருமார்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் போதித்து வருகிறார்கள்.


يُرِيدُونَ أَن يُطْفِـُٔوا۟ نُورَ ٱللَّهِ بِأَفْوَٰهِهِمْ وَيَأْبَى ٱللَّهُ إِلَّآ أَن يُتِمَّ نُورَهُۥ وَلَوْ كَرِهَ ٱلْكَٰفِرُونَ.

9:32. இப்படிப்பட்ட கற்பனைக் கதைகளை மக்களிடம் எடுத்துரைத்து மனிதனின் ஒளிமயமான வாழ்விற்குச் சிறந்த வழிகாட்டுதலாகத் திகழும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை, மக்களை விட்டு மூடி மறைத்து விடலாம் என்று விரும்புகிறார்கள். (மேலும் பார்க்க 61:8) ஆனால் அவர்கள் எவ்வளவு தான் வெறுத்தாலும், அல்லாஹ்வின் இந்த ஒளிமயமான வழிகாட்டுதல்களின்படி சிறந்த உலகம் உருவாகியே தீரும்.


هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُشْرِكُونَ.

9:33. இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்க இறைத்தூதரை அல்லாஹ்தான் அனுப்பி வைத்தான். அந்த வழிகாட்டுதல்கள் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டுவதாக உள்ளன. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் முஷ்ரிக்குகளுக்கு இது வெறுப்பாக இருப்பினும், உலக மக்கள் கடைப்பிடித்து வரும் எல்லா வழிமுறைகளையும் விட இந்த மார்க்கமே தலைசிறந்த மார்க்கம் என நிரூபணம் ஆகியே தீரும்.


۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلْأَحْبَارِ وَٱلرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَٰلَ ٱلنَّاسِ بِٱلْبَٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ ۗ وَٱلَّذِينَ يَكْنِزُونَ ٱلذَّهَبَ وَٱلْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِى سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍۢ.

9:34. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! மதகுருமார்கள் மற்றும் உலக வாழ்வை விட்டு விலகி வாழும் துறவிகளில் பெரும்பாலோர் தவறான முறையில் சொத்துச் செல்வங்களை ஈட்டிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் மக்கள் வராதவாறு தடுத்தும் வருகிறார்கள். நபியே! யார் இவ்வாறு செல்வங்களை குவித்துக் கொள்கிறார்களோ அவர்கள் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கை செய்துவிடுவீராக.
ஏனெனில் தனியார் சொத்துக் குவிப்பு என்பது அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சட்டத்திற்குப் புறம்பானதாகும். மேலும் அல்லாஹ்வின் பாதையில் ஆட்சி நிலைபெறும் கால கட்டத்தில் மதகுருமார்களும் துறவிகளும் மக்களுக்குத் தவறான கொள்கைகளை போதிப்பதை விட்டு தடுக்கப்படுவார்கள். ஜமாஅத் கூட்டமைப்பும் இத்தகைய சமூக விரோதிகளை கட்டுப் படுத்தி தடுத்து வைக்கலாம்.


يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِى نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا۟ مَا كُنتُمْ تَكْنِزُونَ.

9:35. இறைவன் காட்டிய வழியில் ஆட்சி நடைபெறும் காலகட்டத்தில் சமூக விரோதச் செயலில் ஈடுபடும் இத்தகையவர்கள், கொழுந்துவிட்டு எரியும் நரக வேதனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். (பார்க்க 104:6-9) அவர்களின் நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகளிலும் சூடு போடப்படும். இவை தாம் நீங்கள் சேமித்து வைத்தவை. எனவே அவற்றை நீங்கள் சுவையுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும். அல்லாஹ்வின் சட்டப்படி உள்ள இத்தண்டனை மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் தரப்படும்.


إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثْنَا عَشَرَ شَهْرًۭا فِى كِتَٰبِ ٱللَّهِ يَوْمَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ مِنْهَآ أَرْبَعَةٌ حُرُمٌۭ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا۟ فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَٰتِلُوا۟ ٱلْمُشْرِكِينَ كَآفَّةًۭ كَمَا يُقَٰتِلُونَكُمْ كَآفَّةًۭ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ.

9:36. ஒரு வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது இந்த பிரபஞ்சங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டதற்கு முன்பே அல்லாஹ்வின் புறத்திலிருந்து எடுக்கப்பட்ட முடிவாகும். மேலும் அதில் நான்கு மாதங்கள் போர் செய்யத் தடை உத்தரவு பிறப்பித்ததும் அல்லாஹ்தான். போர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இதுவே நிரந்தரமாக நிலைநிறுத்தப்பட்ட விதிமுறையாகும். எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்த மாதங்களில் போரிடுவது மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் அத்துமீறி நடந்து அநியாயம் செய்யாதீர்கள். மற்றபடி போரின் சமயம், அந்த முஷ்ரிக்குகள் எவ்வாறு முழு வேகத்துடன் உங்களுடன் போரிடுகிறார்களோ, நீங்களும் அவ்வாறே அவர்களுக்கு எதிராக முழுபலத்துடன் போரிடலாம். அதில் குற்றமில்லை. தர்மத்தை நிலைநாட்ட நியாயத்திற்காகப் போரிடும் இலட்சியவான்களின் பக்கமே அல்லாஹ்வின் ஆதரவு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஏற்கனவே 2:190இல் சொல்லப்பட்டது போல போர் என்பது வருடம் முழுவதும் காலம் காலமாக நடைபெறுகின்ற ஒன்றல்ல. அதற்கும் வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உலகில் அமைதியை நிலைநாட்ட அக்கிரமங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையே போர் என்பதாகும் (பார்க்க 22:39). மேலும் அது அண்டை நாடுடன் போரிட நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அதிக பட்சமாக வருடத்தில் 8 மாதங்கள் வரையில் தொடர்ந்து போரிட அனுமதி உண்டு. மற்ற நான்கு மாதங்கள் போரிட தடை செய்யப்படுகிறது. இந்தப் போர் வரையறைகளை ஐக்கிய நாட்டு சபை கூடி முடிவெடுக்க வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் நாட்டிலுள்ள விவசாயம், நெசவு, வணிகம் ஆகியவை பெரும் அளவில் பாதிக்காதவாறு இந்தப் போர் நடத்தப்பட வேண்டும் என்பதே இறைவனின் நாட்டமாகும். மேலும் சூரியனைச் சுற்றி வரும் நவக்கிரகங்களும் நிர்ணயிக்கப்பட்ட கால கட்டங்களின்படி மிகத் துல்லியமாக செயல்படகின்றன. அதில் சிறிதளவும் மாற்றம் ஏற்படுவதில்லை. அதன்படி ஒரு முறை சூரியனை இந்த பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு 365 நாட்களும் 6 மணி நேரமும் ஆகும். இது பன்னிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


إِنَّمَا ٱلنَّسِىٓءُ زِيَادَةٌۭ فِى ٱلْكُفْرِ ۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُحِلُّونَهُۥ عَامًۭا وَيُحَرِّمُونَهُۥ عَامًۭا لِّيُوَاطِـُٔوا۟ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّهُ فَيُحِلُّوا۟ مَا حَرَّمَ ٱللَّهُ ۚ زُيِّنَ لَهُمْ سُوٓءُ أَعْمَٰلِهِمْ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ.

9:37. போர் தடை செய்யப்பட்ட மாதங்கள் விஷயத்தில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக ஆக்கிக் கொள்கின்றனர். இதுவும் ஒருவகையில் அத்து மீறலே ஆகும். இதனால் வழிதவறிச் செல்ல வாய்ப்புகள் உருவாகி விடுகின்றன. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் போரிட அனுமதி உண்டு என்று அவர்களாகவே தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்கின்றனர். அதேபோல ஒரு குறிப்பிட்ட வருடத்தில் போரிட தடை உள்ளதாகவும் கூறி விடுகிறார்கள். இப்படியாக அல்லாஹ் நிர்ணயித்த நான்கு மாதத் தடை உத்தரவை தம் விருப்பம் போல் மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். இப்படிச் செய்வது புத்திசாலித்தனம் என்றும் நினைத்துக் கொள்கின்றனர். இது அவர்களுக்கு அழகாகவும் தெரிகிறது. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் கூட்டத்தாருக்கு அல்லாஹ்வின் நேர்வழி ஒருபோதும் கிடைக்காது.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ ٱنفِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ٱثَّاقَلْتُمْ إِلَى ٱلْأَرْضِ ۚ أَرَضِيتُم بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مِنَ ٱلْءَاخِرَةِ ۚ فَمَا مَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فِى ٱلْءَاخِرَةِ إِلَّا قَلِيلٌ.

9:38. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! தர்மத்தை நிலை நாட்டி, நாட்டில் நியாயமான ஆட்சி மலர, அல்லாஹ்வின் பாதையில் பணிபுரிய அவற்றின் பயிற்சி முகாம்களுக்குப் புறப்படுங்கள் என்று அழைப்பு வந்தால், அது உங்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது. உங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியே வர உங்கள் மனம் ஏற்கவில்லை. உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது. வருங்கால நிலையான, நிம்மதியான, சந்தோஷமான வாழ்வு பெறுவதைவிட, தற்காலிக சுகமான வாழ்வை நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் அறிவுரைப்படி உருவாகும் சிறந்த ஆட்சிமுறையால் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் நிலையான சந்தோஷமான வாழ்க்கையை வைத்துப் பார்க்கும்போது, இந்தத் தற்காலிக சொகுசு வாழ்வு அற்பமானதுதான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


إِلَّا تَنفِرُوا۟ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًۭا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْـًۭٔا ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ.

9:39. இத்தகைய சிறந்ததொரு ஆட்சி மலர நீங்கள் துணை புரியவில்லை என்றால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி உங்கள் எதிரணிகளால் நீங்கள் பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாவீர்கள். மேலும் இந்த செயல் திட்டங்கள் நிறைவேற உங்களுக்குப் பதிலாக வேறு சமுதாயம் உருவெடுக்கும். அதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனெனில் அல்லாஹ்வின் செயல்திட்டம் அனைத்து விஷயங்களிலும் பேராற்றல் உடையவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ ٱللَّهُ إِذْ أَخْرَجَهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ ثَانِىَ ٱثْنَيْنِ إِذْ هُمَا فِى ٱلْغَارِ إِذْ يَقُولُ لِصَٰحِبِهِۦ لَا تَحْزَنْ إِنَّ ٱللَّهَ مَعَنَا ۖ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَيْهِ وَأَيَّدَهُۥ بِجُنُودٍۢ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلسُّفْلَىٰ ۗ وَكَلِمَةُ ٱللَّهِ هِىَ ٱلْعُلْيَا ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ.

9:40. உங்கள் சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் இறைத்தூதருக்கு நீங்கள் துணை நிற்கவில்லை என்றால், அல்லாஹ்வின் புறத்திலிருந்து வேறு ஏற்பாடுகள் செய்து தரப்படும். ஒரு கட்டத்தில் அவர் தம் ஊரை விட்டு ஹிஜ்ரத் செய்து வெளியேறிய போது, அவருக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்தே இருக்கிறது. அவருடன் இருந்த தோழருடன் குகைக்குள் சென்று தங்கி இருந்த போது, பகைவர்கள் பின்தொடர்ந்து வந்தார்கள். அப்போது அவர் தன் தோழரிடம்,“கவலைப்படாதீர். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி நமக்கு உண்டு” என்று தைரியமூட்டினார். இப்படியாக அவர்களுக்கு மனஅமைதியும் தைரியமும் கிடைத்தன. மேலும் பத்ருப் போரின் சமயம் நிலைமை மிகவும் மோசமாக இருந்தபோது, அவர்கள் பார்க்க முடியாதப் படைகளைக் கொண்டு உதவி செய்வதாக செய்தியை அனுப்பி அவருக்கு வலுவூட்டினோம். (பார்க்க 9:26 & 33:9) இப்படியாக பகைவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு எப்போதும் மேலோங்கியே நிற்கும் என்பதையும் அவனுடைய வழிகாட்டுதல்கள் ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


ٱنفِرُوا۟ خِفَافًۭا وَثِقَالًۭا وَجَٰهِدُوا۟ بِأَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

9:41. இஸ்லாமிய செயல்வீரர்களே! நீங்கள் ஏழையோ, செல்வந்தரோ, வசதிபடைத்தவரோ, வசதியற்றவரோ, யாராக இருந்தாலும் சரி, அல்லாஹ்வின் சிறப்பான ஆட்சி மலர உங்களிடம் இருக்கும் உபரிச் செல்வங்களை அளித்து (2:219) தம்மை அர்ப்பணித்துக் கொள்ள முன்வாருங்கள். அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நீங்கள் அறிந்தால் நீங்கள் விரைத்து செயல்படுவீர்கள்.
மேலும் பொது வாழ்வில் ஈடுபடுவதற்கு முன் அதைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களிடம் எவ்வாறு அணுக வேண்டும். அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் எவ்வாறு தீர்த்து வைக்க வேண்டும். இவை எல்லாம் வீட்டில் இருந்த படியே தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அதற்காக சிறப்புப் பயிற்சி முகாம்களை (Police Training Camp) ஏற்படுத்தி அங்கு இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி கற்றுத் தருவார்கள். மேலும் உடல் ரீதியான குறைகளைப் போக்க சில உடற் பயிற்சிகளையும் மறுவாழ்வு திட்டங்களையும் கற்றுத் தருவார்கள். அப்போதுதான் மன வலிமையுடன் உடல் வலிமையும் கூடி வரும். சிறப்பாகச் செயலாற்றவும் முடியும்.


`

لَوْ كَانَ عَرَضًۭا قَرِيبًۭا وَسَفَرًۭا قَاصِدًۭا لَّٱتَّبَعُوكَ وَلَٰكِنۢ بَعُدَتْ عَلَيْهِمُ ٱلشُّقَّةُ ۚ وَسَيَحْلِفُونَ بِٱللَّهِ لَوِ ٱسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ يُهْلِكُونَ أَنفُسَهُمْ وَٱللَّهُ يَعْلَمُ إِنَّهُمْ لَكَٰذِبُونَ.

9:42. ஆனால் இந்த விஷயத்தில் மனச் சஞ்சலத்தில் இருப்பவர்கள், ஏதாவது சாக்குப் போக்கு சொல்கிறார்கள். பயண தூரம் அதிகமாக இருப்பதாகக் காரணம் காட்டுகிறார்கள். மேலும் பொதுப் பணியில் தமக்கும் ஏதாவது ஆதாயம் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்றும் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட ஆதாயங்கள் இருந்தால் அவர்கள் உம்முடன் புறப்பட்டு இருப்பார்கள். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள எங்களுக்கு சக்தி இருந்தால் நாங்களும் புறப்பட்டிருப்போம் என்கிறார்கள். இப்படி அவர்கள் சாக்குப் போக்குகளைச் சொல்லி தம் அழிவைத் தாமே தேடிக் கொள்கிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியாதா?


عَفَا ٱللَّهُ عَنكَ لِمَ أَذِنتَ لَهُمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكَ ٱلَّذِينَ صَدَقُوا۟ وَتَعْلَمَ ٱلْكَٰذِبِينَ.

9:43. ஆனால் அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார்? பொய்யுரைத்தவர்கள் யார்? என்று தீர விசாரிக்காமல் அவர்களின் உண்மை நிலையை அறிவதற்கு முன்னமே, நீ ஏன் அவர்களை வீட்டிலேயே தங்கிக்கொள்ள அனுமதி அளித்தீர்? அவர்களை நீர் அப்படியே நம்பிவிட்டது தான் அதற்குக் காரணமாகும். இது தவறாகும். ஆனால் இனி அப்படி நடக்காதவாறு பார்த்துக் கொள்வீராக.


لَا يَسْتَـْٔذِنُكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ أَن يُجَٰهِدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ.

9:44. அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆகிரத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள், இத்தகைய சாக்கு போக்குகளை சொல்லி பயிற்சி முகாமுக்கு செல்வதிலிருந்து விலகி இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி சிறந்ததொரு ஆட்சி மலர சமூக சீரமைப்புப் பணியில் ஈடுபட கட்டளை வந்ததும், தம் உயிரைப் பணயம் வைத்து தம்மிடமுள்ள உபரிச் செல்வங்களை அர்ப்பணிக்க உடனே ஆயத்தமாகி விடுவார்கள். அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றும் லட்சியவான்கள் யார் என்ற உண்மை அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.


إِنَّمَا يَسْتَـْٔذِنُكَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَٱرْتَابَتْ قُلُوبُهُمْ فَهُمْ فِى رَيْبِهِمْ يَتَرَدَّدُونَ.

9:45. அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும்,“மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் தான் சமூக சீரமைப்புப் பணியிலிருந்து விலகிக்கொள்ள உம்மிடம் அனுமதி கேட்பார்கள். அவர்கள் இன்னமும் மனச் சஞ்சலத்தில் தான் இருக்கிறார்கள். எதைப் பற்றியும் தீர்க்கமாக முடிவெடுக்காமல் தம் மனதை அலைய விடுகின்றனர்.


۞ وَلَوْ أَرَادُوا۟ ٱلْخُرُوجَ لَأَعَدُّوا۟ لَهُۥ عُدَّةًۭ وَلَٰكِن كَرِهَ ٱللَّهُ ٱنۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيلَ ٱقْعُدُوا۟ مَعَ ٱلْقَٰعِدِينَ.

9:46. அவர்கள் உண்மையிலேயே பொதுவாழ்வில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள நாடியிருந்தால், அவர்கள் அதற்கு வேண்டிய ஆயத்தங்களை மேற்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் மனம் அதற்கு ஒப்பவில்லை. எனவேதான் அவர்கள் வீட்டைவிட்டுப் புறப்பட விரும்பாதவாறு ஆகிவிட்டது. எனவே அவர்களை கோழைகளாக வீட்டிலேயே தங்கிக்கொள்ளும்படி கூறப்பட்டது.


لَوْ خَرَجُوا۟ فِيكُم مَّا زَادُوكُمْ إِلَّا خَبَالًۭا وَلَأَوْضَعُوا۟ خِلَٰلَكُمْ يَبْغُونَكُمُ ٱلْفِتْنَةَ وَفِيكُمْ سَمَّٰعُونَ لَهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّٰلِمِينَ.

9:47. அதையும் மீறி அவர்கள் உங்களோடு புறப்பட்டு இருந்தாலும், வெறும் குழப்பங்களைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள். மேலும் இத்தகையவர்கள் உங்களிடையே கோள் மூட்டி பகைமையை உருவாக்கவே முயன்றிருப்பார்கள். இப்படியாக உங்களிடையே குழப்பங்கள் நிலவி வருவதையே அவர்கள் விரும்பி இருப்பார்கள். அவர்களின் பேச்சைக் கேட்பவர்கள் உங்களில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக அநியாயக்காரர்களை அடையாளம் கண்டுக் கொள்வதில் அல்லாஹ்வுக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது?


لَقَدِ ٱبْتَغَوُا۟ ٱلْفِتْنَةَ مِن قَبْلُ وَقَلَّبُوا۟ لَكَ ٱلْأُمُورَ حَتَّىٰ جَآءَ ٱلْحَقُّ وَظَهَرَ أَمْرُ ٱللَّهِ وَهُمْ كَٰرِهُونَ.

9:48. உண்மை விஷயம் என்னவென்றால் இதற்கு முன்னரும் இத்தகையவர்கள் குழப்பத்தையே விரும்பி இருக்கிறார்கள். உமது செயல் திட்டங்கள் நிறைவேறாதவாறு தடுத்தும் வந்துள்ளார்கள். இருந்தும் இறுதியில் வாய்மையே வென்றது. அவர்கள் மக்களின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டனர். அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் முறைப்படி நிறைவேறி இந்த மார்க்கமே மேலோங்கி வந்தது.


وَمِنْهُم مَّن يَقُولُ ٱئْذَن لِّى وَلَا تَفْتِنِّىٓ ۚ أَلَا فِى ٱلْفِتْنَةِ سَقَطُوا۟ ۗ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌۢ بِٱلْكَٰفِرِينَ.

9:49. “என்னை வீட்டிலேயே தங்கிவிட அனுமதி அளியுங்கள். என் வாழ்க்கையைப் பிரச்சனைக்குள் ஆக்காதீர்கள்” என்று உம்மிடம் வந்து மண்டியிட்டு கெஞ்சியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்கனவே பல பிரச்சனைகளில் மூழ்கித் தவிப்பவர்கள்தாம். இதை அவர்கள் உணராமல் நரகத்தின் விழிம்புகளிலேயே மடிந்து கிடக்கிறார்கள்.


إِن تُصِبْكَ حَسَنَةٌۭ تَسُؤْهُمْ ۖ وَإِن تُصِبْكَ مُصِيبَةٌۭ يَقُولُوا۟ قَدْ أَخَذْنَآ أَمْرَنَا مِن قَبْلُ وَيَتَوَلَّوا۟ وَّهُمْ فَرِحُونَ.

9:50. எனவேதான் சமூக சீரமைப்புப் பணியின் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைத்தால் அவர்களுக்கு மன வேதனை ஏற்படுகிறது. உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. “இப்படி எல்லாம் நடக்கும் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும். எனவே தான் இந்த விஷயத்தில் எச்சரிக்கையோடு நடந்து கொண்டோம்” என்று கூறி பெருமகிழ்ச்சியுடன் சென்று விடுகிறார்கள்.


قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوْلَىٰنَا ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ.

9:51. ஆனால் பிரச்சனைகளும் துக்கங்களும் ஏற்படுவது, அல்லாஹ் ஏற்கனவே நிர்ணயித்த சட்ட விதிமுறைகளின்படி அவரவர் செய்யும் தவறான செயல்களால் தான் என்பதை அவர்களுக்கு விளக்கிவிடுங்கள். மேலும் அவற்றைச் சரி செய்து கொள்ள அல்லாஹ்வின் வழிகாட்டுதலே நமக்குத் துணை நிற்கும். மூஃமின்கள் யாவரும் இறைவழிகாட்டுதல் மீது முழு நம்பிக்கை வைத்து செயல்படுவார்கள். இதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.


قُلْ هَلْ تَرَبَّصُونَ بِنَآ إِلَّآ إِحْدَى ٱلْحُسْنَيَيْنِ ۖ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ أَن يُصِيبَكُمُ ٱللَّهُ بِعَذَابٍۢ مِّنْ عِندِهِۦٓ أَوْ بِأَيْدِينَا ۖ فَتَرَبَّصُوٓا۟ إِنَّا مَعَكُم مُّتَرَبِّصُونَ.

9:52. "நாம் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றி தோல்வி ஏற்படுவது இயல்பானதே ஆகும். இதைத் தவிர வேறு எதை எங்களால் எதிர்பார்க்க முடியும்? ஆனால் அதில் எது ஏற்பட்டாலும் எங்களுக்கு நன்மையானதே. ஒருவேளை உயிரே போனாலும் ஓர் உயர் லட்சியத்திற்காக உயிர் கொடுத்தோம் என்ற பெருமை எங்களுக்கு உண்டு. மேலும் அல்லாஹ்வின் விதிமுறைப் படியோ அல்லது எங்கள் கரங்களாலோ உங்களுக்குத் தணடனை கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர் பார்ப்பாகும். ஆகவே உங்கள் எண்ணங்களின் படி நீங்கள் எதிர்பாருங்கள். நாங்களும் எங்கள் திட்டப்படி எதிர் பார்க்கிறோம். இறுதியில் யாருக்கு என்ன ஏற்படப் போகிறது என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். " இதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிடுங்கள்.


قُلْ أَنفِقُوا۟ طَوْعًا أَوْ كَرْهًۭا لَّن يُتَقَبَّلَ مِنكُمْ ۖ إِنَّكُمْ كُنتُمْ قَوْمًۭا فَٰسِقِينَ.

9:53. அது மட்டுமின்றி அவர்கள் வேண்டா வெறுப்பாக கொஞ்சம் பண உதவி செய்துவிட்டு, ராணுவ பயிற்சி முகாம்களுக்கு வராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். அவர்களிடமிருந்து எந்த உதவித் தொகையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்து விடுங்கள். ஏனெனில் அவர்கள் நேர்வழியை விட்டு வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டார்கள்.


وَمَا مَنَعَهُمْ أَن تُقْبَلَ مِنْهُمْ نَفَقَٰتُهُمْ إِلَّآ أَنَّهُمْ كَفَرُوا۟ بِٱللَّهِ وَبِرَسُولِهِۦ وَلَا يَأْتُونَ ٱلصَّلَوٰةَ إِلَّا وَهُمْ كُسَالَىٰ وَلَا يُنفِقُونَ إِلَّا وَهُمْ كَٰرِهُونَ.

9:54. அவர்களுடைய உதவித் தொகையை ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அதனடிப்படையில் உருவாகியுள்ள ஆட்சியமைப்புச் சட்டங்களையும் உதட்டளவில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் செயலளவில் அதற்கு மாற்றமாக இருக்கிறார்கள். மேலும் இறை அறிவுரைகளைக் கற்றுத் தருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட "ஸலாத்"திலும் வெறும் ஒப்புக்காக வெளியில் காட்டிக் கொள்வதற்காகவே கலந்து கொள்கிறார்கள். (பார்க்க 4:142, 107:5) அவர்கள் செய்யும் தான தர்மங்களும் வேண்டா வெறுப்பாகத் தான் உள்ளன. ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களுக்காக அவர்கள் உளப்பூர்வமாக அளிப்பதில்லை.


فَلَا تُعْجِبْكَ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُمْ ۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُعَذِّبَهُم بِهَا فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَتَزْهَقَ أَنفُسُهُمْ وَهُمْ كَٰفِرُونَ.

9:55. அவர்கள் செல்வ சீமான்களாகவும் அவர்களுக்கு ஆதரவாகப் பெரும் திரளான ஆதரவாளர்களும் இருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இவையே அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் வருவதற்கு அவர்களுக்கு தடைகளாக நிற்கின்றன. ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி இவையே அவர்களுடைய உலக வாழ்வைச் சிக்கலாக்கும் காரணிகளாக அமைந்து விடுமே. அதனால் அவர்கள் இறை நிராகரிப்பவர்களாகவே உலக வாழ்வை முடித்துக்கொள்ள நேரிடும்.


وَيَحْلِفُونَ بِٱللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُم مِّنكُمْ وَلَٰكِنَّهُمْ قَوْمٌۭ يَفْرَقُونَ.

9:56. ஆனால் அவர்களுடைய பேச்சைக் கவனியுங்கள். நாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர். ஏனெனில் அவர்கள் கோழைகளாகவே இருக்கிறார்கள்.


لَوْ يَجِدُونَ مَلْجَـًٔا أَوْ مَغَٰرَٰتٍ أَوْ مُدَّخَلًۭا لَّوَلَّوْا۟ إِلَيْهِ وَهُمْ يَجْمَحُونَ.

9:57. ஒருவேளை அவர்கள் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டாலும், அவர்கள் ஒளிந்து கொள்ள இடம் ஏதாவது இருக்கிறதா என்று தான் தேடி அலைவார்கள். ஒதுங்கும் இடமோ, குகையோ அல்லது சுரங்கத்தையோ கண்டால் களத்தை விட்டுவிட்டு அங்கு விரைந்து ஓடுவார்கள்.


وَمِنْهُم مَّن يَلْمِزُكَ فِى ٱلصَّدَقَٰتِ فَإِنْ أُعْطُوا۟ مِنْهَا رَضُوا۟ وَإِن لَّمْ يُعْطَوْا۟ مِنْهَآ إِذَا هُمْ يَسْخَطُونَ.

9:58. அவர்களில் சிலர், இறைவனின் ஆட்சியமைப்பு அளிக்கும் மானியத் தொகையிலும் முறைகேடு நடந்துள்ளதாக உம் மீது பழி சுமத்துபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எதிர் பார்த்த அளவு அவர்களுக்கு கொடுத்திருந்தால், அவர்கள் இப்படி குறைகூறி இருக்க மாட்டார்கள். ஆனால் நீர் அனைவருக்கும் சமமாகப் பிரித்து கொடுக்க இருப்பதால் (பார்க்க 9:60) அவர்கள் விரும்பும் அளவுக்கு கொடுக்க இயலவில்லை. எனவே அவர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.


وَلَوْ أَنَّهُمْ رَضُوا۟ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ سَيُؤْتِينَا ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَرَسُولُهُۥٓ إِنَّآ إِلَى ٱللَّهِ رَٰغِبُونَ.

9:59. ஆனால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு மூலமாகக் கிடைத்த மானியத் தொகையைக் கொண்டு திருப்தி அடைந்து, “அல்லாஹ் நமக்குப் போதுமானவன் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு வசதிகள் பெருகும் போது, அதன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அதிகமான உதவிக் தொகைகள் கிடைக்கும். நிச்சயமாக நாம் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பையே நேசிக்கக் கூடியவர்கள்” என்று கூறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.


۞ إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلْفُقَرَآءِ وَٱلْمَسَٰكِينِ وَٱلْعَٰمِلِينَ عَلَيْهَا وَٱلْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِى ٱلرِّقَابِ وَٱلْغَٰرِمِينَ وَفِى سَبِيلِ ٱللَّهِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۖ فَرِيضَةًۭ مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.

9:60. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தொண்டு நிறுவனங்கள் வசூலிக்கும் உதவிக் தொகைகளை (ஸதஃகாவை) கீழ்கண்டவர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
(1) சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் வாடும் மக்களின் மறு வாழ்விற்காக,
(2) சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றோர்களின் வாழ்வு மலரச் செய்ய,
(3) இந்த அமைப்புக்காக உழைக்கும் ஊழியர்கள்,
(4) புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்,
(5) அடிமைகளை விடுவித்தல்,
(6) கடன் பட்டிருப்பவர்களுக்கு உதவி செய்ய,
(7) இந்த அமைப்பின் நலப்பணியில் ஈடுபடுபவர்கள்,
(8) அமைப்புக்காக பயணம் மேற்கொள்பவர்கள்
ஆகியோருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் முழு ஞானத்தின் அடிப்படையிலானவையே என்பதை அறிந்து செயலாற்றுங்கள்.


وَمِنْهُمُ ٱلَّذِينَ يُؤْذُونَ ٱلنَّبِىَّ وَيَقُولُونَ هُوَ أُذُنٌۭ ۚ قُلْ أُذُنُ خَيْرٍۢ لَّكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِينَ وَرَحْمَةٌۭ لِّلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ ۚ وَٱلَّذِينَ يُؤْذُونَ رَسُولَ ٱللَّهِ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.

9:61. மேலும் இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும் அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் என்று நபியைக் குறைகூறி, அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துவோரும் இருக்கிறார்கள். அவர்களிடம், ஒவ்வொருடைய பேச்சையும் கேட்பது என்பது வேறு விஷயமாகும். அது அவர்களுடைய நன்மைக்கே. ஆனால் அவற்றை முழு அளவில் நம்புவது என்பது வேறு விஷயமாகும். எனவே அவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நம்புகிறார். மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்களையும் நம்புகிறார். அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது மிக்க கருணை உடையவராகவும் இருக்கிறார்.(பார்க்க 33:6) எனவே யார் சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் இறைத்தூதரைப் பழித்து பேசுகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் தண்டனை காத்து நிற்கிறது என்பதை அறிவித்து விடுங்கள்.


يَحْلِفُونَ بِٱللَّهِ لَكُمْ لِيُرْضُوكُمْ وَٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَحَقُّ أَن يُرْضُوهُ إِن كَانُوا۟ مُؤْمِنِينَ.

9:62. மேலும் அவர்கள் மூஃமின்களாகிய உங்களைத் திருப்திப் படுத்துவதற்காக உங்களிடம் வந்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தம் விஷயத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே முஃமின்களாக இருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு திருப்தி அடையும் வகையில் அவர்கள் நலப்பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்கள் இந்த ஆட்சியமைப்புச் சட்டங்களின்படி நடக்க முன்வந்திருக்க வேண்டும்.


أَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّهُۥ مَن يُحَادِدِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَأَنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدًۭا فِيهَا ۚ ذَٰلِكَ ٱلْخِزْىُ ٱلْعَظِيمُ.

9:63. எவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதன் ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் எதிராக செயல் படுகிறார்களோ, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை அவர்கள் அறியவில்லையா? அந்த தண்டனை நிரந்தரமாக இருக்கும் என்பதையும் அறிவதில்லையா? அந்த நரக வேதனை என்பது அவர்களுக்கு ஏற்படும் இழிவான நிலையும் வேதனைகளுமே ஆகும்.


يَحْذَرُ ٱلْمُنَٰفِقُونَ أَن تُنَزَّلَ عَلَيْهِمْ سُورَةٌۭ تُنَبِّئُهُم بِمَا فِى قُلُوبِهِمْ ۚ قُلِ ٱسْتَهْزِءُوٓا۟ إِنَّ ٱللَّهَ مُخْرِجٌۭ مَّا تَحْذَرُونَ.

9:64. இந்த நயவஞ்சகர்கள் தம் மனதில் மறைத்து வைத்துள்ளதை, மூஃமின்கள் அறிந்து கொள்ளும் வகையில் அத்தியாயம் ஏதாவது இறக்கி வைக்கப்படுமோ என்றும் அஞ்சுகிறார்கள். எனவே அவர்களிடம், “நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். உங்கள் உள்ளங்களில் மறைத்துக் கொண்டிருந்தவை அல்லாஹ்வின் நியதிப்படி வெளிப்பட்டே தீரும். அப்போது அதை அறிந்து கொள்வீர்கள்” என்று கூறிவிடுங்கள்.


وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِٱللَّهِ وَءَايَٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُمْ تَسْتَهْزِءُونَ.

9:65. இப்படி ஏளனமாகப் பேசி வருவதன் காரணம் என்ன என்று கேட்டால் அவர்கள், வெறுமனே நகைச் சுவைக்காகவும் பொழுது போக்குக்காகவும் சொன்னதாக பதில் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் விஷயத்திலும் அதன் ஆட்சியமைப்பு கடமைகளைப் பற்றியும் இப்படி நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்ளலாமா என்று அவர்களிடம் கேளுங்கள்.
ஏனெனில் சமுதாய சீரமைப்பு விஷயமாக சீரிய சிந்தனையுடன் இந்த அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அதற்கு உதவி செய்வதை விட்டுவிட்டு இப்படி விளையாட்டாக பேசிக் கொண்டிருந்தால் அவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது? அனைவருடைய நிகழ்கால வாழ்வும் வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே இந்த அரசு செயல்படுகிறது!


لَا تَعْتَذِرُوا۟ قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَٰنِكُمْ ۚ إِن نَّعْفُ عَن طَآئِفَةٍۢ مِّنكُمْ نُعَذِّبْ طَآئِفَةًۢ بِأَنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ.

9:66. அவர்களுடைய பேச்சுகள் எல்லாம் ஒரு வகையில் சாக்குப் போக்காகவே உள்ளன. “உண்மை பேசுவதற்கு உங்களுக்கு என்ன வந்தது? நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டபின் அதற்கு எதிராகவே செயல்பட தீர்மானித்து இருக்கிறீர்கள் என்பதே உண்மையாகும். உங்களில் ஒரு சாரார் அறியாமையின் காரணமாக உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுடன் இணைந்திருக்கலாம். அவர்களுக்கு மன்னிப்புக் கிடைத்து விடும். ஆனால் உண்மை விஷயங்களை அறிந்தே அதற்கு எதிராகச் செயல்படும் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு கிடைக்காது. அவர்கள் தண்டனைக்கு உரியவர்களே” என்பதை அவர்களுக்கு அறிவித்து விடுங்கள்.


ٱلْمُنَٰفِقُونَ وَٱلْمُنَٰفِقَٰتُ بَعْضُهُم مِّنۢ بَعْضٍۢ ۚ يَأْمُرُونَ بِٱلْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ ۚ نَسُوا۟ ٱللَّهَ فَنَسِيَهُمْ ۗ إِنَّ ٱلْمُنَٰفِقِينَ هُمُ ٱلْفَٰسِقُونَ.

9:67. இப்படிப்பட்ட நயவஞ்சகர்களுள் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். இனம் இனத்தோடு சேரும் என்பது போல, அவர்கள் யாவரும் ஒட்டுமொத்தமாக சமுதாயத்தை வழிகெடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் எவற்றை பாவச் செயல்கள் என்று கோடிட்டுக் காட்டுகிறதோ, அவற்றை செய்யவே மக்களிடம் தூண்டி விடுகிறார்கள். எந்த செயல்கள் நன்மையானவை என்று கூறுகிறதோ அவற்றை விட்டு தடுத்தும் வருகிறார்கள். தாமும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்வதோடு, பிறரையும் கெடுத்து வருகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நினைவில் கொண்டு செயல்படாததால், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பும் அவர்களுடைய பாதுகாப்பு குறித்து பராமுகமாக இருந்து கொள்ளும்.


وَعَدَ ٱللَّهُ ٱلْمُنَٰفِقِينَ وَٱلْمُنَٰفِقَٰتِ وَٱلْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا ۚ هِىَ حَسْبُهُمْ ۚ وَلَعَنَهُمُ ٱللَّهُ ۖ وَلَهُمْ عَذَابٌۭ مُّقِيمٌۭ.

9:68. எனவேதான் இத்தகைய நயவஞ்சக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இறைவழிகாட்டுதலை எதிர்ப்பவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைப் போன்றே அவர்களுக்கு கிடைக்கும். சொல் ஒன்று செயல் வேறு என்றிருந்தால் அவர்களுடைய தீய செயல்களின் விளைவுகளே அவர்களை நரக வேதனைக்குக் கொண்டு போய் சேர்த்து விடும் அல்லவா? அந்த வேதனையிலிருந்து வெளியே வர அவர்களுக்கு வேறு எந்த வழியும் இருக்காதே. அவர்கள் அதில் நிரந்தரமாக மடிந்து கிடக்க நேரிடுமே. அவர்களுக்குக் கிடைத்து வரும் அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அவர்கள் இழக்க நேரிடுகிறதே. இதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையாகும்.


كَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ كَانُوٓا۟ أَشَدَّ مِنكُمْ قُوَّةًۭ وَأَكْثَرَ أَمْوَٰلًۭا وَأَوْلَٰدًۭا فَٱسْتَمْتَعُوا۟ بِخَلَٰقِهِمْ فَٱسْتَمْتَعْتُم بِخَلَٰقِكُمْ كَمَا ٱسْتَمْتَعَ ٱلَّذِينَ مِن قَبْلِكُم بِخَلَٰقِهِمْ وَخُضْتُمْ كَٱلَّذِى خَاضُوٓا۟ ۚ أُو۟لَٰٓئِكَ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ.

9:69. இவை எல்லாம் வெறும் அச்சுறுத்தலே என்றும் இப்படிப்பட்ட நிலை ஏற்படாது என்றும் அவர்கள் னானைத்துக் கொளவார்கள். ஆனால் இதற்குமுன் வாழ்ந்த சமுதாயத்தினரும் இப்படித்தான் எண்ணினார்கள். அவர்கள் உங்களைவிட பலம் வாய்ந்தவர்களாகவும் செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய சமுதாயம் பெரிய அளவில் வளர்ச்சியும் பெற்றிருந்தது. தற்சமயம் இவர்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியங்களைப் போன்றே அவர்களுக்கும் கிடைத்திருந்தன. இவர்களைப் போன்றே அவர்களும் சுகமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் தற்காப்பு விஷயங்களிலும், வருங்கால நலத் திட்டங்களைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தம் வாழ்வை வீண் விளையாட்டாக எடுத்துக் கொண்டதால், ஆபத்துகள் ஏற்பட்ட போது அவற்றை எதிர்கொள்ள முடியாமல் அழிந்து போனார்கள். அவர்களைப் போலவே இவர்களும் வீண் விளையாட்டில் மூழ்கி இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் யாவும் நிரந்தரப் பலன்களைத் தராமல் அழிந்து போயின. இவர்களுக்கும் அதே கதிதான் ஏற்படும். இத்தகையவர்கள் தாம் பெரும் நஷ்டவாளிகள் ஆவர்.


أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ قَوْمِ نُوحٍۢ وَعَادٍۢ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَٰهِيمَ وَأَصْحَٰبِ مَدْيَنَ وَٱلْمُؤْتَفِكَٰتِ ۚ أَتَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ ۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.

9:70. இவர்களுக்கு முன்சென்ற பல சமுதாயங்களின் நிலைமையும் இதுவே ஆகும். உதாரணமாக நூஹ்வுடைய சமுதாயம், ஆது, சமூகத்துடைய சமுதாயம், இப்றாஹீம் உடைய சமுதாயம், மற்றும் தலைகீழாய்ப் புரண்டுபோன மத்யன்வாசிகள் யாவரும் இப்படித்தான் இறைவழிகாட்டுதலில் அக்கறைக் காட்டாமல் உதாசீனப்படுத்தி அழிவை தேடிக் கொண்டார்கள். அந்த சமுதாயங்களின் வரலாற்று உண்மைகள் உங்களுக்கு எடுத்துரைக்கப்பட வில்லையா? அவற்றை பாடமாக எடுத்துக் கொள்ளக் கூடாதா? அவர்களிடம் வந்த இறைத்தூதர்களும் அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதலை எடுத்துரைத்தார்களே! ஆனால் அவர்கள் அவற்றை நிராகரித்து தம் மனம்போன போக்கில் வாழ்ந்து தீய செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதனால் அவர்களும் அழிந்து போனார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். இன்றைக்கும் உங்களுடைய நிலைமை இதுவே ஆகும். அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள முன் எச்சரிக்கையை ஏற்று அழிவிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.


وَٱلْمُؤْمِنُونَ وَٱلْمُؤْمِنَٰتُ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۚ يَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَيُطِيعُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ ۚ أُو۟لَٰٓئِكَ سَيَرْحَمُهُمُ ٱللَّهُ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌۭ.

9:71. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி செயல்படும் ஆண்கள் மற்றும் பெண்களின் விஷயம் வேறு ஆகும். இவர்களுடைய வாழ்வின் நோக்கமும் ஒன்றுதான். அதாவது சமுதாயத்தை நல்வழிபடுத்தி தீயவற்றை அறவே அகற்றி, அவ்வப்போது சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணங்களும் செயல்பாடுகளும்.
இதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து கொள்கிறார்கள். மக்கள் அனைவருக்கும் இறைவழிகாட்டுதலை கற்றுத் தரும் கூட்டு "ஸலாத்"முறையை நிலைநாட்டி சமுதாய மேம்பாட்டிற்காக அரசு நிர்ணயிக்கும் வரியை முறைப்படி செலுத்தி வருகிறார்கள். இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதன் அடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படுகிறார்கள்.
அவர்களுடைய நற்செயல்களுக்குரிய பலன்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து விரைவில் அவர்களுக்குக் கிடைத்து விடும். ஏனெனில் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையாகும்.


وَعَدَ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَمَسَٰكِنَ طَيِّبَةًۭ فِى جَنَّٰتِ عَدْنٍۢ ۚ وَرِضْوَٰنٌۭ مِّنَ ٱللَّهِ أَكْبَرُ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.

9:72. இவ்வாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் வாழும் சமுதாயம், சுவர்க்கத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அவர்களுடைய பொருளாதாரம் வற்றாத ஜீவ நதி போல் பெருகி வரும். அவர்களுக்கு நிரந்தரமாக எல்லா சுகங்களுடன் கூடிய பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும். அவர்களின் வசிப்பிடம் உன்னதமான மாளிகைகளாக இருக்கும். இவ்வாறு அனைத்து வசதிகளும் கிடைத்து வரும் என்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து வாக்களிக்கப்படுகிறது. அவை அவர்களுக்குக் கிடைப்பது எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி செயல்படுவதே தலைசிறந்த வழிமுறை என்பதை அறிந்து செயல்படுகிறார்கள். அத்தயைவர்களுக்கு மகத்தான வாழ்வு கிடைப்பது உண்மையே ஆகும் அல்லவா? அவர்களுடைய மரணத்திற்குப் பின்பும் இத்தகைய வாழ்வு தொடரும்.


يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ جَٰهِدِ ٱلْكُفَّارَ وَٱلْمُنَٰفِقِينَ وَٱغْلُظْ عَلَيْهِمْ ۚ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.

9:73. இப்படி தலைசிறந்த சமுதாயம் உருவாவதை தடுத்து வரும் சமூக விரோதிகள் மற்றும் நயவஞ்சகர்களைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வாருங்கள். அதில் யாருக்கும் எந்த பாரபட்சமும் காட்டாதீர்கள். அவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளுங்கள். இறுதியில் அவர்கள் தங்குமிடம் சிறைச்சாலை போன்ற நரகமே என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தி விடுங்கள். அது தங்குவதற்கு மிகவும் கெட்ட இடமாகும் என்பதை அவர்களுக்கு அறிவித்து விடுங்கள்.
அவர்களுடைய நடத்தை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை கவனியுங்கள். அல்லாஹ்வுக்கும் அதன் ஆட்சியமைப்புக்கும் எதிராகச் செயல்பட மக்களிடம் சொல்லி வந்தார்கள். ஆனால் இப்போது


يَحْلِفُونَ بِٱللَّهِ مَا قَالُوا۟ وَلَقَدْ قَالُوا۟ كَلِمَةَ ٱلْكُفْرِ وَكَفَرُوا۟ بَعْدَ إِسْلَٰمِهِمْ وَهَمُّوا۟ بِمَا لَمْ يَنَالُوا۟ ۚ وَمَا نَقَمُوٓا۟ إِلَّآ أَنْ أَغْنَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ مِن فَضْلِهِۦ ۚ فَإِن يَتُوبُوا۟ يَكُ خَيْرًۭا لَّهُمْ ۖ وَإِن يَتَوَلَّوْا۟ يُعَذِّبْهُمُ ٱللَّهُ عَذَابًا أَلِيمًۭا فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِى ٱلْأَرْضِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍۢ.

9:74. நாங்கள் அவ்வாறு பேசவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கிறார்கள். மேலும் இஸ்லாமிய மார்க்க விஷயங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெளிவான பின்பும், அதற்கு எதிராகப் பல சதி திட்டங்களில் இறங்கியே இருக்கிறார்கள். அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றும் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் தம் திட்டத்தில் வெற்றி பெறவே இல்லை. இருந்தும் இந்த மூஃமின்களுக்கும் அரசமைப்புக்கும் எதிராக ஏன் செயல்படுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், மூஃமின்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் தாராளமாகக் கிடைத்து வருகின்றதே என்ற ஆதங்கத்தில்தான் இவ்வாறு செயல்படுவதாகச் சொன்னார்கள்.
அவர்களிடம், “இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. நீங்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டுள்ள ஆட்சியமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட முன்வந்தால், உங்களுக்குப் பொது மன்னிப்பு அளித்து இந்த அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள். அது உங்களுக்கு நன்மையாகவே இருக்கும். ஆனால் நீங்கள் இந்த வாய்ப்பை நழுவ விட்டால் அல்லாஹ்வின் சட்டப்படி கடுமையான தண்டனை தான் கிடைக்கும்” என்பதை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அத்தண்டனை இவ்வுலகிலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் கிடைக்கும் என்பதை அறிவித்து விடுங்கள். அதன்பின் அவர்களுக்கு வேறு யாருடைய பாதுகாப்பும் உதவியும் எங்கும் கிடைக்காது.


۞ وَمِنْهُم مَّنْ عَٰهَدَ ٱللَّهَ لَئِنْ ءَاتَىٰنَا مِن فَضْلِهِۦ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ ٱلصَّٰلِحِينَ.

9:75. அவர்களில் சிலர் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பிலிருந்து மானியம் அல்லது உதவித் தொகை கிடைத்தால் நாமும் சமுதாய வளர்ச்சிப் பணியில் பங்கெடுத்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம் என்று வாக்களித்தனர்.


فَلَمَّآ ءَاتَىٰهُم مِّن فَضْلِهِۦ بَخِلُوا۟ بِهِۦ وَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ.

9:76. அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆட்சி புறத்திலிருந்து மானியத் தொகை அளிக்கப்பட்டது. அவற்றை எல்லாம் பெற்றுக்கொண்ட பின் எந்த வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் அவர்கள் செலவிடவில்லை. இப்படியாக அவர்கள் செய்த வாக்குறுதியை அவர்கள் மீறிவிட்டார்கள்.


فَأَعْقَبَهُمْ نِفَاقًۭا فِى قُلُوبِهِمْ إِلَىٰ يَوْمِ يَلْقَوْنَهُۥ بِمَآ أَخْلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ يَكْذِبُونَ.

9:77. எனவே அல்லாஹ்வின் ஆட்சியமைப்பில் அவர்கள் எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு எதிராக அவர்கள் செயல்பட்டதாலும், தாம் நற்காரியங்களைச் செய்து வருவதாகப் பொய்ச் சொல்லிக் கொண்டிருந்த காரணத்தாலும், அந்தத் தீய பழக்கம் அவர்கள் உள்ளங்களில் வேரூன்றிவிட்டன. எனவே அவர்கள் இறுதி வரையில் திருந்தும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.


أَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوَىٰهُمْ وَأَنَّ ٱللَّهَ عَلَّٰمُ ٱلْغُيُوبِ.

9:78. அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும் அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்குத் தெரியமால் போய்விடும் என்று எண்ணிக் கொண்டார்களா? திரைக்கு மறைவாக நடக்கும் விஷயங்களையும் இந்த ஆட்சியமைப்பு கண்காணித்து அறிந்து கொள்ளும் என்பதை அவர்கள் அறியவில்லையா?
அதாவது வளர்ச்சிப் பணித் திட்டங்களுக்காக அளிக்கப்படும் மானியத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், அந்த சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கும். இதுவே அவர்கள் செயல்படும் லட்சணத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.


ٱلَّذِينَ يَلْمِزُونَ ٱلْمُطَّوِّعِينَ مِنَ ٱلْمُؤْمِنِينَ فِى ٱلصَّدَقَٰتِ وَٱلَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ ۙ سَخِرَ ٱللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ.

9:79. ஆனால் அரசு மானியத்தை முஃமின்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காக முறைப்படி செலவிடுவதையும், அதற்காக அவர்கள் தமக்குரிய ஊதியத்தைத் தவிர, வேறு எதையும் எதிர்ப் பார்காமல் உழைத்து வருவதையும் இந்த நயவஞ்சகர்கள் பார்த்து, ஏளனமாகப் பேசி வருகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி அந்த நயவஞ்சகர்களே பரிகாசத்திற்கு ஆளாவார்கள். (பார்க்க 2:15) மேலும் இத்தகையவர்களுக்கு நோவினைத் தரும் வேதனைகள் காத்து நிற்கின்றன.


ٱسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِن تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةًۭ فَلَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ.

9:80. இறைவழிகாட்டுதலின்படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! அவர்களுக்கு நேரவிருக்கும் வேதனையிலிருந்து நிவாரணம் கிடைக்க ஏதாவது வழிமுறை இருக்கிறதா என்று உம் மனம் துடிக்கிறது. இது உம்மிடமுள்ள இரக்க குணத்தின் பிரதிப்பலிப்பே ஆகும். ஆனால் அவர்களுடைய பாதுகாப்பு பற்றி நீர் ஆயிரம்தான் கவலைப்பட்டாலும் அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்புக் கிடைப்பது அரிதானதே. இது அவர்கள் மேலுள்ள வெறுப்பின் காரணமாக அல்ல. மாறாக அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் உருவாகியுள்ள ஆட்சியமைப்பு செயல் திட்டங்களுக்கும் எதிராகச் செயல்படுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இத்தகைய பாவிகளுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து நேர்வழியும் பாதுகாப்பும் கிடைப்பது எப்படி?


فَرِحَ ٱلْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَٰفَ رَسُولِ ٱللَّهِ وَكَرِهُوٓا۟ أَن يُجَٰهِدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَقَالُوا۟ لَا تَنفِرُوا۟ فِى ٱلْحَرِّ ۗ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّۭا ۚ لَّوْ كَانُوا۟ يَفْقَهُونَ.

9:81. சமூக விரோதச் சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக போரில் கலந்துகொள்ள அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு கட்டளை இட்டபோது, அதற்கு எதிராக வீட்டிலேயே தங்கி விட்டவர்கள் இவர்கள். அவ்வாறு பங்கு கொள்ளாமல் இருந்ததைப் பற்றியும் எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தவர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சிறந்ததொரு ஆட்சி மலர தம் உடைமைகளையும் உயிரையும் அர்ப்பணித்து சமூக சீரமைப்புப் பணியில் ஈடுபடுவதை வெறுத்தவர்கள் இவர்கள். சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் தம் கடமையை ஆற்ற புறப்பட்டுச் சென்ற மூஃமின்களைப் பார்த்து, “நீங்கள் செல்லாதீர்கள்” என்று சொன்னவர்கள் இவர்கள். நபியே அவர்களிடம், “நரக வேதனை இதைவிடக் கடுமையான வெப்பமுடையது” என்று கூறிவிடுவீராக. அவர்கள் உண்மையை விளங்கிக் கொண்டிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.


فَلْيَضْحَكُوا۟ قَلِيلًۭا وَلْيَبْكُوا۟ كَثِيرًۭا جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ.

9:82. எனவே அவர்கள் செய்து வரும் செயல்களுக்காக சில காலத்திற்கு சந்தோஷமாக சிரித்துக் கொள்ளட்டும். பிறகு அவர்கள் நிரந்தரமாக அழ வேண்டி இருக்கும். இதுவே அவர்களுக்குக் கிடைக்கும் தக்க வெகுமதியாகும்.


فَإِن رَّجَعَكَ ٱللَّهُ إِلَىٰ طَآئِفَةٍۢ مِّنْهُمْ فَٱسْتَـْٔذَنُوكَ لِلْخُرُوجِ فَقُل لَّن تَخْرُجُوا۟ مَعِىَ أَبَدًۭا وَلَن تُقَٰتِلُوا۟ مَعِىَ عَدُوًّا ۖ إِنَّكُمْ رَضِيتُم بِٱلْقُعُودِ أَوَّلَ مَرَّةٍۢ فَٱقْعُدُوا۟ مَعَ ٱلْخَٰلِفِينَ.

9:83. மேலும் அவர்களில் சிலர் போரில் கலந்துகொள்ள சென்ற போது, போர் நடைபெறும் முக்கியமான கட்டத்தில், களத்தை விட்டு பின்வாங்கிவிட முடிவெடுத்தார்கள். அத்தகையவர்கள் போரில் கலந்து கொள்வதாக மீண்டும் உம்மிடம் அனுமதிக் கேட்டு வந்தால் அவர்களிடம், “நீங்கள் ஒருபோதும் என்னுடன் போரில் கலந்துகொள்ள வேண்டியதில்லை. மேலும் என்னுடன் சேர்ந்து பகைவர்களிடம் போரிட வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் போர்க் களத்தில் சண்டையிடாமல் ஒதுங்கி ஓரத்தில் அமர்ந்து விட்டீர்கள். அதுதான் சிறப்பானது என்றும் எண்ணிக் கொண்டீர்கள். எனவே இப்போதும் நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே கோழைகளாக பெண்களுடன் தங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிடுவீராக.


وَلَا تُصَلِّ عَلَىٰٓ أَحَدٍۢ مِّنْهُم مَّاتَ أَبَدًۭا وَلَا تَقُمْ عَلَىٰ قَبْرِهِۦٓ ۖ إِنَّهُمْ كَفَرُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَمَاتُوا۟ وَهُمْ فَٰسِقُونَ.

9:84. இப்படிப்ட்ட நயவஞ்சகர்கள் யாராவது இறந்துவிட்டால் அவருக்காக நீர் துக்கம் விசாரிக்கவும் அங்கு செல்ல வேண்டாம். அவர்களின் புதைவிடங்ளில் நிற்கவும் வேண்டாம். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் எதிராகச் செயல்பட்ட குற்றவாளிகள் ஆவார்கள்.


وَلَا تُعْجِبْكَ أَمْوَٰلُهُمْ وَأَوْلَٰدُهُمْ ۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُعَذِّبَهُم بِهَا فِى ٱلدُّنْيَا وَتَزْهَقَ أَنفُسُهُمْ وَهُمْ كَٰفِرُونَ.

9:85. அவர்கள் செல்வ சீமான்களாகவும் அவர்களுக்கு ஆதரவாகப் பெரும் திரளான ஆதரவாளர்களும் இருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அத்தகைய தற்பெருமையே அவர்களை அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் பக்கம் வருவதற்கு தடையாக நிற்கின்றன. ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி இவையே அவர்களுடைய உலக வாழ்வைச் சிக்கலாக்கும் காரணிகளாகவே மாறிவிடும். அதனால் அவர்கள் இறை நிராகரிப்பவர்களாகவே உலக வாழ்வை முடித்துக் கொள்ள நேரிடும். (பார்க்க 9:55)


وَإِذَآ أُنزِلَتْ سُورَةٌ أَنْ ءَامِنُوا۟ بِٱللَّهِ وَجَٰهِدُوا۟ مَعَ رَسُولِهِ ٱسْتَـْٔذَنَكَ أُو۟لُوا۟ ٱلطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا۟ ذَرْنَا نَكُن مَّعَ ٱلْقَٰعِدِينَ.

9:86. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சமூக வளர்ச்சிப் பணிகளில், சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவருடன் இணைந்து செயலாற்ற கட்டளை பிறப்பித்தால், அவர்களில் வசதி படைத்தவர்கள்,“எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் அப்பணியில் பங்கெடுக்காமல் தங்கி இருப்பவர்களுடன் இருந்து கொள்கிறோம்” என்று அனுமதி கோரி உம்மிடம் வந்தனர்.


رَضُوا۟ بِأَن يَكُونُوا۟ مَعَ ٱلْخَوَالِفِ وَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ.

9:87. எனவே அல்லாஹ்வின் பாதையில் செயலாற்ற விருப்பமில்லாமல் பின்வாங்கிக் கொண்டவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்பினார்கள். இதற்குக் காரணம் அவர்களுடைய இதயங்களில் உண்மைகளை விளங்கிக்கொள்ள முடியாதவாறு திரை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழிவைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.


لَٰكِنِ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ جَٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۚ وَأُو۟لَٰٓئِكَ لَهُمُ ٱلْخَيْرَٰتُ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.

9:88. ஆனால் சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரும், அவருடன் பணியாற்றும் செயல்வீரர்களும் தங்கள் செல்வங்களையும் உயிர்களையும் அர்ப்பணித்து சமூக நலப்பணிகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களே எல்லா நன்மைகளுக்கும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள் ஆவார்கள்.


أَعَدَّ ٱللَّهُ لَهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.

9:89. அவர்கள் செய்துவரும் நற்செயல்களின் பலனாக அல்லாஹ்வின் நியதிப்படி அச்சமுதாயம் சுவர்க்கத்திற்கு ஒப்பானதாக மாறிவிடும். அவர்களுடைய பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவ நதி போல் பெருகி வரும். அத்தகைய சந்தோஷமான வாழ்வு அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் வரையில் தொடர்ந்து கிடைத்து வரும். (8:53) இது அவர்களுக்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றி அல்லவா?


وَجَآءَ ٱلْمُعَذِّرُونَ مِنَ ٱلْأَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ ٱلَّذِينَ كَذَبُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ سَيُصِيبُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.

9:90. அதுமட்டுமின்றி நாட்டுப் புறத்து மக்களிலும் சிலர், சமூகப் பணியில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் காட்டி, அதற்கு அனுமதி கோரி உம்மிடம் வந்தார்கள். ஆனால் அவர்கள் காட்டிய காரணங்கள் பொய்யானவையே ஆகும். அல்லாஹ்விடமும் இறைத்தூதரிடமும் பொய்யுரைக்கும் இவர்கள் அனுமதி கேட்காமலேயே வீட்டில் தங்கிக் கொண்டு இருக்கலாமே! இப்படி சாக்குப் போக்கு சொல்லி இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுபவர்கள் விரைவில் தண்டனைக்கு ஆளாவார்கள்.


لَّيْسَ عَلَى ٱلضُّعَفَآءِ وَلَا عَلَى ٱلْمَرْضَىٰ وَلَا عَلَى ٱلَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُوا۟ لِلَّهِ وَرَسُولِهِۦ ۚ مَا عَلَى ٱلْمُحْسِنِينَ مِن سَبِيلٍۢ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

9:91. ஆனால் உண்மையிலேயே பலவீனமான முதியோர்களும் நோயாளிகளும் இருக்கிறார்கள். மேலும் சமூக நலப்பணிக்காகச் செலவு செய்ய வசதி இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு வந்தால், அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை. அத்தகையவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பும் உதவிகளும் கிடைத்து வரும்.


وَلَا عَلَى ٱلَّذِينَ إِذَا مَآ أَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَآ أَجِدُ مَآ أَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّوا۟ وَّأَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ ٱلدَّمْعِ حَزَنًا أَلَّا يَجِدُوا۟ مَا يُنفِقُونَ.

9:92. அல்லாஹ்வின் கட்டளைப்படி நலப்பணிகளில் ஈடுபட தொலைத் தூரத்திற்குச் செல்ல வாகன வசதிகள் இல்லாமல் உம்மிடம் வந்தவர்களிடம், “உங்களை நான் அழைத்துச் செல்லக் கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே” என்று நீர் கூறிய போது, தாங்களே செலவு செய்து ஏற்பாடு செய்து கொள்ளவும் வசதி இல்லாத நிலையை எண்ணி துக்கத்தால் கண்ணீர் விட்டு தங்கி விட்டார்களே அவர்கள் மீதும் எவ்வித குற்றமும் இல்லை.


۞ إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَسْتَـْٔذِنُونَكَ وَهُمْ أَغْنِيَآءُ ۚ رَضُوا۟ بِأَن يَكُونُوا۟ مَعَ ٱلْخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُونَ.

9:93. குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் யாரென்றால், தாம் செல்வந்தர்களாக இருந்தும் சமூக சீரமைப்புப் பயிற்ச்சி முகாமில் பங்கெடுக்காதிருக்க உம்மிடம் அனுமதி கோரி பின்தங்கிக் கொண்டவர்களுடன் இவர்களும் தங்கிக்கொள்ள விரும்பினார்களே அவர்கள்தாம். அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய இதயங்களில் முத்திரை விழுந்து விடுகிறது. அதை அவர்கள் அறியமாட்டார்கள்.


يَعْتَذِرُونَ إِلَيْكُمْ إِذَا رَجَعْتُمْ إِلَيْهِمْ ۚ قُل لَّا تَعْتَذِرُوا۟ لَن نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّأَنَا ٱللَّهُ مِنْ أَخْبَارِكُمْ ۚ وَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُۥ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

9:94. இத்தகையவர்கள், இதில் கலந்து கொள்ளாததற்கு ஆயிரம் காரணங்களைக் காட்டி விளக்கம் தர உங்களிடம் வருவார்கள். இப்படி அவர்கள் காரணம் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும், அவற்றை எல்லாம் நம்பியே அகவேண்டும் என்பதில்லை என்றும் அவர்களிடம் சொல்லி விடுங்கள். உங்களுடைய உண்மை நிலை என்ன என்பதை ஏற்கனவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்திகள் வந்துவிட்டன. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு உங்கள் செயல்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பதிலளிக்க வேண்டிவரும் என்பதையும் அல்லாஹ்வை விட்டு எதையும் மூடி மறைக்க முடியாது என்பதையும் அறிந்து கொள்ளும்படி அவர்களிடம் கூறிவிடுங்கள்.


سَيَحْلِفُونَ بِٱللَّهِ لَكُمْ إِذَا ٱنقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُعْرِضُوا۟ عَنْهُمْ ۖ فَأَعْرِضُوا۟ عَنْهُمْ ۖ إِنَّهُمْ رِجْسٌۭ ۖ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ.

9:95. அவர்கள் செய்த இக்காரியத்தைப் பற்றி நீங்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க, அவர்கள் உங்களிடம் வந்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு தம் நிலைமையை எடுத்துரைப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களுடைய பேச்சை ஏற்க மறுப்பதாக சொல்லிவிடுங்கள். இதற்குக் காரணம் அவர்கள் உள்ளங்களில் உள்ள தீய எண்ணங்கள் தாம். இப்படி செயல்படுபவர்கள் சென்றடையும் இடம் நரகமாகத்தான் ஆகும். இது அவர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக இல்லை. அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவாக இந்த இழி நிலை ஏற்படும்.


يَحْلِفُونَ لَكُمْ لِتَرْضَوْا۟ عَنْهُمْ ۖ فَإِن تَرْضَوْا۟ عَنْهُمْ فَإِنَّ ٱللَّهَ لَا يَرْضَىٰ عَنِ ٱلْقَوْمِ ٱلْفَٰسِقِينَ.

9:96. ஆக அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்த அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு தம் நிலைமையைக் கூறி வருகிறார்கள். நீங்கள் அவர்களுடைய பேச்சைக் கேட்டு திருப்தி அடைந்தாலும் அல்லாஹ்வின் சட்டம் இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளை விட்டுவைக்காது. அத்தகையவர்களுக்குத் தக்க தண்டனை அளித்தே தீரும்.


ٱلْأَعْرَابُ أَشَدُّ كُفْرًۭا وَنِفَاقًۭا وَأَجْدَرُ أَلَّا يَعْلَمُوا۟ حُدُودَ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.

9:97. கிராமவாசிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் நகர்ப்புற மக்களை விட நயவஞ்சக செயல்களில் மோசமாக இருக்கின்றனர். இதற்குக் காரணம் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு நிர்ணயித்துள்ள வரம்புகளைப் பற்றிய ஞானம் அவர்களிடம் சரிவர சென்றடையவில்லை. இந்த ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொண்டு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அவர்களை அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும்.


وَمِنَ ٱلْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغْرَمًۭا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَ ۚ عَلَيْهِمْ دَآئِرَةُ ٱلسَّوْءِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌۭ.

9:98. மேலும் கிராமவாசிகளில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மக்கள் நலனுக்காகச் செலவிடுவது வீணாக நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று அறிவின்மையின் காரணமாக எண்ணுகிறார்கள். மேலும் இந்த அரசுக்கு உதவி கிடைக்காமல் நீங்கள் அவதிப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். ஆனால் அதன் கேடுகாலம் அவர்களை நோக்கியே விரைகிறது என்பது அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் செய்து வருபவை அனைத்தையும் நன்கறியும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை அவர்களிடம் அறிவித்து விடுங்கள்.


وَمِنَ ٱلْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَٰتٍ عِندَ ٱللَّهِ وَصَلَوَٰتِ ٱلرَّسُولِ ۚ أَلَآ إِنَّهَا قُرْبَةٌۭ لَّهُمْ ۚ سَيُدْخِلُهُمُ ٱللَّهُ فِى رَحْمَتِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

9:99. ஆனால் அந்தக் கிராமவாசிகளில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அல்லாஹ்வின் நெருக்கத்தையும் ஆட்சியமைப்பின் ஆதரவும் அரவணைப்பும் தமக்குக் கிடைக்க விரும்பி மக்கள் நலப்பணிகளுக்காக வாரி வழங்குகிறார்கள். இத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் பேரருளும் ஆதரவும் கிடைக்கும். நிச்சயமாக இத்தகையவர்களை அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு பாதுகாப்பளித்து பெருங்கிருபையுடனும் அரவணைத்துக் கொள்ளும்.


وَٱلسَّٰبِقُونَ ٱلْأَوَّلُونَ مِنَ ٱلْمُهَٰجِرِينَ وَٱلْأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحْسَٰنٍۢ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى تَحْتَهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.

9:100. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி தலைசிறந்த ஆட்சியமைப்பு ஏற்பட தம் வீட்டையும் ஊரையும் விட்டு, தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வந்தவர்கள் மற்றும் அவ்வாறு வந்தவர்களுக்குப் புகலிடம் அளித்து உதவி செய்தவர்களும் இருக்கிறார்கள். இத்தகைய நற்காரியங்களில் முன்னோடியாக விளங்கியவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைத்து விடுகிறது. அவர்களும் அல்லாஹ்வின் ஆதரவைக் கொண்டு மனநிறைவுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் செய்து வந்த சிறந்த செயல்களின் பலனாக சுவர்க்கத்திற்கு ஒப்பான சமுதாயம உருவெடுக்கும். அங்கு அனைத்து வசதிகளும் வற்றாத ஜீவ நதி போல் பெருகி வரும். இத்தகைய ஏற்பாடுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டன. இப்படி ஒரு சிறந்த இடத்தை அடைவது மகத்தான வெற்றியாகும் அல்லவா?


وَمِمَّنْ حَوْلَكُم مِّنَ ٱلْأَعْرَابِ مُنَٰفِقُونَ ۖ وَمِنْ أَهْلِ ٱلْمَدِينَةِ ۖ مَرَدُوا۟ عَلَى ٱلنِّفَاقِ لَا تَعْلَمُهُمْ ۖ نَحْنُ نَعْلَمُهُمْ ۚ سَنُعَذِّبُهُم مَّرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ إِلَىٰ عَذَابٍ عَظِيمٍۢ.

9:101. மேலும் சுற்றுபுற வட்டாரத்தில் உள்ள கிராமவாசிகளிலும் நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அதே போல் நகரங்களிலும் இத்தகைய நயவஞ்சக செயல்களில் நிலைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியாது. ஆனால் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அவர்களைக் கண்டுபிடித்து சிறிய அளவில் தண்டனை அளித்து, திருந்தி வாழ அவர்களுக்கு வாய்ப்பளித்து விடுங்கள். இப்படியாக அவர்களுக்கு சிரிய அளவில் தண்டனை அளித்து எச்சரிக்கை செய்து இரு முறை வாய்ப்புகள் அளிக்கப்படும். அதன் பிறகும் அவர்கள் திருந்தவில்லை என்றால் மூன்றாம் முறையாக அவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்படும்.


وَءَاخَرُونَ ٱعْتَرَفُوا۟ بِذُنُوبِهِمْ خَلَطُوا۟ عَمَلًۭا صَٰلِحًۭا وَءَاخَرَ سَيِّئًا عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ عَلَيْهِمْ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ.

9:102. மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தம் தவறான செயல்களை ஒப்புக் கொள்கிறார்கள். அத்துடன் அவர்கள் நற்காரியங்களைச் செய்வதோடு தவறான செயல்களையும் அறியாமையினால் செய்து வருகிறார்கள். எனினும் இத்தகையவர்கள் தம் தவறுகளை உணர்ந்து கொள்வதால், அவர்களுக்கு திருந்தும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டம் பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் கிருபை மிக்கதாய் உள்ளது.


خُذْ مِنْ أَمْوَٰلِهِمْ صَدَقَةًۭ تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٌۭ لَّهُمْ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ.

9:103. எனவே இத்தகையவர்கள் ஆட்சியமைப்புக்கு அளிக்கும் அன்பளிப்புகளை வசூலித்து கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தி மக்களுள் ஆற்றல்கள் வளர ஏற்பாடு செய்யுங்கள். மேலும் அவர்கள் செய்த உதவிக்காக அவர்களை ஊக்குவிக்கும் வகையில் போற்றி பாராட்டுங்கள். மேலும் அவர்கள் பெருமகிழ்சிக்கு உரியவர்கள். நிச்சயமாக நீங்கள் செய்வதனைத்தையும் அறிந்து கொள்ளும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை மறவாதீர்.
சமுதாயத்திற்குத் தேவையான மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள அரசமைப்பிடம் முறையிடுங்கள். அதே சமயம் அதற்காகவே காத்திராமல் அன்பளிப்புத் தொகைகளை வசூலித்தும் இத்தகைய நற்பணிகளை செய்து கொள்ள ஆயத்தமாக்கிக் கொள்ளுங்கள்.


أَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ هُوَ يَقْبَلُ ٱلتَّوْبَةَ عَنْ عِبَادِهِۦ وَيَأْخُذُ ٱلصَّدَقَٰتِ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ.

9:104. தம் தவறை உணர்ந்து தவறான செயல்களிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் சட்டத்தில் மன்னிப்பு உண்டு என்பதையும், அத்தகையவர்களிடமிருந்து உதவித் தொகைகளை பெற்றுக்கொள்ள அரசின் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்பதையும் அவர்கள் அறியவில்லையா? நிச்சயமாக மனிதன் திருந்தி வாழ அல்லாஹ்வின் சட்டம் வாய்ப்பு அளிக்கிறது. இது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும். (பார்க்க 4:17-18, 25:70-71)


وَقُلِ ٱعْمَلُوا۟ فَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُۥ وَٱلْمُؤْمِنُونَ ۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

9:105. அவர்களுக்கு அரசு புறத்திலிருந்து பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விட்டது. இப்போது அவர்கள் திருந்திவிட்டதை செயலளவில் காட்டும்படி அவர்களுக்கு அறிவித்து விடுங்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பும் அதை கட்டிக் காக்கும் மூஃமின்களும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதையும் அவர்களிடம் எடுத்துரையுங்கள். ஆக அவர்கள் செய்யும் மறை முகமான செயலோ வெளிப்படையான செயலோ எதையும் இனி மறைக்க முடியாது என்பதையும் அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்.


وَءَاخَرُونَ مُرْجَوْنَ لِأَمْرِ ٱللَّهِ إِمَّا يُعَذِّبُهُمْ وَإِمَّا يَتُوبُ عَلَيْهِمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.

9:106. இதைத் தவிர்த்து வேறு சில குற்றவாளிகளும் இருக்கிறார்கள். அவர்களும் திருந்தி வாழ விரும்பினால் அவர்களுக்கு பொது மன்னிப்பு அளிப்பதா அல்லது தண்டிப்பதா என்பது குறித்து அல்லாஹ்வின் அரசமைப்பு பரிசீலித்து முடிவெடுக்கும். நிச்சயமாக அரசின் தீர்ப்பு அல்லாஹ்வின் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலேயே இருக்கும். (மேலும் பார்க்க 9:118)


وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مَسْجِدًۭا ضِرَارًۭا وَكُفْرًۭا وَتَفْرِيقًۢا بَيْنَ ٱلْمُؤْمِنِينَ وَإِرْصَادًۭا لِّمَنْ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُۥ مِن قَبْلُ ۚ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَآ إِلَّا ٱلْحُسْنَىٰ ۖ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَٰذِبُونَ.

9:107. மேலும் சில குற்றவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஆட்சியமைப்புக்கு எதிராகச் செயல்படும் சமூக விரோதிகளுக்கு உதவி செய்தும் வருகிறார்கள். மேலும் மூஃமின்களிடையே பிளவு ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை எதிர்த்து போர் புரிந்தவர்களுக்கு புகலிடம் அளிக்கவும் ஒரு பள்ளிவாசலை நிருவினார்கள். தாம் நல்லதையே அன்றி வேறெதையும் செய்ய விரும்பவில்லை என்றும் பொய்ச் சத்தியம் செய்து வருகிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய செயல்களின் விளைவுகளே சாட்சியாக நிற்கின்றன.


لَا تَقُمْ فِيهِ أَبَدًۭا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌۭ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا۟ ۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُطَّهِّرِينَ.

9:108. எனவே அத்தகைய பள்ளிவாசல்களில் நீர் ஒருபோதும் நிற்க வேண்டாம். ஆரம்பம் முதலே இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டு நிருவப்பட்ட பள்ளிகள் உள்ளன. அங்கு நீங்கள் சென்று உங்கள் செயல்திட்டங்களை நிறைவேற்றுங்கள். அங்குள்ளவர்கள் பரிசுத்த எண்ணங்களுடன் செயல்பட விரும்புகிறார்கள். இப்படிப் பரிசுத்த எண்ணங்களுடன் செயல்படுவோருக்குத் தான் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்.


أَفَمَنْ أَسَّسَ بُنْيَٰنَهُۥ عَلَىٰ تَقْوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضْوَٰنٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍۢ فَٱنْهَارَ بِهِۦ فِى نَارِ جَهَنَّمَ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

9:109. நீங்களே இந்த உதாரணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு ஏற்ற வகையில் நிலையான பலன்களுக்காக ஒரு கட்டிடத்தை செயலகமாக எழுப்புகிறார். அது சிறந்ததா? அல்லது ஒருவர் கடலோரத்தில் சரிந்து விழக் கூடிய வகையில் பூமியின் மேற்பரப்பில் திடமான அஸ்திவாரம் எதுவும் இல்லாமல் ஒரு கட்டிடத்தை எழுப்புகிறார். அது சிறந்ததா? மேலும் அத்தகைய வலுவில்லாத கட்டிடம் பொடிப்பொடியாய் நொருங்கி போவதுடன், அங்குள்ளவர்களையும் நரக வேதனையின் பக்கம் அழைத்துச் செல்வதாக இருந்தால், அது எப்படி சிறப்பான செயலகமாக இருக்க முடியும்? எனவே இத்தகைய அநியாயக்கார கூட்டத்தாருக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் ஒருபோதும் கிடைக்காது.


9:110. தவறான கொள்கையின் அடிப்படையில் எழுப்பப்படும் சமூக அமைப்புகள் இவ்வுலகில் நீடித்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய அமைப்புகள் காலப்போக்கில் அழிந்து போய்விடும். இவ்வாறு நடப்பது அவர்கள் உள்ளங்களில் ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். மேலும் அவர்களின் உள்ளங்கள் துயரத்தில் சுக்குநூறாக உடைந்துவிடும். இது வெறும் மிரட்டல் அல்ல. அனைத்தையும் நன்கறியும் ஞானமிக்க வல்லமையின் சொல் இது.


۞ إِنَّ ٱللَّهَ ٱشْتَرَىٰ مِنَ ٱلْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلْجَنَّةَ ۚ يُقَٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ ۖ وَعْدًا عَلَيْهِ حَقًّۭا فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ وَٱلْقُرْءَانِ ۚ وَمَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ مِنَ ٱللَّهِ ۚ فَٱسْتَبْشِرُوا۟ بِبَيْعِكُمُ ٱلَّذِى بَايَعْتُم بِهِۦ ۚ وَذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.

9:111. இவை தாம் நயவஞ்சகர்களின் நிலைமையும் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் துயரங்களும் ஆகும். ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல்வீரர்களின் நிலை அவ்வாறு இல்லை. அல்லாஹ் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றான். அந்த ஒப்பந்தப்படி அவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் நிறைவேற அர்ப்பணித்து விடுவார்கள். தேவை ஏற்படும் போது, அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பைக் கட்டிக் காக்க போரிடவும் செய்வார்கள். இப்படியாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை வெட்டவும் செய்வார்கள். சில சமயங்களில் எதிரிகளால் வெட்டப்படவும் செய்வார்கள். இத்தகைய மாபெரும் இலட்சிய செயல்களுக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்திற்கு ஒப்பான வாழ்வை அளிப்பான். இது வெறும் வார்த்தைகள் அல்ல. ஏக இறைவனான அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். இவ்வாறு செயல்படுவோருக்கு கிடைத்தே தீரும். இதைப் பற்றிய குறிப்புகள் இதற்கு முன்வந்த வேதங்களாகிய தவ்ராத்திலும் இன்ஜீலிலும் வந்துள்ளன. அதுவே இந்த இறைவேதமான குர்ஆனிலும் குறிப்பிடப்படுகிறது. இதுதான் மூஃமின்களுடன் அல்லாஹ் செய்துகொண்ட கொடுக்கல் வாங்கல் என்ற வியாபார ஒப்பந்தமாகும். இதைப் பற்றி அறிந்து ஒவ்வொருவரும் பெருமகிழ்ச்சி அடையுங்கள். ஏனெனில் இது ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்ற மாபெரும் வெற்றியாகும் அல்லவா?
அல்லாஹ் சுவனத்தை அளிக்கத் தயார். அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?


ٱلتَّٰٓئِبُونَ ٱلْعَٰبِدُونَ ٱلْحَٰمِدُونَ ٱلسَّٰٓئِحُونَ ٱلرَّٰكِعُونَ ٱلسَّٰجِدُونَ ٱلْءَامِرُونَ بِٱلْمَعْرُوفِ وَٱلنَّاهُونَ عَنِ ٱلْمُنكَرِ وَٱلْحَٰفِظُونَ لِحُدُودِ ٱللَّهِ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ.

9:112. இத்தகைய மூஃமின்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
(1) அவர்கள் தங்கள் தவறான செயல்களை செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் காட்டிய நேர்வழியில் வாழ முன்வருவார்கள்.
(2) அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து வாழ்வதாக உறுதிகொள்வார்கள்.
(3) அல்லாஹ்வின் செயல் திட்டங்களை போற்றுதலுக்குரியதாக ஆக்குவதற்கு அயராது உழைத்தும் வருவார்கள்.
(4) தீய பழக்க வழக்கங்களிலிருந்து விலகி இருப்பார்கள்.
(5) அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாகத் தலைசாய்த்து அதன் அடிப்படையிலேயே வாழ்வார்கள்.
(6) இவ்வாறு சிறப்பாக நடந்து குர்ஆன் கோடிட்டு காட்டும் நன்மையான செயல்களை செய்யுமாறு மககளுக்கு அறிவுருத்துவார்கள். அதே சமயம் குர்ஆன் எதை தீமையான செயல்கள் என்று அறிவிக்கிறதோ அவை சமுதாயத்தில் நடைபெறாதவாறு தடுத்தும் வருவார்கள்.
(7) இப்படியாக அல்லாஹ்வின் அனைத்து வரம்புகளையும் பேணிப் பாதுகாப்பார்கள். இத்தகைய மூஃமின்களுக்குத் தான் மேற்சொன்ன சுவனத்திற்கு ஒப்பான வாழ்வின் நற்செய்தி கொடுக்கப்படுகிறது.


مَا كَانَ لِلنَّبِىِّ وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن يَسْتَغْفِرُوا۟ لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوٓا۟ أُو۟لِى قُرْبَىٰ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ.

9:113. சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரோ அல்லது அதை கட்டிக் காக்கும் மூஃமின்களோ அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு, தம் மனஇச்சைப்படி வாழும் முஷ்ரிக்குகளுக்காக பாதுகாப்புக்காக பொறுப்பேற்றுக் கொள்வது முறையாகாது. அவர்கள் எந்த அளவுக்கு நெருங்கிய உறவினராக இருப்பினும் சரியே. ஏனெனில் அவர்கள் திருந்தி வாழும் வாய்ப்பே இல்லை என்று தெளிவான பின்பும் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பது சரியில்லை. அவர்கள் நரகவாசிகளே ஆவர்.


وَمَا كَانَ ٱسْتِغْفَارُ إِبْرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوْعِدَةٍۢ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوٌّۭ لِّلَّهِ تَبَرَّأَ مِنْهُ ۚ إِنَّ إِبْرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٌۭ.

9:114. இவ்வாறே இப்றாஹீம் நபி, தம் தந்தை ஒரு முஷ்ரிக்காக இருந்தும்கூட அவருடைய பாதுகாப்பிற்காக இறைவனிடம் வேண்டினாரே என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இவையாவும் அவரை நேர் வழிப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சியே ஆகும். அவரை எப்படியாவது நேர்வழிப் படுத்தி இறைவனின் தண்டனையிலிருந்து மீட்க அவர் உறுதி பூண்டிருந்தார். (பார்க்க 19:48) ஆனால் அவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு நேர் மாற்றமாக செயல்படுவதில் நிலையாக இருப்பதைக் கண்டு அவரை விட்டு விலகிக் கொண்டார் (பார்க்க 60:4) நிச்சயமாக இப்றாஹீம் நபி தன் இறைக் கொள்கையில் நிலைத்திருந்து செயல்படுபவராகவும் இளகிய மனமுள்ளவராகவுமே இருந்தார்.


وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِلَّ قَوْمًۢا بَعْدَ إِذْ هَدَىٰهُمْ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَ ۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ.

9:115. நேர்வழி கிடைத்து அதன்படி செயல்படும் சமுதாயத்திற்கு அதன் பலன்களை அனுபவிக்காமல் இருக்கும்படி அல்லாஹ் விட்டு விடுவதில்லை. முதலில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைக் கோட்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் முழுஅளவில் தெளிவாக்குகின்றான். அதன்பின் எந்தந்த தவறான செயல்களின் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக்கி விடுகின்றான். இவை நிச்சயமாக அனைத்து விஷயங்களையும் அறியும் அல்லாஹ்விடமிருந்து வரும் வழிகாட்டுதல்களாகும்.


إِنَّ ٱللَّهَ لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يُحْىِۦ وَيُمِيتُ ۚ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍۢ.

9:116. அது மட்டுமின்றி அகிலங்களிலும், இந்த பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களின் படியே செயல்பட்டு வருகின்றன. அதே சட்ட திட்டங்கள் மனிதர்கள் விஷயத்திலும் செயல்படுகின்றன. எனவே ஒரு சமுதாயத்தின் வாழ்வும் மரணமும் இதே அடிப்படையில்தான் நடைபெற்று வருகின்றன. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டால் மனிதனின் பாதுகாப்பான வாழ்விற்கு வேறு எதுவும் துணை நிற்காது.


لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِىِّ وَٱلْمُهَٰجِرِينَ وَٱلْأَنصَارِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ فِى سَاعَةِ ٱلْعُسْرَةِ مِنۢ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍۢ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ ۚ إِنَّهُۥ بِهِمْ رَءُوفٌۭ رَّحِيمٌۭ.

9:117. சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் இறைத்தூதர் மீதும், அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, அவருக்குத் துணைநின்று அவருடன் ஹிஜ்ரத் செய்து தம் ஊரை விட்டு வந்தவர்கள் மீதும், அவர்களுக்கு புகலிடமளித்து உதவி செய்த அன்சாரிகள் மீதும் அல்லாஹ்வின் கருணை இருந்து வந்துள்ளது. அதாவது இறை ஆட்சியமைப்பு உருவாகும் கால கட்டத்தில் அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டபோது, அவர்கள் திசை மாறிச் சென்றிருப்பார்கள். ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடையான வழிகாட்டுதலைக் கொண்டு அவர்களைக் காப்பாற்றினான். அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் கருணையும் கிருபையும் நிச்சயமாக உள்ளன.


وَعَلَى ٱلثَّلَٰثَةِ ٱلَّذِينَ خُلِّفُوا۟ حَتَّىٰٓ إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ ٱلْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّوٓا۟ أَن لَّا مَلْجَأَ مِنَ ٱللَّهِ إِلَّآ إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ.

9:118. அதே போல போரின் சமயம் களத்தில் முன்னேறாமல் பின்தங்கிவிட்ட மூவர் விவகாரத்திலும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய தீர்ப்பு பரிசீலனையில் இருந்து வந்தது (பார்க்க 9:106) அவர்கள் களத்தை விட்டு ஓடியபோது அவர்களுக்கு எங்கும் புகலிடம் கிடைக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் கூட அவர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. மேலும் அவர்களுக்கு உயிர் வாழ்வதே மிகவும் கஷ்டமாகி விட்டது. எனவே அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பை விட்டால், அவர்கள் உயிர் வாழ்வதற்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து தம் தவறை திருத்திக் கொண்டார்கள். எனவே அவர்களும் மன்னிக்கப்பட வேண்டியவர்களே ஆவார்கள். இதனால் அவர்களுக்கும் அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பு பொது மன்னிப்பு அளித்து திருந்தி வாழ வாய்ப்பளித்தது. இது அல்லாஹ்வின் கருணையின் பிரதிபலிப்பாகும் அல்லவா?


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَكُونُوا۟ مَعَ ٱلصَّٰدِقِينَ.

9:119. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுங்கள். அதாவது இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்துகொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பைக் கட்டிக் காக்க உளமாற உழைப்பவர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.


مَا كَانَ لِأَهْلِ ٱلْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُم مِّنَ ٱلْأَعْرَابِ أَن يَتَخَلَّفُوا۟ عَن رَّسُولِ ٱللَّهِ وَلَا يَرْغَبُوا۟ بِأَنفُسِهِمْ عَن نَّفْسِهِۦ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌۭ وَلَا نَصَبٌۭ وَلَا مَخْمَصَةٌۭ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا يَطَـُٔونَ مَوْطِئًۭا يَغِيظُ ٱلْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّۢ نَّيْلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِۦ عَمَلٌۭ صَٰلِحٌ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ.

9:120. நகர்புறவாசிகளோ அல்லது கிராமவாசிகளோ, போர் மற்றும் அவசரக் கால சூழ்நிலைகளில், அதை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் தளபதியை விட்டு தம் உயிருக்குப் பயந்து ஓடிவிடுவது முறையாகாது. ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு மகத்தான சமூக அமைப்பும், ஆட்சியமைப்பும் உருவாக்கப்படுகிறது. இதற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்பவர்களுக்கு ஏற்படும் பசி, தாகம், களைப்பு மற்றும் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் ஆகியவை யாவும் இவர்களின் நற்கருமங்களின் பட்டியலில் பதிவாகி வரும். (2:155-156) இப்படியாக நற்செயல்களைச் செய்வோருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து தக்க நற்பலன்கள் கிடைத்து வரும்.
ஆக நன்மையானச் செயல்கள் எவை என்பதை திருக்குர்ஆன் எந்த அளவிற்கு கோடிட்டு மிக அழகாகக் காட்டுகிறது என்பதையும் கவனியுங்கள்.


وَلَا يُنفِقُونَ نَفَقَةًۭ صَغِيرَةًۭ وَلَا كَبِيرَةًۭ وَلَا يَقْطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ ٱللَّهُ أَحْسَنَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

9:121. இத்தகையவர்கள் சமூக மேம்பாட்டிற்காக செய்து வரும் உதவிகள் சிறியதோ பெரியதோ, அவை யாவும் நற்கருமங்களின் பட்டியலில் பதிவாகி வரும். அதேபோல் இப்பணிகளுக்கு நீங்கள் ஊரை விட்டு வேறு ஊருக்குச் செல்ல கரடு முரடான பாதையைக் கடந்து செல்ல நேர்ந்தாலும் அவையும் நற்கருமங்களில் பதிவாகி வரும். இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வீண் போகாது. அதற்குரிய பலாப் பலன்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிச்சயமாகக் கிடைக்கும்.


۞ وَمَا كَانَ ٱلْمُؤْمِنُونَ لِيَنفِرُوا۟ كَآفَّةًۭ ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍۢ مِّنْهُمْ طَآئِفَةٌۭ لِّيَتَفَقَّهُوا۟ فِى ٱلدِّينِ وَلِيُنذِرُوا۟ قَوْمَهُمْ إِذَا رَجَعُوٓا۟ إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ.

9:122. மேலும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். போருக்காவும் சமூக நலப்பணிகளுக்காவும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவருமே ஒட்டுமொத்தமாக செல்வதும் சரியாகாது. எனவே அப்பணிகளைப் பல துறைகளாகவும் பகுதி பகுதியாகவும் பிரிந்து செயல்பட வேண்டும். அதில் ஒரு பிரிவினர் ஒழுக்க மாண்புகள் சம்பந்தமாக தெரிந்து கொள்ளவேண்டிய இறைவழிகாட்டுதலை முறையாகக் கற்றுக்கொண்டு அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும். இவ்வாறு செயல் பட்டால் இப்பணிகளை பாதுகாப்பாகவும் சிறப்பான முறையிலும் செய்து வரலாம். (பார்க்க 4:102)


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَٰتِلُوا۟ ٱلَّذِينَ يَلُونَكُم مِّنَ ٱلْكُفَّارِ وَلْيَجِدُوا۟ فِيكُمْ غِلْظَةًۭ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ.

9:123. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! ஒரு பக்கம் சமுதாயத்திலுள்ள தீய சக்திகளையும் ஒடுக்கவேண்டியது உங்கள் மீதுள்ள முக்கிய கடமையாகும். எனவே உங்களைச் சுற்றியுள்ள சமூக விரோதிகளை ஒடுக்கி, உங்கள் பலத்தை அவர்களுக்குக் காட்டுங்கள். அதனால் அவர்கள் தீய செயல்களிலிருந்து விலகிவிடலாம். அல்லாஹ்வின் சட்டதிட்டங்களைப் பேணி நடக்கும் இலட்சியவான்களுக்கே அல்லாஹ்வின் துணை இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


وَإِذَا مَآ أُنزِلَتْ سُورَةٌۭ فَمِنْهُم مَّن يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَٰذِهِۦٓ إِيمَٰنًۭا ۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَزَادَتْهُمْ إِيمَٰنًۭا وَهُمْ يَسْتَبْشِرُونَ.

9:124. மறுபக்கம் மக்களில் சிலருடைய பேச்சு எவ்வாறு இருக்கிறது என்பதையும் கவனியுங்கள். இறை ஆட்சியமைப்பு மற்றும் ஒழுக்க மாண்புகள் சம்பந்தமாக வழிகாட்டுதல்கள் இறக்கி அருளப்படும் போது, “உங்களில் யாருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தி விட்டது?” என்று ஏளனமாக கேட்கிறார்கள். யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முழு ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்குத் தான் இதில் ஈடுபாடு அதிகரிக்கும். இதனால் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். மற்றவர்களுக்கு இது எப்படி ஏற்படும் என்று அவர்களிடம் கேளுங்கள்.


وَأَمَّا ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَىٰ رِجْسِهِمْ وَمَاتُوا۟ وَهُمْ كَٰفِرُونَ.

9:125. ஆனால் எவர்களுடைய உள்ளங்களில் நயவஞ்சக நோய் இருக்கிறதோ அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றுவிடும். தீய எண்ணங்களுடன் செயல்படுபவர்களிடம் தீமையே வளரும். எனவே அவர்கள் சாகும் வரையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகவே செயல்படுவார்கள். (பார்க்க 2:10)


أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِى كُلِّ عَامٍۢ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ.

9:126. ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ அவர்களுக்கு வேதனைகள் ஏற்படும் போது (பார்க்க 9:14) அவர்கள் அதைக் கவனிப்பதில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் செய்து வரும் தவறான செயல்களை விட்டு விலகிக் கொள்வதில்லையே! அதைப் பற்றிய எண்ணமே அவர்களிடம் சிறிதளவும் இல்லை.
இவ்வுலகில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள், பூகம்பம், புயல் வெள்ளம், பஞ்சம் போன்றவை ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. அவற்றிலிருந்து நிவாரணம் பெற அனைவரும் ஒருங்கிணைந்து அல்லாஹ்வின் நியதிப்படி உழைக்க வேண்டியுள்ளது. துயரத்திலிருந்து நிவாரணம் கிடைத்ததும் பழையபடி பிரிந்து விடுகிறீர்கள்.


وَإِذَا مَآ أُنزِلَتْ سُورَةٌۭ نَّظَرَ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ هَلْ يَرَىٰكُم مِّنْ أَحَدٍۢ ثُمَّ ٱنصَرَفُوا۟ ۚ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَفْقَهُونَ.

9:127. அதே சமயம் இறைவழிகாட்டுதல் சம்பந்தமாக கட்டளைகள் ஏதேனும் பிறப்பிக்கபட்டால், அதைக் கேட்டதும் அவர்களில் ஒருவரையொருவர் பார்த்து, “உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?” என்று கேட்டுக் கொண்டே திரும்பிச் சென்று விடுகின்றனர். இப்படியாக உண்மை விஷயங்களை சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததால் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய உள்ளங்கள் மறுத்து விடுகிறது. ஏனெனில் உண்மை விஷயங்களை சிந்தித்துணரும் ஆற்றல்கள் அவர்களிடம் இருப்பதில்லை.


لَقَدْ جَآءَكُمْ رَسُولٌۭ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِٱلْمُؤْمِنِينَ رَءُوفٌۭ رَّحِيمٌۭ.

9:128. சமுதாயத்தவர்களே! உங்கள் அனைவரையும் நல்வழிபடுத்தி உங்களை வழி நடத்திச் செல்ல உங்களிலிருந்தே ஒரு தூதர் வந்துள்ளார். நீங்கள் துன்பத்திற்கு ஆளாகிவிட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தை தருகிறது. அன்றியும் அவர்கள் உங்கள் அனைவரையுமே பெரிதும் நேசிக்கிறார். இபடியாக இறைவழிகாட்டுதலை ஏற்று அதன் ஆட்சியமைப்பைக் கட்டிக்காக்கும் மூஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கிறார்.
இதற்குக் காரணம் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நபி மட்டும் நிறைவேற்ற இயலாது. மூஃமின்களின் ஆதரவும் உறுதுணையும் அவசியமாகிறது. (பார்க்க 33:56) மேலும் இவர்கள் தம் உயிரையும் உபரிச் செல்வங்களையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்து இத்தகைய செயல் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் (பார்க்க:9:111, 48:10&18, 33:6) இத்தகையவர்கள் மீது சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவருக்கு அளவுகடந்த பாசம் ஏற்படுவது இயல்புதானே. (பார்க்க 8:63)


فَإِن تَوَلَّوْا۟ فَقُلْ حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ.

9:129. உண்மை இவ்வாறிருக்கும் போது, யாராவது அவர் காட்டும் பாதையை விட்டு விலகிக் கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு அல்லாஹ்வுக்கோ அந்த தூதருக்கோ அல்ல. அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன். “அகிலங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் கட்டளைகளே செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து ஆட்சி செய்பவனாகிய அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கைக் கொண்டு செயல்படுகிறேன்” என்று அவர்களுக்கு விளக்குவீராக.