بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
8:0அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَنفَالِ ۖ قُلِ ٱلْأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَصْلِحُوا۟ ذَاتَ بَيْنِكُمْ ۖ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤْمِنِينَ.
8:1. போரில் வெற்றி பெறும் போது, அங்கு கிடைக்கின்ற உபரிச் செல்வங்கள் யாவும் யாருக்குச் சொந்தம் என்று உங்களிடம் கேட்கிறார்கள். அவை எல்லாம் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பிற்கும், அதனடிப்படையில் இறைத்தூதர் கோடிட்டு காட்டும் சமூக நலத் திட்டங்களுக்காகவுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்து விடுங்கள். (பார்க்க 8:40) ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, உங்களிடையே பரஸ்பர உறவை சீர்செய்து கொள்ளுங்கள். நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும், அதன் அடிப்படையில் இறைத் தூதர் கொண்டுவரும் ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள்.•
இஸ்லாமிய ஆட்சி அமைப்பின் நோக்கமே உலகில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் என்பதே ஆகும். எனவே நாட்டில் நசுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் தான் அந்நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. (பார்க்க 4:75) அதுவும் வேறு வழி இல்லை என்னும் பட்சத்தில்தான் போர் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. (பார்க்க 22:39) உண்மை இவ்வாறிருக்க, போர் தொடுப்பதன் நோக்கம் செல்வங்களைக் அபகரிப்பதற்கோ அல்லது நாட்டைப் பிடிப்பதற்கோ அல்ல. எனவே அந்நாட்டின் செல்வங்கள் அந்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்த வேண்டும்.
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ ءَايَٰتُهُۥ زَادَتْهُمْ إِيمَٰنًۭا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ.
8:2. உண்மையிலேயே இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட மூஃமின்கள் யாரென்றால் அவர்களிடம் அல்லாஹ்வின் அறிவுரைகள் வந்தால், உடனே அவற்றை உள்ளச்சத்துடன் செவி சாய்த்துக் கேட்பார்கள். மேலும் அந்த அறிவுரைகளைக் கேட்டதும் அதன்படி செயலாற்ற அவர்களில் உறுதிப்பாடு அதிகரிக்கும். அந்த அளவிற்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மீது அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கும்.
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ.
8:3. மேலும் இறைவழிகாட்டுதல்களை பெற்ற இவர்கள், அவற்றை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களுள் விழிப்புணர்வு ஏற்பட கூட்டு "ஸலாத்" முறையை நிலை நாட்டுவார்கள். மேலும் தம் வசமுள்ள செல்வங்களை சமுதாய மேம்பாட்டிற்காகப் பயன்படுத்துவார்கள்.
இறைவனின் இத்தகைய நல்லறிவுரைகளைப் பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குப் பாடங்களாகக் கற்றுக் கொடுத்து வந்தால், சிறு வயதிலிருந்தே இறைவழிகாட்டுதலின் படி வாழும் பழக்கம் ஏற்படும்.
أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُؤْمِنُونَ حَقًّۭا ۚ لَّهُمْ دَرَجَٰتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌۭ وَرِزْقٌۭ كَرِيمٌۭ.
8:4. இத்தகையவர்களே உண்மையிலேயே இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்படும் செயல்வீரர்கள் ஆவர். மேலும் இவர்களின் உழைப்பிற்கு ஏற்ப தங்கள் இறைவனின் நியதிப்படி அந்தஸ்தும் உயர் பதவிகளும் கிடைக்கும். மேலும் இவர்களுடைய வாழ்வில் பாதுகாப்பும், கண்ணியமிக்க வாழ்வாதார வசதிகளும் கூடி வரும்.
كَمَآ أَخْرَجَكَ رَبُّكَ مِنۢ بَيْتِكَ بِٱلْحَقِّ وَإِنَّ فَرِيقًۭا مِّنَ ٱلْمُؤْمِنِينَ لَكَٰرِهُونَ.
8:5. இந்த உயர் பதவிகளும் அந்தஸ்தும் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒன்றல்ல. இதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்து பல கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு மனித வாழ்வின் சரியான பாதையைக் காட்டும் இந்த குர்ஆனிய ஆட்சியமைப்பு நிலைபெற, நீங்கள் பொது வாழ்வில் ஈடுபடும் போது உங்களில் ஒரு பிரிவினருக்குப் பிடிக்காது.
يُجَٰدِلُونَكَ فِى ٱلْحَقِّ بَعْدَمَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى ٱلْمَوْتِ وَهُمْ يَنظُرُونَ.
8:6. அவர்களுக்கு இறைவழிகாட்டுதல் விஷயமாக அனைத்தும் தெளிவான பின்பும், அவர்கள் உங்களிடம் அதைப் பற்றி விவாதம் செய்வார்கள். அவர்களை நீங்கள் காணும்போது, அவர்களிடம் இருக்கும் மரண பயம், அவர்களை பொதுவாழ்வில் பங்கெடுப்பதிலிருந்து விலகிச் செல்வது போன்று உங்களுக்கு தோன்றம்.
அதுமட்டுமின்றி போர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இறைவழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. மனித இனத்தை கொன்று குவிப்பதோ அல்லது நாட்டைப் பிடித்துக் கொள்ளை அடிப்பதோ அதன் நோக்கம் அல்ல. மாறாக அநியாயத்தை ஒழித்து, நியாயமான ஆட்சியமைப்பை நிலைநாட்டி அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பு கருதியே, அவசியம் ஏற்படின் போரிட அனுமதி அளிக்கப்படுகிறது. (பார்க்க 2:190, 22:39) வரலாற்று நிகழ்வுகளே இதற்கு ஆதாரமாகும்.
وَإِذْ يَعِدُكُمُ ٱللَّهُ إِحْدَى ٱلطَّآئِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ ٱلشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ ٱللَّهُ أَن يُحِقَّ ٱلْحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَيَقْطَعَ دَابِرَ ٱلْكَٰفِرِينَ.
8:7. ஒரு கட்டத்தில் போருக்குப் புறப்பட்ட நீங்கள் இரு கூட்டத்தினரைக் கண்டீர்கள். அதில் ஒன்று வியாபாரக் கூட்டம் மற்றொன்று ஆயுதங்கள் ஏந்திய அநியாயக்கார கூட்டத்தைச் சேர்ந்த படையினர். நீங்கள் ஆயுதம் ஏதுமில்லாத வியாபாரக் கூட்டத்துடன் மோதி எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ்வின் செயல் திட்டமோ அதுவல்ல. அநியாயக்காரக் கூட்டத்தை விரட்டியடித்து நியாயமான ஆட்சியமைப்பை நிலைநாட்டவே அல்லாஹ்வின் அறிவுரையாக இருந்தது. அப்போதுதான் உங்களால் சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். (மேலும் பார்க்க 24:55)
لِيُحِقَّ ٱلْحَقَّ وَيُبْطِلَ ٱلْبَٰطِلَ وَلَوْ كَرِهَ ٱلْمُجْرِمُونَ.
8:8. ஆனால் அக்கிரமச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளுக்கு இந்தப் போர் நடவடிக்கைகள் ஒருபோதும் பிடிக்காது. இருப்பினும் பொய்யான ஆசை வார்த்தைகளைக் காட்டி மோசம் செய்யும் ஆட்சியாளரை அகற்றி, உண்மையிலேயே மக்கள் அனைவரின் நலனைப் பேணிக் காக்கும் ஆட்சியமைப்பு ஏற்படவேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும்.
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَٱسْتَجَابَ لَكُمْ أَنِّى مُمِدُّكُم بِأَلْفٍۢ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُرْدِفِينَ.
8:9. இப்படியாக தர்மத்தை நிலைநாட்டும் இப்போரில் வெற்றி பெற தம் இறைவனிடம் உதவி கேட்டபோது, உங்களோடு ஓராயிரம் சக்திவாய்ந்த போர்த் தடயங்கள் இருக்கும் போது (பார்க்க 3:125) நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? அவற்றின் உதவியைக் கொண்டு நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து தைரியமூட்டி ஊக்குவிக்கும் செய்திகள் வந்தன.
وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمْ ۚ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ.
8:10. மேலும் ஊக்கமளிக்கும் அல்லாஹ்வின் இச்சொல், உங்கள் மனம் அமைதி பெறுவதற்காகவும் தைரியம் அளிப்பதற்காகவும் தான். மற்றபடி வெற்றிக்கான உதவிகள் என்பது அல்லாஹ் செய்துள்ள ஏற்பாட்டின் மூலம் தான் கிடைக்கும். (மேலும் பார்க்க 3:126, 8:12, 41:30) நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெளிவாகவும் ஞானம் மிக்கதாகவும் உள்ளன.
إِذْ يُغَشِّيكُمُ ٱلنُّعَاسَ أَمَنَةًۭ مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءًۭ لِّيُطَهِّرَكُم بِهِۦ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ ٱلشَّيْطَٰنِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ ٱلْأَقْدَامَ.
8:11. இப்படியாக உங்கள் மனம் அமைதிப் பெற்று உங்களால் நிம்மதியாக நிலைத்திருக்க முடிந்தது. மேலும் அந்தப் பாலைவனக் காட்டில் பெய்த மழையைக் கொண்டு நீராடி சுத்தம் செய்து கொண்டும், உங்களுக்கு தண்ணீர் கிடைக்காதவாறு எதிரணி ஏற்படுத்திய பயமும் நீங்கி, உங்களுக்குக் குடிக்க தண்ணீரும் கிடைத்தது. இதனால் நீங்கள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்று ஓரணியாக நின்று போரிட இந்த இயற்கை சக்திகள் உதவி புரிந்தன. இப்படியாக அல்லாஹ்வின் இந்த ஏற்பாடுகள் உங்களுக்குத் துணையாக இருந்தன.
إِذْ يُوحِى رَبُّكَ إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ أَنِّى مَعَكُمْ فَثَبِّتُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ سَأُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ فَٱضْرِبُوا۟ فَوْقَ ٱلْأَعْنَاقِ وَٱضْرِبُوا۟ مِنْهُمْ كُلَّ بَنَانٍۢ.
8:12. இப்படியாகத்தான் அல்லாஹ் தன் இயற்கைச் சக்திகளாகிய மலக்குகளிடம், “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நீங்கள் மூஃமின்களின் நிலையை உறுதிப்படுத்துங்கள். இறை ஆட்சியமைப்புக்கு எதிராக திரண்டு இருக்கும் அநியாயக்காரக் கூட்டத்தின் மனதில் நான் திகிலை உண்டாக்குங்கள்” என்றும், “முஃமின்களே! நீங்கள் எதிரிகளின் பிடரியை வெட்டி சாய்த்துவிடுங்கள்” அதாவது அவர்களுக்கு எங்கிருந்தெல்லாம் பலம் கிடைக்கிறதோ, அதை நீங்கள் தரித்துவிடுங்கள்” என்று அறிவுரை வந்தது.
அதாவது இயற்கை சக்திகளின் மூலம் பெய்த மழை நீர், மூஃமின்களுக்கு புத்துயிர் அளிக்கக் கூடியதாகவும், மிகத் தொலைவிலிருந்து வந்த பகைவர்களுக்கு ஜலதோஷம் காயிச்சல் போன்றவை தாக்கி, பலவீனமும தொய்வும் ஏற்பட்டு பயத்தை உண்டாக்கி விட்டது.
மேலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற உணவு வகைகள் கிடைக்காதவாறு தடுத்து விட்டால், அவர்களுடைய பலம் குன்றிவிடும். மேலும் அவர்களுடைய ஆயுத கிடங்குகளையும் வேரோடு அழித்துவிட்டால் அவர்களுடைய மனதில் திகில் உண்டாகிவிடும். இதனால் அவர்கள் சரணடைந்து விடக் கூடும் என்பதே இறைவனின் அறிவுரையாகும். ஏதிரிகளைக் கொன்று குவிப்பது அல்ல.
ذَٰلِكَ بِأَنَّهُمْ شَآقُّوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ وَمَن يُشَاقِقِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ.
8:13. இதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும், அதன் அடிப்படையில் இறைத்தூதர் உருவாக்கிய ஆட்சியமைப்புக்கும் எதிராகச் செயல்பட்டார்கள். எனவே யார் இவ்வாறு செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை நிரூபித்து விடுங்கள்.
ذَٰلِكُمْ فَذُوقُوهُ وَأَنَّ لِلْكَٰفِرِينَ عَذَابَ ٱلنَّارِ.
8:14. அல்லாஹ்வின் இந்தத் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். ஆக இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு நரக வேதனை தான் கிடைக்கும்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ زَحْفًۭا فَلَا تُوَلُّوهُمُ ٱلْأَدْبَارَ.
8:15. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் பகைவர்களுடன் போரில் மோதும்போது, புறமுதுகுக் காட்டி ஒடி விடாதீர்கள்.
وَمَن يُوَلِّهِمْ يَوْمَئِذٍۢ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفًۭا لِّقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٍۢ فَقَدْ بَآءَ بِغَضَبٍۢ مِّنَ ٱللَّهِ وَمَأْوَىٰهُ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.
8:16. எதிரியைத் தாக்குவதற்காகப் பதுங்குவதோ அல்லது இடம் மாறிச் செல்வது என்பதோ வேறு விஷயமாகும். புறமுதுகு காட்டி ஒடுவது என்பது வேறு விஷயம். யார் புறமுதுகு காட்டி ஓடுகிறார்களோ, அவர்களும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாவார்கள். சிறைச் சாலைப் போன்ற வேதனைமிக்க இடங்களில் தள்ளப்படுவார்கள். அவர்கள் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும்.
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمْ ۚ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ ۚ وَلِيُبْلِىَ ٱلْمُؤْمِنِينَ مِنْهُ بَلَآءً حَسَنًا ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ.
8:17. மேலும் எதிரிகளை நீங்களே வெட்டிச் சாய்க்கவில்லை. அல்லாஹ்வின் ஏற்பாடுகளில் உள்ள அம்புகளை எய்ததால் உங்களால் அவர்களை எளிதாகக் கொல்ல முடிந்தது. அல்லாஹ்வின் இந்த ஏற்பாட்டைக் கொண்டுதான் பகைவர்களை முறியடித்தீர்கள். எனவே எந்த அளவிற்கு அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள் என்பதை சோதிப்பதற்காகத் தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைத்தையும் கேட்கும் வல்லமையும்,அளவற்ற ஞானமும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது அல்லவா?
எனவே அவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றி நடந்தால் உங்களுக்கும் அறிவாற்றலும் செயல்திறனும் கூடி வரும்.
ذَٰلِكُمْ وَأَنَّ ٱللَّهَ مُوهِنُ كَيْدِ ٱلْكَٰفِرِينَ.
8:18. இவ்வாறே அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு எதிராகச் செயல்படுபவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து அவர்களை இழிவுக்குள்ளாக்கி விடவேண்டும். மேலும் அவர்களுடைய பலம் குன்றிவிடச் செய்யவேண்டும்.
இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இறைச் செயல்திட்டங்கள் நிறைவேறாதவாறு இடையூறுகளைச் செய்து வந்தார்கள். அதனால் அவர்களை களையெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் வெற்றி பெற்றால் தான் தம்மால் நற்காரியங்களை இடையூறுகள் எதுவும் இன்றி சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்று மூஃமின்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். (பார்க்க 48:1-2)
إِن تَسْتَفْتِحُوا۟ فَقَدْ جَآءَكُمُ ٱلْفَتْحُ ۖ وَإِن تَنتَهُوا۟ فَهُوَ خَيْرٌۭ لَّكُمْ ۖ وَإِن تَعُودُوا۟ نَعُدْ وَلَن تُغْنِىَ عَنكُمْ فِئَتُكُمْ شَيْـًۭٔا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُؤْمِنِينَ.
8:19. எனவே நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெற்றி உங்களுக்குக் கிடைத்து விட்டது. நீங்கள் எதிரணியினரிடம், “இனியேனும் நீங்கள் தவறான செயல்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நலமாக இருக்கும். மாறாக தவறான செயல்களைச் செய்து கொண்டு மீண்டும் எங்களுடன் மோத வந்தால், அதற்கு நாங்களும் பதிலடி கொடுப்போம். உங்களுடைய படைப் பலம் எவ்வளவுதான் பெரியதாக இருந்தாலும் சரியே. அது உங்களுக்கு எத்தகைய வெற்றியையும் தேடித் தராது. ஏனெனில் அல்லாஹ்வின் உதவி இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படிச் செயல்படுவோரின் பக்கமே இருக்கும்” என்று அவர்களிடம் தெரிவித்து விடுங்கள்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ.
8:20. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! போரில் வெற்றி கிடைத்ததும் அத்துடன் நம் பணி முடிந்துவிட்டது என்று இருந்து விடாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் அடிபணிந்து சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபடுங்கள். இதைப் பற்றி நீங்கள் நன்றாகக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ قَالُوا۟ سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ.
8:21. எதையும் சரிவர கேட்காமலேயே, நாங்கள் அவற்றைக் கேட்டுக் கொண்டோம் என்று சொல்லி அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அவ்வாறு ஒப்புக்காகக் கேட்டு அலட்சியமாக இருப்பவர்களைப் போல் நீங்களும் ஆகிவிடாதீர்கள்.
۞ إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلصُّمُّ ٱلْبُكْمُ ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ.
8:22. எதையும் கேட்டு நன்றாக அறிந்துகொண்டு சீரிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இப்படி எதையும் அறிந்து கொள்ளாத செவிடர்களும் ஊமைகளுமே அல்லாஹ்விடத்தில் மிகவும் கேவலமான பிராணிகளைப் போன்றவர் ஆவார்கள்.
وَلَوْ عَلِمَ ٱللَّهُ فِيهِمْ خَيْرًۭا لَّأَسْمَعَهُمْ ۖ وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ.
8:23. அப்படியும் அவர்களிடம் செவியேற்று அறிந்து கொள்ளும் ஆற்றல் சிறிதளவாவது இருந்திருந்தால், அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களை செவி ஏற்குமாறு செய்திருக்க முடியும். ஆனால் அவர்களிடத்தில் அந்த ஆற்றல் அறவே இல்லை. அதையும் மீறி அவர்களை வலுக் கட்டாயமாகக் கேட்கச் செய்தாலும், அவர்கள் புறக்கணிக்கவே செய்வார்கள்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَجِيبُوا۟ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيْنَ ٱلْمَرْءِ وَقَلْبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيْهِ تُحْشَرُونَ.
8:24. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி இறைத்தூதர் உங்கள் வாழ்வின் உயிரோட்டம் அளிக்கக் கூடிய செயல்திட்டத்தின் பக்கம் அழைப்பு விடுத்தால், அவரிடம் விரைந்து செல்லுங்கள். உண்மையிலேயே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் மனித உள்ளங்களில் ஊடுருவிச் செல்லக் கூடியதாகவே இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் செயலாற்றியதற்கு ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கும் நாள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வாசகத்தில் “உயிரளிக்கக் கூடிய விஷயத்தின் பக்கம் அழைப்பு விடுத்தால்” என்று வருகிறது. அதாவது மக்கள் அனைவரும் இறந்து விடவில்லை. மாறாக எவ்வித ஆற்றலும் இல்லாத நடைபிணங்களாக வாழ்பவர்களை, நல்ல ஆற்றல்மிக்க உயிரோட்டமுள்ள வாழ்க்கையின் பக்கம் அழைப்பு விடுத்தால் அதற்குச் செவி சாய்த்து உடனே அவரிடம் செல்லுங்கள் என்று பொருளாகிறது. மேலும் இவ்வாசகத்தில் அல்லாஹ் மனிதனுக்கும் அவன் உள்ளத்திற்கும் இடையே ஆதிக்கம் செலுத்துவதாக வருகிறது. அதாவது அல்லாஹ்வை மட்டும் ஏற்றுக்கொண்டு அவன் செயல்திட்டப் படி செயல்பட முன் வராமல் தயக்கம் என்ற திரையை அகற்றி துணிந்து செயலாற்ற முன் வரவேண்டும். ஏனெனில் இறுதியில் ஒவ்வொருவரும் செய்து வரும் செயல்களுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
وَٱتَّقُوا۟ فِتْنَةًۭ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنكُمْ خَآصَّةًۭ ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ.
8:25. அதையும் மீறி நீங்கள் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் அல்லாஹ்வின் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து அநியாயம் செய்பவர்கள் மட்டுமே குற்றவாளிகள் என்பதல்ல. அல்லாஹ் விதித்த கடமைகளைச் நிறைவேற்றாதவரும் குற்றவாளியே ஆவார். எனவே அல்லாஹ்வின் தண்டனை மிகவும் கடுமையானது என்பதை மனதில் கொண்டு அவன் காட்டிய வழியில் செயலாற்றுங்கள்.
وَٱذْكُرُوٓا۟ إِذْ أَنتُمْ قَلِيلٌۭ مُّسْتَضْعَفُونَ فِى ٱلْأَرْضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ.
8:26. நீங்கள் ஒரு கட்டத்தில் மக்கா நகரில் இருந்தபோது, எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் பலவீனமாகவும் இருந்தீர்கள். எந்த சமயமும் உங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தீர்கள். அப்படிப்பட்ட ஆபத்தான நிலையில் இருந்த நீங்கள் மதீனாவிற்குச் சென்று சிறப்பாகச் செயல்பட வழிகள் பிறந்தன. அங்கு அல்லாஹ்வின் நியதிப்படி மக்களின் ஆதரவும் உதவியும் கிடைத்து நீங்கள் பலம் பெற்றீர்கள். இன்னும் உங்களுக்கு சுத்தமான ஆகாரங்களும் வாழ்க்கை வசதிகளும் கிடைத்தன. இவற்றை எல்லாம் மனதில் பதிய வைத்துக் கொண்டு, நீங்கள் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَخُونُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓا۟ أَمَٰنَٰتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ.
8:27. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் அறிவுரைப் படி உருவாகியுள்ள ஆட்சியமைப்பிற்கு எதிராகச் செயல்பட்டு மோசம் செய்யாதீர்கள். மேலும் ஆட்சி பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதிலும் முறைதவறி நடக்காதீர்கள். அவ்வாறு செயல் பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நீங்களே அறிவீர்கள்.
وَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَٰدُكُمْ فِتْنَةٌۭ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌۭ.
8:28. அல்லாஹ்வின் ஆட்சியமைப்புப் பணியில் ஈடுபடும்போது, உங்கள் பிள்ளைகளும், செல்வங்களைக் குவிக்கும் எண்ணங்களும் உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கும். தனிப்பட்ட முறையில் கிடைக்கும் இந்த ஆதாயங்கள், பிற்காலத்தில் சமுதாயத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். எனவே சமுதாய நலனைக் கருதி இத்தகைய எண்ணங்களுக்கு இடமளிக்காதீர்கள். கடமை தவறாத செயல்வீரர்களுக்கு இறைவனின் ஆட்சியமைப்பு மூலமாக கிடைக்கின்ற பலன்களே மிகவும் மகத்தானவையாகும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تَتَّقُوا۟ ٱللَّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَانًۭا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ.
8:29. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் இறைக் கட்டளைக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளை எண்ணி, அதற்கு அஞ்சி செயல்பட்டால் தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்த நன்மை தீமை ஆகியவற்றைப் பிரித்து அறிவிக்கும் வழிகாட்டுதல்கள் பயனளிக்கும். அதனால் தவறான செயல்களிலிருந்து விலகி பாதுகாப்பாக வாழ வழிகள் பிறக்கும். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் மகத்தான அருட்கொடைகளாகும்.
وَإِذْ يَمْكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَٰكِرِينَ.
8:30. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! ஒரு கட்டத்தில் உங்களைச் சிறைப் பிடித்து கொலை செய்யவோ அல்லது நாடு கடத்தவோ உங்களின் எதிரணியினர் திட்டங்கள் பல தீட்டிக் கொண்டிருந்ததை நினைவு கூறுங்கள். அவர்களும் அந்தரங்கமாகப் பல சூழ்ச்சிகளை செய்து வந்தனர். அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் அவர்களுடைய சதிகளை முறியடிக்க இரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. இறுதியில் அல்லாஹ்வின் திட்டப்படியே உங்களுக்குப் பாதுகாப்பு கிடைத்தது. அல்லாஹ்வின் திட்டங்களே அனைத்து திட்டங்களைவிட மேன்மை பெற்றவையாகும்.
ஒவ்வொரு நபியும் தம் சமூகத்தாரிடம் அவர்களின் தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்தனர். தம் கூற்றுக்கு வரலாற்று ஆதாரங்களையும் அவர்களிடம் சமர்ப்பித்தனர். அவ்வாறே முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வரலாற்று ஆதாராங்களை மக்களிடம் எடுத்துரைத்தார். அவற்றைக் கேட்டு அவை யாவும் வெறும் கதைகளே என்று கூறி அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا قَالُوا۟ قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هَٰذَآ ۙ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.
8:31. மேலும் இறைவழிகாட்டுதலையும் அது சம்பந்தமான வரலாற்று ஆதாரங்களையும் மக்களிடம் எடுத்துரைத்தால் அவர்கள், “நாங்கள் இதற்கு முன்னரே இத்தகைய கதைகளைப் பலமுறை கேட்டுள்ளோம். எங்களாலும் இப்படிப்பட்ட கதைகளைச் சொல்ல முடியும். இவை யாவும் முன்னோர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” என்று கூறி வந்தார்களே, அதையும் நினைத்துப் பாருங்கள்.
وَإِذْ قَالُوا۟ ٱللَّهُمَّ إِن كَانَ هَٰذَا هُوَ ٱلْحَقَّ مِنْ عِندِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةًۭ مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئْتِنَا بِعَذَابٍ أَلِيمٍۢ.
8:32. மேலும் அவர்கள், “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வரும் உண்மை என்றால் வானத்திலிருந்து எங்கள் மீது கல்மாரி பொழியச் செய். அல்லது எங்களுக்கு நோவினை மிக்க வேதனைகளை அனுப்பு” என்றும் கூறி வந்தார்களே அதையும் சற்று நினைத்துப் பாருங்கள்.
ஏற்கனவே பலமுறை சொன்னது போல ஒரு சமுதாயம் திருந்திக் கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்களுக்குத் தக்க கால அவகாசம் கொடுப்பதே இறைவனின் கருணையாகும். அதன்படி
وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنتَ فِيهِمْ ۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ.
8:33. மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கும் நீர் அவர்களிடேயே இருக்கும் போது, அல்லாஹ்வின் வேதனைகள் அவர்களுக்கு வர வாய்ப்பில்லை. மேலும் அவர்களில் பலர் வேதனைத் தரும் பாவச் செயல்களை விட்டு திருந்தி பாதுகாப்பான வாழ்வின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கும் போதும், அவர்களை வேதனை அளிப்பது அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் இல்லை.
ஆனால் இப்போதோ முஹம்மது நபியையும் அவரைச் சார்ந்தவரையும் ஊரை விட்டு வெளியேற்றி விட்டார்கள். அவர்களும் சட்ட ஒழுங்கை சரிவர கவனித்தும் வருவதில்லை. எனவே “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற இறைச் சட்டத்தின்படி அழிவுகள் வராமல் இருக்கக் காரணம் என்ன?
وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَمَا كَانُوٓا۟ أَوْلِيَآءَهُۥٓ ۚ إِنْ أَوْلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.
8:34. இப்போது அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுக்கு அழிவுகள் வராமல் இருக்க என்ன இருக்கிறது? சங்கை மிக்க கஅபா என்னும் தலைமைச் செயலகத்தில் பணி புரியாதவாறு தடுத்தும் வந்தனர். அவர்களும் அதன் நிர்வாக பொறுப்பை சரிவர கவனிப்பதில்லை. அல்லாஹ்வுக்கு அஞ்சி சிறப்பாகச் செயல்படுபவர்களே அந்தத் தலைமை செயலகத்தின் நிர்வாகிகளாக இருக்க முடியும். கஅபா நிறுவப்பட்டதன் நோக்கம் என்னவென்று தற்போது நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பலருக்குத் தெரியாது.
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِندَ ٱلْبَيْتِ إِلَّا مُكَآءًۭ وَتَصْدِيَةًۭ ۚ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ.
8:35. இப்போது அங்கு நடப்பது என்ன? வெறும் பாட்டும் சீட்டியடிப்பதும் கை தட்டுவதும்தான் அவர்களுடைய "ஸலாத்"தாக இருக்கிறது. இதைத் தவிர வேறு என்ன நடக்கிறது? எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் எதிர்பார்த்த அழிவுகள் அவர்களை நெருங்கிவிட்டது. அதை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ لِيَصُدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةًۭ ثُمَّ يُغْلَبُونَ ۗ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ جَهَنَّمَ يُحْشَرُونَ.
8:36. இப்போது அவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு உருவாவதைத் தடுக்கவும், மக்கள் அதில் இணையாதவாறும் தம் செல்வங்களைச் செலவழிக்கிறார்கள். இவ்வாறே அவர்கள் தொடர்ந்து செலவு செய்துக் கொண்டு இருக்கட்டும். முடிவில் அவர்கள் தம் முயற்சியில் தோல்வியே சந்தித்து பெருந் துக்கம் தான் ஏற்படும். அவர்கள் ஒருபோதும் அதில் வெற்றி பெறவே மாட்டார்கள். இறுதியில் அவர்கள் அனைவரும் அழிவு என்னும் வேதனை மிக்க நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
لِيَمِيزَ ٱللَّهُ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَيَجْعَلَ ٱلْخَبِيثَ بَعْضَهُۥ عَلَىٰ بَعْضٍۢ فَيَرْكُمَهُۥ جَمِيعًۭا فَيَجْعَلَهُۥ فِى جَهَنَّمَ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ.
8:37. இப்படியாக இறைவனின் ஆட்சியமைப்புக்கு எதிராகத் தவறான வழியில் அழிவுப் பாதையில் செல்வோர், இறைவழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோர் என இரு பிரிவாக தனித் தனியே பிரிந்து விடுகின்றனர். மேலும் தவறான வழியில் செல்வோர் அனைவரும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு எதிராக கூட்டாக ஒன்றிணைந்து இதை முறியடிக்கவே முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தம் முயற்சியில் தோல்வியடைந்து இறுதியில் அழிவு என்னும் பாழ்குழியில் தள்ளப்படுவார்கள். இத்தகையவர்களே நஷ்டம் அடைந்தவர்கள் ஆவார்கள்.
قُل لِّلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَنتَهُوا۟ يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا۟ فَقَدْ مَضَتْ سُنَّتُ ٱلْأَوَّلِينَ.
8:38. “எனவே இனியேனும் நீங்கள் விஷமத்தனமான செயல்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் விலகிக்கொண்டால் இதற்கு முன் செய்த தவறான செயல்களின் தண்டனையிலிருந்து மீட்டி, உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படும். தம் செயலில் தொடர்ந்து நீடித்தால் உங்களுக்கும் இதே அழிவுதான் ஏற்படும்” என்று அவர்களுக்கு எச்சரிக்கை செய்துவிடுங்கள்.
وَقَٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌۭ وَيَكُونَ ٱلدِّينُ كُلُّهُۥ لِلَّهِ ۚ فَإِنِ ٱنتَهَوْا۟ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌۭ.
8:39. இப்படியாக சமூகவிரோத சக்திகளை முற்றிலும் முறியடித்து, அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் செயல்திட்டங்களை எவ்வித தங்கு தடையுமின்றி சிறப்பாக நிறைவேற்றும் சூழ்நிலை ஏற்படும் வரையில் இந்தப் போர் நடவடிக்கைகள் தொடரும். அவர்கள் தம் சமூக விரோத செயல்களிலிருந்து விலகிக்கொண்டால் அவர்களை விட்டுவிடுங்கள். ஆனால் அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பு அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்துக் கொண்டே வரும் என்பதை அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
وَإِن تَوَلَّوْا۟ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَوْلَىٰكُمْ ۚ نِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ.
8:40. எனவே பிற்காலத்தில் அவர்கள் மீண்டும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அவர்களுக்கு எதிராகத் தக்க நடவடிக்கை எடுத்து, பொது மக்களின் நலனைப் பாதுகாக்கும். இப்படியாக மக்கள் அனைவரையும் பாதுகாப்பதிலும், உதவிச் செய்வதிலும் அக்கறைக் கொண்டு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சிறப்பாகச் செயல்படும்.
ஏற்கனவே இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொன்னது போல,போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்களைப் பற்றிய கேள்வி எழுப்பப்படுகிறது. அதைப் பற்றி தீர்க்கமாக தெரிந்து கொள்ளுங்கள்.
۞ وَٱعْلَمُوٓا۟ أَنَّمَا غَنِمْتُم مِّن شَىْءٍۢ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُۥ وَلِلرَّسُولِ وَلِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ إِن كُنتُمْ ءَامَنتُم بِٱللَّهِ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ عَبْدِنَا يَوْمَ ٱلْفُرْقَانِ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ.
8:41. போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்குச் சேரும். மீதமுள்ளதில் அந்நாட்டில் வாழும் நசுக்கப்பட்டவர்களின் வாழ்வு மலர பயன்படுத்தப்படும். போரில் மாண்டு போன வீரர்களின் குடும்பங்கள், போரின் சமயம் உதவி புரிந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோரின் மறுவாழ்விற்குப் பயன்படுத்தப்படும்.
இந்தச் செல்வங்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்திடலாம். ஆனால் நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்பவர்களாக இருந்தால், இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்வீர்கள்.
அண்மையில் நடந்த பத்ருப் போரின் சமயம் அல்லாஹ்வின் உதவிகள் எவ்வாறு கிடைத்தன என்பதையும் நீங்கள் பார்த்துக் கொண்டீர்கள். அதே போன்று உங்களுக்கும் வாழ்க்கை வசதிகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். இப்படியாக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
إِذْ أَنتُم بِٱلْعُدْوَةِ ٱلدُّنْيَا وَهُم بِٱلْعُدْوَةِ ٱلْقُصْوَىٰ وَٱلرَّكْبُ أَسْفَلَ مِنكُمْ ۚ وَلَوْ تَوَاعَدتُّمْ لَٱخْتَلَفْتُمْ فِى ٱلْمِيعَٰدِ ۙ وَلَٰكِن لِّيَقْضِىَ ٱللَّهُ أَمْرًۭا كَانَ مَفْعُولًۭا لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنۢ بَيِّنَةٍۢ وَيَحْيَىٰ مَنْ حَىَّ عَنۢ بَيِّنَةٍۢ ۗ وَإِنَّ ٱللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ.
8:42. பத்ரு போர்க்களத்தில் மதீனா பள்ளத்தாக்கின் உச்சியில் நீங்களும், பகைவர்கள் மிகத் தொலைவான கோடியிலும், வியாபாரக் கூட்டம் உங்களுக்கு மிக அருகாமையில் கீழ்ப்புறத்திலும் இருந்தார்கள். மேலும் களத்தில் சந்திக்கும் இடம் மற்றும் நேரத்தைப் பற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் யார் யாருடன் எப்போது மோதவேண்டும் என்பதைப் பற்றி உங்களில் கருத்து வேற்றுமை நிலவி வந்தது. வியாபாரிகள் கூட்டத்துடன் மோதுவதைத் தவிர்த்து, எதிர் அணியின் படையினரிடமே மோதவேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமாக இருந்தது. எனவே வியாபாரிகளை அழித்து ஒரு பயனும் இல்லை. ஆனால் பகைவர்களின் படைகளிடம் மோதி வெற்றி பெற்றால். சமுதாயத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். (பார்க்க 8:7-8) மேலும் அழிபவர்கள் தக்க முகாந்திரத்துடன் அழிய வேண்டும். தப்பிப் பிழைப்பவர்கள் தக்க முகாந்திரத்தைக் கொண்டே உயிர் பிழைக்க வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் கேட்கும் மற்றும் அறிந்து கொள்ளும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அதாவது யாரையும் எந்தக் காரணமும் இன்றி அழிக்கக் கூடாது. மேலும் எப்படி வாழ்ந்தால் உயிருடன் சிறப்பாக இவ்வுலகில் வாழ முடியும் என்பதை அறிந்து வாழ வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். உதாரணத்திற்கு அந்த வியாபாரிகள் கூட்டத்தைத் தாக்கினால் அது எப்படி நியாயம் ஆகும்? அவர்கள் என்ன பாவத்தை செய்தார்கள்? அதே சமயத்தில் பகைவர்கள் அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் நிறைவேறாதபடி தடுத்து வந்தார்கள். எனவே அவர்களைத் தாக்கி முறியடிக்காமல் விட்டுவிட்டால் எப்படி தம் செயல்திட்டத்தில் முன்னேற முடியும்?
إِذْ يُرِيكَهُمُ ٱللَّهُ فِى مَنَامِكَ قَلِيلًۭا ۖ وَلَوْ أَرَىٰكَهُمْ كَثِيرًۭا لَّفَشِلْتُمْ وَلَتَنَٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَلَٰكِنَّ ٱللَّهَ سَلَّمَ ۗ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.
8:43. மேலும் எதிரிகளின் படைபலம் அதிகமாக இருந்த போதிலும், அவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இருப்பதாகவும், அவர்களை எளிதில் முறியடித்து விடலாம் என்றும் உங்கள் மனதில் தைரியம் ஏற்பட்டது. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்களே என்று எண்ணியிருந்தால், நீங்கள் தைரியத்தை இழந்து களத்தில் இறங்குவதா கூடாதா என்று தர்க்கம் செய்து கொண்டிருப்பீர்கள். இந்த மன வலிமை உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது என்பதை நினைவுகூருங்கள். அதனால் அப்படி ஒரு தயக்கமும் இருக்கவில்லை. களத்தில் இறங்கி வெற்றியும் பெற்றீர்கள். மனித உள்ளங்களில் இருக்கும் எண்ணங்களையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ ٱلْتَقَيْتُمْ فِىٓ أَعْيُنِكُمْ قَلِيلًۭا وَيُقَلِّلُكُمْ فِىٓ أَعْيُنِهِمْ لِيَقْضِىَ ٱللَّهُ أَمْرًۭا كَانَ مَفْعُولًۭا ۗ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ.
8:44. எனவே களத்தில் நீங்கள் அவர்களைச் சந்தித்த வேளையில், உங்களிடமிருந்த தைரியத்தினால் அவர்களுடைய எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருப்பதாக எண்ணி முழு பலத்துடன் போரிட்டீர்கள். அதேசமயம் எதிரணியினருக்கும் உங்கள் படைபலம் எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பதைக் கண்டு அவர்கள் அசட்டு தைரியத்தில் இருந்து விட்டார்கள். அதனால் அவர்கள் தோல்வியை சந்தித்தார்கள். இதுவே அல்லாஹ்வின் நியதியாகும். போரில் வெற்றி தோல்வியோ அல்லது மற்ற எந்த செயலாக இருந்தாலும் அல்லாஹ்வின் செயல் திட்டப்படி செயல்பட்டால் தான் அந்தக் காரியம் நிறைவேறும்.
அதாவது அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சிலரே இருந்தபோதிலும், மூஃமின்கள் உலக அமைதிக்காகவும் நியாயமான சமூகஅமைப்பு வேண்டும் என்பதற்காகவும் போரிட்டார்கள். எனவே அவர்கள் நேர்வழியில் இருப்பதால் அவர்களிடத்தில் உற்சாகமும் செயல்வேகமும் விவேகமும் கூடி இருந்தன. எனவே அவர்கள் வெற்றிப் பெற்றார்கள். எனவே துணிவே துணை என்று அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற காரியத்தில் இறங்கினால் தான் உலகில் சாதனைகளைப் படைக்க முடியும் என்பது இதிலிருந்து நமக்குப் புலனாகிறது. (மேலும் பார்க்க 2:249)
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا لَقِيتُمْ فِئَةًۭ فَٱثْبُتُوا۟ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَثِيرًۭا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ.
8:45. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் களத்தில் பகைவர்களை சந்திக்கும்போது, அனைவரும் உறுதியோடு நிலைத்துப் போரிடுங்கள். அல்லாஹ்வின் அறிவுரைகளை எப்போதும் மனதில் பதிய வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படுங்கள். அப்போதுதான் உங்கள் இலட்சியத்தில் வெற்றியடைவீர்கள்.
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَٰزَعُوا۟ فَتَفْشَلُوا۟ وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَٱصْبِرُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ.
8:46. மேலும் போரின் சமயம் அல்லாஹ்வும், போரைத் தலைமைதாங்கி நிற்கும் படைத் தளபதியான இறைத்தூதரும் கட்டளைகளை அவ்வப்போது பிறப்பிக்கும் போது, அதன்படியே செயல்படுங்கள். அதில் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். அவ்வாறு அதில் கருத்து வேற்றுமையுடன் செயல்பட்டால், நீங்கள் கோழைகளாகி உங்கள் பலமும் குன்றிவிடும். உங்களுக்குக் கிடைக்கும் கட்டளையை நிறைவேற்றுவதில் சற்றும் அயராது உறுதியுடன் நிலைத்திருந்து போரிடுங்கள். இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவோருக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயமாகக் கிடைக்கும்.
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ خَرَجُوا۟ مِن دِيَٰرِهِم بَطَرًۭا وَرِئَآءَ ٱلنَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ وَٱللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌۭ.
8:47. பெருமைக்காகவும், மக்கள் தம்மை ஒரு தியாகி என்று கருத வேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுவாழ்வில் ஈடுபட்டு, அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் நிறைவேறாதவாறு தீங்கிழைத்துக் கொண்டிருந்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்களுடைய செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
وَإِذْ زَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ ٱلْيَوْمَ مِنَ ٱلنَّاسِ وَإِنِّى جَارٌۭ لَّكُمْ ۖ فَلَمَّا تَرَآءَتِ ٱلْفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيْهِ وَقَالَ إِنِّى بَرِىٓءٌۭ مِّنكُمْ إِنِّىٓ أَرَىٰ مَا لَا تَرَوْنَ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ ۚ وَٱللَّهُ شَدِيدُ ٱلْعِقَابِ.
8:48. சமுதாயத்தைச் சீரழிக்கும் கூட்டத்தாரின் தலைவர்கள் செய்து வரும் தவறான செயல்கள் எல்லாம் அழகானவையே என்றும், தம்மை யாரும் அசைக்க முடியாது என்றும் தங்கள் படைவீரர்களிடம் கூறிக் கொண்டிருந்தார்கள். அப்படியும் ஆபத்துகள் ஏதாகிலும் வந்தால் அப்போது நாங்கள் உங்களுக்குத் துணைப் புரிவோம் என்றும் தைரியமூட்டி வந்தார்கள். ஆனால் களத்தில் சந்தித்த போது, அந்த விஷமிகள் அவர்களை விட்டு விலகிக் கொள்வதாகச் சொல்லி விட்டார்கள். “நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள் என்று இருக்கிறீர்களா? நீங்கள் தோல்வியையே சந்திப்பீர்கள். அவர்கள் எதிர் பார்க்காத தோல்வியே தமக்கு ஏற்படும் என்றே புலனாகிறது” என்று கூறி விடுவார்கள். அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதாகவும் கூறுவார்கள். அப்போது அவர்களுக்கு பயம் ஏற்பட்டு என்ன பலன்? அல்லாஹ்வின் தண்டனைகள் மிகவும் கடுமையானவை என்பதையே அந்த விஷமிகள் தெரிந்து கொள்வார்கள்.
إِذْ يَقُولُ ٱلْمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ غَرَّ هَٰٓؤُلَآءِ دِينُهُمْ ۗ وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌۭ.
8:49. மேலும் உயிருக்குப் பயந்து போரில் கலந்து கொள்ளாத சில நயவஞ்சகர்களும் இருந்தார்கள். அவர்கள் போர் வீரர்களைப் பார்த்து, “இவர்களுடைய மார்க்கம் இவர்களை மயக்கி ஏமாற்றி விட்டது” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் எண்ணிக்கையில் மிகச்சிலரே இருக்கும் இந்தப் படை, பலம் மிக்க எதிரிப் படையினரிடம் வெற்றி பெறும் வாய்ப்பு ஒருபோதும் இருக்காது என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முற்றிலும் ஏற்று அதன்படி போரிட்ட போது, அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்த வெற்றி நயவஞ்சகர்களைத் திகைப்பில் ஆழ்த்திவிட்டது. நிச்சயமாக அல்லாஹ்வின் வல்லமையும், ஞான உபதேசங்களும் அனைத்தையும் மிகைக்கக் கூடியவையாக உள்ளன என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
وَلَوْ تَرَىٰٓ إِذْ يَتَوَفَّى ٱلَّذِينَ كَفَرُوا۟ ۙ ٱلْمَلَٰٓئِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَٰرَهُمْ وَذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ.
8:50. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! உங்களுடைய பகைவர்களின் உயிர்கள் அவர்களை விட்டுப் பிரியும் போது, அவர்களை நீங்கள் பார்க்கும் சக்தி பெற்றிருந்தால், பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து, தாளா வேதனை அளிக்கும் நரகத்தைச் சுவையுங்கள் என்று கூறுவது போன்று இருக்கும்.
மரணத்தைச் சந்திப்பவர்களுக்குத் தான் இந்த வேதனைகளை அனுபவிக்க முடியுமே அன்றி, மற்றவர்கள் இதைப் பார்த்து உணர முடியாது. எனவே நயவஞ்சகர்களுக்குக் கிடைக்கும் வேதனை பற்றி இவ்வாசகம் சித்திரிக்கிறது.
ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّٰمٍۢ لِّلْعَبِيدِ.
8:51. இந்த தண்டனைகள் யாவும் அவர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக அல்ல. அவர்கள் காலம் காலமாக செய்து வந்த தவறான செயல்களின் விளைவாகவே இத்தகைய வேதனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. மாறாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்த மனிதருக்கும் எவ்வித அநியாயமும் செய்யப்பட மாட்டாது.
كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ ۗ إِنَّ ٱللَّهَ قَوِىٌّۭ شَدِيدُ ٱلْعِقَابِ.
8:52. இதே போன்ற நிலைதான், ஃபிர்அவ்னின் படைவீரர்களுக்கும் அவர்களுக்கு முன் இருந்தவர்களுக்கும் ஏற்பட்டது. அவர்களும் அல்லாஹ்வின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்கள் வந்த போது, அவற்றை ஏற்க மறுத்து பாவச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள். எனவே “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் பிடியில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தண்டனைகள் கடுமையானவை என்பதையும் பேராற்றல் மிக்கவை என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًۭا نِّعْمَةً أَنْعَمَهَا عَلَىٰ قَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۙ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ.
8:53. உலகிலுள்ள எந்தச் சமுதாயமானாலும் சரியே. அவர்களை அல்லாஹ் வேண்டும் என்றே தண்டிப்பதில்லை. அவர்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகளிலும் எவ்வித மாற்றங்களையும் கொண்டுவருவதில்லை. அவர்கள் எதுவரையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாழ்ந்து வருகிறார்களோ, அதுவரையில் அந்த அருட்கொடைகள் அவர்களுக்கு கிடைத்து வரும். ஆனால் அவர்கள் தம் போக்கை மாற்றிக் கொண்டால், அவர்களிடையே உள்ள ஆற்றல்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, அந்த அருட்கொடைகளைப் பெறும் வாய்ப்பையும் இழந்து விடுவார்கள். அல்லாஹ்விடம் அனைத்தையும் கேட்கும் வல்லமையும் அறிந்து கொள்ளும் பேராற்றலும் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுவே உலகம் நிலைத்திருக்கும் காலம் வரை அல்லாஹ்வின் நிரந்தர சட்டமாகும். (மேலும் பார்க்க 13:11)
كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَٰهُم بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّۭ كَانُوا۟ ظَٰلِمِينَ.
8:54. இதே போன்ற நிலைதான் ஃபிர்அவ்னின் சமுதாயத்தினருக்கும் அவனுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கும் ஏற்பட்டது. அவர்கள் தவறான வழியில் சென்றார்கள். அவர்களுக்கு நேர்வழியை காட்டத்தான் இறைத்தூதர்கள் வந்தார்கள். ஆனால் அவர்கள் இறை அறிவுரைகளை ஏற்று நடக்க மறுத்து பாவச் செயல்களை விட்டு விலகவில்லை. அதன் விளைவாக அவர்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டார்கள். அதேபோல் மூஸா நபி காலத்தில் ஃபிர்அவ்னின் படைவீரர்களும் நதியைக் கடக்கும் போது, ஆழமான வெள்ளத்தில் விழுந்து மாண்டு போனார்கள். காரணம் அவர்கள் மிகவும் தீயவர்களாகவே இருந்தார்கள். (விளக்கத்திற்குப் பார்க்க 7:136)
إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فَهُمْ لَا يُؤْمِنُونَ.
8:55. எனவே அல்லாஹ்வின் நியதிப்படி மிகவும் மோசமானவர்கள் யார் என்றால் அவனுடைய வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுபவர்களே ஆவர். மேலும் அவர்கள் அவனுடைய அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களே.
ٱلَّذِينَ عَٰهَدتَّ مِنْهُمْ ثُمَّ يَنقُضُونَ عَهْدَهُمْ فِى كُلِّ مَرَّةٍۢ وَهُمْ لَا يَتَّقُونَ.
8:56. இவர்களுடைய பொதுவாழ்வை எடுத்துக்கொண்டால், அவர்கள் மக்களுக்குக் கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவே மாட்டார்கள். இறைத்தூதர்கள் மூலம் அவர்கள் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றமாகவே செயல்படுகிறார்கள். “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப் படுவதில்லை.
فَإِمَّا تَثْقَفَنَّهُمْ فِى ٱلْحَرْبِ فَشَرِّدْ بِهِم مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ.
8:57. எனவே இத்தகைய சமூக விரோதிகளை முறியடிக்க நீர் போரிட நேர்ந்தால், அவர்களுக்கு ஆதவரவாகப் போரிடுபவர்களைத் தருணம் பார்த்து, சிதறடிக்கச் செய்து, பயந்து ஓடும்படி முழுபலத்துடன் தாக்குங்கள். அப்போதுதான் அவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும்.
وَإِمَّا تَخَافَنَّ مِن قَوْمٍ خِيَانَةًۭ فَٱنۢبِذْ إِلَيْهِمْ عَلَىٰ سَوَآءٍ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْخَآئِنِينَ.
8:58. மேலும் எதிரணியினர் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏதாவது செய்திருந்து, அவர்கள் அதை மீறி நடந்தால், நீங்களும் அதே அளவு அவர்களுக்கு எதிராகப் பதிலடி கொடுங்கள். அப்போது அந்த உடன்படிக்கையை நீங்களும் மீறுவதில் தவறு ஒன்றுமில்லை. காரணம், நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.
وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ سَبَقُوٓا۟ ۚ إِنَّهُمْ لَا يُعْجِزُونَ.
8:59. மேலும் இறை ஆட்சியமைப்புக்கு எதிராகப் போர் புரிபவர்கள், போர்நிறுத்த உடன்படிக்கை மூலம் தாங்கள் தோல்வி அடைவதிலிருந்து தப்பித்துக் கொண்டதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். தர்மத்தை நிலைநாட்ட ஏற்படுத்தப்படுத்துள்ள ஆட்சியமைப்பை பாதுகாக்கும் படை வீரர்களை தோற்கடிக்கவே முடியாது. (பார்க்க 4:76)
وَأَعِدُّوا۟ لَهُم مَّا ٱسْتَطَعْتُم مِّن قُوَّةٍۢ وَمِن رِّبَاطِ ٱلْخَيْلِ تُرْهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمْ وَءَاخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ ٱللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍۢ فِى سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ.
8:60. மேலும் பகைவர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக உங்களால் இயன்ற அளவு உங்களைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். போர்க் குதிரைகளைத் தக்கபடி பயிற்சி அளித்து திறமைமிக்க குதிரைகளாக ஆயத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்படியாகப் போருக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும், பயிற்சிப் பெற்ற வீரர்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பிற்கு எதிராகச் செயல்படுபவர்களையும், உங்களுடைய எதிரிகளையும் அச்சமடையச் செய்யலாம். அது மட்டுமின்றி நீங்கள் அறியாத அன்னிய நாட்டவர்களுக்கும் பயத்தை உண்டாக்கலாம். இதற்காக நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், அதன் பிரதிபலன்கள் உங்களுக்கு முழுமையாகவே வந்தடையும். அதில் சிறிதளவும் அநீதி செய்யப்பட மாட்டாது. இது அல்லாஹ்விடமிருந்து வரும் சொல்லாகும்.
۞ وَإِن جَنَحُوا۟ لِلسَّلْمِ فَٱجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.
8:61. மேலும் எதிரணியினர் சமாதானம் செய்துகொள்ள உங்களிடம் இணங்கி வந்தால், நீங்கள் அதற்குத் தகுந்தாற் போல் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள். ஆக ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மீது முழு நம்பிக்கைக் கொண்டு அதன்படியே செயல்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் கேட்கும் வல்லமையும் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ளும் வல்லமையும் அளவற்றவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
وَإِن يُرِيدُوٓا۟ أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ ٱللَّهُ ۚ هُوَ ٱلَّذِىٓ أَيَّدَكَ بِنَصْرِهِۦ وَبِٱلْمُؤْمِنِينَ.
8:62. அவர்கள் உங்களை ஏமாற்றுவதற்காக போர் நிறுத்த உடன்படிக்கை செய்திருந்தாலும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். இறை ஆட்சியமைப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் மூஃமின்களின் உதவியைக் கொண்டும் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا مَّآ أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ ٱللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُۥ عَزِيزٌ حَكِيمٌۭ.
8:63. ஏனெனில் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்களிடையே பாசப்பிணைப்பும் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பும் இருக்கும். உலகிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தாலும், அத்தகைய பாசப் பிணைப்பை அவர்களிடையே ஏற்படுத்தி இருக்கமுடியாது. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் அப்படிப்பட்ட பாசப் பிணைப்பை ஏற்படுத்துகிறது. அல்லாஹ்வின் இந்த மாபெரும் ஏற்பாடு, அனைத்தையும் மிகைத்ததாகவும் ஞானம் மிக்கதாகவும் இருக்கிறது.
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَسْبُكَ ٱللَّهُ وَمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ.
8:64. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! உமக்கும் உம்மைப் பின்பற்றி வரும் மூஃமின்களுக்கும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலே போதுமானதாக இருக்கிறது.
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَرِّضِ ٱلْمُؤْمِنِينَ عَلَى ٱلْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَٰبِرُونَ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌۭ يَغْلِبُوٓا۟ أَلْفًۭا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَفْقَهُونَ.
8:65. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! உம்மைப் பின்பற்றி வரும் மூஃமின்களுக்குப் போர் சம்பந்தப்பட்ட அனைத்து பயிற்சிகளையும் அளித்து, அவர்களிடையே உள்ள குறைகளை நீக்கி வருவீராக. இப்படிபட்ட பயிற்சி பெற்ற உறுதி மிக்கவர்கள் இருபது பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் உங்களில் இத்தகையவர்கள் நூறு பேர் இருந்தால் சமூக விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் ஆயிரம் பேரைக் கட்டுபடுத்த முடியும். ஏனெனில் மூஃமின்களை எதிர்த்துப் போரிடுபவர்கள் எதையும் சிந்தித்து முன்யோசனையுடன் செயல்படமாட்டார்கள். வெறும் உணர்ச்சி வேகத்தில் செயல்படும் அறிவிலிகளே.
ٱلْـَٰٔنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًۭا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌۭ صَابِرَةٌۭ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌۭ يَغْلِبُوٓا۟ أَلْفَيْنِ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ.
8:66. ஆனால் மூஃமின்களுள் தற்சமயம் சில குறைபாடுகளும் பலவீனங்களும் உள்ளன. எனவே ஒன்றுக்குப் பத்து பேரை கட்டுப்படுத்துவது என்பது இப்போது இயலாத காரியமாகும். மேலும் உங்களிடையே போர்த் தளவாடங்களும் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே ஒன்றுக்குப் பத்து என்ற விகிதத்தைக் குறைத்து ஒன்றுக்கு இரண்டு பேர் என்ற கணக்கில்தான் வெற்றிகொள்ள முடியும் என்று கணிக்கப்படுகிறது. எனவே போர் பயிற்சிப் பெற்ற வீரர் நூறு பேர் இருந்தால் அவர்களால் தற்சமயம் இருநூறு பேரைத்தான் வெற்றிக்கொள்ள முடியும். உங்களில் இத்தகையோர் ஆயிரம் பேர் இருந்தால் இறைவனின் நியதிப்படி பகைவர்கள் இரண்டாயிரம் பேரை வீழ்த்தலாம். உண்மை விஷயம் என்னவென்றால் அல்லாஹ்வின் உதவியும் நேசமும் தம் செயல் திட்டத்தில் நிலைத்திருந்து துணிந்து செயல்படும் வீரர்களுடன்தான் இருக்கும்.
مَا كَانَ لِنَبِىٍّ أَن يَكُونَ لَهُۥٓ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِى ٱلْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ ٱلدُّنْيَا وَٱللَّهُ يُرِيدُ ٱلْءَاخِرَةَ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌۭ.
8:67. மேலும் பகைவர்களைக் கொல்லாமல் அவர்களைக் கூடுமான வரையில் சிறைபிடித்து, அவர்களை வைத்து பேரம் பேசி செல்வங்களை ஈட்டலாம் என்ற எண்ணத்தில் போர் புரிவது சரியாகாது. காரணம் போரின் நோக்கமே சமூக விரோத சக்திகளை அடக்கி, சிறந்ததொரு ஆட்சியை மலரச் செய்வதே ஆகும். உங்களுள் சிலரின் எண்ணங்கள் தற்காலிக ஆதாயங்களைப் பெறவே நாடுகின்றன. ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டமோ தற்காலிக பலன்களுடன் வருங்கால நிலையான பலன்களையும் முன்வைத்து செயல்பட நாடுகிறது. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல் ஒவ்வொன்றும் ஞானத்தின் அடிப்படையைக் கொண்டதாகும்.
அதாவது சமூக விரோதிகளை சமுதாயத்தில் உலவ விட்டுவிட்டால், ஆட்சியமைப்பு நலத் திட்டங்களை சரிவர நிறைவேற்ற முடியாது. அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் நலத்திட்டங்கள் மக்களுக்குப் போய் சேராதவாறு தடுத்து வருவார்கள். எனவே அவர்களால் எதையும் செய்ய முடியாதவாறு ஒடுக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த ஆட்சியையும் சமுதாயத்தையும் உருவாக்க உதவிகரமாக இருக்கும்.
لَّوْلَا كِتَٰبٌۭ مِّنَ ٱللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَآ أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌۭ.
8:68. இதற்குமுன் உங்களில் சிலர் இப்படிப் பணத்தை வாங்கிக் கொண்டு பகைவர்களை விடுவித்து விட்டார்கள். இருப்பினும் ஆரம்பத்தில் அல்லாஹ்வின் சட்டம் இதை பெரிது படுத்தவில்லை. அவ்வாறு இல்லாமல் அச்செயலுக்கு அல்லாஹ் உடனே தண்டனை அளிப்பதாக இருந்திருந்தால் அவர்களை பெரிய வேதனைகள் பீடித்திருக்கும்.(16:61)
فَكُلُوا۟ مِمَّا غَنِمْتُمْ حَلَٰلًۭا طَيِّبًۭا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.
8:69. மாறாக போரில் வெற்றி பெற்ற பின், பகைவர்களிலிருந்து கிடைக்கின்ற செல்வங்களை நீங்கள் நியாயமான முறையில் (8:41ல் சொன்னது போல) பயன்படுத்தி கொள்ள அல்லாஹ்வின் சட்டத்தில் இடமுண்டு. அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எண்ணி அஞ்சுங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் உங்கள் அனைவரின் பாதுகாப்பு கருதியே உள்ளன என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும்.
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّمَن فِىٓ أَيْدِيكُم مِّنَ ٱلْأَسْرَىٰٓ إِن يَعْلَمِ ٱللَّهُ فِى قُلُوبِكُمْ خَيْرًۭا يُؤْتِكُمْ خَيْرًۭا مِّمَّآ أُخِذَ مِنكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.
8:70. இறைவழகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உங்களிடம் சரணடைந்திருக்கும் போர்க் கைதிகளிடம் அறிவித்து விடுங்கள். “உங்கள் உள்ளங்களில் நன்மைச் செய்யக் கூடிய ஆர்வம் இருப்பதாக இறை ஆட்சிமைப்பு அறிந்தால், உங்களிடமிருந்து ஈட்டுத் தொகையாகப் பெற்றுக் கொண்டதைவிட மேலானதை இந்த ஆட்சியமைப்பு உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடும். மேலும் உங்களுக்கு அனைத்துப் பாதுகாப்பு வசதிகளையும் செய்து தரும். இப்படியாக தீய செயல்களை விட்டு விலகி, நன்மையான செயல்களைச் செய்பவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பும் கருணையும் நிச்சயம் கிடைக்கும்” என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
وَإِن يُرِيدُوا۟ خِيَانَتَكَ فَقَدْ خَانُوا۟ ٱللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ.
8:71. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! ஒருவேளை உம்முடைய ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை துரோகம் செய்யும் எண்ணம் அவர்களிடமிருந்தால், அதைப்பற்றி தெரிந்துகொள்ள அல்லாஹ்வின் சட்டமும் மூஃமின்களும் போதுமானது. இதற்கு முன்பும் அவர்கள் மோசடி செயலில் இறங்கினார்கள். ஆனால் உம்மிடம் இருக்கும் பலம்வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டு அவர்களை சிறைபிடிக்க முடிந்தது. இப்போதும் அவர்களைப் பிடிப்பது சிரமமான காரியமல்ல. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்ளும் வல்லமைப் பெற்றதாக உள்ளது.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَوا۟ وَّنَصَرُوٓا۟ أُو۟لَٰٓئِكَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۚ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَمْ يُهَاجِرُوا۟ مَا لَكُم مِّن وَلَٰيَتِهِم مِّن شَىْءٍ حَتَّىٰ يُهَاجِرُوا۟ ۚ وَإِنِ ٱسْتَنصَرُوكُمْ فِى ٱلدِّينِ فَعَلَيْكُمُ ٱلنَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَٰقٌۭ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ.
8:72. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும் உயிர்களையும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களின்படி சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தவர்களும், இத்தகையவர்களுக்கு புகலிடம் அளித்து அவர்களை ஆதரித்து, உதவி செய்தவர்களும் ஒருவொருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள். யார் தங்கள் குடும்பமே பெரிது என எண்ணி நியாயமான காரணம் இல்லாமல் வீட்டிலேயே தங்கி விடுகிறார்களோ, அவர்களுடைய பாதுகாப்புக்கு இந்த ஆட்சியமைப்பு பொறுப்பு ஏற்காது. ஆனால் வயோதிகர் மற்றும் சிறுவர்கள் என்பது வேறு விஷயமாகும். (பார்க்க 4:75) எனினும் மார்க்க சம்பந்தமாக உங்களிடம் உதவி நாடி வந்தால் அவர்களுக்கு உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். அதே சமயம் இந்த உதவிகளை நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட சமுதாயத்தினருக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்பாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ ۚ إِلَّا تَفْعَلُوهُ تَكُن فِتْنَةٌۭ فِى ٱلْأَرْضِ وَفَسَادٌۭ كَبِيرٌۭ.
8:73. மேலும் மூஃமின்களிடையே பாசப்பிணைப்பு இருப்பது போல, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களிலும் ஒருவொருக்கொருவர் கூட்டு ஒப்பந்தம் இருக்கும். எனவே அவர்களை ஒடுக்க உமக்கு அளிக்கப்பட்ட கடமைகளை நீர் நிறைவேற்றா விட்டால் சமுதாயத்தில் குழப்பங்களும் கலவரங்களும் மிகைத்துவிடும்.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَوا۟ وَّنَصَرُوٓا۟ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُؤْمِنُونَ حَقًّۭا ۚ لَّهُم مَّغْفِرَةٌۭ وَرِزْقٌۭ كَرِيمٌۭ.
8:74. எனவேதான் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, அதன்படி சமுதாய மேம்பாட்டிற்காக தம் வீட்டையும் ஊரையும் அர்ப்பணித்து அயராது உழைப்பவர்களும், அத்தகையவர்களுக்குப் புகலிடம் அளித்து உதவி செய்பவர்களும் தான் உண்மையான மூஃமின்கள் என அறிவிக்கப்படுகிறது. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அத்தகையவர்களுக்கு அனைத்துப் பாதுகாப்பு வசதிகளும் கண்ணியம் மிக்க வாழ்வாதாரங்களும் கிடைக்கும். அதற்கு அரசு பொறுப்பு எடுத்துக்கொள்ளும்.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنۢ بَعْدُ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ مَعَكُمْ فَأُو۟لَٰٓئِكَ مِنكُمْ ۚ وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍۢ فِى كِتَٰبِ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ.
8:75. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு அவற்றின் செயல்திட்டங்கள் நிறைவேற தம்மை அர்ப்பணித்து, சமுதாய மேம்பாட்டிற்காக உங்களுடன் பணிபுரிபவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே ஆவர். அல்லாஹ்வின் வேத விதிமுறைப்படி அவர்களும் உங்களுடைய உறவினர்களே ஆவர். ஒவ்வொருவரும் மற்றவருக்கு மிக நெருக்கமானவர் ஆவார்கள். இப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டம் ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்கிறது.