بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

10:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْحَكِيمِ.

10:1. அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட இவ்வேத அறிவுரைகள், முழுக்க முழுக்க ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையே ஆகும்.


أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنْ أَوْحَيْنَآ إِلَىٰ رَجُلٍۢ مِّنْهُمْ أَنْ أَنذِرِ ٱلنَّاسَ وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِندَ رَبِّهِمْ ۗ قَالَ ٱلْكَٰفِرُونَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌۭ مُّبِينٌ.

10:2. தங்களுக்கிடையே வாழ்ந்து வந்த ஒருவருக்கு, இறைவனுடைய வழிகாட்டுதல்கள் இறக்கி அருளப்படுவது மிக வியப்பாக இருக்கின்றதா? அவர், மக்களின் தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்கிறார். இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செய்படுவதால் ஏற்படவிருக்கும் நற்பலன்களைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறார். இவ்வாறாக அவர் அறிவிப்பது அவர்களுக்கு மிகவும் வியப்பைத் தருகின்றதா? இதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள், இது மக்களை வசியப்படுத்தும் ஏமாற்று வேலையே என்று பேசிக் கொள்கிறார்கள்.
அதாவது அவர் சொல்வது போல் எதுவும் நிகழாது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அவர் இந்த விஷயங்களை எல்லாம் தன்னிச்சையாக சொல்லவில்லை. மாறாக


`

إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ يُدَبِّرُ ٱلْأَمْرَ ۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعْدِ إِذْنِهِۦ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ أَفَلَا تَذَكَّرُونَ.

10:3. அகிலங்கள் அனைத்தையும் பூமியையும் படைத்து, அதில் வாழும் அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கான ஏற்பாடுகளையும் செய்த ஏக இறைவனாகிய அல்லாஹ்விடமிருந்து வரும் சொல்லாகும். (20:4) இறைவனின் பரிபாலன அமைப்பு முறையை (System) ஆறு கால கட்டங்களாகப் பிரித்து படைக்கப்பட்டுள்ளன. (விளக்கத்திற்கு பார்க்க 7:54)
அதுமட்டுமின்றி அவற்றைப் படைத்து, ஒவ்வொரு படைப்பும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகளையும் நிர்ணயித்து, அவற்றைக் கட்டுக் கோப்பாகச் செயல்பட வைத்துள்ள அல்லாஹ்வின் சொல்லாகும்.
இவ்வாறு அவன் நிர்ணயித்த பின் அவற்றின் விதிமுறைகளை மாற்றி அமைக்கவோ, பரிந்துரை செய்து மாற்றவோ வேறு யாராலும் முடியாது.
இப்படிப்பட்ட வல்லமைப் பெற்ற இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழுங்கள். இந்த அளவுக்கு தெளிவாக்கிய பின்பும் நீங்கள் நல்லறிவுரைப் பெற மாட்டீர்களா?


إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًۭا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ إِنَّهُۥ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ لِيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ بِٱلْقِسْطِ ۚ وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ شَرَابٌۭ مِّنْ حَمِيمٍۢ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ.

10:4. எனவே நீங்கள் செய்துவரும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது யாராலும் மறுக்க முடியாத எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உண்மையே ஆகும்.
இதே அடிப்படையில் தான் மனித இனமும் படைக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விளைவுகள் ஏற்படும்படியே இந்த உலக அமைப்பு படைக்கப்பட்டுள்ளது.
எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்வோருக்கு அதற்குரிய நற்பலன்கள் கிடைத்து வரும். இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அதற்கு மாற்றமாகச் செயல்பட்டால் அவர்கள் வாழும் சமுதாயம் வேதனைகளை அனுபவிக்கும் படியாக மாறிவரும்.


هُوَ ٱلَّذِى جَعَلَ ٱلشَّمْسَ ضِيَآءًۭ وَٱلْقَمَرَ نُورًۭا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ مَا خَلَقَ ٱللَّهُ ذَٰلِكَ إِلَّا بِٱلْحَقِّ ۚ يُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْلَمُونَ.

10:5. எனவே உலகப் படைப்புகளைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். பிரகாசமாகச் சுடர்விட்டு ஒளிவீசும் சூரியனைக் கவனியுங்கள். சூரிய ஒளியின் சாயலினால் பளிச்சிடும் சந்திரனையும் கவனியுங்கள்.
நீங்கள் ஆண்டுகள் மற்றும் மாதங்களின் எண்ணிக்கையையும் தெரிந்து கொள்ள வளர்பிறை, தேய்பிறை என மாறி மாறி வருவதையும் கவனியுங்கள்.
இவை எல்லாம் வீண் விளையாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ளன என்று எண்ணிக் கொண்டீர்களா? இல்லை. மகத்தான ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே படைக்கப்பட்டன என்பதுதான் உண்மையாகும். அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து ஆராயும் மக்களுக்கு இந்த அத்தாட்சிகள் உதவும்.


إِنَّ فِى ٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَمَا خَلَقَ ٱللَّهُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَّقُونَ.

10:6. மேலும் இரவும் பகலும் மாறிமாறி வருவது போலவே நற்செயல்களும் தீய செயல்களும் கலந்திருக்கும் சமுதாயத்தில் இன்பங்களும் துன்பங்களும் மாறிமாறி வரும்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்கள், வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் யாவும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து, அதன்படி உலக நன்மைக்காகவே பாடுபடுவார்கள் (பார்க்க 3:190,191).
அவ்வாறு அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் சமுதாயம், பிரபஞ்சப் படைப்புகளில் மறைந்து கிடக்கும் பொக்கிஷங்களை அறிந்து, அவற்றை தம் வசப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளும்.
உலக படைப்புகளை ஆராய்ச்சி செய்து யார் வேண்டுமானாலும் அவற்றின் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். ஆனால் மனித செயல்களின் விளைவுகளைப் பற்றிய விதிமுறைகளை வானுலக வேதம்தான் அறிவிக்க முடியும். இதை அறிந்து கொள்ளும் ஞானம் மனிதனிடம் இல்லை. காரணம் அதன் விளைவுகள் உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. (10:11)


إِنَّ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا وَرَضُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَٱطْمَأَنُّوا۟ بِهَا وَٱلَّذِينَ هُمْ عَنْ ءَايَٰتِنَا غَٰفِلُونَ.

10:7. அல்லாஹ் நிர்ணயித்துள்ள மனித செயலுக்கேற்ற விளைவுகளைச் சந்திக்க நேரும் என்பதை நம்பாதவர்கள், (பார்க்க 6:31&32) தற்காலிக உலக சுகங்களைக் கொண்ட வாழ்க்கையை மட்டும் விரும்பி, அதில் அவர்கள் பேரானந்தம் அடைவார்கள். வருங்கால நிலையான பலன்களைப் பற்றி இறைவழிகாட்டுதலை கூறும் போது, அதை சிந்திக்காமல் அலட்சியமாய் இருந்து விடுகிறார்கள்.


أُو۟لَٰٓئِكَ مَأْوَىٰهُمُ ٱلنَّارُ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ.

10:8. எனவே இத்தகையவர்கள் வாழும் சமுதாயங்களில், தீய செயல்களின் விளைவாக அவர்களின் சமூக நலத்திட்டங்கள் யாவும் சீரழிந்து, தீக்கிரையாகி நாசமாகி விடுகின்றன. தனி நபர் விஷயத்தில் இந்த நரக வேதனைகள் மரணத்திற்குப் பின்பும் தொடர்கிறது.


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ يَهْدِيهِمْ رَبُّهُم بِإِيمَٰنِهِمْ ۖ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَٰرُ فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ.

10:9. இதற்கு மாறாக உலக படைப்புகளை ஆராய்ச்சி செய்வதோடு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களைத் தீட்டி உழைக்கும் சமூகத்தவர்கள், இறை வழிகாட்டுதலின் உண்மை நிலையை அனுபவ ரீதியாகவும் அறிந்து கொள்வார்கள்.
அவர்களுடைய உழைப்பின் பலனாக அச்சமுதாயம் சுவர்க்கத்திற்கு ஒப்பானதாக மாறி வரும். மேலும் வாழ்வாதார வசதிகளும் வற்றாத ஜீவநதி போல் பெருகிவரும் நிலையில், அங்கு வாழும் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இன்புற்று வாழ்வார்கள். தனிநபர் விஷயத்தில், இந்த சுவன வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரும்.


دَعْوَىٰهُمْ فِيهَا سُبْحَٰنَكَ ٱللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا سَلَٰمٌۭ ۚ وَءَاخِرُ دَعْوَىٰهُمْ أَنِ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

10:10. அத்தகைய சுவனத்திற்கு ஒப்பான சமுதாயங்களில் வாழும் மக்கள், அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் மனித கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டவை ஆகும் என்பதை அறிந்து, இறைவழிகாட்டுதலின் படியே செயல்படுவார்கள்.
அவர்களில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் சிறப்பான வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், “உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்று கூறிய வண்ணம் ஒருவருக்கொருவர் உபகாரம் செய்துகொண்டு, பிறர் நலம் பேணும் நற்பண்புகள் நிறைந்தவர்களாய் இருப்பார்கள்.
இப்படி ஒரு சிறந்த சமுதாயத்தில், “எல்லா பாராட்டும் போற்றுதலும் அகிலங்களைப் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” என்ற புகழாரம் எல்லா புறத்திலிருந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


۞ وَلَوْ يُعَجِّلُ ٱللَّهُ لِلنَّاسِ ٱلشَّرَّ ٱسْتِعْجَالَهُم بِٱلْخَيْرِ لَقُضِىَ إِلَيْهِمْ أَجَلُهُمْ ۖ فَنَذَرُ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ.

10:11. அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” யாவும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவின்படியே வெளிப்பட்டு வரும். நன்மைகளை அடைய மனிதன் அவசரப்படுவது போல, அவன் செய்யும் தீய செயல்களின் விளைவுகளையும் உடனுக்குடன் ஏற்படும்படி இறைவன் செய்திருந்தால், எப்போதோ அவர்களுடைய வாழ்வு முடிவு பெற்றிருக்கும்.
ஆனால் மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் வெளிப்பட இறைவன் புறத்திலிருந்து காலத் தவணைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. (பார்க்க 16:61) எனவே இறைவன் நிர்ணயித்துள்ள செயல்களின் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை நம்பாதவர்கள், (10:7) வழிகேட்டிலேயே தட்டழிந்து திரிய வேண்டியது தான்.


وَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوْ قَاعِدًا أَوْ قَآئِمًۭا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَآ إِلَىٰ ضُرٍّۢ مَّسَّهُۥ ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

10:12. மனிதன் சாய்ந்திருக்கும் போதோ, படுத்திருக்கும் போதோ, அமர்ந்திருக்கும் போதோ, அல்லது நின்ற நிலையில் இருக்கும் போதோ, அவனுக்கு துன்பம் ஏதேனும் நேர்ந்தால், அல்லாஹ்வின் ஏற்பாடுகளில் உள்ள மருத்துவ வழிமுறைகளைக் கொண்டே அந்த துன்பத்திலிருந்து நிவாரணம் பெற முடியும். அவன் அத்துன்பத்திலிருந்து விடுபட்டு விட்டால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எதுவும் நடக்காதது போலவே இருந்து விடுகிறான்.
இவ்வாறு வரம்புமீறி நடப்பவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் எல்லாம் அழகாகத் தெரிகின்றன. ஆனால் இவையே அவர்களுடைய தீராத் துயரங்களுக்குக் காரணிகளாக ஆகி வருவது அவர்களுக்குப் புரிவதில்லை.
துன்பங்கள் நேரும் போது, அவை எதனால் ஏற்படுகின்றன என்பதையும் சிந்திப்பதில்லை. அவற்றிலிருந்து விடுபட்டாலும் தம் சுயஅறிவைக் கொண்டே விடுபட்டு விட்டதாக எண்ணி மிதப்பில் இருந்து விடுகின்றான். உதாரணத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற, அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கப் பெற்ற மூலிகை மருந்து மற்றும் இரசாயண மருந்துகளை கொண்டே நிவாரணம் பெற்றதைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இவையாவும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளின் மூலம் கிடைத்தவையே என்பதை அறிந்து நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்ள வேண்டாமா?


وَلَقَدْ أَهْلَكْنَا ٱلْقُرُونَ مِن قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا۟ ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ وَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلْقَوْمَ ٱلْمُجْرِمِينَ.

10:13. இப்படியாக உங்களுக்கு முன் வாழ்ந்த எத்தனையோ தலைமுறையினர், அநியாய அக்கிரமச் செயல்களில் ஈடுபட்டிருந்ததன் விளைவாக அல்லாஹ்வின் நியதிப்படி அழிவை சந்தித்துக் கொண்டனர். அவர்களிடம் வந்த இறைத்தூதர்கள் யாவரும் அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெளிவான ஆதாரங்களுடன் விளக்கினார்கள். ஆனால் அவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆக குற்றம் புரியும் மக்களுக்கு தீய விளைவுகள் ஏற்படும்படி நடைமுறைச் சட்டங்கள் (System) ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய சட்டங்களாகும். அதிலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது.


ثُمَّ جَعَلْنَٰكُمْ خَلَٰٓئِفَ فِى ٱلْأَرْضِ مِنۢ بَعْدِهِمْ لِنَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ.

10:14. அவர்களுக்குப் பின் அவர்களுடைய பின்தோன்றலாக நீங்கள் வந்துள்ளீர்கள். நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதும் இவ்வாறே கண்காணிக்கப்படும்.
ஆக நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்களோ, அவ்வாறே உங்களுக்கும் அவற்றின் பலன்கள் கிடைத்து வரும். ஏனெனில் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற விதிமுறைகள் எல்லோருக்கும் பொதுவானதாகும். எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்றே ஆகும்.


وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَاتُنَا بَيِّنَٰتٍۢ ۙ قَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا ٱئْتِ بِقُرْءَانٍ غَيْرِ هَٰذَآ أَوْ بَدِّلْهُ ۚ قُلْ مَا يَكُونُ لِىٓ أَنْ أُبَدِّلَهُۥ مِن تِلْقَآئِ نَفْسِىٓ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ ۖ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ.

10:15. இப்போதும் அதே போன்ற தெளிவான ஆதாரங்களை இந்த இறைத்தூதர் மக்கள் முன் சமர்ப்பிக்கும் போது, நாம் நிர்ணயித்த விதிமுறைகளின் படி எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நம்பாதவர்கள், (விளக்கத்திற்குப் பார்க்க 6:31-32) இது அல்லாத வேறு வாசகங்களைக் கொண்ட குர்ஆனைக் கொண்டு வரும்படியும், அல்லது அதை மாற்றி விடும் படியோ உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு, “என் விருப்பம் போல் அதை மாற்றிவிட எனக்கு எந்த உரிமையும் இல்லை. எனக்கு வஹீ மூலமாகக் கிடைக்கின்ற வழிகாட்டுதலை பின்பற்றுவதைத் தவிர வேறெதையும் பின்பற்றுவதற்கு எனக்கு உரிமை இல்லை. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டால் “மனித செயல்களின் விளைவுகள்” என்ற பிடியில் நானும் சிக்கி வேதனைகளுக்கு ஆளாவேன். நிச்சயமாக நான் அதற்குப் பயப்படுகிறேன்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.
கவனித்தீர்களா? முஹம்மது நபி(ஸல்) அவர்கள் செய்யும் அறிவுரைகள் யாவும் தன்னிச்சையாகச் சொல்லி வருவதாக எண்ணி, அதை மாற்றியமைத்துக் கொடுக்கும்படி மக்கள் அவரிடம் கேட்கிறார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் + குர்ஆனை மட்டுமே போதித்து வந்தார்கள் என்பதற்கும் இந்த வாசகமே ஆதாரமாக விளங்குகிறது. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டால் அதன் விளைவுகளின் பிடியில் தானும் சிக்கி வேதனைக்கு ஆளாவேன் என்று சொல்வதையும் கவனியுங்கள். அதாவது அல்லாஹ்வின் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதே ஆகும் என்பதையும் கவனியுங்கள். அதில் நபிமார்களும் விதிவிலக்கு அல்ல.


قُل لَّوْ شَآءَ ٱللَّهُ مَا تَلَوْتُهُۥ عَلَيْكُمْ وَلَآ أَدْرَىٰكُم بِهِۦ ۖ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًۭا مِّن قَبْلِهِۦٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ.

10:16. நபியே! அவர்களிடம், “நான் உங்களோடு நீண்ட காலமாக வாழ்ந்திருக்கிறேன். இதற்கு முன் எப்போதாவது இப்படிப்பட்ட விஷயங்களை உங்களிடம் சொல்லி இருக்கின்றேனா? அல்லது எப்போதாவது நான் பொய் பேசி இருக்கின்றேனா? இப்போது இறைவழிகாட்டுதல்களை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்றால் அவையாவும் அல்லாஹ்வின் செயல்திட்டப்படி சொல்லப்பட்ட விஷயங்களாகத் தானே இருக்க முடியும்? அவ்வாறு அல்லாஹ்வின் செயல்திட்டம் இல்லாதிருந்தால், நான் உங்களிடம் இப்படிப்பட்ட விஷயங்களை அறிவித்து இருக்கமுடியுமா? இதைப் பற்றி நீங்களே சுயஅறிவோடு சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறுவீராக.
எனவே நான் அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி இப்படிப்பட்ட அறிவுரைகளைத் தன்னிச்சையாக கூறிவருவதாக எண்ணாதீர்கள். பொய், பித்தலாட்டம் என்பது என் வாழ்வில் இருந்ததே இல்லை என்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்.


فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓ ۚ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْمُجْرِمُونَ.

10:17. ஏனெனில் அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது இறைச் செயல்திட்டங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவனை விட பெரிய அநியாயம் செய்பவர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும், தீய வழியில் செல்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள் என்பதையும் நான் அறிந்தே இருக்கிறேன்.


وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَٰٓؤُلَآءِ شُفَعَٰٓؤُنَا عِندَ ٱللَّهِ ۚ قُلْ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ ۚ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ.

10:18. ஆனால் அம்மக்களோ, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, எந்த நன்மையும் தீமையும் செய்ய இயலாதவற்றை தெய்வங்களாகப் பாவித்து, அவற்றை வணங்கி வருகிறார்கள். அதைப் பற்றிக் கேட்டால், “அவை நமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்து, நம் தேவைகளை நிறைவேற்றித் தரும்” என்று கூறுகிறார்கள். ஆனால் வானங்களிலும் இப்பூமியிலும் நடப்பவற்றில் அல்லாஹ்வுக்குத் தெரியாத விஷயம் ஏதாவது இருக்கிறதா? இத்தகைய பேராற்றல்கள் அந்த கற்பனைத் தெய்வங்களுக்கு உண்டா? உண்மை இவ்வாறு இருக்கும் போது, உங்கள் தேவைகளை அல்லாஹ்வுக்கு அறிவிக்க அவற்றின் உதவி எதற்கு? அல்லாஹ்வைப் பற்றி இவர்கள் எண்ணி வைத்திருப்பதை விட, அவன் மிக மிக உயர்ந்த பேராற்றலுடையவன் ஆவான். இதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தி விடுங்கள்.
அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் நிறைவேற்றி சிறப்பான சமுதாயமாக விளங்க, ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் ஒருமித்த கொள்கையுடைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அதற்காக அனைவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வாழ முன்வர வேண்டும். இப்படியாக மனித இனம் ஒன்றே என்ற மனப்பான்மை ஏற்படும். இல்லையெனில் "பலதரப்பட்ட சமுதாயங்கள்" - "பலதெய்வங்கள்" - "பல வழிபாடுகள்" என்று ஏற்பட்டு கருத்து வேற்றுமைகளை உருவாக்கி அவை மக்களின் ஒளிமயமான வாழ்வின் பாதையில் தடைக் கற்களாக நிற்கும். ஆக


وَمَا كَانَ ٱلنَّاسُ إِلَّآ أُمَّةًۭ وَٰحِدَةًۭ فَٱخْتَلَفُوا۟ ۚ وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ.

10:19. ஆதி காலத்தில் மனிதன் ஓரினத்தவனாகவே ஒற்றுமையுடன் தான் வாழ்ந்து வந்தான். (மேலும் பார்க்க 2:213) ஆனால் காலப்போக்கில் அவனுள் வளர்ந்து வந்த சுயநலப்போக்கு, அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டது. (பார்க்க 2:36) மனிதனுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு விட்டதால், அவர்களிடையே ஏற்படும் வேற்றுமைகளையும் பகைமையையும் நீக்கி, சிறப்பாக வாழ்வதற்குரிய வழிகாட்டுதல்களை நபிமார்கள் மூலம் அளித்துவிட வேண்டும் என்பது அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். (பார்க்க 2:38) அவ்வாறில்லாமல் மனிதனையும் மற்ற உயிரினங்கள் வாழ்வது போன்று, தம் இயல்பின் அடிப்படையில் வாழும்படி செய்வதாக இருந்திருந்தால், எப்போதோ அவ்வாறு செய்திருக்க முடியும். அப்படி ஒரு நிலையில், மனிதனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் பறிபோயிருக்கும். அவன் இவ்வுலகில் எந்த வளர்ச்சியையும் கண்டிருக்க மாட்டான்.
இந்த வேற்றுமைகளையும் பகைகளையும் களைவதற்காகவே அவ்வப்போது நபிமார்கள் வந்தார்கள் (பார்க்க 2:213) அவ்வாறு வரும் நபிமார்களின் அறிவுரைகளை ஏற்க விரும்பாதவர்கள் ஏதாவது அற்புதத்தை நிகழ்த்திக் காட்டி, தன் மகத்துவத்தை நிரூபிக்குமாறு சொல்வதும் பழக்கமாக இருந்து வந்துள்ளது.


وَيَقُولُونَ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌۭ مِّن رَّبِّهِۦ ۖ فَقُلْ إِنَّمَا ٱلْغَيْبُ لِلَّهِ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ.

10:20. இப்போதும் இம்மக்கள், “இவரை இறைத்தூதராக ஏற்றுக் கொள்வதற்கு இறைவனிடமிருந்து அத்தாட்சி ஏதாவது வந்திருக்கக் கூடாதா?” என்கின்றனர். அவர்களிடம்,“உங்கள் செயல்களுக்கு இறைவன் நிர்ணயித்துள்ள விளைவுகளைப் பற்றி தெரியப்படுத்தவே நான் வந்துள்ளேன். அந்த விளைவுகள் தற்சமயம் உங்கள் அறிவுப் புலன்களுக்கு எட்டாமல் மறைவாக இருக்கின்றன. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே நீங்கள் இதை ஏற்காவிட்டால் உங்கள் செயல்களின் விளைவுகளை எதிர் பார்த்திருங்கள். நானும் உங்களுடனே இருக்கிறேன். நான் இறைச் செயல்திட்டப் படி செயல்பட்டு அதன் பலன்களை எதிர்பார்க்கிறேன்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.


وَإِذَآ أَذَقْنَا ٱلنَّاسَ رَحْمَةًۭ مِّنۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌۭ فِىٓ ءَايَاتِنَا ۚ قُلِ ٱللَّهُ أَسْرَعُ مَكْرًا ۚ إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ.

10:21. அந்த விளைவுகளை உடனே காணவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். அப்படியும் அவர்களுக்குத் துன்பம் ஏதேனும் ஏற்பட்டால் அல்லாஹ்வின் வழிமுறைகளைப் பின்பற்றித்தான் அதிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். (பார்க்க 10:12) அதிலிருந்து நிவாரணம் கிடைத்த பின் பழையபடி முறையற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய தீய செயல்களே அல்லாஹ்வின் நியதிப்படி விரைவில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்களுக்கு அறிவித்து விடுங்கள். மேலும் அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்யும் பிரபஞ்ச இயற்கை சக்திகள் அவர்களைச் சூழ்ந்தே இருக்கின்றன என்பதையும் அறிவித்து விடுங்கள்.


هُوَ ٱلَّذِى يُسَيِّرُكُمْ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۖ حَتَّىٰٓ إِذَا كُنتُمْ فِى ٱلْفُلْكِ وَجَرَيْنَ بِهِم بِرِيحٍۢ طَيِّبَةٍۢ وَفَرِحُوا۟ بِهَا جَآءَتْهَا رِيحٌ عَاصِفٌۭ وَجَآءَهُمُ ٱلْمَوْجُ مِن كُلِّ مَكَانٍۢ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ ۙ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ لَئِنْ أَنجَيْتَنَا مِنْ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ.

10:22. அவர்களுடைய அவசரப் புத்தியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் பயணங்களின் சமயம் அவர்களை நீங்கள் பார்க்கலாம். தரைவழிப் பயணமோ கடல்வழி பயணமோ அல்லாஹ்வின் நியதிப்படியே அவை நடைபெற்று வருகின்றன. கடல் பயணங்களில் தமக்குச் சாதகமான திசையில் காற்று வீசும் போது, அவர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அதே காற்று புயலாக மாறும் போது பதறிப்போய், “அகப்பட்டுக் கொண்டோமே! இதிலிருந்து தப்பிக்க வழி இல்லையா?” என புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். அப்போது தான் அவர்களுக்கு அல்லாஹ்வின் நினைவு வரும். எனவே தூய உள்ளம் கொண்டவர்களைப் போல், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தனை செய்வார்கள்.


فَلَمَّآ أَنجَىٰهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ ۗ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَىٰٓ أَنفُسِكُم ۖ مَّتَٰعَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

10:23. அவ்வாறே அல்லாஹ்வின் நியதிப்படி அவர்கள் அந்த துயரத்திலிருந்து மீண்டுவிட்டால், அவர்கள் செய்த பிரார்த்தனைகளை எல்லாம் மறந்து விடுவார்கள். பழையபடி சமுதாயத்தில் அநியாய அக்கிரமச் செயல்களையே செய்து வருவார்கள். இத்தகைய தீய செயல்களால் அவர்களுக்கு நேரவிருக்கும் கேடுகளைப் பற்றி எடுத்துச் சொன்னால், அவர்கள் செவி சாய்க்க மாட்டார்கள். எனவே தான் அவர்களுக்குக் கிடைக்கின்ற சுகமான வாழ்வு சொற்ப காலத்திற்கே என்றாகிவிடுகிறது. அதன் பின் இறுதியாக அவர்களுடைய தீய செயல்களின் விளைவுகள் யாவும் அல்லாஹ் நிர்ணயித்த சட்டத்தின் படியே ஏற்பட்டு, துன்பங்களுக்கு ஆளாகி விடுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு இந்த முன்னெச்சரிக்கை எல்லாம் நினைவிற்கு வரும்.
அப்போது நினைவுக்கு வந்து என்ன பயன்? எல்லாமே முடிந்து விடுமே! அவர்களுடைய செயல்களின் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க திட்டமிடும் மனிதன், தன் தீயச் செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க திட்டமிடுவதில்லை. இந்த விளைவுகள் மனிதச் சிந்தனைக்கு அப்பாற்பட்டு மறைவாக இருப்பதால், (பார்க்க 10:20) இறைவழிகாட்டுதல்கள் அவற்றைத் தெளிவு படுத்துகின்றன.


إِنَّمَا مَثَلُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ مِمَّا يَأْكُلُ ٱلنَّاسُ وَٱلْأَنْعَٰمُ حَتَّىٰٓ إِذَآ أَخَذَتِ ٱلْأَرْضُ زُخْرُفَهَا وَٱزَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَآ أَنَّهُمْ قَٰدِرُونَ عَلَيْهَآ أَتَىٰهَآ أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًۭا فَجَعَلْنَٰهَا حَصِيدًۭا كَأَن لَّمْ تَغْنَ بِٱلْأَمْسِ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.

10:24. ஆக தற்காலிக சுக வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழும் சமுதாயத்தை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். இறைவனின் நியதிப்படி வானிலிருந்து மழை பொழிகிறது. அதைக் கொண்டு மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரங்கள் கிடைக்கின்றன. பல வகையான பயிர்களும் தானியங்களும் விளைகின்றன. இப்படியாகப் பூமி பசுமையுடன் அழகாகக் காணப்படுகிறது. அந்நிலத்தின் சொந்தக்காரர்கள், அதன் விளைச்சல்கள் யாவும் தமக்கு மட்டுமே சொந்தம் என நினைத்தார்கள். அச்சமயம் அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாய் இரவிலோ பகலிலோ சூறாவளிக் காற்று, புயல், வெள்ளம் போன்றவை ஏற்பட்டு அவை அழிந்து, இதற்குமுன் அங்கு எதுவுமே இல்லாதது போல் ஆகிவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அவர்களுக்கு எந்த அளவுக்கு மனவேதனை இருக்கும்? இவ்வாறே சிந்தித்துணரும் மக்களுக்கு இது போன்ற உதாரணங்களின் மூலம் நடக்கவிருக்கும் உண்மை நிலையை விளக்குகிறோம்.
அதாவது மனிதன் காலம் காலமாக உழைத்து, தற்காலிக சுக வாழ்வையே நோக்கமாகக் கொண்டு சுயநலத்துடன் வாழ்ந்தால், அங்கு தீயச் செயல்களும், அவற்றின் விளைவுகளும் கூடவே வளர்ந்து வரும். அத்தீய செயல்களின் விளைவாக எதிர்பாராத விதமாக சண்டை சச்சரவு, கலவரம் மற்றும் போர் போன்றவை ஏற்பட்டு அந்த சமுதாயம் அழிந்து போவதற்குக் காரணமாகி விடும். அப்போது அவர்களுக்கு எந்த அளவிற்கு மனவேதனை எற்படும் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்படியொரு நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே தற்காலிக சுகமான வாழ்வுடன், வருங்கால நிலையான பலன்களையும் நோக்கமாகக் கொண்டு வாழ இறைவழிகாட்டுதல் நாடுகிறது. (மேலும் பார்க்க 2:266)


وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَىٰ دَارِ ٱلسَّلَٰمِ وَيَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

10:25. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் பேணிப் பாதுகாத்து, சாந்தியும் சமாதானமும் கொண்ட சமுதாயத்தை உருவாக்கிடவே அழைக்கின்றன. எனவே அவற்றை செவியேற்று அதன்படி செயல்பட விரும்புவோருக்கு மட்டும் தான் நேரான வழிகள் கிடைத்துவரும். அதுமட்டுமின்றி


۞ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ ٱلْحُسْنَىٰ وَزِيَادَةٌۭ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌۭ وَلَا ذِلَّةٌ ۚ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

10:26. ஆக்கப்பூர்வமான நன்மையான அழகிய செயல்களைச் செய்வோருக்குத் தான் அவர்களின் உழைப்பிற்குரிய பலன்கள் கிடைத்து வரும். அந்த நன்மைகள் மென்மேலும் வளர்ந்து வரும். அவர்கள் எப்போதும் இன்புற்று முக மலர்ச்சியுடன் காணப்படுவார்கள். அவர்களுக்கு எத்தகைய இழிவும் ஏற்படாது. அத்தகையவர்கள் தாம் சுவனத்திற்கு ஒப்பான வாழ்விற்கு உரியவர்கள் ஆவார்கள். அவர்கள் எதுவரை இறைவழிகாட்டுதலின் படி செயல்படுகிறார்களோ, அதுவரையில் அவர்களுக்கு சந்தோஷமான பாதுகாப்பான வாழ்வு தொடர்ந்து கிடைத்து வரும். (பார்க்க 8:53)


وَٱلَّذِينَ كَسَبُوا۟ ٱلسَّيِّـَٔاتِ جَزَآءُ سَيِّئَةٍۭ بِمِثْلِهَا وَتَرْهَقُهُمْ ذِلَّةٌۭ ۖ مَّا لَهُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍۢ ۖ كَأَنَّمَآ أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطَعًۭا مِّنَ ٱلَّيْلِ مُظْلِمًا ۚ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

10:27. மறுபுறம் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு, தீமையே விளைவாக வந்தடையும். அவர்கள் வாழ்வில் இழிவும் இருளும் சூழ்ந்து கொள்ளும். அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படும் இந்த தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இருக்க மாட்டார்கள். காலம் செல்லச் செல்ல அவர்கள் வாழ்வில் மென்மேலும் இருள் சூழ்ந்து கொண்டே சென்றுவிடும். (பார்க்க 24:40) அவர்களிடம் எவ்வித முக மலர்ச்சியும் இருக்காது. இதுவே வேதனை மிக்க நரக நெருப்பின் வாழ்வு என்பதாகும். அதில் அவர்கள் என்றென்றும் இருக்க வேண்டிவரும்.


وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًۭا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا۟ مَكَانَكُمْ أَنتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ ۖ وَقَالَ شُرَكَآؤُهُم مَّا كُنتُمْ إِيَّانَا تَعْبُدُونَ.

10:28. மேலும் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்கள் செய்து வந்த செயல்களைப் பற்றி விசாரணை செய்யும் காலக் கட்டம் வந்தே தீரும். அப்போது அல்லாஹ்வுக்கு இணையாக வணங்கி வந்தவர்களையும், அவர்கள் வணங்கிய இறந்துப் போன மகான்களையும் தத்தம் இடத்தில் இருக்கும்படி சொல்லப்படும். மேலும் அவர்கள் தனித்தனியே பிரித்து நிறுத்தப்படுவார்கள். அப்போது அவர்கள் வணங்கி வந்த அந்த மகான்கள், “நீங்கள் எங்களை வணங்கி வருமாறு நாங்கள் ஒரு போதும் கூறவே இல்லையே” என்று சொல்லி விடுவார்கள்


فَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنَنَا وَبَيْنَكُمْ إِن كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغَٰفِلِينَ.

10:29. “நீங்கள் யாரை வணங்கி வந்தீர்கள். நீங்கள் எங்களை வணங்கி வந்தீர்களா இல்லையா என்பது பற்றி எல்லாம் எங்களுக்கு எதுவுமே தெரியாது. இதற்கு அல்லாஹ்வின் சாட்சியே போதுமானதாகும்” என்று அந்த மகான்கள் சொல்லி விடுவார்கள்.


هُنَالِكَ تَبْلُوا۟ كُلُّ نَفْسٍۢ مَّآ أَسْلَفَتْ ۚ وَرُدُّوٓا۟ إِلَى ٱللَّهِ مَوْلَىٰهُمُ ٱلْحَقِّ ۖ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ.

10:30. எனவே அவர்களில் ஒவ்வொருவரும், தாம் ஏற்கனவே செய்து வந்த செயல்களின் விளைவுகளை கண்கூடாகப் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுடைய செயல்களுக்குரிய தண்டனைகள் யாவும் அல்லாஹ் நிர்ணயித்த சட்டத்தின்படியே கிடைக்கும். அப்போது அவர்கள் வணங்கி வந்த மகான்கள் எல்லாம் அவர்களை விட்டு மறைந்து விடுவார்கள். அதாவது நன்மையான செயல்கள் என்று அவர்களே நினைத்துக் கொண்டு செய்தவை யாவும் பலன் அளிக்கக் கூடியதாக இல்லை என்பதை உணர்வார்கள்.


قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ أَمَّن يَمْلِكُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَمَن يُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَيُخْرِجُ ٱلْمَيِّتَ مِنَ ٱلْحَىِّ وَمَن يُدَبِّرُ ٱلْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ ٱللَّهُ ۚ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ.

10:31. அவர்களிடம், வானங்களிலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார் என்று கேளுங்கள். உங்களிடம் உள்ள கேட்கும் சக்தியையும், பார்க்கும் சக்தியையும் அளித்தது யார் என்று கேளுங்கள். இவ்வுலகில், உயிரற்ற நிலையில் இருப்பவற்றை உயிரோட்டமடையவும் (பார்க்க 29:63) உயிருள்ளவற்றை உயிரற்ற நிலைக்கும் (29:57) கொண்டு செல்வதும் யார் என்றும் கேளுங்கள். சுருங்கச் சொன்னால் அகிலங்கள் அனைத்திலும் உள்ளவற்றை மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு செயல்படுத்துபவன் யார் என்று கேளுங்கள். இந்த கேள்விகளுக் கெல்லாம் அவர்கள் தரும் ஒரே பதில் “அல்லாஹ்தான்” என்பதாக இருக்கும். உண்மை இவ்வாறு இருக்க, அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி ஏன் நடக்க முன்வருவதில்லை என்று கேளுங்கள்.
உயிரற்ற நிலையில் இருக்கும் பூமி, மழை பொழிந்ததும் உயிரோட்டமாக மாறிவிடுகிறது. மழை இல்லாமல் போனால் உயிரற்ற நிலைக்கு மாறிவிடுகிறது. உயிரற்ற நிலையிலிருக்கும் விதை செடியாகி மரமாகி உயிரோட்டமுள்ளதாக மாறிவிடுகிறது. அதே மரத்திலிருந்து வெளியாகும் விதைகள் உலர்ந்து உயிரற்றதாக ஆகிவிடுகிறது.


فَذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمُ ٱلْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ ٱلْحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ.

10:32. இப்படியாக உங்களுக்காக அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்லமை உடையவன் தான் அல்லாஹ். இதுதான் உண்மையுமாகும். இத்தகைய வல்லமையுடைய அல்லாஹ்விடமிருந்து அருளப்படுகின்ற வழிகாட்டுதல்களே, மனிதனின் சிறப்பான வாழ்விற்கு சரியான பாதையைக் காட்டவல்லது. இதை விட்டுவிட்டால் உங்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு என்ன கிடைக்கும்? ஆக நீங்கள் எந்தத் இலக்கை நோக்கி உங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறீர்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

كَذَٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ فَسَقُوٓا۟ أَنَّهُمْ لَا يُؤْمِنُونَ.

10:33. இதையும் மீறி அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்கவில்லை என்றால், ஏற்கனவே நிலை நிறுத்தப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளின் படியே தத்தம் செயல்களின் விளைவுகளைச் சந்தித்துக் கொள்ளட்டும். மேலும் அத்தகையவர்கள் நேர்வழியின் பக்கம் வரும் வாய்ப்பை இழக்க நேரிடும்.


قُلْ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ ۚ قُلِ ٱللَّهُ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ.

10:34. அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக உருவாக்கி வணங்கி வருகின்ற கற்பனைத் தெய்வங்கள் இவ்வுலகில் உள்ள படைப்புகளை உருவாக்கும் வல்லமை பெற்றதா? அல்லது அவை அவற்றைப் பரிபாலிக்கும் ஆற்றலாவது பெற்றுள்ளதா? இந்த உலகப் படைப்புகளை எல்லாம் யாதொரு துணையுமின்றி உருவாக்கியது அல்லாஹ்தானே. உண்மை இவ்வாறிருக்க அவனுடைய வழிகாட்டுதலை விட்டுவிட்டு எங்கு திசைமாறி செல்கிறீர்கள்?” என்று கேளுங்கள்.


قُلْ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ ۚ قُلِ ٱللَّهُ يَهْدِى لِلْحَقِّ ۗ أَفَمَن يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّىٓ إِلَّآ أَن يُهْدَىٰ ۖ فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ.

10:35. மேலும் அவர்களிடம், “அந்தக் கற்பனைத் தெய்வங்களால் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு நேர் வழியை காட்டத் தான் முடியுமா? அத்தகைய வழிகாட்டுதலை அல்லாஹ் ஒருவனால் தானே தர முடியும். எனவே மனிதனின் சிறப்பான வாழ்விற்கு நேர்வழியைக் காட்டக் கூடிய வல்லமை உடையவனைப் பின்பற்றுவீர்களா? அல்லது தனக்கே வழிகாட்டுதல்கள் தேவை என்ற நிலையில் இருப்பவற்றை, தெய்வங்களாகப் பாவித்து, அவற்றின் பின்னால் செல்வீர்களா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைப் பற்றி எல்லாம் தெளிவான ஆதாரங்கள் வந்தபின்பும் நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.


وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا ۚ إِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ.

10:36. ஆக அவர்களில் பெரும்பாலோர் கடைப்பிடித்து வருவதெல்லாம் வெறும் யூகங்களையே அன்றி வேறில்லை. இத்தகைய யூகங்கள் யாவும் மனிதனின் நிஜ வாழ்வில் ஒரு பலனையும் தராது. எனவே அவை இவ்வுலகில் நீடித்து நிலைக்காது. அவர்கள் செய்து வரும் செயல்கள் எல்லாம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இல்லை. அதாவது அவரவர் செயல்களின் விளைவுகள் வெளிப்பட்டே தீரும். இதையும் அவர்களிடம் எடுத்துரையுங்கள்


وَمَا كَانَ هَٰذَا ٱلْقُرْءَانُ أَن يُفْتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصْدِيقَ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ ٱلْكِتَٰبِ لَا رَيْبَ فِيهِ مِن رَّبِّ ٱلْعَٰلَمِينَ.

10:37. மாறாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்ற இந்தக் குர்ஆன் அவ்வாறு யூகங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை அல்ல. இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயமும் உண்மையே என்று அவர்களிடையே நிரூபணம் ஆகக் கூடிய வகையில் உள்ளன. (பார்க்க 41:53) இவையாவும் தெளிவாக தொகுத்து சொல்லப்பட்டவை. இந்த வழிகாட்டுதல்கள் அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ்விடமிருந்து வந்த சொல் என்பதில் யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
திருக்குர்ஆன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டதற்கு ஆதாரம்:
(1) இந்த இறை வழிகாட்டுதல்கள் யாவும் உலகிலுள்ள ஒட்டுமொத்த மனித இனத்தின் சிறப்பான வாழ்விற்கு வழிகாட்டியாக இருக்கின்றன. ஏதோ ஒரு நாட்டிற்கு - ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு - ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு – வழி காட்டக் கூடிய ஒன்றல்ல. இத்தகைய வழிகாட்டுதலை தனிநபர் ஒருவரால் தர இயலாது.
(2) இது மட்டுமின்றி இந்த உலகம் படைக்கப்பட்டதற்கு முன் பூமி இருந்த நிலை (பார்க்க 41:9-12) – மற்ற உயிரினங்களின் படைப்பு - அதில் மனித படைப்பின் ஆரம்பம் - (பார்க்க 32:5-10)
(3) மனிதனின் ஆரம்ப கால வாழ்க்கை நிலை (பார்க்க 76:1-2, 2:213) – பல தரப்பட்ட வரலாற்று தொகுப்புகள் மற்றும் அவற்றின் படிப்பினைகள் (பார்க்க அத்தியாயங்கள்:7, 12, 21, 28) -
(4) மனிதனின் ஒழுக்க மாண்புகள் சம்பந்தப்பட்ட வரையறைகள் - மனிதனின் சிறப்பான வாழ்விற்கு விஞ்ஞான ரீதியான வழிகாட்டுதல்கள் -
(5) பிரபஞ்ச படைப்புகள் மற்றும் அவற்றில் இயங்கி வரும் பல்வேறு சக்திகள் -
(6) மனிதனின் வருங்கால வாழ்விற்கான சிறந்த வழிமுறைகள் - மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வு – என
எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு விசாலாமான இறைவனின் செயல் திட்டங்களின் அடிப்படையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டது தான் இந்த வேதம். எந்த ஒரு தனி நபராலும் தம் சுயஅறிவைக் கொண்டு ஒருபோதும் இவ்வாறு எழுத இயலாது. அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வால் மட்டும் தான் முடியும்.


أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ فَأْتُوا۟ بِسُورَةٍۢ مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

10:38. உண்மை இவ்வாறிருந்தும் இந்தக் குர்ஆன் தனி ஒரு மனிதரால் தொகுக்கப்பட்டவை என்கிறார்கள். அவர்களின் கூற்று உண்மை என்றால் அவர்களிடம், “இந்தக் குர்ஆனை ஒரு பக்கம் வைத்துவிட்டு, இதே போன்று மனிதனின் சிறப்பான வாழ்விற்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் ஒரு பகுதியையாவது ஏற்படுத்திக் காட்டுங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு உங்களிலுள்ள திறமைசாலிகள் அனைவரையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு முயற்சி செய்து உருவாக்கி காட்டுங்கள்” என்று அவர்களிடம் அறைகூவல் விடுங்கள். (மேலும் பார்க்க 2:23, 11:13)


بَلْ كَذَّبُوا۟ بِمَا لَمْ يُحِيطُوا۟ بِعِلْمِهِۦ وَلَمَّا يَأْتِهِمْ تَأْوِيلُهُۥ ۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ.

10:39. அது அவர்களால் ஒருபோதும் இயலாது (பார்க்க 2:24). மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் உண்மை நிலையை கண்டறியும் ஆற்றலும் அவர்களிடம் இல்லை. இதை விளங்கிக் கொள்ள இயலாததால், இவை எல்லாம் சாத்தியமில்லை என்று கூறி விடுகிறார்கள். மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தி இறைவழிகாட்டுதலின் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு முன்சென்ற சமுதாயங்களும் அவற்றை ஆராயாமல் பொய்யென கூறி வந்தனர். அவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதை கவனித்துப் பார்க்கும்படி அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


وَمِنْهُم مَّن يُؤْمِنُ بِهِۦ وَمِنْهُم مَّن لَّا يُؤْمِنُ بِهِۦ ۚ وَرَبُّكَ أَعْلَمُ بِٱلْمُفْسِدِينَ.

10:40. மக்களுள் சிலர் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இவற்றை ஏற்க மறுப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து சமுதாயத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவோர் யார் என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அதாவது அச்சமுதாய மக்களின் செயல்பாடுகளே இதைக் காட்டிக் கொடுத்துவிடும்.


وَإِن كَذَّبُوكَ فَقُل لِّى عَمَلِى وَلَكُمْ عَمَلُكُمْ ۖ أَنتُم بَرِيٓـُٔونَ مِمَّآ أَعْمَلُ وَأَنَا۠ بَرِىٓءٌۭ مِّمَّا تَعْمَلُونَ.

10:41. எனவே நீங்கள் எடுத்துரைக்கும் இறைவழிகாட்டுதலை அவர்கள் ஏற்க மறுத்தால் அவர்களிடம், “நீங்கள் உங்கள் வழக்கப்படி செயல்படுங்கள். நானும் இறைவழிகாட்டுதலின்படி செயல்படுகிறேன். எவ்வாறு நீங்கள் இறைச் செயல் திட்டத்திற்கு இணங்கி செயல்பட முன்வரவில்லையோ, அதேபோல் நானும் உங்களுடைய வழிமுறையை விட்டு விலகி நிற்கிறேன்” என்று அவர்களிடம் அறிவித்துவிடுவீர்.


وَمِنْهُم مَّن يَسْتَمِعُونَ إِلَيْكَ ۚ أَفَأَنتَ تُسْمِعُ ٱلصُّمَّ وَلَوْ كَانُوا۟ لَا يَعْقِلُونَ.

10:42. மேலும் உம்முடைய பேச்சை கேட்க வருபவர்களுள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உம் பேச்சை கேட்பது போலவே பாவனை செய்கிறார்கள். எதையும் விளங்கிக் கொள்ள விரும்பாத செவிடர்களை நீர் கேட்கும்படி செய்ய முடியுமா?


وَمِنْهُم مَّن يَنظُرُ إِلَيْكَ ۚ أَفَأَنتَ تَهْدِى ٱلْعُمْىَ وَلَوْ كَانُوا۟ لَا يُبْصِرُونَ.

10:43. மேலும் அவர்கள் உம் பேச்சைக் கேட்பது போல உம்மையே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உம் அறிவுரைகளைக் கேட்டு சிந்தித்துப் பார்க்க விரும்பாத குருடர்களை நேர்வழியில் செலுத்த முடியுமா?


إِنَّ ٱللَّهَ لَا يَظْلِمُ ٱلنَّاسَ شَيْـًۭٔا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.

10:44. உண்மை விஷயம் என்ன வென்றால் அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் அணுஅளவு கூட செய்வதில்லை (மேலும் பார்க்க 4:40) ஆனால் மக்கள் தான் அல்லாஹ்வின் அறிவுரைகளை கேட்காமல் தம் மனம்போன போக்கில் வாழ்ந்து தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள்.


وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُوٓا۟ إِلَّا سَاعَةًۭ مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ ۚ قَدْ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ.

10:45. மேலும் தம் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டங்களில், அவர்கள் வாழ்ந்து வந்த காலம் மிகவும் சொற்பமானதே என தோன்றும். அந்த அளவிற்கு நீண்ட கால கஷ்டங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டி வரும். அப்போது, தாம் செய்துவந்த ஒவ்வொரு அநியாய செயல்களைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ் நிர்ணயித்துள்ளபடி எதிர் விளைவுகளை சந்திக்கப் போவதை நம்ப விரும்பாதவர்கள் பெருநஷ்டத்தில் இருப்பார்கள் (பார்க்க:6:31-32) இதற்கு காரணம் அவர்கள் நேர்வழியினை பெறும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.


وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفْعَلُونَ.

10:46. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அவர்களுக்கு ஏற்படவிருக்கின்ற வேதனைகளின் சிலவற்றை உம் வாழ் நாள் காலத்திலேயே கண்டாலும் சரி. அல்லது ஒருவேளை அதற்கு முன்பே உம் வாழ்வு முடிந்து விட்டாலும் சரியே. அவர்கள் செய்துவரும் செயல்களுக்கெல்லாம் நாம் நிர்ணயித்த விதிமுறைகளின் படி விளைவுகள் ஏற்பட்டே தீரும். இறுதியாக அவர்கள் செய்த தீய செயல்களுக்கெல்லாம் அல்லாஹ் நிர்ணயித்த தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. (13:40)


وَلِكُلِّ أُمَّةٍۢ رَّسُولٌۭ ۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمْ قُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ.

10:47. இப்படியாக காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்தவருக்கும் இறைத் தூதர்களை அனுப்பி வைத்தோம். (14:4) அவர்களிடையே இருந்த வேற்றுமை பகைகளை நீக்கி, நியாயமான முறையில் செயல்படும் சம தர்ம சமூக அமைப்பையே அவர்கள் ஏற்படுத்திச் சென்றார்கள். (பார்க்க 2:213) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து எவ்வித அநியாயமும் ஏற்படவில்லை.


وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

10:48. இப்போதோ இறை நிராகரிப்பவர்கள் அழிவினைத் தரும் வேதனைகள் எப்போது வரும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் கூற்றுக்கு தக்க ஆதாரத்தைக் கொண்டு வரும்படியும் கேட்கிறார்கள். அப்போதுதான் நீங்கள் சொல்வது உண்மையென ஏற்றுக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.


قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى ضَرًّۭا وَلَا نَفْعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۚ إِذَا جَآءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَـْٔخِرُونَ سَاعَةًۭ ۖ وَلَا يَسْتَقْدِمُونَ.

10:49. “அந்த வேதனைகளை உங்கள் கண்முன் கொண்டு வந்து காட்டுவதற்கு என்னால் இயலாத காரியமாகும். அதேபோல் நீங்கள் செய்யும் நன்மையான செயல்களின் பலன்களையும் என்னால் கொண்டுவர முடியாது. ஏனெனில் அவை எல்லாம் அல்லாஹ் நிர்ணயித்தபடி உங்கள் செயல்களின் விளைவுகளாக ஏற்படுபவை ஆகும். அந்த வேதனைகளோ அல்லது பலன்களோ தோற்றத்திற்கு வர காலத் தவணைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்தந்த கால அளவுபடி குறித்த நேரத்தில் வந்தே தீரும். நிர்ணயிக்கப்பட்ட அந்த கால அளவு முந்தவும் செய்யாது பிந்தவும் செய்யாது.
அதாவது ஒரு சமுதாயம் எந்த அளவிற்கு தீய செயல்களில் ஈடுபடுகிறதோ, அந்த அளவிற்கு அந்த அழிவுகள் விரைவாக தோற்றத்திற்கு வரும். அது எப்போது வரும் என்பதை தனி நபர் யாராலும் கணித்து கூற இயலாது. (மேலும் பார்க்க 7:188) அதே போல் எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக உழைக்கிறார்களோ, அந்த அளவுக்கு விரைவில் முன்னேற்றத்தைக் காணலாம். இதுவும் ‘கியாம நாள்’ எனப்படும் நிலையான சட்டமாகும்.


قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَتَىٰكُمْ عَذَابُهُۥ بَيَٰتًا أَوْ نَهَارًۭا مَّاذَا يَسْتَعْجِلُ مِنْهُ ٱلْمُجْرِمُونَ.

10:50. எனவே அந்த வேதனைகள் எப்போது வரும் என்ற வாதத்தை விடுங்கள். அந்த வேதனைகள் பகலிலோ இரவிலோ வந்து விட்டால் உங்களால் அதை தடுத்து நிறுத்த முடியுமா என்பதை சொல்லுங்கள். அப்படிப்பட்ட தாளா வேதனைகள் வந்தடைய வேண்டும் என்று அவசரப்படுகிறீர்களே!


أَثُمَّ إِذَا مَا وَقَعَ ءَامَنتُم بِهِۦٓ ۚ ءَآلْـَٰٔنَ وَقَدْ كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ.

10:51. மேலும் அந்த வேதனைகள் வந்த பின்னரா நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வீர்கள்? அப்போது ஏற்றுக் கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது? “இதோ! அந்த வேதனைகள் வந்துவிட்டனவே!” என்பதைத் தவிர வேறு என்ன உங்களால் சொல்ல முடியும்? (மேலும் பார்க்க 32:28-29)


ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذُوقُوا۟ عَذَابَ ٱلْخُلْدِ هَلْ تُجْزَوْنَ إِلَّا بِمَا كُنتُمْ تَكْسِبُونَ.

10:52. “அந்த வேதனைகளை நீங்கள் நிலையாக அனுபவித்து வாருங்கள். நீங்கள் சம்பாதித்த தீமைகளின் விளைவுகளை சுவையுங்கள்” என்று தான் அந்த அநியாயக்காரர்களிடம் கூறப்படும்.


۞ وَيَسْتَنۢبِـُٔونَكَ أَحَقٌّ هُوَ ۖ قُلْ إِى وَرَبِّىٓ إِنَّهُۥ لَحَقٌّۭ ۖ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ.

10:53. “நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா?” என்று அவர்கள் உம்மிடம் அடிக்கடி கேட்கிறார்கள். “ஆம்! உண்மை தான். இவையாவும் நீரூபணம் ஆகக்கூடிய உண்மையே என்று அல்லாஹ்வின் நிலைமாறா சட்டத்தை சாட்சியாக வைத்து உறுதியளிக்கிறேன். அப்படி ஒரு நிலை கண்டிப்பாக ஏற்படும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று கூறிவிடுங்கள்.


وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍۢ ظَلَمَتْ مَا فِى ٱلْأَرْضِ لَٱفْتَدَتْ بِهِۦ ۗ وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ.

10:54. வேதனைகளை அனுபவிக்கும் அந்த காலக் கட்டங்களில் அநியாயம் செய்த ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள பொருட்கள் அனைத்தையும் ஈடாகக் கொடுத்தாவது, அந்த வேதனையிலிருந்து விடுவித்துக் கொள்ள நாடுவார்கள். மேலும் தாம் செய்து வந்த குற்றங்களை மறைக்கவே முயல்வார்கள். ஆனால் அவர்கள் செய்து வந்த செயல்களுக்கேற்ற வகையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படும். அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது.
அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை என்று எண்ணிக் கொண்டீர்களா? நீங்கள் செய்வது எதுவும் அவனுக்குத் தெரியாமல் போய்விடும் என்று நினைத்துக் கொண்டீர்களா? இல்லை.


أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ أَلَآ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.

10:55. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்விக்குக் கட்டுப்பாட்டு செயல்பட்டு வருவதால், நீங்கள் செய்வது எதுவும் அவனுடைய கண்காணிப்பிலிருந்து மறையாது. ஆக நீங்கள் செயல்படுவதற்கு ஏற்ற வகையில் உங்களுக்கு தீர்ப்பு கிடைக்கும். இது நடக்கப்போகும் உண்மையே ஆகும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த உண்மை தெரியவில்லை.


هُوَ يُحْىِۦ وَيُمِيتُ وَإِلَيْهِ تُرْجَعُونَ.

10:56. ஆக அல்லாஹ்வின் அதே சட்ட விதிமுறைகளின்படியே ஒவ்வொரு சமுதாயத்தின் வாழ்வும் மரணமும் இவ்வுலகில் நடைபெற்று வருகின்றன. எனவே நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றன. அதே போல தனி நபரின் வாழ்வும் மரணமும் நிகழ்ந்து வருகின்றன.
உங்களில் ஒவ்வொருவரும் செய்யும் செயல்களுக்கு அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.


يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَتْكُم مَّوْعِظَةٌۭ مِّن رَّبِّكُمْ وَشِفَآءٌۭ لِّمَا فِى ٱلصُّدُورِ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّلْمُؤْمِنِينَ.

10:57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லறிவுரைகள் வந்துவிட்டன. அவை உலகிலுள்ள மனித வாழ்வில் மனோரீதியாக ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடிய அருமருந்தாக விளங்குகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த அறிவுரைகளை ஏற்று நடக்கும் மூஃமின்களுக்கு இவை நேர்வழி காட்டியாகவும் நல்லருளாகவும் இருக்கின்றன. (மேலும் பார்க்க 17:82)


قُلْ بِفَضْلِ ٱللَّهِ وَبِرَحْمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا۟ هُوَ خَيْرٌۭ مِّمَّا يَجْمَعُونَ.

10:58. இந்த அறிவுரைகள் யாவும் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளாகும். இவற்றைக் கொண்டே தனி நபரோ அல்லது சமுதாயமோ சிறப்பான, மகிழ்ச்சிகரமான வாழ்வை நிச்சயமாகப் பெற முடியும். சொத்து செல்வங்கள் மட்டுமே இப்படிப்பட்ட ஆனந்தமான வாழ்வை நிலையாக தர முடியாது. எனவே அச்செல்வங்களை விட இந்த வழிகாட்டுதல்கள் சிறப்பானதாகும் அல்லவா?


قُلْ أَرَءَيْتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزْقٍۢ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًۭا وَحَلَٰلًۭا قُلْ ءَآللَّهُ أَذِنَ لَكُمْ ۖ أَمْ عَلَى ٱللَّهِ تَفْتَرُونَ.

10:59. உலக மக்களே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கின்ற வாழ்வாதாரங்களில் சிலவற்றை ஆகுமானதல்ல என்று தடை விதிக்கிறீர்கள். சிலவற்றை நீங்களே தன்னிச்சையாக இவை ஆகுமானது என்று சொல்லி வருகிறீர்கள். ஆக நீங்களே ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் இது ஆகுமானது இது ஆகுமானதல்ல என்று தீர்மானிப்பதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி நீங்களே பொய்யாகக் கற்பனை செய்து மக்களிடம் ஏன் சொல்லி வருகிறீர்கள்? இதைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். (மேலும் பார்க்க 16:116)


وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ.

10:60. அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறு பொய்யாகக் கற்பனை செய்து சொல்பவர்கள், அதனால் வருங்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. அல்லாஹ்வின் செயல்திட்டம், அவர்கள் செய்யும் தவறான செயல்களுக்கு உடனே தண்டனை அளிக்காமல் (பார்க்க 16:61) அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பளிக்கும் கருணை மிக்கதாய் உள்ளது. ஆனால் மக்களில் பெரும்பாலோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. மேலும் இறைவழிகாட்டுதலை கண்ணியப் படுத்துவதும் இல்லை.


وَمَا تَكُونُ فِى شَأْنٍۢ وَمَا تَتْلُوا۟ مِنْهُ مِن قُرْءَانٍۢ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ ۚ وَمَا يَعْزُبُ عَن رَّبِّكَ مِن مِّثْقَالِ ذَرَّةٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ وَلَآ أَصْغَرَ مِن ذَٰلِكَ وَلَآ أَكْبَرَ إِلَّا فِى كِتَٰبٍۢ مُّبِينٍ.

10:61. ஒரு விஷயத்தை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உலக மக்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரியே, இந்த குர்ஆனின் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தாலும் சரியே, நீங்கள் செய்து வரும் ஒவ்வொரு செயலும் இறைவனின் கண்காணிப்பிலிருந்து ஒருபோதும் தப்பாது. அந்த செயல்களை பூமியின் ஆழ்கடலில் செய்தாலும் அல்லது வானத்தைக் கடந்து சென்று செய்தாலும் சரியே, (பார்க்க 31:16) அது உங்கள் இறைவனுக்குத் தெரியாமல் போகாது. ஒரு அணு அளவை விட சிறிய செயலாக இருந்தாலும் அல்லது பெரியதாய் இருந்தாலும் அது பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


أَلَآ إِنَّ أَوْلِيَآءَ ٱللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

10:62. இதையும் அறிந்து கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலை ஏற்று, அதன் அடிப்படையில் செயல்படும் ஆட்சியமைப்புக்கு அல்லாஹ்வின் உதவி தொடர்ந்து கிடைத்து வரும். இத்தகைய இறை நேசர்கள் வாழும் சமுதாயங்களில் நிம்மதியான பாதுகாப்பான சூழ்நிலை உருவாகும். அங்கு வாழும் மக்களுள் எவ்வித அச்சமோ துக்கமோ இருக்காது.


ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ.

10:63. இந்த இறைநேசர்கள் என்று யாரும் தனிப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பதில்லை மாறாக அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை உளமாற ஏற்றுக் கொள்பவர்களே ஆவார்கள். மேலும் அதற்கு மாற்றமாகச் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுக்கு அஞ்சி நடப்பவர்களாகவே இருப்பார்கள்.


لَهُمُ ٱلْبُشْرَىٰ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْءَاخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَٰتِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.

10:64. இத்தகைய இறை நேசர்களுக்கு இவ்வுலக நிகழ்கால வாழ்விலும், வருங்கால நிலையான வாழ்விலும் சிறப்பான சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வு கிடைக்கும் என்று அல்லாஹ்விடமிருந்து வாக்கு அளிக்கப்படுகிறது. அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியில் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள். அவர்களுடைய வருங்கால வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரும். இதுவே அவர்களுக்குக் கிடைக்கும் மகத்தான வெற்றியாகும்.
சிந்தனையாளர்களே! இவ்வுலகில் இறை நேசர்கள் அல்லது பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற அவ்லியாக்களின் நிலைமையை கவனித்தீர்களா? அவர்கள் யாவரும் தனிச் சிறப்பு பெற்ற மகான்கள் எனவும், உலக சந்தோஷங்களை முற்றிலும் துறந்தவர்கள் எனவும் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாற்றமாகவே இருக்கும். இப்படிப்பட்ட சித்தாந்தங்களை எல்லாம் இந்த வாசகம் தகர்த்து எறிந்து விடுகிறது என்பதையும் கவனியுங்கள்.
அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் சிறப்பு கிடைக்கும், மறுமை வாழ்விலும் சிறப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுவும் என்றென்றும் அல்லாஹ்வின் இந்த வாக்கு மாறாது எனவும் கூறப்படுகிறது. எனவே இப்போது வாழும் மக்களுக்கும் இந்த வாக்கு பொருந்தும். எனவே இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயலாற்றும் மூஃமின்களும் முத்தகீன்களுமே “அவ்லியா அல்லாஹ்” வாக கருதப்படுவார்கள்.


وَلَا يَحْزُنكَ قَوْلُهُمْ ۘ إِنَّ ٱلْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا ۚ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

10:65. எனவே, இறைக் கொள்கைகளை எதிர்ப்போரின் விமர்சன பேச்சுகளைக் கேட்டு நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இப்படிப் பேசி வருவதால் அவர்களுக்கு உயர்வும் கண்ணியமும் கிடைத்துவிடுமா? மாறாக உயர்வும் கண்ணியமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுவதைக் கொண்டே கிடைக்கும். அனைத்து மக்களின் பேச்சுகளையும் கேட்டு அறிந்து கொள்ளும் பேராற்றலுடையவனே அல்லாஹ் என்பதை அவர்களுக்கு தெரிவித்து விடுங்கள்.


أَلَآ إِنَّ لِلَّهِ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ ۗ وَمَا يَتَّبِعُ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ شُرَكَآءَ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ.

10:66. ஏனெனில் வானங்களிலும் இந்தப் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டே செயல்பட்டு வருகின்றன என்பதை அவர்கள் கவனித்துப் பார்ப்பதில்லையா? எனவே அனைவருடைய செயல்களும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதையும் அவர்கள் கவனிப்பதில்லையா? இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு அவர்கள் வேறு எதைத்தான் சாதிக்க எண்ணுகிறார்கள்? காரணம் அவர்கள் கடைப்பிடித்து வருபவை யாவும் வெறும் யூகங்களின் அடிப்படையிலானவை ஆகும். அது மட்டுமின்றி அவர்கள் கற்பனை உலகிலேயே மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.


هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَسْمَعُونَ.

10:67. அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இந்தப் பிரபஞ்சம் இயங்கி வருவதால் தான் இந்தப் பூமியில் இரவு பகல் என மாறி மாறி வருகின்றன (பார்க்க 3:190). இதனால் இரவில் உங்களால் நிம்மதியாக ஓய்வு எடுத்துக்கொள்ள முடிகிறது. அதன்பின் பகல் நேரத்தில் ஏற்படும் வெளிச்சத்தைக் கொண்டு உங்களால் சிரமமின்றி பணிபுரிய முடிகிறது. இப்படியாக அல்லாஹ்வின் ஒவ்வொரு செயல்திட்டத்தைப் பற்றியும் கேட்டு, அறிந்து கொள்ளும் சமூகத்தவர்க்கு தெளிவான அத்தாட்சிகள் பல கிடைக்கும். கண்மூடித்தனமாக வெறும் யூகங்களையும் கற்பனைக் கதைகளையும் பின்பற்றுபவர்களுக்கு பிரபஞ்ச ஞானம் கிடைப்பது எங்ஙனம்?


قَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدًۭا ۗ سُبْحَٰنَهُۥ ۖ هُوَ ٱلْغَنِىُّ ۖ لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ إِنْ عِندَكُم مِّن سُلْطَٰنٍۭ بِهَٰذَآ ۚ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ.

10:68. அப்படிப்பட்ட கற்பனைக் கதைகளில் இதுவும் ஒன்றாகும். அதாவது அல்லாஹ்வுக்கு ஒரு மகனும் உண்டு என்று கூறி அல்லாஹ்வை மனித அளவிற்கு கொண்டுவந்து விட்டார்கள். அல்லாஹ்வின் வல்லமையும் பேராற்றலும் மனித கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாகும். அகிலங்கள் மற்றும் இந்தப் பூமியில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்படுகின்றன. அப்படி இருக்கும் போது, அவற்றை வழிநடத்திச் செல்ல ஒரு புதல்வனின் துணை அவசியமா? அவர்களின் இத்தகைய கற்பனைக் கதைகளுக்கெல்லாம் ஆதாரம் ஏதாவது இருக்கின்றதா என்று கேளுங்கள். அவர்களால் ஒரு ஆதாரத்தையும் தர இயலாது. எனவே நீங்கள் அறியாததை அல்லாஹ்வைப் பற்றி பொய்க் கற்பனைக் கதைகளை கூறுகிறீர்களா? என்று அவர்களிடம் கேளுங்கள்.


قُلْ إِنَّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ لَا يُفْلِحُونَ.

10:69. “இப்படியாக அல்லாஹ்வைப் பற்றி பொய்க் கற்பனைக் கதைகளை சொல்லி வருவதால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? இப்படிப்பட்ட கற்பனைக் கதைகளை சொல்லி மக்களை மூட நம்பிக்கையில் மூழ்க வைத்து சமுதாயத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்லமுடியுமா?” என்று கேளுங்கள்.
ஏனெனில் மக்கள் மத்தியில் குர்ஆனின் கல்வியறிவு வளர வளர இவை எல்லாம் பொய் என வெட்ட வெளிச்சமாகிவிடும். அல்லது சமுதாயத்தில் பிரச்சனைகள் உருவெடுக்கும் போது, இந்தப் பேச்சுகள் எல்லாம் எவ்வித பலனையும் தராது.


مَتَٰعٌۭ فِى ٱلدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيقُهُمُ ٱلْعَذَابَ ٱلشَّدِيدَ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ.

10:70. அப்படிப்பட்ட சமுதாயங்களில் சிலர் மட்டும் சொகுசாக வாழ்ந்து வருவார்கள். அதுவும் அவர்களுக்குக் கிடைப்பதோ தற்காலிக சுகங்களே ஆகும். பின்னர் அவர்கள் செய்து வரும் முறையற்ற செயல்கள் யாவும் இறைவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படி தீய விளைவுகளை ஏற்படுத்தியே தீரும். அந்த விளைவுகள் அவர்களுக்குக் கடுமையான வேதனைகளாக உருவெடுக்கும்.


۞ وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِۦ يَٰقَوْمِ إِن كَانَ كَبُرَ عَلَيْكُم مَّقَامِى وَتَذْكِيرِى بِـَٔايَٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوٓا۟ أَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةًۭ ثُمَّ ٱقْضُوٓا۟ إِلَىَّ وَلَا تُنظِرُونِ.

10:71. தவறான செயல்களால் ஏற்படும் வேதனைகளைப் பற்றி காலம் காலமாய் நபிமார்கள் தத்தம் சமூகத்தவர்களுக்கு எடுத்துரைத்தே இருக்கிறார்கள்.
அந்த வகையில் நூஹ் நபியும் தம் மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர்களிடம், “என் மக்களே! நான் உங்களுடனே வாழ்ந்து கொண்டு, அல்லாஹ்வின் அறிவுரைகளை எடுத்துரைப்பது உங்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது. நான் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து அவற்றை உங்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த குறைவும் வைக்கவில்லை.
இதையும் மீறி நீங்கள் எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதாக இருந்தால் நீங்கள் அனைவரும் இணைந்து அவ்வாறே செய்து கொள்ளுங்கள். இதில் கால தாமதம் செய்யாதீர்கள்” என்று கூறினார்.


فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُسْلِمِينَ.

10:72. “ஆனால் நீங்கள் எனக்கு எதிரான நடவடிக்கைகளை விட்டுவிட்டு, இறைவழிகாட்டுதலின் படி செயல்பட்டால் அதனால் ஏற்படும் பலன்கள் உங்களுக்குத் தான். என் சுய லாபத்திற்காக இதை நான் கூறவில்லை. அல்லாஹ்வின் புறத்திலிருந்து எனக்கு வாழ்வாதாரங்கள் கிடைத்து வருகின்றன. நான் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி “மக்கள் அனைவரின் நலனில் அக்கறையுள்ள" முஸ்லிமாகவே இருக்க கட்டளை இடப்பட்டுள்ளேன்” என்றார்.


فَكَذَّبُوهُ فَنَجَّيْنَٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ وَجَعَلْنَٰهُمْ خَلَٰٓئِفَ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَ.

10:73. இவ்வாறு அவர் பலமுறை எடுத்துரைத்தும், அம்மக்கள் அவருடைய அறிவுரைகளுக்கு செவி சாய்க்கவில்லை. அவருக்கு எதிராக அவர்கள் சதி செய்யவே முற்பட்டார்கள். எனவே அவர் தயாரித்த கப்பலில் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் ஏற்றி காப்பாற்றினோம். அதன்பின் அவர்கள் சென்றடைந்த இடத்தில் சிறப்பான சமூக அமைப்பை ஏற்படுத்தினார்கள். அதனால் அவர்களுக்கு உயர்வும், ஆட்சி அதிகாரமும் கிடைத்து சிறப்பாக வாழ்ந்தார்கள். அவரை எதிர்த்தவர்கள், அந்தப் பகுதியில் ஏற்பட்ட பிரளயத்தில் மூழ்கி அழிந்து போனார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் புறத்திலிருந்து முன்னெச்சரிக்கை வந்தும் செவி சாய்க்காமல் கண்மூடித்தனமாக வாழ்ந்தவர்களின் நிலைமை என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்க்கும்படி நீங்கள் மக்களிடம் எடுத்துரையுங்கள்.


ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَآءُوهُم بِٱلْبَيِّنَٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ بِهِۦ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ نَطْبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلْمُعْتَدِينَ.

10:74. இது போன்றே ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். அவர்களும் தம் சமுதாய மக்களிடம் ஆதாரப்பூவர்மாக தெளிவான முறையில் நம் வழிகாட்டுதல்களை எடுத்துரைத்து வந்தார்கள். எனினும் நம் வழிகாட்டுதலை எடுத்துரைக்கும் போதெல்லாம் அவர்களுடைய முன்னோர்களைப் போன்றே இவர்களும் அவற்றை பொய்யென கூறி மறுத்து வந்தார்கள். இவ்வாறு வரம்பு மீறி நடப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வின் நியதிப்படி திரை ஏற்பட்டு விடுகிறது.


ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ وَهَٰرُونَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ بِـَٔايَٰتِنَا فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًۭا مُّجْرِمِينَ.

10:75. இப்படியாக வந்த நபிமார்களின் தொடரில் மூஸா நபியும் அவருடைய சகோதரர் ஹாரூன் நபியும் வருகிறார்கள். அவர்கள் காலத்தில் ஆட்சி செய்துவந்த ஃபிர்அவ்னிடமும், அவனுடைய அரசவைத் தலைவர்களிடமும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்க அனுப்பினோம். ஆனால் அவர்கள் ஆணவங்கொண்டு ஏற்க மறுத்ததோடு, அநியாய அக்கிரமச் செயல்களில் ஈடுபடுபவர்களாகவே இருந்தார்கள்.


فَلَمَّا جَآءَهُمُ ٱلْحَقُّ مِنْ عِندِنَا قَالُوٓا۟ إِنَّ هَٰذَا لَسِحْرٌۭ مُّبِينٌۭ.

10:76. நாட்டு மக்களின் வளமான வாழ்விற்கு நாம் அறிவித்த சரியான வழிகாட்டுதலை அவர்களுக்கு எடுத்துரைத்த போது, அவற்றைச் சிந்தித்துப் பார்ப்பதை விட்டுவிட்டு, இவையெல்லாம் மக்களை வசியப்படுத்தும் ஏமாற்று பேச்சே என்று கூறலானார்கள்.


قَالَ مُوسَىٰٓ أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ۖ أَسِحْرٌ هَٰذَا وَلَا يُفْلِحُ ٱلسَّٰحِرُونَ.

10:77. அதற்கு மூஸா நபி, “உங்களின் சிறப்பான வாழ்விற்குத் தெளிவான ஆதாரங்களுடன் வழிகாட்டவே வந்திருக்கிறேன். இதையா ஏமாற்று வித்தை என்கிறீர்கள்? மக்களை ஏமாற்றி வாழ நினைப்பவர்கள் ஒருபோதும் தம் இலட்சியத்தில் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.


قَالُوٓا۟ أَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلْكِبْرِيَآءُ فِى ٱلْأَرْضِ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِينَ.

10:78. அதற்கு அவர்கள், “எங்கள் மூதாதையர்கள் எந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதைக் கண்டோமோ, அவற்றை விட்டு திசை திருப்பி விடவே நீங்கள் இருவரும் வந்துள்ளீர்களா? அது மட்டுமின்றி நீங்கள் இருவரும் இந்நாட்டில் பெயரும், புகழும் பெற வேண்டும் என்பதற்காகத் தானே இப்படி பேசி வருகிறீர்கள்? ஆனால் உங்கள் பேச்சை ஏற்றுக் கொள்பவர்களாக இல்லை” என்று கூறி விட்டார்கள்.


وَقَالَ فِرْعَوْنُ ٱئْتُونِى بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٍۢ.

10:79. மேலும் ஃபிர்அவ்ன் தம் அரசவை மந்திரிகளின் யோசனைப்படி, (பார்க்க 7:111-112), “நாட்டிலுள்ள தந்திரம் மிக்க மதகுருமார்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று கட்டளைப் பிறப்பித்தான்.


فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ.

10:80. அவ்வாறே திறமை மிக்க மதத் தலைவர்களை ஒன்றுகூட்டி மூஸா நபியிடம் வாதிட ஏற்பாடு செய்தான். மேலும் அதற்காக மக்கள் திரளாகக் கூடும் திருநாளை தேர்ந்தெடுத்து, மக்கள்முன் வாதிட ஏற்பாடு செய்தான் (பார்க்க 20:59). அதன்பின் அவர்கள் வாதிட வேண்டிய விஷயங்களை எடுத்துரைக்கும் படி மூஸா நபி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.


فَلَمَّآ أَلْقَوْا۟ قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ ٱلسِّحْرُ ۖ إِنَّ ٱللَّهَ سَيُبْطِلُهُۥٓ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ ٱلْمُفْسِدِينَ.

10:81. அவர்களுடைய வாதங்களைக் கேட்ட மூஸா நபி, “நீங்கள் சொன்ன விஷயங்கள் யாவும் பலனற்ற வெற்றுப் பேச்சுக்களே ஆகும். இவையெல்லாம் இவ்வுலகில் நிலைத்து நிற்கக் கூடிய வாய்ப்பே இல்லை. எனவே அல்லாஹ்வின் நியதிப்படி இவையெல்லாம் அழிந்தே போகும். ஏனெனில் குழப்பங்களை விளைவிக்கும் சட்ட விரோத செயல்களால், ஒருபோதும் சீர்பட்ட சமுதயாத்தை உருவாக்கவே முடியாது என்பது அல்லாஹ்வின் சட்டமாகும்” என்றார்.


وَيُحِقُّ ٱللَّهُ ٱلْحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُجْرِمُونَ.

10:82. மேலும், “யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வின் நியதிப்படி சமூக விரோத சக்திகள் அழிந்தே போகும். மக்கள் நலனைப் பேணி காக்கும் மார்க்கமே இவ்வுலகில் நிலைத்து நிற்கும்” என்றார்.
அதன்பின் மூஸா நபி மார்க்க விஷயங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர் எவ்வாறு அதில் வெற்றி கண்டார் என்பதை அத்தியாயம் 7:111–126 விளக்கத்தைப் பார்க்கவும்.


فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٌۭ مِّن قَوْمِهِۦ عَلَىٰ خَوْفٍۢ مِّن فِرْعَوْنَ وَمَلَإِي۟هِمْ أَن يَفْتِنَهُمْ ۚ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍۢ فِى ٱلْأَرْضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلْمُسْرِفِينَ.

10:83. மூஸா நபி விளக்கமளித்த பின், அங்கு கூடியிருந்த மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலோர் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் ஃபிர்அவ்னும் அவனுடைய அரசவை மந்திரிகளும் அவர்களை துன்புறுத்துவார்கள் என்ற பயத்தால் அவர்கள் தம் நிலையை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு ஃபிர்அவ்ன் வலிமை மிக்க அரசனாகவும் கொடுங்கோலனாகவும் இருந்தான்.


وَقَالَ مُوسَىٰ يَٰقَوْمِ إِن كُنتُمْ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيْهِ تَوَكَّلُوٓا۟ إِن كُنتُم مُّسْلِمِينَ.

10:84. மூஸா நபி மக்களிடம்,"என் மக்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி வாழுங்கள். ஃபிர்அவ்னின் மிரட்டலுக்குப் பயப்படாதீர்கள். (பார்க்க 7:128) ஒட்டு மொத்த மக்களின் நலனைக் காக்கும் சிறந்த செயல்வீரர்களாக - “முஸ்லிம்களாக” இருங்கள். மேலும் இறைவழிகாட்டுதல்கள் மீது முழுமையான நம்பிக்கைக் கொண்டு செயல்படுங்கள்” என்று அறிவுறுத்தினார்.


فَقَالُوا۟ عَلَى ٱللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةًۭ لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.

10:85. அவரை ஏற்றுக்கொண்டவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்” என்று உறுதிபட கூறினர். மேலும் அவர்கள், “எங்கள் இறைவனே! நாங்கள் அநியாயம் செய்யும் கூட்டத்தாரின் சோதனைக்கு ஆளாகாமல் இருக்கவே நாடுகிறோம்” என்று தம் மனதில் எழுந்த உணர்வுகளை இறைவன் முன் சமர்ப்பித்தனர்.


وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ.

10:86. மேலும் அவர்கள், “இறைவா! உன்னை நிராகரிக்கும் கூட்டத்தினரால் ஏற்படும் தீங்கிலிருந்து உன் அருளைக் கொண்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்றனர்.


وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًۭا وَٱجْعَلُوا۟ بُيُوتَكُمْ قِبْلَةًۭ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ.

10:87. அதற்கு இறைவன், மூஸா நபி மற்றும் ஹாரூன் நபிக்கு வஹீ மூலம் செய்தியை அனுப்பினான். அச்செய்தியில், “நீங்கள் இருவரும் உங்களைச் சார்ந்தவர்களுக்கு எகிப்து நாட்டிலேயே வீட்டு வசதிகளைச் செய்து தாருங்கள். இறைவனின் அறிவுரைகள் மற்றும், தற்காப்புப் பயிற்சிகளைப் பெற அவ்வீடுகளையே செயலகங்களாக ஆக்கிக் கொள்ளும்படி அறிவுறுத்துங்கள். மேலும் இறைவழிகாட்டுதலை விளக்கமாக எடுத்துரைக்கும் "ஸலாத்" முறையை நிலை நிறத்துங்கள். இதனால் சமுதாய மக்களின் நலனைக் காக்கும் உயர் நிலைக்கு செல்வீர்கள் என்ற நற்செய்திகளை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்” என்று சொல்லப்பட்டது.


وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُۥ زِينَةًۭ وَأَمْوَٰلًۭا فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا۟ عَن سَبِيلِكَ ۖ رَبَّنَا ٱطْمِسْ عَلَىٰٓ أَمْوَٰلِهِمْ وَٱشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا۟ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ.

10:88. மேலும், “எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் அளவுகடந்த செல்வங்களும் ஆடம்பரமான வாழ்வும் உன் புறத்திலிருந்து கிடைத்துள்ளன. இதனால் அவர்கள் மக்களை இந்த மார்க்கத்தில் வந்து இணைவதை விட்டு தடுத்து வருகிறார்கள். இது எங்களுக்குப் பெரிய தடைக் கல்லாக இருக்கிறது. அவர்களுடைய செல்வங்களைக் கொண்டு எங்களுக்கு எதிராக சதி திட்டங்களையும் தீட்டுகிறார்கள். அதனால் நீ அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய செயல்பாடுகளை கடினமாக்கி விடுவாயாக. ஏனெனில் நோவினை தரும் வேதனைகள் வரும்வரையில் அவர்கள் உன் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றே தெரிகிறது” என்று மூஸா நபி பிரார்த்தித்தார்.


قَالَ قَدْ أُجِيبَت دَّعْوَتُكُمَا فَٱسْتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ.

10:89. அதற்கு, “உங்கள் இருவரின் பிரார்த்தனையை நாம் கேட்டுக் கொண்டோம். ஆனால் நீங்கள் உங்கள் செயல் திட்டங்களில் உறுதியுடன் நிலைத்திருந்து செயல்பட்டு வாருங்கள். இங்கு எல்லாமே முறைப்படியே அவரவர் செயல்களுக்கு ஏற்ற வகையில் தான் பலன்கள் கிடைத்து வரும். நீங்கள் விரும்புவது போல் உடனே நிகழாது. இந்த உண்மைகளை அறியாதவர்களைப் போல் நீங்களும் நிதானத்தை இழந்து உணர்ச்சி வேகத்தில் செயல்படாதீர்கள்” என்று இறைவனிடமிருந்து பதில் வந்தது.


۞ وَجَٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُۥ بَغْيًۭا وَعَدْوًا ۖ حَتَّىٰٓ إِذَآ أَدْرَكَهُ ٱلْغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِىٓ ءَامَنَتْ بِهِۦ بَنُوٓا۟ إِسْرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلْمُسْلِمِينَ.

10:90. ஃபிர்அவ்னின் அக்கிரமம் அதிகரித்து வந்ததால் அல்லாஹ்வின் அறிவுரைப்படி (20:77) ஹிஜ்ரத் செய்தார்கள. இப்படியாக இஸ்ரவேலர்கள் எகிப்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சரியான திட்டங்களைத் தீட்டி (விளக்கத்திற்கு பார்க்க 7:136) நைல் நதியை கடந்து சென்று விட்டார்கள். மிகவும் ஆக்ரோஷத்துடனும் வேகத்துடனும் அவர்களைப் பிடிக்க வந்த ஃபிர்அவுனும், அவனுடைய படைகளும் அந்த நதியில் விழுந்து வெள்ளத்தில் மூழ்கி போனார்கள். உயிர் போகும் அத்தருணத்தில் ஃபிர்அவ்ன், “இஸ்ரவேலர்கள் எந்த இறைவன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். மேலும் நான் அவனுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு, ஒட்டுமொத்த மக்களின் நலனை காக்கும் “முஸ்லிமாக” விளங்குவேன்” என்று அலறினான்.


ءَآلْـَٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ ٱلْمُفْسِدِينَ.

10:91. “உயிர் போகும் இந்தத் தருணத்தில் தானா நீ ஈமான் கொள்வதாக சொல்கிறாய்? உனக்குப் பல முறை எடுத்துரைத்தும் காலமெல்லாம் இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துபவனாக அல்லவா இருந்தாய்? எனவே உன் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்று மூஸா நபி மூலம் கூறப்பட்டது.
கவனித்தீர்களா? வெள்ளத்தில் விழுந்த பின் அவனால் எப்படி பேச முடியும்? எனவே பாலம் துண்டிக்கப்படும் தருவாயில் இப்படி மன்றாடி இருப்பான் என்றே புலனாகிறது.(விளக்கத்திற்கு பார்க்க 7:136)


فَٱلْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ ءَايَةًۭ ۚ وَإِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ عَنْ ءَايَٰتِنَا لَغَٰفِلُونَ.

10:92. “எனினும் உனக்குப் பின்னால் வரும் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்பதற்காக, உனது உடலை பத்திரமாக பாதுகாக்கப்படும். அவனைப் பற்றியும் அவன் நடத்திய அராஜக ஆட்சிக்கு ஏற்பட்ட கதியைப் பற்றியும், வருங்கால மக்களுக்கு ஒரு படிப்பினையாகவும், இதை அறிந்து இறைவழிகாட்டுதலின் படி நடக்க மக்கள் முன்வரவேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏனெனில் மக்களில் பெரும்பாலோர் இறைவனின் முன் எச்சரிக்கைச் செய்திகளை அலட்சியமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்” என்று அச்செய்தி குறிப்புகள் கூறின.
அக்காலத்தில் எகிப்து நாட்டு மக்களிடையே இருந்து வந்த வழக்கப்படி, மன்னர்கள் இறந்ததும், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அவர்களுடைய சடலத்தோடு வைத்து அழுகாமல் இருக்கும்படியாக சில இரசாயணப் திரவியங்களைப் (Preservatives) பயன்படுத்தி பத்திரமாகப் பாதுகாப்பார்கள். அவனது நினைவுச் சின்னமாக கூர்முனைக் கோபுரங்களைக் (Pyramids) கட்டுவார்கள். இவற்றை இக்கால மக்கள் Mummys என்று அழைக்கிறார்கள். இவை இன்றைக்கும் அவை உலக அருங்காட்சியங்களில் ஒன்றாக உள்ளன.


وَلَقَدْ بَوَّأْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مُبَوَّأَ صِدْقٍۢ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ فَمَا ٱخْتَلَفُوا۟ حَتَّىٰ جَآءَهُمُ ٱلْعِلْمُ ۚ إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ.

10:93. அதன்பின் மூஸா நபியுடன் நாட்டைவிட்டு வந்த இஸ்ரவேலர்களுக்கு எல்லா வகையான தரமான உணவு வசதிகளுடன் கூடிய பிரதேசத்தில் குடியமர்த்தி, சிறப்பான வாழ்வு பெற இறைவனின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு ஆனது. அதன்பின் அவர்களும் ஆட்சி அதிகாரம் பெற்று சிறப்பான சமுதாயமாக விளங்கினார்கள். (பார்க்க 7:137) காலப்போக்கில் அவர்களிடையே வேற்றுமை பகை ஏற்பட்ட போது, அவர்களிடையே வந்த இறைத் தூதர்கள் அவற்றை சரிசெய்து குறைகளை தீர்த்து வைத்தார்கள். ஆனால் இப்போதோ அவர்கள் இறைவழிகாட்டுதலுக்கு மாறு செய்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் இறைவழிகாட்டுதலின்படி ஆட்சியமைப்பு நிலை நிறுத்தப்படும் காலக் கட்டத்தில் இந்த கருத்து மோதல்கள் யாவும் முற்று பெறும்.


فَإِن كُنتَ فِى شَكٍّۢ مِّمَّآ أَنزَلْنَآ إِلَيْكَ فَسْـَٔلِ ٱلَّذِينَ يَقْرَءُونَ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكَ ۚ لَقَدْ جَآءَكَ ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ.

10:94. மனித சமுதாயமே! நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இந்த வரலாற்று உண்மைகளில் சந்தேகம் இருந்தால், உமக்கு முன்னர் வந்த வேதத்தை வைத்திருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உன் இறைவன் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட வேதம் உண்மையானது தான் என்பதை தெரிந்து கொள்வீர்கள். எனவே சந்தேகம் கொண்ட சமூகத்தவர்களில் நீங்களும் ஒருவராக ஆகிவிட வேண்டாம்.


وَلَا تَكُونَنَّ مِنَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَتَكُونَ مِنَ ٱلْخَٰسِرِينَ.

10:95. அது மட்டுமின்றி அல்லாஹ்வின் வழிகாட்டுதலை பொய்ப்பித்த சமூகத்தவர்களுள் ஒருவராக நீங்களும் ஆகி விட வேண்டாம். அவ்வாறாயின் நீங்களும் நஷ்டமடைந்தோராக ஆகிவிடுவீர்கள்.
ஆக வரலாற்று உண்மைகளோ அல்லது உதாரணங்களோ அதிலிருந்து கிடைக்கின்ற படிப்பினைகள் என்ன என்பதையும், நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஆக சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வேத உபதேசங்கள் பலனளிக்கின்றன. அவ்வாறு சிந்திக்க ஆர்வம் இல்லாதவர்களுக்கு இவை பலனளிக்காது. (பார்க்க 10:74)


إِنَّ ٱلَّذِينَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤْمِنُونَ.

10:96. இறைவழிகாட்டுதலை விளங்கி ஏற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள் இதில் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். இதுவே இறைவன் புறத்திலிருந்து தீர்மானிக்கப்பட்ட விதிமுறையாகும்.


وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ ءَايَةٍ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ.

10:97. அதுமட்டுமின்றி, துன்பறுத்தும் வேதனைகளை அவர்கள் அனுபவிக்கும் வரையில், அவர்களிடம் எல்லா ஆதாரங்களை எடுத்துரைத்தாலும் அவற்றின் உண்மை நிலையை கண்டறிந்தும் அவற்றில் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.


فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ ءَامَنَتْ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّآ ءَامَنُوا۟ كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ ٱلْخِزْىِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ.

10:98. வரலாற்று நிகழ்வுகளை அலசி ஆராயுங்கள். இதற்குமுன் வாழ்ந்த பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்களிடம், இறைத் தூதர்கள் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்த போது, அவர்கள் அவற்றைப் புறக்கணிக்காமல் இருந்ததில்லை. ஆனால் இதில் யூனுஸ் நபியின் சமுதாயம் விதிவிலக்காகும். அவர்கள் அந்த அழிவுகள் வரும் முன்பே இறைவழிகாட்டுதலை ஏற்று, தம் தவறுகளை சரி செய்து கொண்டனர். அதனால் அவர்களுக்கு ஏற்படவிருந்த இழிநிலை என்கிற வேதனையிலிருந்து இறைவனின் நியதிப்படி மீண்டு கொண்டனர். மேலும் அவர்கள் ஓரு குறிப்பிட்ட காலம் வரையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.
இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் மக்கள் ஏன் இப்படி பிடிவாதமாக இருக்கிறார்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். உலகிலுள்ள மற்ற உயிரினங்களைப் பாருங்கள். அவை அனைத்துமே தம் இயல்பின் அடிப்படையில் வாழ்ந்து வருவதைப் பார்ப்பீர்கள். அதாவது அவற்றிற்கு இறைவழிகாட்டுதல்கள் அதனதன் உடல் அமைப்பிலேயே வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் மனிதனுக்கு அவ்வாறு அமைக்கப்படவில்லை. அவனுக்கு இவ்வுலகில் தன் விருப்பம் போல் வாழ அல்லாஹ் முழு சுதந்திரத்தை அளித்துள்ளான். அவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.
ஆனால் அவன் செய்யும் செயல்களின் விளைவுகளை அவனால் மாற்றி அமைக்க ஒருபோதும் முடியாது. அந்த விளைவுகள் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே ஏற்பட்டு வரும்.
மேலும் அந்த விளைவுகள் ஏற்பட கால அளவுகள் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் அந்த விளைவுகளைப் பற்றிய உண்மைகள் மனித சிந்தனைக்கு பெரும்பாலும் எட்டுவதில்லை. இதை அறிவிக்கத் தான் இறைவழிகாட்டுதல் வந்தது.
இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் விஷயத்திலும் மனித விருப்பத்திற்கு விடப்பட்டு விட்டது. அவன் விரும்பினால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது அவற்றை மறுக்கவும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. (பார்க்க 18:29)(6:35, 6:107, 6:111)


وَلَوْ شَآءَ رَبُّكَ لَءَامَنَ مَن فِى ٱلْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا ۚ أَفَأَنتَ تُكْرِهُ ٱلنَّاسَ حَتَّىٰ يَكُونُوا۟ مُؤْمِنِينَ.

10:99. ஆக மற்ற உயிரினங்களைப் போல், உலகிலுள்ள மக்கள் அனைவரையும் இறைவழிகாட்டுதலை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வைக்கும் இறைவனின் செயல்திட்டம் இருந்திருந்தால், அவ்வாறு செய்திருக்க முடியும். அப்படி ஒரு நிலையில் அனைவருமே முஃமின்களாக ஆகியிருப்பார்கள். ஆனால் இறைவனின் செயல் திட்டம் அவ்வாறு இல்லை. இறைவன் மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விட்டதால், மார்க்க விஷயத்திலும் யாருக்கும் எவ்வித நிர்ப்பந்தமும் இருப்பதில்லை. (பார்க்க 2:256) எனவே நீங்களும் யாரையும் ஈமான் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
எனவே ஒவ்வொருவரும் இறைவழிகாட்டுதலை நன்கு ஆராய்ந்து அறிந்து முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள முன் வரவேண்டும். வலுக்கட்டாயமாக யாரையும் ஏற்றுக் கொள்ள வைக்கக் கூடாது என்பதே அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். எனவே தான் மனிதன் தன் செயல்களுக்கு தானே பொறுப்பாளி ஆகின்றான்.


وَمَا كَانَ لِنَفْسٍ أَن تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَيَجْعَلُ ٱلرِّجْسَ عَلَى ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ.

10:100. அல்லாஹ் நிர்ணயித்துள்ள இந்த வழிமுறையைத் தவிர, யாரும் நேர்வழி பெறவும் முடியாது. எனவே இறைவழிகாட்டுதலை அறிவுப்பூர்வமாக விளங்கி ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் வழிதவறிச் சென்று விடுகிறார்கள். அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி வேதனைகள் வந்தடையும் (மேலும் பார்க்க 18:29)


قُلِ ٱنظُرُوا۟ مَاذَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَمَا تُغْنِى ٱلْءَايَٰتُ وَٱلنُّذُرُ عَن قَوْمٍۢ لَّا يُؤْمِنُونَ.

10:101. ஆக வானங்களிலும் பூமியிலும் இருப்பவற்றை ஆழ்ந்து கவனித்துப் பார்க்கும்படி அவர்களிடம் சொல்லுங்கள். ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ள விரும்பாத மக்களுக்கு இந்த ஆதாரங்களும் எச்சரிக்கைகளும் பலனளிக்காது.
இறைவனின் படைப்புகளை மனிதன் ஆராய்ந்து பார்க்கும் போது, பல விசித்திரமான உண்மைகள் அவற்றில் அடங்கி இருப்பது அவனுக்குத் தெரியவரும். அவற்றை எல்லாம் எந்த தனி நபர் ஒருவராலும் படைக்க முடியாது என்ற முடிவுக்கு வருவான். அவற்றின் பின்னணியில் ஒரு மாபெரும் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையையும் கண்டறிவான். ஆக
உலக படைப்புகளில் ஒன்றான மனிதனும், மாபெரும் வல்லவனாகிய இறைவனின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். (மேலும் பார்க்க 2:165) எனவே தான் திருக்குர்ஆனைப் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான கல்வியும் துணை புரிகிறது.


فَهَلْ يَنتَظِرُونَ إِلَّا مِثْلَ أَيَّامِ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِهِمْ ۚ قُلْ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ.

10:102. இவ்வாறு அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்காமால் இதற்குமுன் வாழ்ந்த பல்வேறு சமுதாய மக்களுக்கு ஏற்பட்ட விபரீத விளைவுகளைப் போன்றே இவர்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனரா? அவ்வாறாயின் இவர்களிடம்,"அந்த வேதனை மிக்க காலத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருங்கள். நானும் இறைவனின் அறிவுரைப்படி செயல்பட்டு அதன் நற்பலன்களை எதிர்ப்பார்க்கிறேன்” என்று கூறிவிடுங்கள்.


ثُمَّ نُنَجِّى رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ كَذَٰلِكَ حَقًّا عَلَيْنَا نُنجِ ٱلْمُؤْمِنِينَ.

10:103. இறைத் தூதர்களும் இறைவழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக செயல்படுபவர்களும் தீய விளைவுகளிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வார்கள். மேலும் இறை ஆட்சியமைப்புக்காக தம்மை அர்ப்பணிக்கும் மூஃமின்களுக்கு (பார்க்க 49:15) பாதுகாப்பு அளிப்பதும் அந்த ஆட்சியமைப்பின் மீதுள்ள கடமையாகும்.


قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمْ فِى شَكٍّۢ مِّن دِينِى فَلَآ أَعْبُدُ ٱلَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِنْ أَعْبُدُ ٱللَّهَ ٱلَّذِى يَتَوَفَّىٰكُمْ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ.

10:104. “மனிதர்களே! நான் கொண்டு வந்துள்ள இந்த மார்க்க உபதேசங்கள் நடைமுறைக்கு ஒத்துவராது என்று நீங்கள் சந்தேகித்தால், அது உங்களுடைய முடிவாகும். அதனால் எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் நான் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தவிர வேறு எந்த கட்டளைக்கும் இணங்கி செயல்பட மாட்டேன். உங்களுடைய வாழ்வும் மரணமும் யாருடைய பிடியில் இருக்கின்றதோ, அந்த இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கே இணங்கி செயல்படுகிறேன். மேலும் யார் இறை வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொண்டுள்ளார்களோ, அவர்களோடு இணைந்து செயல்படும்படி எனக்குக் கட்டளை வந்துள்ளது” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.


وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًۭا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ.

10:105. எனவே ஒட்டுமொத்த மக்களின் நலனைப் பேணிக் காக்கும் மார்க்கத்தின் பக்கமே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு கற்பனைத் தெய்வங்களை உருவாக்கி வைத்திருப்பவர்களோடு நீங்கள் இணைந்து செயல்படாதீர்கள்.
மேலும் அல்லாஹ் படைத்துள்ள இந்த இயற்கைப் படைப்புகளின் ஆராய்ச்சிகளைக் கொண்டு (3:191) அவற்றை வசப்படுத்தி அதில் உழைத்து (53:39) உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.


وَلَا تَدْعُ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَ ۖ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًۭا مِّنَ ٱلظَّٰلِمِينَ.

10:106. அல்லாஹ்வை விட்டுவிட்டு ஒரு நன்மையும் தீமையும் செய்ய இயலாத கற்பனைத் தெய்வங்களிடம் மன்றாடிக் கொண்டிராதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வீர்களாயின் அநியாயக்காரர்களாக ஆகிவிடுவீர்கள். அதாவது உங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமங்களுக்கு ஆளாகிவிடுவீர்கள்.
எனவே உங்கள் தேவைகள் நிறைவேறாமல் தவறான வழியில் செல்ல நேரிடும்.


وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّۢ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ ۖ وَإِن يُرِدْكَ بِخَيْرٍۢ فَلَا رَآدَّ لِفَضْلِهِۦ ۚ يُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۚ وَهُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ.

10:107. எனவே அல்லாஹ்வின் நியதிப்படி உங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், அதிலிருந்து உங்களை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது. அப்படியும் அதிலிருந்து மீள வேண்டும் என்றால் அல்லாஹ்வின் இயற்கைப் படைப்புகளின் துணைக் கொண்டே மீள முடியும். இதை விட்டால் உங்களுக்கு வேறு எந்த வழியும் கிடைக்காது. அதே போல் உங்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி நன்மைகள் ஏற்பட்டால் அவை ஏற்படாதவாறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இப்படியாக யார் எப்படிப்பட்ட வாழ்க்கையை நாடுகிறார்களோ அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும். மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணங்கி வாழ்பவர்களுக்கு பாதுகாப்பும் கருணையும் கூடுதலாகக் கிடைக்கும்.
அதாவது மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் யாவும் அவ்வப்போது ஏற்படக் கூடிய ஒன்றாகும். நோயிலிருந்து விடுபட மருத்துவ சிகிச்சை முறையை கையாள வேண்டியுள்ளது. அந்த மருந்துகள் இறைவனின் இயற்கை படைப்புகளிலிருந்து தான் கிடைக்கின்றன. இதை விட்டால் மனிதனுக்கு ஏற்பட்டுள்ள நோயிலிருந்து விடுபட வேறு எந்த வழிமுறையும் கிடையாது. அது போலத் தான் பொருளாதாரச் சிக்கல்களும் ஆகும். அந்த சிக்கல்கள் நீங்க, முயற்சியும் உழைப்பும் அவசியமாகிறது. இப்படியாக மனிதனுக்கு ஏற்பட்டுள்ள தீமையிலிருந்து விடுபட அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே நாட வேண்டியுள்ளது என்பதே இவ்வாசகத்தில் சொல்லப்படுகிறது.


قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۖ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِوَكِيلٍۢ.

10:108. “உலக மக்களே! உங்கள் அனைவரையும் படைத்துப் பரிபாலிக்கும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களின் ஒளிமயமான வளம் மிக்க வாழ்விற்கு வேண்டிய வழிகாட்டுதல்கள் வந்து விட்டன. எனவே எந்த சமுதாயம் அவற்றை ஏற்று அதன்படி முறையோடு செயல்படுகிறதோ, அதன் நன்மைகள் அம்மக்களுக்கே கிடைக்கும். மாறாக எந்த சமுதயாம் அவற்றை ஏற்க மறுத்து வழி தவறிச் செல்கிறதோ, அதன் கேடுகள் அச்சமுதாய மக்களுக்கே வந்தடையும். ஆக நான் உங்களை கட்டாயப் படுத்துபவனோ அல்லது உங்கள் செயல்களை கண்காணிக்கும் அதிகாரம் பெற்றவனோ அல்லன்” என்று உலகார்க்கு வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.
இந்த வாசகம் தனி நபருக்கும் பொருந்தும். அதாவது இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில் மனிதனுக்கு முழு சுதந்திரம் உண்டு. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தவறான செயல்களில் ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை அவனால் தடுத்து நிறுத்த முடியாது.


وَٱتَّبِعْ مَا يُوحَىٰٓ إِلَيْكَ وَٱصْبِرْ حَتَّىٰ يَحْكُمَ ٱللَّهُ ۚ وَهُوَ خَيْرُ ٱلْحَٰكِمِينَ.

10:109. இந்த பொது அறிவிப்புக்குப் பின், நீங்கள் இறைவன் இறக்கி அருளியுள்ள வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வாருங்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளைப் நிதானத்துடன் கையாளுங்கள். உங்கள் செயல் திட்டத்தில் உறுதியோடு நிலைத்திருந்து செயல்படுங்கள். அவனே தீர்ப்பு அளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.