بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

88:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ.

88:1. உலகம் முழுவதிலும் வரவேற்பு கிடைக்கப் போகின்றதே, அந்த மாபெரும் மறுமலர்ச்சியின் செய்தி உமக்கு வந்ததா?
ஆனால் இத்திட்டம் நிறைவேறாதவாறு சிலர் சதி செய்து வருகிறார்கள். அப்படி ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் காலக் கட்டங்களில் சமூதாயத்திலுள்ள மக்கள் இரு பிரிவினர்களாகப் பிரிந்து விடுவார்கள்.


وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ.

88:2. அதில் ஒரு பிரிவு கேவலப்பட்டு வேதனைக்குள்ளாகி அச்சத்தில் முகம் வாடிப் போகும்.


عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ.

88:3. இறைவழிகாட்டுதலை முறியடிக்க அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் எல்லாம் வீணாகி, தோல்வியும் இழிவுமே அவர்களுக்கு மிஞ்சும். அவர்களால் ஒருபோதும் வெற்றி இலக்கை அடையவே முடியாது.


تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ.

88:4. அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட தவறான பாதை, அவர்களை வேதனைகள் நிறைந்த வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்கிறது. அதில் வேதனைகளும் துயரச் சம்பவங்களும் தான் அதிகரித்து வரும்.


تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ.

88:5. அவர்களுக்கு குடிப்பதற்கு கொதிக்கும் நீரே கொடுக்கப்படும். இதனால் அவர்களுடைய தாகம் ஒரு போதும் தீராது.


لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ.

88:6. கடலோரப் பகுதிகளில் ஒதுங்கி துர்நாற்றமடிக்கும் கசப்பான செடிகளைத் தவிர உண்பதற்கு அவர்களுக்கு உணவாக வேறு எதுவும் கிடைக்காது.


لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ.

88:7. அந்த ஆகாரங்கள் உடலுக்கு சக்தி அளிப்பது ஒரு புறம் இருக்கட்டும். அவை பசியைக் கூட போக்காது.


وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ.

88:8. மாறாக இரண்டாவது பிரிவினரின் வாழ்க்கைத் தரம் சீரும் சிறப்புமாக அமையும். அவர்களுடைய முகங்களில் சந்தோஷங்கள் பூத்துக் குலுங்கும்.


لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ.

88:9. அவர்களுடைய உழைப்புகள் யாவும் ஆக்கப்பூர்வமான பலன்களையே தந்து அவர்களுக்கு முழு திருப்தியை அளிக்கும்.


فِى جَنَّةٍ عَالِيَةٍۢ.

88:10. அவர்களுக்கு எல்லா வகையான வசதிகளும் சந்தோஷங்களும் கூடிய கண்ணியமிக்க வாழ்க்கை கிடைக்கும். அவர்களது வாழ்க்கை சுவனத்திற்கு ஒப்பானதாக இருக்கும்.


لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ.

88:11. அங்கு எவ்வித வீணாண பேச்சுக்கும் இடமிருக்காது. அப்படிப்பட்ட அரட்டை அரங்குகளை நீர் காணவும் மாட்டீர்.


فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ.

88:12. அவர்களுடைய வாழ்க்கை வசதிகள் வற்றாத ஜீவ நதியாய் தொடர்ந்து பெருகிப் பல்கும்.


فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ.

88:13. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உயர் பதவிகளையும் வகிப்பார்கள்.


وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ.ᴑ

88:14. குடிப்பதற்கு சுவைமிக்க குவளைகள் நிறைந்த பானங்களும்,


وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ.ᴑ

88:15.அமர்ந்து பணியாற்றுவதற்கு அவரவர் பதவிகளின்படி


وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ.ᴑ

88:16.அரியாசன மெத்தைகளும் வைக்கப்பட்டிருக்கும்.
இறைவழிகாட்டுதலின்படி உருவாகும் இத்தகைய தலைசிறந்த சமுதாயம் ஆக்கப்பூர்வமான செயல்களில் அழகிய முறையில் ஈடுபட்டு வரும். மேலும் அவர்களால் தான் இந்த பிரபஞ்ச படைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றிய உண்மைகளையும் ஆராயமுடியும். அவை எவ்வாறு அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செயல்படுகின்றன என்பதையும் அறிந்துகொள்ள முடியும். அவற்றில் ஒவ்வொன்றும் எவ்வாறு பலன்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதையும் அறிந்து அதற்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக அவர்கள்.


أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ.

88:17. நீருடன் நிரம்பி வழியும் மேகக்கூட்டங்கள் (இபிலி) எவ்வாறு படிப்படியாக உருவாகின்றன என்பதை ஆராய்வார்கள். மேலும் கீழும் அசைந்து வரும் காற்றின் அழுத்தத்தின் உதவியைக் கொண்டு, உப்பு கரிக்கும் கடல் நீரிலிருந்து சுத்த குடிநீரை சுமந்து வரும் மேகக் கூட்டங்களைப் பற்றி சிந்திப்பார்கள்.


وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ.

88:18. இந்தப் பிரபஞ்சத்தின் விஸ்தாரமான வானில் கோள்களும் நட்சத்திரங்களும் எவ்வாறு கட்டுக் கோப்பாக செயல்படுகின்றன என்பதையும், அவை மனிதவள மேம்பாட்டிற்கு எவ்வாறு பலனளிக்கக் கூடியவையாக உள்ளன என்பதைப் பற்றியும் ஆராய்வார்கள்


وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ.

88:19. இந்தப் பூமி வான்மண்டலத்தில் மிக வேகமாக சுற்றி வரும் நிலையிலும், இத்தனை பெரிய பெரிய மலைகள் எவ்வாறு ஆடாது அசையாது பூமியில் ஆணிகள் அடித்து வைத்திருப்பது போல் (78:7) பொருத்தப் பட்டுள்ளன என்பதையும் ஆராய்வார்கள்.


وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ.

88:20. உருண்டை வடிவில் இருக்கும் நிலையில் இந்த பூமி எவ்வாறு விரிப்பாக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் ஆராய்வார்கள். அதாவது எல்லா படைப்புகளும் செங்குத்தாக நின்று செயல்படும்படி எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆராய்வார்கள்.
இந்த இயற்கைப் படைப்புகள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்து, அதன்பின் இயற்கை வளங்களைக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளைப் படைத்து அவற்றை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள


فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ.

88:21. இந்தக் குர்ஆனின் அறிவுரைகளை எடுத்துச் சொல்வீராக. ஏனெனில் இதன் போதனைகளை எடுத்துரைப்பதே உமது பணியாகும்.


لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ.

88:22. அவர்களை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வைப்பது உம் பணி அல்ல. நீர் அவர்கள் மீது அதிகாரம் செலுத்தவும் முடியாது.


إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ.

88:23. நீர் இந்தக் குர்ஆனின் அறிவுரைகளை எடுத்துரைத்த பின்பும் அவற்றை ஏற்க மறுப்பவர்கள்,


فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ.

88:24. அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்ட விதிமுறைகளின் படி மிகப் பெரிய வேதனைகளில் சிக்கிக் கொள்வார்கள்.


إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ.

88:25. இந்தக் குர்ஆனின் அறிவுரைகளை நிராகரித்து விடுவதனால், அந்த வேதனையை விட்டு அவர்களால் தப்பித்துச் செல்லவே முடியாது. ஏனெனில் அவர்களுடைய ஒவ்வொரு செயலும் இறைவன் நிர்ணயித்த விதிமுறைகளின் பிரகாரமே விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அதைவிட்டு யாராலும் எங்கும் வெளியே செல்ல முடியாது.


ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم.

88:26. ஆக அனைவருடைய செயல்களின் கணக்கு வழக்குகள் யாவும் இறைவனின் சட்ட வட்டரைக்குள் வந்து விடுகின்றன.
இந்த உண்மைகளை அவர்களுக்கு தெளிவாக எடுத்துரையுங்கள்.