بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
85:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ.
85:1. வானத்தில் மிகத்தொலைவில் மின்னும் நட்சத்திரங்களும் அவற்றின் பயணப் பாதையின் இலக்கும் -
وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ.
85:2. இன்னும், இவ்வுலகில் ஏற்படவிருக்கும் அந்த மாபெரும் எழுச்சியைப் பற்றி இந்த குர்ஆன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறி வருவதும் -
وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ.
85:3. அதற்கு சாட்சியாக இருக்கும் இறைத் தூதரும் இறைவனின் ஆட்சியமைப்பும் -
இவற்றைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு உண்மை விளங்கிவிடும். அதாவது அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்க இறை வழிகாட்டுதலின் படி ஆட்சியமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதற்காக மூஃமின்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர். ஆனால் இதை முறியடிக்க இறை நிராகரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். ஆனால் அவர்கள்
قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ.
85:4. வேதனை மிக்க நெருப்புக் குண்டத்தில் விழத் தயாராகி விட்டதாகவே காட்டுகிறது.
ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ.
85:5. அந்த வேதனைகள் அவர்களுடைய வாழ்வில் தொடர்ந்து நீடிக்கக் கூடியவையாகும்.
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ.
85:6. மேலும் இந்த ஆட்சிக்கு எதிரான திட்டத்தில் அனைத்து பிரிவினரும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கிறார்களே!
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ.
85:7. மேலும் சமூக நலத் சேவகர்களாகிய மூஃமின்களுக்கு எதிராகச் செயல்படுபவதை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களே!
இவை யாவும் அவர்கள் இறுதியில் படுதோல்வியை சந்திப்பது உறுதி என்பதையே காட்டுகின்றன.
وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ.
85:8. இந்த அளவிற்கு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு செயல்வீரர்களை எதிர்ப்பதற்கு என்ன காரணம்? யாவரையும் மிகைத்தோனும், போற்றுதலுக்கு உரியவனும் ஆகிய அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் மீது அவர்கள் நம்பிக்கை வைத்து செயல்பட முன்வந்தது தான் அவர்கள் செய்த குற்றமா?. மூஃமின்களைப் பழிவாங்க அதைத் தவிர வேறு காரணம் எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லையே.
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ.
85:9. அதுவும் வானங்களையும் பூமியையும் படைத்து அவற்றிலுள்ள அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து செயல்பட வைத்துள்ளானே, அந்த ஏக இறைவன் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டது தான் அவர்கள் புரிந்த குற்றமா? ஏக இறைவனான அல்லாஹ்வின் பேராற்றல் ஒவ்வொரு படைப்பிலும் ஐக்கியமாகி உள்ளதே. இதை அவர்கள் அறியமாட்டார்களா?
إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ.
85:10. அல்லாஹ்வின் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு சமூக வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எதிராக இடையூறுகளை செய்யவேண்டாம் என அவர்களிடம் சொல்லி விடுங்கள். அப்படியும் அவர்கள் தங்கள் போக்குகளை மாற்றிக்கொள்ளா விட்டால், பெரும் வேதனைக்கு ஆளாவார்கள் என்பதை எச்சரிக்கை செய்துவிடுங்கள். மேலும் அவர்கள் அனைத்தையும் இழந்து தவிக்க வேண்டியதாகி விடும் என்பதையும் சொல்லிவிடுங்கள்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ.
85:11. இதற்கு மாறாக அல்லாஹ்வின் செயல்திட்டங்களில் முழுமையான நம்பிக்கைக் கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் பங்கெடுத்துக் கொள்பவர்களுக்கு நிகழ்கால வாழ்விலும் வருங்கால நிலையான வாழ்விலும் சந்தோஷமான சுக வாழ்வு கிடைக்கும். என்றென்றும் குன்றாது பூத்து குலுங்கும் வளம் மிக்க வாழ்க்கை வசதிகள் கிடைக்கும். இது அவர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியாகும் அல்லவா?
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ.
85:12. இறைவனின் ஆட்சியமைப்புக்கு எதிராக இப்போது செயல்படுபவர்கள், சந்தோஷ மிதப்பில் இருக்க வேண்டாம் என சொல்லி விடுங்கள். ஏனெனில் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடி மிகவும் கடினமானது.
إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ.
85:13. ஒவ்வொரு பொருளின் மூலப் பொருட்களைப் படைத்து, அவன் நிர்ணயித்த விளைவுகளையே ஏற்படுத்தும் வகையில் படைத்தது அவனுடைய பேராற்றலே ஆகும்.
وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ.
85:14. பிரபஞ்சப் படைப்புகளும், அனைத்துத் தரப்பு மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. இது அல்லாஹ்வின் அளவற்ற கருணையை பிரதிபலிக்கிறது.
ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ.
85:15. இப்படியாக அகிலங்களில் உள்ளவற்றைப் படைத்ததோடு, அவற்றின் செயல்பாடுகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்ட மாபெரும் வல்லமையுடையவனே அல்லாஹ்.
فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ.
85:16. ஆக ஒட்டுமொத்த பிரபஞ்சப் படைப்புகள் எல்லாம் அல்லாஹ்வின் செயல்திட்டப்படி உருவானவையே ஆகும்.
அவனுடைய செயல்திட்டப் படியே ஒவ்வொரு படைப்பிற்கும் உரிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளான். இதில் தலையிடுவதற்கு யாருக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது. ஆக எந்த படைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகளை நிர்ணயித்ததும் அவனே. எக்காலத்திற்கும் மாற்றத்திற்குள்ளாகாத நிலையான விதிமுறைகளை ஏற்படுத்திய அல்லாஹ்வின் செயல்திட்டமே “அல்லாஹ்வின் மஷீயத் - "அல்லாஹ்வின் நாட்டம்" என்பதாகும்.
அல்லாஹ்வின் அதே செயல்திட்டத்தின் அடிப்படையில் தான், மனிதனுக்கு சுய அதிகாரம் என்ற மாபெரும் பொக்கிஷமும் அளிக்கப்பட்டது. மனிதனுக்குக் கிடைத்துள்ள இந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவன் எப்படி செயல்படுகின்றானோ, அதன்படி விளைவுகளை சந்தித்துக்கொள்ள வேண்டும் என்பது விதி..அதாவது அந்த விளைவுகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் மனிதனுக்கு அளிக்கப்படவில்லை. எனவே மனிதனுடைய எந்த செயலுக்கு என்ன விளைவு என்கிற விதிமுறைகளை இறைத் தூதர்கள் எடுத்துரைத்தார்கள். ஆனால் மனிதன் அதை ஏற்று நடந்துகொள்ள விருப்பமின்றி தன்னிச்சையாகவே செயல்பட முற்படுகின்றான். இப்படி செயல்பட்டு அழிந்து போன சமுதாயங்களைப் பற்றிய குறிப்புகள் குர்ஆனில் ஆங்காங்கே பரவி கிடக்கின்றன. அந்த வரிசையில்
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ.
85:17. இறைவனின் செயல்திட்டத்தின் அடிப்படையில் சமூக அமைப்பை உருவாக்கியவர்களுக்கு எதிராக, பெரிய பெரிய படைகளைத் தயாரித்த கூட்டங்களின் வரலாற்று செய்திகள் உங்களுக்கு வந்தனவா?
فِرْعَوْنَ وَثَمُودَ.
85:18. குறிப்பாக ஃபிர்அவுனுடைய படையைப் பற்றியும், சமூது உடைய படையைப் பற்றியும் செய்திகள் வந்தனவா?
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍۢ.
85:19. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள் இப்போதும் இறைவனின் செயல் திட்டங்களைப் முறியடிக்கவே முற்படுகின்றனர்.
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ.
85:20. அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டம் (System) அவர்களை நாலாப் புறமும் சூழ்ந்துள்ளதே! மேலும் அதிலிருந்து அவர்கள் தப்பித்துச் செல்ல முடியாது என்பதை அவர்களிடம் சொல்லிவிடுங்கள்.
بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ.
85:21. மனித நேயமும் உயர் பண்புகளும் வளர தலைசிறந்த கொள்கைகளைக் கொண்ட இந்த குர்ஆனுக்கு எதிராக அவர்கள் செயல்பட துணிந்து விட்டார்களே. மனிதன் தன் உயர்ந்த இலக்கை அடைய இதன் அறிவுரைகளைத் தானே கடைப்பிடித்தாக வேண்டும்? இதை எண்ணிப் பார்க்க மறுக்கிறார்களே.
வெளி உலகில் எவ்வித ஆபத்தும் அழிவும் ஏற்படாத வகையில் நிலையான சட்டதிட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருவதும் அல்லாஹ் தான். அதே போல் மனித உலகிலும் எந்த தீங்கும் ஆபத்தும் ஏற்படாத வகையில் எக்காலத்திற்கும் மாற்றத்திற்குள்ளாகாத நிலையான மாண்புகளைக் (Permanent Values) கொண்ட அறிவுரைகளையே இந்தக் குர்ஆன் மூலமாகத் தந்துள்ளான்
فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ.
85:22. இது தான் “லூஹ{ல் மெஹ்ஃபூஸ்” என்பதாகும் - அதாவது மாற்ற முடியாதது. மாற்றி அமைத்தாலோ அல்லது இதற்கு மாற்றமாகச் செயல்பட்டாலோ அதன் பாதிப்பு மனிதனுக்குத் தான் ஏற்படும் என்பதே அதன் பொருளாகும்.