بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
84:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
அகிலங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் இயக்கி வருகின்ற ஏக இறைவனின் வழிகாட்டுதலின் படி ஒரு சமுதாயம் செயல்படும் போது,
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ.
84:1. வானிலுக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அனைத்துப் படைப்புகளின் வளங்களையும் பெற்றுக் கொள்ளும்.
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ.
84:2.அகிலத்திலுள்ள படைப்புகள் யாவும் இறைவனின் பரிபாலன திட்டங்களை நிறைவேற்றும் வகையில் தான் படைக்கப்பட்டுள்ளன.
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ.
84:3. அவ்வாறு வானுலக செயல் திட்டங்களின் படி செயல்படும் காலகட்டத்தில், இந்தப் பூமியின் எல்லா திசைகளிலும் மக்கள் பெருக்கம் ஏற்பட்டு வரும்.
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ.
84:4. இந்தப் பூமியிலுள்ள அனைத்து உலோகப் பொருட்களும் பொக்கிஷங்களும் (Minerals & Valuables) வெளிப்பட்டு வரும். அதனால் பூமிக்குள் உள்ளவை காலியாகி வரும்.
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ.
84:5. இந்த இயற்கைப் படைப்புகள் யாவும் இறைவன் விதித்துள்ள விதிமுறைகளுக்கு (Properties)க்கு உட்பட்டே செயல்படும். அதாவது இறைவன் விதித்த வரையறைகளின்படி விளைவுகளை ஏற்படுத்தி வரும்.
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ.
84:6. மனிதனே! இறைவன் விதியாக்கியுள்ள “ஒட்டுமொத்த மனித இனத்தின் நலன் காத்தல்” என்ற இலக்கை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவ ரீதியாகவும் ஆய்வுகளைக் மேற்கொண்டும் வந்து சேருவாய் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால் அதற்காக யுகம் யுகமாக அளவிலா துயரங்களையும் எண்ணற்ற உயிர் சேதங்களையும் நீ எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை தெரிந்துகொள். அவற்றை எல்லாம் கடந்த பின்புதான் இத்தகைய ஆட்சிமுறைக்கு வந்து சேருவாய். இதற்குப் பதிலாக இறைவனின் வஹீ என்னும் வழிகாட்டுதலின் படி முயன்றால் மிக குறுகிய காலத்திலேயே அதிக உயிர் சேதமும் பொருட் சேதமும் இல்லாமல் எளிதாக அந்த இலக்கை அடைந்து விடலாம். ஏனெனில் வஹீ என்னும் வழிகாட்டுதலில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமிருப்பதில்லை.
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ.
84:7. உண்மை என்னவென்றால் வஹீ என்னும் இறை வழிகாட்டுதலின் ஞானம் பெற்றவர் திறமை மிக்க உயர் பண்புகள் உடையவராக ஆகிவிடுகிறார்.
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا.
84:8. எனவே சமூகப் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் மிக எளிதாக அவரால் தீர்த்து வைக்க முடிகிறது. மேலும் அவர், தங்கள் சக தொண்டர்களுடன் முழு மனதுடன் அன்யோனியமாக பழகி வருகிறார்.
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا.
84:9. எனவே இயல்பாகவே அவர்களுக்கிடையில் தோழமை உணர்வும் பாசமும் ஏற்பட்டுவிடுகிறது. இவ்வாறாக அவர்களுள் ஒருமைப்பாடும் சகோதரத்துவமும் வளர்ந்து விடுகின்றன. (பார்க்க 8:63)
சிந்தனையாளர்களே! இதுவே இறைவழிகாட்டுதலின் சிறப்பும் மகத்துவமும் ஆகும். இதைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு உயர் பண்புகளும், சிறப்பாகச் செயலாற்றும் திறமையும் வளர்ந்து வரும்.
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ.
84:10. ஆனால் பாரம்பரியத்திலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி இருப்பவனுக்கோ, கடந்த கால சம்பவ நிகழ்சிகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவனது வருங்காலம் இருள் சூழ்ந்ததாகவும் இருக்கும்.
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا.
84:11. அப்படிப்பட்டவன் அழிவைத் தன் பக்கம் கூவி கூவி அழைத்துக் கொள்கிறான் - அவனுடைய தீய செயல்கள் அப்படி அழைத்துக் கொள்வதாக அமைகின்றன. (பார்க்க 17:11)
وَيَصْلَىٰ سَعِيرًا.
84:12. இப்படியாக அவன் வேதனைகள் மிக்க வாழ்வில் சிக்கிவிடுகிறான்.
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا.
84:13. அவன் இதற்குமுன் என்னவோ தன் சகாக்களுடன் சந்தோஷமாகத்தான் இருந்தான்.
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ.
84:14. தன்னுடைய நிலையில் எந்த ஒரு சிறிய மாற்றமும் வராது என்ற கற்பனையில் தான் இருந்தான்.
அதனால் தான் அவன் மனம் போன போக்கில் நிரந்தரமாக வாழ்ந்து கொள்ளலாம் என்றே நினைத்திருந்தான். அவனுடைய செல்வ பலமும், பெயரும் புகழும் ஒருபோதும் குன்றாது என்ற நினைப்பிலேயே இருந்து விட்டான்.
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا.
84:15. ஆனால் அந்தோ பரிதாபம்! அவனுடைய ஒவ்வொரு அசைவையும் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்" என்ற சட்டம் கண்காணித்து வருவதும், அவனுடைய வருங்கால வாழ்க்கை அவனுடைய செயல்களுக்கு ஏற்றவாறு தான் அமையும் என்பதும் அவனுக்கு தெரியாமல் போய்விட்டதே!
ஆக வழிதவறி நடப்பவர்கள் சிறிது காலமே சுகங்களை அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களுடைய வருங்காலம் இருள் சூழ்ந்ததாக அமைந்து விடும். இவை யாவும் திடீர் திருப்பங்கள் என்ற அடிப்படையில் ஏற்படுவதில்லை. மாறாக படிப்படியாக ஏற்பட்டு தீடீரென்று அதன் விளைவுகள் தோற்றத்திற்கு வரும். இந்தப் பேருண்மையை விளங்கிக் கொள்ள பிரபஞ்ச படைப்பும் அதன் செயலாக்க முறையையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. உதாரணமாக
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ.
84:16. அஸ்தமிக்கும் சூரியனை கவனித்துப் பாருங்கள். உலகின் ஒரு பகுதியை இருள் சூழ வைக்கிறது. எனினும் அதன் வெளிச்சத்தின் சாயல் சிறிது நேரம் வரை நீடிக்கிறது.
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ.
84:17. அதன் பிறகு அந்தி சாய்ந்ததும் நாலாப் புறமும் இருள் சூழ்ந்து கொள்கிறது. அனைத்துப் பொருட்களும் இருளின் பிடியில் வந்து விடுகின்றன. அந்தக் கும்மிருட்டிலும் மின்மினிக்கும் நட்சத்திரங்களும் பளிச்சிடும் சந்திரனும் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன.
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ.
84:18. சந்திரனும் சிறிது சிறிதாக வளர்ந்து முழு நிலாவாக காட்சி அளிக்கிறது.
இந்தப் பிரபஞ்சப் படைப்புகளின் செயல்பாடுகள் எல்லாம் எதைக் காட்டுகின்றன என்று தெரியுமா? அவையெல்லாமே தமக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய விரைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ.
84:19. அதே போல் மனிதர்களாகிய நீங்களும் முன்னேற்றப் படித்தரங்களைக் கடந்து அடுத்தகட்ட வாழ்க்கைக்காக தம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும்.
இப்படியாகத் தொடர்ந்து முன்னேற வேண்டியது உங்கள் வாழ்வின் இலக்காக இருக்கவேண்டும். உங்கள் வாழ்க்கைப் பயணம் என்பது மரணத்திற்கு பின்பும் தொடர்கின்ற ஒன்று என்பதை மறவாதீர்கள்.
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ.
84:20. அவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இந்த அளவிற்கு தெளிவாக எடுத்துரைத்த பின்பும் அவர்கள் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்பதைப் பற்றியோ அல்லது தங்கள் வாழ்வின் வருங்கால நலத் திட்டத்தைப் பற்றியோ அக்கறை காட்டுவதாக தெரியவில்லையே!
ஆச்சரியமே! இவர்களுடைய வாழ்வு மரணத்துடன் நின்று விடுவதில்லையே. மரணம் என்பது என்ன? மனிதனின் அடுத்த கட்ட தொடர் பயணத்தின் நுழைவாயில் தானே!
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩.
84:21. அவர்களுக்கு குர்ஆனுடைய விஷயத்தை எடுத்துக் கூறினாலும், அவர்கள் அதை மனதார ஏற்று செயல்பட முன்வருவதில்லையே.
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ.
84:22. அது மட்டுமின்றி அதன் உண்மை விஷயங்களைப் பொய்ப்பிக்கவே முற்படுகின்றனரே!
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ.
84:23. ஏனெனில் இதில் கூறப்படும் அறிவுரைகள் அவர்களுடைய சுயநலத்திற்கு எதிராக இருப்பதால் தான். ஆனால் அவர்கள் மனதில் மறைந்து கிடக்கும் விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து மறைத்து வைக்க முடியாது.
இவர்கள் சேகரித்து வைப்பவை என்ன? அவர்கள் அவற்றைத் தற்காலிக இன்பங்களை அனுபவிப்பதற்காக எவ்வாறு பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரப்படுத்தி வருகிறார்கள் என்ற விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு வெட்ட வெளிச்சமே. (70:18) (104:1-9)
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ.
84:24. நபியே! இம்மாதிரியான செயல்கள் அவர்களை பேரழிவைத் தேடித் தந்துவிடும் என்று அவர்களிடம் எடுத்துரைப்பீராக.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ.
84:25. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டு சமுதாய நலத் திட்டங்களைத் தீட்டி உழைப்பவர்கள் மட்டும் பேரழிவுகளிலிருந்து மீள முடியும். அவர்களுடைய நற்செயல்களின் பலனாக அவர்களுக்கு நிலையான சுக வாழ்வும் சந்தோஷங்களும் கிடைக்கும். (41:8) (68:3) (14:24-25).
அதாவது இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பதால் சமுதாயத்தினரிடையே ஒழுக்க மாண்புகள் வளர்ந்து வரும். கூடவே பொருளாதார முன்னேற்றத்திற்கான செயல் திட்டங்களையும் தீட்டி உழைத்தும் வருவார்கள். இவ்விரண்டில் எதை விட்டுவிட்டாலும் சமுதாய சீர்கேடுகளை விலக்க முடியாது.