بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
86:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ.
86:1. பரந்து விரிந்து மிக உயரத்தில் தென்படும் வானமும், அதில் மின்மினிக்கும் விடிவெள்ளியும் ஓர் உண்மையை நிரூபித்துக் காட்டுவதாக உள்ளன.
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ.
86:2. "தாரிஃக்" என்னும் அந்த விடிவெள்ளி, எந்த உண்மையை விளக்குகிறது என்பதை உமக்கு யார்தான் எடுத்துரைக்க முடியும்?
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ.
86:3. இரவு நேரங்களில் வானில் மிகத் தொலைவில் பிரகாசமாக ஒளிவீசும் நட்சத்திரம் ஆகும்.
மக்களே! இரவு நேரங்களில் அது தென்படுவது என்னவோ உண்மை தான். ஆனால் பகல் நேரங்களிலும் அது மறைந்து போவதில்லை. அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதன் ஒளிதான் உங்கள் கண்களை விட்டு மறைந்து நிற்கிறது. அது மறைந்து விடுவதாக நீர் தவறாக எண்ணிக் கொள்கிறீர்கள்.
إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ.
86:4. இதே நிலைமை தான் மனித செயல்களின் விஷயத்திலும். பிறருக்குத் தெரியாமல் மறைமுகமாக செய்து வரும் செயல்கள் எல்லாம் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது.
அவை எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று தவறாக எண்ணி, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். அந்த செயல்களுக்கான விளைவுகளின் பிடியில் நாம் சிக்கிக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக் கொள்கிறான். அவனுடைய இந்த எண்ணம் வெறும் யூகமே. செயல்கள் வெளிப்படையாக இருந்தாலும், மறைமுகமாக இருந்தாலும் அவற்றின் விளைவுகள் அவனிடத்திலும், அவன் வாழும் சமுதாயத்திலும் அப்படியே தங்கிவிடும். அவை அவனை விட்டு மறைந்து போகாது. இப்படியாக இறைவனுடைய ஏற்பாடு (System) நட்சத்திரத்தைப் பாதுகாப்பது போல் ஒவ்வொரு மனிதனின் செயல்களின் விளைவுகளையும் பத்திரப்படுத்தி வைக்கிறது.
அவன் செய்யும் செயல்களுக்குரிய விளைவுகள் எவ்வாறு ஏற்படும்? எப்போது ஏற்படும்? இம்மாதிரியான கேள்விகளுக்கு விடை காண்பது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. சற்றே அவன் சிந்தித்துப் பார்த்தால் அதன் உண்மை நிலை அவனுக்குப் புரிந்துவிடும். உதாரணமாக
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ.
86:5. மனிதன் தன்னுடைய பிறப்பு விஷயத்தைப் பற்றியே சற்று அலசி ஆராய்ந்து பார்க்கட்டும்.
خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ.
86:6. அவனுடைய பிறப்பின் துவக்கம் பெண்ணின் கருப்பையில் பீரிட்டுப் பாயும் ஆணின் இந்திரீய அணுவிலிருந்து ஏற்படுகிறது.
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ.
86:7. அணுஅளவு உள்ள இந்திரீயத் துளி, தானாக பெண்ணின் கருப்பையில் உருவாகி இருப்பதில்லை. மாறாக ஆணின் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடைப்பட்ட இடத்தின் வழியாக பீச்சிடப்படுகிறது. அது பெண்ணின் சினை முட்டையில் ஐக்கியமாகி கருப்பையில் வந்து தங்கிவிடுகிறது. அதன் பின் அதில் பல இரசாயண மாற்றங்கள் ஏற்பட்டு, பலப் படித்தரங்களைக் கடந்து குழந்தை பிறக்கிறது. அதற்குத் தேவையான காலஅளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மனித செயல்களின் விளைவுகளும் பலப் படித்தரங்களைக் கடந்து அவை தோற்றத்திற்கு வர காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விளைவுகள் தானாக உருவாவதில்லை. உங்கள் செயல்களின் விளைவாக ஏற்படுபவை ஆகும்.
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ.
86:8. மனிதன் செய்து வரும் செயல்களின் விளைவுகளை இறைவனின் நியதிப்படி தான் ஏற்பட்டு வருகிறது. அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை உடையவன் தான் இறைவன்.
ஆணின் இந்திரீயத் துளியும், பெண்ணின் சினை முட்டையும் தனித்தனியே உள்ள நிலையில் அவற்றில் வளரும் தன்மை இருக்கும் போதும், வளராமலேயே போய் விடுகிறது. அவை இரண்டும் இணையும் போதுதான் கருவு வளர ஆரம்பிக்கிறது. பெண்ணின் கருப்பையில் உள்ள அனைத்து இரசாயணங்களும் அந்த விந்தின் வளர்ச்சிக்கு சத்தாக மாறி, நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி குழந்தையாக உருவெடுக்க துணை நிற்கிறது.
அதே போல் மனித வாழ்க்கையும் சமூக அமைப்பில் ஐக்கியமாகித் தான் தொடர முடியும். அவன் தனித்து வாழ்ந்திட முடியாது. அப்படி தனித்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இருக்காது. எனவே அவன் ஒரு சமூக அமைப்பில் வாழும் போது, அவனுடைய ஒவ்வொரு அசைவும் அவனுக்கும் அந்த சமுதாயத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. நல்ல செயல்களோ தீயச் செயல்களோ அதன் பலன்கள் தோற்றத்திற்கு வர கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படியே அவை தோற்றத்திற்கு வரும். அதுவும் கண்டிப்பாக வரும்.
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ.
86:9. எனவே அவன் இரகசியமாக செய்யும் செயல்களின் விளைவுகள் வெளிப்பட்டே தீரும். அப்படி ஒரு காலக் கட்டத்தில்
فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ.
86:10. அந்த விளைவுகளைத் தடுத்து நிறுத்த யாரும் சக்தி பெறமாட்டார்கள். எனவே தீய செயல்களால் ஏற்படும் அழிவுகளிலிருந்து காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
அதாவது கருவுற்ற பின் எவ்வாறு குழந்தை பிறப்பதை தடுக்க முடியாதோ, அதை தடுத்தால் அதன் பாதிப்புகள் அந்த தாய்க்கு கண்டிப்பாக ஏற்படுமோ, அதுபோல செயல்களின் விளைவுகளை யாராலும் தடுக்கவே முடியாது. அதே போல்
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ.
86:11. வானிலிருந்து பொழியும் மழைத் துளியை ஆராய்ந்துப் பாருங்கள். அதுவும் பல உண்மைகளை விளக்கும்.
அதாவது அந்த மழைத் துளி பூமியில் பொழிந்ததும், அது பூமியில் ஐக்கியமாகி ஒரு வகை சக்தியாக மாறிவிடுகிறது. அது மீண்டும் தண்ணீராக மேல் நோக்கிச் செல்லாது. அது போல மனிதன் செய்யும் செயல்கள் யாவும் அதனதன் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கின்றன. அதை மீண்டும் திரும்பப் பெற முடியாது. மேலும் சிறு துளி பெருவெள்ளம் என்பது போல, செயல்கள் - நன்மையோ தீமையோ கடுகு அளவாக இருப்பினும் அதன் விளைவுகள் ஏற்பட்டே தீரும். (31:16)
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ.
86:12. தாவர விதைகள் பூமியைப் பிளந்து முளைப்பதைக் கவனித்துப் பாருங்கள். அதுவும் ஒரு உண்மையை விளக்குவதாக இருக்கிறது.
அதாவது பூமியில் மனிதன் எதை விதைக்கின்றானோ அதன் மகசூலைத் தான் அவனால் பெற முடியும். பலாக் கொட்டையை விதைத்து விட்டு, மாம் பழத்தை எதிர் பார்ப்பது நியாயமாகுமா? அதே போல மனிதனும் மக்கள் மனதில் எந்த சித்தாந்தத்தை விதைக்கின்றானோ, அதன் அடிப்படையில்தான் அம்மக்களின் சிந்தனைகளும் செயல்களும் வளரும். ஆக குர்ஆனின் சிந்தனைகளை ஊட்டி வளர்த்தால் தலைசிறந்த சமுதாயமாக விளங்கும். இதை விட்டு விட்டு தீய செயல்களைச் செய்துக் கொண்டு நன்மையான பலன்களை எதிர் பார்ப்பது நியாயமாகுமா?
إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ.
86:13. இந்த உலகில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்களும், அழிவினை ஏற்படுத்தும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. இந்தக் குர்ஆன், செயல்களில் எவை சரியானவை எவை தவறானவை என்பதை தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறது.
அதன் அறிவுரைகள் சிலருக்கு கசப்பாகவும் இருக்கலாம். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இறுதியில் பலன் அளிக்கக் கூடியதாகவே அமையும். மண்ணில் விதைகளை விதைத்ததும் அது அழுக ஆரம்பிக்கும். அதன் பின்புதான் அது முளைத்து செடியாகி மரமாக வளர்ந்து, தொடர்ந்து கனிகளை ஈட்டும். அதே போல இந்த குர்ஆனை பின்பற்றும் போது தொடக்கக் காலத்தில் சிரமங்கள் ஏற்படும். ஆனால் இறுதியில் நிலையான பலன்களே கிடைக்கும். (பார்க்க 2:155-156)
وَمَا هُوَ بِٱلْهَزْلِ.
86:14. எனவே தான் இந்தக் குர்ஆன் வீணான விஷயங்களைப் பற்றிப் பேசுவதே இல்லை. பலனுள்ள விஷயங்களைப் பற்றியே பேசுகிறது.
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا.
86:15. இந்த உண்மையை சரிவர புரிந்து கொள்ளாமல் இதை எதிர்ப்பவர்கள் குர்ஆனின் செயல் திட்டங்கள் நிறைவேறாத படி பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். (இன்றைக்கும் இது தொடர்கிறது.)
وَأَكِيدُ كَيْدًۭا.
86:16. ஆனால் இறைவனின் ஆட்சியமைப்பும் கண்களை மூடிக்கொண்டு இருப்பதில்லை. அந்த சூழ்ச்சிகளை முறியடிக்க பல திட்டங்களை உருவாக்கி வருகிறது.
فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا.
86:17. மிஞ்சி நிற்பதோ இதை நிராகரித்து வருபவர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் தான். விதை மரமாகும் வரை எடுத்துக் கொள்ளப்பட்ட கால அவகாசம் போல, இந்த குர்ஆனிய ஆட்சியமைப்பும் முழுஅளவில் வளர்ந்து பலனளிக்கும் தகுதியை பெறும் வரை, அவர்களை தம் போக்கில் விட்டுவிடுங்கள். இன்னும் சில காலம் வரைதான் அவர்களால் அப்படி செய்ய முடியும். அதன்பின் அவர்கள் குர்ஆனிய ஆட்சியமைப்பின் பிடிக்கு வந்து விடுவார்கள். அப்போது மக்கள் எதிர் பார்க்கும் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டே தீரும்.