بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

83:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ.

83:1. நியாமின்றி செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாணிபமும், முதலாளித்துவமும், அதனடிப்படையில் உருவாகும் சமூக அமைப்புகளும் கேடுகளையே சந்திக்கும்.


ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ.

83:2. இப்படிப்பட்ட போக்கினால் கொள்முதல் செய்யும் போது, மக்களிடமிருந்து தமக்குச் சேர வேண்டியதை முழுமையாகப் பெற்றுக் கொள்கின்றனர்.


وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ.

83:3. ஆனால் அதை விற்கும்போது அளவிலும் எடையிலும் மோசம் செய்து வருகிறார்கள்.
இதே போல தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாட்களுக்கும் சேர வேண்டிய ஊதியத்தை ஒழுங்காகக் கொடுக்கவும் மாட்டார்கள். குறைந்த பட்ச ஊதியத்தையே நிர்ணயித்து, மனித ஆற்றல்கள் வளராதபடி நசுக்கி வருவார்கள். இப்படியாக அவர்கள் தம் செல்வங்களை பெருக்கிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.


أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ.

83:4. இப்படியே நிரந்தரமாக வாழ்ந்திட முடியும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்களா?
நாட்டில் மாற்றங்கள் ஒருபோதும் வராது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களா? இல்லை. மனித ஆற்றல்களை நசுக்கி வைக்கும் முதலாளித்துவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி மக்களுக்கு நிச்சயம் ஏற்படும்.


لِيَوْمٍ عَظِيمٍۢ.ᴑ

83:5.இப்படியாக முன்னேற்றப் பாதையில் உள்ள தடைக் கற்களை அகற்றி, அனைத்து தரப்பு மக்களின் நலனைக் காக்கும் புதியதோர் ஆட்சியமைப்பு ஏற்படும்.


يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ.ᴑ

83:6. அகிலங்கள் அனைத்தும் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி நியாயமான ஆட்சி நடைபெற அனைவரும் ஒன்றுபடுவார்கள்.(39:69, 45:36-37, 84:6- 8, 9:22)


كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ.

83:7. அப்போது மனித ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்து, ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியவர்களின் நிலைமை படுமோசமாகிவிடும். அவர்கள் சுயமாக உருவாக்கி வைத்துள்ள சமூக அமைப்பே அவர்களுக்கு அழிவைத் தேடித் தந்துவிடும்.


وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌۭ.

83:8. பேரழிவை ஏற்படுத்தும்; “ஸிஜ்ஜீன்” எவ்வாறு இருக்கும் என்று அறிந்துகொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறீர்கள். அதைப் பற்றிய உண்மைகளை அல்லாஹ்வைத் தவிர வேறு யார்தான் விளக்கமுடியும்?


كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ.

83:9. நீங்கள் செய்து வரும் ஒவ்வொரு தீய செயலுக்கும் என்ன வேதனைகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதுவே "ஸிஜ்ஜீன்" என்பதாகும்.


وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.ᴑ

83:10. அல்லாஹ்வின் ஆட்சியமைப்புச் செயல்திட்டங்களை பொய்ப்பித்து வரம்புமீறி நடப்பவர்களுக்கே இந்த வேதனைகள் வந்து சேரும்.


ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ.ᴑ

83:11.அதாவது அவர்கள் செய்து வந்த தீய செயல்களுக்கேற்ற தீய விளைவுகளாகும்.
ஆக எல்லா வகையான தீய செயல்களையும் வரம்பு மீறின செயல்களையும் யார் செய்வார்கள்? விளைவுகளைப் பற்றி அஞ்சாதவர்கள்தாம் அவ்வாறு செயல்படுவார்கள். சில செயல்கள் தம்மை மட்டும் பாதிக்கும். சில செயல்கள் தமக்கு சாதகமாக இருக்கும். ஆனால் அவை சமூக அமைப்பின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்கும். எனவே எது எப்படியாக இருந்தாலும்


وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ.

83:12. தம்மை தட்டி கேட்க ஆளில்லை எனும்போது தான் இப்படிப்பட்ட தீய செயல்களை செய்து வருவார்கள். தம்மை கேட்க யாருமில்லை என நினைத்திருப்பது இவர்களுடைய தவறான எண்ணமே ஆகும்.


إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.

83:13. தவறான வழியில் வாழ்ந்து பேரழிவுகளைச் சந்தித்த முன்னோர்களின் வரலாற்று ஆதாரங்களை அவர்களிடம் சமர்ப்பித்தாலும், அவை வெறும் கட்டுக் கதைகளே என்று சொல்லி விடுகிறார்கள். அதற்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் நினைக்கிறார்கள்.


كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ.

83:14. உண்மை விஷயம் அதுவல்ல. அவர்களுடைய தவறான செயல்களின் போக்கு அவர்களை எதையும் சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை இழக்கச் செய்து விடுகிறது.


كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍۢ لَّمَحْجُوبُونَ.

83:15. இறைவனுடைய ஆட்சியமைப்பு உருவாகும்போது, இவர்களுக்கு எவ்வித சலுகையும் கிடைக்காமல் போய்விடும்.
ஆக செல்வ பலத்தின் மமதையில் இருந்தவர்கள் எல்லாம் துயரங்களுக்கு ஆளாவார்கள். இவர்களுடைய இந்த நிலைமை இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் தொடரும்.


ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ.

83:16. ஒட்டுமொத்த மக்களின் நலனைப் பேணிக் காக்காமல், சுயநலத்தை அடிப்படையாக கொண்டு வாழும் சமுதாயம் நரகம் என்னும் பாழ்குழியில் விழுந்துவிடும்.


ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ.

83:17. இதுநாள் வரையில் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரகம் இதுதான் என்று அப்போது அவர்களுக்குத் தெரியப்படுத்துவதாக இருக்கும்.


كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ.

83:18. இதற்கு மாறாக ஒட்டுமொத்த சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபடும் “அப்ரார்”களின் நிலைமை சிறப்பாக இருக்கும். அவர்கள் அனைவரும் முன்னேறிக் கொண்டு செல்வார்கள்.


وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ.

83:19. முன்னேற்றப் படித்தரங்களக் கடந்து செல்பவர்களைப் பற்றி இறைவனைவிட சிறப்பாக வேறு யார் விளக்க முடியும்?


كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ.

83:20. இறைவன் வகுத்துள்ள “நற்செயல்களுக்கேற்ற நற்பலன்கள்” என்ற சட்டத்தின் பிரகாரம் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டு வரும். அவர்கள் செய்து வரும் நற்காரியங்களுக்கு ஏற்ற பலன்களே அவற்றிற்கு சாட்சியாக இருக்கும்.


يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ.

83:21. அல்லாஹ்வின் குணநலன்களை தம்முள் கூடுமானவரை வளர்த்துக் கொள்பவர்கள்தாம் அல்லாஹ்வுக்கு நெருங்கியவர்கள் ஆவார்கள். அவர்கள்தாம் அவற்றின் பலன்களை அனுபவிப்பார்கள். (விளக்கத்திற்குப் பார்க்க 2:138) இவர்கள்தாம் “அப்ரார்கள்” எனப்படுவர்


إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ.

83:22. இந்த “அப்ரார்கள்” - தலைசிறந்த நற்குணங்கள் உடையவர்கள் - கண்ணியவான்கள் - தம் வாழ்வின் எல்லா வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்பவர்கள்.


عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ.

83:23. நல்லாட்சியின் அரியாசனத்தில் அமர்ந்தவாறு அனைத்து சமூக விவகாரங்களையும் சிறப்பாகக் கவனித்து வருவார்கள்.


تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ.

83:24. இவர்களுக்குக் கிடைக்கும் வளம் மிக்க வாழ்வு சமுதாய முன்னேற்றங்களின் பிரதிப்பலிப்புகளாக இருக்கும். அவர்கள் அனைவரும் முகமலர்ச்சியுடன் காணப்படுவார்கள்.


يُسْقَوْنَ مِن رَّحِيقٍۢ مَّخْتُومٍ.

83:25. அரசு முத்திரையுடன் கூடிய கண்ணாடி புட்டிகளில் (Bottles) ஆரோக்கியம் அளிக்கும் பானங்கள் (Tonics) குடிப்பதற்கு கிடைக்கும்.


خِتَٰمُهُۥ مِسْكٌۭ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ.

83:26. அந்த முத்திரைகளும் மணமளிக்கும் கஸ்தூரியால் ஆனவையாக இருக்கும். இவையெல்லாம் சிறந்த உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் ஆற்றல்கள் வளர துணை நிற்கும்.
அவற்றை சமூக நலனுக்காக ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த பலன்களைத் தரும். ஆனால் வெறும் இன்பத்தை அனுபவிப்பதற்காக மட்டும் என்றிருந்தால், அவை தற்காலிக பலன்களை மட்டும் கொடுக்கும். வருங்கால வாழ்வில் பிரச்னைகள் ஏற்படும். எனவே முன்னேற்றம் என்ற ஒட்டப் பந்தயத்தில் முன்னிலை வகிக்க விரும்புபவர்கள் மட்டுமே, இவற்றைப் பயன்படுத்தி அவற்றின் சிறந்த நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள். (57:20), (102:1)


وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ.

83:27. மேலும் அந்தப் பழரச சாறுகள் சுவைமிக்க இனிப்புடன் கலந்திருக்கும். அவை உடலுக்கு வலுவூட்டுவதாகவும் நரம்புத் தளர்ச்சியைப் போக்குவதாகவும் இருக்கும்.


عَيْنًۭا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ.

83:28. அந்தப் பழரசப் பானங்களை அல்லாஹ்வின் குணநலன்களை தம்முள் வளர்த்துக்கொள்ள ஆர்வமுள்ள கண்ணியவான்கள் அருந்துவார்கள்.


إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ.

83:29. பிறர் உழைப்பில் சுகம் காணும் கூட்டத்தார், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை ஏற்படுத்த பாடுபடும் மூஃமின்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்கள். தங்களுக்குப் பயனளிக்காத பணிகளில் ஈடுபட்டிருப்பதாக எண்ணி சிரிக்கிறார்கள்.


وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ.

83:30. மேலும் இந்த மூஃமின்கள் பக்கமாக செல்லும்போது, அவர்களில் ஒருவரையொருவர் பார்த்து, இவர்கள் தாம் அந்த முட்டாள்கள் என்பது போல் கண் ஜாடை செய்கிறார்கள்.


وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ.

83:31. அதன்பின் அவர்கள் தங்கள் சக தோழர்களைச் சந்தித்தாலும், அவர்கள் செய்தது பற்றி சொல்லி பெருமை அடித்துக் கொள்கிறார்கள்.


وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ.

83:32. அவர்கள் மூஃமின்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்கள் தாம் அந்த வழி தவறியவர்கள் என்று பேசி வருகிறார்கள்.


وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ.

83:33. ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள். அவர்கள் என்ன இந்த மூஃமின்களைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட அதிகாரிகளா?
ஆரம்பக் கால கட்டத்தில் இந்த மூஃமின்களின் செயல்பாடுகள் அவர்களுக்கு புரியாமல் இருக்கலாம். அதனால் மூஃமின்கள் செய்வதெல்லாம் அவர்களுக்கு மடத்தனமாகத் தோன்றலாம். ஆனால்


فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ.

83:34. இந்த ஆட்சியமைப்பு வளர்ந்து முழுஅளவில் பலன்களைத் தரும்போது, இவர்களுடைய ஏளனப் பேச்சுகள் எல்லாம் நின்று விடும். மூஃமின்கள் அவர்களைப் பார்த்து கேலி செய்யும் தருணம் வந்து விடும்.


عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ.

83:35. மேலும் மூஃமின்கள் அரியாசனத்தில் அமர்ந்தவாறு கேலி செய்தவர்களின் நிலைமை என்னவாகிறது என்பதைக் கவனிப்பார்கள்.


هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ.

83:36. இந்தத் துர்பாக்கியம் அவர்கள் செய்து வந்த செயல்களின் விளைவுகளே அன்றி வேறில்லை. உண்மை என்னவென்றால் முற்பகல் தாம் செய்தது பிற்பகல் அதன் அறுவடையை பெற்றுக்கொள்வர். இதுவே சொர்க்கம் மற்றும் நரகம் உருவாவதற்கு அடிப்படையாக அமைகிறது.