بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

81:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:திருக்குர்ஆன் இறக்கியருளப்படும் கால கட்டத்தில் மக்கமா நகரில் குரைஷியர்களின் ஏகாதிபத்திய ஆட்சியும், ஈரானிய சாம்ராஜ்ஜியத்தில் ஃகஸ்ரா என்கிற கொடுங்கோலனின் ஆட்சியும் நடைபெற்று வந்தன. குரைஷியர்களின் கொடிச் சின்னம் (ஃகமர்) சந்திரனாக இருந்தது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே அந்த சந்திரன் பிளந்து, அந்த ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது (54-1). ஈரான் நாட்டின் கொடிச் சின்னம் (ஷம்ஸ்) சூரியனாகும். இந்த கொடுங்கோலாட்சி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் அழிக்கப்பட்டது. அதன்பின் அந்நாட்டில் மக்களாட்சி ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து ஏற்படவிருக்கும் மறுமலர்ச்சிப் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது.
வரவிருக்கும் காலங்களில் தன்னிச்சையாக நடைபெற்று வரும் ஏகாதிபத்திய ஆட்சிக்குப் பதிலாக குர்ஆனின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் கரங்களில் ஆட்சி அதிகாரம் வந்து விட்டால், அப்போது ஏற்படும் மாற்றங்கள் இவ்வாறு இருக்கும்.


إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ.

81:1. அப்போது ஏகாதிபத்திய ஆட்சிமுறை சுருட்டி வைக்கப்பட்டு விடும்.


وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ.

81:2. அந்த ஆட்சியின் கீழ் இயங்கி வரும் சிறிய சிறிய அரசமைப்புகளின் ஆதிக்கமும் வலுவிழக்க ஆரம்பிக்கும்.


وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ.

81:3. செல்வங்களைக் குவித்து வைத்துக்கொண்டு தம்மை அசைக்க முடியாத மலைகள் என்ற மமதையில் இருக்கும் சீமான்களின் நிலைமையும் தடுமாற ஆரம்பிக்கும


وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ.

81:4. அவர்களுக்கு வருவாயை ஈட்டித்தரும் ஒட்டகம் போன்ற கால் நடைகள் யாவும் கேட்பாரற்ற நிலைக்கு போய்விடும்.
சிந்தனையாளர்களே! மேற்சொன்ன நான்கு வாசங்களில் வரும் வானம் என்ற வார்த்தைக்கு ஏகாதிபத்திய ஆட்சிமுறை என்றும், நட்சத்திரங்களுக்கு அந்த ஆட்சியின் கீழ் செயல்பட்டு வரும் சிற்றரசர்கள் என்றும், மலைகளுக்கு செல்வ சீமான்களையும் உவமானமாகப் பொருள் தந்துள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு நேரடிப் பொருள் கொண்டால் உலகம் அழியும் கால கட்டம் என்று புலனாகிறது. இவ்வுலகில் நடைபெற்று வரும் ஆட்சிகளிலும் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதால் நாம் அவற்றை உவமானமாகப் பொருள் தந்துள்ளோம்.


وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ.

81:5. நாட்டிலுள்ள ஒதுக்கப்பட்டோரும் நலிந்த மக்களும், இந்த புதிய வாழ்க்கை முறையின் பக்கம் வந்து இணைவார்கள்.


وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ.

81:6. கடல்வழி பிரயாணமும் வர்த்தகமும் சூடு பிடிக்கும்.
அதாவது பன்நாட்டு வர்த்தகம் வளர்ந்து, உலகம் முழுவதும் இந்த ஆட்சிமுறையின் சிறப்புகள் பரவும். கடலோர பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். இப்படியாக


وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ.

81:7. சுற்றுப்புற நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் பரஸ்பர உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள்.


وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ.

81:8. தெய்வீக சம்பிரதாயம் என்ற பெயரில் பெண்களை உயிருடன் புதைத்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி வினவப்படும்.


بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ.

81:9. ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக நசுக்கப்பட்ட பெண்கள் செய்த குற்றம்தான் என்ன என்று வினவப்படும். இப்படியாக அவர்களுக்கு சமுதாயத்தில் சமஉரிமை வழங்கப்படும்.


وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ.

81:10. பத்திரிகைகளும் செய்தி தொடர்பு சாதனங்களும் மூலை முடுக்கெல்லாம் பரவும்.


وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ.

81:11. விண்வெளி ஆராய்ச்சிகளைக் கொண்டு வானுலகிலுள்ள இரகசியத் திரைகள் அகற்றப்படும்.
இந்த வளர்ச்சியின் காரணமாக இறைவனின் செயல்திட்டங்கள் துரிதமாக செயல்பட ஆரம்பிக்கும். இப்படியாக நீதி நேர்மையுடன் செயல்படக் கூடிய ஆட்சியமைப்பு இறுதியில் ஏற்பட்டுத்தான் ஆகும்.


وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ.

81:12. அப்போது சமூக விரோதிகளுக்குக் கிடைக்கும் வேதனைகள் கொழுந்துவிட்டு எரியும்.


وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ.

81:13. மாறாக அந்த ஆட்சியமைப்பை ஆதரித்து உதவி செய்தவர்களின் வாழ்க்கை சுவனத்திற்கு ஒப்பானதாக மாறி வரும்.


عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ.

81:14. அதாவது அந்தக் கால கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தம் கடமைகள் என்ன? அதற்கான பலன்கள் என்ன என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.
ஏதோ கற்பனை வளத்தோடு சொல்லப்படுகின்ற விஷயம் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இவை எல்லாமே நடப்பது சர்வ நிச்சயமே. பிரபஞ்ச படைப்புகளை ஆதாரமாக வைத்து இந்த உண்மைகள் விளக்கப்படுகிறது. அவற்றின் ஆராய்ச்சியைக் கொண்டு அவையெல்லாம் உண்மையே என்று நீங்கள் முடிவுக்கு வந்தால், மேற்சொன்ன விஷயங்களும் உண்மையானதே என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். முதலில்


فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ.

81:15. வானில் மின்னும் நட்சத்திரங்கள் மெதுவாக உதயமாகி, அவை பின்நோக்கிச் சென்று மறைகின்றனவே அதை கவனியுங்கள். (53:1), (56:75)


ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ.

81:16. அவையாவும் தத்தம் வட்டரையில் நீந்தி முன்நோக்கிச் சென்று, மறைகின்றனவே அதையும் கவனியுங்கள்.


وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ.

81:17. நிசப்தமாக வந்து செல்லும் இரவையும் கவனியுங்கள்.


وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ.

81:18. தினம் தினம் புதுப்புது பொலிவுகளுடன் விடியும் காலைப் பொழுதையும் கவனித்துப் பாருங்கள்.


إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ.

81:19. இவையெல்லாம் உண்மையே என்றால், உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழவிருக்கின்ற விஷயங்கள் யாவும் கண்ணியமிக்க தூதரின் சொல்லே என்பதும் உண்மையே ஆகும்.
பிரபஞ்ச படைப்புகள் எதுவும் சுயமாக செயல்பட முடியாது. ஏக இறைவனின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட முடியும் (16:49 & 50) அது போல மனிதனும் இந்த பிரபஞ்ச படைப்புகளில் ஒரு அங்கம் வகிக்கின்றான். எனவே இவனும் அந்த ஏக இறைவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் வாழவேண்டும். மேலும் இறைத்தூதர் எதையும் தன்னிச்சையாக செயல்படவே முடியாது. எனவே


ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ.

81:20, இறைச் செய்திகளும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் நிகரற்ற வல்லமையுடைய இறைவனிடமிருந்து வந்த சொல்லாகும்.


مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ.

81:21. எனவே இறைத்தூதர் (தூதுச் செய்திகள்) நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குகிறார். அவர் சமர்ப்பிக்கும் இறைச் செய்திகளில் எவ்வித மாறுதலையும் செய்யமாட்டார்.
அத்துடன் அதன் அடிப்படையில் சிறந்ததொரு ஆட்சியமைப்பையும் ஏற்படுத்துகிறார். எனவே அவரைப் பின்பற்ற வேண்டியது உங்கள் மீதுள்ள கடமையாகும். நிலையான மாண்புகளைக் கொண்ட ஆட்சியமைப்பு ஏற்பட இதை விட்டால் வேறு வழி எதுவும் கிடைக்காது.


وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ.

81:22. உங்கள் தோழர் (இப்போது இந்த குர்ஆன்) ஏதோ உளறுகிறார் என்று நினைக்காதீர்கள். சொல்லப்பட்ட அனைத்தும் நடந்தே தீரும்.


وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ.

81:23. இந்த விஷயங்கள் எல்லாம் ஞானத்தின் உச்ச நிலையிலிருந்து சொல்லப்பட்டவை ஆகும். எனவே இறைத்தூதர் அவற்றை நேரடி வர்ணணைப் போன்று அனைவருக்கும் எடுத்துரைக்கின்றார். (53:1 - 7)


وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ.

81:24. மேலும் வஹீயின் மூலமாக கிடைக்கின்ற விஷயங்களை தன்வரை மறைத்து வைத்துக் கொள்ளாமல் அவற்றை அனைவரிடமும் விவரமாக எடுத்துரைக்கின்றார்.


وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍۢ رَّجِيمٍۢ.

81:25. இவை உண்மைக்கு புறம்பாக கற்பனை வளத்தோடு மனோ இச்சையின்படி அறிவிக்கப்படுபவை அல்ல.


فَأَيْنَ تَذْهَبُونَ.

81:26. உண்மை இவ்வாறிருக்க நேர்வழியினைக் காட்டும் இறைவழிகாட்டுதல்களை விட்டு எங்கு செல்கிறீர்கள்?
இவற்றை பராமுகமாய் இருந்து விட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மனிதர்களாகிய உங்களுக்குத் தானே அன்றி அல்லாஹ்வுக்கு அல்ல. இந்த அறிவுரைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களுக்கோ அல்லது சமூகத்தவர்களுக்கோ அல்ல. மாறாக


إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ.

81:27. உலகிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்காகவும் இவை நல்லறிவுரைகளாக இருக்கின்றன.


لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ.

81:28. எனவே உலகில் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரியே. இதைக் கொண்டு வாழ்வின் சரியான பாதையை அடைந்து கொள்ளலாம்.


وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ.

81:29. ஆனால் காலம் காலமாக தொன்று தொட்டு வரக்கூடிய சடங்கு சம்பிரதாயங்களை விட்டுவிட்டு, தூய உள்ளத்துடன் அகிலத்தார் அனைவரையும் பரிபாலிக்கும் அல்லாஹ்வின் நாட்டத்தோடு நீங்கள் ஒன்றிவிட வேண்டும்.