بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

80:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை - இறை வழிகாட்டுதலின் படி சமுதாயத்தை உருவாக்க நாடுவோர், ஒரு விஷயத்தை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இறைவழிகாட்டுதலை தெரிந்துகொள்ள அங்கு வந்து கூடுபவர்கள் நல்ல வசதி படைத்தவர்களா இல்லையா என்று பார்க்கக் கூடாது. மாறாக அவர்கள் எந்த அளவிற்கு மார்க்க விஷயத்தில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.


عَبَسَ وَتَوَلَّىٰٓ. ᴑ

80:1. மார்க்கத்தின் பக்கம் அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள், முகம் சுளிப்பது கூடாது,


أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ. ᴑ

80:2. அதுவும் நேர்வழிபெற வந்து கூடுபவர்களுள் கண் பார்வை இழந்த ஏழை எளியவர்களும் வந்திருப்பதைப் பார்த்து ஏன் கடுகடுக்க வேண்டும்? (மேலும் பார்க்க 6:52-53, 8:62-64, 11:27, 18:28 , 26:111-114)


وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ.

80:3. இறைவனின் நல்லறிவுரைகளைப் பெற ஆர்வமுள்ளவர்கள், மார்க்க உண்மைகளை தெள்ளத் தெளிவாகக் கற்று, தூய உள்ளம் படைத்தவராக ஆகிவிடலாம் அல்லவா?


أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ.

80:4. அல்லது குறைந்த பட்சம் இந்த நல்லறிவுரைகள் அவருக்கு படிப்படியாக பலனளிக்கக் கூடியதாக அமையலாம் அல்லவா?


أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ. ᴑ

80:5. மாறாக அலட்சியம் செய்பவனுக்கா உமது பொன்னான நேரத்தையும் ஆயுளையும் வீணடிப்பீர்?


فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ. ᴑ

80:6. அதுவும் இறைவழிகாட்டுதல் எதுவும் தேவையில்லை என்று கூறுபவனுக்கா?


وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ.

80:7. அப்படியும் இறைவழிகாட்டுதலுக்கு உடன்பட்டு அவர்கள் வராதது உன் குற்றமில்லையே.


وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ. ᴑ

80:8. குர்ஆனின் அறிவுரைகளைப் பெற நாடி வருபவர்கள்,


وَهُوَ يَخْشَىٰ. ᴑ

80:9. தீய செயல்களால் ஏற்படும் பேராபத்துகளைப் பற்றி அஞ்சி நடப்பவர்கள்,


فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ. ᴑ

80:10. தம்மை அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் எண்ணத்துடன் உம்மிடம் வருபவர்கள் - ஆகியோரைப் பற்றி பராமுகமாய் இருந்து விடுவதே குற்றமாகும்.


كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ.

80:11. இந்தக் குர்ஆனைப் பற்றி ஒரு விஷயத்தை நன்றாக அறிந்துக் கொள்ளுங்கள். இது தெளிவான நல்லறிவுரைகள் அடங்கிய வேதமேயாகும். இதை யார் பின்பற்றினாலும் அவர் மனித மாண்புகளின் உச்ச நிலையை அடைந்து விடுவார்.


فَمَن شَآءَ ذَكَرَهُۥ.

80:12. அதே சமயம் அதன் வழிகாட்டுதல்களை மனதார ஏற்றுக்கொண்டு, அதன்படி செயல்பட முன்வருபவர்களுக்கே அதன் பலன்கள் கிடைக்கும்.


فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ.

80:13. அதனால் தான் குர்ஆனை மறைத்து வைக்கவில்லை. மாறாக மிகவும் பாதுகாப்பான ஏடுகளில் எழுதப்பட்டு அனைவருக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அதை நாடி வருபவர்களுக்குத் தான் இதன் பலன்கள் கிடைக்கும்.


مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ.

80:14. ஏனெனில் இந்தக் குர்ஆன் மனித வாழ்வின் உயர் இலட்சியமும் ஒழுக்க மாண்புகளின் உச்ச நிலைக்கு அழைத்துச் செல்லும் அறிவுரைகள் அடங்கியதாக இருக்கிறது.


بِأَيْدِى سَفَرَةٍۢ. ᴑ

80:15. இந்தக் குர்ஆனை எழுதுபவர்களும் சங்கை மிக்கவர்களே ஆவர். அதை மக்களிடையே பரப்பி வருபவர்களும் உயர் பண்புகளைக் கொண்ட நல்லவர்களே.


كِرَامٍۭ بَرَرَةٍۢ. ᴑ

80:16. மேலும் உயர் பண்பிற்கும் கண்ணியத்திற்கும் இலக்கணமாக விளங்குபவர் தான் இந்தக் குர்ஆனை பதிவு செய்கிறார்.


قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ.

80:17. இவ்வளவு உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட அறிவுரைகள் வந்த பின்பும், இதனை ஏற்க மறுப்பவன் எந்த அளவிற்கு துர்பாக்கியவன் ஆவான் என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள்.
அதுவும் தம்மிடம் சொத்து செல்வம் குவிந்துள்ளது என்ற ஒரே காரணத்திற்காகவா மறுப்பது - இதை விட அழிவைத் தேடிக்கொள்பவன் வேறு யாராக இருக்க முடியும்?


مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ.

80:18. வேறு எதைப் பற்றியும் அவன் சிந்திக்க வேண்டாம். தன்னுடைய பிறப்பைப் பற்றியே சற்று சிந்தித்துப் பார்க்கட்டும். மனிதனாக பிறவி எடுப்பதற்கு தாய் வயிற்றில் இறைவன் செய்துள்ள ஏற்பாட்டினை எண்ணிப் பார்க்கட்டும். எத்தனை படித்தரங்களை கடந்து அவன் குழந்தையாக உருவெடுத்தான் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்.


مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ.

80:19. தாயின் கர்பப்பையில் இந்திரியத் துளியின் ஓர் அணு அளவைக் கொண்டு உருவாக்கி அவனை செவ்வையாக்கியதும் இறைவன் தானே. அதாவது அவனது உடலுறுப்புகள் மிகச் சரியாக செயல்படும்படி செவ்வையாக்கியது அவன் தானே. தான் நாடியதை செய்யக் கூடிய திறமை மனிதனுக்கு அளித்ததும் அவன் தானே!


ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ.

80:20. கல்வி ஞானத்தைப் பெற சிந்தனைப்புலன், செவிப்புலன் மற்றும் பார்வைப்புலன் ஆகியவற்றை அளித்ததோடு வாழ்க்கைக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவனும் இறைவன்தானே. அதனால்தானே வாழ்க்கை வசதிகளைப் பெற மனிதனுக்கு வழிகள் பிறக்கின்றன?


ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ.

80:21. ஆனால் அந்தச் சிந்தனைப்புலன், செவிப்புலன் மற்றும் பார்வைப் புலன்களைப் பயன்படுத்தி கண்ணியத்துடன் வாழ்வதற்குப் பதிலாக, பெரும்பாலானவர்கள் சமாதியில் மடிந்து கிடக்கும் பிணங்களைப் போன்று அல்லவா வாழ்கின்றனர்.


ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ.

80:22. அதே சமயம் ஒரு சிலர் இறைவன் வகுத்துத் தந்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி, தம் வாழ்வை வளம் மிக்கதாய் ஆக்கிக் கொள்கின்றனர். நடைபிணமாக வாழ்வதை விட்டு, உயிர்பெற்று எழுகின்றனர். இப்படியாக இவர்கள் சீறும் சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர். இறந்த பின்பும் அவர்களுடைய வாழ்க்கை பயணம் வெற்றியை நோக்கியே தொடர்கிறது.


كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ.

80:23. ஆக நடை பிணமாக வாழ்பவனுக்கு - தான் எதற்காக படைக்கப்பட்டேன் என்பதை அறியும் வாய்ப்பே இல்லாமல் போயிவிடுகிறது. எனவே அவன் இறைவனின் கட்டளைகளை ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை.
அதனால் அவன் சுயநலக்கார கூட்டத்தினரைப் பின்பற்றி மனித ஒழுக்க மாண்புகளை இழந்து நிற்கிறான்.


فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ.

80:24. குறைந்தபட்சம் தனக்குக் கிடைக்கின்ற உணவைப் பற்றியாவது அவன் கவனித்துப் பார்த்ததுண்டா? யாரிடமும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இலவசமாக அளிக்கும் இறைவனைப் பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா?
அவ்வாறு எண்ணிப் பார்த்திருந்தால், இறைவனின் கட்டளைப்படி தம் பங்கிற்கு என்ன சேருமோ அது மட்டும் தனக்குரியது என்பதை உணர்ந்து இருப்பானே.


أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا.

80:25. ஏனெனில் உணவு உற்பத்திக்கு அடிப்படையாக அமையும் மழை நீர், மனித ஆற்றலைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்றா? இல்லையே! அது இறைவனின் ஏற்பாடுதானே? (56:63-73), (67:30)


ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا.

80:26. மனிதன் நிலத்தில் விதையை விதைப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இறைவனின் ஏற்பாட்டைக் கொண்டுதானே அந்த விதை பூமியை பிளந்து முளைக்க ஆரம்பிக்கிறது?


فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا.

80:27. அதுமட்டுமின்றி அதே ஏற்பாடுகளின் அடிப்படையில் தானே தானியத்திலிருந்து தானியம் என்றும் மற்ற விதைகளிலிருந்து மற்ற விளைச்சல்களும் உருவாகின்றன? இப்படி எல்லா உணவு தானியங்களைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்.


وَعِنَبًۭا وَقَضْبًۭا.ᴑ

80:28.திராட்சை, காய்கறிகள்,


وَزَيْتُونًۭا وَنَخْلًۭا.ᴑ

80:29. ஒலிவ மரங்கள், பேரித்த மரங்கள்,


وَحَدَآئِقَ غُلْبًۭا. ᴑ

80:30. அடர்ந்த காடுகள் மற்றும் தோட்டங்கள்,


وَفَٰكِهَةًۭ وَأَبًّۭا. ᴑ

80:31. பல்வேறு பழவகைகளும் கால் நடைகளுக்கான தீவனங்களும் என எல்லாமே உருவாவது இறைவன் செய்து தந்துள்ள ஏற்பாடுகளைக் கொண்டுதானே!


مَّتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ.ᴑ

80:32. இவை எல்லாமே உங்களுக்கும் கால் நடைகளுக்கும் ஆகாரங்களாக விளங்குகின்றன அல்லவா?
ஆனால் இந்த வாழ்வாதாரங்கள் மீதுள்ள பற்றுதலின் காரணமாக இவற்றை மனிதன் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுகிறான். (பார்க்க 3:14) அதனால் நாளடைவில் ஒட்டு மொத்த மனித இனத்தின் பரிபாலன அமைப்பைப் பற்றிய ஞானமே இல்லாமல் போயிவிடுகிறது. அதை எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பதில்லை. எனவே மோதல்களும் கலவரங்களும் வெடிப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது


فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ.

80:33. ஆக அந்த கலவரங்கள் வெடிக்கும் போது, காதுகளை செவிடாக்கும் இடி முழக்கங்களைத் தான் கேட்க வேணடியிருக்கும்.


يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ.

80:34. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது, உயிர் தப்பினால் போதும் என்று தான் ஒவ்வொருவரும் உடன் பிறந்தவர்களையும் மறந்து மிரண்டு ஓடுவார்கள்.


وَأُمِّهِۦ وَأَبِيهِ.ᴑ

80:35. பெற்றோர்கள் தம் பிள்ளைகளையும், பிள்ளைகள் தம் பெற்றோர்களையும் விட்டு ஓடுவார்கள்.


وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ.ᴑ

80:36. கணவன் மனைவியையும், மனைவி தன் கணவனையும் மறந்துவிடுவார்கள்.


لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ.ᴑ

80:37. அந்தக் கால கட்டத்தில் மற்றவர்களைப் பற்றி யோசிப்பதற்கு ஏது நேரம்? அந்த அளவிற்கு ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.


وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ.ᴑ

80:38. அந்த மோதல்கள் ஒரு முடிவிற்கு வரும்போது, இறை நெறிமுறைகளைக் கடைப்பிடித்தவர்ளின் முகங்கள் வெற்றியின் அடையாளமாக மலர்ந்து காணப்படும்.


ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ.ᴑ

80:39. அங்கு சிரிப்பும் சந்தோஷங்களும் நிறைந்திருக்கும்.


وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ.

80:40. மாறாக இறை நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த சமூக விரோதிகளின் முகங்கள் சோகத்தால் வாடிப் போயிருக்கும். (10:27)


تَرْهَقُهَا قَتَرَةٌ. ᴑ

80:41. மற்றும் சிலரது வாழ்வில் இருள் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் யார்?


أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ.ᴑ

80:42.இறைவனின் வாழ்வாதார சமச்சீர்நிலை (Socio-economic Balance) என்ற செயல் திட்டத்தை ஏற்க மறுத்து கேலி செய்து கொண்டிருந்தார்களே அவர்கள்தான்.
ஏனெனில் இத்திட்டத்தை ஏற்க மறுப்பதால் சமுதாயத்தில் இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமை விரிவடைந்து அதில் எல்லா வகையான ததகாத செயல்களும் நிகழ ஆரம்பித்து விடுகின்றன. இது அல்லாஹ்வின் நீதிமன்றத் துலாக்கோலில் மிகப் பெரிய குற்றமாகும். எனவே இந்த ஏற்றத்தாழ்வு அழிவைத் தேடி தந்துவிடுகிறது.