بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

79:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
ஆதிக்க வெறியர்கள் நலிந்த மக்களின் ஆற்றல்கள் வளராதவாறு நசுக்கி வருகிறார்கள். அதனால் இவர்களுடைய வாழ்க்கைத் தரம் விவசாயத்திற்கு பயன்படாத பாழ் நிலங்களைப் போல் உயிரோட்டம் இல்லாமல் ஆகியுள்ளது. ஆனால் இறைவனின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வந்தால்


وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًۭا.

79:1. நசுங்கி கிடக்கும் நலிந்த மக்களின் ஆற்றல்கள் மிக வேகமாக வளர்ந்து, முன்னேற்றப் பாதையில் வந்து விடும்.
இவர்களுக்கு எதிராக ஆதிக்க வெறியர்கள் ஏற்படுத்தியிருந்த தடைகளை நீக்கி, அடிமை வாழ்விலிருந்து விடுதலை கிடைத்துவிடும். இதனால்


وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًۭا.

79:2. தாழ்த்தப்பட்ட பிரிவினராக இருந்த இவர்கள், சுதந்திர பறவைகளாக ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வேகமாக முன்னேறுவார்கள்.
தரைவழி பயணத்தை விட கடல்வழி பயணம் தங்குதடையின்றி எளிதாக இருக்கும். அதுபோல


وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًۭا.

79:3. இறைவழிகாட்டுதலின்படி செயல்படும்போது, அவர்களுடைய முன்னேற்றப் பாதை தங்கு தடையின்றி இலகுவாக இருக்கும்.


فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًۭا.

79:4. இதனால் இவர்கள் முன்னேறுவதில் முன்னிலை வகிப்பார்கள்.


இவர்களுடைய தொடர் முன்னேற்ற திட்டங்களால் ஆட்சி அதிகாரம் யாவும் ஆதிக்க வெறியர்களிடமிருந்து பறிக்கப்பட்டு இவர்கள் வசம் வந்துவிடும்.


فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا.

79:5. மேலும் இவர்கள் இறை வழிகாட்டுதலின் படி செயல் திட்டங்களைத் தீட்டி, அதன்படி தாங்களே நிர்வகித்துக் கொள்வார்கள்.
நசுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட, மூஃமின்களின் கரங்களால் ஏற்படவிருக்கும் இத்தகைய மறுமலர்ச்சி நடந்தே தீரும் என்பதற்கு இவை யாவும் சாட்சிகளாக இருக்கும்.


يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ.

79:6.இந்த மறுமலர்ச்சி படிப்படியாக ஏற்பட்டு வரும். எனவே நலிந்தோர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற,


تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ.

79:7. ஆதிக்க வெறியர்களின் பிடி தளர்ந்து வரும்.


قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ.

79:8. அப்படி ஒரு கால கட்டத்தில் தலைகணத்துடன் செயல்பட்டு வந்த தலைவர்களின் நிலைமை ஆட்டம் கண்டுவிடும். பயத்தால் அவர்கள் நடுங்கிப் போவார்கள்.


أَبْصَٰرُهَا خَٰشِعَةٌۭ.

79:9. அவர்களுக்கு ஏற்படும் தோல்விகளால் பெரும் தலைகுனிவு ஏற்பட்டு விடும்.
இப்படியொரு நிலை நிச்சயமாக ஏற்படும். ஆனால் அந்தத் தலைவர்கள் இப்போது என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரியுமா?


يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ.

79:10. “கேட்டீர்களா இவர்களுடைய பேச்சை! ஏழை எளிய மக்களை ஏமாற்றி பெற்றுள்ள இந்த அதிகாரமும் செல்வமும் பறிபோய் விடுமாம். நாங்கள் அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டு, ஒன்றுமில்லாத ஜடமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவோமாம்" என்கிறார்கள்.


أَءِذَا كُنَّا عِظَٰمًۭا نَّخِرَةًۭ.

79:11.மேலும், “நாங்கள் ஒன்றுக்கும் உதவாத மக்கிப் போன எலும்புக் கூடுகளாக ஆகிவிடுவோமாம்.


قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ.

79:12. அப்படி ஒரு நிலை நமக்கு ஏற்பட்டால் நாம் பெரும் நஷ்டத்தில் இருக்க நேரிடுமே" என்றும் ஏளனமாகப் பேசி வருகிறார்கள்.


فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ.

79:13. “அப்படி அவர்களை அந்த நிலைக்கு தள்ளிவிட நமக்கு எவ்வித சிரமும் இல்லை. அதற்காக ஒரே ஒரு சங்கொலி முழக்கமே போதுமே.


فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ.

79:14. அதன்பின் அவர்கள் களத்தில் தான் நம்மை சந்திக்க வேண்டி வரும். அப்போது இந்த அகங்கார பேச்சுகளுக்கு ஒரு முடிவு ஏற்பட்டு விடும்" என்று அறிவித்துவிடுவீராக.
இப்படி ஏற்படுவது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக நிகழ்ந்து வந்த சம்பவங்களே ஆகும். அதாவது மேல் மட்டத்தில் வாழ்பவர்கள் அடிமட்ட நிலையில் வாழ்பவர்களை நசுக்குவது. நசுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சமூக சீர்த்திருத்தவாதிகளான நபிமார்கள் வருவது. அவர்களுடைய மேம்பாட்டிற்காகப் பாடுபட்டு அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வது. இவர்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் பல சதிகளைச் செய்வது. அப்போது இரு பிரிவினருக்கிடையே மோதல்கள் வலுப்பது. இறுதியில் தர்மமே வெற்றிப் பெற்றுவது என இவை எல்லாம் காலம் காலமாக உலகம் முழுவதும் நடந்து வந்தவையே ஆகும். அந்த வரிசையில் -


هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ.

79:15. மூஸாவுக்கும் ஃபிர்அவ்னுக்கும் இடையே நடந்த சம்பவ நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகள் உங்களுக்கு வந்திருக்குமே!


إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى.

79:16. மனித வாழ்வில் தனிப்பட்ட முறையில் கிடைக்கும் நீண்ட கால அனுபவங்கள் மற்றும் அவற்றின் அடிப்படையில் ஏற்படும் சிந்தனைகள் ஆகியவற்றின் உச்ச நிலை - அதையும் கடந்து வஹீ என்னும் இறைவழிகாட்டுதல்கள் முறைப்படி மூஸாவுக்கு அளிக்கப்பட்டதே! (20:12)
அந்த வழிகாட்டுதல்களை மக்களிடம் எடுத்துரைத்து சீர்த்திருத்தங்களை செய்து மக்களுடைய ஆதரவைத் திரட்டும்படி இறைவனிடமிருந்து அறிவுரைகள் வந்தன (26:10-11). அதன்பின் -


ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ.

79:17. “நீர் ஃபிர்அவுனிடம் செல்க. அவன் வரம்பு மீறிய செயல்களை செய்துகொண்டு நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்கின்றான். நலித்த மக்களை கொடூரமாக நசுக்கி வருகிறான்" என்று மூஸா நபிக்கு இறைவனிடமிருந்து கட்டளை வந்தது.
ஆட்சி அதிகார பலத்துடன் சொத்துச் செல்வங்களைக் குவித்துக் கொண்டு, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த ஃபிர்அவுனை, ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ள சொல்லப்படவில்லை. மாறாக தன் போக்கை மாற்றிக் கொள்ளும்படி அறிவுரை செய்யப்படுகிறது. அதற்காக ஃபிர்அவுனிடம்,


فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ.

79:18. “உமக்குள் மனிதத் தன்மை வளரவேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றதா?" என்று ஃபிர்அவுனைக் கேட்கும்படி மூஸாவுக்கு இறைவனிடமிருந்து அறிவுரை வந்தது.


وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ.

79:19. மேலும், “அவ்வாறு உமக்கு விருப்பமிருந்தால், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு செயல் திட்டங்களைப் பற்றி நான் விளக்குகின்றேன். அப்போதாவது நீர் மனம் திருந்தியவராக ஆவீர். தற்சமயம் உம் தவறான செயல்களால் இந்த நாடு அழிவை நோக்கிச் செல்கின்றது" என்று ஃபிர்அவுனிடம் எடுத்துக் கூறும்படி மூஸாவுக்கு அறிவுரை வந்தது.


فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ.

79:20. அதன்படி மூஸா ஃபிர்அவுனிடம் சென்று, இறைவனின் கொள்கை கோட்பாடுகளையும், நல்லொழுக்க நெறிமுறைகளையும் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். அவற்றால் நாட்டில் ஏற்படவிருக்கும் மறுமலர்ச்சியைப் பற்றியும் விளக்கினார் (20:23)


فَكَذَّبَ وَعَصَىٰ.

79:21. ஆனால் ஃபிர்அவ்னோ அவற்றை ஏற்க மறுத்து பொய்ப்பிக்கவே செய்தான் (28:36)


ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ.

79:22. அது மட்டுமின்றி மூஸா நபிக்கு எதிராக பல சதிகளை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டான்.


فَحَشَرَ فَنَادَىٰ.

79:23. அவர் எடுத்துரைத்த மார்க்கத்திற்கு எதிராக விவாதிக்க தம் சமூகத்தாரில் உள்ள மத குருமார்களையும், அரசியல் நிபுணர்களையும் ஒன்று திரட்டினான். (20:60)


فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ.

79:24. அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, “நான்தானே உங்கள் அனைவருக்கும் வாழ்க்கை வசதிகளை செய்து தருபவன். எனவே நான் தானே உங்கள் அனைவரையும் பரிபாலிப்பவன் ஆவேன். ஆனால் மூஸாவோ அல்லாஹ் தான் உங்கள் அனைவரையும் பரிபாலிப்பவன் என்கிறார். இது சரியா?" என்றான்.


فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ.

79:25. இப்படியாக இறைவனின் சொல்லை மதிக்காமல் வரம்பு மீறிய செயல்களில் எல்லையைக் கடந்துவிடவே, அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற பின் விளைவுகள்” என்ற சட்டம் அவனை பிடித்துக் கொண்டது. அதனால் அவனுடைய நிகழ்கால வாழ்வும், வருங்கால நிலையான வாழ்வும் பாழாகிவிட்டன.
இவை யாவும் நடந்து முடிந்த சம்பவங்களே ஆகும். ஆக யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட உயர் பதவியில் இருந்தாலும் சரியே, தத்தம் செயல்களுக்கான விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும் என்பது அல்லாஹ் நிர்ணயித்துள்ள நிலைமாறா நிரந்தர சட்டமாகும்.


إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّمَن يَخْشَىٰٓ.

79:26. எனவே இத்தகைய வலிமை மிக்க விதிமுறைகளைப் பற்றிய அச்சம் கொள்வோர்க்கு இந்த சம்பவம் ஒரு படிப்பினையாக இருக்கும். (12:111)
சமூக சீர்த்திருத்தவாதியே! இந்த வரலாற்று சம்பவங்களின் ஆதாரத்தை தம் சமூகத்தார்க்கு எடுத்துரைத்து, இறை வழிகாட்டுதலை ஏற்று அதன்படி வாழும்படி அறிவுரை செய்து வருவீராக. மேலும் பிரபஞ்ச படைப்புகள் மற்றும் அதில் மனிதனின் நிலை என்ன என்பதையும் எடுத்துரைப்பீராக. அதைப்பற்றி சிந்தித்து பலன்களைப் பெறுவார்கள். எனவே


ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا.

79:27. அல்லாஹ்வின் படைப்புகளில் அகிலங்களில் இயங்கி வரும் கோள்களும் நட்சத்திரங்களும் பலம் வாய்ந்ததா அல்லது நீங்கள் பலசாலிகளா?
அதாவது அவற்றைப் படைப்பது கடினமா அல்லது மனிதர்களாகிய உங்களைப் படைப்பது கடினமா என்பதைப் பற்றி யோசித்துப் பதிலளிக்கும்படி கேளுங்கள்.


رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا.

79:28. பிரம்மாண்டமான கோள்களையும் நட்சத்திரங்களையும் விசாலமான வானங்களில் படைத்து செயல்பட வைத்துள்ளானே. இவற்றின் புவி ஈர்ப்பில் நிலையான வட்டரைகளில் பயணித்துச் செயல்படும்படி ஏற்பாடு செய்தவன் அல்லாஹ்வா அல்லது நீங்களா?
பின்னர் நீங்கள் வாழும் பூமியின் செயல்பாடுகளைக் கவனித்துப் பாருங்கள். அதில் மாறிமாறி வரும் இரவு பகல் ஆகியவற்றில் அவனது வல்லமையின் எத்தனை சான்றுகள் உள்ளன என்பதையும் சிந்தித்துப் பாருங்கள் (3:190-191).


وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا.

79:29. பூமியில் இருள் சூழ வைப்பதும், ஒளிமிக்கதாக ஆக்குவதும் அவன் தானே? அல்லது நீங்களா? (78:9-11)
இரவு இரவாகவே இருந்து விட்டாலோ அல்லது பகல் பகலாகவே இருந்து விட்டாலோ இவ்வுலகில் உயிரினம் நிலைக்குமா? இந்தப் பூமியின் வரலாறு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இதற்கு முன் இது புகைமண்டலமாக (Nebula வாக) இருந்தது. (41:11) வான் மண்டலத்தில் மற்ற கோள்களுடன் இணைந்திருந்தது (21:30). அல்லாஹ்வின் செயல்திட்டத்தின் படி அது மற்ற கோள்களிலிருந்து பிரிந்து, (Big Bang) வெகு தொலைவில் வீசி எறிந்து, விரிப்பாக ஆக்கி, அதற்கான பயணப் பாதையை நிர்ணயித்தது அல்லாஹ் தானே. (21:31) மேலும் அது எவ்வாறு விரிப்பாக ஆக்கப்பட்டது என்றால்,


وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ.

79:30. இந்தப் பூமி உருண்டை வடிவில் இருப்பினும் அனைத்து படைப்புகளும் வானத்தை நோக்கி செங்குத்தாக நின்று செயல்படும்படி (gravitational power) புவி ஈர்ப்பின் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا.

79:31. பூமியில் இருந்த நீரை வடியச் செய்து கடலை நிலப் பரப்பிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலிலும் நிலத்திலும் தாவரங்களும் செடிகொடிகளும் வளர்ந்தன.


وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا.

79:32. அந்தப் படைப்புகளின் வரிசையில் பெரிய பெரிய உறுதி வாய்ந்த மலைகளும் அடங்கும்.
ஆக இவை யாவும் அல்லாஹ்வின் படைப்புச் சட்டத்தின் கீழ் உருவானவையாகும். நீங்கள் உருவாக்கியவை அல்ல. அந்த படைப்புச் சட்டங்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட எடுத்துக் கொள்ளப்பட்ட காலஅளவு ஐம்பது ஐம்பதாயிரம் வருடங்களாகும். (70:4) இப்படியாக இவை யாவும் அல்லாஹ்வின் நீண்டகால செயல்திட்டத் தொடரில் உருவானவையாகும்.


مَتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ.

79:33. மேலும் உங்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே இவற்றை இறைவன் படைத்தான். அவற்றின் மீது நீங்கள் சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல.
இவ்வாறாக ஒட்டுமொத்த உயிரினங்களுக்காகப் படைக்கப்பட்ட வாழ்வாதரங்கள் தனியார் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டால் நாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய தவறான சமூக அமைப்பு ஏற்பட்டுவிட்டால் ஆதிக்க வர்க்கத்த்தினர் பாமர மக்களை நசுக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டு விடுகிறது.


فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ.

79:34. அதைத் தொடர்ந்து கலவரங்கள் வெடிப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இதைப் பற்றித்தான் தொடக்க வாசகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ.

79:35. இறை வழிகாட்டுதலின் படி செயல்படுவதால் எத்தகைய சமுதாயம் உருவாகும் என்றால், அங்கு யாரும் பிறர் உழைப்பில் சுகம் காண மாட்டார்கள். ஓவ்வொருவரும் தம் உழைப்பிற்கான பலன்களை மட்டும் பெற்றுக் கொள்வர். மேலும் யாருடைய உழைப்பும் வீண் போகாது. (53:39)


وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ.

79:36. அந்தக் கால கட்டத்தில் பார்வை மற்றும் சிந்தனைப் புலன்கள் உள்ளவர்களுக்கு நரக வாழ்க்கைப் பற்றிய உண்மை புரிந்து விடும்.
தற்சமயம் அந்த நரக வேதனை இந்த உலகில் தொடரத்தான் செய்கிறது. ஆனால் என்ன பயன்? அதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லையே! (29:54), (39:48 ), (82:16)


فَأَمَّا مَن طَغَىٰ.

79:37. நினைவில் கொள்ளுங்கள்! யார் இறைவனின் வழிகாட்டுதலையும் அதன் ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்க மறுத்து,


وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا.

79:38. வருங்கால நிலையான பலன்களுக்குப் பதிலாக தற்காலிக சுக வாழ்வை மட்டும் நோக்கமாகாகக் கொண்டு வாழ்கிறார்களோ,


فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ.

79:39. அவர்களுடைய வாழ்வு இறுதியில் வேதனை மிக்கதாய் மாறிவிடும். மேலும் சமுதாய முன்னேற்ற பாதைக்கும் அவை தடையாக நிற்கும்.


وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ.

79:40. மாறாக எத்தனை காலம் வாழ்ந்தாலும் இறைவன் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி தம் செயல்களின் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்து, யார் தம்முடைய மனோ நிலையையும், ஆசைகளையும் இறைவழிகாட்டுதலுக்கு ஏற்றவாறு வைத்துக் கொள்கிறார்களோ –


فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ.

79:41. அவர்களுடைய வாழ்வு இனிமையாக - சுவனத்திற்கு ஒப்பானதாக அமையும் - இவ்வுலகிலும் மறுமையிலும்.


يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا.

79:42. இந்த மறுமலர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு அது எப்போது வரும் என்று உம்மிடம் கேட்கிறார்கள்.


فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ.

79:43. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அது எப்போது ஏற்படும் என்று நேரம் காலத்தை குறிப்பிட்டு சொல்லக் கூடிய விஷயம் அல்ல என்று அவர்களிடம் கூறிவிடுவீராக (7:187), (33:63), (42:17-18)
ஏனெனில் இவையாவும் அவரவர் உழைப்பைப் பொறுத்துதான் அது உருவாகும். எந்த அளவிற்கு அதற்காக உழைக்கின்றார்களோ, அந்த அளவிற்கு அச்சுவனம் விரைவில் ஏற்பட்டு வரும்.


إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ.

79:44. எனவே அவற்றிற்குரிய பலன்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவின் படியே தோற்றத்திற்கு வரும். இவை யாவும் “மஷீயத்” என்னும் அல்லாஹ்வின் நிலையான சட்டப்படி நிகழக் கூடியவையாகும்.


إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا.

79:45. யார் “மனித செயலுக்கேற்ற பின் விளைவுகள்” என்ற இறைவனின் சட்டத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு, வாழ்வின் துர்பாக்கியங்களிலிருந்து மீள விரும்புகிறார்களோ, அவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்வதே உம் பணியாகும்.


كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا.

79:46. மாறாக இறைவழிகாட்டுதலை நிராகரித்து அதன் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் சமயம், “நமக்கு கிடைத்ததோ சொற்ப காலமே. அதாவது ஒரு மாலையோ அல்லது காலைப் பொழுதோ தான். நமக்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தால் நாம் திருந்துவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்குமே" என்று புலம்புவது தான் மிச்சம்.