بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

78:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:"வஹீ " என்னும் இறைவழிகாட்டுதல்களை ஒரு சமுதாயம் பின்பற்றி செயல்பட்டால், அது மகத்தான மறுமலர்ச்சியைக் காணும் என்று ஒவ்வொரு இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்கு உறுதி அளித்து வந்தனர். அதே போல் முஹம்மது நபி அவர்களும் தம் சமூகத்தார்க்கு உறுதி அளிக்க, அம்மக்களும் அந்த எழுச்சிமிகு நாளை எதிர்பார்த்து,


عَمَّ يَتَسَآءَلُونَ.

78:1. அது எப்போது வரும் என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொள்கின்றனர்.


عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ.

78:2. வரவிருக்கும் அந்த மகத்தான மறுமலர்ச்சியைப் பற்றி


ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ.

78:3. ஒவ்வொருவருடைய கருத்தும் ஒரு விதமாக உள்ளது.


كَلَّا سَيَعْلَمُونَ.

78:4. ஆனால் இவர்களின் இந்த கருத்து வேறுபாடுகள் வெகுநாட்களுக்கு நீடிக்காது. விரைவில் அவர்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விடும்.


ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ.

78:5. விரைவில் அதைப்பற்றி தெரிந்து கொள்வார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்லிவிடுகிறோம்.
பிரபஞ்ச படைப்புகளின் செயல்பாடுகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். அவையெல்லாம் முறைப்படி அழகாக செயல்படுகின்றன அல்லவா? திடீர் திருப்பங்கள் என்ற அடிப்படையில் எங்கேயும் எப்போதும் நிகழ்வதில்லை. அதே போல் இந்த மறுமலர்ச்சியும் முறைப்படிதான் படிப்படியாக வளர்ந்து வரும்.


أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًۭا.

78:6. நீங்கள் வாழும் பூமியைப் பாருங்கள். அது வான்கடலில் வேகமாக சுற்றிக் கொண்டிருப்பினும், நீங்கள் விரும்பியவாறு செயல்படுவதற்காக ஆடாது அசையாது விரிப்பாகப் படைக்கப்பட்டுள்ளது.


وَٱلْجِبَالَ أَوْتَادًۭا.

78:7. இந்த பூமியிலுள்ள மலைகளைப் பாருங்கள். பூமி தன் புவி ஈர்ப்பில் நிலைத்திருக்கும்படி ஆணிகளை அடித்து வைத்திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளன.
அது போலவே இந்த மறுமலர்ச்சியும் முறைப்படி வளர்ந்து வரும். பிரபஞ்ச படைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொண்டபின், மனித வாழ்க்கை எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் கவனியுங்கள்.


وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًۭا.

78:8. இனப் பெருக்கம் செய்து கொள்ளவும், ஒருவர் மற்றவரின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், நாம் உங்களில் ஆண் பெண் என்று ஜோடி ஜோடியாக படைத்திருப்பதையும் எண்ணிப் பாருங்கள்.
மாறி மாறி வரும் இரவு மற்றும் பகலைக் கவனித்தீர்களா? (3:190 & 191).


وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا.

78:9. இளைப்பாறுதலுக்காக உங்களுக்கு தூக்கத்தையும்,


وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا.

78:10. வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ள பகலையும்,


وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًۭا.

78:11. அதனால் ஏற்படும் சோர்வுகள் நீங்கி, மறுநாள் புத்துணர்ச்சிப் பெற்று செயல்பட இரவை ஆடையாகவும் நாம் ஆக்கியுள்ளதை கவனித்துப் பாருங்கள்?


وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا.

78:12. உங்கள் தலைக்கு மேலுள்ள வானங்களும் அதில் பிரம்மாண்டமான நட்சத்திரங்களும், கோள்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கவனித்தீர்களா?


وَجَعَلْنَا سِرَاجًۭا وَهَّاجًۭا.

78:13. ஒளிவீசும் சூரியனை கவனியுங்கள். ஒரே சமயத்தில் ஒளியையும் வெப்பத்தையும் தரக் கூடியதாக உள்ளதே. அதைப்பற்றி கவனித்தீர்களா?


وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءًۭ ثَجَّاجًۭا.

78:14. அதுமட்டுமின்றி கார் மேகங்களையும் அவற்றிலிருந்து பொழியும் மழைத் துளியையும் கவனியுங்கள்.


لِّنُخْرِجَ بِهِۦ حَبًّۭا وَنَبَاتًۭا.

78:15.அந்த மழை நீரைக்கொண்டு தானியங்களும் தாவர வகைகளும் பூமியில் விளைவதை கவனித்தீர்களா?


وَجَنَّٰتٍ أَلْفَافًا

78:16. அது மட்டுமா? கிளைகளுடன் கூடிய அடர்ந்த சோலைகள் பரவி உள்ளதை கவனித்தீர்களா?
பிரபஞ்சப் படைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களானால், அவை யாவும் முறைப்படி அதனதன் நேர காலப்படி செயல்பட்டு வருவதைத் தெரிந்து கொள்வீர்கள். மேலும் இந்தப் பூமியில் எதை விதைக்கிறீர்களோ அதன் மகசூலையே பெற்றுக் கொள்கிறீர்கள். அதாவது நெல்லுக்கு நெல் - கோதுமைக்கு கோதுமை. விதைப்பதற்கும், விதை பயிர் ஆவதற்கும் கால கட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன் படியே அதன் மகசூலை பெற்றுக் கொள்ள முடியும்.
அது போலவே உங்கள் சமுதாயத்தில் மக்கள் மத்தியில் எந்தச் சிந்தனையை ஊட்டி வளர்க்கிறீர்களோ, அதன்படியே மக்களின் செயல்பாடுகளும் அமையும். ஆக அந்த மகத்தான மறுமலர்ச்சி எப்போது வரும் என்ற விஷயத்திலும் ஒருவரையொருவர் இப்போது கருத்து பரிமாறிக் கொண்டிருக்கிறீர்கள்.


إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًۭا.

78:17. அதுவும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் தான் ஏற்படும். நிச்சயமாக ஏற்படும். எனவே அதை உங்கள் செயல்களின் பலன்களைப் பெறும் “அறுவடை நாள்” என்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
விதைகளை பூமியில் விதைத்ததும், அவை மண்ணிலுள்ள பல்வேறு சக்திகளுடன் போராடுகின்றன. அந்த விதைகளுக்கு காற்றும், சூரிய வெப்பமும், வானமும் துணை நிற்கின்றன. அதன்பின் அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று அதன் அடையாளமாக அது முளைத்து வெளியே வருகிறது. அதன்பின் அதுசெடியாகி, மரமாகி சதா கனிகளைக் கொடுக்கும் திறனைப் பெறுகின்றது.
அது போல இறைவழிகாட்டுதல்படி தூய மார்க்கத்தை மக்கள் மத்தியில் விதைக்கும்போது, பல எதிர் சக்திகளுடன் போராட வேண்டி வரும். அதன் பின்னரே சமுதாயத்திற்கு இஸ்லாம் எனும் தோட்டம் உருவாகி, கனிகள் என்னும் நற்பலன்களை ஈட்டித் தரும். எனவே தர்மத்தை நிலைநாட்ட அதர்மத்துடன் போராட வேண்டி வரும். அப்படி வரும் போராட்டங்களில் அல்லாஹ்வும், அவன் படைத்துள்ள பிரபஞ்ச சக்திகளாகிய மலக்குகளும் உதவி புரியும். அந்த மறுமலர்ச்சி என்பது பல போராட்டங்களுக்குப் பிறகுதான் ஏற்படும். அவசியம் ஏற்படின் களத்திலும் சந்திக்கவேண்டி வரும்.


يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًۭا.

78:18. எனவே போரின் சங்கொலி எழத்தான் செய்யும். நீங்கள் அணிவகுத்து களத்திற்குச் சேன்றே ஆக வேண்டும். அதன் விளைவாக


وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًۭا.

78:19. உயர் பதவிகளை வகிக்கும் செல்வ சீமான்களின் ஏகாதிபத்தியம் வலுவிழக்க ஆரம்பிக்கும்.


وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا.

78:20. மலைகளைப் போன்று தம்மை யாராலும் அசைக்க முடியாது என்றிருந்த அதிகார சாம்ராஜ்ஜியத்தின் நிலையும் ஆட்டம் கண்டுவிடும். அந்த அதிகாரம் எல்லாம் கானல் நீர் போன்று செயலற்று போய்விடும்.


إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًۭا.

78:21. வேதனை தரக்கூடிய நரகம் இத்தகையவர்களுக்கு காத்து நிற்கிறது. காரணம்


لِّلطَّٰغِينَ مَـَٔابًۭا.

78:22. வரம்பு மீறி நடந்து கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் அதுவே.


لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًۭا.

78:23. அந்த வேதனையிலிருந்து வெளியே வர எந்த வழிமுறையும் இருக்காது. காலம் காலமாக அதில் இருக்க நேரிடும்.


لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًۭا وَلَا شَرَابًا.

78:24. அதில் எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாது. குடிப்பதற்கு அருசுவை நீரோ பானமோ கிடைக்காது.


إِلَّا حَمِيمًۭا وَغَسَّاقًۭا.

78:25. அதற்கு பதிலாக தாகத்தை தீர்க்க முடியாத கொதி நீரும் வெறுக்கத் தக்க பானமும் தான் கொடுக்கப்படும் (38:57)


جَزَآءًۭ وِفَاقًا.

78:26. இவையெல்லாம் அவர்கள் மேலிருக்கும் வெறுப்பின் காரணமாக அல்ல. மாறாக அவர்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவுகளாக ஏற்படுபவை ஆகும்.


إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًۭا.

78:27. அப்படி அவர்கள் செய்து வந்த தீய செயல்கள்தான் என்ன? அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற விதிமுறைகளைப் பொய்ப்பித்ததோடு,


وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًۭا.

78:28. அவற்றை ஏளனமாகவும் பேசி வந்தார்கள். எனவே அவர்கள் தொடர்ந்து தீய செயல்களில் நிலைத்து விட்டனர். அந்த செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கத் தவறி விட்டார்கள்.
அவர்கள் செய்துவரும் ஒவ்வொரு செயலும் தம்மை விட்டோ அல்லது தம் சமுதாயத்தை விட்டோ ஒரு போதும் மறைவதில்லை. அதன் விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும். ஏனெனில்


وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًۭا.

78:29. மனித செயல்களின் பதிவேடுகள், இறைவன் புறத்திலிருந்து நிலை நிறுத்தப்பட்டுள்ள ஒன்றாகும். இதைப் பற்றி பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை.


فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا.

78:30. இவ்வாறாக இறைவன் நிலைநிறுத்திய விளைவுகள் ஒருபோதும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாது. எனவே அவர்கள் செய்து வந்த தீய செயல்களுக்கு ஏற்ற வேதனைகளை அனுபவிக்க வேண்டியதாகி விடுகிறது. அதன் வேதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.


إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا.

78:31. இதற்கு மாறாக இறை வழிகாட்டுதல்களை ஏற்று ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தவர்களின் சமூக அமைப்பு வேறு விதமாய் இருக்கும். இவர்கள் களத்தில் வெற்றி பெறுவார்கள்.


حَدَآئِقَ وَأَعْنَٰبًۭا.

78:32. சதா சந்தோஷங்களை அளிக்கும் வாழ்க்கை வசதிகளுடன் கொண்ட சமுதாயமாக உருவெடுக்கும். அதாவது தோட்டங்களும் பழங்களும் உள்ள சமுதாயம்.


وَكَوَاعِبَ أَتْرَابًۭا.

78:33. தூய உள்ளம் படைத்த பெண்களும் - எந்த ஆடவரும் தீண்டாத பெண்களும். எந்தப் பெண்ணையும் தீண்டாத ஆண்களும் கொண்ட சமுதாயமாக விளங்கும். ஒருமித்த கருத்துக்களுடன் பாசப் பிணைப்புடன் வாழும் கணவன் மனைவி (56:37). அந்த அளவிற்கு உயர் பண்புள்ள சமுதாயம்.


وَكَأْسًۭا دِهَاقًۭا.

78:34. அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை குறிக்கும் வகையில், ஆரோக்கியமளிக்கும் ருசிமிக்க குளிர் பானங்களும், பளபளக்கும் கிண்ணங்களும்.


لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا.

78:35. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படுவார்களே அன்றி வீணான பேச்சுகளோ, செயல்களோ அல்லது பொய் பித்தலாட்டங்களோ அங்கு அறவே நடைபெறாது. அப்படி எங்கும் நிகழ்வதாக செவியுறவும் மாட்டார்கள்.


جَزَآءًۭ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًۭا.

78:36. உங்கள் அனைவருக்கும் இறைவன் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட சட்ட விதிமுறைகள் இதுவே ஆகும். அதாவது நற்செயல்களுக்கு ஏற்ற நற்பலன்கள்.


رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًۭا.

78:37. இந்த சந்தோஷங்கள் எல்லாம் உங்களுக்கு யாரிடமிருந்து கிடைக்கின்றன என்று தெரியுமா? அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனாகிய ஏக இறைவனிடமிருந்து கிடைப்பவை ஆகும். ஏக இறைவன் நிர்ணயித்துள்ள சட்ட விதிமுறைகளில் தலையிடுவதற்கோ அல்லது அவற்றை மாற்றி அமைக்க யோசனை கூறுவதற்கோ யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அதாவது ஏக இறைவனாகிய அர்ரஹ்மானின் கட்டளைகளே நடைமுறை சட்டங்களாக இருக்கும்.
இறைவழிகாட்டுதல் என்கிற “ரூஹ்" கிடைக்காத அல்லது பின்பற்றாத சமுதாயங்கள் தம் மனோ இச்சைக்கு அடிபணிந்து வாழ்ந்து வரும். எனவே பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய "மலக்கு"களை ஆராய்ந்து, புதுப்புது கண்டுபிடிப்புகளைப் படைத்து, இறை வழிகாட்டுதலின் படி மனிதவள மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை தவறாக பயன்படுத்தி தம் அழிவைத் தாமே தேடிக் கொள்கின்றன. உதாரணத்திற்கு அணு சக்தியை சொல்லலாம். ஆனால் இறை வழிகாட்டுதல் என்கிற “ரூஹ்" வைப் பின்பற்றி நடக்கும் சமுதாயங்கள், பிரபஞ்ச இயற்கை சக்திகளை ஆராய்ந்து, ஆக்கப்பூர்வமாக மட்டும் பயன்படுத்தி முழு அளவில் வளர்ச்சிபெற்று சிறப்பாக வாழும்.


يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّۭا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًۭا.

78:38. இப்படியாக “ரூஹ்" வாக இருக்கும் இறைவழிகாட்டுதலும், பிரபஞ்ச இயற்கைச் சக்திளாக இருக்கும் "மலக்கு"களும் ஒரணியில் நின்று பணிபுரியும். ஏனெனில் அத்தகைய காலக் கட்டங்களில், அளவற்ற தயாளத் தன்மை உடைய இறைவனின் சொல்லுக்கு எதிராகப் பேச யாரும் சக்தி பெறமாட்டார்கள். மார்க்க அறிஞர்களுக்கு மட்டும் இறை நெறிமுறைகளுக்கு உட்பட்டு பேச அனுமதி கிடைக்கும். அது மட்டுமின்றி அவர்கள் எப்போதும் நேர்மையாகவே பேசுவார்கள். எனவே அந்த சமுதாயத்தில் கருத்து வேறுபாடுகளோ மோதல்களோ ஒருபோதும் இருக்காது.


ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا.

78:39. இவை யாவும் கற்பனை வளத்தோடு சொல்லப்படுவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். இவை யாவும் நடந்தே தீரும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இப்போதும் காலம் கடந்து விடவில்லை. யார் இத்தகைய சமுதாயத்தை உருவாக்க நாடுகிறார்களோ, அவர்கள் தம்மை படைத்த இறைவனின் அழகிய செயல் திட்டங்களை தம் இலட்சியமாகக் கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளட்டும்.


إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًۭا قَرِيبًۭا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا.

78:40. அவ்வாறு செயல்பட முன்வரவில்லை என்றால் விரைவில் அவர்களும் அழிவை சந்திக்க வேண்டிவரும் என்பதை அறிந்து கொள்ளட்டும். இதுநாள் வரையில் செய்து வந்த செயல்களின் விளைவுகளை சந்தித்துக் கொள்ளட்டும். அத்தகைய வேதனைகளை சந்திக்கும் கால கட்டத்தில் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாமல்,“இதை சுமக்க மனித பிறவி எடுத்ததற்குப் பதிலாக மண்ணோடு மண்ணாகி போயிருக்க வேண்டாமா?” என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டி வரும்.