بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
77:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا.
77:1. இதமாக வீசும் தென்றல் காற்றைக் கவனித்துப் பார்த்தீர்களா?
فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا.
77:2. அதே காற்று புயலாக மாறும் போது, என்ன நேர்கிறது என்பதையும் கவனித்தீர்களா?
وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا.
77:3. பரவலாகப் பொழியும் மழையை கவனித்துப் பார்த்தீர்களா?
அதாவது தென்றல் காற்றும் இதமான மழையும் உங்களுக்குப் பிடிக்கும். ஆனால் புயல் காற்றோ அல்லது பெரு வெள்ளமோ உங்களுக்கு பிடிக்காது. காரணம் அவை ஆபத்தை விளைவிக்கும். அதுபோலத் தான் உங்களுடைய சமுதாயமும். தென்றல் காற்றைப் போன்றும், மழை நீரின் வளத்தோடும் சிறப்பான சமுதாயமாக விளங்கவேண்டும் என்பதே இறைவனின் நாட்டமாகும். ஆனால் நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்காமல் தன்னிச்சையாக வாழ முடிவெடுப்பதால், அதன் விபரீத விளைவாக கலகம், கலவரம், கொலை கொள்ளைப் போன்று ஏற்பட்டு உங்கள் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்து விடும். அந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய முடியாது.
فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا.
77:4. எனவே தான் வாழ்வின் சரியான பாதை எது தவறான பாதை எது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கவே இறைத்தூதர் வந்துள்ளார். (25:1)அவருடைய அறிவுரைகளை கவனித்துப் பார்த்தீர்களா?
فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا.
77:5. உங்களுக்கு நல்லறிவுரைகளை தருவதைப் பற்றி கவனித்துப் பாருங்கள்.
عُذْرًا أَوْ نُذْرًا.
77:6. அவை யாவும் உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்காகவும், அதற்கு மாறு செய்வதால் ஏற்படும் விபரீத விளைவுகளை எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ.
77:7. அந்த அறிவுரைகளை ஏற்க மறுத்து தன்னிச்சையாக செயல்படுவீர்களானால் வாக்களிக்கப்பட்ட அழிவுகள் உங்களை வந்தடைந்தே தீரும்.
அதாவது இறைவனின் ஆட்சியமைப்பை ஏற்படுத்தி சிறந்த சமுதாயத்தை உருவாக்கிடவே மூஃமின்களின் ஜமாஅத் உருவாக்கப்படுகிறது. இதை எதிர்த்து போரிட முன்வருபவர்களை ஒடுக்கி வைக்க வேண்டி வருகிறது.
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ.
77:8. அது சமயம் சிறு சிறு அரசமைப்புகள் வலிமை இழந்துவிடும்.
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ.
77:9. அதைத் தொடர்ந்து கொடி கட்டிப் பறக்கும் அராஜக ஆட்சி முறையில் பிளவு ஏற்பட்டு பலவீனமடைந்து விடும்.
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ.
77:10. மேலும் மலைகளைப் போல் செல்வங்களை குவித்து வைத்துக் கொண்டிருப்பவர்களின் மமதை துகள்களாக பறந்தோடி விடும்;.
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ.
77:11. அப்போது இறைவனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பவர்களில், யார் யார் எந்த பொறுப்பை சுமப்பார்கள் என்பதையும் அதற்குரிய நேரம் காலம் ஆகியவை குறித்து கொடுக்கப்படும்.
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ.
77:12. இப்படிப்பட்ட மறுமலர்ச்சி ஏற்பட ஏன் கால தாமதம் ஆகிறது?
ஒவ்வொரு செயல்திட்டமும் படிப்படியாகத் தான் முன்னேறி முழு அளவில் நடைமுறைப்படுத்த முடியும். அதற்குரிய சரியான தருணத்தை எதிர் பார்ப்பதால்தான் கால தாமதம் ஏற்படுகிறது. அதாவது நல்லவர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு கிடைப்பதும், தீயவர்கள் செய்து வந்த செயலுக்கு ஏற்ற தண்டனை கிடைக்கச் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
لِيَوْمِ ٱلْفَصْلِ.
77:13. அதுவே “அறுவடை நாள்” என்பதாகும்.
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ.
77:14. இந்த "அறுவடை நாளை"ப் பற்றி இறைவனைத் தவிர்த்து வேறு யார்தான் உமக்கு சரியான விளக்கத்தைத் தர முடியும்?
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:15. அந்த கால கட்டத்தில் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபட்டோருக்குக் கிடைக்கும் கேடுகெட்ட வேதனைகள் தான் அந்த “அறுவடை நாள்” என்பதாகும்.
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ.
77:16. இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களிடம்,“முன்சென்ற சமுதாயங்களுக்கு இத்தகைய இழிநிலை ஏற்படவில்லையா?” என்று கேளுங்கள்.
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ.
77:17. “அதன் பின் தோன்றிய சமுதாயங்கள், அதே போன்று தீய செயல்களைச் செய்து வந்த போது, அவர்களுக்கும் அதே நிலை ஏற்படவில்லையா?” என்றும் கேளுங்கள்.
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ.
77:18. அதே போன்று தான் இன்றைய காலத்திலும் தீய செயல்களை செய்வோருக்கு தண்டனை கிடைத்தே தீரும். நம்முடைய தீர்ப்பில் எந்த மாற்றமும் ஏற்படாது.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:19. எனவேதான் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும் தண்டனை கடுமையானதாக இருக்கின்றன.
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ.
77:20. உங்களுடைய படைப்பின் படித்தரங்களைப் பற்றியே சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் தானே உங்கள் அனைவரையும் நீரின் துளி சத்திலிருந்து பல படித்தரங்களை கடக்கச் செய்து படைத்தோம்?
فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍۢ مَّكِينٍ.
77:21. பின்னர் ஆண் பெண் சேர்க்கையின் மூலம் பாதுகாப்பான கர்ப்பப் பையில் வைத்து படைத்தோம்.
إِلَىٰ قَدَرٍۢ مَّعْلُومٍۢ.
77:22. நீங்கள் அறியக்கூடிய கால அளவுபடி அந்த கர்ப்பப் பையில் தங்கி பிறக்கிறீர்கள்.
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ.
77:23. இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்தது நாம் தானே. இப்படியாக நம்முடைய ஒவ்வொரு செயல்திட்டமும் நிறைவேற சிறந்த முறையில் ஏற்பாடு செய்துள்ளோம் அல்லவா? ஆனால்
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:24. இறைவனின் இத்தகைய வல்லமையை பொய்யென கூறி இறைவழிகாட்டுதலை நிராகரித்து, தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைத் தானே காத்து நிற்கும்.
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا.
77:25. உங்கள் அனைவரையும் அரவணைத்துக் கொண்டிருக்கும் பூமியைப் பற்றி சிந்தித்துப் பார்த்ததுண்டா? அதை நாம் தானே அவ்வாறு படைத்தோம்?
أَحْيَآءًۭ وَأَمْوَٰتًۭا.
77:26. இந்த பூமியில் வாழ்வும் மரணமும் தொடர்ந்து நடைப்பெற்று வருவதை கவனிக்க மாட்டீர்களா?
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍۢ وَأَسْقَيْنَٰكُم مَّآءًۭ فُرَاتًۭا.
77:27. மேலும் அதில் மிக உயரமான மலைகளையும் படைத்துள்ளோம். அதை கொண்டு உங்களுக்கு இனிமையான தண்ணீரும் கிடைக்கச் செய்கிறோம்.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:28. இவை எல்லாம் உண்மை என்றால், இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான வேதனைகள் கிடைக்கும் என்பதும் உண்மையாகும் அல்லவா?
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ.
77:29. ஆக “மனித செயல்களுக்கேற்ற பின் விளைவுகள்” என்ற சட்டத்தை ஏற்க மறுப்பவர்களிடம், “எதை பொய்ப்பித்து வருகிறீர்களோ அதன்படியே நடப்பீர்களாக”
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّۢ ذِى ثَلَٰثِ شُعَبٍۢ.
77:30. மூன்று கிளைகள் உடைய புகை மண்டலங்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அதன்பால் நடப்பீர்களாக.
தவறான சமூக அமைப்புகளால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள், குடும்ப சிக்கல்கள் மற்றும் உடல் நிலை சிக்கல்களாகவும் இருக்கலாம்.
لَّا ظَلِيلٍۢ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ.
77:31. அவ்வேதனைகளிலிருந்து விடுபடவும் முடியாது. அவற்றை அனுபவிக்கவும் முடியாது.
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍۢ كَٱلْقَصْرِ.
77:32. காரணம் அந்த வேதனைகள் பெரிய பெரிய நெருப்பு பொறிகளைக் கொண்ட குண்டங்களில் எறியப்படுவது போல் இருக்கும்.
كَأَنَّهُۥ جِمَٰلَتٌۭ صُفْرٌۭ.
77:33. அவற்றை பார்ப்பதற்கு மஞ்சள் நிறமுள்ள பெரிய ஒட்டகங்கள் போன்று இருக்கும்.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:34. இத்தகைய அதிபயங்கர வேதனைகளைப் பற்றி கவலைக் கொள்ளாமல் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுகிறீர்களே! உங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதில் சந்தேகம் உண்டா?
هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ.
77:35. மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், யாரும் எதைப் பற்றியும் பேச வேண்டியிருக்காது.
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ.
77:36. தான் தவறான பாதையில் சென்றதற்கு எந்த சாக்குப் போக்கையும் கூற இயலாது.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:37. இத்தகைய நிலை ஏற்படுவதைப் பற்றி கவலைக் கொள்ளாமல் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பது நிச்சயம்.
هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ.
77:38. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் செய்து வரும் நன்மை தீமை ஆகிய செயல்களுக்கு ஏற்ப பலன்களும் தண்டனைகளும் நியாயமான முறையில் கிடைக்கும் கால கட்டம் தான் "அறுவடைநாள்" என்பதாகும். எனவே உங்களுக்கு முன்னிருந்தோரையும் நாம் ஒன்று சேர்ப்போம்.
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌۭ فَكِيدُونِ.
77:39. எனவே நிர்ணயிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தப்பித்துச் செல்ல உங்களால் எந்த அளவுக்கு திட்டங்களைத் தீட்டிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தீட்டிக் கொள்ளுங்கள். எதையும் விட்டுவைக்காதீர்கள்.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:40. இத்தகைய அறைகூவலுக்குப் பிறகும் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பது நிச்சயம்.
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍۢ وَعُيُونٍۢ.
77:41. ஆனால் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்தவர்களின் நிலை இதற்கு நேர் மாற்றமாக இருக்கும். அவர்கள் குளிர்ந்த நிழல்களிலும், நீர் சுனைகளிலும் சுகத்துடன் இருப்பார்கள்.
அதாவது இறைவன் “நிர்ணயித்த அறுவடை நாள்” மூஃமின்களுக்கு வேறு விதமாக இருக்கும்.
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ.
77:42. இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகள் அனைத்தும் அவர்களுக்குக் கிடைத்து வரும்.
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.
77:43. “இவையெல்லாம் நீங்கள் உழைத்ததன் பலனாகக் கிடைக்கின்ற சந்தோஷங்களாகும். எனவே நீங்கள் விரும்பியவாறு எந்த சிரமுமின்றி தாரளாமாகப் புசியுங்கள். இன்னும் வேண்டுமளவுக்கு பருகுங்கள்” என்று கூறப்படும்.
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ.
77:44. இவ்வாறே நன்மையான செயல்களை செய்வோருக்கு நாம் நற்கூலி கொடுப்போம்.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:45. ஆனால் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது,
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ.
77:46. இறைவனின் செயல்திட்டத்தை பொய்யாக்குபவர்களே! நீங்கள் இன்னும் சிறிது காலத்திற்கு சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:47. ஆனால் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பது நிச்சயம் என்பதை அவர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளட்டும்.
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ.
77:48. இதற்குக் காரணம் இறைவழிகாட்டுதலின்படி உருவான ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு தலை வணங்கி செயல்படுங்கள் என்று சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.
77:49. எனவே தான் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது,
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ.
77:50. இந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை செய்திகளை எடுத்துரைத்தும், அவர்களுக்கு வேறு எந்த ஆதாரத்தை எடுத்துச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?