بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

76:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


هَلْ أَتَىٰ عَلَى ٱلْإِنسَٰنِ حِينٌۭ مِّنَ ٱلدَّهْرِ لَمْ يَكُن شَيْـًۭٔا مَّذْكُورًا.

76:1. ஆதிகால மனிதன், பல யுகங்களாக இன்ன பொருள் என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குக் கூட தகுதியற்ற நிலையில் இருந்ததில்லையா? (19:77)


إِنَّا خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍۢ نَّبْتَلِيهِ فَجَعَلْنَٰهُ سَمِيعًۢا بَصِيرًا.

76:2. இவ்வாறாக யுகங்கள் பல கடந்து இறைவனின் செயல் திட்டப்படி, ஆண் பெண் சேர்க்கையின் மூலம் இந்திரியத் துளியிலிருந்து உருவாகும் ஏற்பாடு ஆனது. அதன் பின் அவனுக்கு கேட்கும் சக்தியும், பார்க்கும் சக்தியும் படிப்படியாகக் கிடைத்து நாகரீக மனிதனாக உருவெடுத்தான். (பார்க்க 32:5-9)


إِنَّا هَدَيْنَٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرًۭا وَإِمَّا كَفُورًا.

76:3. மேலும் அவன் சிறப்பாக வாழ்வதற்காக இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. இறைவனின் திட்டப்படி மனிதனுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு விட்டதால், வழிகாட்டுதலை ஏற்று நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்வதும், அதற்கு மாறு செய்வதும் மனிதனுடைய விருப்பத்திற்கு விடப்பட்டுவிட்டது. (மேலும் பார்க்க 18:29)


إِنَّآ أَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ سَلَٰسِلَا۟ وَأَغْلَٰلًۭا وَسَعِيرًا.

76:4. மேலும் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தவறான பாதையில் செல்பவர்களின் வாழ்க்கை வீணான சடங்குகளின் வலையில் சிக்கி, வேதனை மிக்கதாக மாறிவிடும் என்று அந்த வழிகாட்டுதல் அறிவித்து இருந்தது. (பார்க்க 7:157)


إِنَّ ٱلْأَبْرَارَ يَشْرَبُونَ مِن كَأْسٍۢ كَانَ مِزَاجُهَا كَافُورًا.

76:5. மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்று நற்செயல்களைச் செய்வோரின் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயர்ந்து, இனிமையாகவும் நறுமணம் வீசக் கூடியதாகவும் இருக்கும் என்றும் அதில் சொல்லப்பட்டது. அவர்களுடைய நற்பண்புகள் இவ்வாறு இருக்கும்.


عَيْنًۭا يَشْرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًۭا.

76:6. நறுமணம் என்பது அவர்களுடைய நற்செயல்களின் பலனாக அவர்களுக்குள் வளரும் நன்நடத்தைகளாகும். இத்தகைய நன்நடத்தை உடையவர்கள் இன்புற்று வாழும் தகுதியும், அவர்கள் எங்கு சொன்றாலும் அவர்களுக்கு வரவேற்பும் மதிப்பும் மறியாதையும் கிடைக்கும்.


يُوفُونَ بِٱلنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًۭا كَانَ شَرُّهُۥ مُسْتَطِيرًۭا.

76:7. இவர்கள் தாம் தம் இறைவன் காட்டிய வழியில் நிலைத்திருந்து அவனுடைய செயல்திட்டங்களை நிறைவேற்றி வந்தவர்கள் ஆவர். இறைக்கட்டளைக்கு மாறு செய்வதால் தீமைகள் நாலாப் புறமும் பரவி விடும் என்பதையும், அவற்றை நீக்குவது கடினமாகிவிடும் என்பதையும் அறிந்து அதற்கு அஞ்சி நடந்தவர்கள் ஆவர்.


وَيُطْعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسْكِينًۭا وَيَتِيمًۭا وَأَسِيرًا.

76:8. இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க, இறை வழிகாட்டுதலின் படி அமைப்பை ஏற்படுத்தி நலிந்த மக்களின் துயரங்களை நீக்க ஆவன செய்வார்கள். அதாவது சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றவர்களும், சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களும் இதன் மூலம் உதவி பெறுவார்கள். இவை யாவும் இறைவன் மீதுள்ள பற்றுதலின் காரணமாகவே செய்வார்கள். (பார்க்க 2:177)


إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَآءًۭ وَلَا شُكُورًا.

76:9. மேலும் இவர்கள் மக்களிடம், “உங்களுக்கு நாங்கள் செய்து வரும் உபகாரங்கள் எல்லாம் எங்களைப் படைத்த இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே அன்றி உங்களிடமிருந்து நன்றியை எதிர்ப்பார்த்து இவற்றை செய்யவில்லை என்றும், இவ்வாறு செய்வது தம் கடமை என்றும், வார்த்தைக்குக் கூட நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றும் சொல்லி விடுவார்கள்.


إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوْمًا عَبُوسًۭا قَمْطَرِيرًۭا.

76:10. “இத்தகைய நற்செயல்களை நாங்கள் செய்யவில்லை என்றால், இறைவனின் நியதிப்படி சமூக சீரழிவுகள் ஏற்பட்டு, பல துயரங்களுக்கு ஆளாகி எங்கள் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்பதை அறிந்து, அதற்கு நாங்கள் அஞ்சி செயல்படுகிறோம்” என்று கூறுவார்கள்.


فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلْيَوْمِ وَلَقَّىٰهُمْ نَضْرَةًۭ وَسُرُورًۭا.

76:11. இத்தகைய சேவை மனப்பான்மையினால் மக்கள் அனைவரின் அபிமானத்தைப் பெற்று, தீமைகள் எதுவும் நெருங்காதவாறு அல்லாஹ்வின் சட்டம் பாதுகாத்துக் கொள்கிறது. இதனால் அவர்களுக்கு முக மலர்ச்சியும் மகிழ்வும் நிலைத்திருக்கும்.


وَجَزَىٰهُم بِمَا صَبَرُوا۟ جَنَّةًۭ وَحَرِيرًۭا.

76:12. மேலும் அவர்கள் இறைவனின் செயல்திட்டத்தில் நிலைத்திருந்து தொடர்ந்து உழைத்து வந்ததால், அவர்களுடைய சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். எனவே அவர்களை கண்ணியப்படுத்தும் வகையில் பட்டாலான ஆடைகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும்.


مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلْأَرَآئِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًۭا وَلَا زَمْهَرِيرًۭا.

76:13. மேலும் அவர்கள் தம் ஆசனங்களில் சாய்ந்தவாறு தம் அலுவல்களைக் கவனித்து வருவார்கள். அவர்களுடைய வசிப்பிடங்களில் அதிக வெப்பமோ அல்லது குளிரச்சியோ இருக்காது. அதாவது இதமான வாழ்க்கைக் கிடைக்கும்.


وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَٰلُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًۭا.

76:14. மேலும் அவர்கள் வாழும் நாடு, செல்வ செழிப்புடன் நிழல்கள் தரும் மரங்கள் நிறைந்ததாக இருக்கும். மேலும் அவர்கள் விரும்பும் கனி வகைகள் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும்.


وَيُطَافُ عَلَيْهِم بِـَٔانِيَةٍۢ مِّن فِضَّةٍۢ وَأَكْوَابٍۢ كَانَتْ قَوَارِيرَا۠.

76:15. அவர்களுடைய பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், அங்கு பளபளக்கும் வெள்ளிப் பாத்திரங்களில் ருசிகர குளிர் பானங்களும் கிடைக்கும். தேவையுள்ளவர்கள் அவற்றை பருகிக் கொள்ளலாம்.


قَوَارِيرَا۟ مِن فِضَّةٍۢ قَدَّرُوهَا تَقْدِيرًۭا.

76:16. அங்கு வெள்ளியினாலான பளபளக்கும் கிண்ணங்கள் இருக்கும். அவை பல அளவுகளுடன் செய்யப்பட்டிருக்கும். தேவைக்கேற்ப அவற்றை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.


وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًۭا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا.

76:17. மேலும் அங்கு ஊட்டச் சத்து மிக்க பானங்களும், போஷாக்குகளும் கிடைக்கும். இவற்றைக் உட்கொள்வதால் முழு வேகத்துடன் பணி புரிய உதவிகரமாக இருக்கும்.


عَيْنًۭا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًۭا.

76:18. மேலும் அங்கு சிந்தனா சக்தியை ஊக்குவிக்கும் போஷாக்குகளும் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்தி வந்தால் மனித சிந்தனை மிகவும் வேகமாக வளர்ந்து வரும். தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவருக்கும் அறிவாற்றலும் செயல்வேகமும் கூடி வரும்.


۞ وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًۭا مَّنثُورًۭا.

76:19. மேலும் சுவனத்து சோலைகளில் பணிபுரியும் அலுவலகங்களில், இவர்களுக்குத் துணை புரிய இளைஞர்களும் இருப்பார்கள். அவர்களுடைய நடை உடை பாவனை எல்லாமே பரவசமூட்டும் வகையில் இருக்கும்.


وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًۭا وَمُلْكًۭا كَبِيرًا.

76:20. அத்தகைய சுவனத்து சோலையில் நீங்கள் இருக்க நேர்ந்தால், பெரும் பாக்கியங்களுடன் கூடிய அரசாங்கம் நடந்து வருவதை காண்பீர்கள். அதாவது எல்லா வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக செயல்பட்டு வரும்.


َٰلِيَهُمْ ثِيَابُ سُندُسٍ خُضْرٌۭ وَإِسْتَبْرَقٌۭ ۖ وَحُلُّوٓا۟ أَسَاوِرَ مِن فِضَّةٍۢ وَسَقَىٰهُمْ رَبُّهُمْ شَرَابًۭا طَهُورًا.

76:21. அத்தகைய சிறந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள், பல வண்ணங்களைக் கொண்டு ஜொலிக்கின்ற பட்டாடைகள் உடுத்திக் கொண்டும், கைகளில் வெள்ளியால் செய்யப்பட்ட கடகங்களை அணிந்து கொண்டும் கம்பீரமாகக் காட்சியளிப்பார்கள். மேலும் அவர்களுக்குத் தேவைப்படும் போது, குளிர்பானங்களும் அளிக்கப்படும். இத்தகைய வசதிகளுடன் அவர்கள் தம் அரசுப் பணிகளை கவனித்து வருவார்கள்.


إِنَّ هَٰذَا كَانَ لَكُمْ جَزَآءًۭ وَكَانَ سَعْيُكُم مَّشْكُورًا.

76:22. இவையாவும் உங்களுக்கு தானமாகக் கிடைப்பவை அல்ல. நீங்கள் அயராது உழைத்து வந்ததன் பலனாக கிடைக்கின்ற வசதிகளாகும். நீங்கள் இறைவனின் நாட்டப்படி செயல்பட்டு வந்ததால் உங்களுடைய தேவைகள் நிறைவேறி வருகின்றன.
ஆனால் இந்த குர்ஆனிய வழிகாட்டுதல் மீது நம்பிக்கைக் கொள்ளாதவர்கள், இது இறைத்தூதரே எழுதிக் கொண்ட விஷயம் என்றே கூறுகின்றனர். (பார்க்க 25:4)


إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ ٱلْقُرْءَانَ تَنزِيلًۭا.

76:23. இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து சிறுக சிறுக இறக்கியருளப்பட்டது என்று அவர்களுக்குத் தெளிவு படுத்திவிடுங்கள். இதன் நோக்கமே மேற்சொல்லப்பட்ட சிறந்த சுவனத்திற்கு ஒப்பான சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும்.


فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ ءَاثِمًا أَوْ كَفُورًۭا.

76:24. எனவே இறைவனின் இத்திட்டம் நிறைவேறும் வரையில் நீர் உமது சக தோழர்களுடன் மனம் துவளாமால் அயராது 76:8-10இல் சொன்னபடி செயல்பட்டு வாருங்கள். அவர்களில் பாவிகளையோ சமூக விரோதிகளையோ ஒருபோதும் பின்பற்றாதீர்கள்.


وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ بُكْرَةًۭ وَأَصِيلًۭا.

76:25. இந்த மாபெரும் செயல்திட்டம் நிறைவேற உமது இறைவனின் பரிபாலனத் திட்டங்களைப் பற்றி கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் (பார்க்க 42:38) இதற்காக காலையிலும் மாலையிலும் ஒன்று கூடி கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.


وَمِنَ ٱلَّيْلِ فَٱسْجُدْ لَهُۥ وَسَبِّحْهُ لَيْلًۭا طَوِيلًا.

76:26. அவசரத் தேவைக்கு இரவிலும் கூடி அவனுடைய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். மேலும் அவனுடைய செயல்திட்டங்களை நிறைவேற்ற கூடுமான வரையில் செயல்பட்டு வாருங்கள்.


إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمْ يَوْمًۭا ثَقِيلًۭا.

76:27. உம்மை எதிர்ப்பவர்கள் யாவரும் குறுகிய கால சந்தோஷங்களின் பக்கம் விரைபவர்கள் தாம். பிற்காலத்தில் அவர்களுக்கு நேரவிருக்கும் துயரங்களைப் பற்றி சிந்தித்து பார்ப்பதே இல்லை. இதனால் தற்காலிக சந்தோஷங்கள் மற்றும் நிலையான வருங்கால சந்தோஷங்களுக்காக அறிவிக்கப்படும் இறைவழிகாட்டுதலை புறக்கணிக்கின்றனர்.


نَّحْنُ خَلَقْنَٰهُمْ وَشَدَدْنَآ أَسْرَهُمْ ۖ وَإِذَا شِئْنَا بَدَّلْنَآ أَمْثَٰلَهُمْ تَبْدِيلًا.

76:28. நாம் தான் அவர்கள் அனைவரையும் படைத்து பலம் வாய்ந்த உடலமைப்பை கொடுத்தோம். ஆனால் அவர்கள் தம் வலிமையை நமக்கு எதிராக பயன்படுத்த துணிந்து விட்டார்கள். அவர்களுடைய இடத்தில் வேறு படைப்பை நம்மால் கொண்டு வர முடியாதா?


إِنَّ هَٰذِهِۦ تَذْكِرَةٌۭ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًۭا.

76:29. நிச்சயமாக இந்த வழிகாட்டுதல் நல்லுபதேசமே ஆகும். எனவே எந்த சமூகத்தவர்கள் விரும்புகிறார்களோ, அவர்கள் தங்களுடைய இறைவனின் காட்டும் நேர்வழியினை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.


وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًۭا.

76:30. ஆனால் இறைவழிகாட்டுதலில் வந்து இணைந்துவிட்ட பின், அல்லாஹ்வின் நாட்டம் என்னவோ அதுவே அவர்களுடைய நாட்டமாக இருக்க வேண்டும். யார் அல்லாஹ்வின் நாட்டப்படி செயல்படுகிறார்கள் என்ற உண்மை அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அவர்களுடைய செயல்களின் விளைவுகளே அவர்களை காட்டிக் கொடுத்து விடும்.


يُدْخِلُ مَن يَشَآءُ فِى رَحْمَتِهِۦ ۚ وَٱلظَّٰلِمِينَ أَعَدَّ لَهُمْ عَذَابًا أَلِيمًۢا.

76:31. இவ்வாறாக யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்பட விரும்பி வருகிறார்களோ, அவர்களையே தன் அருட்கொடைகளைப் பெறும் பட்டியலில் இணைத்துக் கொள்கிறான். அன்றியும் இந்த அமைப்பில் வந்து இணைந்த பின் யார் அநியாயமாக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனைகளை சித்தப்படுத்தி வைத்துள்ளான்.