بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
75:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ.
75:1. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! "அல்லாஹ் உருவாக்கியுள்ள நிலையான சட்டம்" அவர்கள் எண்ணுவது போன்று அல்ல என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்திவிடுவீராக.
மனித செயல்களின் இறுதிவிளைவுகள் என்ற "மறுமை நாள்" என்ன என்பதைப் பற்றி நான் தெளிவுபடுத்துகிறேன்.
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ.
75:2. தம் தவறுகளை உணர்ந்து மனம் வருந்திய நபரைப் பற்றி (பார்க்க 12:53) கவனித்துப் பாருங்கள். அதாவது மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப விளைவுகள் ஏற்பட்டே தீரும் என்பதற்கு அது சாட்சியாக இருக்கிறது. அந்த விளைவுகள் இவ்வுலகில் ஏற்படுமோ அல்லது மரணத்திற்குப் பின் ஏற்படுமோ! ஆனால் ஏற்படுவது என்னவோ சர்வ நிச்சயமே. இதுவே "அல்லாஹ் உருவாக்கியுள்ள நிலையான சட்டம்" ஆகும்.
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ.
75:3. மனிதன் மரணித்த பின் மீண்டும் எழுப்பப்பட மாட்டான் என்று எண்ணிக் கொண்டானா? (பார்க்க 36:78, 37:16-17) இதனால் அவன் செய்து வரும் தீய செயல்களின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று எண்ணிக் கொண்டானா?
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ.
75:4. இப்படி அவனை மீண்டும் உயிர் பெற வைத்து எழுப்புவது நமக்கு சிரமமான காரியமல்ல. அவனுடைய அங்கங்களின் ஒவ்வொரு உறுப்பையும் அவ்வாறே மீண்டும் படைக்கும் ஆற்றலுடையோம் நாம். எனவே அவனுடைய செயல்களுக்குரிய பலன்களைப் பெற்றே ஆகவேண்டும் என்பதே நம்முடைய செயல்திட்டம்.
بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ.
75:5. எனினும் அவன் மறுமை நாளை நம்பாமலிருக்க காரணம் யாதெனில் அவன் மீண்டும் படைக்கப்படுவது என்பது முடியாத காரியம் என எண்ணிக் கொள்கிறான்.
ஆனால் தாம் செய்யும் செயல்களுக்குரிய பிரதிப்பலன்களை இவ்வுலகில் கிடைக்கவில்லை என்றாலும், மரணித்த பின் அடைந்தே தீருவோம் என்பதை அவன் அறிந்தால் அது அவனுக்கு நலம். காரணம், அவன் செய்யும் ஒவ்வொரு செயலைப் பற்றியும் அதன் பின்விளைவுகள் என்னவென்பதையும் அனுசரித்து செயல்படுவான். இப்படியாக அவன் சிந்தித்து செயலாற்றுபவனாக மாறிவிடுவான். நற்செயல்களை செய்யும் ஆர்வமும் அவனுள் கூடிவரும். காரணம் அங்கு அவனுக்கு சுவர்க்கம் கிடைப்பது உறுதி. இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் அவன்
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ.
75:6. அந்த கியமா நாள் எப்போது வரும் என்று ஏளனமாக கேட்கிறான்.
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ.
75:7. அது எப்போது வரும் என்ற ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் அவை வரும்போது அவனுடைய பார்வை பயத்தால் மங்கிப்போகும்.
இத்தகைய கியாம நாள் இவ்வுலகிலும் ஏற்படும். அதாவது ஒரு சமுதாயம் தீய செயலில் ஈடுபடும்போது, அதன் விளைவுகள், துயரங்களாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு இறுதியில் அழிவை ஏற்படுத்தி விடும். இதையும் குர்ஆன் மொழியில் கியாம நாள் என்பதாகும். இத்தகைய அழிவுகள் முஹம்மது நபி காலத்திலும் அரபு நாட்டில் வாழ்ந்த குரைஷியர்களுக்கு ஏற்பட்டது. அவர்களுடைய தேசியக் கொடியின் சின்னம் சந்திரன் ஆகும்.
وَخَسَفَ ٱلْقَمَرُ.
75:8. அரபு நாட்டில் சந்திரனின் சின்னத்தைக் கொண்டு நடைபெற்று வரும் எதேச்சாதிகார கொடுங்கோலாட்சி மங்கிவிடும்.
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ.
75:9. இந்த குர்ஆனிய ஆட்சிமுறைக்கு எதிராக ஈரானியர்களும் அரபு நாட்டவரும் கைக் கோர்த்துக் கொள்வார்கள். (பார்க்க 54:1, 81:1)
அரபு நாட்டு அரசாட்சியின் சின்னம் சந்திரன் ஆகும். ஈரானியர்களின் சின்னம் சூரியன் ஆகும்.
يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ.
75:10. இந்த மோதலினால் ஏற்படும் திடுக்கிடும் நிலையை எதிர்கொள்ள முடியாமல் விரண்டு ஓடினால் எங்கு ஓடுவது என்று மனிதன் புலம்பிக் கொண்டிருப்பான். இதே நிலை மறுமை நாளிலும் ஏற்படும்.
كَلَّا لَا وَزَرَ.
75:11. இல்லை. இல்லை. தப்பித்துச் செல்வதற்கு எந்த இடமுமில்லை என்பதே அவர்களுக்குக் கிடைக்கும் பதிலாக இருக்கும்.
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ.
75:12. அதைத் தொடர்ந்து இறைவனின் ஆட்சியமைப்பு இவ்வுலகில் ஏற்படும். அதன் கீழ் செயல்படும் நீதிமன்றத்தின் முன்பே நிற்க வேண்டி வரும். அங்கிருந்து வேறு எங்கும் இவனுக்கு புகலிடம் கிடைக்காது.
يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ.
75:13. அந்த கால கட்டத்தில் அவன் முன்பின் செய்து வந்த எல்லா செயல்களின் விளைவுகளும் அவன் முன் வந்து நிற்கும்.
بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌۭ.
75:14. அத்தகைய கால கட்டத்தில் மனிதன் தனக்கெதிராக தானே சாட்சி சொல்வான். அதாவது அவன் செய்த செயல்களே அவனை காட்டிக் கொடுத்துவிடும்.
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ.
75:15. மேலும் தான் செய்த தவறுகளுக்கு காரணம் காட்டி தண்டனையிலிருந்து தப்பிக்கவும், தன் பக்கம் நியாயம் இருப்பதை நிரூபிக்கவும் முயலுவான். இருந்தபோதிலும்
لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ.
75:16. “உன் வாதத் திறமையால் நிரபராதி என நிரூபிக்க முடியாது. உன்னிடம் இருக்கும் பேச்சுத் திறமையைக் காட்ட வேண்டிய அவசியமும் இருக்காது. உனக்குக் கிடைக்கவிருக்கின்ற தீர்ப்புக்காக நீ அவசரப்படாதே” என்று கூறப்படும்.
إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ.
75:17. இப்படியாக மனிதன் முன்பின் செய்யும் எல்லா செயல்களின் பதிவுகளையும் ஒன்றுதிரட்டி, அவற்றின் விளைவுகளை எடுத்துரைக்கும் ஏற்பாட்டினை நாமே செய்திருக்கிறோம்.
فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ.
75:18. எனவே அவன் செய்து வந்த செயலுக்கேற்ப தீர்ப்பளித்து அதை அவனிடம் எடுத்துரைக்கப்படும். அதன்படி நடக்க காவலாளிகளுக்கு உத்தரவிடப்படும்.
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ.
75:19. இப்படியாக நம் நியதிப்படி ஒவ்வொருவரின் செயல்களின் விளைவுகளும் தெளிவாகிவரும்.
சிந்தனையாளர்களே! மேற்சொன்ன 17-19 வாசகங்களில் குர்ஆனை ஒன்று சேர்ப்பதும், அதை ஓதிக் காண்பிப்பதும், அதை விவரமாக எடுத்துரைத்து செயல்பட வைப்பதும் நம்மீதுள்ள கடமை என்று அல்லாஹ் கூறுவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பொருள் கொள்வதும் சிறப்பாகும். ஆனால் நாம் நிகழ்ச்சித் தொடரை முன்வைத்து மேற்சொன்ன தெளிவுரைகளை கொடுத்துள்ளோம். எனவே இவ்வாசகத்திற்கு இவ்விரு அர்த்தங்களும் பொருந்தும்.
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ.
75:20. ஆனால் மனிதனோ இறுதியில் ஏற்படுகின்ற விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாமல் குறுகிய காலப் பலன்களின் பக்கமே விரைகிறான்.
وَتَذَرُونَ ٱلْءَاخِرَةَ.
75:21. இதனால் அவன் குறுகிய கால பலன்களை அடைவதற்காக, வருங்கால நிலையான சந்தோஷங்களை தொலைத்து விடுகிறான்.
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ.
75:22. இறுதியில் “மனித செயல்களுக்கேற்ற பின் விளைவுகள்” தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் நன்மை செய்தோரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து காணப்படும்.
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ.
75:23. அவர்கள் தம்முடைய செயல்களின் பலன்களைப் பெறுவதற்கு தம் இறைவனின் அருளை நோக்கிய வண்ணம் இருப்பார்கள்.
وَوُجُوهٌۭ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌۭ.
75:24. மற்றும் சிலருடைய முகங்கள் அந்த கால கட்டங்களில் துக்கத்தால் வாடிப் போயிருக்கும்.
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌۭ.
75:25. இடுப்பை நிமிர்த்தி எடுக்கும் ஒரு பேராபத்து ஏற்படப்போவது பற்றி அவர்கள் உறுதிபட அறிவதால் இந்த துக்க நிலை.
எனவே மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்க்கையைப் பற்றி இன்னமும் சந்தேகம் கொள்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. ஏனெனில்
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ.
75:26. அவனுக்கு மரணம் நெருங்கும் தருவாயில் அவனுடைய மூச்சு தொண்டையை அடைத்துக் கொள்கிறது.
அந்த சமயத்தில் என்ன சொல்லப்படுகிறது? ஏதாவது ஒரு சூராவை ஓதி ஊதுங்கள். அவனுடைய கஷ்டங்கள் குறையும் என்கிறார்கள்.
وَقِيلَ مَنْ ۜ رَاقٍۢ.
75:27. அப்படி மந்தரிப்பதால் என்ன ஆகப்போகிறது? அவனுக்கு அதிலிருந்து விடுவுகாலம் பிறந்திடுமா?
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ.
75:28. மேலும் மரணிப்பவன் தன் வாழ்வின் இறுதி கட்டத்தை அடைந்து விட்டதை அறிந்து கொள்கிறான்.
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ.
75:29. அதைத் தொடர்ந்து அவன் செய்து வந்த செயல்கள் யாவும் ஒன்றன்மேல் ஒன்றாகப் பின்னிப் பிணைத்துக் கொள்ளும்.
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ.
75:30. அதன் பின்புதான் அவன் உலக வாழ்வை விட்டுவிட்டு இறைவன் விதித்த செயல்களின் விளைவுகள் பக்கம் இழுத்துச் செல்லப்படுவான்.
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ.
75:31. ஆனால் அவனோ மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்க்கையைப் பற்றி உறுதி கொள்ளவும் இல்லை. அவன் அதற்காக இறைவழிகாட்டுதலின்படி எவ்வித நற்செயலை செய்யவுமில்லை.
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ.
75:32. எனவே அவன் இறைவனின் இத்திட்டத்தைப் பொய்ப்பித்து தன் கவனத்தை தவறான வழியின் பக்கம் செலுத்தி வந்தான்.
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ.
75:33. இதனால் அவன் தன் செல்வத்தின் மீது மமதைக் கொண்டு, குடும்பம் மற்றும் பிள்ளைகள் என அவற்றின் பக்கமே சாய்ந்து விட்டான்.
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ.
75:34. இதனால் ஏற்படும் கேடு உனக்கே என பலமுறை எடுத்துரைத்தும், அவன் அதை கேட்கவே இல்லை.
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ.
75:35. இருந்தும் அவனுக்கு ஏற்படவிருக்கும் கேடுகளைப் பற்றி மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது. இருந்தும் அவன் அந்த கேடுகளின் பக்கமே விரைந்தான்.
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى.
75:36. இப்படி செயல்பட்டதற்கு காரணம் என்னவென்றால், தான் செய்யும் செயல்களுக்கு யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என எண்ணிக் கொண்டதே ஆகும்.
أَلَمْ يَكُ نُطْفَةًۭ مِّن مَّنِىٍّۢ يُمْنَىٰ.
75:37. கண்ணுக்கும் புலப்படாத உயிரணுவிலிருந்து தான் படைக்கப்பட்டதைப் பற்றி அவன் எண்ணிப் பார்க்க வேண்டாமா? இந்திரியத் துளியில் இருக்கும் உயிரணு தாயின் கர்பப் பைக்குள் சென்றுதானே குழந்தையாக பிறந்தான்?
ثُمَّ كَانَ عَلَقَةًۭ فَخَلَقَ فَسَوَّىٰ.
75:38. பின்னர் இறைவனின் ஏற்பாட்டின் படிதானே அலக் என்ற நிலைக்கு மாறி, அதன்பின் முழு அளவில் வளர்ந்து அழகிய உருவமைப்பு பெற்றான்?
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ.
75:39. அது மட்டுமின்றி அந்த இந்திரியத் துளியில் ஆண் பெண் என்ற ஜோடியைப் படைத்ததும் ஏக இறைவன் தானே.
أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْۦِىَ ٱلْمَوْتَىٰ.
75:40. உண்மை இவ்வாறிருக்கும் போது, நீ இறந்து விட்டபின் உன்னை மீண்டும் படைப்பதற்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது?