بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

74:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ.

74:1. இறைவழிகாட்டுதலின் படி சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபடுபவரே!


قُمْ فَأَنذِرْ.

74:2. விழித்திடுக. மக்களின் தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்திடுக.


وَرَبَّكَ فَكَبِّرْ.

74:3. இறை வழிகாட்டுதலின் படி தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கி, அவனுடைய ஆட்சியமைப்பே மிகச் சிறந்தது என்பதை உலக அரங்கில் நிரூபித்து அவனுடைய புகழை மேலோங்கச் செய்திடுக.


وَثِيَابَكَ فَطَهِّرْ.

74:4. இதற்காக நீர் உம்முடைய பழக்க வழக்கங்களை சீராக்கி உமது உள்ளத்தை தூய்மையாக்கிடுக.


وَٱلرُّجْزَ فَٱهْجُرْ.

74:5. மேலும் இதற்காக தீய செயல்கள் நடைபெறுவதை அறவே வெறுத்திடுக.
இத்தகைய எண்ணங்களைக் கொண்ட தோழர்களை உருவாக்குவதே உன் துவக்க பணியாகும். அப்போது தான் சமுதாயத்தில் உள்ள தீராப் பிரச்னைகளை சிறப்பாகத் தீர்த்து வைப்பதில் அனுபவம் பெற முடியும்.


وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ.

74:6. எனவே உங்கள் தோழர்களிடம், “நீங்கள் நலிந்த மக்களின் துயர் துடைப்புக்காக உதவ முன் வரவேண்டும். அவ்வாறு செலவு செய்தபின் அவர்களிடமிருந்து பிரதிப்பலனை எதிர்ப் பார்க்கக் கூடாது” (பார்க்க 30:39,76:9) என்பதை தெளிவுபடுத்திடுக.


وَلِرَبِّكَ فَٱصْبِرْ.

74:7. மேலும் உமது இறைவன் காட்டிய வழியில் நிலைத்திருந்து தொடர்ந்து உழைத்து வரும்படி உமது தோழர்களிடம் எடுத்துத்துரைத்திடுக.
இந்த மாபெரும் இலட்சியத்தில் வெற்றி பெறுவது என்பது பூ மெத்தையில் நடப்பது போன்றதல்ல. காடு மேடுகள் நிறைந்த கணவாய்களைக் கடக்க வேண்டியிருக்கும். அதாவது இப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்க பல இன்னல்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டி வரும். தீய சக்திகளை எதிர்த்து போரிட வேண்டி வரும். எனவே


فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ.

74:8. எக்காளத்தில் அபாய சங்கொலி எழுப்பப்படும் போது,


فَذَٰلِكَ يَوْمَئِذٍۢ يَوْمٌ عَسِيرٌ.

74:9. எதிரிகளுடன் கடுமையாக போரிட வேண்டி வரும். அதன்பின் தான் உங்களுடைய எல்லா துயரங்களும் நீங்கி சுமுகமான சூழ்நிலை ஏற்படும். ஆனால்


عَلَى ٱلْكَٰفِرِينَ غَيْرُ يَسِيرٍۢ.

74:10. தீய செயல்களில் ஈடுபடும் இறைநிராகரிப்பவர்களின் நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும். அதாவது அவர்களுக்கு போரில் தோல்வி ஏற்படும்.
இந்த மோதலுக்கு என்ன காரணம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய வழியில் செல்பவர்கள் இத்தகைய சிறந்த ஆட்சியமைப்பு ஏற்படாதவாறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் அவர்களுடைய செயல்களால் சமுதாயம் சீர்கெட்டு வருகிறது. இதைப் பற்றி எடுத்துரைத்தால்


ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًۭا.

74:11. “என்னை விட்டுவிடுங்கள். நான் ஒரு தனிப் பிறவி” என்பது போல் கர்வத்துடன் சென்றுவிடுகிறார்கள்.
எனவே தனக்கு யாருடைய தயவும் அறிவுரையும் வேண்டியதில்லை என்ற தலைக் கணத்தில் இருக்கிறார்கள்.


وَجَعَلْتُ لَهُۥ مَالًۭا مَّمْدُودًۭا.

74:12. அவனுக்கு இறைவன் புறத்திலிருந்து விசாலமான செல்வங்கள் கிடைத்திருந்தன.


وَبَنِينَ شُهُودًۭا.

74:13. அது மட்டுமின்றி அவனுக்கு பிள்ளைச் செல்வங்களும் ஆட்பலமும் கிடைத்திருந்தன. (பார்க்க 73:11)


وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًۭا.

74:14. மேலும் அவன் சுகமாய் வாழ்வதற்காக எல்லா வசதிகளும், அமர்ந்த இடத்திலேயே கிடைக்கும்படி ஏற்பாடுகள் ஆகி இருந்தன.
இவையெல்லாம் தானாகவே அவனுக்கு கிடைத்தன என எண்ணிக் கொண்டான். இறைவனின் படைப்புகளின் துணையைக் கொண்டு தான் அவை கிடைத்தன என்பதை நினைத்துப் பார்க்க தவறிவிடுகிறான்.


ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ.

74:15. மேலும் அவனுக்கு செல்வங்கள் இருந்தும் அவற்றை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்றே அவன் எண்ணினான்.


كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِءَايَٰتِنَا عَنِيدًۭا.

74:16. அவ்வாறல்ல. இப்படி செயல்படுவது இறைவனின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்.


سَأُرْهِقُهُۥ صَعُودًا.

74:17. எனவே இறை வழிகாட்டுதலின் படி சமூக அமைப்பு ஏற்படப் போகிறது. அப்போது அவன் மிகப் பெரிய துயரத்தில் சிக்கிக்கொள்ளப் போகிறான்.


إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ.

74:18. இதற்குக் காரணம் அவன் இறை வழிகாட்டுதலின் படி உருவாகவிருக்கும் ஆட்சியமைப்புக்கு எதிராக சதி திட்டங்களைத் தீட்டி வந்தான்.


فَقُتِلَ كَيْفَ قَدَّرَ.

74:19. எனவே அவன் அழிய வேண்டியது தான். இந்த அளவுக்கு அவன் தவறான செயல்களை செய்ய எப்படி துணிவு வந்தது?


ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ.

74:20. அவனுக்கு அழிவைத் தவிர வேறு எதுவும் கிடைக்க வாய்ப்பே இல்லை. இதை அறிந்தும் அவன் எப்படி இந்த காரியத்தைச் செய்ய துணிந்தான்?


ثُمَّ نَظَرَ.

74:21. அவன் குர்ஆனிய அறிவுரைகளைப் ஏற்காமல் தீய கண்ணோட்டத்துடன் கவனித்து வந்தான்.


ثُمَّ عَبَسَ وَبَسَرَ.

74:22. அதன்பின் அவன் அதில் குறைகளைக் கண்டெடுத்தது போல் புலம்ப ஆரம்பித்தான். அது முடியாமல் போகவே முகம் சுளித்துக் கொண்டான்.


ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ.

74:23. அதன் பின்னரும் அவன் வேத அறிவுரைகளை ஏற்க மறுத்து புறமுதுகு காட்டி ஓடலானான். அவனிடமிருந்த ஆணவப் போக்கே இதற்குக் காரணமாகும்.


فَقَالَ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ يُؤْثَرُ.

74:24. அதுவும் முடியாமல் போகவே இறைவழிகாட்டுதல் என்பதெல்லாம் மக்களை வசியப்படுத்தும் ஏமாற்று வித்தைகளே என்று கூறலானான்.


إِنْ هَٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ.

74:25. மேலும் அவன், “இவையாவும் மனிதனின் சொற்களே ஆகும். அவர்கள் கூறுவது போல இறைவனின் சொற்கள் அல்ல” என்றும் கூறலானான்.


سَأُصْلِيهِ سَقَرَ.

74:26. இப்படியாக அவன் தகாத செயல்களை எல்லாம் செய்து வந்ததால் அவன் கடுமையான வேதனைகளுக்கு ஆளாவான்.


وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ.

74:27. அந்த வேதனைகள் எவற்றை குறிப்பிடுகின்றன என்று உமக்குத் தெரியுமா?


لَا تُبْقِى وَلَا تَذَرُ.

74:28. அவன் சம்பாதித்து வைத்த செல்வங்கள், பெயர், புகழ் ஆகிய அனைத்தையும் அது சுட்டுப் பொசுக்கி விடும் என்பதையே குறிக்கின்றன.


لَوَّاحَةٌۭ لِّلْبَشَرِ.

74:29. இதனால் அவமானத்தால் அவனது முகம் கருத்துவிடும். நேற்று வரை அவன் இருந்த நிலை என்ன? இன்று அவனுடைய நிலை என்ன? எல்லாமே உருமாறி விடும்.


عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ.

74:30. இப்படியாக பத்தொன்பது வகையான வேதனைகள் அவனை வாட்டி எடுக்கும். அவ்வேதனைகளைப் பற்றி பல இடங்களில் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.


وَمَا جَعَلْنَآ أَصْحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةًۭ ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةًۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَٰنًۭا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ وَٱلْكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًۭا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ.

74:31. உலகில் மனிதனுக்கு கிடைக்கும் இத்தகைய வேதனைகள் யாவும் இறைவன் நிர்ணயித்த “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற அடிப்படையிலேயே ஏற்படுவதாகும். அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் வகையில்தான் பிரபஞ்ச இயற்கை படைப்புகள் படைக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆனின் அறிவுரைகளை மதிக்காதவன் இந்த எண்ணிக்கையை வைத்து பல குழப்பங்களை ஏற்படுத்துவான். ஆனால் வேத ஞானமுடையவர்கள், தங்களுடைய தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் விளைவுகளை எண்ணி தம்மை திருத்தி கொள்வார்கள். மேலும் மூஃமின்கள் இவ்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேதனைகளைப் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ள மாட்டார்கள். அத்தகைய வேதனைகளிலிருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளையே தேடிக் கொள்வார்கள்.
ஆனால் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்களும், இறை நிராகரிப்பவர்களும் “இந்த எண்ணிக்கையைக் கொண்டு இறைவன் நாடுவது என்ன?” என்று எதிர் மறையாகப் பேசுவார்கள். (பார்க்க 2:26) இப்படியாக வழிதவறி நடக்க நாடுவோர் இறைவனின் நியதிப்படி வழிகேட்டில் சென்று விடுகிறார்கள். இறைவழிகாட்டுதலைப் பெற நாடி அதற்கேற்ற வகையில் முயல்பவர்களுக்கு இந்த குர்ஆன் மூலம் நேர்வழி கிடைத்து விடுகிறது. ஆக விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் சக்திகளைப் பற்றிய உண்மை உமது இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்து இருப்பதில்லை. எனவே இதைப்பற்றி திருக்குர்ஆனில் எடுத்துரைக்கப்படுகிறது. இதன் நோக்கமே அவற்றைப் பற்றி நன்கறிந்து மனிதன் நேரான வழியில் செல்லவேண்டும் என்பதே.
இன்றைய கால கட்டத்தில் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்த சமுதாயங்களிலும் பல்வேறு வேதனைகள் ஏற்பட்டு வருவதை பார்க்கின்றோம். உதாரணத்திற்கு மனிதனுக்கு இளம் வயதில் ஏற்படும் நோய்களை எடுத்துக் கொள்ளுங்கள். காச நோய், உயிர்கொல்லி நோய், இருதய நோய், புற்று நோய், கை கால் வாதங்கள், பாலியல் நோய், எனப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். பிரபஞ்ச படைப்புகளில் மனிதனும் ஒரு அங்கமாக இருப்பதால், இயற்கை சக்திகள் இவனுக்குள்ளேயும் செயல்பட்டு வருகின்றன. இவனுடைய தவறான செயல்களால் இவனுடைய உடல்நிலை பாதிப்புக்குள் ஆகின்றன. சில நோய்களுக்கு உடனே சிகிச்சை கிடைத்து விடுகிறது. மற்றும் சில, தீரா நோயாக அவனை வாட்டி வதைக்கின்றன. இதைப் பற்றி ஆராய்ந்து அறிந்து அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முயல வேண்டும்.
இரண்டாவதாக உலகில் சமுதாயங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன. சமுதாயங்களின் தவறான செயல்களால் அழிவு ஏற்படும்போது, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், அவர்களை சார்ந்து இருப்பவர்களுக்கும் ஏற்படும் வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அந்த அளவுக்கு அவை துயர் மிக்கதாய் இருக்கும்.
மூன்றாவதாக உலகில் நிகழ்கின்ற பூகம்பம், சுனாமி, புயல் காற்று, வெள்ளம், எரிமலைப் பிழம்பு, பஞ்சம் போன்ற வேதனை அளிக்கக்கூடிய அசம்பாவிதங்களும், இயற்கை சீற்றங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க மனிதன் முயற்சிகளை மேற்கொண்டால், அவனுடைய வாழ்வு சிறக்கும். “ஸகர்” எனும் இடைவிடா வேதனைகளை கூட்டி கழித்து எண்ணிக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தால் அவனுடைய பிரச்னைகளுக்கு ஒருபோதும் விடுவுகாலம் கிடைக்காது. எனவே இறைவழிகாட்டுதல் இத்தகைய பேராபத்துகளிடமிருந்து மீண்டு வாழவே வழி வகுக்கிறது.
நான்காவதாக மனிதனின் வாழ்க்கை மரணத்திற்குப் பின்பும் தொடரக்கூடிய ஒன்றாக இருப்பதால், அவன் உலகில் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ப சுவனமும் நரகமும் கிடைக்கும். நன்மையான செயல்கள் மிகைத்திருந்தால் சுவர்க்கம் எனவும், தீயவை மிகைத்திருந்தால் நரகம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (பார்க்க 7:8-9) இவையே இறைவனின் நிலைமாறா சட்டமாகும். அதன்படி இறைவன் படைத்த இயற்கை சக்திகள் மனிதனை இவ்வுலக வாழ்வை முடித்து, அடுத்த கட்ட வாழ்க்கையின் பக்கம் அழைத்துச் சென்றுவிடுகிறது. (16:30-32) ஆக வேதனை அளிக்கக்கூடியவை “சகர்” இவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப நேரம், காலம், என்று நாள் குறித்து சொல்லக்கூடிய ஒன்றல்ல.


كَلَّا وَٱلْقَمَرِ.

74:32. ஆனால் அவை நிச்சயமாக ஏற்படும். இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் இரவில் ஒளிவீசும் சந்திரனைக் கவனியுங்கள்.


وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ.

74:33. மேலும் அத்துடன் பின்தொடர்ந்து வரும் இரவை கவனியுங்கள்.


وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ.

74:34. அதன்பின் பொழுது விடிந்து வெளிச்சமாவதை கவனித்துப் பாருங்கள்.
இவையாவும் முறைப்படி அந்தந்த கால நேரப்படி மாறிமாறி வருகின்றன. இருந்தும் அந்த மாற்றங்கள் ஏற்பட்ட பின்புதான் உங்களால் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. அது போலத் தான் உங்களுடைய தீய செயல்களின் விளைவுகள் உணரா வண்ணம் வளர்ந்து வருகின்றன. அவை தோற்றத்திற்கு வரும்போது தான் உங்களால் உணர முடிகிறது. அப்போது உணர்ந்து என்ன பயன்? அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். எனவேதான்


إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ.

74:35. அந்த அதிபயங்கர சகரைப் பற்றிய உண்மைகளை இந்த குர்ஆன் எடுத்துரைக்கிறது.


نَذِيرًۭا لِّلْبَشَرِ.

74:36. சிந்தித்துணரும் மக்களுக்கு இது ஓர் எச்சரிக்கை செய்தியாக இருக்கிறது.


لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ.

74:37. இந்த முன்னெச்சரிக்கை செய்திகளை நினைவில் கொண்டு முன்னேறிச் செல்ல விரும்பும் சமுதாயங்கள் முன்னேறி செல்லட்டும். இதைப் பொருட்படுத்தாமல் பின்நோக்கி செல்ல விரும்பும் சமுதாயங்கள் முன்னேறாமல் அழிவை சந்தித்து கொள்ளட்டும்.


كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ.

74:38. மேலும் ஒவ்வொரு மனிதனும் “தன் செயல்களுக்கேற்ற பின் விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியில் தான் இருக்கிறான்.


إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ.

74:39. ஆனால் ஆக்கப்பூர்வமான நற்செயல்களில் மிகைத்தோர் இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.


فِى جَنَّٰتٍۢ يَتَسَآءَلُونَ.

74:40. காரணம் அவர்கள் வாழும் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும்.


عَنِ ٱلْمُجْرِمِينَ.

74:41. அப்போது தீய செயல்களை செய்து வேதனைகளில் சிக்கி இருக்கும் சமூகத்தவரைப் பார்த்து,


مَا سَلَكَكُمْ فِى سَقَرَ.

74:42. உங்களை இந்த வேதனைகளில் சிக்க வைத்தது எது என்று கேட்பார்கள்.


قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ.

74:43. அப்போது அவர்கள், “நாம் இறை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க முற்றிலும் தவறி விட்டோம்”


وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ.

74:44. “அதாவது நாட்டில் ஏற்பட்டு வரும் ஏற்றத் தாழ்வைப் பற்றி நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. சம்பாதிக்க இயலாதவர்கள் பட்டினியால் வாடுவதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம்”


وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ.

74:45. “நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் எந்த வகையிலும் பயன்படாத வீணான சடங்கு சம்பிரதாயங்களில் நாங்கள் மூழ்கியிருந்தோம்”


وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ.

74:46. “தீய செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி நாங்கள் பொருட்படுத்தவே இல்லை. அவையெல்லாம் பொய்யென கூறிக் கொண்டிருந்தோம்”


حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ.

74:47. “அந்த விளைவுகள் உணரும் வண்ணம் தோற்றத்திற்கு வரும் வரையில், நாம் இவ்வாறு செயல்பட்டு வந்தோம். அதாவது முன்னெச்சரிக்கை செய்திகளுக்கு நாங்கள் செவி சாய்க்கவே இல்லை”


فَمَا تَنفَعُهُمْ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ.

74:48. “ஆகவே ஆன்மிகவாதிகளும், மகான்களும் எங்களுக்காக சிபாரிசு செய்து வேதனைகளிலிருந்து எங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்பியிருந்ததெல்லாம் பொய்யென இன்று நிரூபணம் ஆகிவிட்டது” என்பார்கள்.


فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ.

74:49. இத்தகைய வேதனை அளிக்கும் கால கட்டம் வந்து விடும் என்று முன்னெச்சரிக்கை செய்தால், அவர்களுக்கு என்ன நேர்கிறது என்றே புரியவில்லை.


كَأَنَّهُمْ حُمُرٌۭ مُّسْتَنفِرَةٌۭ.

74:50. இறைச் செய்தியைக் கேட்டதும், வெருண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல் அவர்கள் ஏன் ஓடவேண்டும்?


فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ.

74:51. அதுவும் சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடுவது போல் அல்லவா இருக்கிறது இவர்களது ஓட்டம்?
இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கும் முன்னெச்சரிக்கை செய்திகள் அவனுக்குப் புரியாமல் அவன் விரண்டு ஓடுகிறானா? இல்லை. அவனுக்கு விஷயம் என்னவோ புரிகிறது. ஆனால் திருக்குர்ஆனின் வழிகாட்டுதலின்படி அவன் கூட்டாக வாழ பிடிக்கவில்லை போலும். எனவே


بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًۭا مُّنَشَّرَةًۭ.

74:52. அவன் ஒவ்வொரு விஷயத்திலும் தன்னிச்சையாக முடிவெடுத்து, தன் விருப்பம் போல் செயல்படவே விரும்புகிறான். இத்தகைய அதிகாரம் தனக்கு வேண்டும் என்று ஒவ்வொருவனும் விரும்புகிறான். ஆனால் இந்தக் குர்ஆனிய அமைப்புமுறை இதற்கு தடை விதிக்கிறது.
இப்படி சுயநலத்துடன் நிலையான சந்தோஷங்களுடன் அவர்களால் வாழ முடியுமா என்றால் அது ஒருபோதும் முடியாது. ஏனெனில் ஒவ்வொருடைய சுயநலமும் பிறருடைய நலத்தைப் பாதிப்பதாக இருக்கிறது. இதில் திறமைசாலிகள் வெற்றி கொள்கிறார்கள். பலவீனர்கள் பாதிக்கப் படுகிறார்கள். இந்நிலை நீடிக்க வாய்ப்பில்லை. எனவே


كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْءَاخِرَةَ.

74:53. அவர்கள் விரும்புவது போல் ஒருபோதும் நிலையாக வாழவே முடியாது. ஏனெனில் “மனித செயல்களின் விளைவுகள்” தோற்றத்திற்கு வந்தே தீரும். ஆனால் அதைப் பற்றிய முன்னெச்சரிக்கை அவர்களுக்கு பலனளிப்பதில்லை. எனவே அவர்கள் பயமின்றி வாழ்கிறார்கள்.


كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌۭ.

74:54. ஆனால் அவர்கள் காலா காலத்திற்கு இவ்வாறு பயமின்றி வாழமுடியுமா?. இத்தகைய முன்னெச்சரிக்கை எல்லாம் அவர்களுடைய நன்மைக்காகத் தான் ஆகும் என்பதை உணரக் கூடாதா? இவை அவர்களுக்கு நல்ல அறிவுரைகள்தானே.


فَمَن شَآءَ ذَكَرَهُۥ.

74:55. இந்த அறிவுரைகளை ஏற்று சிறப்பாக வாழ நாடுவோர் இவற்றை நினைவில் கொண்டு செயல்பட முன்வரட்டும்.


وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ.

74:56. ஆனால் அல்லாஹ்வின் நாட்டத்திற்கு ஏற்ப செயல்பட முன்வருபவர்கள் தாம், இந்த அறிவுரைகளை ஏற்று செயல்படுவார்கள். அத்தகையவர்களே இறைவழிகாட்டுதலைப் பேணி நடக்கும் "இறை அச்சம்" உள்ளவர்கள் ஆவார்கள். அத்தகையவர்கள் தாம் பாதுகாப்பான, நிம்மதியான, மனநிறைவான, வாழ்விற்கு உரியவர்கள்.