بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
73:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
يَٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ.
73:1. இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் சமுதாய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அயராது பாடுபடுபவரே!
قُمِ ٱلَّيْلَ إِلَّا قَلِيلًۭا.
73:2. இறைவழிகாட்டுதலை இறை நேசர்களுக்கு எடுத்துரைக்க இரவின் ஒரு பகுதியை மட்டும் நீர் பயன்படுத்திக் கொள்வீராக.
نِّصْفَهُۥٓ أَوِ ٱنقُصْ مِنْهُ قَلِيلًا.
73:3. அதாவது இரவின் பாதி நேரம் அல்லது அதிலும் சற்று குறைவான நேரத்தையே இதற்காக ஒதுக்கலாம். (பார்க்க 17:79)
மேலும் குர்ஆன் முழுவதையும் ஒரே இரவில் எல்லோருக்கும் புரியவைக்க முடியாது. மேலும் உமக்கும், இறை நேசர்களுக்கும் பகலில் நெடிய அலுவல்கள் இருப்பதால் (பார்க்க 73:7, 73:20) இந்த அறிவுரை தரப்படுகிறது.
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ ٱلْقُرْءَانَ تَرْتِيلًا.
73:4. அல்லது இரவின் பாதிப் பகுதியைவிட சற்று அதிகமாகவும் எடுத்துக் கொள்ளலாம குர்ஆனின் ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள விஷயங்களை கோர்வைப் படுத்தி மக்களுக்கு எடுத்துரைப்பீராக
உதாரணத்திற்கு "தலாக்" என்ற தலைப்பில் எடுத்துரைக்க வேண்டுமெனறால் அத்தியாயம் 2:226-238, 4:35, 65:1-7 ஆகிய வாசகங்களை எடுத்துக் கொண்டு முறைப்படி கோர்வைப்படுத்தி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் திருக்குர்ஆனின் நிலைப்பாடு என்னவென்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். (பார்க்க 6:105, 17:106, 25:32)
إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًۭا ثَقِيلًا.
73:5. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இவ்வாறாக இறைவழிகாட்டுதலை மக்களுக்கு தெளிவுபடுத்திய பின் விரைவில் நீர் மிகப் பெரிய பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கும்.
அதாவது இறைவழிகாட்டுதலின்படி சமுதாய அமைப்பை ஏற்படுத்தி அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டும் பணி உள்ளது. மேலும் இது மிகவும் கடினமானப் பணியாகும்.
إِنَّ نَاشِئَةَ ٱلَّيْلِ هِىَ أَشَدُّ وَطْـًۭٔا وَأَقْوَمُ قِيلًا.
73:6. கல்வி மற்றும் ஒழுக்க மாண்புகளை மக்களுக்கு கற்றுத் தருவது இன்றியமையாத ஒன்றாகும். இதற்காக இரவை தேர்ந்தெடுத்துக் கொள்ள சொன்னதன் நோக்கம் யாதெனில், பகல் நேரத்தில் இருக்கும் அலுவல்களிலிருந்து விடுபட்டு அவர்கள் முழு கவனத்துடன் இவற்றை கேட்டுத் தெரிந்துகொள்ள மிகவும் உதவும். மேலும் சமுதாய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் இரவு நேரங்கள் மிகவும் சிறப்பான நேரமாகும்.
إِنَّ لَكَ فِى ٱلنَّهَارِ سَبْحًۭا طَوِيلًۭا.
73:7. மேலும் உமக்கும் மற்றவர்களுக்கும் பகலில் நெடிய அலுவல்கள் இருப்பதால் இரவின் ஒரு பகுதியை இதற்காக பயன்படுத்திக் கொள்ளச் சொன்னோம்.
وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًۭا.
73:8. இப்படியாக இறைவனின் பரிபாலன அமைப்பின் சிறப்பினை அயராது எடுத்துரைக்கவும், அதை சிறப்பிக்கச் செய்யவும் இறைவனின் அறிவுரைகளை முழு கவனத்தில் கொண்டு செயல்படுவீராக. மேலும் அழகிய முறையில் இறைவனின் செயல்திட்டங்கள் நிறைவேற செயல்பட்டு வருவீராக.
رَّبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذْهُ وَكِيلًۭا.
73:9. ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் பரிபாலன அமைப்பு உலகின் கிழக்கு முதல் மேற்கு வரையில் எங்கும் பரவி உள்ளது. எனவே அவனுடைய வழிகாட்டுதலைத் தவிர வேறு எதற்கும் அடிபணிதலாகாது என்ற அடிப்படையில் சமுதாயத்தை உருவாக்கவே இந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது. எனவே அனைவரும் இறைவன் காட்டிய வழியில் முற்றிலும் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.
وَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهْجُرْهُمْ هَجْرًۭا جَمِيلًۭا.
73:10. மேலும் இந்த அமைப்பை எதிர்த்து பேசுபவர்களின் பேச்சை பெரிது படுத்தாமல், உங்கள் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். இதையும் மீறி அவர்கள் தர்க்கம் செய்ய முற்பட்டால் அவர்களிடமிருந்து அழகிய முறையில் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
وَذَرْنِى وَٱلْمُكَذِّبِينَ أُو۟لِى ٱلنَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا.
73:11. இறைவனின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து செல்வங்களை குவித்துக் கொண்டு சுகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். இறைவனின் நியதிப்படி நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பின் அவர்களுடைய செயல்களின் விளைவுகள் ஏற்பட்டே தீரும்.
إِنَّ لَدَيْنَآ أَنكَالًۭا وَجَحِيمًۭا.
73:12. அத்தகைய தீயவர்களுக்காகவே நாம் கடிவாளங்களை தயாரித்து வைத்துள்ளோம். அவர்களுக்கு நரக வேதனைகள் கிடைப்பது நிச்சயம்.
وَطَعَامًۭا ذَا غُصَّةٍۢ وَعَذَابًا أَلِيمًۭا.
73:13. மேலும் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் அருவறுப்பான உணவுகளும், நோவினைத் தரும் வேதனைகளும் அவர்களுக்காக காத்துக் கிடக்கின்றன.
يَوْمَ تَرْجُفُ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ وَكَانَتِ ٱلْجِبَالُ كَثِيبًۭا مَّهِيلًا.
73:14. அப்படியொரு கால கட்டத்தில் மலைகளைப் போல் செல்வங்களை குவித்து வைத்துக் கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்களின் நிலை ஆட்டம் கண்டுவிடும். அவர்களுடைய செல்வக் குவியல்கள் எல்லாம் அழிந்து தரை மட்டமாக ஆகிவிடும் (பார்க்க 20:105)
இது வெறும் அச்சுறுத்தல் அல்ல. இப்படி நடப்பது சர்வ நிச்சயம். வரலாற்று நிகழ்வுகளே இதை பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக
إِنَّآ أَرْسَلْنَآ إِلَيْكُمْ رَسُولًۭا شَٰهِدًا عَلَيْكُمْ كَمَآ أَرْسَلْنَآ إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًۭا.
73:15. எகிப்து நாட்டை ஆண்டு வந்த ஃபிர்அவ்னின் நிலை என்னவாயிற்று என்பதை கவனித்துப் பார்க்கட்டும். அவனிடம் நாம் தூதரை அனுப்பி இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து அவற்றை நடைமுறைப்படுத்தியது போல் உங்களிடமும் தூதரை அனுப்பியுள்ளோம்.
فَعَصَىٰ فِرْعَوْنُ ٱلرَّسُولَ فَأَخَذْنَٰهُ أَخْذًۭا وَبِيلًۭا.
73:16. ஆனால் ஃபிர்அவ்ன் அத்தூதர் காட்டிய வழியில் செயல்படாமல், தவறான வழியில் சென்றான். இதனால் இறைவன் நிர்ணயித்துள்ள மனித செயல்களின் விளைவுகள் என்ற சட்டத்தின் பிடியில் அவன் சிக்கி மடிந்துபோனான்.
ஆட்சி அதிகார பலத்துடன் நாட்டை ஆண்டுவந்த ஃபிர்அவ்னுக்கே அந்த கதி என்றால் மற்றவர்கள் இறைவனின் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியுமா?
فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًۭا يَجْعَلُ ٱلْوِلْدَٰنَ شِيبًا.
73:17. எனவே நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தீய வழியில் செயல்பட்டால், அவனுக்கு ஏற்பட்ட கதியே உங்களுக்கும் ஏற்படும். ஒரு குழந்தை பிறந்து குழந்தையாகவே இருக்க முடியுமா? அது வளர்ந்து வயதான பின் நரைத்த முடியுடன் கூடிய கிழவனாக மாறிவிடுவான். இப்படி ஆவதை யாராவது தடுக்க முடியுமா? அது போலத்தான் நீங்கள் செய்யும் தீய செயல்களின் விளைவுகள் வேதனைகளாக மாறியே தீரும்.
ٱلسَّمَآءُ مُنفَطِرٌۢ بِهِۦ ۚ كَانَ وَعْدُهُۥ مَفْعُولًا.
73:18. அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் நிலை வானமே பிளந்துவிட்டது போல் ஆகிவிடும். அதைத் தொடர்ந்து இறைவன் காட்டிய வழியில் ஆட்சி உருவாகி வரும். அப்போது அவனுடைய கட்டளைகளே நடைமுறை சட்டமாக இருக்கும்.
إِنَّ هَٰذِهِۦ تَذْكِرَةٌۭ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا.
73:19. இது வெறும் அச்சுறுத்தல் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இவை யாவும் இறைவன் புறத்திலிருந்து அளிக்கப்படுகின்ற அறிவுரைகளே ஆகும். ஆகவே எந்த சமுதாயத்தவர் நேர்வழியில் செல்ல நாடுகிறார்களோ, அவர்கள் இறைவன் காட்டிய வழியைக் கடைப்பிடித்து தம் வாழ்வின் இலட்சியத்தை அடைந்து கொள்ளட்டும்.
இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இரவு நேரங்களில் மக்களுக்கு இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் விஷயமாய் இந்த அத்தியாய தொடக்கத்தில் சொன்னோம். அது விஷயமாக
۞ إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَىِ ٱلَّيْلِ وَنِصْفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٌۭ مِّنَ ٱلَّذِينَ مَعَكَ ۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ۚ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ ۖ فَٱقْرَءُوا۟ مَا تَيَسَّرَ مِنَ ٱلْقُرْءَانِ ۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَىٰ ۙ وَءَاخَرُونَ يَضْرِبُونَ فِى ٱلْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ ٱللَّهِ ۙ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ فَٱقْرَءُوا۟ مَا تَيَسَّرَ مِنْهُ ۚ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا ۚ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍۢ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيْرًۭا وَأَعْظَمَ أَجْرًۭا ۚ وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۢ.
73:20. நீரும் உம்முடன் இருப்போரும் இரவின் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ அல்லது அதில் பாதியோ அல்லது மூன்றில் ஒரு பகுதியோ இறைவழிகாட்டுதலைப் பற்றி கலந்தாலோசிக்க ஓரிடத்தில் ஒன்று கூடுகிறீர்கள் என்பது அல்லாஹ்வுக்கு தெரியும். அல்லாஹ்வே இரவு பகல் என்ற கால அளவை சரியாகக் கணக்கிட்டு செயல்பட வைத்துள்ளான். ஆனால் இறைவழிகாட்டுதலைப் பெற உங்களிடையே உள்ள ஆர்வத்தால் இரவு கழிவதையும் கவனிக்கத் தவறி விடுகிறீர்கள். இந்தத் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள். நீங்கள் குர்ஆனில் உள்ள விஷயங்களை எந்த அளவுக்கு அவர்கள் மனதில் பதியுமோ அந்த அளவே எடுத்துரையுங்கள்.
அதுமட்டுமின்றி அங்கு வந்து கூடியிருப்பவர்களின் உடல் நலத்தைப் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பகலில் அல்லாஹ்வின் அருளை தேடிச் செல்பவர்களும் சிலர் இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் வீரர்களும் அவர்களில் இருப்பார்கள். எனவே இவர்களைப் பற்றி கவனத்தில் கொண்டு இரவு நேரங்களில் தக்க அளவுபடி எளிய முறையில் குர்ஆனுடைய விஷயங்களை எடுத்துரையுங்கள். இப்படியாக இறைவழிகாட்டுதலைப் பேணி நடக்கும் சமுதாய அமைப்பை நிலைநாட்டுங்கள்.
இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட தம்மாலான பொருளுதவிகளைச் செய்து வாருங்கள். இப்படியாக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு உருவாகி விடும். அதன் செயல்திட்டங்கள் நிறைவேற எந்த நன்மையான காரியங்களைச் செய்தாலும் அவை அவர்களுடைய நன்மைக்காகவே செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு மூலம் அவர்கள் செய்த உதவிகள் பன்மடங்காகப் பெருகி மகத்தான நன்மைகளாக அவர்களிடமே வந்தடையும் என்பதை அறிந்துகொள்ளட்டும். மேலும் உங்களுடைய பாதுகாப்பான வாழ்க்கைக்கு வேண்டிய வசிதிகளை அல்லாஹ்வின் நியதிப்படி தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதியே அருளப்படுகின்றன. இது அல்லாஹ்வின் மிகப் பெரிய கருணையாகும்.