بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
72:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
قُلْ أُوحِىَ إِلَىَّ أَنَّهُ ٱسْتَمَعَ نَفَرٌۭ مِّنَ ٱلْجِنِّ فَقَالُوٓا۟ إِنَّا سَمِعْنَا قُرْءَانًا عَجَبًۭا.
72:1. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! குர்ஆனிலுள்ள அறிவுரைகளைக் கேட்க வருபவர்களில் சில பழங்குடியினரும் கேட்க வந்ததாக தனக்கு வஹீ வந்துள்ளது என அங்கு கூடி இருப்பவர்களிடம் அறிவித்து விடுவீராக. இந்த குர்ஆனை செவிமடுத்த அந்த பழங்குடியினர், தம் சமூகத்தாரிடம் சென்று ஆச்சரியமான குர்ஆனிய செய்திகளைக் கேட்டதாக சொன்ன விஷயத்தையும் தெரியப் படுத்துங்கள். (மேலும் பார்க்க 46:29)
அதாவது அந்த பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களிடையேயும் தமக்கு ஆதரவு இருப்பதை தெரியப்படுத்துங்கள்.
يَهْدِىٓ إِلَى ٱلرُّشْدِ فَـَٔامَنَّا بِهِۦ ۖ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَآ أَحَدًۭا.
72:2. அவர்கள் தம் சமூகத்தவர்களிடம் சென்று, “அந்த வஹீச் செய்தி முற்றிலும் நேரான பாதையைக் காட்டுவதால், அவற்றின் உண்மை நிலையை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். எனவே இறைவனின் வழிகாட்டுதலில் வேறெதையும் இணையாக வைத்து பின்பற்ற மாட்டோம்” என்று அறிவித்தனர். இதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.
وَأَنَّهُۥ تَعَٰلَىٰ جَدُّ رَبِّنَا مَا ٱتَّخَذَ صَٰحِبَةًۭ وَلَا وَلَدًۭا.
72:3. “இந்த அளவுக்கு இறைவழிகாட்டுதலின் மகத்துவமும் உயர்வும் நமக்கு புலனாகிவிட்டது. மேலும் இவ்வுலகைப் படைத்த இறைவனுக்கோ மனைவி மக்கள் என்று எதுவுமில்லை என்பதும் எங்களுக்கு தெளிவாகி விட்டது” என்றனர்.
وَأَنَّهُۥ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى ٱللَّهِ شَطَطًۭا.
72:4. ஆனால் இதுநாள் வரையில் இந்த உண்மைகளை எல்லாம் அறியாத நாங்கள், அல்லாஹ்வைக் குறித்து விதவிதமான கற்பனை கதைகளைச் சொல்லி வந்தோம். இந்த அளவுக்கு நாங்கள் அறிவிலிகளாக இருந்து வந்தோம்.
وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن تَقُولَ ٱلْإِنسُ وَٱلْجِنُّ عَلَى ٱللَّهِ كَذِبًۭا.
72:5. அதுமட்டுமின்றி நகர்புற மக்களானாலும் சரி; மலைவாழ் மக்களானாலும் சரி, அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் பொய்யான எந்த விஷயத்தையும் கலந்து சொல்ல மாட்டார்கள் என்றே எண்ணியிருந்தோம். ஆனால் இந்த குர்ஆனிய விஷயத்தை கேட்ட பின், நம்மிடையே பேசப்பட்டவற்றில் உண்மைக்குப் புறம்பான பல விஷயங்கள் கலந்துள்ளதை தெரிந்து கொண்டோம்.
وَأَنَّهُۥ كَانَ رِجَالٌۭ مِّنَ ٱلْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍۢ مِّنَ ٱلْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًۭا.
72:6. இறைவழிகாட்டுதல்கள் விஷயத்தில் நகர்புற மக்களிலுள்ள சிலர் எங்களிடம் வந்து தவறான தகவல்களைக் கொடுத்துள்ளனர். அவையே சரியானவை என்று நாங்களும் எண்ணிக்கொண்டு சந்தோஷத்தில் பூரித்துப் போய் இருந்தோம். காலப் போக்கில் அவையே நம்முடைய கலாச்சாரமாக மாறிவிட்டன. ஆனால் இந்த குர்ஆனிய செய்திகளைக் கேட்டபின், அவையெல்லாம் மூடநம்பிக்கையில் வடிந்த பேச்சுகளே என்று அறிந்து கொண்டோம்.
وَأَنَّهُمْ ظَنُّوا۟ كَمَا ظَنَنتُمْ أَن لَّن يَبْعَثَ ٱللَّهُ أَحَدًۭا.
72:7. இன்னும் மக்களின் மூட நம்பிக்கைகளை நீக்கி உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் இறைத்தூதரை ஒருபோதும் அல்லாஹ் அனுப்ப மாட்டான் என்றே நகர்புற மக்கள் எண்ணியிருந்தனர். அதே போன்று நாங்களும் எண்ணியிருந்தோம். (பார்க்க 62:2) ஆனால் எங்களுடைய எண்ணங்கள் யாவும் தவறானவை என்பதை இந்த குர்ஆனைக் கேட்ட பின் அறிந்து கொண்டோம்.
மேலும் நம் வாழ்க்கையைப் பற்றி கணித்து கூறி வந்த ஜாதக விஷயங்கள் யாவும் வானம் வரையில் சென்றடைந்து அங்கிருந்து கேட்டு வந்ததாக ஜோசியர்கள் கூறி வந்தனர். ஆனால்
وَأَنَّا لَمَسْنَا ٱلسَّمَآءَ فَوَجَدْنَٰهَا مُلِئَتْ حَرَسًۭا شَدِيدًۭا وَشُهُبًۭا.
72:8. அவ்வாறு யாரும் வானத்தைத் தொட்டுப் பார்த்து, எந்த விஷயத்தையும் கேட்டறிய முடியாது என்பதை நாங்கள் இப்போது அறிந்து கொண்டோம். காரணம் அங்கு கடுமையான காவலாளிகளாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன என்பதை நாம் அறிந்து கொண்டோம்.
அதாவது பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தைக் கடந்து செல்வது என்பது இயலாத விஷயமே. இதற்காக முன்னேற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும். (பார்க்க 55:33) நவீன விஞ்ஞான காலத்து கண்டுபிடிப்புகளே இதற்கு ஆதாரம். இருந்தும் அங்கிருந்து மனித வாழ்க்கைப் பற்றிய எந்த செய்தியையும் யாராலும் கொண்டு வரவே முடியாது. அங்குள்ள படைப்புகளைப் பற்றிய செய்திகளை மட்டும் தான் கொண்டுவர முடியும்.
وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَٰعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ ٱلْءَانَ يَجِدْ لَهُۥ شِهَابًۭا رَّصَدًۭا.
72:9. இதற்கு முன்பெல்லாம் இப்படிப்பட்ட வானுலக ஜாதக செய்திகள் வருவதாகக் கேள்விப்பட்டு அதை செவிமடுப்பதற்காக நாங்கள் பல இடங்களுக்குச் சென்று காத்துக் கிடந்தோம். ஆனால் இப்போதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கின்றானோ அவன் தனக்காக தீய விளைவுகளையே எதிர்பார்க்க வேண்டி வரும் என்பதை இந்த குர்ஆனைக் கேட்டபின் தெரிந்து கொண்டோம்.
அதாவது இந்த குர்ஆனின் அடிப்படையில் ஆட்சியமைப்பு உருவாகும்போது, இத்தகைய ஜோசியங்களுக்கு எந்த அவசியமும் இருக்காது. அதையும் மீறி ஜோசியக்காரர்களின் நடமாட்டம் இருந்தால், அவர்களைப் பிடித்து சிறையில் அடைப்பார்கள். அல்லது மக்களே அவர்களை விரட்டியடிப்பார்கள். மேலும் அவர்கள் தம் சமூகத்தாரிடம்,
وَأَنَّا لَا نَدْرِىٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِى ٱلْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًۭا.
72:10. “இந்த குர்ஆனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சமூக அமைப்பு உருவாகி மனிதனுக்கு இன்பமான வாழ்க்கை கிடைக்குமா? அல்லது இதற்காக மேற்கொள்ளப்படும் அறப்போரில் மாண்டுவிடுவோமா? என்பது எங்களுக்குத் தெரியாது”
وَأَنَّا مِنَّا ٱلصَّٰلِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَ ۖ كُنَّا طَرَآئِقَ قِدَدًۭا.
72:11. “ஆனால் நம்மில் சிலர் நல்லவர்களும் இருக்கிறார்கள். தீயவர்களும் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நாங்கள் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றும் பலப் பிரிவினர்களாகவும் இருக்கிறோம்”
எனவே எங்களுக்குள்ளும் எதிர்ப்புகளும் பகைமையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن نُّعْجِزَ ٱللَّهَ فِى ٱلْأَرْضِ وَلَن نُّعْجِزَهُۥ هَرَبًۭا.
72:12. “ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நாங்கள் நன்றாக அறிந்துகொண்டோம். அதாவது, அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்திலிருந்து யாரும் தப்பித்துச் செல்லவே முடியாது. அதை விட்டு எங்கும் ஓடி ஒளிந்திடவும் முடியாது. அந்தச் சட்டத்தை யாராலும் வெல்லவும் முடியாது. இந்த விஷயத்தை குர்ஆன் மூலம் அறிந்து கொண்டோம்”
وَأَنَّا لَمَّا سَمِعْنَا ٱلْهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦ ۖ فَمَن يُؤْمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخْسًۭا وَلَا رَهَقًۭا.
72:13. “எனவே ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் குர்ஆனைக் கேட்கும் போது, அது எந்த அளவுக்கு நேர்வழியைக் காட்டுகிறது என்பதை அறிந்து, நாங்கள் அதன் மீது உறுதியாக நம்பிக்கைக் கொண்டோம். எனவே எந்த சமுதாயம் இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்படுகிறதோ, அதற்கு எந்த வகையிலும் இழப்புகள் ஏற்படவே ஏற்படாது. அத்தகைய சமுதாயத்தில் எந்த அநீதியும் யாருக்கும் இழைக்கப்பட மாட்டாது”
وَأَنَّا مِنَّا ٱلْمُسْلِمُونَ وَمِنَّا ٱلْقَٰسِطُونَ ۖ فَمَنْ أَسْلَمَ فَأُو۟لَٰٓئِكَ تَحَرَّوْا۟ رَشَدًۭا.
72:14. “மேலும் நம்மில் சிலர், மக்கள் நலனைப் பேணிக் காக்கும் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள். மற்றும் சிலர், மக்களின் செல்வங்களை அநியாயமாக அபகரித்து அநியாயம் செய்பவர்களும் இருக்கிறார்கள். எவர் இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று செயல்படுகிறார்களோ, அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டவர்கள் ஆவார்கள்.”
وَأَمَّا ٱلْقَٰسِطُونَ فَكَانُوا۟ لِجَهَنَّمَ حَطَبًۭا.
72:15. “இதற்கு மாறாக எவர் அநியாய அக்கிரம செயல்களில் நிலைத்து விடுகிறார்களோ, அவர்கள் தாம் நரக வேதனைகளுக்கு எரி பொருளாக மாறிவிடுவார்கள் என்பதை நாங்கள் இந்த குர்ஆன் மூலம் அறிந்து கொண்டோம்”
இதுதான் அந்த பழங்குடியினர் தம் சமூத்தாரிடம் சென்று இறைவழிகாட்டுதலைப் பற்றியும் அவற்றின் பலன்களைப் பற்றியும் எடுத்துரைத்த உண்மைகளாகும். ஆனால் மக்களோ “ஜின்”களைப் பற்றி விதவிதமான கற்பனை கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
وَأَلَّوِ ٱسْتَقَٰمُوا۟ عَلَى ٱلطَّرِيقَةِ لَأَسْقَيْنَٰهُم مَّآءً غَدَقًۭا.
72:16. நபியே! பழங்குடியினரோ அல்லது நகர்புற மக்களோ, இறைவழிகாட்டுதலில் உறுதியோடு நிலைத்திருந்து அவற்றை கடைப்பிடித்து வந்தால், அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைத்து வரும் என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பீராக.
لِّنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَمَن يُعْرِضْ عَن ذِكْرِ رَبِّهِۦ يَسْلُكْهُ عَذَابًۭا صَعَدًۭا.
72:17. இறைவழிகாட்டுதலைப் பின்பற்றுபவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு இதுவே உரைகல்லாகும். இறைவனின் அறிவுரைகளை புறக்கணிப்பவர்களுடைய வாழ்வு வேதனை மிக்கதாய் மாறிவிடும். அதாவது வேதனைகளுடன் வாழ்வோர் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றுவதில்லை என்பதாகப் பொருள்படும்.
وَأَنَّ ٱلْمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا۟ مَعَ ٱللَّهِ أَحَدًۭا.
72:18. எனவே அவர்களிடம், ஒவ்வொரு விஷயத்திலும், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மட்டுமே அடிபணிவது என்பதாக இருக்க வேண்டும். அவனுடைய வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு பின்பற்றுவதற்காக உருவாக்கபட்டதல்ல பள்ளிவாசல்கள். இதை மக்களுக்கு அறிவித்துவிடுங்கள். (பார்க்க 9:17)
وَأَنَّهُۥ لَمَّا قَامَ عَبْدُ ٱللَّهِ يَدْعُوهُ كَادُوا۟ يَكُونُونَ عَلَيْهِ لِبَدًۭا.
72:19. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுவதற்காக அழைப்பவரை எதிர்த்து மக்கள் அணிஅணியாக ஒன்று திரண்டு அவரை நசுக்கிவிடவே முயல்கின்றனர்.
قُلْ إِنَّمَآ أَدْعُوا۟ رَبِّى وَلَآ أُشْرِكُ بِهِۦٓ أَحَدًۭا.
72:20. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! “நான் விடும் அழைப்பெல்லாம் ஏக இறைவனின் வழிகாட்டுதலின் பக்கம் தான் ஆகும். அதில் வேறு எந்த வழிமுறைகளையும் இணையாக வைத்து பின்பற்றக் கூடாது என்பதுதான்” என்று மக்களிடம் எடுத்துரைப்பீராக.
قُلْ إِنِّى لَآ أَمْلِكُ لَكُمْ ضَرًّۭا وَلَا رَشَدًۭا.
72:21. “மக்களே! உங்களுக்கு ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் உங்கள் செயல்களால் தான் ஆகும். எனவே உங்களுக்கு எந்த நன்மையோ தீமையோ விளைவிக்க என்னால் முடியாது. இதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” என்று அவர்களை தெளிவுபடுத்தி விடுவிடுங்கள்.
قُلْ إِنِّى لَن يُجِيرَنِى مِنَ ٱللَّهِ أَحَدٌۭ وَلَنْ أَجِدَ مِن دُونِهِۦ مُلْتَحَدًا.
72:22. “மற்றவர்களுக்கு நன்மை செய்வதோ தீமை செய்வதோ ஒருபுறம் இருக்கட்டும். நானே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டு எந்த நன்மையையும் என்னால் தேடிக்கொள்ளவே முடியாது. அதனால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து எங்கும் தப்பித்து செல்லவும் முடியாது.” என்று அவர்களிடம் எடுத்துரைப்பீராக.
إِلَّا بَلَٰغًۭا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦ ۚ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا.
72:23. “எனவே அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்படும் வழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே என் பணியாகும். அவற்றை ஏற்று நடப்பதும் நடக்காததும் உங்களுடைய விருப்பத்திற்குரிய விஷயங்களாகும். (பார்க்க 18:29) அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதனடிப்படையில் உருவாகும் ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் மாறு செய்பவர்களுடைய வாழ்க்கை வேதனை மிக்கதாக ஆகிவிடும். அவர்கள் அதில் நீண்ட ஆயுளைக் கழிக்க வேண்டிவரும்” என்று அவர்களிடம் தெளிவாக எடுத்துரைப்பீராக.
حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًۭا وَأَقَلُّ عَدَدًۭا.
72:24. முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட அந்த வேதனைகள் அவர்களை நெருங்கும் போது, அவர்களுடைய உதவியாளர்கள் மிகவும் பலம் பொருந்தியவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்ததெல்லாம் பொய்யென ஆகிவிடும். யாரை அவர்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்றும், எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய பலத்தை அவர்கள் அப்போது அறிந்து கொள்வார்கள்.
قُلْ إِنْ أَدْرِىٓ أَقَرِيبٌۭ مَّا تُوعَدُونَ أَمْ يَجْعَلُ لَهُۥ رَبِّىٓ أَمَدًا.
72:25. வாக்களிக்கப்பட்ட அந்த வேதனைகள் எப்போது ஏற்படும் என்று எனக்கு தெரியாது. அவை விரைவிலும் வந்தடையலாம். அல்லது இறைவனின் நியதிப்படி சில காலத்திற்குப் பின்பும் ஏற்படலாம். ஆனால் உங்களுடைய தீய செயல்களை வைத்துப் பார்க்கும் போது, உங்களுக்கு வேதனைகள் வந்தடைவது நிச்சயம் என்றே தெரிகிறது.
عَٰلِمُ ٱلْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِۦٓ أَحَدًا.
72:26. வருங்காலத்தில் என்ன நடக்கும் என்ற ஞானம் என்னிடத்தில் இல்லை. அதைப் பற்றி முழு ஞானமும் இறைவனிடமே உள்ளது. அதை யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை.
إِلَّا مَنِ ٱرْتَضَىٰ مِن رَّسُولٍۢ فَإِنَّهُۥ يَسْلُكُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ رَصَدًۭا.
72:27. ஆனால் இறைவனின் தேர்வில் இருக்கும் இறைத் தூதர்கள் மூலமாக எந்த விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய வேண்டுமோ, அவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிக்கிறான். வஹீ மூலமாக எடுத்துரைக்கப்பட்டவை எதுவும் வீணாக சொல்லப்பட்ட விஷயங்கள் அல்ல. அதன்படியே நடைபெற வைக்க இயற்கை சக்திகள் செயல்படுகின்றன.
உதாரணத்திற்கு ஒரு சமுதாயம் தவறான வழியில் செயல்படும்போது, அது அழிவைச் சந்திக்கும் என்று இறைவழிகாட்டுதல் கூறுகிறது. அது ஒருபோதும் தவறான தகவலாக இருக்காது. அது அழிந்தே போகும். ஏனெனில் இயற்கை சக்திகள் மனித செயல்களுக்கு ஏற்றவாறே விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் எப்போது அழியும் என்பதை யாராலும் கணித்துக் கூற இயலாது. ஏனெனில் எந்த அளவுக்கு தீய செயல்களில் ஒரு சமுதாயம் ஈடுபடுகிறதோ, அந்த அளவுக்கு அது விரைவில் அழிவை சந்திக்கும். ஆனால் சிலர் இந்த வாசகத்தை வைத்துக் கொண்டு உலகம் எப்போது அழியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவையாவும் வெறும் யூகங்களே ஆகும். உண்மைக்குப் புறம்பான விஷயங்களாகும்.
لِّيَعْلَمَ أَن قَدْ أَبْلَغُوا۟ رِسَٰلَٰتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَىٰ كُلَّ شَىْءٍ عَدَدًۢا.
72:28. இப்படியாக ஒவ்வொரு சமூகத்தவருக்கும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தார்கள். (பார்க்க 14:4) அவற்றை முழு அளவில் எடுத்துரைத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் அவரவர் விருப்பத்திற்கு விடப்பட்டு விட்டது. (பார்க்க 10:108) எனவே ஒவ்வொரு சமுதாயமும் எவ்வாறு செயல்படுகிறது என்ற முழு ஞானமும் இறைவனுக்கு உண்டு. அத்துடன் அவர்களுடைய செயல்களுக்கேற்ற வகையில் விளைவுகள் ஏற்படும்படி நேரம் காலம் நிர்ணயிக்கப்பட்டு விட்டன.