بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

71:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


إِنَّآ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.

71:1.நூஹ் நபி இறைவழிகாட்டுதலை தம் சமூகத்தாருக்கு எடுத்துரைத்த இறைத்தூதர் என்பது உண்மையே. ஆனால் அவருடைய சமூகத்தார் தவறான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் விளைவாக நேரவிருக்கும் வேதனைளைப் பற்றி அவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்து வந்தார்.


قَالَ يَٰقَوْمِ إِنِّى لَكُمْ نَذِيرٌۭ مُّبِينٌ.

71:2. அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “உங்களுடைய தவறான செயல்களால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்யவே வந்துள்ளேன்” என்றார்.


أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ.

71:3. எனவே இறைவழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து செயல்படும்படி சொல்லி வந்தார். அதற்கு மாறு செய்வதால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படும்படி அறிவுறுத்தி வந்தார்.


يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّى ۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُ ۖ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ.

71:4.“நீங்கள் இறைவழிகாட்டுதலின் படி செயல்பட்டு வந்தால் உங்களுக்கு பாதுகாப்பான நிம்மதியான வாழ்வு கிடைக்கும். உங்களுடைய தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வருவதற்கு கால அவகாசம் தரப்பட்டுள்ளது. அந்த அவகாசம் முடிந்தபின் அதன் விளைவுகள் ஏற்படுவதை யாரும் பிற்படுத்த முடியாது. அவற்றின் வேதனைகளைப் பற்றி அறிந்தால் நீங்கள் இவ்வாறு செய்ய மாட்டீர்கள்” என்றார்.
இவ்வாறு அவர் பல ஆண்டுகள் வரையில் தன் சமூகத்தாருக்கு அறிவுறுத்தி வந்தார். ஆனால் அவர்கள் அவருடைய அறிவுரைகளை பொருட்படுத்தவே இல்லை. எனவே


قَالَ رَبِّ إِنِّى دَعَوْتُ قَوْمِى لَيْلًۭا وَنَهَارًۭا.

71:5.அவர், “என் இறைவா! என் சமூகத்தாரை நான் இரவு பகலாக நேர்வழியின் பக்கம் அழைத்து வந்தேன்.”


فَلَمْ يَزِدْهُمْ دُعَآءِىٓ إِلَّا فِرَارًۭا.

71:6.“ஆனால் அவர்கள் என் அழைப்பை ஏற்கவே இல்லை. இறைவழிகாட்டுதலை விட்டு வெருண்டு ஓடுவதுதான் அதிகமானது.”


وَإِنِّى كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوٓا۟ أَصَٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِمْ وَٱسْتَغْشَوْا۟ ثِيَابَهُمْ وَأَصَرُّوا۟ وَٱسْتَكْبَرُوا۟ ٱسْتِكْبَارًۭا.

71:7. உன் வழிகாட்டுதலின்படி செயல்படுவதால் கிடைக்கும் பாதுகாப்பான வாழ்வைப் பற்றி சொல்லி அவர்களை அழைத்தேன். ஆனால் என் அறிவுரைகளை அவர்கள் ஒருபோதும் கேட்கவே இல்லை. அவர்கள் அந்த வழியாகச் சென்றால் என்னிடமிருந்து தப்பிக்க தம் முகங்களை மூடி மறைத்துக் கொண்டனர். அவர்களிடம் இருந்த பிடிவாதக் குணம், தற்பெருமை மற்றும் ஆணவம் தான் அவர்களை தடுக்கின்றன.


ثُمَّ إِنِّى دَعَوْتُهُمْ جِهَارًۭا.

71:8. அவ்வாறிருந்தும் நான் அவர்கள் அனைவரையும் கூட்டி பொதுமேடையில் வெளிப்படையாகவே உன் வழிகாட்டுதலின் பக்கம் அழைப்பு விடுத்தேன்.


ثُمَّ إِنِّىٓ أَعْلَنتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًۭا.

71:9. அதுமட்டுமின்றி அவர்களுக்கு வெளிப்படையாகவும் எடுத்துரைத்து வந்தேன். தனிப்பட்ட முறையிலும் அழைத்து எடுத்துரைத்தேன்.


فَقُلْتُ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ إِنَّهُۥ كَانَ غَفَّارًۭا.

71:10. அவர்களிடம், “உங்களுடைய இறைவன் காட்டும் வழியில் செயல்பட்டு பாதுகாப்பான நிம்மதியான வாழ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக அவனுடைய வழிகாட்டுதல்கள் உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு உத்தரவாதம் அளிப்பதாக உள்ளன” என்று அறிவுறுத்தி வந்ததேன்.


يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًۭا.

71:11. “நீங்கள் அவ்வாறு செயல்படுவீர்களாயின் உங்களுக்கு வானுலக சட்டங்களின்படி எல்லா வசதி வாய்ப்புகளும் பெருகி வரும்” என்றேன்.


وَيُمْدِدْكُم بِأَمْوَٰلٍۢ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّٰتٍۢ وَيَجْعَل لَّكُمْ أَنْهَٰرًۭا.

71:12. “உங்களுடைய செல்வங்களும் பெருகி வரும். உங்கள் பிள்ளைகளும் சிறந்த முறையில் வளர்ந்து, உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். நீங்கள் வாழும் சமுதாயமும் தோட்டங்களைப் போன்று பசுமை நிறைந்ததாய் ஆகிவரும். இப்படியாக உங்களுக்கு பொருளாதார வசதிகள் பெருகிவரும்” என்று பலமுறை எடுத்துரைத்து வந்தேன்.


مَّا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًۭا.

71:13. “உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின வழிகாட்டுதல்கள் உங்களுடைய சிறப்பான வாழ்வின் பக்கம் அழைக்கும் போது, நீங்கள் அதை ஏன் அனுசரித்து நடக்க மறுக்கிறீர்கள்?”


وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا.

71:14.“நீங்கள் உங்கள் படைப்பைப் பற்றியே சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய படைப்பு பல படித்தரங்களைக் கடந்து வந்துள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?”


أَلَمْ تَرَوْا۟ كَيْفَ خَلَقَ ٱللَّهُ سَبْعَ سَمَٰوَٰتٍۢ طِبَاقًۭا.

71:15. அல்லாஹ்வின் மாபெரும் செயல்திட்டங்களின்படி வானங்கள் பல அடுக்கடுக்காக எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை கவனித்துப் பார்க்க மாட்டீர்களா?”


وَجَعَلَ ٱلْقَمَرَ فِيهِنَّ نُورًۭا وَجَعَلَ ٱلشَّمْسَ سِرَاجًۭا.

71:16. “இன்னும் வானிலுள்ள எண்ணற்ற படைப்புகளையும், பிரகாசிக்கும் சந்திரனையும், சுடர் விட்டு ஒளிவீசும் சூரியனையும் கவனித்துப் பார்ப்பதில்லையா?”
இவை அனைத்தும் உங்களுடைய வாழ்வின் ஊன்றுகோல்களாக உள்ளன. இவற்றின் துணையின்றி உங்களால் உயிர் வாழவே முடியாதே. அதே போல் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் உங்களுடைய சமுதாயம் சிறக்கும். இதைத் தான் இறைவழிகாட்டுதல் வலியுறுத்துகிறது. ஆனால் நீங்களோ தனித்தனியே சுயநலத்துடன் வாழ்ந்து சிறப்பாக வாழ முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்கள். இது சரியல்ல. உங்களுடைய படைப்பைப் பற்றியே சற்று சிந்தித்துப் பாருங்கள். பூமியில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களின் தன்மைகளும் உங்கள் உடலில் ஐக்கியமாகி உள்ளதை அறிந்து கொள்வீர்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?


وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلْأَرْضِ نَبَاتًۭا.

71:17. அல்லாஹ்வின் செயல்திட்டப்படி நீங்கள் பூமியிலிருந்து செடிகொடி தாவரங்களைப் போல் முளைத்து, பல படித்தரங்களைக் கடந்து, சிறந்த முறையில் மனித பிறவியாக உருவாகி வந்தீர்கள். (மேலும் பார்க்க 15:26, 32:7-8)
பூமியிலுள்ள அனைத்துப் படைப்புகளின் தாதுப் பொருட்களும் புராதனச் சத்துகளும் மனித உடலில் ஐக்கியமகாகி இருப்பதே இதற்கு ஆதாரமாகும்.


ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًۭا.

71:18. அதைத் தொடர்ந்து, நீங்கள் அனைவரும் இணைந்து வாழ வழிசெய்யப்பட்டது. நீங்கள் மரணித்த பின் இவ்வுலகை விட்டு கடந்து செல்ல வேண்டியுள்ளது.


وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ بِسَاطًۭا.

71:19. மேலும் நீங்கள் அனைவரும் சிறப்பாக வாழ்வதற்காக இந்த பூமியில் அனைத்து வாழ்வாதார வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.


لِّتَسْلُكُوا۟ مِنْهَا سُبُلًۭا فِجَاجًۭا.

71:20. நீங்கள் பயணம் செய்வதற்காக விசாலமான பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறாக நூஹ் நபி தம் சமூகத்தாருக்கு இறைவனின் படைப்புகளையும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்களையும் எடுத்துரைத்து வந்தார்.


قَالَ نُوحٌۭ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِى وَٱتَّبَعُوا۟ مَن لَّمْ يَزِدْهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارًۭا.

71:21. ஆனால் அவர்களோ அவருடைய அறிவுரைகளை ஏற்று நடக்க முன்வரவில்லை. எனவே அவர், “என் இறைவா! என் சமூகத்தார் உன் அறிவுரைகளுக்கு மாற்றமாகவே செயல்படுகின்றனர். அவர்கள் யாரை தலைவராக ஏற்று நடக்கிறார்களோ, அவரால் மக்களுக்கு கேடுகள்தான் ஏற்பட்டு வருகின்றன. இருந்தும் அவர்களையே பின்பற்றி வருகின்றனர்” என்று இறைவனிடம் தம் மனக் குமுறல்களைச் சமர்ப்பித்தார்.


وَمَكَرُوا۟ مَكْرًۭا كُبَّارًۭا.

71:22. “மேலும் அவர்கள் எனக்கெதிராக பல சூழ்ச்சிகளையும் செய்து வருகின்றனர்.


وَقَالُوا۟ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّۭا وَلَا سُوَاعًۭا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًۭا.

71:23. “மேலும் அவர்கள் வணங்கிவரும் தெய்வங்களை விட்டுவிடாதவாறு மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். அவர்களே மண் பொம்மைகளை தயாரித்து வைத்துக் கொண்டு அவற்றிற்கு பெயரிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றிற்கு ‘வத்தன்’, ‘சுவாஅன்’, ‘யஃகூஸ’, ‘யஊஃக்க’, ‘நஸ்ரன்’ எனப் பெயரிட்டு வணங்கி வருகின்றனர். இவற்றில் எதையும் விட்டுவிடாதீர்கள் என்கின்றனர். இல்லையென்றால் தெய்வக்குற்றமாகி விடும் என்கின்றனர்”


وَقَدْ أَضَلُّوا۟ كَثِيرًۭا ۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلًۭا.

71:24. “இப்படியாக அவர்கள் மக்கள் அனைவரையும் வழிகெடுத்துள்ளனர். எனவே உன் நியதிப்படி இத்தகையவர்களின் செயல்கள் வழிகேட்டைத் தவிர வேறெதையும் அதிகமாக்குவதில்லை”


مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمْ أُغْرِقُوا۟ فَأُدْخِلُوا۟ نَارًۭا فَلَمْ يَجِدُوا۟ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارًۭا.

71:25. “ஆதலால் அவர்கள் தவறான செயல்களிலேயே மூழ்கிவிட்டனர். அதன் விளைவாக அவையே அவர்களுக்கு வேதனைகளை அளிக்க போதுமானதாக இருந்தன. அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தவிர, அவர்களுடைய துயரங்களிலிருந்து விடுபட வேறு எந்த வழிமுறையும் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை.


وَقَالَ نُوحٌۭ رَّبِّ لَا تَذَرْ عَلَى ٱلْأَرْضِ مِنَ ٱلْكَٰفِرِينَ دَيَّارًا.

71:26. மேலும் அவர் “என் இறைவனே! ஆணவம் பிடித்த அக்கிரமக்காரர்களை இந்த பூமியில் வாழ விட்டுவிடாதே” என்றும் பிரார்த்தித்தார். அந்த அளவுக்கு அவர்கள் இவரைத் துன்புறுத்தி வந்தனர்.


إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا۟ عِبَادَكَ وَلَا يَلِدُوٓا۟ إِلَّا فَاجِرًۭا كَفَّارًۭا.

71:27. ஒருவேளை அவர்களை நீ விட்டு வைப்பாயானால், உன்னைப் பின்பற்றி வரும் சிலரையும் அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள். இதனால் அவர்களுடைய சந்ததியர்களும், பாவிகளாகவும் இறை நிராகரிப்பவர்களாவுமே மாறி விடுவார்கள்.


رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًۭا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارًۢا.

71:28. “என் இறைவா! எனக்கும் என் பெற்றோர்களுக்கும், இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களுக்கும், இறைவழிகாட்டுதலின்படி செயல்படும் செயல்வீரர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீ பாதுகாப்பு அளிப்பாயாக. ஏனெனில் உன் நியதிப்படி அநியாயக்காரர்களுக்கு வேதனைத் தரும் அழிவினைத் தவிர வேறெதுவும் அதிகரிப்பதில்லை” என்றும் பிரார்த்தித்தார்.