بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

70:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍۢ وَاقِعٍۢ.

70:1. இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஏற்படவிருக்கின்ற அழிவுகள், எப்போது ஏற்படும் என்று கேட்பவன் கேட்டுக்கொண்டு தான் இருப்பான்.
அவன் அதைப் பற்றி ஏளனமாக கேட்கிறான் என்பதற்காக அதை அவன் கண்முன் கொண்டு வந்து காட்டக் கூடிய காட்சிகளா? அந்த அழிவுகள் வந்து விட்டால் அதில் அவனும் மடிந்துதானே போவான்.


لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌۭ.

70:2.இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஏற்படுகின்ற தவிர்க்க முடியாத பேரழிவுகளாகும் அது.


مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ.

70:3. அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படியே மனிதனின் தீய செயல்களின் விளைவுகள் படிப்படியாக பல படித்தரங்களைக் கடந்து இறுதியில் அழிவு என்ற தோற்றத்திற்கு முழு அளவில் வந்துவிடும்.


تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍۢ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍۢ.

70:4. பிரபஞ்ச இயற்கை சக்திகள் மற்றும் அவற்றில் உள்ள பல்வேறு செயல் திறன்களில் பரிணாம வளர்ச்சி எவ்வாறு ஏற்பட்டு வருகின்றதோ, அதுபோன்று தான் இதுவும். பிரபஞ்ச படைப்புகளில் பரிணான வளர்ச்சி, பல படித்தரங்களை கடந்து நிறைவு பெறுகின்றன. அவற்றில் ஒவ்வொரு வளர்ச்சி படித்தரத்தை கடப்பதற்கும், எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு, உங்கள் கணக்கின்படி ஐம்பது ஐம்பதாயிரம் வருடங்களாகும். அந்த அளவுக்கு நீண்ட கால செயல் திட்டங்களாகும். (மேலும் பார்க்க 22:47, 32:5, 97:4)
எனவே மனித உலகிலும் சரி, பிரபஞ்ச படைப்புகளிலும் சரியே. கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்து விடவேண்டும் என்று எண்ணினால், அது அவனுடைய தவறான எதிர் பார்ப்பாகும். சமுதாய வளர்ச்சியிலும் சரி, அழிவிலும் சரி. நிர்ணயிக்கப்பட்ட கால அளவின் படியே மனித செயல்களுக்கு ஏற்ற வகையில் ஏற்பட்டு வரும். அதாவது எந்த அளவுக்கு இறைவழிகாட்டுதலின்படி ஒரு சமுதாயம் வேகமாக உழைக்கிறதோ, அந்த அளவுக்கு அது முன்னேற்றத்தை காணும். எந்த அளவுக்கு தீய செயல்களை செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அழிவுகள் விரைந்து வரும்.
ஆக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யுகங்கள் என நீண்ட கால அடிப்படையில் உணரா வண்ணம் செயல்படுபவை ஆகும். அவன் இயற்றிய சட்ட விதிமுறைகளின் படி மனிதன் செயல்பட்டால், பல யுகங்களை கடந்து ஏற்படுகின்ற மாற்றங்களை குறுகிய காலத்திலே ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்படியாக மனித படைப்பு அவசர பிரகடனமாக (EMERGENT EVOLUTION) இருக்கிறது. எனவே அவர்கள் வேண்டுமானால் இந்த அழிவின் முன்னெச்சரிக்கை செய்திகளைப் பற்றி ஏளனமாகப் பேசிக் கொண்டு இருக்கட்டும்.


فَٱصْبِرْ صَبْرًۭا جَمِيلًا.

70:5. நீங்கள் இறைவழிகாட்டுதலின்படி உள்ள செயல் திட்டங்களில் நிலைத்திருந்து அனைவரும் இணைந்து முழு வேகத்துடன் அழகிய முறையில் செயல்பட்டு வாருங்கள்.


إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًۭا.

70:6. ஆனால் அவர்களோ இப்படியெல்லாம் ஏற்பட சாத்தியமில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.


وَنَرَىٰهُ قَرِيبًۭا.

70:7. இறைவனின் நியதிப்படி அந்த அழிவுகள் விரைவில் ஏற்பட்டே தீரும்.


يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ.

70:8. அப்போது பெரிய பெரிய தலைவர்களின் முகங்கள் உருக்கப்பட்ட செம்பைப் போல் கோபத்தால் சிவந்து விடும். (55:37)


وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ.

70:9. மலைகளைப் போல் செல்வங்களை குவித்து வைத்திருப்போரின் நிலைமை தடுமாறி பஞ்சாகப் பறந்துவிடும். (பார்க்க 101:5)


وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًۭا.

70:10. அத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் யாரும் தன்னுடைய உயிர் நண்பனைப் பற்றியும் கவலைப்பட மாட்டான்.


يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ.

70:11. இபடியாக அந்த குற்றவாளி துயரத்தில் சிக்கியிருப்பதை அவனுடைய நண்பன் பார்த்துக் கொண்டே இருந்தும், தனக்கு உதவாமல் இருப்பதை காண்பான். யார் மீதாவது பழி சுமத்தி அவ்வேதனைகளிலிருந்து தப்பிக்க வழி உண்டா என்ற தவிப்பில் தான் இருப்பான்.


وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ.

70:12. அவன் தன் மனைவியோ அல்லது கூடப் பிறந்த சகோதரனோ உதவி செய்வார்களா எனவும் ஏங்குவான்.


وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ.

70:13. அல்லது அவன் அரவணைத்து வந்த சுற்றத்தாராவது காப்பாற்றுவார்களா எனவும் தவிப்பான்.


وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا ثُمَّ يُنجِيهِ.

70:14. பூமியிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தாவது தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்றும் அவன் எண்ணுவான். (பார்க்க 3:91)


كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ.

70:15. ஆனால் இவர்களில் யாரும் அவனுக்கு கிடைக்கக் கூடிய தாளா வேதனையிலிருந்து ஒருபோதும் காப்பாற்றவே முடியாது.


نَزَّاعَةًۭ لِّلشَّوَىٰ.

70:16. இப்படியாக அவனுடைய எல்லா முயற்சிகளிலும் தோல்வியுற்று ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருப்பான்.


تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ.

70:17. இப்படி ஒரு வேதனை தரக்கூடிய நிலை, இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அக்கிரமச் செயல்களைச் செய்வோரை அது கூவிக்கூவி அழைக்கிறது.


وَجَمَعَ فَأَوْعَىٰٓ.

70:18. அப்படியும் அவன் செய்த குற்றம்தான் என்ன? செல்வங்களை குவித்து பத்திரப்படுத்துவதிலே அவன் கண்ணும் கருத்துமாய் இருந்தான். சமுதாய நலனுக்காக அவற்றை அவன் ஒருபோதும் பயன்படுத்தியதே இல்லை.
சிந்தனையாளர்களே! இறை வழிகாட்டுதலின்றி வாழும் மக்களிடையே எந்த அளவுக்கு சுயநலம் மிகைத்து விடுகிறது என்பதை கவனித்துப் பாருங்கள். எந்த வகையிலாவது விரைவில் செல்வந்தர்களாக ஆகிவிட வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணங்களாக இருக்கும்.


۞ إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا.

70:19. அத்தகைய மக்களிடம் அவசரப் புத்தி வளர்ந்து விடுகிறது.


إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًۭا.

70:20. அத்தகைய மனப்பான்மை உள்ளவர்களுக்கு தீங்கு ஏதாகிலும் ஏற்பட்டுவிட்டால் உடனே பதறிப் போய்விடுவார்கள்.


وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا.

70:21. ஆனால் அவர்களுக்கு நன்மைகள் கிடைத்தால், அவை தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக் கொள்வார்கள். அவற்றை சமுதாய நலனுக்காக கொடுப்பதை தடுத்துக் கொள்வார்கள்.


إِلَّا ٱلْمُصَلِّينَ.

70:22. ஆனால் இறைவழிகாட்டுலைப் பேணி நடப்பவர்கள் இப்படி ஒருபோதும் செயல்பட மாட்டார்கள். மேற்சொன்ன எந்த தீய பழக்கமும் தீய எண்ணங்களும் அவர்களிடம் இருக்காது. ஏனெனில்


ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ.

70:23. அவர்கள் சுயநலத்துடன் வாழ்வதை விட்டுவிட்டு, இறைவன் காட்டிய வழியில் சமூக நலத்தைக் கட்டிக் காக்கும் ஸலாத் முறையை நிலைநிறுத்தி (பார்க்க 11:87) அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் பேணிக் காப்பார்கள்.


وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ مَّعْلُومٌۭ.

70:24. மேலும் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற தம்மாலான உதவிகளை செய்வது தம் மீதுள்ள கடமை என எண்ணுவார்கள். இதற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்துவார்கள்.

لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ.

70:25. இவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தை வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்கும், ஏழ்மையில் வாடுபவர்களுக்கும் உதவி செய்து, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடுவார்கள்.

وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ.

70:26. இப்படிப்பட்ட சமூக நலப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படும் விபரீத விளைவுகள் என்னவென்பதை கவனத்தில் கொண்டு செயல்படுவார்கள். காரணம்

وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ.

70:27.“மனித செயல்களின் விளைவுகள்” என்ற சட்டம் எல்லோருக்கும் பொருந்தும். எனவே அதிலிருந்து யாரும் தப்பவே முடியாது என்பதை எண்ணி அஞ்சுவார்கள்.

إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍۢ.

70:28. இவ்வுலகில் உள்ள சமுதாயங்களுக்கும் சரி. அல்லது தனி நபரின் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் சரி. அந்த வேதனைகள் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள்.

وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ.

70:29. மேலும் அவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து தம் கற்பை பாதுகாத்துக் கொள்வார்கள். மானக் கேடான செயல்கள் எங்கும் நிகழாதவாறு பார்த்துக் கொள்வார்கள். (பார்க்க 17:32, 23:5) மூடி மறைக்க வேண்டிய உடல் அங்கங்களை அன்னியர்கள் பார்வையில் படாதவாறு ஆடைகளை அணிந்துக் கொள்வார்கள்.

إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ.

70:30. இருப்பினும் கணவன் மனைவியிடையே இத்தகைய ஆடை கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் மருத்துவ பரிசோதனை போன்ற பணியாட்களிடத்திலும் தன் மறைவிடத்தைக் காட்டுவதில் தவறு ஒன்றுமில்லை. (பார்க்க 23:5)

فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ.

70:31. இதைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஒழுக்கத்துடன் கூடிய ஆடைகளை அணிந்தே வெளியில் செல்லவேண்டும். அறைகுறை ஆடைகளுடன் வெளியில் சுற்றுவது வரம்பு மீறினச் செயலாகும்.

وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ.

70:32. மேலும் இவர்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றி வருவார்கள். இவ்வாறு மக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவார்கள். அதில் சிறிதும் குறை வைக்க மாட்டார்கள்.

وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَ.

70:33. மேலும் இவர்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் நேர்ந்தால், ஒருபோதும் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள். (பார்க்க 25:72) சாட்சி சொல்வதில் பின் வாங்கவும் மாட்டார்கள்.

وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ.

70:34. இப்படியாக அவர்கள் இறை நெறிமுறைகளைப் பேணி நடந்து சமூக அமைப்பை கட்டிக் காப்பார்கள்.

أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍۢ مُّكْرَمُونَ.

70:35. இத்தகையவர்களே சுவனத்திற்கு உரியவர்கள் ஆவார்கள். (மேலும் பார்க்க 23:1-11) இத்தகைய சுவன வாழ்க்கை இவ்வுலகிலும் மறுமையிலும் கிடைக்கும்.

فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ.

70:36. இத்தகைய சுவன வாழ்வு இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களுக்கே கிடைக்கும் என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். ஆனால் இறைநிராகரிப்பவர்களோ நோகாமல் நோம்பிருந்து சுவனத்தை தட்டிச் சென்றுவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்.

عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ.

70:37. இறைவனின் ஆட்சியமைப்பில் சுவனத்தை பங்கு போட்டுக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டு நாலாப் புறத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டாக ஓடோடி வருகிறார்கள்.

أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍۢ.

70:38. சுவர்க்கத்திற்குச் செல்ல ஒவ்வொருவருக்கும் ஆசைதான். ஆனால் எந்த நற்செயலையும் செய்யாமல் சுவனத்தில் நுழைந்துவிட வேண்டும் என்று எண்ணுவது சரியாகுமா? தீய செயல்களைச் செய்து கொண்டு எப்படி அவர்களால் நிம்மதியாக வாழமுடியும்?

كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَٰهُم مِّمَّا يَعْلَمُونَ.

70:39. இறைவழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாழ்ந்தால் அன்றி யாரும் சுவனத்திற்குள் நுழையவே முடியாது. (பார்க்க 51:56) நாம் அவர்களை எதற்காகப் படைத்தோம் என்ற உண்மையை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்.

فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَٰرِقِ وَٱلْمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ.

70:40. ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளட்டும். இறைவனின் பரிபால அமைப்புகள் கிழக்கு மேற்கு என எல்லா திசைகளிலும் பரவி கிடக்கின்றன. இறைவழிகாட்டுதலின்படி அயராது பாடுபட்டு அவற்றை பெற்று வளத்துடனும், ஒழுக்க மாண்புகளுடனும் வாழ்வதே சிறப்பு. இதற்கு மாற்றமாக எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும் சுவனத்தை ஈட்டிக்கொள்ளவே முடியாது. காரணம் அல்லாஹ்வின் செயல்திட்டங்களே அனைத்து விஷயங்களிலும் மிகைத்தவையாக இருக்கின்றன.

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًۭا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ.

70:41. இவ்வாறு செயல்பட முன்வரவில்லை என்றால், இவர்களுக்குப் பதிலாக இவர்களைவிட சிறந்தவர்களை ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப்படும். அப்போது இவர்களால் எதுவும் செய்ய இயலாது.

فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ.

70:42. ஆகவே இப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு முன், இவர்கள் இறைவழிகாட்டுதலின் படி உழைக்க முன்வரட்டும். இவ்வாறு செயல்பட விரும்பவில்லை என்றால், அவர்கள் தம் விருப்பம் போல வீணானவற்றில் மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கட்டும். அதன்பின் அல்லாஹ்வின் நியதிப்படி நடப்பது நடந்தே தீரும்.

يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًۭا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍۢ يُوفِضُونَ.

70:43. அப்படியொரு கால கட்டத்தில் வில்லின் முனையிலிருந்து அம்பு எவ்வாறு விரைந்து பாய்கிறதோ, அவ்வாறே இவர்களும் தம் வீடுகளிலிருந்து தலை தெரிக்க ஓட வேண்டியிருக்கும்.

خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌۭ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ.

70:44. அதை தொடர்ந்து அவர்களுக்கு ஏற்படும் பேரிழப்புகளை எண்ணி மிகப் பெரிய தலைக் குனிவு ஏற்படும். அந்த அளவுக்கு அவர்களை இழிவுகள் சூழ்ந்துகொள்ளும். இவ்வாறு ஏற்படும் என்று வாக்கு அளிக்கப்பட்டிருந்ததே, அதுதான் இது என்று அப்போது புரியும்.