بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

69:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


ٱلْحَآقَّةُ.

69:1. சர்வ நிச்சயமாக ஏற்படவிருக்கும் ஓரு பேரழிவு.


مَا ٱلْحَآقَّةُ.

69:2. அந்த பேரழிவு என்பது யாது?


وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ.

69:3. அதைப் பற்றி அல்லாஹ்வை விட உமக்கு தெளிவாக எடுத்துரைக்க வேறு யாரால் முடியும்? எனவே சர்வ நிச்சயமாக நிகழக்கூடிய அந்த பேரழிவு என்ன?. மேலும் அது ஏன் நிகழும் என்ற விளக்கமும் அளிக்கப்படுகிறது.


كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ.

69:4. இறைவன் வகுத்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்கிற சட்டத்தின்படி முன்சென்ற சமூகத்தார்க்கு, குறிப்பாக "ஆது" மற்றும் "சமூது" கூட்டத்தார்க்கு என்ன நேர்ந்ததோ, அவ்வாறே நிகழும். தம் தவறான போக்குகளை விட்டுவிட இறைத் தூதர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இல்லாவிட்டால் பேரதிர்ச்சி தரக்கூடிய அழிவு சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் அவர்கள் அந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதன் விளைவாக அந்த அழிவில் சிக்கி அழிந்து போனார்கள்.


فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ.

69:5. அதிநடுக்கம் ஏற்படக்கூடிய கடுமையான பேரோசையுடன் கூடிய பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்து போனார்கள்.


وَأَمَّا عَادٌۭ فَأُهْلِكُوا۟ بِرِيحٍۢ صَرْصَرٍ عَاتِيَةٍۢ.

69:6. "ஆது" சமூகத்தார் வாழ்ந்த பகுதியில் பயங்கரமாக வீசிய சூறாவளிக் காற்று அவர்களை வேரோடு அழித்துவிட்டது.


سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍۢ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًۭا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍۢ.

69:7. அந்த சூறாவளிக்காற்று தொடர்ந்து ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் வீசியது. அது அவர்களை அடையாளம் காணமுடியாத படி அழித்துவிட்டது. நீர் அங்கு இருக்க நேர்ந்திருந்தால், ஈச்ச மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருப்பது போல் அவர்கள் தலைகுப்புறமாக வீசப்பட்டிருந்ததை கண்டிருப்பீர் (54:20)


فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍۢ.

69:8. அவர்களில் யாராவது தப்பித்தார்களா என்றால் இல்லை. அவர்கள் உலக வரைபடத்திலிருந்து முற்றிலுமே நீக்கப்பட்டார்கள் என்றே சொல்லலாம். அப்படி ஒரு நிலை.
அதற்கு என்ன காரணம்? அவர்களிடமிருந்த பிடிவாத குணம் தான் அவர்களின் அழிவிற்கு காரணமாகும். எனவே அவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையை அலட்சியம் செய்ததால் அவர்கள் அழிந்து போனார்களே அன்றி அவர்களை அழித்துவிட வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமல்ல.


وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ.

69:9. இவ்வாறே ஃபிர்அவ்னும் தன் அழிவை தானே தேடிக்கொண்டான். மேலும் இதற்குமுன் சென்றுவிட்ட பல சமூகத்தாருக்கும் இதே நிலை ஏற்பட்டது. மேலும் லூத் நபி சமூகத்தாரும் பாவகர செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர்கள் வாழ்ந்த ஊர்கள் தலைகீழாக புரண்டுவிட்டன.


فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةًۭ رَّابِيَةً.

69:10. இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து சமுதாய சீர்த்திருந்தங்களை கொண்டுவர இறைத்தூதர்கள் அவர்களிடம் வந்தனர். ஆனால் அவர்களுடைய அறிவுரைகளை ஏற்க மறுத்து அவற்றிற்கு மாறு செய்தனர். எனவே இறைவன் நிர்ணயித்த “மனித செலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.


إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ.

69:11. ஆனால் இறைத் தூதர்களின் அறிவுரைகளை ஏற்று செயல்பட்டவர்கள் அழிவிலிருந்து மீண்டு கொண்டனர். குறிப்பாக நூஹ் நபியைப் பின்பற்றியவர்கள் பிரளயத்தின் சமயம் கப்பலில் ஏறி மீண்டனர்.


لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةًۭ وَتَعِيَهَآ أُذُنٌۭ وَٰعِيَةٌۭ.

69:12. இதை எடுத்து கூறுவதன் நோக்கமே, இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்தின்படி நிகழ்ந்த வரலாற்று ஆதாரங்கள் உங்களுக்கும் படிப்பினையாக இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். மேலும் சிந்தித்து செயலாற்றுபவர்களுக்கு இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காகத் தான் (12:111). இந்த அழிவு இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து மாறு செய்பவர்களுக்கு ஏற்படும்.


فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌۭ وَٰحِدَةٌۭ.

69:13. எனவே நிர்ணயிக்கப்பட்ட நேரப்படி அபாய சங்கொலி எழுப்பப்படும் போது, நடக்கப்போவது என்னவென்பதை அறிந்துகொள்ளுங்கள்.
குர்ஆன் இறக்கியருளப்படும் போது இறைவழிகாட்டுதலின் படி உருவான ஆட்சியமைப்பை எதிர்த்தவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அதன் தொடராக போரின் அபாய சங்கொலி முதன் முறையாக முழங்கியதும்,


وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةًۭ وَٰحِدَةًۭ.

69:14. அப்போது கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வந்த தலைவர்களும் அவர்களுடைய படை வீரர்களும் தோல்வியை சந்திப்பார்கள். ஓரே ஒரு படையெடுப்பில் அவர்களுடைய கேலிக் கூத்து, அத்துமீறல், ஏளனப் பேச்சுகள் யாவும் அடங்கி விடும்.


فَيَوْمَئِذٍۢ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ.

69:15. இத்தகைய பேரழிவு இவர்களுக்கு நிகழ்ந்தே தீரும்.
ஆக பேரழிவுகள் இயற்கை சீற்றங்கள் என்ற ரூபத்திலும் ஏற்படலாம். கலகம், கலவரம், போர் என்ற ரூபத்திலும் இவ்வுலகில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.


وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍۢ وَاهِيَةٌۭ.

69:16. ஆணவங்கொண்ட ஆட்சியாளர்களின் நிலைமை எல்லாம் அப்போது உருமாறிப் போகும். மேலும் அவர்களுடைய கடினமான ஆதிக்கப் போக்கு தளர்ந்துவிடும்.


وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍۢ ثَمَٰنِيَةٌۭ.

69:17. மேலும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு ஏற்படுத்தப்படும். அந்த அரசு எட்டு துறைகளாக பிரிந்து செயல்பட்டு வரும், இந்த பிரபஞ்ச இயற்கை சக்திகள் அனைத்தும் அதனை சூழ்ந்து பாதுகாக்கும்,
சூரிய குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் உள்ளன. பூமியை தவிர்த்து மற்ற எட்டு கிரகங்களும் பூமியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. அதாவது மற்ற எட்டு கோள்களின் புவி ஈர்ப்பின் பூமி நிலை பெற்றுள்ளது. இப்படியாக இவ்வுலகில் நடை பெறும் அல்லாஹ்வின் ஆட்சியை மற்ற கோள்களில் உள்ள சக்திகள் துணை புரியும்.
குறிப்பு :- இந்த அத்தியாயத்தின் 1 முதல் 12 வரையிலுள்ள வாக்கியங்களில் முன்சென்ற சமுதாயங்களின் அத்துமீறல்கள் மற்றும் அதனை தொடர்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட அழிவைப் பற்றிய குறிப்புகள் வந்துள்ளன. இவை யாவும் இந்த உலகில் நிகழ்ந்தன. ஆனால் 13 - 14 ஆவது வாக்கியங்களில் வானம் பூமி மலைகள் இடிந்து நாசமடைவதாக சொல்லப்படுகிறது. குர்ஆனிய ஆட்சி உருவானபோது குரைஷியர்கள் அதை எதிர்த்து போரிட்டு தோற்றுப் போனார்கள். அந்த ஆட்சியாளரின் சின்னம் சந்திரனாகும். அது பிளந்து போனதாக குர்ஆன் கூறுகிறது (54:1) எனவே வானம் என்ற சொல்லை அந்நாட்டு மன்னராட்சியையும், மலை என்ற சொல்லை செல்வத்தை குவித்து வைத்திருப்பவர்களையும், பூமி என்ற சொல்லை அதிகார துஷ்பிரயோகம் செய்பவரையும் உவமானமாக எடுத்துக்கொண்டு விளக்கஉரை கொடுத்துள்ளோம். ஏனெனில் இதற்கு முன் வாழ்ந்த சமூகத்தாரின் அழிவு இந்த உலகிலேயே நிகழ்ந்தன. அதாவது குரைஷிய கூட்டத்தாரின் அழிவும் இந்த பூமியில்தான் நிகழ்ந்தது. அதைப் பற்றி குறிப்பு வந்திருக்க வேண்டும். ஆனால் பூமியும் மலைகளும் தூக்கி எறியப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே வசனங்களின் நேரடி மொழி பெயர்ப்பு செய்தால் வானில் நிகழ்ந்த அல்லது நிகழவிருக்கும் ஏதோ ஒரு மாபெரும் புரட்சிப் பற்றிய குறிப்பு என தெரிகிறது. தற்சமயம் நம்மிடமுள்ள விஞ்ஞான அறிவைக்கொண்டு அந்த புரட்சியின் வடிவமைப்பைப் பற்றி கூற இயலாது. எனவே இதை உவமான வடிவில் கூறப்பட்டதாக எடுத்துக்கொள்கிறோம். (விளக்கத்திற்கு பார்க்க அத்தியாயம் 67 இன் முன்னுரை.)


يَوْمَئِذٍۢ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌۭ.

69:18. ஆக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு நடைபெறும் கால கட்டத்தில், நீங்கள் அனைவரும் மறைமுகமாக செயல்படுவதை விட்டுவிட்டு வெளிப்படையாக செயல்படுவீர்கள். உங்களுடைய சொல் மற்றும் செயல்கள் எதையும் மறைத்து வைக்கமுடியாது. அனைத்து இரகசியங்களும் இறைவனுடைய ஆட்சியமைப்பில் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.


فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ.

69:19. எனவே யாருடைய கைகளில் நற்செயல்களின் சான்றிதழ் உள்ளதோ, அவர்களிடம் அதை படித்துக் கொள்ளும்படி கூறப்படும். அவர்களும் அதை மிக்க சந்தோஷத்துடன் தம்முடைய செயல்பாடுகளின் குறிப்புகளை படித்து காட்டுவார்கள். அவர்கள்,


إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ.

69:20. “நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கேள்விகணக்கு கண்டிப்பாக உண்டு என்பதை உறுதியாக அறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்பட்டேன். அதனால் தீய செயல் புரிவதை தடுத்துக் கொண்டேன்” என்பார்.


فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ.

69:21. எனவே அவருடைய வாழ்க்கை தான் விரும்பியவாறு சுபிட்சமாக இருக்கும்.


فِى جَنَّةٍ عَالِيَةٍۢ.

69:22. அத்தகையவர்கள் வாழும் சமுதாயம் எல்லா வளங்களையும் பெற்று சுவனத்திற்கு ஒப்பானதாக இருக்கும்.


قُطُوفُهَا دَانِيَةٌۭ.

69:23. அவர்களுடைய பொருளாதார வசதிகள் பெருகி வரும்.


كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ.

69:24. மனநிறைவுடன் உண்ணுங்கள் பருகுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும். இவை யாவும் நீங்கள் செய்து வந்த நற்செயல்களின் பலனாகத் தான் கிடைக்கின்றன என்றும் கூறப்படும்.
ஆக சுவனம் என்பது நற்காரியங்களின் பலனாக கிடைக்குமே அன்றி யாருடைய பரிந்துறையின் பேரிலோ அல்லது தானமாகவோ ஒரு போதும் கிடைக்காது.


وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ.

69:25. யாருடைய கைகளில் தீய செயல்பாடுகளின் பதிவேடு இருக்குமோ அவன் வெறுப்புடன், “என்னுடைய பட்டோலையை எனக்கு கொடுக்கப்படாமலே இருந்திருக்க வேண்டுமே!” என்று புலம்புவான்.


وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ.

69:26. “என் செயல்பாடுகளின் கேள்விகணக்கு உண்டு என்பதை நான் அறியவில்லையே!”


يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ.

69:27. “அடப்பாவமே! எந்த வகையிலாவது இதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்காதா?”


مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ.

69:28. “என் வருத்தமே! என்னுடைய செல்வமும் அதன்மீது நான் கொண்டிருந்த அளவுகடந்த கர்வமும் எதற்கும் பயன்படவில்லையே!”


هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ.

69:29. “என்னிடமிருந்த செல்வத்தின் காரணமாகத் தான் இந்த அளவிற்க்கு அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டிருந்தேனே! ஆனால் இன்று என்னுடைய செல்வாக்கும் அதிகாரமும் முற்றிலும் அழிந்துபோனதே!” என்று புலம்பிக் கொண்டிருப்பான்.


خُذُوهُ فَغُلُّوهُ.

69:30. இப்படி புலம்புவதால் என்ன பயன்? அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்டம் அவனை விட்டுவிடுமா என்ன? எனவே “அவனைப் பிடித்து அவனுடைய கழுத்தில் அரிகண்டம் மாட்டுங்கள்” என்று கூறப்படும்.


ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ.

69:31. மேலும் அவனை வேதனை அளிக்கும் சிறையில் அடையுங்கள்.


ثُمَّ فِى سِلْسِلَةٍۢ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًۭا فَٱسْلُكُوهُ.

69:32. மேலும் அவனை நீளமான சங்கிலியால் கட்டுங்கள்.


إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ.

69:33. அல்லாஹ் நிர்ணயித்த “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்தை ஏற்காமல் தீய செயல்களில் ஈடுபட்டவனுக்குத் தான் இப்படி நடக்கும்.


وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ.

69:34. இறைவழிகாட்டுதல்களை ஏற்க மறுத்ததால், சம்பாதிக்க இயலாத ஊனமுற்றோர்களின் (Physically handicaped) தேவைகளை நிறைவேற்றி தரக்கூடிய ஆட்சியமைப்புக்கு ஆதரவு அளித்ததில்லை.
எனவே இவனுடைய நிலைமை எவ்வாறு இருந்தது என்றால், தனக்குத் தேவையான அனைத்து செல்வங்களும் என்னிடம் இருக்கும்போது, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சியமைப்பு வீணாக எதற்கு என்று நினைத்துக் கொண்டான்.


فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌۭ.

69:35 அதனால் இப்போது அவன் துன்பத்தில் சிக்கிக் கொண்ட போது, துயர் துடைக்கும் நண்பணின் அவசியத்தை நன்கு உணர்கிறான். ஆனால் அவனுடைய துன்பத்திலிருந்து காப்பாற்றும் நண்பன் யாரும் இருக்க மாட்டார்கள்.


وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍۢ.

69:36. தாகத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும். கொதி நீரை தவிர அவனுக்கு குடிக்க எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.


لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ.

69:37. இத்தகைய உணவு குற்றம் புரிந்தவர்களுக்கு மட்டும்தான்.
இந்த விஷயங்கள் யாவும் கற்பனை வடிவில் கூறப்படுவதல்ல. இது சர்வ நிச்சயமாக தீர்மானிக்கப்பட்ட சத்திய வாக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ.

69:38. எந்தெந்த செயல்களின் விளைவுகள் நீங்கள் புரிந்து கொள்ளும் வகையில் தோற்றத்திற்கு வந்துள்ளதோ அவற்றை ஆராய்ந்து பாருங்கள்.


وَمَا لَا تُبْصِرُونَ.

69:39. அல்லது இன்னும் தோற்றத்திற்கு வராமல் திரைக்கு மறைவாக இருப்பவற்றை எடுத்துரைக்கப்படுவதையும் கவனித்துப் பாருங்கள்.


إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ.

69:40. இத்தகைய ஆணித்தரமான எச்சரிக்கைகளை செய்பவர் இறைவனுடைய தூதராகத் தான் இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.


وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍۢ ۚ قَلِيلًۭا مَّا تُؤْمِنُونَ.

69:41. எனவே இந்த குர்ஆனின் அறிவுரைகள் யாவும் கற்பனை வளத்தோடு சொல்லப்படும் கவிஞரின் சொற்கள் அல்ல. இவை இறைவனுடைய சொல்லாகும். ஆனால் மிகச் சிலரே இவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள்.


وَلَا بِقَوْلِ كَاهِنٍۢ ۚ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ.

69:42. இவை ஜாதகம் பார்க்கும் குறிகாரனின் சொல்லும் அல்ல. இவை இறைவனின் வஹீ என்னும் செயல் திட்டத்தின் படி உள்ள அறிவிப்புகளாகும். ஆனால் மிகச் சிலரே தம் அறிவைப் பயன்படுத்தி இவற்றின் உண்மை நிலையை அறிந்து இவை அனைத்தும் நாம் கடைபிடிக்கவேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளே என்று ஏற்றுக்கொள்வார்கள்.


تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ.

69:43. இந்த குர்ஆன் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்ற ஏக இறைவனால் இறக்கி அருளப்பட்டதாகும். எனவே அவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றி தங்களுடைய ஒழுக்க மாண்புகளையும் பொருளாதாரத்தையும் வளர்த்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ.

69:44. இறைவனின் வஹீ என்னும் வழிகாட்டுதலில் மனித சிந்தனை சிறிதளவும் கிடையாது. இந்த இறைத் தூதர் தன் சார்பாக ஏதோ ஒரு செய்தியை தயாரித்து இறைவனிடமிருந்து வந்ததாக சொல்லி இருந்தால்,


لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ.

69:45. அவர் இறைவனுடைய பிடியில் சிக்கி தவித்திருப்பார். மேலும் அவருடைய செயல் திட்டங்களில் முன்னேற்றத்தை கண்டிருக்க மாட்டார். அவரிடமிருந்த மன உறுதிப்பாட்டிலும், விடா முயற்சியிலும் தளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.


ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ.

69:46. அதாவது அவருடைய செயல் திட்டங்கள் செயலற்று போயிருக்கும்.


فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ.

69:47. அப்படி ஆவதை தடுக்க உங்களில் யாருக்கும் சக்தி கிடையாது. பலனற்ற செயல்திட்டங்கள் யாவும் இறுதியில் தோல்வியையே சந்திக்கும்.


وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌۭ لِّلْمُتَّقِينَ.

69:48. இந்த அளவிற்கு தெளிவான ஆதாரங்கள் வந்தபின்பும் அல்லாஹ்வின் சட்டத் திட்டங்களின் உண்மை நிலையை பலர் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் யார் அழிவு பாதையிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார்களோ, அவர்கள் தான் இந்த இறைவழிகாட்டுதலைக் கொண்டு அறிவுரைப் பெறுவர்.


وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ.

69:49. மக்களில் சிலர் அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்த பின்னர் குர்ஆன் மீது நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கிறார்கள். அதே சமயம் அது உலகிற்கு பொருந்தாது என்று சொல்பவர்களும் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.


وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ.

69:50. ஆனால் இவர்கள் இப்படி பேசி வருவதால் என்ன நிகழவிருக்கிறது? நிகழக்கூடிய அழிவு நிகழ்ந்தே தீரும். யார் இதை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் மனதில் எழும் வெறுப்புக்கனல் எரிந்து தான் போகும்.


وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ.

69:51. இது இந்த உலகில் நடந்த - நடக்கவிருக்கின்ற உண்மை விஷயமாகும். இது ஏற்பட்டுத் தான் தீரும். இது முற்றிலும் ஆதராப்பூர்வமான செய்தியாகும். இது ஒரு கற்பனையோ கவிதையோ இல்லை. இது அல்ஹாஃக்காவாக இருக்கிறது. அதாவது சர்வ நிச்சயமாக நிகழக்கூடியதாக இருக்கிறது.


فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ.

69:52. எனவே சமூக சீர்த்திருத்தவாதியே! நீர் மக்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர். உமது இறைவனின் ஆட்சியமைப்பு செயல் திட்டத்தை முழுமை பெற முழுமூச்சுடன் செயல்படுவீராக. உம்முடைய அறைகூவல் எந்த அளவிற்கு உண்மையே என்பதை உம்முடைய செயல்பாடுகளின் பலன்களே வெளிச்சமாக்கிவிடும்.
பின் குறிப்பு – உலகில் வாழ்ந்த பலதரப்பட்ட சமுதாயங்கள் தம்முடைய தவறான செயல்களால் அழிவைத் தேடிக்கொண்டன. அவர்கள் செய்து வரும் அந்த தீயச்செயல்கள் மற்றும் பழக்க வழக்கங்களைப் பற்றி இறைத்தூதர் எடுத்து சொன்னபோது, அவர்களுக்கு வெறுப்பு தான் ஏற்பட்டது. ஆனால் அந்த அழிவு மெல்ல மெல்ல அறியா வண்ணம் அவர்களை சூழ்ந்து வந்தது. இந்த விஷயத்தை இறைத் தூதர் நன்கு அறிவதால், அம்மக்களை அந்த அழிவிலிருந்து காப்பாற்றிவிட எண்ணி பல வகையில் அறிவுரை செய்தார். எதையும் ஏற்க மறுப்பதே அவர்களுடைய வழக்கமாக இருந்து வருவதால், அந்த அழிவுகள் அவர்களை நெருங்குகிறது என்ற எச்சரிக்கையையும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அதனால் அவர்கள் அழிவில் சிக்கி மாண்டுபோனார்கள். இப்படியாக அந்த சமுதாயங்கள் அழிந்து போனதற்கு அவர்கள் தான் பொறுப்பாளி ஆகிறார்களே அன்றி, அல்லாஹ் அல்ல. இன்றைய கால கட்டத்தில் வாழும் சமுதாயங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று இந்த குர்ஆன் திரும்ப திரும்ப எடுத்துரைக்கிறது.