بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

68:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ.

68:1. எழுதுகோலின் முனையைக் கொண்டு, சந்திரனின் அடையாளச் சின்னமாகக் கொண்டு செயல்படும் எதேச்சாதிகார ஆட்சிமுறையின் தலையெழுத்தையே மாற்றிவிட முடியும்.


مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍۢ.

68:2. ஆனால் இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களோ, உம்மை ஒரு பைத்தியக்காரர் என எண்ணுகின்றனர். அவர்கள் அவ்வாறு எண்ணுவதால் அல்லாஹ்வின் அருட்கொடைகள் உமக்கு கிடைக்காமல் போய்விடுமா?


وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍۢ.

68:3. மேலும் நீர் எடுத்துக் கொண்ட பணியில் எந்த குறைவும் வைக்கப்பட மாட்டாது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து எல்லா அனுகூலங்களும் உமக்கு கிடைத்து வரும்.


وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍۢ.

68:4. அவர்கள் சற்றே சிந்தித்துப் பார்த்திருந்தால், உயர் இலட்சியங்களுக்காக பாடுபடும் ஒருவர், எந்த அளவுக்கு உயர் பண்புகளுக்கு உரியவராக இருப்பார் என்பதை அறிந்திருப்பார்கள். நீர் உயர் பண்புகளை உடையவர் தான் என்பதை நாமே அறிவிக்கிறோம்.


فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ.

68:5. எனவே யாருடைய நிலைமை என்னவாக போகிறது என்பதை நீங்கள் விரைவில் பார்த்துக் கொள்வீர்கள். அவர்களும் பார்த்துக் கொள்வார்கள்.


بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ.

68:6. அப்போது வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் ஆளாகுபவர்கள் யார் என்பதை பார்த்துக் கொள்வீர்கள்.


إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ.

68:7. காரணம் வழிதவறி செல்பவர்கள் யார் என்ற உண்மை உம்முடைய இறைவனுக்குத் தெரியும். அதாவது அவரவர் செய்து வரும் செயல்களுக்கேற்ப பலன்களும் விளைவுகளும் ஏற்பட்டு வரும். அதே சமயம் நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதும் தெரியும்.


فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ.

68:8. எனவே மார்க்க அறிவுரைகள் யாவும் பொய்யெனக் கூறி வழிதவறி செல்பவர்களைப் பின்பற்றி நடக்காதீர்.


وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ.

68:9. மேலும் அவர்கள் மார்க்க விஷயத்தில் சில சலுகைகளை அளித்து, அவர்களுடைய வழிமுறைகளுக்கும் இடமளித்தால் அவர்களும் உம்மோடு வந்து இணையத் தயாராக இருக்கிறார்கள்.
காரணம் வழிதவறி செயல்படுவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். ஆனால் நேர்வழி என்பது இறைவன் காட்டும் ஒரே ஒரு வழிதான் இருக்கும். அவர்கள் வேண்டுமென்றால் அவர்களுடைய தீய செயல்களின் சிலவற்றை விட்டுக் கொடுக்க முன்வரலாம். ஆனால் நீர் கடைப்பிடித்து வரும் நேர்வழியில் சிலவற்றை எப்படி விட்டுக் கொடுப்பது?


وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍۢ مَّهِينٍ.

68:10. அன்றியும் இழிவான பழக்க வழக்கங்கள் உடையவர்களோடு எப்படி ஒன்றி வாழ முடியும்? அவர்கள் செய்யும் சத்திய வாக்குகளை எப்படி நம்புவது? எனவே இத்தகையவர்களை நீர் பின்பற்றாதீர்.


هَمَّازٍۢ مَّشَّآءٍۭ بِنَمِيمٍۢ.

68:11. காரணம் உம்முடன் வந்து இணைவதாக அழகிய முறையில் சொல்லிவிட்டு, உமக்குப் பின்னால் உம்மைக் குறைகூறி வருகிறார்கள். உமக்கு எதிராக கோள் மூட்டி வருகிறார்கள்.


مَّنَّاعٍۢ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ.

68:12. நன்மையான செயல்களைச் செய்வது அவர்களுக்கு ஒருபோதும் பிடிக்காது. ஆனால் வரம்பு மீறின செயல்களின் பக்கமே அவர்கள் விரைகிறார்கள்.


عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ.

68:13. அவர்கள் யாவரும் கல்நெஞ்சக்காரர்களாக இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஈனப் பிறவிகளாக இருக்கிறார்கள்.


أَن كَانَ ذَا مَالٍۢ وَبَنِينَ.

68:14. இந்த அளவுக்கு மோசமானவர்களாக இருந்தும், அவர்களிடம் பொருட் செல்வமும் ஆட்பலமும் இருப்பதால் சமுதாயத்தை அடக்கியாளும் தலைவர்களாக இருக்கிறார்கள்.


إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.

68:15. இத்தகையவர்களிடம் முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளைப் பற்றி ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்தால், அவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளே என்று கூறி ஏசுகிறார்கள்.


سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ.

68:16. இத்தகைய ஆணவம் படைத்வர்கள் விரைவில் மூக்கு அறுந்தவர்களாக ஆவது உறுதி.


إِنَّا بَلَوْنَٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ.

68:17. இதற்கு முன் செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட கதி போன்றே இவர்களுக்கும் ஏற்படும் என்பது இவர்களுக்கு தெரியாது. (பார்க்க 18:32-44) அவர்கள் தினம் தினம் சுகம் அனுபவித்துக் கொள்ளலாம் என்ற உறுதியோடு இருக்கிறார்கள்.


وَلَا يَسْتَثْنُونَ.

68:18. அவர்கள் இறைவனின் அறிவுரைப்படி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதோ அல்லது அவர்களுடைய துயரங்களை நீக்குவதோ ஒருபோதும் கிடையாது.
இவர்களுக்கு ஏற்படும் அழிவைப் பற்றி ஓர் உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.


فَطَافَ عَلَيْهَا طَآئِفٌۭ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ.

68:19. அவர்கள் கற்பனை உலகில் அசந்திருக்கும் போது, இறைவனின் நியதிப்படி சுற்றி வரக் கூடிய அனல் காற்று அவர்களுடைய தோட்டங்களை நாசப்படுத்தி விடுகிறது.


فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ.

68:20. இப்படியாக அவர்களுடைய தோட்டங்கள் சாம்பலைப் போல் ஆகிவிட்டது.


فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ.

68:21. தூக்கத்திலிருந்து எழுந்த அவர்கள் ஒருவரையொருவர் அழைத்து அறுவடை செய்வதற்காக கலந்தாலோசித்துக் கொண்டனர்.


أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَٰرِمِينَ.

68:22. “நீங்கள் அனைவரும் விடியற்காலையில் சென்று தோட்டங்களில் இருப்பவற்றை பறித்துக் கொள்ளுங்கள்” என்றனர்.


فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَٰفَتُونَ.

68:23. இவ்வாறு அவர்கள் தங்களுக்குள் இரகசியமாக திட்டமிட்டனர்.


أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌۭ.

68:24. எந்த பிச்சைக்காரரும் அந்த தோட்டத்தில் நுழையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினர்.


وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍۢ قَٰدِرِينَ.

68:25. இவ்வாறு அவர்கள் உறுதியோடு அதிகாலையில் தோட்டத்திற்குச் சென்றார்கள்.


فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ.

68:26. ஆனால் அந்த தோட்டங்கள் அழிந்து போன நிலையில் இருப்பதைக் கண்ட போது, “நாம் வழிதவறி வேறு தோட்டத்திற்கு வந்துவிட்டோம் போலிருக்கிறது” என்றனர். அந்த அளவுக்கு அது உருமாறி விட்டிருந்தது.


بَلْ نَحْنُ مَحْرُومُونَ.

27. பின்னர் அவர்கள் கவனித்துப் பார்த்தனர். “இல்லை. இவை நமது தோட்டங்கள்தாம். இப்படி உருகுலைந்து எல்லா பாக்கியங்களையும் இழந்து நிற்கிறோமே!” என்றனர்.


قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ.

68:28. நீங்கள் அனைவரும் இறைவனின் அறிவுரைப்படியே செயல்பட்டிருக்க வேண்டும். அவற்றின்படி செயல்படாததால் வந்த வினைதான் இது” என்று அவர்களிடையே இருந்த ஒரு மத்தியஸ்தர் கூறினார்.


قَالُوا۟ سُبْحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ.

68:29. அப்போது அவர்கள், நாங்கள் தாம் அநியாயக்காரர்களாக இருந்து விட்டோம். ஆனால் இறைவனின் செயல் திட்டமோ மிக மிக தூய்மை வாய்ந்தவை ஆகும் என்று கூறி வருத்தப்பட்டனர்.


فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَلَٰوَمُونَ.

68:30. இவ்வாறாக அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து நிந்தித்துக் கொண்டு தர்க்கம் செய்யலாயினர்.


قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ.

68:31. அவர்களில் சிலர், இவை யாவும் நமக்கு ஏற்பட்டுள்ள கேடுகள்தாம். நம்முடைய வரம்பு மீறினச் செயல்களால் வந்த வினையே ஆகும்” என்று கூறலானார்கள்.


عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًۭا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ.

68:32. மேலும் அவர்கள்,“எங்கள் இறைவா! எங்களுடைய தவறுகளை உணர்ந்து, எங்களை திருத்தி கொள்ள முன்வருகிறோம். எங்களுடைய இறைவன் இதைவிட சிறந்த வசதிகளை எங்களுக்கு செய்து தருவான் என்று திடமாக நம்புகிறோம்” என்றனர்.
சிந்தனையாளர்களே! ஏதோ கதை சொல்கிறோம் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். எந்த தோட்டம் எவ்வாறு அழிந்து என்று கேட்டுக் கொண்டிராதீர்கள். தோட்டங்கள் என்பது செழிப்பான நாட்டிற்கு உவமானமாக கூறப்பட்டது. அந்நாட்டில் இருந்த தலைவர்களும் செல்வந்தர்களும் ஏழை எளிய மக்களை சரிவர கவனிக்காததால் அவர்களால் நிலையாக சுகத்துடன் வாழ முடியவில்லை. நசுக்கப்பட்டவர்கள் கொதித்து எழுவதால் அனைத்தையும் நாசமாக்கிவிடுவது உலகில் நடந்து வந்த உண்மையே. இந்த எடுத்துக்காட்டை கவனத்தில் கொண்டு அனைவரும் சிறப்பாக ஒற்றுமையோடு வாழ முன்வர வேண்டும். இதையே திருக்குர்ஆன் உதாரணத்தை மேற்கோள் காட்டி வலியுறுத்திச் சொல்கிறது.


كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ.

68:33. இவ்வாறு தான் உலகில் சமுதாயங்கள் அழிந்து போகின்றன. இந்த உண்மைகளை அவர்கள் அறிந்து கொண்டால் இறுதியில் அவர்களுக்கு ஏற்படக் கூடிய பெரும் வேதனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இவை தான் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து நாட்டில் அநியாயம் அக்கிரம செயல்களைச் செய்வோர்களின் நிலைமையாகும்.


إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ.

68:34. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலைப் பேணி நடக்கும் நாடுகள் இறைவனின் நியதிப்படி சுவனத்து சோலைப் போல் உருவாகி வரும்.


أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ.

68:35. ஆக அனைத்து தரப்பு மக்களின் நலனைப் பேணிக்காக்கும் முஸ்லிம்கள், எப்படி குற்றவாளிகளாக இருக்க முடியும்?


مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ.

68:36. உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நடந்த உண்மைகளையும் நடக்கவிருக்கின்ற உண்மைகளையும் ஆதாரத்தோடு எடுத்துரைத்த பின்பும் நேர்வழியை விட்டுவிட்டு, ஏன் தவறான வழியில் செல்ல முடிவெடுக்கிறீர்கள்?


أَمْ لَكُمْ كِتَٰبٌۭ فِيهِ تَدْرُسُونَ.

68:37. இவ்வாறு தவறான வழியில் சென்றவர்கள் நிலையான சந்தோஷங்களுடன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லையே! நீங்கள் என்ன பாடத்தைப் படித்தீர்கள்?


إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ.

68:38. நீங்கள் தெரிந்து கொண்டது தான் சரி என்பதற்கு வேத ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா?


أَمْ لَكُمْ أَيْمَٰنٌ عَلَيْنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ.

68:39. நீங்கள் தவறான வழியில் சென்றாலும் உங்களுக்கு எந்த தீங்கும் நெருங்காது என்றும், கியாம நாள் வரையில் உங்கள் விருப்பம் போல் செயல்படலாம் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளதா? அதற்குண்டான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா?


سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ.

68:40. இறைவழிகாட்டுதலின்படி வழிநடத்திச் செல்பவரே! அவர்கள் இவ்வாறு தீர்மானமாக இருந்து அழிவை சந்திப்பதற்கு மார்தட்டி பொறுப்பேற்பவர் யார் என்று அவர்களிடம் கேட்பீராக.


أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَٰدِقِينَ.

68:41. இது விஷயமாக அவருக்கு துணை புரிபவர்கள் யாராவது இருக்கிறார்களா? அவர்கள் தம் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் அவர்களும் முன்வரட்டும்.


يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍۢ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ.

68:42. அவர்களிடமுள்ள அகம்பாவம் அடிபெயரும் போது, அவர்களுக்கு உண்மை என்னவென்று புரியும். அப்போது அவர்களில் சிலர் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்பட்டிருக்கலாமே என்று ஏக்கத்தில் கூறுவர். ஆனால் அது காலம் கடந்த விஷயமாக இருக்கும். எனவே அவர்களால் அழிவை தவிர்க்கவே முடியாது.


خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌۭ ۖ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ.

68:43. அப்போது தமக்கு ஏற்பட்ட அவல நிலையின் காரணத்தால் வெட்கத்தில் தலை குனிந்தவர்களாக இருப்பார்கள். இதற்கு முன் இறைவனின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கும்படி அவர்களுக்கு அறிவுரைகள் செய்த போது, அலட்சியமாக இருந்து விட்டார்கள்.


فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ.

68:44. இறை வழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இறை வழிகாட்டுதலையும் கடந்து போன வரலாற்று ஆதாரங்களையும் பொய்யென கூறுபவர்களை, அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவுகள் அறியா வண்ணம் சிறுக சிறுக ஏற்பட்டு வரும்.


وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ.

68:45. அன்றியும் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதே இறைவனின் செயல்திட்டமாகும். எனவே அதன்படி அவர்களுக்கு உடனடி தண்டனை அளிக்காமல் சிறுக சிறுக தீய விளைவுகள் ஏற்பட்டு வரும். (பார்க்க 16:61) இறைவனின் இத்திட்டம் மிகவும் உறுதி வாய்ந்தது. எனவே இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.


أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًۭا فَهُم مِّن مَّغْرَمٍۢ مُّثْقَلُونَ.

68:46. இந்த முன் எச்சரிக்கைகளையும் இறைவனின் வழிகாட்டுதலையும் எடுத்துரைக்க அவர்களிடம் பொருளுதவி கேட்கின்றாயா? அதனால் கடன் பட்டவர்கள் பயந்து ஓடுவது போல் அவர்கள் ஓடுகிறார்களா? (பார்க்க 52:40)


أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ.

68:47. நீர் எடுத்துரைக்கும் எந்த அழிவுகளும் வரவே வராது என்று அவர்களிடம் ஏதாவது இரகசியமான செய்திகள் வந்துள்ளதா? அதை அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்களா?


فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌۭ.

68:48. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இவர்களின் பேச்சைக் கேட்டு நீர் வருத்தப்பட வேண்டிய தில்லை. உம் இறைவன் காட்டிய வழியில் நிலையாக இருந்து தீவிரமாக செயல்பட்டு வாருங்கள். மீனவ இனத்தைச் சேர்ந்தவரான யூனுஸ் நபி போன்று அவசரப்பட்டு ஹிஜ்ரத் செய்துவிட எண்ணிவிடாதீர். அதனால் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. துன்பம் தான் மிஞ்சியது. எனவே அவர் மீண்டும் இறைவனின் உதவியை நாட வேண்டியதாயிற்று. (பார்க்க 21:87, 37:39)


لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌۭ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌۭ.

68:49. அவருடைய இறைவன் அவருக்கு தக்க தருணத்தில் உதவி செய்யாதிருந்தால் அவர், மிகவும் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். அவரால் எதுவும் செய்ய முடியாமல் போயிருக்கும். (பார்க்க 37:146)


فَٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ.

68:50. இப்படியாக அவர் தம் தவறை உணர்ந்து சீர் செய்து கொண்டதால், அவருக்கு இறைவன் அந்த துயரத்திலிருந்து காப்பாற்றினான். மேலும் உலக வரலாற்றில் சாதனைகள் படைத்தவர்கள் பட்டியலில் அவருடைய பெயரும் இடம்பெற்றது.


وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌۭ.

68:51. மேலும் எவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அல்லாஹ்வின் அறிவுரைகளைப் பொருட்படுத்தாமல் தம் மனம் போன போக்கில் வாழ விரும்புகிறார்களோ, அவர்கள் தாம் உம்மை ஒரு பைத்தியக்காரர் என்றும், கவிஞர் என்றும் விமர்சிப்பார்கள். அவர்கள் உம்மை முறைத்துப் பார்த்து பயத்தை உண்டாக்க எண்ணுகிறார்கள். இவையாவும் அவர்களுடைய வீணான ஆசைகளே ஆகும்.


وَمَا هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ.

68:52. இந்த குர்ஆனில் உள்ள அறிவுரைகள் யாவும் உலக மக்கள் அனைவரின் நன்மைக்காகத் தானே அன்றி வேறில்லை. இதை அவர்கள் ஏற்காதது அவர்களுடைய துர்பாக்கியமே!