بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

67:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முக்கிய குறிப்பு:
சிந்தனையாளர்களே! இனி வரும் அத்தியாயங்களில் குறிப்பாக இறுதி அத்தியாயங்களில் மூன்று வகையான புரட்சிகர கால கட்டங்களைப் பற்றி திருக்குர்ஆன் பேசுவதாக தெரிகிறது. இவற்றில் எந்த வகையைச் சேர்ந்தது என்று நிர்ணயித்து கூறுவது சற்று கடினமான காரியமே. இருப்பினும் அந்தந்த அத்தியாத்தில் வருகின்ற செய்தித் தொடரை வைத்து எத்தகைய புரட்சியைப் பற்றி பேசுகிறது என்பதை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.
திருக்குர்ஆனின் சாராம்சத்தை வைத்து பார்க்கும்போது, இத்தகைய மூன்று வகையான புரட்சிகள் ஏற்படும் என்று உறுதியாக தெரிகிறது. அதில் ஒன்று இந்த பிரபஞ்சத்தில் ஏற்படவிருக்கின்ற புரட்சியாகும். அப்போது இந்த உலகமே வெடித்து சின்னா பின்னமாக சிதறிவிடும் என்றே தெரிகிறது. அப்போது இப்பூமியில் எந்த ஜீவனமும் உயிருடன் இருக்க வாய்ப்பே இருக்காது.
திருக்குர்ஆன் வாசகத்திற்கு நேரடி பொருள் கொண்டால் இந்த உண்மையே நமக்குத் தெரிகிறது. ஆனால் அது எப்போது ஏற்படும் என்பதை யாரும் கணித்து கூற இயலாது. ஏனெனில் அது அல்லாஹ்வின் செயல்திட்ட விஷயங்களாகும். அதைப்பற்றிய உண்மை அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
அதில் இரண்டாவது வகை, உலக நாடுகளில் வெடிக்கின்ற புரட்சி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படுகின்ற மறுமலர்ச்சியைப் பற்றியதாகும். இத்தகைய புரட்சியும் மறுமலர்ச்சியும் ஏனைய நபிமார்கள் காலத்தில் ஏற்பட்டன. அதே போல முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏற்பட்டது. இந்த குர்ஆனின் அடிப்படையில் முயற்சி செய்தால், அத்தகைய மறுமலர்ச்சியை இன்றைய கால கட்டத்திலும் நம் நாட்டிலும் ஏற்படுத்தலாம். அவ்வாறு ஏற்படும்போது, அங்கு நடைபெற்று வரும் போலியான ஆட்சிமுறைக்குப் பதிலாக குர்ஆனின் அடிப்படையிலான ஆட்சிமுறை ஏற்படும். அப்போது சமுதாயங்களின் கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம் மற்றும் ஒழுக்க மாண்புகள் என எல்லாமே மாறி புதியதோர் உலகம் உருவாகும். அதாவது சாந்தியும் சமாதானமும் சந்தோஷங்களும் தன்னிறைவும் பெற்ற தலைசிறந்த நாடாக விளங்கும்.
அதையடுத்து மூன்றாவது புரட்சி என்பது மனிதனின் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்க்கைப் பற்றியதாகும். அங்கு கிடைக்கின்ற வாழ்க்கை, இடம் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இப்போதே குறிப்பிட்டுக் கூற முடியாது. மனிதனுக்கு கிடைக்கின்ற நரகம் மற்றும் சுவர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்ற வர்ணனையைத் தர இயலாது. காரணம் சுவர்க்கத்தைப் பற்றி பலமுறை கூறும் திருக்குர்ஆன் “சுவர்க்கத்திற்கு உதாரணமாவது” என்றே வாசகங்கள் தொடங்குகின்றன. (பார்க்க 13:35, 47:15) அதே போன்று நரகத்தைப் பற்றியும் வரையறைகளைத் தருகிறது.
எனவே திருக்குர்ஆனின் வாசகங்களுக்கு நேரடி பொருள் கொண்டால் பிரபஞ்சத்தில் வெடிக்கும் மாபெரும் புரட்சி என்றும்,அதை தொடர்ந்து மனிதனுக்கு கிடைக்கின்ற சுவர்க்கம் மற்றும் நரகம் என்றும் நமக்கு தெரிகிறது. அந்த வாசகங்களுக்கு உவமை வடிவில் பொருள் கொண்டால், அவை இவ்வுலகில் நடந்த மற்றும் நடக்கவிருக்கின்ற புரட்சி என்றும் அதை தொடர்ந்து ஏற்படுகின்ற மறுமலர்ச்சி என்றும் பொருளாகிது. இதில் நாம் இரண்டாவது வகையான பொருளையே குர்ஆன் வாசகத்திற்குத் தந்துள்ளோம். காரணம் இவ்வுலகில் மனிதனின் வாழ்க்கையைப் பற்றியும், நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. அவையாவும் இவ்வுலகில்தான் நடந்தன. இதைப் பற்றி மக்கள் சிந்தித்து சரி பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு உள்ளார்ந்த அர்த்தங்களை தருவது சரியில்லை என்றும், நேரடி பொருள் கொள்வதே சிறந்தது என்று எண்ணுபவர்கள் நேரடி பொருளையே எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். திருக்குர்ஆனின் ஆரம்பத்தில் உள்ள அத்தியாயங்களில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் விவரமாகத் தரப்பட்டுள்ளது. ஆனால் கடைசி அத்தியாயங்களில் மிக மிக சுருக்கமாக தரப்பட்டுள்ளன. அவற்றில் பயன்படுத்ப்பட்டுள்ள் வார்த்தைகளும் மிகவும் இலக்கிய நயத்துடன் விசாலமான பொருள் தரும் வகையில் உள்ளன. அவற்றில் வரும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துப் பார்க்கும் போது, எந்த அளவுக்கு விசாலமாக உள்ளன என்றால், கண் மணிக்குள் உலகமே ஐக்கியமாகி இருப்பது போல் உள்ளன. எனவே இத்தகைய வாசகங்களுக்கு உவமை வடிவில் பொருள் கொண்டால் தான் திருக்குர்ஆனின் வாசகங்களுக்கு உண்மையான விளக்கங்களைப் பெற முடிகின்றது.


تَبَٰرَكَ ٱلَّذِى بِيَدِهِ ٱلْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ.

67:1. அகிலங்கள் அனைத்திலும் ஆட்சி செய்யும் அளவற்ற வல்லமையுடையவன், விசாலமான பாக்கியங்கள் நிறைந்தவனாக இருப்பவன். மேலும் அவன் ஒவ்வொரு படைப்பிற்கும் உரிய சட்ட வரையறைகளை நிர்ணயித்து, மிக அழகான முறையில் அவற்றை செயல்படுத்தி வருபவன்.
எனவே இத்தகைய வல்லமை உடையவனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடைபெறும் போதும், எல்லா அருட்கொடைகளையும் பெற்று சிறப்பாக வாழக்ககூடிய பாக்கியங்கள் அந்நாட்டு மக்களுக்கு கிடைக்கும்.


ٱلَّذِى خَلَقَ ٱلْمَوْتَ وَٱلْحَيَوٰةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًۭا ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفُورُ.

67:2. இறைவனின் செயல்திட்டத்தின் படியே இவ்வுலகில் மனித சமுதாயங்களின் வாழ்வும் மரணமும் ஏற்பட்டு வருகின்றன. எந்த சமுதாயம் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட்டு ஜீவனுள்ள சமுதாயமாகத் திகழ்கிறது என்பதையும், எந்த சமுதாயம் அவற்றிற்கு எதிராக செயல்பட்டு நடைபிணங்களைப் போல் வாழ்கிறது என்பதையும் பரிசோதித்துக் கொள்ள முடியும். மேலும் இறைவனின் வல்லமையோ யார் எப்படி செயல்படுகிறார்களோ அதன்படி பலன்களையும் விளைவுகளையும் ஏற்படுத்துவதாக உள்ளன.
உலக சமுதயாங்கள் விஷயத்தில் நடைபெற்று வரும் இதே சட்டம்தான் தனி நபர் விஷயத்திலும் நடைபெற்று வருகிறது. யார் அழகிய செயல்களைச் செய்கிறாரோ அவருக்கு நன்மைகளும், யார் தீய செயல்களைச் செய்கிறாரோ அவருக்கு தீய விளைவுகளும் ஏற்படும்படி சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


ٱلَّذِى خَلَقَ سَبْعَ سَمَٰوَٰتٍۢ طِبَاقًۭا ۖ مَّا تَرَىٰ فِى خَلْقِ ٱلرَّحْمَٰنِ مِن تَفَٰوُتٍۢ ۖ فَٱرْجِعِ ٱلْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍۢ.

67:3. அல்லாஹ்வின் அளவிலா வல்லமையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால், வானங்கள் எவ்வாறு படைக்கப்பட்டு உள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்கட்டும். அவை எவ்வாறு ஒன்றன் மேலும் ஒன்றாக அடுக்கடுக்காக படைக்கபட்டுள்ளன என்பதை கவனித்துப் பார்க்கட்டும். அவற்றில் குறை ஏதாவது இருக்கின்றதா என்பதை அலசிப் பார்த்துக் கொள்ளட்டும். அவனால் எந்த குறையையும் காணவே முடியாது.


ثُمَّ ٱرْجِعِ ٱلْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ ٱلْبَصَرُ خَاسِئًۭا وَهُوَ حَسِيرٌۭ.

67:4. ஒருமுறை அல்ல இருமுறை அல்ல அவன் எத்தனைமுறை வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கட்டும். அவன் ஆராய்ந்து ஆராய்ந்து களைத்துவிடுவானே அன்றி, அவனால் எந்த குறையையும் கண்டுபிடிக்கவே முடியாது. அதில் அவனுக்கு தோல்வியே ஏற்படும்.


وَلَقَدْ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِمَصَٰبِيحَ وَجَعَلْنَٰهَا رُجُومًۭا لِّلشَّيَٰطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ ٱلسَّعِيرِ.

67:5. இரவில் வானத்தை அலங்கரிக்கும் வகையில் மின்னும் நட்சத்திரங்களைப் பற்றி தெரியுமா? அவை பூமிக்கு மிக அருகாமையில் இருப்பவை. மிகத் தொலைவில் இருப்பவற்றைப் பற்றி உங்களால் எங்கு காணமுடியும்? எனவே நட்சத்திரங்களின் உண்மை நிலை என்னவென்று இந்தக் குர்ஆன் மூலம் அறிவித்தாகி விட்டது. ஆனால் நட்சத்திரங்களின் நிலைப்படி தான் மனித வாழ்வு நடைபெற்று வருவதாகக் கூறும் ஜோசியக்காரர்களுக்கு இனி இடமில்லை. அதையும் மீறி அவர்கள் தம் கூற்றில் நிலைத்திருந்தால் கடுமையான வேதனைகளுக்கு ஆளாவார்கள். (மேலும் பார்க்க 15:17, 37:6-9, 72:8)


وَلِلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.

67:6. ஏனெனில் “ஒட்டு மொத்த மனித இனத்தின் பரிபாலனம்” என்ற அடிப்படையில் இறைவனின் ஆட்சியமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆனால் இவற்றை ஏற்க மறுப்பவர்கள் ஜாதக கணிப்புகளை மக்களுக்கு காட்டி அவர்களை திசை திருப்புகிறார்கள். எனவே தான் அவர்களுக்கு இந்த தண்டனை.


إِذَآ أُلْقُوا۟ فِيهَا سَمِعُوا۟ لَهَا شَهِيقًۭا وَهِىَ تَفُورُ.

67:7. இத்தகையவர்களுக்கு வேதனை அளிக்கப்படும் போது, வெறும் கதறல்களும், புலம்பல்களும் பேரிரைச்சல்களும் தாம் கேட்கும். அதை கேட்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கும்.


تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلْغَيْظِ ۖ كُلَّمَآ أُلْقِىَ فِيهَا فَوْجٌۭ سَأَلَهُمْ خَزَنَتُهَآ أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌۭ.

67:8. அத்தகைய நிலை அவர்களை கோபத்தால் வெடித்து நெருங்கிவிட்டது போலிருக்கும். இப்படி ஒரு நிலைக்கு ஆளாகும் சமூகத்தவர்களிடம், வேதனை அளிக்கும் காவலாளிகள், “உங்களுடைய தவறான செயல்களின் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்பவர் யாரும் வரவில்லையா?” என்று கேட்பார்கள்.


قَالُوا۟ بَلَىٰ قَدْ جَآءَنَا نَذِيرٌۭ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِى ضَلَٰلٍۢ كَبِيرٍۢ.

67:9. அதற்கு அவர்கள், “ஏன் இல்லை? முன்னெச்சரிக்கை செய்பவர்கள் என்னவோ வந்தார்கள். ஆனால் நாங்கள் அவை எல்லாம் பொய்யென கூறிவிட்டோம். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அத்தகைய விஷயங்கள் ஒருபோதும் வருவதில்லை என்றும் முன்னெச்சரிக்கை செய்பவர்கள் தாம் பெரும் வழிகேட்டில் இருந்ததாகவும் எண்ணிக் கொண்டோம். எனவே அவர்களிடம் இதையே கூறி வந்தோம்” என்று கூறுவார்கள்.


وَقَالُوا۟ لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِىٓ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ.

67:10. மேலும், “நாங்கள் அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு அதைப்பற்றி தீர சிந்தித்து அவற்றின்படி செயல்பட்டிருந்தால், இத்தகைய நரகவாசிகளாக ஆகியிருக்க மாட்டோம்” என்றும் கூறுவார்கள்.


فَٱعْتَرَفُوا۟ بِذَنۢبِهِمْ فَسُحْقًۭا لِّأَصْحَٰبِ ٱلسَّعِيرِ.

67:11. இப்படியாக அவர்கள் செய்து வந்த பாவங்களை ஒப்புக் கொள்வார்கள். அப்போது அவர்கள் ஒப்புக் கொள்வதால் அவ்வேதனையிலிருந்து மீள முடியுமா? இல்லை. அவர்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டியது தான்.
சிந்தனையாளர்களே! இவ்வுலகில் இறைவனின் ஆட்சியமைப்பு நடைபெறும் போதும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இத்தகைய தண்டனை கிடைக்கும். அவ்வாறு ஆட்சி நடைபெறவில்லை என்றாலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில் கிடைக்கும். திருக்குர்ஆனின் வாசகங்களின் பொருள் இவ்விரு வேதனைகளைப் பற்றியும் சித்தரிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


إِنَّ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌۭ كَبِيرٌۭ.

67:12. ஆனால் இறைவழிகாட்டுதலை உளமாற ஏற்று, அதற்கு மாற்றமாக செயல்படுவதால் கிடைக்கன்ற வேதனைகளுக்கு அஞ்சி செயல்படுபவர்களுக்கு, இத்தகைய வேதனைகள் நெருங்காது. அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வும் தலைசிறந்த வாழ்க்கை வசதிகளும் கிடைக்கும்.


وَأَسِرُّوا۟ قَوْلَكُمْ أَوِ ٱجْهَرُوا۟ بِهِۦٓ ۖ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.

67:13. நாம் மறைமுகமாக செயல்பட்டால் யாருக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்று சிலர் எண்ணிக் கொள்வார்கள். எந்த ஒரு சொல்லோ அல்லது செயலோ இரகசியமாக இருந்தாலும் வெளிப்படையாக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகவே போகாது. அதுமட்டுமின்றி ஒவ்வொருவரின் மனதில் ஏற்படும் எண்ணங்களும் அல்லாஹ்வுக்கு தெரியும் என்றும் அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ ٱللَّطِيفُ ٱلْخَبِيرُ.

67:14. அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் படைத்து விட்டு, அவை எப்படியாவது செயல்படட்டும் என்று கேட்பாரற்று விட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டீர்களா? உங்களுடைய ஒவ்வொரு செயலையும் மிக மிக நுணுக்கத்துடன் கவனித்து அறிந்து கொள்ளும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதன்படி உங்கள் செயல்களுக்கு ஏற்றவாறு மிகச் சரியான விளைவுகளை ஏற்படுத்தும்.


هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًۭا فَٱمْشُوا۟ فِى مَنَاكِبِهَا وَكُلُوا۟ مِن رِّزْقِهِۦ ۖ وَإِلَيْهِ ٱلنُّشُورُ.

67:15. மேலும் நீங்கள் வாழ்வதற்கு வசதியாக இந்த பூமியைப் படைத்தது யார்? நீங்கள் காட்டிலும் மேட்டிலும் வாழ்வாதாரங்களை தேடிச் செல்கிறீர்களே அவற்றை ஏற்பாடு செய்தது யார்? மேலும் உங்களுடைய ஒவ்வொரு தேவையை நிறைவேற்றிக் கொள்ள யாரிடம் செல்கிறீர்கள்? இவற்றை எல்லாம் செய்து கொடுத்தது அல்லாஹ் தான் என்பதை அறிந்து அவன் காட்டிய வழியில் செயலாற்றுங்கள்.


ءَأَمِنتُم مَّن فِى ٱلسَّمَآءِ أَن يَخْسِفَ بِكُمُ ٱلْأَرْضَ فَإِذَا هِىَ تَمُورُ.

67:16. அவ்வாறு நீங்கள் வாழ முன்வரவில்லை என்றால், அகிலங்களை எல்லாம் தம் கட்டுப்பாட்டில் வைத்து செயல்பட வைக்கும் வல்லமையுடையவன், உங்களை பூமியில் சொறுகிவிட முடியாதா? அதைப்பற்றி எப்போதாவது எண்ணி பயந்ததுண்டா? அப்படிப்பட்ட நிலையில் பூமியே அதிர்ந்து போகுமே! அதிலிருந்து தப்பிக்க உங்களால் என்ன செய்ய முடியும்?


أَمْ أَمِنتُم مَّن فِى ٱلسَّمَآءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًۭا ۖ فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ.

67:17. அல்லது வானத்திலிருந்து கல்மாரி எரிகற்கள் பொழிந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? இதைப் பற்றியெல்லாம் எண்ணாமல் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்படியென்றால் இறைவன் செய்த முன்னெச்சரிக்கைப் படி வேதனைகள் ஏற்படும்போது, அவை எவ்வாறு இருக்கும் என்பதை விரைவில் அறிந்துகொள்வீர்கள்.


وَلَقَدْ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ.

67:18. இத்தகைய வேதனைகள் கிடைப்பது புதிதான ஒன்றல்ல. இதற்கு முன்பும் பல சமுதாயங்களும் இறைவனின் முன் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் அழிவை சந்தித்துக் கொண்டன. அந்த வேதனைகள் எந்த அளவுக்குக் கடுமையாக இருந்தன என்பதைக் வரலாற்று ஆய்வாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
இறைவனின் வல்லமையைப் பற்றி அவர்களுக்கு அறவே தெரியாது. அவர்கள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார்கள். உலகப் படைப்புகளைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்திருந்தால், இப்படி அவர்கள் அலட்சியமாக இருக்க மாட்டார்கள். நவீன கால யுத்தங்களிலும் வான் தாக்குதல்கள் கல்மாரிகளாக பொழிவதைக் காண்பீர்கள்.


أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ فَوْقَهُمْ صَٰٓفَّٰتٍۢ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱلرَّحْمَٰنُ ۚ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍۭ بَصِيرٌ.

67:19. வானத்தில் தம் இறக்கைகளை விரித்துக் கொண்டும் சேர்த்துக் கொண்டும் பறந்து செல்லும் பறவைகளை இவர்கள் பார்ப்பதில்லையா? அருட்கொடையாளன் அர் ரஹ்மானின் ஏற்பாடுகள் இல்லாதிருந்தால் அவற்றால் அந்தரத்தில் பறக்கும் சக்திகளைப் பெற்றிருக்குமா? நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் மிகவும் நுணுக்கத்துடன் செயல்படக் கூடியவையாகவே உள்ளன.


أَمَّنْ هَٰذَا ٱلَّذِى هُوَ جُندٌۭ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ ٱلرَّحْمَٰنِ ۚ إِنِ ٱلْكَٰفِرُونَ إِلَّا فِى غُرُورٍ.

67:20. அதே போன்று உங்களுடைய தவறானச் செயல்களால் அருட்கொடையாளன் அர் ரஹ்மான் நிர்ணயித்த சட்டப்படி உங்களுக்கு பேராபத்துகள் வந்துவிட்டால், எந்தப் படைகளால் அதை எதிர்த்து போரிட முடியும்? இறைவழிகாட்டுதலை ஏற்காமல் செயல்படுபவர்கள் தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தவறான எண்ணத்தில் ஏமாறிக் கொண்டிருக்கிறார்கள்.


أَمَّنْ هَٰذَا ٱلَّذِى يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُۥ ۚ بَل لَّجُّوا۟ فِى عُتُوٍّۢ وَنُفُورٍ.

67:21. மேலும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளைக் கொண்டுதான் மக்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைக்கின்றன. அவை தடுக்கப்பட்டு விட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும்? இவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் இறைவழிகாட்டுதலுக்கு மாறு செய்வதிலும் அதை வெறுப்பதிலும் முனைப்பாக இருக்கின்றனர்.


أَفَمَن يَمْشِى مُكِبًّا عَلَىٰ وَجْهِهِۦٓ أَهْدَىٰٓ أَمَّن يَمْشِى سَوِيًّا عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

67:22. எனவே இத்தகையவர்களிடம்,“எதைப் பற்றியும் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக செயல்படுபவர்கள் நேர்வழியில் இருப்பவர்களா? அல்லது எதையும் சிந்தித்து சரியான வழியில் செயல்படுபவர்கள் சிறந்தவர்களா?” என்று கேளுங்கள்.


قُلْ هُوَ ٱلَّذِىٓ أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۖ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ.

67:23. மேலும் அவர்களிடம்,“உங்ளை படைத்தவன் அல்லாஹ் தான். அவனுடைய செயல் திட்டத்தின்படியே எதையும் கேட்டு அறிந்து கொள்வதற்கு செவிப் புலன்களும், பார்த்து அறிந்து கொள்ள பார்வைப் புலன்களும், சிந்தித்துச் செயலாற்ற பகுத்தறிவும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைத் தான் சிந்திக்கவேண்டும்” என்று கூறுங்கள்.


قُلْ هُوَ ٱلَّذِى ذَرَأَكُمْ فِى ٱلْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ.

67:24. அல்லாஹ்வின் செயல் திட்டப்படியே மனிதனை உலகம் முழுவதும் பரவச் செய்தான். நீங்கள் உங்கள் விருப்பப்படி எல்லாம் செயல்படலாம் என்பது தான் இதற்கு அர்த்தமா? இல்லை. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

67:25. அதற்கு அவர்கள், “நீங்கள் அடிக்கடி அழிவைப் பற்றியே மிரட்டி வருகிறீர்களே. நீங்கள் சொல்வது உண்மை என்றால் அந்த அழிவுகள் எப்போது வரும்” என்று அவர்கள் கேட்கிறார்கள்.


قُلْ إِنَّمَا ٱلْعِلْمُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٌۭ مُّبِينٌۭ.

67:26. எனவே அவர்களிடம், “உங்களுக்கு அழிவுகள் எப்போது வரும் என்பதைக் கணித்து என்னால் கூற இயலாது. அந்த ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் தீய செயல்களின் நாசகர விளைவுகளைப் பற்றி எடுத்துரைப்பதே என் பணியாகும்” என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


فَلَمَّا رَأَوْهُ زُلْفَةًۭ سِيٓـَٔتْ وُجُوهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَقِيلَ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَدَّعُونَ.

67:27. அத்தகைய அழிவுகள் தோற்றத்திற்கு வரும்போது, அவர்களுடைய முகங்கள் கவலையால் வாடிப்போகும். அப்போது நீங்கள் எதிர்ப் பார்த்த அழிவுகள் இவைதான் என்று அவர்களுக்கு கூறுவதாக அந்த சூழ்நிலைகள் இருக்கும்.


قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَهْلَكَنِىَ ٱللَّهُ وَمَن مَّعِىَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ ٱلْكَٰفِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍۢ.

67:28. மேலும் அவர்களிடம், “எனக்கும் என்னுடன் இருப்பவர்களின் நிலைமை என்னவாகும் என்ற கவலையை விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி எங்களுக்கு அழிவு ஏற்படுகிறதா அல்லது அவனது அருட்கொடைகள் கிடைக்கப் போகின்றதா என்பதற்கு காலமே பதில் சொல்லும். ஆனால் இறை வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படும் உங்களுக்கு அழிவு ஏற்படுவது சர்வ நிச்சயமே! அந்த அழிவிலிருந்து உங்களை காப்பாற்றுபவர் யார்?” என்று கேட்பீராக.


قُلْ هُوَ ٱلرَّحْمَٰنُ ءَامَنَّا بِهِۦ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.

67:29. இறை வழிகாட்டுதலின்படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! “அருட்கொடையாளன் அர் ரஹ்மான் புறத்திலிருந்து எங்களுக்கு பாதுகாப்பு கிடைப்பது உறுதி. அவனுடைய வழிகாட்டுதல் மீதே எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அவற்றையே நாங்கள் முற்றிலும் சார்ந்திருக்கிறோம். எனவே வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர்கள் யார் என்ற உண்மை உங்களுக்கு விரைவில் தெளிவாகிவிடும்” என்று கூறிவிடுவீராக.
மனிதன் உழைத்து ஈட்டிக் கொண்ட செல்வங்களையும் வாழ்வாதாரங்களையும் அவனது தேவைக்குப் போக மிகுதியானவற்றை பொது உடமை ஆக்கவேண்டும் என்பதே அருட்கொடையாளன் இறைவனின் அறிவுரையாகும். ஆனால் அவர்களோ இதை விரும்பாமல் அனைத்தும் தமக்காகத்தான் என்று எண்ணி இறைவழிகாட்டுதலை எதிர்க்கிறார்கள்.


قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًۭا فَمَن يَأْتِيكُم بِمَآءٍۢ مَّعِينٍۭ.

67:30. எனவே அவர்களிடம், நீங்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்தும் தண்ணீர் மழையின்றி வரண்டு போனால் உங்களால் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு நீரைப் பொழிய வைப்பவன் யார் என்பதைக் கவனித்தீர்களா?” என்று கேளுங்கள்.