بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

66:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكَ ۖ تَبْتَغِى مَرْضَاتَ أَزْوَٰجِكَ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

66:1. இறை வழிகாட்டுதலின்படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! உம்மை சார்ந்தவர்களின் விருப்பங்களுக்கேற்ப அல்லாஹ் அறிவித்த ஆகுமானவற்றை நீர் எப்படி ஆகுமானதல்ல என தடை விதிக்கலாம்? ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலோ அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதியே உள்ளன என்பதை நீர் அறியவில்லையா?
சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகையோ அல்லது மற்ற எந்த விஷயமானாலும் சரி, அவற்றிற்கு தடைவிதிக்க அன்னல் நபி (ஸல்) அவர்களுக்கே அனுமதி கிடையாது. எனவே அவரவர் விருப்பப்படி இது ஆகுமானது இது ஆகுமானதல்ல என்று அறிவிக்க மற்ற யாருக்கும் உரிமை கிடையாது (பார்க்க 16:116) அல்லாஹ் தடை செய்தது போக (பார்க்க 5:3, 7:33, 5:90) மற்றவை ஆகுமானவையே ஆகும். இதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.


قَدْ فَرَضَ ٱللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَٰنِكُمْ ۚ وَٱللَّهُ مَوْلَىٰكُمْ ۖ وَهُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ.

66:2. இது விஷயமாக நீர் ஏற்கனவே சத்தியம் செய்திருந்தால், அதை முறித்து விடுவதில் தவறு ஒன்றும் இல்லை. இப்படி சத்தியங்களை முறிப்பதற்கு பரிகாரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. (பார்க்க 2:225, 5:89) அல்லாஹ்வின் துணை உமக்கு எப்போதும் இருக்கும். மனிதனின் பலவீனங்கள் யாவை மற்றும் அவற்றை எவ்வாறு களைவது என்பது போன்ற விஷயங்கள் யாவும் அல்லாஹ்வுக்குத் தெரியும். அவனுடைய வழிகாட்டுதல்கள் தெளிவான ஞானத்தின் அடிப்படையில் உள்ளன.


وَإِذْ أَسَرَّ ٱلنَّبِىُّ إِلَىٰ بَعْضِ أَزْوَٰجِهِۦ حَدِيثًۭا فَلَمَّا نَبَّأَتْ بِهِۦ وَأَظْهَرَهُ ٱللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُۥ وَأَعْرَضَ عَنۢ بَعْضٍۢ ۖ فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ قَالَتْ مَنْ أَنۢبَأَكَ هَٰذَا ۖ قَالَ نَبَّأَنِىَ ٱلْعَلِيمُ ٱلْخَبِيرُ.

66:3. மேலும் இறைத்தூதர் ஒரு முறை தன் மனைவியிடம் ஒரு செய்தியை இரகசியமாக அறிவித்திருக்க, அவர் அதை தன் வரையில் மறைத்து வைக்காமல் மற்றவரிடம் அறிவித்து விட்டார். அந்த விஷயத்தை அந்த பெண்மணி மற்றவர்க்கு அறிவிக்க, அல்லாஹ்வின் நியதிப்படி அச்செய்தி இறைத் தூதரிடமே திரும்பி வந்தடைந்தது. இறைத் தூதரிடம் வந்தடைந்த அந்த விஷயம் அறைகுறையாக இருந்தது. அதாவது அந்த இரகசியத்தின் ஒரு பகுதியை மட்டும் இருந்தது. மற்றவை மறைந்து இருந்தது.
இதைப் பற்றி அவர் தம் மனைவியிடம் விசாரிக்கவே, அவர் இந்த விஷயத்தை உங்களுக்கு யார் அறிவித்தது என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் யாருக்கு நீ இந்த விஷயத்தை வெளிப்படுத்தினாயோ அவர் மூலமே இந்த செய்தி எனக்குக் கிடைத்தது என்று பதிலளித்தார்.
அதாவது கணவன் மனைவியின் இரகசியமோ அல்லது மற்ற இரகசிய விஷயங்களோ, அதை மற்றவரிடம் அறிவித்து விட்டால் அது அனைவரின் இரகசியமாக மாறிவிடும். (Secret between two is secret of God. Secret of three is the secret of everybody) இது மிகவும் கெட்ட பழக்கமாகும். மேலும் அந்த செய்தி பலரிடம் போய் சேர்ந்து உண்மை ஒன்றிருக்க விஷயம் வேறு மாதிரியாய் பரவிவிடும். எனவே இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும். உயிரே போனாலும் அதை மற்றவரிடம் அறிவிக்கக் கூடாது.


إِن تَتُوبَآ إِلَى ٱللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا ۖ وَإِن تَظَٰهَرَا عَلَيْهِ فَإِنَّ ٱللَّهَ هُوَ مَوْلَىٰهُ وَجِبْرِيلُ وَصَٰلِحُ ٱلْمُؤْمِنِينَ ۖ وَٱلْمَلَٰٓئِكَةُ بَعْدَ ذَٰلِكَ ظَهِيرٌ.

66:4. எனவே இரகசியத்தை வெளிப்படுத்திய இறைத்தூதரின் மனைவியும், அதை மற்றவரிடம் அறிவித்த பெண்மணியும் தம் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டால், அது அவர்களுக்கு நலமாய் இருக்கும். இது விஷயமாய் நீங்கள் ஒருவரையொருவர் சேர்ந்து இறைத் தூதருக்கு எதிராக முறையிடுவதில் பலன் ஒன்றும் கிடைக்காது. ஏனெனில் அல்லாஹ்வும், இறைச் செய்திகளை அறிவிக்கும் ஜிப்ரீலும்*, நேர்மையாக நடந்துகொள்ளும் மூஃமின்களும், பிரபஞ்ச இயற்கை சக்திகளும் இறைத்தூதருக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே உண்மையை வெளிப்படுத்துவதில் எந்த சிரமும் இருக்காது.
நீங்ள் வெளிப்படுத்தும் செய்திதான் கேட்பவர்களின் உள்ளத்தில் இறங்கும். இதுவே ஜிப்ரயீலின் பணி என்பதாகும். எனவே செய்தியைக் கேட்டவரின் சாட்சி நீதி மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.


عَسَىٰ رَبُّهُۥٓ إِن طَلَّقَكُنَّ أَن يُبْدِلَهُۥٓ أَزْوَٰجًا خَيْرًۭا مِّنكُنَّ مُسْلِمَٰتٍۢ مُّؤْمِنَٰتٍۢ قَٰنِتَٰتٍۢ تَٰٓئِبَٰتٍ عَٰبِدَٰتٍۢ سَٰٓئِحَٰتٍۢ ثَيِّبَٰتٍۢ وَأَبْكَارًۭا.

66:5. மேலும் இறைத்தூதர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, உங்களைவிட சிறந்த பெண்மணிகளின் துணையை அவரால் தேடிக்கொள்ள முடியும். அவர்கள் இறைத் தூதருக்கு அடிபணிந்து நடப்பவர்களாகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடப்பவர்களாகவும், இறைச் சட்டங்களைப் பேணி நடப்பவர்களாகவும், தவறிழைத்தால் உடனே திருந்திக் கொள்பவர்களாகவும், இறைக்கட்டளைக்கு அடிபணிந்து நடப்பவர்களாகவும் இருப்பார்கள். பெண்மணிகளில் விதவைகளானாலும் திருமணமாகாத கன்னியர்களாக இருந்தாலும் சரியே. நற்பண்புகளுடன் கூடிய பெண்களே இறைத்தூதரிடம் இணைந்து பணிபுரிபவர்களாக இருக்க முடியும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ قُوٓا۟ أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًۭا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ عَلَيْهَا مَلَٰٓئِكَةٌ غِلَاظٌۭ شِدَادٌۭ لَّا يَعْصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ.

66:6. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்களும் உங்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் இத்தகைய நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வழி செய்யுங்கள். அப்போது தான் சீர்பட்ட குடும்பமாக மாறி வேதனைகளிலிருந்து விடுபடும். அவ்வாறு செய்யவில்லை என்றால் நாளடைவில் சமுதாயமே சீர்கெட்டு அவையே வேதனைகளுக்கு எரிபொருளாக மாறிவிடும். அதற்கு துணையாக பலம் வாய்ந்த இயற்கை சக்திகளும் எரிகற்களாக மாறிவிடும். அல்லாஹ்வின் புறத்திலிருந்து இத்தகைய கடுமையான சட்டங்களே உருவாக்கப்பட்டுள்ளன. இதில் எந்த மாற்றமும் இருக்காது. பிரபஞ்ச இயற்கை சக்திகளுக்கு என்ன கட்டளைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அவற்றின்படியே அவை செயல்படும்.
அதாவது வீட்டை சரிசெய்யவில்லை என்றால் நாட்டையும் சரிசெய்ய முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் உருவாகும் சிறந்த பிள்ளைகளே வருங்காலத்தில் சிறந்த குடிமகன்களாக விளங்குவர். இதை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டிலுள்ள தாய் தந்தையர்களும் நல்ல பண்புள்ள பிள்ளைகளாக உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் தீயவர்கள் உருவாகி கலகம், கலவரம், போர், யுத்தம் போன்றவையே நடைபெறும் (மேலும் பார்க்க 2:24)


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَعْتَذِرُوا۟ ٱلْيَوْمَ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ.

66:7. இறை வழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களே! அத்தகைய நிலைமை ஏற்பட வாய்ப்பில்லை என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிராதீர்கள். உங்களுடைய தீய செயல்களே உங்களை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அல்லாஹ்வின் அறிவுரைப் படி உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள்.
அதாவது ரகசியத்தைக் காப்பது என்றால் தலையே வெடித்து விடுவது போலாகிவிடும். அதை பறரிடம் அறிவிக்காத வரை அவரது உள்ளம் அமைதியே கொள்ளாது. இது மிகவும் கெட்ட பழக்கமாகும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ تُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ تَوْبَةًۭ نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ يَوْمَ لَا يُخْزِى ٱللَّهُ ٱلنَّبِىَّ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ ۖ نُورُهُمْ يَسْعَىٰ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَٰنِهِمْ يَقُولُونَ رَبَّنَآ أَتْمِمْ لَنَا نُورَنَا وَٱغْفِرْ لَنَآ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

66:8. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் அறியாமையில் இத்தகைய தவறாக செயல்பட்டிருந்தால், அதை உடனே விட்டுவிடுங்கள். மீண்டும் அத்தகைய செயலில் ஈடுபடாதீர்கள். இதுவே பாவமன்னிப்பு கோருதலாகும். இதன் பலனாக உங்களிடையே இருந்து வந்த தீய பழக்க வழக்கங்கள் நீங்கி, உங்களுடைய சமுதாய பிரச்சனைகள் தீர்ந்து, அது சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அங்கு பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவநதி போல் நீடுத்து வரும். அத்தகைய கால கட்டங்களில் சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவருக்கோ அல்லது அவருடன் செயல்படும் செயல் வீரர்களுக்கோ எவ்வித இழிவும் துயரமும் ஏற்படவே ஏற்படாது. அவர்களுடைய ஒளிமயமான வாழ்க்கை நாலாப்புறத்திலும் மென்மேலும் பிரகாசித்துக் கொண்டே செல்லும். அங்கு வாழ்பவர்களின் எண்ணங்களும் செயல்பாடுகளும் இவ்வாறு இருக்கும். “எங்கள் இறைவா! எங்களுக்கு முழு அளவில் ஒளிமயமான வாழ்க்கையும், பாதுகாப்பான நிம்மதியான வாழ்வும் கிடைத்திட எங்களுக்கு அருள்புரிவாயாக! நீயே எல்லா விஷயத்திலும் பேராற்றல் உடையவனாக இருக்கின்றாய் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை” என்பதாக இருக்கும்.


يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ جَٰهِدِ ٱلْكُفَّارَ وَٱلْمُنَٰفِقِينَ وَٱغْلُظْ عَلَيْهِمْ ۚ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.

66:9. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! இதற்கு மாறாக வதந்திகளையும் புரளிகளையும் பரப்பி, இறை ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்படும் சமூத விரோதிகள் மற்றும் நயவஞ்சகர்கள் விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்படுங்கள். அவர்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுங்கள். அத்தகையவர்கள் இருக்க வேண்டிய இடம் வேதனையளிக்கும் சிறைவாசமே. அத்தகையவர்களுக்கு அது மிகவும் மோசமான இடமாக இருக்கும்.


ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا لِّلَّذِينَ كَفَرُوا۟ ٱمْرَأَتَ نُوحٍۢ وَٱمْرَأَتَ لُوطٍۢ ۖ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَٰلِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ ٱللَّهِ شَيْـًۭٔا وَقِيلَ ٱدْخُلَا ٱلنَّارَ مَعَ ٱلدَّٰخِلِينَ.

66:10. எனவே “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற இறைச் சட்டம் நிலையானது என்பதற்கு சில உதாரணங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். அவற்றில் நூஹ் நபியின் மனைவி மற்றும் லூத் நபியின் மனைவியின் எடுத்துக்காட்டை மேற்கோள் காட்டி சொல்லலாம். அவ்விருவரும் தலைசிறந்த சீர்திருத்தவாதிகளின் மனைவிகளாக இருந்தனர். இருந்தும் அவர்கள் தம் கணவன்மார்களின் அறிவுரைகளை கேட்டு நடக்கவே இல்லை. அவ்விரு இறைத்தூரும், தம் மனைவிகளின் தவறான செயல்களின் விளைவுகள் என்ற அல்லாஹ்வின் சட்டத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை. எனவே அவ்விருவரின் மனைவிகளும் வேதனை அளிக்கும் அழிவில் சிக்கி மடிந்து போனார்கள்.


وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱمْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ٱبْنِ لِى عِندَكَ بَيْتًۭا فِى ٱلْجَنَّةِ وَنَجِّنِى مِن فِرْعَوْنَ وَعَمَلِهِۦ وَنَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.

66:11. இதற்கு மாறாக நல்ல பெண்மணிகளுக்கு முன்உதாரணமாக அல்லாஹ் ஃபிர்அவுனின் மனைவியை மேற்கோள் காட்டுகிறான். அவருடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் எவ்வாறு இருந்தன என்பதை கவனியுங்கள். அவர், “என் இறைவா! நான் என் கணவர் ஃபிர்அவுனின் அராஜக ஆட்சியில் சிக்கித் தவிக்கிறேன். இதை விட்டு என்னை காப்பாற்றி சாந்தமான இடத்தில் பணிபுரிய எனக்கு வழி வகுப்பாயாக. மேலும் அநியாயக்கார சமூகத்தாரை விட்டு என்னை காப்பாற்றுவாயாக” என்று பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்.
அதற்கேற்றவாறு அவருக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைத்து, அவர் தலைச்சிறந்த பெண்மணி என்ற பெயரும் புகழும் பெற்றார். அவருடைய பெயர் ஆசியா ஃகாதூன் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.


وَمَرْيَمَ ٱبْنَتَ عِمْرَٰنَ ٱلَّتِىٓ أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦ وَكَانَتْ مِنَ ٱلْقَٰنِتِينَ.

66:12. அதையடுத்து நல்ல பெண்மணி என்பதற்கு முன்னுதாரணமாக இம்ரானின் புதல்வியான மர்யமை அல்லாஹ் மேற்கோள் காட்டுகிறான். அவர் ஹைக்கலெ சுலைமானி என்ற ஆசிரமத்தில் துறவியாக இருக்க நேர்ந்தது. (3:35-37) அங்கு பெண்களுக்கு எதிராக முறைகேடுகள் நடந்தும் அங்கிருந்த மடாதிபதிகளின் வலையில் சிக்காமல் தன் கற்பைக் காத்துக் கொண்டார். இதற்காக நாம் சிறப்பான வழிகாட்டுதல்களை ஜக்ரியா நபி மூலம் அறிவித்தோம். எனவே அவர் இறைவழிகாட்டுதலின் படி ஆசிரமத்தின் விதிமுறையில் இருந்த துறவித்தனத்தை விட்டுவிட்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார். இப்படியாக அவர் இறைவனின் வழிகாட்டுதலுக்கு தலைவணங்கி அவனுடைய வேத வழிகாட்டுதலை மெய்ப்பிக்க ஆணிவேராக திகழ்ந்தார். அவர் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றிய வீராங்கனையாக விளங்கினார். (மேல்கொண்டு விளக்கத்திற்குப் பார்க்க 3:35-47)
அதாவது ஆணோ பெண்ணோ அவர் எப்படிப்பட்ட இடத்தில் வசிக்கிறார் என்பது அல்ல கேள்வி. அவர் எப்படி வாழ்கிறார் என்பதே கேள்வியாகும். மேற்சொன்ன இரு பெண்மணிகளும் மிகவும் மோசமான இடத்தில் வாழ நேர்ந்த போதும் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்து சிறந்த பெண்மணிகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். எனவே நான் வாழ்ந்த இடம் கெட்டது. எனவே நான் கெட்டுப் போய்விட்டேன் என்று சொல்வதால் யாருக்கும் விடுவிப்புக் கிடைக்காது (IGNORANCE OF LAW IS NO EXCUSE) (பார்க்க 15:40, 17:65)