بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
63:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
إِذَا جَآءَكَ ٱلْمُنَٰفِقُونَ قَالُوا۟ نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِ ۗ وَٱللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّ ٱلْمُنَٰفِقِينَ لَكَٰذِبُونَ.
63:1. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும்போதெல்லாம் நிச்சயமாக நீர் இறைத்தூதர் தான் என்பதை ஏற்றுக் கொள்வதாக சத்தியம் செய்து கூறுகின்றனர். நீர் இறைத் தூதர்தான் என்பது அல்லாஹ்வுக்கு தெரியும். ஆனால் அந்த நயவஞ்சகர்களின் உள்ளங்களில் இருப்பது பொய்யான விஷயமே என்பதும் அல்லாஹ்வுக்கு தெரியும். எனவே அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியாவான்.
ٱتَّخَذُوٓا۟ أَيْمَٰنَهُمْ جُنَّةًۭ فَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِنَّهُمْ سَآءَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.
63:2. இவர்கள் தங்களுடைய சத்தியங்களை கேடயமாக வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் செயல்படுபவர்களுக்கு எதிராக தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்கள் செய்வது அனைத்தும் நற்செயல்களே எனவும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அவை அவர்களுக்கு கேடுகளை விளைவிக்கும் என்பதை அறியவில்லை.
ذَٰلِكَ بِأَنَّهُمْ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ.
63:3. இத்தகையவர்களை நீங்கள் நன்றாக அடையாளங்கொள்ள வேண்டும். இவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டதாக உதட்டளவில் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அதற்கு மாற்றமாகவே செயல்படுகின்றனர். எனவே அல்லாஹ்வின் நியதிப்படி இத்தகையவர்களின் உள்ளங்களில் திரை ஏற்பட்டு விடுகிறது. எனவே அவர்களால் உண்மையை விளங்கிக்கொள்ளவே முடியாது.
۞ وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا۟ تَسْمَعْ لِقَوْلِهِمْ ۖ كَأَنَّهُمْ خُشُبٌۭ مُّسَنَّدَةٌۭ ۖ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ۚ هُمُ ٱلْعَدُوُّ فَٱحْذَرْهُمْ ۚ قَٰتَلَهُمُ ٱللَّهُ ۖ أَنَّىٰ يُؤْفَكُونَ.
63:4. இவர்களை நீங்கள் பார்ப்பீர்களானால் அவர்களுடைய நடை, உடை, பாவனை எல்லாம் சிறப்பாக இருக்கும். இவர்களுடைய பேச்சுத் திறமையிலும் எந்த குறைவும் இருக்காது. ஆனால் அவர்களுடைய உள்ளூர நிலைமை யாவும் வேறு விதமாய் இருக்கும். அவர்களுடைய சிந்தனைப் புலன்கள் யாவும் செல்லரித்துப் போன மரக்கட்டைகள் சுவற்றில் சாய்த்து வைத்தது போலிருக்கும். அதாவது சுயமாக எந்த முடிவையும் அவர்களால் எடுக்க முடியாது. அதற்குரிய ஆற்றலும் இருக்காது. எங்கேயாவது சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் தனக்கு பேராபத்து வந்துவிடுமோ என எண்ணி நடுங்குவார்கள். உங்களுடைய பகைவர்களின் நிலைமையும் இதுவே ஆகும். இவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி இவர்களுக்கு அழிவு ஏற்படுவது நிச்சயம். அவர்களால் நேரான பாதையை விட்டு வேறு எங்கு செல்லமுடியும்?
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ ٱللَّهِ لَوَّوْا۟ رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُم مُّسْتَكْبِرُونَ.
63:5. மேலும் அவர்களிடம், “வாருங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி வழிநடத்திச் செல்லும் தூதர் இருக்கிறார். அவரிடம் சென்று உங்களுடைய தவறான செயல்களை விட்டுவிடுவதாக உறுதியளியுங்கள். அல்லாஹ்வின் ஆட்சியின் மூலமாக உங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்க அவர் வழிசெய்வார்” என்று கூறினால், அதைக் கேட்டு ஏளனமாக தங்கள் தலைகளை சாய்த்துக் கொண்டு கர்வத்துடன் சென்றுவிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
سَوَآءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ.
63:6. எனவே இத்தகையவர்களுக்காக நீர் பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழிசெய்வதும் செய்யாததும் ஒன்றே ஆகும். அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவுகளை அனுபவித்தே தீருவார்கள். மேலும் வழிதவறிச் செல்லும் சமூகத்தாருக்கு அல்லாஹ்வின் நேர்வழி ஒருபோதும் கிடைக்காது.
هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُوا۟ عَلَىٰ مَنْ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّوا۟ ۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَٰكِنَّ ٱلْمُنَٰفِقِينَ لَا يَفْقَهُونَ.
63:7. இவைதான் நயவஞ்சகர்களின் நிலைமையாகும். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி வழிநடத்திச் செல்லும் தூதருக்கும், அவரோடு இருப்பவர்களுக்கும் எந்த உதவியும் செய்யாதீர்கள் என்று மக்களிடம் கூறியவர்கள் ஆவர். இறைத் தூதரோடு இருப்பவர்கள் வேறு வழியின்றி அவரை விட்டுப் பிரிந்து நம்மோடு வந்து இணைந்து விடுவார்கள் என்று எதிர் பார்த்தவர்கள் அவர்கள். ஆனால் அல்லாஹ்வின் அளவிலா அருட்கொடைகள் வானங்களிலும் பூமியிலும் பரந்து விரிந்து கிடப்பதை இந்த நயவஞ்சகர்களுக்கு எங்கு தெரியப் போகிறது? எனவே இறைவனின் ஆட்சியமைப்பு இத்தகையவர்களின் உதவியை எதிர் பார்ப்பதில்லை.
يَقُولُونَ لَئِن رَّجَعْنَآ إِلَى ٱلْمَدِينَةِ لَيُخْرِجَنَّ ٱلْأَعَزُّ مِنْهَا ٱلْأَذَلَّ ۚ وَلِلَّهِ ٱلْعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلْمُؤْمِنِينَ وَلَٰكِنَّ ٱلْمُنَٰفِقِينَ لَا يَعْلَمُونَ.
63:8. மேலும் அவர்கள், “நாங்கள் மதீனாவுக்கு திரும்பி போய்ச் சேர்ந்ததும், அக்கூட்டத்திலுள்ள கண்ணியமிக்கவர்களை வைத்து, தாழ்ந்த நிலையில் இருக்கும் இவர்களை துரத்தி விடலாம்” என்று கூறி வந்தார்கள். ஆனால் கண்ணியமும் மதிப்பும், அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களையும் பேணி நடப்பதைக் கொண்டே கிடைக்கின்றன என்ற உண்மை அவர்களுக்கு எங்கு தெரியப் போகிறது?
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُلْهِكُمْ أَمْوَٰلُكُمْ وَلَآ أَوْلَٰدُكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ.
63:9. எனவே இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உங்கள் செல்வமும் உங்களுடைய பிள்ளைகளும் அல்லாஹ்வின் அறிவுரைகளை விட்டு உங்களை பராமுகமாக்கிவிட வேண்டாம். யார் தம் பிள்ளைகளையும், தாம் ஈட்டிய செல்வங்களையும் காப்பாற்ற அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு எதிராக செலவழிக்கிறார்களோ, அவர்கள் மிகப்பெரிய நஷ்டவாளிகளாக இருக்க நேரிடும்.
وَأَنفِقُوا۟ مِن مَّا رَزَقْنَٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَآ أَخَّرْتَنِىٓ إِلَىٰٓ أَجَلٍۢ قَرِيبٍۢ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ.
63:10. எனவே உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, சமூக நலப் பணிகளுக்காக உங்கள் செல்வங்களை பயன்படுத்துங்கள். ஏனெனில் நீங்கள் மரணித்த பின் இவ்வாறு செய்ய இயலாது. நீங்கள் இவ்வாறு செய்யவில்லை என்றால் மரணம் ஏற்படும் தருவாயில் என் இறைவனே! இன்னும் சிறிது காலம் எனக்கு அவகாசம் கொடுக்க மாட்டாயா?” என்று இரைஞ்சும் நேரம் வந்து விடும். அப்படி வாய்ப்பு கிடைத்தால் தானும் நற்பணிகளுக்காக செலவு செய்து சாலிஹான நற்செயலை செய்வோரில் ஒருவனாக ஆகிவிடுவேன் என்று இறைவனிடம் பிரார்த்திப்பீர்கள்.
மக்களே! கவனித்தீர்களா? சமுதாய நலப்பணிகளுக்காக செலவிடுவதையே சாலிஹான நல்ல அமல் என்கிறது திருக்குர்ஆன். இதை மனதில் கொண்டு நலிந்த மக்களில் துயர்துடைப்புப் பணிகளை மேற்கொள்ளுங்கள்.
وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفْسًا إِذَا جَآءَ أَجَلُهَا ۚ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ.
63:11. ஆனால் அல்லாஹ்வின் நிலைமாறா சட்டமோ நிர்ணியிக்கப்பட்ட ஆயுட்காலத்தை யாருக்காகவும் நீட்டவோ அல்லது குறைக்கவோ செய்யாது. எனவே மரணத் தருவாயில் கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. (பார்க்க 4:18) மேலும் ஒவ்வொரு மனிதனின் செயல்களும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போவதில்லை. எனவே உங்களுடைய செயல்களுக்குரிய பலன்கள் கிடைப்பது உறுதி.