بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

62:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ٱلْمَلِكِ ٱلْقُدُّوسِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ.

62:1. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற முழுவேகத்துடன் செயல்படுகின்றன. எவ்வித குறைவும் இன்றி அழகிய முறையிலும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலும், அவற்றை செயல்பட வைத்திருப்பது, அல்லாஹ்வின் மாபெரும் மேலாண்மைக்கும், அளவிலா வல்லமைக்கும் சான்றுகளாக விளங்குகின்றன.


هُوَ ٱلَّذِى بَعَثَ فِى ٱلْأُمِّيِّۦنَ رَسُولًۭا مِّنْهُمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَإِن كَانُوا۟ مِن قَبْلُ لَفِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.

62:2. அகிலங்களில் அவனுடைய செயல்திட்டங்கள் அழகிய முறையில் செயல்பட்டு வருவதுபோல், மனித உலகமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். அதன்படி உங்களிலிருந்தே ஓர் இறைத்தூதரை தேர்ந்தெடுத்துள்ளான். இதற்கு முன் எந்த வேதத்தையும் இறக்கி அருளப்படாத சமுதாயத்திலிருந்து அவரை தேர்ந்தெடுத்து வழிகாட்டுதல்களை அறிவிக்கிறான். அவற்றை மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களிடையே உள்ள மூட நம்பிக்கைகளை போக்கி, அவர்களுடைய உள்ளங்களை பரிசுத்தமாக்கி, அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையும் அவற்றின் நோக்கங்களையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பதே அவருடைய முக்கிய கடமையாகும். இதற்கு முன்னர் அம்மக்கள் வெளிப்படையான வழிகேட்டில் இருந்தார்கள்.
வஹீ எனும் இறைவழிகாட்டுதலின் தொடர்ச்சியில் இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வருகிறார். (விளக்கத்திற்கு பார்க்க 5:7) இவ்வாசகம் அவரையே குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. ஆனால் அவர் செய்து காட்டிய பணியை அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள் தொடர்ந்து செய்து காட்ட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். (பார்க்க 3:144) காரணம்


وَءَاخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا۟ بِهِمْ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

62:3. அவர் எடுத்துரைக்கும் இறைவழிகாட்டுதல்கள் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல. பிற்காலத்தில் உலகம் நீடித்திருக்கும் வரையில் வரக்கூடிய மக்களுக்கும் இவை பொருந்தும். இவையாவும் அனைத்து படைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து, செயல்பட வைக்கும் பேராற்றல் உடைய ஞானமிக்கவனிடமிருந்து வரும் வழிகாட்டுதல்களாகும்.


ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ.

62:4. இறைவழிகாட்டுதல்கள் யாவும் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளில் உள்ளவை ஆகும். அவற்றை தன் செயல் திட்டத்தின்படி யார் அதற்கு தகுதியானவராக இருக்கிறாரோ, அவருக்கு இறக்கி அருளுகின்றான். இப்படியாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் மகத்தான அருட்கொடைகளாக உள்ளன.
இத்தகைய தலைசிறந்த வழிகாட்டுதல்களின் உண்மை நிலையை அறிந்து செயல்படுபவர்களுக்கு மட்டும் தான் பலனளிக்கும். இவ்வேதத்தின் மொழியை அறிந்து கொள்ளாமல், அழகிய பையில் வைத்து சுமந்து கொண்டும், அதன் வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது.


مَثَلُ ٱلَّذِينَ حُمِّلُوا۟ ٱلتَّوْرَىٰةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ ٱلْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًۢا ۚ بِئْسَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

62:5. இதற்குமுன் இறக்கி அருளப்பட்ட வேதமான தவ்ராத்தை சுமந்து கொண்டு திரிபவர்களும் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? கழுதையும் பல சுமைகளை சுமக்கிறது. சுமையில் உள்ளவை என்னவென்று அதற்குத் தெரியுமா? அதுபோல இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வதாக உதட்டளவில் சொல்லிக் கொண்டு அவற்றை நடைமுறைப் படுத்தாமல் பொய்யாக்குகின்ற சமூகத்தவர்களுக்கு இவ்வுதாரணம் பொருந்தும். எனவே அநியாய அக்கிரம செயல்களை செய்வோருக்கு அல்லாஹ்வின் நேர்வழி ஒருபோதும் கிடைக்காது.


قُلْ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓا۟ إِن زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَآءُ لِلَّهِ مِن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُا۟ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

62:6. உண்மை இவ்வாறிருக்க இஸ்ரவேலர்கள் தம்மை அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். எனவே அவர்கள் மட்டும் சுவனத்திற்கு உரியவர்கள் எனவும் சொல்லிக் கொள்கின்றனர். (பார்க்க 2:94) அவர்கள் தம் கூற்றில் உண்மையாளராக இருந்தால் அவர்களை மரணத்தை விரும்பி உயிரை துறந்துவிடும்படி கூறிவிடுங்கள்.


وَلَا يَتَمَنَّوْنَهُۥٓ أَبَدًۢا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّٰلِمِينَ.

62:7. அவர்கள் செய்துள்ள பாவச் செயல்களின் காரணமாக அவர்கள் ஒருபோதும் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அப்படியும் அவர்கள் உயிர் வாழ்ந்து என்ன பயன் ஏற்படப் போகிறது? அவர்கள் செய்து வரும் அநியாய செயல்கள் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போய்விடுமா?


قُلْ إِنَّ ٱلْمَوْتَ ٱلَّذِى تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُۥ مُلَٰقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

62:8. அவர்களிடம், “நீங்கள் எதைவிட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும். அதன்பின் நீங்கள் மறைவாகவும், வெளிப்படையாகவும் செய்து வந்த செயல்களின் விளைவுகள் அல்லாஹ்வின் நியதிப்படி உங்கள் முன் தோன்றும். அப்போது நீங்கள் செய்து வரும் செயல்களின் விளைவுகள் என்னவென்பதை நன்கறிவீர்கள்.
இஸ்ரவேலர்களின் இந்த பரிதாப நிலைக்கு என்ன காரணம்? அவர்கள் மார்க்கத்தை வெறும் மதச் சடங்குகளாக மாற்றிக் கொண்டதுதான். இறைவனை திருப்திப் படுத்துவதாக எண்ணி சில சம்பிரதாயங்களை கடைப்பிடித்து வருகின்றனர். இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் அவ்வாறு மார்க்கத்தை விட்டு திசை மாறிச் சென்றுவிடாதீர்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نُودِىَ لِلصَّلَوٰةِ مِن يَوْمِ ٱلْجُمُعَةِ فَٱسْعَوْا۟ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ وَذَرُوا۟ ٱلْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

62:9. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இறைவழிகாட்தலை தெளிவுப்படுத்த, கூட்டு ஸலாத்திற்காக அழைக்கப்பட்டால், நீங்கள் உங்களுடைய அலுவல்களை விட்டுவிட்டு அல்லாஹ்வின் அறிவுரைகளைப் பெற விரைந்து வாருங்கள். உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு அவை பெரிதும் உதவும் என்பதை அறிந்தால், அதற்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து வருவீர்கள்.


فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُوا۟ فِى ٱلْأَرْضِ وَٱبْتَغُوا۟ مِن فَضْلِ ٱللَّهِ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَثِيرًۭا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ.

62:10. இவ்வாறு கூட்டு ஸலாத் நிறைவு பெற்றுவிட்டால், அங்கேயே அமர்ந்து கொண்டிராதீர்கள். அவ்விடத்தை விட்டு கலைந்து சென்று, அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாழ்வாதாரங்களைப் பெற அன்றாடப் பணியைத் தொடருங்கள். நீங்கள் கூட்டு ஸலாத்தில் பெற்ற அறிவுரைகளை மக்கள் அனைவருக்கும் விரிவாக தெரியப்படுத்துங்கள். இப்படியாக அனைவரும் ஒருங்கிணைந்து இறைவழிகாட்டுதலின்படி செயல்பட்டால் உங்களுக்கு வளம் மிக்க வாழ்வு கிடைக்கும். அது ஒரு மகத்தான வெற்றியாகும் அல்லவா? .


وَإِذَا رَأَوْا۟ تِجَٰرَةً أَوْ لَهْوًا ٱنفَضُّوٓا۟ إِلَيْهَا وَتَرَكُوكَ قَآئِمًۭا ۚ قُلْ مَا عِندَ ٱللَّهِ خَيْرٌۭ مِّنَ ٱللَّهْوِ وَمِنَ ٱلتِّجَٰرَةِ ۚ وَٱللَّهُ خَيْرُ ٱلرَّٰزِقِينَ.

62:11. ஆனால் அவர்களில் பலர் இறை வழிகாட்டுதலுக்கு முக்கியத்தும் அளிக்காமல், அற்பமான வியாபாரம் மற்றும் கேளிக்கை என்று அதன் பக்கமே விரைகிறார்கள். அல்லாஹ்விடமிருந்து அருளப்படும் வழிகாட்டுதல்களோ, அந்த வியாபாரத்தைவிடவும் கேளிக்கைகளை விடவும் முக்கியம் வாய்ந்தவை என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். அவர்கள் எதிர்பார்க்கும் வாழ்வாதாரங்களை தாராளமாக அளிக்கும் வல்லமை உடையவன் தான் அல்லாஹ் என்பதை அவர்களுக்கு விளக்கவும்.