بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
64:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ.
64:1. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்துப் படைப்புகளும், அல்லாஹ் நிர்ணயித்துள்ள செயல்திட்டங்களை நிறைவேற்றவே அயராமல் செயல்பட்டு வருகின்றன. இப்படியாக அகிலங்களிலும் பூமியிலும் அவனுடைய ஆட்சியே நடைபெற்று வருகின்றது. மேலும் அவை அனைத்தும் போற்றுதலுக்குரியதாக உள்ளன. உலக படைப்புகள் அனைத்திற்கும் சட்ட வரையறைகளையும் அளவுகோல்களையும் ஏற்படுத்திய மாபெரும் வல்லவனே அல்லாஹ்.
هُوَ ٱلَّذِى خَلَقَكُمْ فَمِنكُمْ كَافِرٌۭ وَمِنكُم مُّؤْمِنٌۭ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ.
64:2. அல்லாஹ்வின் மாபெரும் படைப்புத் திட்டங்களின்படியே மனிதனும் படைக்கப்பட்டான். அல்லாஹ்வின் செயல் திட்டத்தின்படி அவனுக்கு இவ்வுலகில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களில் அல்லாஹ்வை ஏற்க மறுப்பவர்களும், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களும் உள்ளனர். (பார்க்க 18:29) ஆனால் மனிதனின் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் தான் உள்ளது. அதாவது அவரவர் செயலுக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட பலன்களும் விளைவுகளும் ஏற்பட்டே தீரும்.
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ.
64:3. எனவே அகிலங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டு இருப்பது மாயை அல்ல. அவை உயர் நோக்கங்களுடனும், ஆக்கப்பூர்வமான திட்டங்களுடனும் படைக்கப்பட்டுள்ளன. (பார்க்க 16:3-9) எனவே மனிதனுடைய படைப்பும் இதே அடிப்படையில் உருவானது. அல்லாஹ் தன் திட்டத்தின்படி உங்களை படைத்து செவ்வையாக்கி சிறப்பாக வாழ வழி செய்தான். எனவே உங்களுடைய ஒவ்வொரு செயலும் அவன் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கிறது.
يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.
64:4. எனவே அகிலங்களிலும் பூமியிலும் நடப்பவை அனைத்தும் அவனுக்கு தெரியும். வெளிப்படையாக நடைபெறுவதும் மறைமுகமாக நடைபெறுவதும் அவனுக்கு தெரியும். இத்தனை ஏன்? உங்கள் மனதில் எழும் எண்ணங்களையும் அறியக்கூடிய வல்லமைப் பெற்றவன்தான் அல்லாஹ்.
أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَبْلُ فَذَاقُوا۟ وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.
64:5. எனவே இதற்குமுன் அழிந்து போன சமுதாயங்களைப் பற்றிய செய்திகள் உங்களிடம் வரவில்லையா? அவர்கள் இறைவழிகாட்டுதலுக்கு எதிராக தீய செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் விளைவுகளை அவர்கள் சந்தித்துக் கொண்டனர். அதாவது அங்கு பேரழிவு ஏற்பட்டு நோவினைத் தரும் வேதனைகளில் சிக்கிக் கொண்டனர்.
ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَقَالُوٓا۟ أَبَشَرٌۭ يَهْدُونَنَا فَكَفَرُوا۟ وَتَوَلَّوا۟ ۚ وَّٱسْتَغْنَى ٱللَّهُ ۚ وَٱللَّهُ غَنِىٌّ حَمِيدٌۭ.
64:6. அச்சமுதாயத்தினரிடையே இறைத்தூதர்கள் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களை எடுத்துரைத்து வந்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் உண்மை நிலையை ஆராய்வதற்குப் பதிலாக, இறை இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவர் தம்மைப் போல ஒரு சாதாரண மனிதராக இருக்கிறாரே என்று கூறி அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தனர். அப்படிப்பட்ட ஒரு நபரின் அறிவுரைகளை ஏற்கமாட்டோம் எனக் கூறி வந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அச்சமுதாயத்தினருக்கே அன்றி அல்லாஹ்வுக்கு அல்ல. அவன் தன்நிறைவு பெற்றவன். மேலும் அவனுடைய செயல்திட்டங்கள் யாவும் போற்றுதலுக்கு உரியவையாக உள்ளன.
زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَن لَّن يُبْعَثُوا۟ ۚ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ۚ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ.
64:7. மேலும் இன்றைய கால கட்டத்திலும் இறை நிராகரிப்பவர்கள் தங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற மிதப்பில் இருக்கிறார்கள். எனவே என்றென்றும் இத்தகைய தீய செயல்களை தொடர்ந்து செய்து கொள்ளலாம் என்ற கற்பனையில் இருக்கின்றனர். நபியே அவர்களிடம்,“அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்பட்டு வரும் விளைவுகளோ, உங்களுடைய கற்பனைகளுக்கு எதிராகவே இருக்கும். எனவே நீங்கள் செய்து வரும் தவறான செயல்களின் விளைவுகள் உங்கள்முன் தோன்ற ஆரம்பிக்கும். அப்போது அதைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இப்படியொரு விளைவுகளை ஏற்படுத்துவதில் அல்லாஹ்வுக்கு எந்த சிரமும் இருப்பதில்லை” எனறு தெரியப்படுத்துங்கள்.
فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلنُّورِ ٱلَّذِىٓ أَنزَلْنَا ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ.
64:8. ஆகவே நீங்கள் அவ்வாறு கண்மூடித்தனமாக செயல்படாதீர்கள். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் மூலமாக இறக்கி அருளப்படுகின்ற ஒளிமிக்க வழிகாட்டுதலையும் தீர ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மனதில் பதிய வைத்து செயல்படுங்கள்.
يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ ٱلْجَمْعِ ۖ ذَٰلِكَ يَوْمُ ٱلتَّغَابُنِ ۗ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ وَيَعْمَلْ صَٰلِحًۭا يُكَفِّرْ عَنْهُ سَيِّـَٔاتِهِۦ وَيُدْخِلْهُ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.
64:9. நீங்கள் இவ்வாறு செயல்பட முன்வரவில்லை என்றால் இறுதியில் நீங்கள் களத்தில்தான் சந்திக்க வேண்டி வரும். அப்போது யார் பெருத்த நஷ்டத்தில் இருக்கப் போகிறார்கள் என்ற உண்மை தெரிந்துவிடும். அப்போது யாரிடத்தில் எந்த குறை இருந்தது என்ற உண்மையும் தெரிந்துவிடும். யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கபூர்வமான நலத் திட்டங்களைத் தீட்டி அதற்காக உழைக்கிறார்களோ, அவர்களிடையே இருந்து வந்த தீய பழக்க வழக்கங்கள் நீங்கி, அவர்கள் வாழும் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். மேலும் அங்கு பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவநதியாக செழித்துவரும். அதில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். இப்படியொரு வாழ்வு கிடைப்பது மாபெரும் பாக்கியமாகும் அல்லவா?
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ خَٰلِدِينَ فِيهَا ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.
64:10. இதற்கு மாறாக யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கை வேதனை மிக்கதாய் ஆகிவிடும். அவர்களுடைய வேதனைகள் குறைய எந்த வாய்ப்பும் இராது. இப்படியாக அவர்கள் வாழும் இடம் மிகவும் மோசமான இடமாக இருக்கும்.
مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۗ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ يَهْدِ قَلْبَهُۥ ۚ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.
64:11. இப்படியாக மனிதனுக்கு ஏற்படும் துயரம்மிக்க நிகழ்வுகள் யாவும் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படி அவரவர் செய்து வரும் தீய செயல்களின் விளைவாகவே ஆகும். (பார்க்க 4:79) எனவே யார் அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளை ஆராய்ந்து ஏற்று நடக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்கள் தெளிவு பெறுகின்றன. மேலும் அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வழி என்ன என்பதை கண்டறிவார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் உள்ளன.
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ.
64:12. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன்படி ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சியமைப்பு சட்டங்களையும் பின்பற்றி வாழுங்கள். இவ்விரண்டில் எதை புறக்கணித்தாலும், உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு உத்தரவாதம் கிடைக்காது. உங்களுக்கு ஏற்படுகின்ற அழிவிற்கு நீங்கள் தாம் பொறுப்பு ஆவீர்கள். இவ்விஷயத்தை தெளிவாக எடுத்துரைப்பதே இறைத்தூதரின் பணியாகும்.
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ.
64:13. நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு மாற்றமாக செயல்பட்டு ஒருபோதும் நிம்மதியாக வாழவே முடியாது. காரணம் அகிலங்களும் பூமியும் அவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன. அவனைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் செயல்படுவதில்லை. எனவே இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன்படி உருவாகும் ஆட்சியமைப்பு சட்டங்களிலும் முழுமையான நம்பிக்கை வைத்து செயல்பட்டு வரவேண்டும்.
இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு திட்டங்கள் சிறப்பாக செயல்பட நீங்கள் அயராது உழைக்க வேண்டி இருக்கும். தாம் உழைத்து ஈட்டிக் கொள்கின்ற செல்வங்களையும் தம் தேவைக்குப் போக மிகுதியானவற்றை இதற்காக அர்ப்பணிக்க வேண்டிவரும். (பார்க்க 2:219) இதற்கு உங்கள் மனைவி மக்களின் ஒத்துழைப்பும் தேவைப்படும்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ مِنْ أَزْوَٰجِكُمْ وَأَوْلَٰدِكُمْ عَدُوًّۭا لَّكُمْ فَٱحْذَرُوهُمْ ۚ وَإِن تَعْفُوا۟ وَتَصْفَحُوا۟ وَتَغْفِرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ.
64:14. அவ்வாறு அவர்களுடைய ஆதரவு கிடைக்காவிட்டால், உங்களிடையே பகைமை வளர்ந்துவிடும். எனவே இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். அப்படியும் எதிர்ப்புகள் வலுத்தால் அதைப் பெரிது படுத்தாமல் அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு, நீங்கள் பொதுமக்களின் துயர் துடைப்பு பணியில் கவனம் செலுத்தி வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பிலிருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான வாழ்வு கிடைக்க வழிகள் பிறக்கும். அதில் உங்களுக்கு பாதுகாப்பான வாழ்வும் மனநிறைவும் கிடைக்கும் என்பதை எடுத்துரையுங்கள்.
إِنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَٰدُكُمْ فِتْنَةٌۭ ۚ وَٱللَّهُ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌۭ.
64:15. இப்படியாக நீங்கள் ஈட்டி வந்த செல்வங்களும், மனைவி மக்களும் உங்களுக்கு பெரும் சோதனையாக வரலாம். ஆனால் இவற்றை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, அல்லாஹ்வின் அறிவுரைப்படி செயல்பட்டு வந்தால் மகத்தான பலன்கள் கிடைப்பது உறுதி.
فَٱتَّقُوا۟ ٱللَّهَ مَا ٱسْتَطَعْتُمْ وَٱسْمَعُوا۟ وَأَطِيعُوا۟ وَأَنفِقُوا۟ خَيْرًۭا لِّأَنفُسِكُمْ ۗ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِۦ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.
64:16. எனவே உங்களால் முடிந்த அளவுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அறிவுரைகளை செவிதாழ்த்தி கேளுங்கள். அவற்றின்படி செயல்படுங்கள். அவன் காட்டும் வழியில் சமுதாய நலனுக்காக செலவு செய்யுங்கள். இவ்வாறு செயல்பட்டு வந்தால் உங்களுக்கே மேலான நன்மைகள் கிடைத்து வரும். ஆக எவர் தாராள மனப்பான்மையுடன் அயராது உழைக்கிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவர்.
إِن تُقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا يُضَٰعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَٱللَّهُ شَكُورٌ حَلِيمٌ.
64:17. அல்லாஹ்வின் அறிவுரைப்படி பொது மக்களின் நல்வாழ்விற்காக நீங்கள் அளிக்கும் செல்வங்கள் யாவும் கடனாகத் தான் கருதப்படும். அவற்றின் பலன்கள் பன்மடங்காகப் பெருகி உங்களுக்கே திரும்ப வந்து சேர்ந்துவிடும். (பார்க்க 27:11-12) மேலும் உங்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்க வழிகள் பிறக்கும். இவ்வாறு நன்றி விசுவாசத்துடன் நடப்பவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து நீண்ட காலப் பலன்கள் கிடைத்துவரும்.
عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.
64:18. அல்லாஹ்வின் வல்லமையோ எல்லையற்றதாக உள்ளது. மறைவான விஷயங்களும் வெளிப்படையாக நடைபெறுவதும் அவனுக்கு தெரியாமல் போவதில்லை. அந்த அளவுக்கு அனைத்தையும் கட்டுப்படுத்தும் அளவிலா வல்லமையும், ஒவ்வொரு செயல்திட்டமும் முழுமையான ஞானத்தின் அடிப்படையிலும் உள்ளன.
எனவே அவனுடைய அறிவுரைகளின் படி சமுதாய மேம்பாட்டிற்காக செலவிடுங்கள்.