بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

61:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


سَبَّحَ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

61:1. அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும், அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்ற முழுவேகத்துடன் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையையும், அவனுடைய செயல்திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலானவை என்பதற்கும் சாட்சியாக விளங்குகின்றன.
இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உலகிலுள்ள அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி மிகச் சரியாக செயல்படுவதால், அவை அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. அவற்றில் எதுவும் செயல்படாமல் இருப்பதில்லை. ஆனால்


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ.

61:2. நீங்களோ ஆட்சிப் பொறுப்பை வகித்துக் கொண்டு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறீர்கள். நீங்கள் செய்ய முடியாதவற்றை ஏன் சொல்கிறீர்கள்?


كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ أَن تَقُولُوا۟ مَا لَا تَفْعَلُونَ.

61:3. நீங்கள் செய்ய முடியாதவற்றை செய்வதாக கூறுவது அல்லாஹ்வின் சட்டப்படி மிகவும் வெறுப்புக்குரிய விஷயமாகும்.
இந்த அறிவுரை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அதிகார பொறுப்பில் இருப்பவர்களுக்கும், பொது மக்களுக்கும் பொருந்தும். அப்போதுதான் மற்றவர்களின் மதிப்பையும், மரியாதையையும், அபிமானத்தையும் பெற முடியும். பிறருடைய வெறுப்புக்கும் ஆளாக மாட்டீர்கள்.


إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلَّذِينَ يُقَٰتِلُونَ فِى سَبِيلِهِۦ صَفًّۭا كَأَنَّهُم بُنْيَٰنٌۭ مَّرْصُوصٌۭ.

61:4. எனவே வெற்றுப் பேச்சை பேசி வருபவர்களை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. மாறாக அல்லாஹ்வின் பாதையில் யார் தம்மை அர்ப்பணித்து, தேவை ஏற்படும்போது, போரிலும் கலந்து, ஈயத்தால் வார்க்கப்பட்ட கட்டடத்தைப் போல் உறுதியுடன் அணிவகுத்து நின்று போரிடுகிறார்களோ, அவர்களே அல்லாஹ்வின் நேசத்திற்கு உரியவர்கள் ஆவர்.
இதற்குமுன் வந்த இறைத் தூதர்களிடத்திலும் அவருடைய சமூகத்தார் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அவர்களுடைய கட்டளையை தட்டிக் கழிக்கவே முயன்றார்கள். குறிப்பாக


`

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَٰقَوْمِ لِمَ تُؤْذُونَنِى وَقَد تَّعْلَمُونَ أَنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ ۖ فَلَمَّا زَاغُوٓا۟ أَزَاغَ ٱللَّهُ قُلُوبَهُمْ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ.

61:5. மூஸா நபியும் தம் சமூகத்தாரை நோக்கி, “நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களிடம் அனுப்பப்பட்ட தூதனே ஆவேன். ஆகவே நீங்கள் இறைவனின் அறிவுரைகளைப் பொருட்படுத்தாமல் அவற்றை தட்டிக் கழித்து ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கேட்டார்.
நபியே! அவர்களைப் போலவே இவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நேர்வழியிலிருந்து சருகியபோது, அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய உள்ளங்கள் சருகிவிட்டன. இப்படியாக அவர்கள் நேர்வழியை விட்டுவிட்டு தவறான பாதையில் சென்று விட்டார்கள். இத்தகையவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவதில்லை.


وَإِذْ قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُم مُّصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَمُبَشِّرًۢا بِرَسُولٍۢ يَأْتِى مِنۢ بَعْدِى ٱسْمُهُۥٓ أَحْمَدُ ۖ فَلَمَّا جَآءَهُم بِٱلْبَيِّنَٰتِ قَالُوا۟ هَٰذَا سِحْرٌۭ مُّبِينٌۭ.

61:6. அதேபோல் மர்யமின் குமாரர் ஈஸா நபியும் தம் சமூகத்தாராகிய இஸ்ரவேலர்களிடம், “நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதன் ஆவேன். உங்களிடம் உள்ள இறைவேதமாகிய தவ்ராத்தை நடைமுறைப்படுத்திக் காட்டவே வந்துள்ளேன். அதுமட்டுமின்றி எனக்குப் பின்பும் “அஹ்மது” என்னும் பெயருடைய இறைத்தூதர் வருவார் என்ற நன்மாறாயமும் கூறவே வந்துள்ளேன்” என்று கூறினார். இப்படியாக அவர்களுக்கு தெளிவான ஆதாரங்களை எடுத்துரைத்தும், அவை மக்களை ஏமாற்றும் வெற்றுப் பேச்சே என்று கூறி அவற்றைத் தட்டிக் கழித்தனர்.


وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُوَ يُدْعَىٰٓ إِلَى ٱلْإِسْلَٰمِ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

61:7. இப்படியாக ஒட்டுமொத்த மக்களின் நலனைப் பேணிக் காக்கும் இஸ்லாமிய ஆட்சியைக் கட்டிக்காக்க அழைப்பு விடுத்த பின்பும், எவர் அதை நிராகரித்து அல்லாஹ் அறிவிக்காததை எல்லாம் அறிவிப்பதாக இட்டுக்கட்டி கூறுகின்றானோ, அவனைவிட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும்? மேலும் இப்படி அநியாயமாக நடப்பவர்களை அல்லாஹ் ஒருபோதும் நேர்வழியில் செலுத்துவதில்லை.


يُرِيدُونَ لِيُطْفِـُٔوا۟ نُورَ ٱللَّهِ بِأَفْوَٰهِهِمْ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوْ كَرِهَ ٱلْكَٰفِرُونَ.

61:8. உலக மக்களின் ஒளிமயமான வாழ்விற்காக நேர்வழியினைக் காட்டும் கலங்கரை விளக்காக இருக்கும் குர்ஆனின் அறிவுரைகளை ஊதி அணைத்து விடலாம் என்ற கற்பனையில் இருக்கிறார்கள். இத்தகைய வழிகாட்டுதல்கள் இறை நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பையே தந்தாலும், அல்லாஹ்வின் செயல்திட்டம் நிறைவேறியே தீரும்.


هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُشْرِكُونَ.

61:9. அதேபோல் மனம் போனபோக்கில் வாழும் முஷ்ரிக்குகளுக்கும் இந்த மார்க்கம் வெறுப்பையே தரக்கூடியதாக இருந்தாலும், உலகில் உள்ள எல்லா வழிமுறைகளையும் விட தலைசிறந்த மார்க்கம் இஸ்லாமே என்பதை உலக அரங்கில் நிலைநாட்டவே, அல்லாஹ் தன் தூதர் மூலமாக ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களுடன் கூடிய மார்க்கத்தை அறிவிக்கின்றான். (மேலும் பார்க்க 9:36)


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَٰرَةٍۢ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍۢ.

61:10. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உலக மக்கள் அனைவரின் துயரங்களிலிருந்து விடுபட தலைசிறந்த வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?


تُؤْمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

61:11. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று, அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு திட்டங்களையும் ஏற்று செயல்பட முன்வர வேண்டும். இறைவன் அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற தங்களாலான பொருளுதவிகளை செய்வதோடு அவற்றிற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அப்படி செயல்படும் சமுதாயமே எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபடும். நீங்கள் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, இவையே சரியான பாதை என்று எண்ணினால் அதை உடனே ஏற்று செயல்பட முன்வாருங்கள். (பார்க்க 9:111)


يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَمَسَٰكِنَ طَيِّبَةًۭ فِى جَنَّٰتِ عَدْنٍۢ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.

61:12. இவ்வாறு செயல்பட்டு வந்தால் நீங்கள் ஏற்கனவே செய்து வந்த தவறான செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட்டு, பாதுகாப்பாக இருக்க வழிகள் பிறக்கும். மேலும் அங்கு பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவநதியாய் நிலைத்திருக்கும். அது மட்டுமின்றி அந்த சமுதாயம் சுவனத்து சோலையாகவும் மாறி, மணம் பொருந்திய நாடாக விளங்கும். இப்படியாக காலப் போக்கில் நீங்கள் வாழும் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். இப்படியொரு சமுதாயத்தை உருவாக்குவது பெரும் பாக்கியமாகும் அல்லவா?


وَأُخْرَىٰ تُحِبُّونَهَا ۖ نَصْرٌۭ مِّنَ ٱللَّهِ وَفَتْحٌۭ قَرِيبٌۭ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ.

61:13. அதுமட்டுமின்றி நீங்கள் விரும்பக் கூடிய மற்றொன்றும் உண்டு. இத்தகைய தலைச்சிறந்த சமுதாய அமைப்பு, அரபு நாட்டில் மட்டுமின்றி இதர நாடுகளிலும் உருவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள். (பார்க்க 33:27) இதற்காகவும் அல்லாஹ்வின் உதவியும் கிடைத்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். இந்த நற்செய்தியை ஈமான் கொண்ட செயல் வீரர்களுக்கு தெரியப்படுத்தி விடுங்கள்.
இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இது எப்படி சாத்தியமாகும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். மர்யமின் குமாரர் ஈஸா நபியின் அழைப்பை மனதார ஏற்று இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி வந்த செயல்வீரர்கள், எவ்வாறு அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற தம்மை அர்ப்பணிக்க முன் வந்தார்களோ (பார்க்க 3:52) அவ்வாறே நீங்களும் முன்வரவேண்டும்.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوٓا۟ أَنصَارَ ٱللَّهِ كَمَا قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّۦنَ مَنْ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِ ۖ قَالَ ٱلْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ ٱللَّهِ ۖ فَـَٔامَنَت طَّآئِفَةٌۭ مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَكَفَرَت طَّآئِفَةٌۭ ۖ فَأَيَّدْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ عَلَىٰ عَدُوِّهِمْ فَأَصْبَحُوا۟ ظَٰهِرِينَ.

61:14. ஈஸா நபி தன் சமூகத்தாரை நோக்கி, “அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணிக்க முன்வருபவர்கள் யார்?” என்று அறிவித்த போது, அவரை மனதார ஏற்று வந்த செயல் வீரர்கள்,“நாங்கள் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற உதவி புரிவோம்” என்று முன் வந்தார்கள். அவர்களைப் போல் நீங்களும் உதவி செய்ய முன்வாருங்கள். எனினும் அப்போது இஸ்ரவேலர்களில் சிலர் ஈமான் கொண்டனர். மற்றும் பலர் அவருடைய அழைப்பை ஏற்க மறுத்தனர். எனவே இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி வந்தது. அதனால் அவர்கள் பகைவர்களை முறியடித்து மாபெரும் வெற்றியும் பெற்றார்கள்..