بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

60:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ عَدُوِّى وَعَدُوَّكُمْ أَوْلِيَآءَ تُلْقُونَ إِلَيْهِم بِٱلْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا۟ بِمَا جَآءَكُم مِّنَ ٱلْحَقِّ يُخْرِجُونَ ٱلرَّسُولَ وَإِيَّاكُمْ ۙ أَن تُؤْمِنُوا۟ بِٱللَّهِ رَبِّكُمْ إِن كُنتُمْ خَرَجْتُمْ جِهَٰدًۭا فِى سَبِيلِى وَٱبْتِغَآءَ مَرْضَاتِى ۚ تُسِرُّونَ إِلَيْهِم بِٱلْمَوَدَّةِ وَأَنَا۠ أَعْلَمُ بِمَآ أَخْفَيْتُمْ وَمَآ أَعْلَنتُمْ ۚ وَمَن يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ.

60:1. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு எதிராக செயல்படுபவர்கள், உங்களுக்கும் பகைவர்கள் ஆவார்கள். எனவே அத்தகையவர்களிடம் ஆழ்ந்த நட்புறவை வைத்துக் கொள்ளாதீர்கள். (பார்க்க 3:118) நீங்கள் இறை வழிகாட்டுதலின்படி உருவான ஆட்சியமைப்புக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். காரணம் இதுவே சரியான பாதை என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால் அவர்களோ இதற்கு எதிராக சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அத்தகையவர்களுடன் கொள்ளும் நட்புறவின் பிரியத்தால் ஆட்சியமைப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம்.
மேலும் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதர் மீதும் நம்பிக்கை கொண்டவர்களை ஊரைவிட்டு வெளியேற்றியவர்கள். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, அவனுடைய பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள நீங்கள் புறப்பட்டபோது, அவர்கள் உங்களைத் தடுத்தவர்கள். எனவே அத்தகையவர்களிடம் நீங்கள் நட்புறவு கொள்வதால் உங்களுடைய இரகசிய திட்டங்களை வாய் தவறியும் அவர்களிடம் சொல்லிவிட நேரிடும். எனவேதான் இந்த முன்னெச்சரிக்கை.
நீங்கள் உங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதும், அவற்றை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதையும் மீறி யாராவது அத்தகைய சமூக விரோதிகளிடம் நட்புறவை வைத்துக் கொண்டால் அவர்களும் வழிதவறிச் சென்றவர்களின் பட்டியலில் இடம்பெறுவர்.


إِن يَثْقَفُوكُمْ يَكُونُوا۟ لَكُمْ أَعْدَآءًۭ وَيَبْسُطُوٓا۟ إِلَيْكُمْ أَيْدِيَهُمْ وَأَلْسِنَتَهُم بِٱلسُّوٓءِ وَوَدُّوا۟ لَوْ تَكْفُرُونَ.

60:2. உங்களை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தால், அப்போது அவர்களுடைய உண்மை நிலை என்னவென்பதை அறிந்து இருப்பீர்கள். உங்கள் மீதுள்ள விரோதத்தின் காரணமாக அவர்கள் உங்களை பல வகையில் துன்புறுத்துவதோடு, உங்கள் மீதுள்ள கடுப்பையும் தகாத வார்த்தைகளால் வெளிப்படுத்தி இருப்பார்கள். அந்த அளவுக்கு நயவஞ்சகத்தனம். நீங்கள் எப்படியாவது அவர்களோடு இணைந்துவிட வேண்டும் என்பதிலேயே அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.


لَن تَنفَعَكُمْ أَرْحَامُكُمْ وَلَآ أَوْلَٰدُكُمْ ۚ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يَفْصِلُ بَيْنَكُمْ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ.

60:3. அத்தகையவர்களுள் உங்கள் உறவினர்களாகவும் இருக்கலாம். உங்கள் பிள்ளைகளும், தாய் தந்தையராகவும் இருக்கலாம். ஆனால் இறைவழிகாட்டுதலின்படி ஆட்சி நடைபெறும் கால கட்டத்தில் இந்த உறவுமுறைக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. உங்களுடைய செயல்களுக்கு ஏற்ற வகையில் தான் பலன்கள் கிடைக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் இல்லாமல் இல்லை என்பதை மறவாதீர்.
அல்லாஹ்வின் அறிவுரைகள் உங்களுக்கு கசப்பாக இருக்கின்றதா? வரலாற்று ஆதாரங்களே இதற்கு சாட்சியாக இருக்கின்றன. குறிப்பாக இப்றாஹீம் நபி மார்க்க உண்மைகளை எடுத்துரைத்த போது அவருடைய தந்தையும் உறவினர்களும் அவ்வூர் மக்களும் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். (பார்க்க 19:46, 21:68) எனவே


قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌۭ فِىٓ إِبْرَٰهِيمَ وَٱلَّذِينَ مَعَهُۥٓ إِذْ قَالُوا۟ لِقَوْمِهِمْ إِنَّا بُرَءَٰٓؤُا۟ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ ٱلْعَدَٰوَةُ وَٱلْبَغْضَآءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا۟ بِٱللَّهِ وَحْدَهُۥٓ إِلَّا قَوْلَ إِبْرَٰهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَآ أَمْلِكُ لَكَ مِنَ ٱللَّهِ مِن شَىْءٍۢ ۖ رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ.

60:4. இப்றாஹீம் நபியும், அவருக்குத் துணை புரிந்தவர்களும் எவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டனர் என்பதைக் கவனித்துப் பாருங்கள். அவர்களுடைய வரலாற்று உண்மைகள் உங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும். அவர் பலமுறை தம் தந்தையிடமும் மக்களிடமும் மார்க்க உண்மைகளை எடுத்துரைத்தார். இருந்தும் அவர்கள் இவருடைய அறிவுரைக்கு செவி சாய்க்கவில்லை. எனவே அவர்களை விட்டும், அவர்கள் வணங்கி வருபவற்றை விட்டும் விலகிக் கொள்வதாக அவர் அறிவிப்பு செய்தார். அவர்கள் கடைப்பிடித்து வரும் வழிமுறைகளை முற்றிலும் நிராகரித்து விடுவதாகவும் அறிவித்து விட்டார்.
ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மட்டும் பின்பற்ற முடிவெடுத்ததினால் தமக்கும் அவர்களுக்கும் இடையே தீராப் பிரச்சனையும் வெறுப்பும் ஏற்பட்டு இருப்பதைக் கண்டார். எனவே அவர் தன் தந்தையை நோக்கி, “அல்லாஹ்வின் நியதிப்படி உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற வேதனையிலிருந்து காப்பாற்ற என்னால் ஒருபோதும் முடியாது. உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்காகத் தான் நான் அல்லாஹ்வின் அறிவுரைகளை எடுத்துரைத்தேன். இதைத் தவிர வேறு எதையும் என்னால் செய்ய இயலவில்லை” என்று கூறி விட்டார். இதுவே இப்றாஹீம் நபியின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பாகும். இதில் உங்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. மேலும் அவர், “எங்கள் இறைவா! நாங்கள் உன்னையே முற்றிலும் சார்ந்திருக்க விரும்புகிறோம். வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் உன் வழிகாட்டுதலையே நோக்குகிறோம். ஏனெனில் நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நீ நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றது” என்று தம் எண்ணங்களை இறைவன் முன் சமர்ப்பித்தார்.
சிந்தனையாளர்களே! தாய் தந்தையர் மற்றும் இரத்த பந்தம் என்ற அடிப்படையில் உருவாகும் உறவுமுறையை முற்றிலுமாக தூக்கி எறிய சொல்லப்படுவதில்லை. ஆனால் கொள்கை கோட்பா


رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةًۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ وَٱغْفِرْ لَنَا رَبَّنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

60:5. “எங்கள் இறைவா! உனக்கு எதிராக செயல்படும் உறவினர்களிடையே உள்ள பாசப்பிணைப்புக்கும் மார்க்கத்திற்கும் இடையே எங்களை சோதனைக்குள் ஆக்கிவிடாதே. எங்கள் இறைவா! எங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு உன்னிடமே உதவியை நாடுகிறோம். நீ காட்டும் வழிகாட்டுதல்களே யாவற்றையும் மிகைத்தவையாகவும் ஞானம் மிக்கதாகவும் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்” என்பதாக அவர்களுடைய எண்ணங்களும் செயல்களும் இருந்தன.


لَقَدْ كَانَ لَكُمْ فِيهِمْ أُسْوَةٌ حَسَنَةٌۭ لِّمَن كَانَ يَرْجُوا۟ ٱللَّهَ وَٱلْيَوْمَ ٱلْءَاخِرَ ۚ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ.

60:6. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற இறைச் சட்டங்களையும் ஏற்றுக்கொண்டது உண்மை என்றால், நீங்கள் மேற்சொன்ன அடிப்படையில் தான் ஈமான் கொள்ளவேண்டும். எவர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் வெறும் உதட்டளவில் ஈமான் கொண்டு அலட்சியமாக இருக்கிறாரோ, அவருக்கு பேரிழப்புதான் மிஞ்சும். அல்லாஹ்வோ எவ்வித தேவையுமற்றவனாக இருக்கிறான். அவனுடைய செயல்திட்டங்கள் யாவும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவையாக உள்ளன.


۞ عَسَى ٱللَّهُ أَن يَجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ ٱلَّذِينَ عَادَيْتُم مِّنْهُم مَّوَدَّةًۭ ۚ وَٱللَّهُ قَدِيرٌۭ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

60:7. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! உங்களை எதிர்த்து நிற்பவர்களுள் பலருக்கு உண்மை தெரியாமல் பகைவர்களாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கும் உண்மை புரிந்ததும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு உங்களோடு உளமார இணைந்துகொள்ள நேரும். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே பாசப்பிணைப்பு ஏற்படும். அது வரையில் நிதானத்துடன் செயல்படுங்கள். இத்தகைய பாசப்பிணைப்பை ஏற்படுத்தும் வல்லமைப் பெற்றவன் தான் அல்லாஹ். அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதியே இருக்கின்றன. இது அல்லாஹ்வின் மாபெரும் இரக்கக் குணநலமாகும்.


لَّا يَنْهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمْ يُقَٰتِلُوكُمْ فِى ٱلدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَٰرِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوٓا۟ إِلَيْهِمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ.

60:8. மேலும் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மக்களுள் பலர் மார்க்கத்திற்கு எதிராக போரிடவுமில்லை. உங்களை ஊரைவிட்டு துரத்திய விஷயத்தில் அவர்களின் பங்கு எதுவும் இருந்ததில்லை. இத்தகைய மக்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி வழங்குவதையும் அல்லாஹ்வின் சட்டம் எந்த தடையும் விதிப்பதில்லை. நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம். நீதியும் வழங்கலாம். நீதமாக நடப்பவர்களுக்குத் தான் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


إِنَّمَا يَنْهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ قَٰتَلُوكُمْ فِى ٱلدِّينِ وَأَخْرَجُوكُم مِّن دِيَٰرِكُمْ وَظَٰهَرُوا۟ عَلَىٰٓ إِخْرَاجِكُمْ أَن تَوَلَّوْهُمْ ۚ وَمَن يَتَوَلَّهُمْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.

60:9. ஆனால் அவர்களில் சிலர் மார்க்கத்திற்கு எதிராக உங்களை எதிர்த்து போரிட்டும், உங்களை ஊரைவிட்டு துரத்தியும் இருக்கிறார்கள். உங்களை ஊரைவிட்டு வெளியேற்ற உதவி செய்தவர்களும் இருக்கிறார்கள். அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக்கொள்வதையே அல்லாஹ்வின் சட்டம் தடை விதிக்கிறது. இதையும் மீறி அத்தகையவர்களிடம் நேசர்களாக யார் இருக்கிறார்களோ அவர்கள் தாம் அநியாயக்காரர்கள் ஆவர்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا جَآءَكُمُ ٱلْمُؤْمِنَٰتُ مُهَٰجِرَٰتٍۢ فَٱمْتَحِنُوهُنَّ ۖ ٱللَّهُ أَعْلَمُ بِإِيمَٰنِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَٰتٍۢ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى ٱلْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّۭ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَءَاتُوهُم مَّآ أَنفَقُوا۟ ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَآ ءَاتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا۟ بِعِصَمِ ٱلْكَوَافِرِ وَسْـَٔلُوا۟ مَآ أَنفَقْتُمْ وَلْيَسْـَٔلُوا۟ مَآ أَنفَقُوا۟ ۚ ذَٰلِكُمْ حُكْمُ ٱللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.

60:10. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு மக்கள் நலப்பணியில் பங்கெடுப்பதற்காக தம் ஊரைவிட்டு ஹிஜ்ரத் செய்து வந்த பெண்களை நீங்கள் நன்றாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவர்கள் யார்? எந்த ஊர்? எதற்காக வந்துள்ளார்கள் என்பது போன்ற விஷயங்களை அறிந்த பின்னரே அவர்களை உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய உள்ளங்களில் எந்த அளவுக்கு மார்க்க ஈடுபாடு ஏற்பட்டுள்ளது என்ற விஷயம் அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே அவர்கள் உண்மையான மூஃமின்கள் என்று அறிந்தால், அவர்களை இறை நிராகரிப்பவர்களிடம் திருப்பி அனுப்பிவிட வேண்டாம். அவர்கள் இந்தப் பெண்மணிகளை தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே இவர்கள் அத்தகைய ஆண்களுடன் இருப்பது சரியாகாது. இவர்களாலும் அவர்களோடு இருக்கவும் முடியாது. மேலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயணச் செலவுகளை அவர்களுக்கு கொடுத்து விடுங்கள். மேலும் அவர்களை விவாகம் செய்ய நாடினால் அவர்களுக்குரிய வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்து அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதில் குற்றமேதுமில்லை.
மேலும் மார்க்க உண்மைகளை ஏற்காத மனைவிகளோடு நீங்கள் கட்டாயமாக வாழ்ந்தே ஆகவேண்டும் என்பதும் கிடையாது. எனவே இறைநிராகரிக்கும் பெண்கள் மணவிலக்கைப் பெற நாடினால் அவர்களை விவாகரத்து செய்துவிடலாம். அவர்களிடமிருந்து நஷ்ட ஈட்டையும் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும். உங்களிடையே நியாயமான தீர்ப்பையே அவனுடைய வழிகாட்டுதல் வழங்குகிறது. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களே அனைத்து விஷயங்களையும் சூழ்ந்தறியும் வல்லமையும், ஞானமும் மிக்கவையாகவும் உள்ளன.


وَإِن فَاتَكُمْ شَىْءٌۭ مِّنْ أَزْوَٰجِكُمْ إِلَى ٱلْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَـَٔاتُوا۟ ٱلَّذِينَ ذَهَبَتْ أَزْوَٰجُهُم مِّثْلَ مَآ أَنفَقُوا۟ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ أَنتُم بِهِۦ مُؤْمِنُونَ.

60:11. உங்களில் சிலருடைய மனைவியர் இறை நிராகரிப்பவர்களின் இல்லங்களில் சிக்கி இருந்து, அவர்களை விடுவிக்க குறிப்பிட்ட தொகையை விதித்தால் அதற்குத் தக்க ஏற்பாடு செய்யுங்கள். வசதிக் குறைவாக இருந்து அத்தொகையை முழுமையாக கொடுக்க முடியாமல் போனால், வசதி பெற்றதும் மீதியைக் கொடுத்து அவளை மீட்டி அவளுடைய கணவனுடன் இணைந்து வாழ வழிசெய்யுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை உண்மையிலேயே ஏற்றுக் கொண்டதாக இருந்தால் இத்தகைய நற்காரியங்களை செய்து வாருங்கள்.


يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِذَا جَآءَكَ ٱلْمُؤْمِنَٰتُ يُبَايِعْنَكَ عَلَىٰٓ أَن لَّا يُشْرِكْنَ بِٱللَّهِ شَيْـًۭٔا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَٰدَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَٰنٍۢ يَفْتَرِينَهُۥ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِى مَعْرُوفٍۢ ۙ فَبَايِعْهُنَّ وَٱسْتَغْفِرْ لَهُنَّ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

60:12. இறைவழிகாட்டுதலின் படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! இறைவழிகாட்டுதலை ஏற்று மக்கள் நலப்பணியில் ஈடுபட உம்மிடம் அனுமதி கேட்டுவரும் பெண்களிடம் உறுதி மொழி வாங்கிய பின்னரே பணியில் அமர்த்திக் கொள்ளுங்கள். அந்த உறுதிமொழி யாதெனில் அல்லாஹ்வுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையும் அவர்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள். பிறருடைய பொருளை அவர்கள் கையாடல் செய்ய மாட்டார்கள். அன்னிய ஆடவர்களுடன் கள்ள உறவை வைத்துக் கொள்ள மாட்டார்கள். தங்கள் பிள்ளைகளை கொல்ல மாட்டார்கள். (பார்க்க 81:8) அவர்களோடு பணி புரிபவர்களைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டே, அவர்களுக்கு எதிராக தாமே கற்பனை செய்து பழிசுமத்த மாட்டார்கள். நன்மையான காரியத்தில் ஈடுபட்டு வருவதோடு, அரசுக்கு எதிராக எந்த செயலும் செய்ய மாட்டார்கள். இத்தகைய உறுதிமொழி எடுத்த பின்பே அவர்களை பணியில் அமர்த்துங்கள். மேலும் அவர்களுக்காக ஆட்சியமைப்பு மூலமாக பாதுகாப்பான வாழ்விற்கு வழிசெய்யுங்கள். அல்லாஹ்வின் ஆட்சி அத்தகையவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு அளிப்பதோடு அவர்களை இரக்கத்தோடும் அணுகும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَوَلَّوْا۟ قَوْمًا غَضِبَ ٱللَّهُ عَلَيْهِمْ قَدْ يَئِسُوا۟ مِنَ ٱلْءَاخِرَةِ كَمَا يَئِسَ ٱلْكُفَّارُ مِنْ أَصْحَٰبِ ٱلْقُبُورِ.

60:13. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு எதிராக செயல்படுபவர்களைப் பற்றிய கட்டளை வந்து விட்டது. இனி யாரும் அத்தகைய சமூக விரோதிகளுடன் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். காரணம் மண்ணோடு மண்ணாக நடைபிணங்களைப் போல் வாழ்பவர்களும் இவர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.
அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதன் அர்த்தமே, “மனித செயல்களின் இறுதி விளைவுகள்” என்ற சட்டத்தையும் ஏற்று, அதன்படி முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதே ஆகும். ஆனால் இறைநிராகரிப்பவர்களோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக வாழ்பவர்கள். அத்தகையவர்களுடன் நட்புறவு எந்த வகையில் உச்சிதமாகும்?