بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

59:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


سَبَّحَ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

59:1. அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்ற முழுவேகத்துடன் செயல்படுகின்றன. இப்படியாக அவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையையும், அவனுடைய செயல்திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தில் அடிப்படையிலானவை என்பதற்கும் அவை சான்றுகளாக விளங்குகின்றன.


هُوَ ٱلَّذِىٓ أَخْرَجَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ مِن دِيَٰرِهِمْ لِأَوَّلِ ٱلْحَشْرِ ۚ مَا ظَنَنتُمْ أَن يَخْرُجُوا۟ ۖ وَظَنُّوٓا۟ أَنَّهُم مَّانِعَتُهُمْ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا۟ ۖ وَقَذَفَ فِى قُلُوبِهِمُ ٱلرُّعْبَ ۚ يُخْرِبُونَ بُيُوتَهُم بِأَيْدِيهِمْ وَأَيْدِى ٱلْمُؤْمِنِينَ فَٱعْتَبِرُوا۟ يَٰٓأُو۟لِى ٱلْأَبْصَٰرِ.

59:2. வேதமுடையவர்களுள் இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்பட்டவர்கள், முதல் படையெடுப்பிலேயே களத்தில் தோல்வி அடைந்ததும், தம் வீடுகளை விட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால் நீங்கள் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. இதற்கு முன்னர் தங்களுடைய வலுவான கோட்டையை அல்லாஹ்வின் படைவீரர்களால் வெல்ல முடியாது என்ற மிதப்பில் இருந்தார்கள்.காரணம் தம்மை யாரும் அசைக்க முடியாது என்ற அசட்டு தைரியமே. ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக களத்தில் தோல்வியுறவே, அவர்களின் உள்ளங்களில் பீதி ஏற்பட்டு அவர்கள் தம் வீடுகளை விட்டு வெளியேறி விட்டார்கள். இப்படியாக மூஃமின்களின் படையெடுப்பால் அவர்கள் பராமரித்து வந்த வீடுகளை பாழ்படுத்திக் கொண்டனர். சிந்தித்துணரும் மக்களே! இந்த நிகழ்வில் உங்களுக்கு ஆயிரமாயிரம் படிப்பினைகள் இருப்பதை கவனிப்பீர்களாக!
அதாவது நீதிக்காகவும் நியாயமான அல்லாஹ்வின் ஆட்சிக்காகவும் போராடுபவர்கள் உள்ளங்களில் ஒருபோதும் பயமிருக்காது. காரணம் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் அவர்களுக்கு சுவனவாழ்வு உண்டு என்ற வாக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கிறது. (பார்க்க 2:154) ஆனால் அநியாயமான ஆட்சிக்கு ஆதரவாக போரிடுபவர்களுக்கு எந்த வாக்குறுதியும் கிடைப்பதில்லை. தாம் எதற்காகப் போரிட வேண்டும் என்ற காரணமே அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. எனவே தோல்வி ஏற்பட்டதும் தங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என பயந்து தம் இல்லங்களை விட்டு அகதிகளாக வெளியேறி விட்டார்கள்.


وَلَوْلَآ أَن كَتَبَ ٱللَّهُ عَلَيْهِمُ ٱلْجَلَآءَ لَعَذَّبَهُمْ فِى ٱلدُّنْيَا ۖ وَلَهُمْ فِى ٱلْءَاخِرَةِ عَذَابُ ٱلنَّارِ.

59:3. ஒருவேளை அவர்கள் தம் ஊரை விட்டு வெளியேற தீர்மானிக்காதிருந்தால், அவர்கள் பல வேதனைகளை சந்தித்திருப்பார்கள். அத்துடன் அவர்களுக்கு மரணம் ஏற்படினும், நரக வேதனைகளுக்கு குறைவே இருந்திருக்காது.


ذَٰلِكَ بِأَنَّهُمْ شَآقُّوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۖ وَمَن يُشَآقِّ ٱللَّهَ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ.

59:4. இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டதோடு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்க உருவான இறையாட்சியமைப்பு செயல்படாதவாறு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். நினைவில் கொள்ளுங்கள். யார் இத்தகைய சட்ட விரோத செயல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை கிடைக்கும்.


مَا قَطَعْتُم مِّن لِّينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَآئِمَةً عَلَىٰٓ أُصُولِهَا فَبِإِذْنِ ٱللَّهِ وَلِيُخْزِىَ ٱلْفَٰسِقِينَ.

59:5. எனவே போரின் சமயம் பேரித்த மரத்தின் மேல் பகுதியை வெட்டி எடுத்ததும், அவற்றின் தண்டுகளை விட்டுவிட்டதும் அல்லாஹ்வின் சட்டப்படி தான் நடந்தன. அதாவது நலிந்த மக்களை அவர்களின் வீடுகளை விட்டு துறத்துவதும் அவர்களுக்கு எதிராக அட்டூழியங்களை செய்வதும் அல்லாஹ்வின் சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். (பார்க்க 2:85). இத்தகைய எதேச்சதிகார ஆட்சிமுறைக்கு எதிராகப் போர் தொடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. (பார்க்க 22:39) அவர்களை இழிவுபடுத்தவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மக்கமா நகரத்தை சுற்றியுள்ள மலைகளில் இருந்த மரங்களை வெட்டி எடுத்து எரித்ததால் மிகப்பெரிய படை நம்மை தாக்க வந்துள்ளதாக நினைத்து, பகைவர்கள் சரணடைவதாக தூது அனுப்ப வேண்டியதாயிற்று. இப்படியாக எவ்வித பெரிய படையெடுப்பும் இல்லாமலேயே மக்கமா நகரை கைப்பற்ற முடிந்தது. (மேலும் பார்க்க 48:24-25)


وَمَآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنْهُمْ فَمَآ أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍۢ وَلَا رِكَابٍۢ وَلَٰكِنَّ ٱللَّهَ يُسَلِّطُ رُسُلَهُۥ عَلَىٰ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

59:6. இந்த படையெடுப்பில் நீங்கள் குதிரைகள் மீதோ ஒட்டகங்களின் மீதோ சவாரி செய்து போரிட அவசியம் ஏற்படவில்லை. பகைவர்களுக்கு ஏற்பட்ட பீதியே உங்கள் வெற்றிக்கு காரணியாக அமைந்து விட்டது. எனவே அங்கு ஏராளமான செல்வங்கள் உங்களுக்குக் கிடைத்தன. அல்லாஹ்வின் நியதிப்படி தத்ரூபமான போர் யுக்திகளைக் கையாண்டு இத்தகைய வெற்றியும் அரசாளும் வாய்ப்பும் இறைத் தூதர்களில் சிலருக்குக் கிடைத்தது. அல்லாஹ்வின் வழிகாட்டுதல் எல்லா விஷயங்களிலும் பேராற்றல் உடையதாக உள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.
அவற்றைப் பின்பற்றி வெற்றி பெறுவது மனித பொறுப்பில் விடப்படுகிறது.


مَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنْ أَهْلِ ٱلْقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ كَىْ لَا يَكُونَ دُولَةًۢ بَيْنَ ٱلْأَغْنِيَآءِ مِنكُمْ ۚ وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمْ عَنْهُ فَٱنتَهُوا۟ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ.

59:7. இப்படியாக அவ்வூராரிடமிருந்து உங்களுக்குக் கிடைத்த ஏராளமான செல்வங்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு சொந்தமானவை ஆகும். (பார்க்க 8:1) மேலும் அங்கிருந்து தான் பொது மக்களின் நலனுக்காக கொடுக்கப்படும். எனவே அவற்றை போரில் பங்கெடுத்த வீரர்களின் உறவினர்களுக்கும், சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கும், சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றோருக்கும், அல்லாஹ்வின் பாதையில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் பங்கிட்டுத் தரப்படும். சில செல்வந்தர்களுக்கு இடையே செல்வங்கள் குவிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எனவே அல்லாஹ்வின் ஆட்சியமைப்பிலிருந்து உங்களுக்கு என்ன கிடைக்கின்றதோ அதைக் கொண்டு திருப்தியடையுங்கள். மேலும் தடை விதித்தவற்றை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படுகின்ற விபரீத விளைவுகளுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கின்ற தண்டனை மிகவும் கடுமையானவை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


لِلْفُقَرَآءِ ٱلْمُهَٰجِرِينَ ٱلَّذِينَ أُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَأَمْوَٰلِهِمْ يَبْتَغُونَ فَضْلًۭا مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنًۭا وَيَنصُرُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ.

59:8. மேலும் ஒரு கட்டத்தில் கலகக்காரர்கள் செய்த அட்டூழியங்களால் ஏழை எளிய மக்கள் தம் வீடுகளையும் பொருட்களையும் துறக்க நேர்ந்தது. அவர்களும் வாழ்க்கை வசதிகள் எதுவுமின்றி தவிக்கின்றனர். இத்தகையவர்களுக்கு போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து பன்படுத்து அவசியம். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இறையாட்சியமைப்பை ஆதரித்து செயல்படும் உண்மையான செயல் வீரர்களாக இருக்கிறார்கள்.


وَٱلَّذِينَ تَبَوَّءُو ٱلدَّارَ وَٱلْإِيمَٰنَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِى صُدُورِهِمْ حَاجَةًۭ مِّمَّآ أُوتُوا۟ وَيُؤْثِرُونَ عَلَىٰٓ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌۭ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِۦ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.

59:9. இன்னும் சிலர் இறைத்தூதரும் அவரை சார்ந்தவர்களும் தம் ஊரைவிட்டு ஹிஜ்ரத்து செய்து வருவதற்கு முன்பே இறைவழிகாட்டுதலை முழுமையாக ஏற்று செயல்பட்டு வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஹிஜ்ரத்து செய்து வந்தவர்களுக்கு புகலிடம் அளித்தவர்கள் ஆவர். (பார்க்க 8:74-75) இவ்வாறு தம் ஊரைவிட்டு ஹிஜ்ரத் செய்து வந்தவர்களை இவர்கள் நேசிக்கின்றனர். இவர்களும் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து பங்கு பெற உரியவர்களே ஆவர். ஆனால் அவர்கள் தமக்குத் தேவை என இருக்கும் போதும், அவர்கள் அவற்றைப் பெற நாடவில்லை. அவற்றையும் தம்மைவிட மிகவும் தேவையுள்ளவர்களுக்கே அளித்து விடுகிறார்கள். இத்தகைய தயாள குணம் படைத்தவர்களே உண்மையிலேயே வெற்றியாளர்கள் ஆவர்.


وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا ٱغْفِرْ لَنَا وَلِإِخْوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلْإِيمَٰنِ وَلَا تَجْعَلْ فِى قُلُوبِنَا غِلًّۭا لِّلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٌۭ رَّحِيمٌ.

59:10. மேலும் இவர்களுக்குப் பின் ஹிஜ்ரத் செய்து அங்கு வந்து குடியேறியவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இவற்றில் பங்குண்டு. ஆனால் அவர்களுடைய உள்ளங்களில், “எங்கள் இறைவா! எங்களுக்கும் எங்களுக்கு முன்பே உன் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இடையே இணைபிரியா பாசப் பிணைப்பை ஏற்படுத்துவாயாக! எங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழி செய்வாயாக! உன் வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒருபோதும் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவே நாங்கள் நாடுகிறோம். அதற்கு உன் உதவியை நாடுகிறோம். எங்களுக்கு நீ உதவி புரிவாயாக! நீ மாபெரும் இரக்கமுடையவன் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. நீயே கிருபை மிக்கவன். எங்களுக்குள்ளும் இத்தகைய சிறப்பு குணநலங்கள் வளர உதவி செய்வாயாக!” என்று அழகிய எண்ணங்கள் பிரார்த்தனை சொற்களாக உதிர்ந்தன.


۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ نَافَقُوا۟ يَقُولُونَ لِإِخْوَٰنِهِمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ لَئِنْ أُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِيعُ فِيكُمْ أَحَدًا أَبَدًۭا وَإِن قُوتِلْتُمْ لَنَنصُرَنَّكُمْ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَٰذِبُونَ.

59:11. இவைதான் உண்மையான மூஃமின்களின் நிலையாகும். இதற்கு மாறாக நயவஞ்சகர்களின் நிலைமை என்னவென்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் இறையாட்சி அமைப்புக்கு எதிராக செயல்படுபவர்களோடு உறவு வைத்துக் கொள்கிறார்கள். அதே சமயம் உங்களுடனே இருப்பதாகவும் சொல்லிக் கொள்கின்றனர். நீங்கள் இவ்வூரை விட்டு வெளியேற நேர்ந்தால் நாங்களும் உங்களுடன் வந்துவிடுவோம் என்கின்றனர். அன்றியும் உங்களுக்கு எதிராக எவருக்கும் வழிபட மாட்டோம் என்றும் கூறுகின்றனர். உங்களுக்கு எதிராகப் போர் நடைபெற்றால் உங்களுக்கு ஆதரவாக உதவி செய்வோம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது அனைத்தும் பொய்யே என்பது அவர்களுடைய செயல்களின் மூலம் அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.


لَئِنْ أُخْرِجُوا۟ لَا يَخْرُجُونَ مَعَهُمْ وَلَئِن قُوتِلُوا۟ لَا يَنصُرُونَهُمْ وَلَئِن نَّصَرُوهُمْ لَيُوَلُّنَّ ٱلْأَدْبَٰرَ ثُمَّ لَا يُنصَرُونَ.

59:12. அதாவது மூஃமின்கள் வெளியேற நேர்ந்தால் அவர்களுடன் இவர்கள் வேளியேற மாட்டார்கள். போரில் உதவியும் செய்ய மாட்டார்கள். அப்படியும் போரில் கலந்து கொண்டாலும், நிச்சயமாக புறமுதுகு காட்டி ஓடியே இருப்பார்கள். அதன் பின்பும் இவர்கள் எத்தகைய உதவியும் செய்ய மாட்டார்கள்.


لَأَنتُمْ أَشَدُّ رَهْبَةًۭ فِى صُدُورِهِم مِّنَ ٱللَّهِ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَفْقَهُونَ.

59:13. இதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வை விட உங்களைத் தான் அதிகமாகப் பயப்படுகிறார்கள். எனவே உங்களை திருப்திப்படுத்தவே இப்படி பேசி வருகிறார்கள். உங்களைப் பற்றிய உண்மைகள் அவர்களுக்குத் தெரியாததால், அவர்கள் உங்களை அவசியமில்லாமல் பயப்படுகிறார்கள்.
அதாவது மூஃமின்கள் யாவரும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பகைவராக இருக்க மாட்டார்கள். அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைக்கு மாற்றமாகச் செயல்படுபவர்களைத் தான் அவர்கள் நேசிக்க மாட்டார்கள்.


لَا يُقَٰتِلُونَكُمْ جَمِيعًا إِلَّا فِى قُرًۭى مُّحَصَّنَةٍ أَوْ مِن وَرَآءِ جُدُرٍۭ ۚ بَأْسُهُم بَيْنَهُمْ شَدِيدٌۭ ۚ تَحْسَبُهُمْ جَمِيعًۭا وَقُلُوبُهُمْ شَتَّىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَعْقِلُونَ.

59:14. மேலும் இந்த நயவஞ்சகர்கள் போரிடவே வந்தாலும், உங்களை எதிர்த்து களத்தில் சந்திக்க மாட்டார்கள். அவர்கள் ஊருக்கு வெளியே மிகத் தொலைவிலிருந்தோ அல்லது வலுவான கோட்டைகளில் இருந்துக் கொண்டோ போரிட எண்ணுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு, போர் என்றால் பயம்! மேலும் அவர்களெல்லாம் ஒன்று திரண்டு வந்தாலும் போரிடவே மாட்டார்கள். காரணம் அவர்களுக்குள்ளேயே கடுமையான பகைமையும் வெறுப்பும் இருக்கின்றன. எனவே அவர்கள் யாவரும் ஒன்றுபட்டு இருப்பதாக எண்ண வேண்டாம். அவர்கள் அனைவரும் அறிவிலிகளாக இருப்பதால் அவர்களுக்குள் பலப் பிரிவுகள் உள்ளன.


كَمَثَلِ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ قَرِيبًۭا ۖ ذَاقُوا۟ وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.

59:15. மேலும் அண்மையில் நடந்த போரில் தோற்றுப் போனவர்களைப் போன்றே இவர்களும் இருக்கின்றனர். (பார்க்க 59:2) அவர்கள் தம் தீய செயல்களுக்குரிய பலன்களை அனுபவித்துக் கொண்டனர். இவர்களுக்கும் அதே போன்ற நோவினைத் தரும் வேதனைகள் கிடைக்கும்.


كَمَثَلِ ٱلشَّيْطَٰنِ إِذْ قَالَ لِلْإِنسَٰنِ ٱكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّى بَرِىٓءٌۭ مِّنكَ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلْعَٰلَمِينَ.

59:16. மேலும் இந்த நயவஞ்சகர்களின் மனோ நிலையும் ஷைத்தானியர்களைப் போன்றே இருக்கின்றது. முதலில் மக்களிடம் இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட தூண்டிவிட்டு, அதன் விளைவுகள் ஏற்பட ஆரம்பித்ததும் அவர்களை விட்டு விலகிவிடுவதாகவும் அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பதாகவும் கூறி ஒதுங்கி விடுகிறார்கள். அந்த பாதிப்புகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். அவர்களைப் போன்றவர்கள் தான் இவர்களும்.


فَكَانَ عَٰقِبَتَهُمَآ أَنَّهُمَا فِى ٱلنَّارِ خَٰلِدَيْنِ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُا۟ ٱلظَّٰلِمِينَ.

59:17. இவ்வாறு தூண்டிவிட்டவர்களும் அவர்களுடைய தூண்டுதலுக்கு பலியானவர்களும் வேதனைகளுக்கு உரியவர்களே ஆவர். அவர்கள் நீண்ட காலம் வரையில் வேதனைகளை அனுபவிக்க வேண்டி வரும். அநியாய அக்கிரம செயல்களைச் செய்வோருக்கு கிடைக்கும் தண்டனை இதுவே ஆகும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ لِغَدٍۢ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ.

59:18. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் இவ்வாறு செயல்படாதீர்கள். இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுங்கள். நாளைய உலகம் சிறப்பாக விளங்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். நீங்கள் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்தால் தான் உங்கள் செயல்திட்டத்தில் வெற்றி இலக்கை அடையமுடியும். ஆக நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது உங்களுடைய செயல்களுக்கேற்ப பலன்கள் தாம் கிடைக்கும்.


وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ نَسُوا۟ ٱللَّهَ فَأَنسَىٰهُمْ أَنفُسَهُمْ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ.

59:19. உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர் இறைவழிகாட்டுதலை அலட்சியப்படுத்தி, தமக்குத் தாமே தாழ்ந்த நிலையை விளைவித்துக் கொண்டார்களே அவ்வாறு நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் அனைவரும் வழிதவறி செல்பவர்களாகவே ஆகிவிட்டார்கள். எனவே மனித செயல்களுக்கேற்ற விளைவுகள் என்ற அல்லாஹ்வின் சட்டம் அவர்களை இழிவாக்கிவிட்டது. அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.


لَا يَسْتَوِىٓ أَصْحَٰبُ ٱلنَّارِ وَأَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۚ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ هُمُ ٱلْفَآئِزُونَ.

59:20. நீங்களே சிந்தித்துப் பாருங்கள். இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டு தாளா வேதனைகளை அனுபவிக்கும் நரகவாசிகளும், இறைவழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாழ்ந்து வாழ்வில் எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் சுவனவாசிகளும் சமமாவார்களா? சுவனவாசிகள் தானே பாக்கியமிக்கவர்கள்?


لَوْ أَنزَلْنَا هَٰذَا ٱلْقُرْءَانَ عَلَىٰ جَبَلٍۢ لَّرَأَيْتَهُۥ خَٰشِعًۭا مُّتَصَدِّعًۭا مِّنْ خَشْيَةِ ٱللَّهِ ۚ وَتِلْكَ ٱلْأَمْثَٰلُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ.

59:21. இத்தகைய சுவனத்திற்கு யார் வாரிசுதாரர்களாக ஆக முடியும் என்று தெரியுமா? அவர்களின் உள்ளங்களில் இறைவழிகாட்டுதல்கள் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கும் என்றால், அதற்கு எதிராகச் செயல்படும்படி அவர்களுக்கு சொன்னால், மலையே வெடித்து சிதறி அவர்கள் மேல் விழுவது போல் பயப்படுவார்கள். மக்கள் இதைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவதற்காகவே இத்தகைய உவமானங்கள் தரப்படுகின்றன.
சிந்தனையாளர்களே! இந்த வாசகத்தில் மலையின் மீது நாம் இந்த குர்ஆனை இறக்கி வைத்தால், அல்லாஹ்வின் பயத்தால் அது நடுங்கிப் பிளந்துவிடுவதை நீர் காண்பீர் என்று வருகிறது. இது ஒரு பழமொழியாகும். நாமும் வேலியே பயிரை மேய்கிறது என்கிறோம். ஒருபோதும் வேலி பயிரை மேயாது. வேலிபோல் பாதுகாக்க வேண்டியவனே அதை பாழ்படுத்துவதைப் பார்த்து இப்படி சொல்கிறோம். அதுபோல குர்ஆனை மலை மேல் வைத்தால் அது ஒருபோதும் வெடிக்காது. எனவே குர்ஆனைப் பின்பற்றுபவர்களை நாம் உவமையாக வைத்து பொருள் தந்துள்ளோம்.


`

هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ۖ هُوَ ٱلرَّحْمَٰنُ ٱلرَّحِيمُ.

59:22. அவன் காட்டும் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தவே இத்தகைய உதாரணங்கள் தரப்படுகின்றன. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய அதிகாரத்திற்கும் தலைவணங்கி செயல்படக் கூடாது. ஏனெனில் உலகில் நிகழ்கின்ற வெளிப்படையான நிகழ்வுகளும் மறைவான நிகழ்வுகளும் அவனுக்கு நன்கு தெரியும். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் தேவைகளையும் அறிந்து அவற்றிற்கேற்ப அருட்கொடைகளை ஏற்படுத்துபவன் அவனே. இப்படியாக அவனுடைய அன்புக்கு நிகர் அவனே ஆவான்.


هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْمَلِكُ ٱلْقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلْمُؤْمِنُ ٱلْمُهَيْمِنُ ٱلْعَزِيزُ ٱلْجَبَّارُ ٱلْمُتَكَبِّرُ ۚ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ.

59:23. இப்படியாக அகிலத்தில் எங்கும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் நடைபெறுவதில்லை. அகிலங்கள் அனைத்தும் அவனுக்கே உரியவை ஆகும். எனவே அவன் நிர்ணயித்த சட்டங்களே அகிலங்கள் அனைத்திலும் நடைமுறையில் உள்ளன. அவன் படைத்த எந்த படைப்பிலும் அவற்றை செயல்பட வைத்திருப்பதிலும் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது. அந்த அளவுக்கு பரிசுத்தத் தன்மை உடையதாக உள்ளன. வெளிஉலக ஆபத்திலிருந்து பாதுகாப்பதும், சாந்தியும் அளிக்கும் வல்லமையுடையவன் அவனே. அவனுடைய எல்லா படைப்புகளும் கட்டுக்கோப்பாக செயல்படுவதால் அவன் அனைரையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். அனைத்துப் படைப்புகளும் தம் இறுதி இலக்கு வரையில் சென்றடையச் செய்யும் வல்லமைப் பெற்றவன். உலகிலுள்ள எல்லா படைப்புகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து செயல்படும் படியாகவே உள்ளன. இதனால் அகிலமே எந்தக் குறைவுமின்றி நடைபெறச் செய்யும் பேராற்றலுடையவன் என்ற பெருமைக்குரியவன். இப்படி எண்ணற்ற பேராற்றல்களை உடைய அல்லாஹ் மனித கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.
அல்லாஹ் மனிதனைப் போல் உருவம் பெற்று செயல்படுபவன் அல்லன். அவனுடைய வல்லமை அகிலங்களிலும் உலகிலும் சிறப்பு குண நலங்களின் வடிவில் செயல்படுகின்றன. இதை நாம் புரிந்து கொண்டால் தான் திருக்குர்ஆனை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.


هُوَ ٱللَّهُ ٱلْخَٰلِقُ ٱلْبَارِئُ ٱلْمُصَوِّرُ ۖ لَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

59:24. மேலும் அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வின் அளவிலா வல்லமையைக் கொண்டு தான் உருவாயின. எனவே தான் அவற்றில் ஒழுங்குமுறை உள்ளது. உலக படைப்புகள் அனைத்தும் அழகான உருவமைப்பு பெற்றுள்ளன. இப்படியாக அல்லாஹ்வின் அளவிலா வல்லமை யாவும் பல அழகிய குணநலங்களின் வடிவில் முழுமையான நிலையில் உள்ளது. உலக படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற முழுவேகத்துடன் செயல்பட்டு வருகின்றன. அவனே யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்கவனும் ஆவான். எனவே மனிதர்களாகிய நீங்களும் அவனுடைய கட்டளைக்கு மட்டும் உட்பட்டு செயல்படுங்கள்.