بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
6:0அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَجَعَلَ ٱلظُّلُمَٰتِ وَٱلنُّورَ ۖ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ يَعْدِلُونَ.
6:1. அகிலங்களையும் பூமியையும் படைத்து அவற்றில் இருளையும் ஒளியையும் படைத்த அல்லாஹ்வின் அளவற்ற வல்லமைகள் போற்றுதலுக்கு உரியவையாக இருக்கின்றன. அல்லாஹ்வின் அதே சட்ட விதிமுறைகளின்படி மனித சமுதாயங்களிலும் இருள் சூழும் நிலையும் ஒளிமயமான வாழ்வும் ஏற்படுகின்றன. இந்தப் பேருண்மைகளை தெளிவாக எடுத்துரைத்தும், பிற கொள்கையைப் பின்பற்றுபவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن طِينٍۢ ثُمَّ قَضَىٰٓ أَجَلًۭا ۖ وَأَجَلٌۭ مُّسَمًّى عِندَهُۥ ۖ ثُمَّ أَنتُمْ تَمْتَرُونَ.
6:2. உங்கள் அனைவரையும் மண்ணின் சத்திலிருந்து படைத்து, குறிப்பிட்ட காலம் வரை உயிர்வாழ வழிசெய்ததும் அல்லாஹ்தான். மேலும் தனி நபரின் வாழ்வு மற்றும் மரணத்திற்கு காலத் தவணையை நிர்ணயித்ததும் அல்லாஹ்தான். அதுபோலவே, சமுதாயங்கள் உயிரோட்டமுள்ள வாழ்வை பெறுவதற்கும், உயிரற்ற நிலைக்கு தள்ளப்படுவதற்கும் காலத் தவணைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உண்மை இவ்வாறு இருந்தும் மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் அதை தெளிவாகப் புரிந்து கொள்வதில்லை.
அதாவது இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படும் சமுதாயங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்தான் சந்தோஷமாக இருக்க முடியும். அதன்பின் நாளடைவில் அது தவறான வழியில் சென்று அழிவை சந்திக்கும். இறைவழிகாட்டுதலின் படி வாழும் சமுதயாங்கள் நிலையான சந்தோஷங்களுடன் வாழும்.
وَهُوَ ٱللَّهُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَفِى ٱلْأَرْضِ ۖ يَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ.
6:3. வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் படைத்தது அல்லாஹ்தான் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். அது மட்டுமின்றி உலகில் நிகழும் மறைவான செயல்களும் வெளிப்படையான செயல்களும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. எனவே ஒவ்வொருவருடைய நன்மையான செயல்களும் தீய செயல்களும் கண்காணிக்கப் படுகின்றன என்பதே உண்மை.
وَمَا تَأْتِيهِم مِّنْ ءَايَةٍۢ مِّنْ ءَايَٰتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ.
6:4. எனினும் அல்லாஹ்விடமிருந்து இத்தகைய ஆணித்தரமான ஆதாரங்கள் வந்தபோதிலும், அவர்கள் அவற்றை ஏற்க மறுப்பவர்களாகவே இருக்கின்றனர்.
فَقَدْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۖ فَسَوْفَ يَأْتِيهِمْ أَنۢبَٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.
6:5. மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டும் வேத அறிவுரைகள் அவர்களிடம் வந்தும், அவர்கள் அவற்றை ஏற்க மறுக்கின்றனர். அந்த அறிவுரைகளுக்கு மாற்றமாகச் செயல்பட்டால் அவர்கள் வாழ்வில் வேதனைகள் வந்தடையும் என்று முன்னெச்சரிக்கை செய்தும், அதை விளையாட்டாகவே எடுத்துக் கொள்கின்றனர். அவற்றை ஏற்க மறுத்து தன்னிச்சையாக வாழ்ந்து வந்தால் அந்த வேதனை மிக்க அழிவுகள் வராமல் போய்விடுமா?
أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍۢ مَّكَّنَّٰهُمْ فِى ٱلْأَرْضِ مَا لَمْ نُمَكِّن لَّكُمْ وَأَرْسَلْنَا ٱلسَّمَآءَ عَلَيْهِم مِّدْرَارًۭا وَجَعَلْنَا ٱلْأَنْهَٰرَ تَجْرِى مِن تَحْتِهِمْ فَأَهْلَكْنَٰهُم بِذُنُوبِهِمْ وَأَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِينَ.
6:6. இப்படியாக இறைவழிகாட்டுதலை விளையாட்டாக எடுத்துக் கொண்டு தம் மனம் போன போக்கில் வாழ்ந்த எத்தனையோ சமுதாயங்கள், அல்லாஹ்வின் நியதிப்படி அழிந்துவிட்டன என்பதை அவர்கள் கவனித்துப் பார்ப்பதில்லையா? உங்களை விட வசதி வாய்ப்புகள் அவர்களுக்கு பன்மடங்கு அதிகமாகவே கிடைத்திருந்தன. அவர்களுடைய நாட்டில் பருவ மழையும், நீர்வளம் கொண்ட பசுமையும் நிறைந்ததாக இருந்தது. எனினும் அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து, தன்னிச்சையாக வாழ்ந்ததால், அவர்களிடையே வளர்ந்த சுயநலமும், பாவச் செயல்களும் அவர்களுக்கு அழிவினைத் தேடித் தந்துவிட்டன. அந்த அழிவிலிருந்து எஞ்சியவர்கள் பிற்காலத்தில் மீண்டும் ஒரு சமுதாயமாக உருவெடுத்தார்கள்.
இப்படியாக இறைவழிகாட்டுதலின் உண்மை நிலை, பிரபஞ்ச படைப்புகளின் ஆதாரத்தைக் கொண்டும், வரலாற்றுச் சம்பவங்களின் ஆதாரங்களைக் கொண்டும் விளக்கப்படுகிறது. ஆனால் அவர்களோ இந்த ஆதாரங்களைப் பற்றி சிந்திக்காமல், அற்புதங்கள் ஏதாவது நிகழ்த்திக் காட்டினால்தான் அவற்றை ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள். இவை எல்லாம் இந்த உண்மைகளை ஏற்க மறுப்பதற்கு சொல்லும் சாக்குப்போக்கே ஆகும்.
وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَٰبًۭا فِى قِرْطَاسٍۢ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌۭ.
6:7. எனவே அவர்கள் காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தை நம் கண் முன்னால் இறக்கிக் காட்டினால், நாமும் அதைத் தொட்டுப் பார்த்து அதில் உண்மை இருப்பதாக ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள். அவ்வாறு அதைக் கொண்டு வந்து காட்டினாலும் அது வெளிப்படையான சூனியத்தை தவிர வேறில்லை என்று சொல்லி அதையும் தட்டிக் கழித்திருப்பார்கள்.
وَقَالُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ مَلَكٌۭ ۖ وَلَوْ أَنزَلْنَا مَلَكًۭا لَّقُضِىَ ٱلْأَمْرُ ثُمَّ لَا يُنظَرُونَ.
6:8. “இவ்வேதம் உண்மை என்பதற்கு ஆதாரமாக நம்மிடம் ஒரு "மலக்கை" அனுப்பி இருக்கக் கூடாதா? இறைத்தூதர் என்று தம்மை சொல்லிக் கொள்பவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதராகவே இருக்கிறாரே” (பார்க்க 25:7) என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களின் விருப்பப்படி மலக்கை* அனுப்பி வைத்திருந்தால் அவர்களுடைய வாழ்வே முடிவுக்கு வந்து விட்டிருக்கும். பிறகு அவர்களுக்கு அவகாசம் எதுவும் கிடைத்திருக்காது.
ஒரு சமுதாயம் தவறான வழியில் சென்று அழிந்து போகாதவாறு முன்னெச்சரிக்கை செய்வதே இறைத் தூதர்களின் முக்கிய பணியாகும். மலக்கு என்றால் தேவ தேவதைகள் என்ற நினைப்பில் மக்கள் இருப்பார்கள்.ஆனால் "மலக்கு"கள் என்பது பிரபஞ்ச இயற்கை சக்திகளாகும். . சமுதாயங்களின் மனித செயலுக்கேற்றவாறு விளைவுகளை ஏற்படுத்துவதே "மலக்கு"களின் பணியாகும். மேலும் இறைவன் புறத்திலிருந்து "மலக்குகளை இறக்கி அனுப்புவது" என்பது அச்சமுதாயத்தின் அழிவு ஏற்படும் தருவாயில்தான் என்பதும் இவ்வாசகத்திலிருந்து புலனாகிறது. இவர்கள் எண்ணி இருப்பது போல்
وَلَوْ جَعَلْنَٰهُ مَلَكًۭا لَّجَعَلْنَٰهُ رَجُلًۭا وَلَلَبَسْنَا عَلَيْهِم مَّا يَلْبِسُونَ.
6:9. அப்படியும் ஒரு மலக்கையே அனுப்புவதாக இருந்தாலும், அவரையும் மனித உருவில்தான் அனுப்ப முடியும். காரணம் மலக்கை யாரும் காண முடியாது. அவ்வாறு மலக்கைத் தூதராக அனுப்பினாலும் அவர்கள் இதே குழப்பத்தில்தான் மூழ்கி, அதையும் நம்ப மாட்டார்கள்.
وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍۢ مِّن قَبْلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُوا۟ مِنْهُم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.
6:10. இப்படியாகத்தான், சமுதாயங்கள் அழிந்து போவதற்கான காரணங்களை எடுத்துரைக்கும் இறைச் செய்திகளை ஆழ்ந்து சிந்திக்காமல், அவற்றை அலட்சியப் படுத்துகிறார்கள். இதற்குமுன் சென்ற சமுதாயங்களும் இப்படித்தான் செய்தன. இப்போதும் இவர்களுடைய நிலைமை அதே போன்று தான் உள்ளது. இவர்களுடைய அலட்சியப் போக்கே அவர்களை இழி நிலைக்குத் தள்ளிவிடும்.
قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ ثُمَّ ٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ.
6:11. இதை வெறும் அச்சுறுத்தல் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். உலகை சுற்றிப் பாருங்கள். இறைவழிகாட்டுதலை பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை கண்கூடாகப் பார்த்து தெரிந்து கொள்ளும்படி அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
قُل لِّمَن مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قُل لِّلَّهِ ۚ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ لَا رَيْبَ فِيهِ ۚ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ.
6:12. அவர்களிடம், அகிலங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் யாருக்குரியது என்று கேளுங்கள். அவர்கள் உடனே அவையாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்பார்கள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் படைப்புகளும் முழுமையாக வளர்ச்சி பெற்று சிறப்பாக செயல்பட எவ்வாறு சட்டதிட்டங்களை ஏற்படுத்தினானோ, அது போலவே உலகில் மனிதன் சிறப்பாக வாழ்வதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்தித் தர அல்லாஹ் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். அதை நிறைவேற்றவே இந்த இறைவழிகாட்டுதல் இறக்கி அருளப்படுகிறது. இந்த வழிகாட்டுதலின்படி உலக மக்கள் செயல்படும் காலக் கட்டத்தில் அனைத்து மக்களும் ஒரே சமுதாயமாக ஒன்றிணையும். இதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தவர்கள் இந்தப் பேருண்மையை விளையாட்டாகவே எடுத்துக்கொண்டு தமக்குத் தாமே பெரு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
۞ وَلَهُۥ مَا سَكَنَ فِى ٱلَّيْلِ وَٱلنَّهَارِ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.
6:13. ஆக இரவோ, பகலோ அல்லாஹ்வுக்கு எல்லாமே சமம் தான். எனவே உங்களுடைய எந்த செயலும் அவனுடைய கண்காணிப்பிலிருந்து தப்பவே தப்பாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதாவது மனிதனுக்கு ஒளிமயமான வாழ்வு கிடைத்தாலும் அவனது வாழ்வில் இருள் சூழ்ந்த நிலை ஏற்பட்டாலும் அல்லாஹ்வுக்கு எந்த வித்தியாசமும் ஏற்படுவதில்லை.
قُلْ أَغَيْرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيًّۭا فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ.
6:14. “உண்மை இவ்வாறிருந்தும் வானங்களையும் பூமியையும் எந்தப் பொருளின் துணையுமின்றி படைக்கும் வல்லமையுடைய அல்லாஹ்வை விட்டு, வேறு யாருடைய பாதுகாப்பைத் தேடி அலைகிறீர்கள்? உங்களுக்குத் தேவையான உணவு வகைகள் அவன் செய்த ஏற்பாட்டின் மூலமாகத்தானே கிடைக்கின்றன? அவனுக்கு நீங்களா உணவளிக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேளுங்கள். “அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்படுபவர்களில் முதன்மையானவனாக இருக்க எனக்குக் கட்டளை வந்துள்ளது. இன்னும் அக்கட்டளைக்கு இணையாக வேறு எதையும் கடைப்பிடிக்க மாட்டேன்” என்றும் அவர்களிடம் கூறிவிடுங்கள். (பார்க்க 6:106)
قُلْ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ.
6:15. “நான் இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டால், “மனிதச் செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டத்தின்படி எனக்கும் கடும் வேதனைகள் ஏற்படும் என்பதை அறிந்து அஞ்சுகிறேன்” என்று கூறுங்கள்.
مَّن يُصْرَفْ عَنْهُ يَوْمَئِذٍۢ فَقَدْ رَحِمَهُۥ ۚ وَذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْمُبِينُ.
6:16. அப்படி ஒரு நிலை ஏற்படுவதிலிருந்து யார் தம்மை காப்பாற்றிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ்வுடைய அருள் கிடைத்து விட்டதாக பொருள்படும். இது ஒரு மகத்தான வெற்றியாகும் அல்லவா? மேலும் இது மிகவும் தெளிவான வெற்றியுமாகும் என்று அவர்களிடம் எடுத்துரைப்பீராக.
وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّۢ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ ۖ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍۢ فَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.
6:17. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டு, துன்பங்களில் சிக்கிக்கொண்டால், அல்லாஹ்வின் அறிவுரைகளின்படி அதற்கு ஈடான நற்செயல்களைச் செய்வதைக் கொண்டே அதன் விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இதைத் தவிர வேறு எந்த வழிமுறைகளாலும் விடுவித்துக் கொள்ள முடியாது. அதே போல ஆக்கப்பூர்வமான நற்செயல்களை தொடர்ந்து செய்தால் அதனால் ஏற்படும் நற்பலன்களை யாரும் தடுத்து விட முடியாது. அல்லாஹ்வின் பேராற்றல் எல்லாவற்றையும் விட மிகைத்து நிற்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
وَهُوَ ٱلْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۦ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ.
6:18. மேலும் அல்லாஹ் நிர்ணயித்த இந்தச் சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது. அனைவருடைய செயல்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வல்லமையும், “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை” ஏற்படுத்தும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு உண்டு.
சமுதாயங்களின் வளர்ச்சியும் பின்னடைவும் மேற்சொன்ன அல்லாஹ்வின் இந்த சட்டங்களின் படியே நடைபெறுகின்றன என்பதற்கு இன்றைய உலக மக்களின் நிலையே சாட்சியாக இருக்கிறது. யாரெல்லாம் ஆக்கப்பூர்வமாக சமூக நலத் திட்டங்களைகத் தீட்டி அதற்காக உழைக்கிறார்களோ, அவர்கள் யாவரும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர். ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளாமலும், முறையாக உழைக்காமலும் வழிதவறிச் செல்லும் சமுதாயங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் துயரத்தில் சிக்கிக் கிடக்கின்றன என்பதைக் கவனித்துப் பாருங்கள்.
قُلْ أَىُّ شَىْءٍ أَكْبَرُ شَهَٰدَةًۭ ۖ قُلِ ٱللَّهُ ۖ شَهِيدٌۢ بَيْنِى وَبَيْنَكُمْ ۚ وَأُوحِىَ إِلَىَّ هَٰذَا ٱلْقُرْءَانُ لِأُنذِرَكُم بِهِۦ وَمَنۢ بَلَغَ ۚ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ ٱللَّهِ ءَالِهَةً أُخْرَىٰ ۚ قُل لَّآ أَشْهَدُ ۚ قُلْ إِنَّمَا هُوَ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ وَإِنَّنِى بَرِىٓءٌۭ مِّمَّا تُشْرِكُونَ.
6:19. “எனவே மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையை காட்டும் வழிகாட்டுதல்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இந்த குர்ஆன் மூலமாக இறக்கி அருளப்படுகின்றன. இதற்கு அல்லாஹ்வும் அவன் படைத்து நடைமுறைப்படுத்தியுள்ள பிரபஞ்சமே போதுமான சாட்சியாக இருக்கிறது. (பார்க்க 3:18) எனக்கும் உங்களுக்கும் இடையே இதைவிட சிறந்த சாட்சி வேறு எதுவாக இருக்க முடியும்? எனக்கு வஹீ என்னும் இறைவழிகாட்டுதல் அடங்கிய குர்ஆன் மட்டும் அருளப்படுகிறது என்பதற்கும் அல்லாஹ்வே சாட்சி.
இதனைக் கொண்டு உங்களுக்கும், வேறு யாருக்கெல்லாம் இது சென்றடைகிறதோ அவர்களுக்கும், தவறானச் செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதே என் கடமை ஆகும்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக நீங்கள் பின்பற்றி வரும் வேறு வழிமுறைகளை வைத்துக்கொண்டு இப்படியொரு உத்தரவாதத்தை உங்களால் தர முடியுமா? ஒருபோதும் முடியாது. ஏனெனில் என்னையும் உங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் ஒருவனால் மட்டுமே இத்தகைய உறுதியை அளிக்க முடியும். எனவே அவனுடைய வழிகாட்டுதலுக்கு மட்டுமே அடிபணிந்து நான் செயல்படுகிறேன். அல்லாஹ்வுக்கு இணையாக நீங்கள் வழிபட்டு வருவதை விட்டு நான் விலகியே இருக்கின்றேன்” என்று அவர்களிடம் தெளிவாக எடுத்துரைப்பீராக.
ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمُ ۘ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ.
6:20. அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்ற வழிகாட்டுதல்கள், வஹீச் செய்தியே என்பதை அறிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? ஒருவர் தன் பிள்ளையை எவ்வாறு அடையாளம் கண்டுக் கொள்வாரோ, அவ்வாறே வேதம் பெற்றவர்களும் இறைச் செய்தியை எவ்வித சந்தேகமும் இன்றி ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இதை ஏற்க மறுப்பவர்கள்தாம் தமக்குத் தாமே பெரு நஷ்டம் விளைவித்துக் கொள்பவர்கள் ஆவார்கள். (2:146)
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓ ۗ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّٰلِمُونَ.
6:21. மேலும் அல்லாஹ் சொல்லாததை எல்லாம் அல்லாஹ் சொன்னதாக இட்டுக்கட்டிக் கூறுவதும் அல்லது அல்லாஹ் சொல்வதைச் சரியில்லை என்று சொல்வதும் எவ்வளவு பெரிய அநியாயச் செயலாகும். இப்படிப்பட்டவர்கள் தம் வாழ்வில் வெற்றி இலக்கை அடைவது எப்படி?
இவ்வாறாக இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகத் தம் மனோ இச்சைப்படி வாழும் சமுதாயத்தில் சுயநலப் போக்கு வளர்ந்து, மக்கள் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி, அதனால் சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை போன்ற தீமைகள் பரவி, இறுதியில் உள்நாட்டுக் கலவரம், போர், யுத்தமாக மாறிவிடும். அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படும் இந்நிலைக்கும் ‘ஹஷர்’ என்பார்கள். அதாவது “செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலக் கட்டம்” என்பதாகும்.
وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًۭا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَيْنَ شُرَكَآؤُكُمُ ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ.
6:22. இந்த ‘ஹஷர்’ ஏற்படும் கால கட்டத்தில் நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக வழிபட்டு வந்த கற்பனைத் தெய்வங்கள் எங்கே என்று கேட்கப்படும். அவ்வாறு இணை கற்பித்து வந்த உங்கள் கூட்டாளிகள் எங்கே என்றும் கேட்கப்படும். இன்றைய நாளில் அவர்களில் யாரும் உங்களைக் காப்பாற்ற வரவில்லையா? என்றும் கேட்கப்படும்.
இவை இவ்வுலகில் நடப்பவையாகும். மரணத்திற்குப் பின்பும் மனித வாழ்க்கை தொடர்வதாக திருக்குர்ஆன் கூறுகிறது. அங்கும் அனைவரும் விளைவுகளை "சந்திக்கும் நாள்" வரும். இவ்வுலகில் செய்து வந்த செயல்களைப் பற்றி அப்போது இவ்வாறே கேட்கப்படும். இதையும் ‘மஹ்ஷர் நாள்’ எனக் கூறுவர்.
ثُمَّ لَمْ تَكُن فِتْنَتُهُمْ إِلَّآ أَن قَالُوا۟ وَٱللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ.
6:23. அப்படி ஹஷர் ஏற்படும் கால கட்டத்தில், “எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் ஒருபோதும் இணை வைப்பவர்களாக இருந்ததே இல்லை” என்று அவர்கள் கூறுவதைத் தவிர வேறு எதுவும் இருக்காது.
ٱنظُرْ كَيْفَ كَذَبُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ ۚ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ.
6:24. அல்லாஹ்வின் மீது கற்பனைக் கதைகளைக் கூறி, வழிகேட்டில் சென்று, அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பொய்யாக்குபவர்களுக்கு இறுதியில் கதி என்ன ஆகிறது என்பதை சற்று கவனியுங்கள்.
وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ ۖ وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًۭا ۚ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍۢ لَّا يُؤْمِنُوا۟ بِهَا ۚ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.
6:25. இத்தகையவர்கள் யார் என்றால் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையை காட்டும் வேத அறிவுரைகளை எடுத்துரைத்தால், அவர்கள் இதைக் கேட்பது போல் பாவனை செய்தவர்கள். உண்மையில் அவற்றை விளங்கிக் கொள்ள விரும்பவே இல்லை. எனவே அல்லாஹ்வின் நியதிப்படி அப்படிப்பட்டவர்களின் உள்ளங்களில் திரையும், காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்பட்டு விடுகின்றன. நீங்கள் எவ்வளவுதான் ஆதாரங்களைக் காட்டினாலும் அதை ஏற்க மாட்டார்கள். அப்படியே உங்களிடம் வந்தாலும் “மஹஷர் நாள்’ என்பதெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளே ஆகும். அப்படி எதுவும் நிகழாது” என்று கூறி தர்க்கம் செய்தவர்கள்.
وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْـَٔوْنَ عَنْهُ ۖ وَإِن يُهْلِكُونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ.
6:26. இவ்வேத அறிவுரைகளை, தாம் கேட்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் கேட்கவிடாமல் தடுத்து வருவார்கள். இப்படியாக அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அழிவைத் தேடிக் கொள்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். இந்த உண்மையையும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَى ٱلنَّارِ فَقَالُوا۟ يَٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ.
6:27. அவர்கள் செய்துவரும் தவறான செயல்களின் விளைவாக வேதனைகள் வந்தடையும் போது, அவர்களை நீர் பார்ப்பீராயின், “அடப்பாவமே! எங்களை இந்த வேதனையிலிருந்து மீள மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கிடைக்காதா? அவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நாங்கள் இறைவனின் வேத உபதேசங்களை பொய்யெனக் கூறமாட்டோம். நாம் அவற்றிற்கு முற்றிலும் அடிபணிந்து அதன்படியே செயல்படுவோம்” என்று மன்றாடுவதை நீ காண்பீர்.
بَلْ بَدَا لَهُم مَّا كَانُوا۟ يُخْفُونَ مِن قَبْلُ ۖ وَلَوْ رُدُّوا۟ لَعَادُوا۟ لِمَا نُهُوا۟ عَنْهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ.
6:28. எனினும், தாம் செய்த தவறுகளுக்கு வருந்தி இவ்வாறு கூற மாட்டார்கள். மற்றவர்களிடம் தாம் மறைத்து வந்த உண்மைகள் வெளிப்பட்டு விட்டதே என்பதற்காக இவ்வாறு புலம்புவார்கள். அப்படியும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தாலும், எதைச் செய்யக் கூடாது என்று தடுக்கப்பட்டதோ அதையே அவர்கள் மீண்டும் செய்வார்கள். எனவே அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பதில் ஒரு பலனுமில்லை. நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே ஆவர்.
وَقَالُوٓا۟ إِنْ هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ.
6:29. அவர்கள் மக்களிடம் மறைத்து வந்த விஷயங்கள் என்ன? “நம்முடைய வாழ்வு இவ்வுலக வாழ்வோடு முடிந்து விடுகிறது. அது மரணத்திற்குப் பின் தொடர்வதில்லை. நாம் மீண்டும் எழுப்பப்பட்டு நாம் செய்த செயல்களுக்குக் கேள்வி கணக்கு உண்டு என்பதெல்லாம் வெற்றுப் பேச்சு” என்று சொல்லி வந்தார்கள். அவர்களின் இந்தப் பொய் வெளிப்பட்டு விட்டது.
وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَىٰ رَبِّهِمْ ۚ قَالَ أَلَيْسَ هَٰذَا بِٱلْحَقِّ ۚ قَالُوا۟ بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ.
6:30. இறைவனின் நியதிப்படி வரும் அந்தத் தருணத்தில் அவர்களை நீர் காண்பீராயின், “இறைவனின் வாக்கு உண்மை ஆகிவிட்டது அல்லவா?” என்று கேட்கப்படும் போது,“ஆம். எங்கள் இறைவனின் மீது ஆணையாக உண்மைதான்” என்று கூறுவார்கள். “அந்த தருணத்தில் அதை ஏற்றுக் கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது? எல்லாமே முடிந்து விட்டன. நீங்கள் வாழ்ந்த காலமெல்லாம் இறைவனின் அறிவுரைகளை ஏற்காமல் மனம் போன போக்கில் தவறான செயல்களில் ஈடுபட்டு வந்தீர்கள். அதன் விளைவாக நிர்ணயிக்கப்பட்ட வேதனைகளை அனுபவித்தே ஆக வேண்டும்” என்பதே அவர்களின் நிலையாக இருக்கும்.
قَدْ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِلِقَآءِ ٱللَّهِ ۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتْهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةًۭ قَالُوا۟ يَٰحَسْرَتَنَا عَلَىٰ مَا فَرَّطْنَا فِيهَا وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَىٰ ظُهُورِهِمْ ۚ أَلَا سَآءَ مَا يَزِرُونَ.
6:31. அப்போது அல்லாஹ்வின் நியதிப்படி, தம் செயல்களின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைப் பொய்யெனக் கூறி, தம் மனஇச்சையின்படி வாழ்ந்து வந்தவர்கள் பெரும் நஷ்டவாளிகளாக இருப்பார்கள். அவர்கள் எதிர்பாராத விளைவுகள் அவர்கள் முன் வந்து நிற்கும் போது, நாங்கள் இது நாள் வரையில் கடைப்பிடித்து வந்த அலட்சியப் போக்கே இந்தக் கேடுகளுக்குக் காரணம் என்பார்கள். இவ்வாறு புலம்புவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. அவர்கள் பாவச் சுமைகளின் பிடியில் நசுங்கிப் போவார்கள். எவ்வளவு பெரிய துர்பாக்கியமான நிலை இது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا لَعِبٌۭ وَلَهْوٌۭ ۖ وَلَلدَّارُ ٱلْءَاخِرَةُ خَيْرٌۭ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ.
6:32. காரணம் இவர்கள் இவ்வுலக வாழ்க்கையை வீண் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டவர்கள். மேலும் அவர்கள் தம் செயல்கள் எதிர் காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்காமல், தம் மனோ இச்சைப்படி வாழ்ந்தவர்கள். இதனால் அவர்களின் வாழ்வில் பிரச்னைகள் பூதாகரமாக வளர்ந்து அவர்கள் முன் வந்து நிற்கும். மாறாக அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற விதிமுறைக்குப் பயந்து செயல்படுபவர்களின் நிகழ் காலமும், வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பானதாக இருக்கும். (பார்க்க:2:201 & 202) இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?
அல்லாஹ்வைச் சந்திப்பது? திருக்குர்ஆனில் ஆங்காங்கே அல்லாஹ்வைச் சந்திப்பது அல்லது இறைவனைச் சந்திப்பது நிச்சயம் என்பது போன்ற வாசகங்கள் வருகின்றன. இப்படிப்பட்ட வாசகங்களுக்கு அல்லாஹ்வின் அல்லது இறைவனின் நியதிப்படி அவரவர் செய்த செயல்களின் பலன்களைச் சந்திக்கும் கால கட்டம் என பொருள் படும். அதாவது மனிதன் செய்யும் நற்செயல்களுக்கு நற்பலன்களும், தீய செயல்களுக்குத் தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. உலகிலுள்ள சமுதாயங்கள் அல்லது நாடுகள் என்ற அடிப்படையில் கவனிக்கும் போது, அந்தந்த நாட்டு மக்களின் உழைப்பிற்கேற்ப பலன்களையும், தீய செயல்களுக்கு ஏற்ப தீய விளைவுகளையும் அவை சந்தித்துக் கொள்கின்றன. இவை இவ்வுலகிலேயே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நற்செயல்களின் நற்பலன்களோ அல்லது தீய செயல்களின் விபரீத விளைவுகளோ உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. அல்லாஹ்வின் நியதிப்படி அந்தந்த செயலுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவை தோற்றத்திற்கு வருகின்றன. இந்த கால அளவு சில நாட்களாகவும் இருக்கலாம். மாதங்களாகவும் இருக்கலாம். ஏன்? வருடக் கணக்கிலும் இருக்கலாம். ஒரு விதை செடியாகி மரமாகி கனிப்பதற்கு எவ்வாறு காலம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று இந்த இடைவெளி காலத்தை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். இதை குர்ஆன் ‘அஜல்’ என்ற காலத் தவணை ஆகும். இந்த இடைவெளி காலம் கொடுக்கப்பட்டதன் நோக்கமே ஒரு சமுதாயமோ அல்லது தனி நபரோ திருந்துவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பே ஆகும்.(பார்க்க 16:61) இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் பொரும்பாலான மக்களிடம் இருப்பதில்லை. எனவே அவர்கள் இப்படி நிகழப் போவதெல்லாம் பொய் என்று கூறி அலட்சியமாக இருந்துவிட்டு, பிற்காலத்தில் அவதிப்படுவார்கள்.
இரண்டாவதாக தனிநபர் விஷயத்தில், அவர்கள் செய்யும் செயல்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலேயே பலன்களோ அல்லது தீய விளைவுகளோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம். அவரவர் வாழும் காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இது அமையும். அதே சமயத்தில் மனிதனின் வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரக்கூடிய ஒன்றாக இருப்பதால் (பார்க்க 2:28, 37:58, 40:11, 44:56) அவன் செய்து வரும் நற்செயல்கள் மிகைத்திருந்தால் நற்பலன்களையும், தீய செயல்கள் மிகைத்திருந்தால் தீய விளைவுகளையும் நிச்சயமாக மரணத்திற்குப் பின் சந்தித்தே ஆகவேண்டியதாக இருக்கும். (பார்க்க 7:8-9)
இவ்வாறாக தனி நபரோ ஒரு சமுதாயமோ, தாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப விளைவுகளைச் சந்தித்துக் கொள்வதை அல்லாஹ்வைச் சந்திப்பது அல்லது இறைவனைச் சந்திப்பது எனும் குர்ஆனின் வாசகத்திற்குப் பொருளாகிறது.
இதை விட்டுவிட்டு மறுமை நாளில் அல்லாஹ்வை நாம் நேரடியாக சந்தித்துப் பேசுவோம் என்று சொன்னால்,அவனை ஓர் இடத்தில் அடைத்து வைத்து விடுகிறோம். இது திருக்குர்ஆனுக்கு முரணான கருத்தாகும். காரணம் அவன் இல்லாத இடமே இல்லை என்று பல முறை அறிவிக்கிறது.
قَدْ نَعْلَمُ إِنَّهُۥ لَيَحْزُنُكَ ٱلَّذِى يَقُولُونَ ۖ فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَٰكِنَّ ٱلظَّٰلِمِينَ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجْحَدُونَ.
6:33. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் மக்களுக்கு இந்த உண்மைகளை எடுத்துரைக்கும் போது, இவை எல்லாம் உண்மை இல்லை என அவர்கள் அலட்சியமாகக் கூறிவிடுதை எண்ணி, நீர் ஆழ்ந்த கவலையில் இருப்பது நமக்கு தெரியும். அவர்கள் உம்மை பொய்ப்பிக்க வில்லை. அல்லாஹ்வின் அறிவுரைகளை அல்லவா அவர்கள் பொய்ப்பிக்கிறார்கள்? இது எவ்வளவு பெரிய அநியாயம்!
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌۭ مِّن قَبْلِكَ فَصَبَرُوا۟ عَلَىٰ مَا كُذِّبُوا۟ وَأُوذُوا۟ حَتَّىٰٓ أَتَىٰهُمْ نَصْرُنَا ۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمَٰتِ ٱللَّهِ ۚ وَلَقَدْ جَآءَكَ مِن نَّبَإِى۟ ٱلْمُرْسَلِينَ.
6:34. இவ்வாறு பொய்ப்பிப்பதும் புறக்கணிப்பதும் புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக இப்படித்தான் நடந்து வந்துள்ளது. உமக்கு முன் வந்த பல நபிமார்களிடமும் இப்படித்தான் அவர்கள் கூறினார்கள். ஆனால் அவர்களுடைய பேச்சைப் பெரிதுபடுத்தாமல், அவர்களுடைய எதிர்ப்பையும் சமாளித்துக் கொண்டு, அந்த நபிமார்கள் தம் பணியைச் சிறப்பாகத் தொடர்ந்து செய்து வந்தார்கள். காலப்போக்கில் இறைவன் அளித்துள்ள வாக்குப்படி அவர்களுக்கு உதவிகளும் வந்தடைந்தன. இது அல்லாஹ்வின் நிலைமாறா சட்டமாகும். அந்த நபிமார்களின் வரலாறு உமக்கு வந்தே இருக்கிறது.
وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ ٱسْتَطَعْتَ أَن تَبْتَغِىَ نَفَقًۭا فِى ٱلْأَرْضِ أَوْ سُلَّمًۭا فِى ٱلسَّمَآءِ فَتَأْتِيَهُم بِـَٔايَةٍۢ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمْ عَلَى ٱلْهُدَىٰ ۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْجَٰهِلِينَ.
6:35. அவர்கள் வேத அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல் அழிவைத் தேடிக் கொள்கிறார்களே என்ற மனக்கவலை இன்னமும் உம்மிடம் உள்ளது. அவர்கள் மீதுள்ள உம் பற்றுதலைக் காட்டுகிறது. ஆனால் என்ன செய்வது? நீர் ஆயிரம்தான் ஆதாரங்களுடன் அழைத்தாலும், அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதாகவே இல்லையே.
உம்மால் முடிந்தால் பூமியைத் துளைத்து சுரங்கத்தை ஏற்படுத்தியோ அல்லது வானத்தில் ஏணி வைத்து ஏறிச் சென்றோ அவர்கள் கண்ணெதிரே ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்தாலும் அவர்கள் மறுக்கவே செய்வார்களே!
மனிதனுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்து விட்டதால் அவர்கள் அனைவரையும் ஒரே வழியில் செல்லும் கட்டாயத்தில் இருப்பதில்லை. அவ்வாறு மனிதனையும் மற்ற படைப்புகள் போல், தம் இயல்பின் அடிப்படையில் வாழவைக்கும் செயல்திட்டமாக இருந்திருந்தால், அப்படிச் செய்வதில் அல்லாஹ்வுக்கு எவ்வித சிரமமும் இல்லை. ஆகவே இத்தகையவர்களைப் பற்றி கவலைப்பட்டு உம் பொன்னான நேரத்தை வீணடித்து, அறிவைப் பயன்படுத்தாத மக்களில் நீரும் ஒருவராக ஆகிவிட வேண்டாம்.
۞ إِنَّمَا يَسْتَجِيبُ ٱلَّذِينَ يَسْمَعُونَ ۘ وَٱلْمَوْتَىٰ يَبْعَثُهُمُ ٱللَّهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُونَ.
6:36. எனவே சிந்தித்து செவி ஏற்கும் சமூகத்தவர்கள் தாம் இந்த வேத அறிவுரைகளை ஏற்று செயல்படுவார்கள். எதைப் பற்றியும் சிந்திக்காமல் நடைபிணமாக வாழ்பவர்களை நீர் நேர்வழியில் கொண்டுவர முடியாது. இத்தகையவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடிபட்டு, காலம் காலமாக கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அனுபவித்து, அதன்பின் அவர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படும். அவர்கள் வாழ்வில் உயிரோட்டம் பெற இறுதியில் இந்த இறைவழிகாட்டுதலின் பக்கமே வந்தாக வேண்டும். அதுவரையில் பல யுகங்கள் கடந்து விடும்.
وَقَالُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ءَايَةٌۭ مِّن رَّبِّهِۦ ۚ قُلْ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةًۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.
6:37. இத்தகையவர்கள், இந்த இறைத்தூதர் இறைவனிடமிருந்து ஏதாவது அற்புதமான ஓர் அத்தாட்சியையாவது கொண்டு வந்து காட்டக் கூடாதா என்கிறார்கள். அப்படி ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க அல்லாஹ்விடம் வல்லமை இருக்கிறதா இல்லையா என்பது அல்ல கேள்வி. அவ்வாறு அல்லாஹ் செய்து காட்ட முடியும். ஆனால் இவை எல்லாம் மனித வாழ்க்கைக்கு ஒரு பலனையும் தராது. எதையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து, எது நல்லது எது கெட்டது என்று அறிவைப் பயன்படுத்தி மனிதன் வாழவேண்டும். இதற்கு இறைவழிகாட்டுதல் வழிவகுக்கிறது. இதுவே அல்லாஹ்வின் நாட்டமாகும். (பார்க்க:25:73) இதைப் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை.
மாயாஜால கண்கட்டி வித்தைகள் என்பது தனி நபரின் கலை ஆகும். ஒருவர் தம் சொந்த முயற்சியில் அந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால் அவை யாவும் கண நேரத்திற்கு பரவசமூட்டும் காட்சியே ஆகும். அதைப் பார்க்கும் மனிதன் மதி மயங்கிப் பேரானந்தம் அடைவான். அதனால் மனித வாழ்வில் எந்தப் பலனும் கிடைக்காது. ஆனால் இறைவழிகாட்டுதல் என்பது உலக மக்கள் அனைவரும் நிலையான சந்தோஷங்களுடன் கூடிய வாழ்வு பெற என்ன வழி என்பதைத் தெளிவாகவும் அறிவுப்பூர்வமாகவும் எடுத்துரைக்கக் கூடியதாகவே உள்ளது. எனவே இங்கு கண்கட்டி வித்தைகளுக்கு வேலை இருப்பதில்லை. எந்த நபிமார்களுக்கும் அப்படி அற்புதங்களைக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டதுமில்லை என்பதே குர்ஆனின் நிலைப்பாடாகும்.
وَمَا مِن دَآبَّةٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا طَٰٓئِرٍۢ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّآ أُمَمٌ أَمْثَالُكُم ۚ مَّا فَرَّطْنَا فِى ٱلْكِتَٰبِ مِن شَىْءٍۢ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ يُحْشَرُونَ.
6:38. மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள முழு சுதந்திரத்தைப் போல் மற்ற படைப்பினங்களுக்கு அளிக்கப்படவில்லை. பூமியில் ஊர்ந்து செல்லும் பிராணிகளையும், தம் இறக்கைகளால் பறக்கும் பறவை இனங்களையும் கவனித்துப் பாருங்கள். அவையும் உங்களைப் போன்ற உயிரினங்களே. எனினும் அவை யாவும் அல்லாஹ் நிர்ணயித்த சட்ட வரம்புக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றன. அதாவது தம் இயல்பின் அடிப்படையில் வாழ்கின்றன. அதற்கு மாற்றமாக அவற்றால் செயல்படவும் முடியாது. எனவேதான் அவை யாவும் ஒன்றிணைந்து சிறப்பாக வாழ்கின்றன. அதனால் அங்கு எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை.
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا صُمٌّۭ وَبُكْمٌۭ فِى ٱلظُّلُمَٰتِ ۗ مَن يَشَإِ ٱللَّهُ يُضْلِلْهُ وَمَن يَشَأْ يَجْعَلْهُ عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.
6:39. ஆனால் மனிதனின் நிலை அவ்வாறில்லை. இறைக் கட்டளைகள் சரியில்லை எனக் கூறி தனக்கென ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முழு சுதந்திரம் உண்டு. அதுவே சரியான வழிமுறை என்றும் அவன் நினைத்துக் கொள்கிறான். இவ்வாறாக அவர்கள் தேர்ந்தெடுத்த தவறான வழிமுறைகளை செவிடர்களைப் போன்றும் ஊமைகள் போன்றும் பின்பற்றுவதால்,அவர்களின் வாழ்வில் இருள் சூழ்ந்து கொள்கிறது. ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்கள் வழிதவறிச் சென்றவர்களாகி விடுகிறார்கள். எதையும் சிந்தித்துச் செயலாற்றுபவர்கள், அல்லாஹ்வின் நேர்வழியைப் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.
قُلْ أَرَءَيْتَكُمْ إِنْ أَتَىٰكُمْ عَذَابُ ٱللَّهِ أَوْ أَتَتْكُمُ ٱلسَّاعَةُ أَغَيْرَ ٱللَّهِ تَدْعُونَ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
6:40. “அல்லாஹ்வின் நியதிப்படி இயற்கைச் சீற்றங்களின் அடிப்படையில் ஆபத்துகள் வந்துவிட்டாலோ, அல்லது கலவரங்களின் மூலம் துயரங்கள் ஏற்பட்டாலோ அதிலிருந்து மீள நீங்கள் வணங்கி வரும் தெய்வங்களையா உதவிக்கு அழைக்கிறீர்கள்? இல்லையே. அல்லாஹ்வின் நிவாரண வழிமுறைகளைக் கொண்டுதானே உதவியைத் தேடுகிறீர்கள்! இதைப் பற்றி எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
بَلْ إِيَّاهُ تَدْعُونَ فَيَكْشِفُ مَا تَدْعُونَ إِلَيْهِ إِن شَآءَ وَتَنسَوْنَ مَا تُشْرِكُونَ.
6:41. அப்படியும் நீங்கள் வணங்கி வரும் தெய்வங்களை அழைத்தாலும், அவற்றிடமிருந்து ஒரு பலனும் பெற முடியாது. எனவே அவற்றை எல்லாம் மறந்துவிட்டு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நிவாரண வழிமுறைகளையே நீங்கள் கையாளுகிறீர்கள். அல்லாஹ்வின் நியதிப்படி எவற்றை உங்களால் காப்பாற்ற முடிகிறதோ, அவற்றை மட்டுமே நீங்கள் காப்பாற்றி விடுகிறீர்கள். எனினும் அதன்பின் நீங்கள் பழையபடி உதவிசெய்ய முடியாத கற்பனைத் தெய்வங்களின் பக்கமே விரைகிறீர்கள்.
وَلَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰٓ أُمَمٍۢ مِّن قَبْلِكَ فَأَخَذْنَٰهُم بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ.
6:42. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உமக்கு முன்னரும் பல சமூகத்தாரிடம் நம் தூதர்களை அனுப்பினோம். அவர்களும் இறைச் செய்திகளை எடுத்துரைத்து சீர்திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் காலப்போக்கில் அலட்சியப் படுத்தியதால் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களை வறுமையும் நோயும் பீடிக்கத் தொடங்கின. அப்போதாவது அவர்கள் அதைப்பற்றிச் சிந்தித்து திருந்தி வாழந்திருக்கலாம் அல்லவா?
فَلَوْلَآ إِذْ جَآءَهُم بَأْسُنَا تَضَرَّعُوا۟ وَلَٰكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.
6:43. ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட சிறு ஆபத்துகளை முன் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வில்லை. காரணம் அவர்களுடைய சிந்தனா சக்தி அந்த அளவிற்கு மங்கிப் போய்விட்டது. மேலும் அவர்கள் செய்யும் தீய செயல்கள் யாவும் அவர்களுக்கு மிகவும் அழகான செயல்களாகவே தோன்றின. அந்த அளவிற்கு அவர்கள் தம் மனோ இச்சைக்கு அடிமையாகி இருந்தார்கள்.
فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَٰبَ كُلِّ شَىْءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُوا۟ بِمَآ أُوتُوٓا۟ أَخَذْنَٰهُم بَغْتَةًۭ فَإِذَا هُم مُّبْلِسُونَ.
6:44. அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருப்பதால், மனிதனின் வாழ்வாதார வசதிகள் விஷயத்தில் எங்கும் எந்தக் குறையும் வைப்பதில்லை. (பார்க்க 17:18-20) அவர்கள் வேத அறிவுரைகளை ஏற்று அதன்படி சமூக அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். வாழ்வாதாரக் கதவுகள் அனைவருக்கும் திறந்தே இருப்பதால், அவரவர் உழைப்பிற்கு ஏற்ப வசதி வாய்ப்புகள் பெருகி வருகிறது. அதனால் அவர்கள் ஒரு புறம் மகிழ்ச்சியின் மிதப்பில் இருக்கும் போது, மறுபுறம் அவர்களிடையே உள்ள தீய பழக்க வழக்கங்களின் தாக்கங்களினால் சமுதாயம் சீரழிவின் பக்கம் போய்விடுகிறது. இதனால் இறுதியில் அவர்கள் எதிர்பாராத வேதனைகள் அவர்களை வந்தடையும் போது, அந்த அழிவிலிருந்து மீள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் மனம் தளர்ந்து போவார்கள்.
فَقُطِعَ دَابِرُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ۚ وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.
6:45. இப்படியாக அக்கிரமச் செயல்களில் ஈடுபடும் சமுதாயங்கள் வேரறுக்கப்படுகின்றன. அப்போதுதான் உலகம் சீர்பட்டு சுமுகமான சூழ்நிலைக்கு திரும்பும். இவ்வாறாக அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிக்கின்ற இறைவனாகிய அல்லாஹ்வின் இத்தகைய ஏற்பாடுகள் ஆயிரமாயிரம் போற்றுதலுக்கு உரியதாக ஆகிவிடுகின்றன.
அதாவது காலம் காலமாக உலகில் நடந்து வந்த வரலாற்று நிகழ்வுகளைச் சிந்தித்துப் பாருங்கள். தமக்குக் கிடைத்துள்ள அறிவாற்றல், சிந்தனைப் புலன்கள் யாவும் மற்றவர்களை விடச் சிறப்பானவை என்று பொரும்பாலோர் நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் இறைவழிகாட்டுதல் என்று வரும்போது, அது அவசியமில்லை என்று நினைத்து அதை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.
قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَخَذَ ٱللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَٰرَكُمْ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِهِ ۗ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْءَايَٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ.
6:46. “உங்களிடமுள்ள செவிப்புலன்களும், பார்வைப் புலன்களும், சிந்திக்கும் ஆற்றல்களும் நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்டவையா? அவற்றை உங்களுக்கு அளித்தது அல்லாஹ்தானே. அவற்றை உங்களிடமிருந்து போக்கிவிட்டால், அவற்றை மீட்டிக் கொள்ள யாரால் முடியும்?” என்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களிடமுள்ள இந்த அத்தாட்சிகளைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் மாய மந்திர அத்தாட்சிகளை எதிர் பார்கின்றனரே! அவர்கள் இன்னமும் வேத அறிவுரைகளை ஏற்க மறுப்பவர்களாகவே இருப்பதால், இதை அவர்களிடம் தொடர்ந்து விவரித்துக் கூறுங்கள்.
قُلْ أَرَءَيْتَكُمْ إِنْ أَتَىٰكُمْ عَذَابُ ٱللَّهِ بَغْتَةً أَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ إِلَّا ٱلْقَوْمُ ٱلظَّٰلِمُونَ.
6:47. ஆக அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படும் வேதனைகள் எதிர்பாராத விதமாகவோ அல்லது இறைத்தூதர்கள் மூலம் செய்யும் முன்னெச்சரிக்கை செய்த பின்போ ஏற்பட்டால், அக்கிரம் செய்யாத வேறு சமுதாயமா வேதனைக்குள்ளாகும்? இல்லையே. இந்த வேதனைகளை அக்கிரமக்கார சமுதாயங்கள் தானே சந்திக்க வேண்டும்.
وَمَا نُرْسِلُ ٱلْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ ۖ فَمَنْ ءَامَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.
6:48. எனவே இறைத்தூதர்களின் வருகையின் நோக்கமே மக்களின் எந்தெந்தச் செயல்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைத் தெளிவாக எடுத்துரைப்பதே ஆகும். ஆக்கப்பூர்வமான எந்த நற்செயல்களுக்கு என்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதையும், எந்தெந்த தீய செயல்களுக்கு என்ன விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதையும் எடுத்துரைப்பதே அவர்களின் கடமையாகும். அவற்றை ஏற்று அதன்படி திருத்திக் கொண்டு செயல்படும் சமுதாயம், அச்சமோ துக்கமோ ஏதுமின்றி நிம்மதியாகவே இருக்கும் (மேலும் பார்க்க 5:92 ரூ 99)
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا يَمَسُّهُمُ ٱلْعَذَابُ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ.
6:49. மாறாக அந்த வேத அறிவுரைகள் சரியில்லை எனக் கூறி, அவற்றைப் பொய்ப்பிக்கும் சமுதாயம், வேதனைகளில் சிக்கிக்கொள்ளும். அவை அவர்கள் செய்யும் முறையற்ற செயல்களின் காரணமாகவே ஏற்படுபவை ஆகும்.
قُل لَّآ أَقُولُ لَكُمْ عِندِى خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعْلَمُ ٱلْغَيْبَ وَلَآ أَقُولُ لَكُمْ إِنِّى مَلَكٌ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ ۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ ۚ أَفَلَا تَتَفَكَّرُونَ.
6:50. “எனவே நானும் இறைத்தூதர்கள் வரிசையில் ஒருவன் ஆவேன். (பார்க்க - 36:3) எனவே என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்றோ, மறைவானவற்றை அறிபவன் என்றோ அல்லது நான் ஒரு மலக்கு என்றோ உங்களிடம் கூறவில்லை. எனக்கு அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. எனவே எவ்வாறு குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டாரோ, அது போல இறைவழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக வாழ்பவர்களும் அவற்றை நிராகரித்து குருட்டுத்தனமாக வாழ்பவர்களும் சமமாக மாட்டார்கள். இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
وَأَنذِرْ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوٓا۟ إِلَىٰ رَبِّهِمْ ۙ لَيْسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِىٌّۭ وَلَا شَفِيعٌۭ لَّعَلَّهُمْ يَتَّقُونَ.
6:51. மேலும் தாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப இறைவன் நிர்ணயித்துள்ள இறுதி விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சமுள்ளவர்களுக்கு, இந்த எச்சரிக்கை பலனளிக்கும். மேலும் இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டால், அதன் விளைவுகளைச் சந்திக்கும் வேளையில் தம்மைக் காப்பாற்றவோ, பரிந்து பேசவோ எவரும் இருக்கமாட்டார்கள் என்பதை அஞ்சி செயல்படுவார்கள்.
இறைவழிகாட்டுதலுக்கு இணங்கி முதன்முதலில் நலிந்தோரும் ஏழை எளிய மக்களும் வந்து இணைவார்கள். செல்வந்தர்களுக்கும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதில் ஈடுபாடுகள் விரைவில் ஏற்படாது.
وَلَا تَطْرُدِ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ ۖ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِم مِّن شَىْءٍۢ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِم مِّن شَىْءٍۢ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ ٱلظَّٰلِمِينَ.
6:52. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி எவர்கள் அல்லாஹ்வின் அழைப்புப் பணியில் அல்லும் பகலும் ஈடுபடுகிறார்களோ, அவர்களை நீர் வெறுக்காமல் அரவணைத்துச் செல்வீராக. ஆக ஏழை பணக்காரன் என்பதனால் யாரும் யாருக்கும் பொறுப்பாளி ஆகமாட்டார்கள். இவை அவரவர் உழைப்பைப் பொறுத்தே அமையும். எனவே அவர்கள் ஏழைகள் என்பதால் அவர்களை ஒதுக்கிவிட வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயம் செய்வோரில் ஒருவராகி விடுவீர். (மேலும் பார்க்க 8:62-64, 11:27-30, 18:28, 26:111-114, 80:1-11)
وَكَذَٰلِكَ فَتَنَّا بَعْضَهُم بِبَعْضٍۢ لِّيَقُولُوٓا۟ أَهَٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيْهِم مِّنۢ بَيْنِنَآ ۗ أَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِٱلشَّٰكِرِينَ.
6:53. சமுதாயத்திலுள்ள செல்வந்தர்கள், அங்கு கூடியுள்ள ஏழை எளியவர்களைப் பார்த்து, இவர்களையா அல்லாஹ் அருள் புரிவதற்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்? நாங்கள் எப்படி அவர்களோடு இணைந்து அமர்வது என்று கேலியாகப் பேசுகிறார்கள். ஆனால் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்பவர்கள் யார், தற்பெருமை கர்வத்துடன் நடந்து கொள்பவர்கள் யார் என்று அல்லாஹ்வுக்குத் தெரியாதா?
وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِـَٔايَٰتِنَا فَقُلْ سَلَٰمٌ عَلَيْكُمْ ۖ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۖ أَنَّهُۥ مَنْ عَمِلَ مِنكُمْ سُوٓءًۢا بِجَهَٰلَةٍۢ ثُمَّ تَابَ مِنۢ بَعْدِهِۦ وَأَصْلَحَ فَأَنَّهُۥ غَفُورٌۭ رَّحِيمٌۭ.
6:54. “எனவே அங்கு வரும் உங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களிடம், “நீங்கள் எதற்கும் அஞ்சாதீர்கள். உங்கள் நல்வாழ்விற்காக இந்த அமைப்பு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரும். பணக்காரர்களின் கேலிப் பேச்சைக் கேட்டு உங்களை ஒதுக்கி விடாது. உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் கிடைக்க வழி வகுப்பது இந்த ஆட்சியமைப்பு தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளது. எனவே அறியாமையில் நீங்கள் செய்த பாவச் செயல்களை விட்டுவிட்டு, மனம் திருந்தி, இந்த அமைப்பின் சட்டப்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்து வந்தால் உங்களுக்குப் பாதுகாப்பான வாழ்வு கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும. இது அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையாகும்” என்று மனஅமைதி பெரும் வகையில் ஆறுதல் அளியுங்கள்.
وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ ٱلْمُجْرِمِينَ.
6:55. குற்றம் புரிவதில் நிலைத்திருப்பவர்கள் யார், குற்றங்களிலிருந்து மீள நாடுவோர் யார் என்பதைத் தெளிவாக்கும் பொருட்டு இவர்களைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
قُلْ إِنِّى نُهِيتُ أَنْ أَعْبُدَ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ ۚ قُل لَّآ أَتَّبِعُ أَهْوَآءَكُمْ ۙ قَدْ ضَلَلْتُ إِذًۭا وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُهْتَدِينَ.
6:56. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் செல்வந்தர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வை அன்றி வேறு எவற்றைக் கடவுளாகப் பாவித்து வணங்கி வருகிறீர்களோ, அவற்றை விட்டு விலகியிருக்க எனக்கு கட்டளை வந்துள்ளது. எனவே உங்கள் விருப்பங்களுக்கு இணங்கி நான் செயல்படுவதற்கில்லை. அவ்வாறு செய்தால் நான் வழிதவறிச் சென்றவன் ஆகிவிடுவேன். அதன் பின் நேர்வழி பெற்றவர்களின் பட்டியலில் நான் இடம் பெற மாட்டேன்” என்று கூறிவிடுவீராக.
قُلْ إِنِّى عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّى وَكَذَّبْتُم بِهِۦ ۚ مَا عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦٓ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ يَقُصُّ ٱلْحَقَّ ۖ وَهُوَ خَيْرُ ٱلْفَٰصِلِينَ.
6:57. “நான் என் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கின்ற தெளிவான வழிகாட்டுதலின்படி செயல்படுகிறேன். ஆனால் நீங்களோ அவை சரியில்லை என்று கூறுகிறீர்கள். இறைவழிகாட்டுதலுக்கு மாறு செய்தால் வாழ்வில் வேதனைகள் வரும் என்று நான் சொன்னால், அது எப்போது வரும் என்று அவசரப்படுகிறீர்கள். அவை என் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயமல்ல அவை அல்லாஹ்வின் நியதிப்படி, “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் ஏற்பட நிர்ணயிக்கப் பட்ட காலத் தவணைப்" படி நடப்பவை ஆகும். அதன் ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. மனித வாழ்வின் சரியான பாதையை அல்லாஹ்வின் இவ்வேதம் காட்டுகிறது. எனவே அவரவர் செயல்களுக்கு மிகச் சரியான விளைவுகளை ஏற்படுத்தி நீதி வழங்குவதில் அல்லாஹ்வின் சட்டம் தவறாது” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.
قُل لَّوْ أَنَّ عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦ لَقُضِىَ ٱلْأَمْرُ بَيْنِى وَبَيْنَكُمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِٱلظَّٰلِمِينَ.
6:58. “நீங்கள் நினைப்பது போல் அந்த வேதனைகளை உடனே வரவழைத்துக் காண்பிக்க என்னால் இயலாது. அது என் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயமாக இருந்திருந்தால், நமக்கிடையே எப்போதோ விவகாரம் முடிந்து போய் இருக்கும். ஆனால் அநியாயச் செயல்களின் விளைவுகள் எப்போது வரும் என்ற ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.
۞ وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلْغَيْبِ لَا يَعْلَمُهَآ إِلَّا هُوَ ۚ وَيَعْلَمُ مَا فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۚ وَمَا تَسْقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍۢ فِى ظُلُمَٰتِ ٱلْأَرْضِ وَلَا رَطْبٍۢ وَلَا يَابِسٍ إِلَّا فِى كِتَٰبٍۢ مُّبِينٍۢ.
6:59. அது மட்டுமின்றி இந்தப் பிரபஞ்சங்கள் அனைத்தும் செயலாக்கம் பெற சட்டதிட்டங்களை உருவாக்கியது அல்லாஹ்தான். அதன் செயல்பாடுகளின் இரகசியங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். கடலிலும் பூமியிலும் இருப்பவை என்ன என்பதையும் அவன் அறிவான். அவனுக்குத் தெரியாமல் ஒரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் ஆழ்பகுதியில் இருளில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்து போவதும் எல்லாமே அல்லாஹ்வின் ஞானத்தில் உள்ளது. எல்லா படைப்புகளின் செயல் வடிங்களைப் பற்றியும் அவற்றின் வழிமுறைகளைப் பற்றியும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலே சொல்லப்பட்டது போல் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா படைப்புகளும் அல்லாஹ் உருவாக்கிய இயற்கைச் சட்டப்படி இயங்கி வருகின்றன. அவற்றைப் படைத்து இயக்கி வைப்பது அல்லாஹ் என்பதால் அதன் முழு ஞானமும் அவனிடம் உள்ளது. அல்லாஹ்வுக்குத் தெரிந்த இந்த உண்மைகளையும் அவற்றின் செயல் வடிவங்களையும் (சாவிகள்) கல்வி ஞானத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் (Scientists) ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தம்மால் முடிந்த அளவிற்குத் தெரிந்து கொள்வார்கள். (பார்க்க 3:7, 35:27-28)
وَهُوَ ٱلَّذِى يَتَوَفَّىٰكُم بِٱلَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُم بِٱلنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰٓ أَجَلٌۭ مُّسَمًّۭى ۖ ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.
6:60. பிரபஞ்ச செயல்பாடுகளுக்கு ஏற்படுத்தப்பட்ட அதே செயல்திட்டங்களின் தொடரில் மனிதனுக்கும் இவ்வுலகில் வாழ்வு கிடைத்துள்ளது. அதன்படி மனிதன் இரவில் நித்திரையில் ஆழ்ந்தி விடுகிறான். அதனால் பகலில் பணிபுரிய முடிகிறது. இப்படியாக ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் அவன் உயிர் வாழ்கிறான். அவன் செய்துவரும் செயல்களின் தாக்கங்கள் யாவும் இறைவன் நிர்ணயித்தபடி அதனதன் விளைவுகள் என்ற இலக்கை நோக்கியே செல்கின்றன. இறுதியில் அவற்றின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் நாளில், தான் செய்து வந்தவை அவனுக்கு வெட்டவெளிச்சம் ஆகிவிடும்.
இந்த வாசகத்தின் படி மனித வாழ்வு இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முதலில் மனிதனின் சரீர வாழ்க்கை பற்றியது. இது மற்ற உயிரினங்களைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது. சுவாசம், பசி, தாகம், தூக்கம், பாலுணர்வு மற்றும் மரணம் சம்பந்தப்பட்டவை. இவை யாவும் அல்லாஹ் நிர்ணயித்த சட்டப்படி செயல்படுகின்றன.
மனித வாழ்வின் இரண்டாவது அம்சம் “மனிதனின் சுயம்” சம்பந்தப்பட்டவை ஆகும். இங்கு மனிதனுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு விட்டதால், அவனுடைய செயல்களைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வின் நேரடி தலையீடோ அல்லது கட்டுப்பாடோ இருப்பதில்லை. ஆனால் அவன் செய்யும் செயல்களின் விளைவுகள் அல்லாஹ்வின் விதிமுறைக்கு கட்டுப்பட்ட விஷயமாகும். அதிலிருந்து உலகில் பிறந்த யாராலும் தப்பிக்கவே முடியாது. இதுதான் “அல்லாஹ்வின் நாட்டம்” என்பதன் சரியான பொருளாகும்.
وَهُوَ ٱلْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۦ ۖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ.
6:61. அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியில்தான் மனிதனும் கட்டுப்பட்டவனாக இருக்கின்றான். அவன் எதிலும் தப்பிச் செல்லாதவாறு அவன் செய்யும் செயல்கள் யாவும் கண்காணிக்கப்படுகின்றன. இறைவனின் நியதிப்படி ஆயுட் காலம் முடிவடைந்து மரணம் நெருங்கியதும் அவனது உயிர் அவனை விட்டுப் பிரிந்துவிடுகிறது. இந்த விதிமுறையிலிருந்து யாரும் தப்ப முடியாது. (பார்க்க 32:11)
ثُمَّ رُدُّوٓا۟ إِلَى ٱللَّهِ مَوْلَىٰهُمُ ٱلْحَقِّ ۚ أَلَا لَهُ ٱلْحُكْمُ وَهُوَ أَسْرَعُ ٱلْحَٰسِبِينَ.
6:62. அதன்பின் அவன் தன் வாழ்வின் அடுத்த கட்டத்தில் நுழைகின்றான். இவ்வுலகில் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ற வகையில் பலன்களும் விளைவுகளும் அப்போது வெளிப்பட்டு விடும். அங்கு அல்லாஹ்வின் அதிகாரம் மட்டுமே செயல்படும். அதில் வேறு யாருடைய தலையீடும் இருக்காது. அவன் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவதில் எவ்வித தாமதமும் இருக்காது.
قُلْ مَن يُنَجِّيكُم مِّن ظُلُمَٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ تَدْعُونَهُۥ تَضَرُّعًۭا وَخُفْيَةًۭ لَّئِنْ أَنجَىٰنَا مِنْ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ.
6:63. “கடலிலோ பூமியிலோ நீங்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டால், யாருடைய விதிமுறைகளின்படி மீளுகிறீர்கள்.? அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் அல்லாஹ்விடமே பணிவாகவும் மவுனமாகவும் மன்றாடிப் பிரார்த்திக்கின்றீர்கள். அந்தத் துயரிலிருந்து எங்களைக் காப்பாற்றி விட்டால் நாங்கள் எப்போதும் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்வோம் என்று உறுதியும் அளிக்கிறீர்கள். இது உண்மையா இல்லையா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
قُلِ ٱللَّهُ يُنَجِّيكُم مِّنْهَا وَمِن كُلِّ كَرْبٍۢ ثُمَّ أَنتُمْ تُشْرِكُونَ.
6:64. அந்த ஆபத்திலிருந்தும் மற்ற எல்லா கஷ்டங்களிலிருந்தும் அல்லாஹ்வின் நியதிப்படியே உங்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. இவ்வாறிருந்தும் உங்கள் வாழ்வின் மற்ற விஷயங்களில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணை வைத்து, வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி, அவற்றைப் பின்பற்றி அழிவைத் தேடிக் கொள்கிறீர்களே!
قُلْ هُوَ ٱلْقَادِرُ عَلَىٰٓ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًۭا مِّن فَوْقِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًۭا وَيُذِيقَ بَعْضَكُم بَأْسَ بَعْضٍ ۗ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْءَايَٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ.
6:65. ஆக தவறான வழியில் செல்லும் சமுதாயங்களில், துயரங்கள் பல கோணங்களில் ஏற்பட்டு வரும். சில சமயங்களில சமுதாயத்தில் உள்ள மேல்மட்ட மக்களுள் சீர்கேடுகள் ஏற்பட்டு அழிவுகள் ஏற்படும். சில சமயம் சமுதாயத்தின் அடிமட்ட மக்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு சீர்கெடும். சில சமயங்களில் இதுவே பிரிவினை உண்டாவதற்குக் காரணிகளாக அமைந்து விடும். இதனால் சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்து கலகம், கலவரம், மோதல்கள் என்று பல கோணங்களில் கொடுமைகள் நிகழ்ந்து வரும். இவை யாவும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற விதிமுறைகளின் படியே நடப்பவையாகும். இதை மனதில் நன்றாகப் பதியவைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் அறிவுரைகளின் படி செயல்படவேண்டும் என்பதற்காகவே இத்தகைய தெளிவான வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன.
وَكَذَّبَ بِهِۦ قَوْمُكَ وَهُوَ ٱلْحَقُّ ۚ قُل لَّسْتُ عَلَيْكُم بِوَكِيلٍۢ.
6:66. இப்படியாகத் தெளிவான ஆதாரங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தும், பெரும்பாலோர் இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. எனவே “நான் உங்களைக் கண்காணிக்கும் அதிகாரி இல்லை. உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பாளி ஆவீர்கள்” என்று அவர்களிடம் கூறிவிடும்.
لِّكُلِّ نَبَإٍۢ مُّسْتَقَرٌّۭ ۚ وَسَوْفَ تَعْلَمُونَ.
6:67. “மேலும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதன் விளைவுகள் ஏற்படுவதற்கு காலத் தவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விளைவுகள் தோற்றத்திற்கு வந்ததும் நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள்”
وَإِذَا رَأَيْتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِىٓ ءَايَٰتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا۟ فِى حَدِيثٍ غَيْرِهِۦ ۚ وَإِمَّا يُنسِيَنَّكَ ٱلشَّيْطَٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ ٱلذِّكْرَىٰ مَعَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.
6:68. எனவே இறைவழிகாட்டுதல்கள் விஷயத்தில் வீணான விவாதங்கள் செய்பவர்களைக் கண்டால், அவர்களை அதை விட்டு வேறு விஷயத்திற்குத் திசைத் திருப்ப முயலுங்கள். அதையும் மீறி அவர்கள் அதில் நிலைத்திருந்தால், அவர்களை விட்டு நளினமாக விலகி விடுங்கள். சில சமயங்களில் நீங்களும் அந்த விவாதங்களில் ஈர்க்கப்பட்டு விட்டால், “அநியாயக்காரக் கூட்டத்துடன் நீங்கள் அமர்ந்திருக்க வேண்டாம்” என்ற அல்லாஹ்வின் அறிவுரை நினைவுக்கு வந்ததும் அங்கிருந்து விலகிவிடுங்கள்.
وَمَا عَلَى ٱلَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِم مِّن شَىْءٍۢ وَلَٰكِن ذِكْرَىٰ لَعَلَّهُمْ يَتَّقُونَ.
6:69. இப்படியாக தொடர்ந்து வீணான தர்க்கங்கள் செய்பவர்களைக் கண்டிப்பது இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களின் பொறுப்பல்ல. அதே சமயத்தில் அப்படிப்பட்டவர்களை விட்டு விலகியிருக்க அறிவறுத்துவதன் நோக்கமே நீங்கள் வீணான பேச்சில் ஈடுபடக்கூடாது என்பதற்காகத்தான்.
وَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَعِبًۭا وَلَهْوًۭا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ وَذَكِّرْ بِهِۦٓ أَن تُبْسَلَ نَفْسٌۢ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِىٌّۭ وَلَا شَفِيعٌۭ وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍۢ لَّا يُؤْخَذْ مِنْهَآ ۗ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ أُبْسِلُوا۟ بِمَا كَسَبُوا۟ ۖ لَهُمْ شَرَابٌۭ مِّنْ حَمِيمٍۢ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ.
6:70. மனித நேயத்தைக் கட்டிக்காக்கும் மார்க்க விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், இவ்வுலக வாழ்வின் வெறும் பொழுது போக்குகளிலும், சொகுசாக வாழ்வதே தன் குறிக்கோள் என்ற எண்ணத்திலும் பலர் மதிமயங்கி இருக்கிறார்கள். அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். அவர்களின் தவறான செயல்களால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளே அவர்களை சூழ்ந்து கொள்ளும் என்பது உலக நியதி. முடிந்த வரையில் இதைப் பற்றிய அறிவுரைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தும் எச்சரித்தும் வாருங்கள்.
அவர்களுக்கு ஏற்படும் துயரங்களிலிருந்து மீள அல்லாஹ்வின் வழிமுறைத் தவிர வேறு எந்த வழியும் இருக்காது. அந்த விளைவுகள் தோற்றத்திற்கு வந்தபின், அதை மாற்றி அமைக்க யாருடைய பரிந்துரையும் செல்லாது. அவர்கள் இதுநாள் வரையில் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் பாவச் செயல்களின் விளைவுகள் ஏற்படாதவாறு ஈடாகக் கொடுத்தாலும் தவிர்க்க முடியாது.
இப்படியாக அவர்கள் செய்து வந்த தவறான செயல்களே அவர்களுடைய வாழ்வை நாசமாக்க காரணமாகிவிடும். அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அதற்கு மாற்றமாகச் செயல்பட்டு வந்ததால், வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த உண்மைகளை எடுத்துரைத்து அவர்களை திருத்த முயலுங்கள்.
قُلْ أَنَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِى ٱسْتَهْوَتْهُ ٱلشَّيَٰطِينُ فِى ٱلْأَرْضِ حَيْرَانَ لَهُۥٓ أَصْحَٰبٌۭ يَدْعُونَهُۥٓ إِلَى ٱلْهُدَى ٱئْتِنَا ۗ قُلْ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلْهُدَىٰ ۖ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ.
6:71. “எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, யாதொரு பலனும் அளிக்காத வேறு வழிமுறைகளையா பின்பற்றுவோம்? நீங்கள் வணங்கி வரும் கற்பனைத் தெய்வங்களுக்கோ எந்த நன்மையும் தீமையும் செய்யும் சக்தி இல்லையே. மனித வாழ்வின் நேரான பாதையை அல்லாஹ் கோடிட்டு காட்டிய பின்பும், நாங்கள் அதை விட்டு பின்வாங்கிவிடுவோமா? வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சரியான பாதையின் பக்கம் அழைக்கும் நண்பனை வைத்துக் கொண்டு, வாழ்வில் யாதொரு பிடிப்புமில்லாமல் தட்டழிந்து திரிபவனையா நண்பனாக்கிக் கொள்வோம்? எனவே அல்லாஹ் காட்டும் வழியே மிகச் சரியான வழியாகும். ஆக அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் தலைவணங்கி செயல்படும்படி நாம் கட்டளை இடப்பட்டுள்ளோம்” என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
وَأَنْ أَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّقُوهُ ۚ وَهُوَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ.
6:72. அது மட்டுமின்றி சமுதாய மக்களை தவறான செயல்களை விட்டு தடுத்து, நன்மையான செயல்களைச் செய்ய அறிவுறுத்தும் "ஸலாத்" முறையை (பார்க்க 29:45) நிலைநிறுத்தி அல்லாஹ்வின் அறிவுரைகளைப் பேணிநடந்து அதன்படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்லுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் "பதிலளிக்கும் நாள்" நிச்சயம் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ ۚ قَوْلُهُ ٱلْحَقُّ ۚ وَلَهُ ٱلْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ ۚ عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ.
6:73. எனவே வானங்களையும் பூமியையும் படைத்தது வீண் விளையாட்டிற்காக அல்ல. உயர்ந்த ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே அவை அனைத்தும் படைக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மையாகும். எனவே அல்லாஹ் எதையும் படைக்க நாடினால் அந்தந்த கால அளவின்படி (32:5 & 70:4)அவை உருவாகி வருகின்றன.அதே போல் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் வீண் விளையாட்டுக்காகத் தரப்படவில்லை. அதுவும் உயர்ந்த நோக்கங்களுக்காக அருளப்பட்டுள்ளது. அதில் அளிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் உண்மையின் அடிப்படை கொண்டவையே என நிரூபணம் ஆகும். அகிலங்கள் அனைத்தும் அவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுவதால், இங்கு நடப்பவையும் நடக்கப் போவதும் என்ன என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே இறைவழிகாட்டுதலின்படி நியாயமான ஆட்சி அமைப்பு உருவாகும் கால கட்டத்தில், சமூக விரோத சக்திகளுடன் மோத வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அல்லாஹ் ஞானம் மிக்கவனாகவும் அனைத்தையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்வின் படைப்புகள் யாவும் பரிணாம வளர்ச்சியின்படி பலப் படித்தரங்களைக் கடந்து உருவாகின்றன. அந்தப் படித்தரங்களின் கால அளவு மனித கணக்குபடி ஆயிரமாயிரம் ஆண்டுகளும் ஆகும் (32:5) பிரபஞ்சப் படைப்புகளில் பரிணாம வளர்ச்சியின் படித்தரங்களைக் கடக்க எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு ஐம்பது ஐம்பதாயிரம் ஆண்டுகளும் ஆகும். (70:4). இறைவனின் செயல்திட்டப்படி யுகங்கள் என்ற அடிப்படையில்தான் மிக விரிவான கால அளவின்படி பிரபஞ்சப் படைப்புகள் படைக்கப்படுகின்றன. எனவே இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் நீண்ட கால நிலையான செயல் திட்டங்களாகும்.
۞ وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا ءَالِهَةً ۖ إِنِّىٓ أَرَىٰكَ وَقَوْمَكَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.
6:74. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே ஏற்படும் இம்மோதல்கள் இப்ராஹீம் நபிக்கும் அவருடைய தந்தை மற்றும் சமூகத்தாருக்கும் இடையே நடந்தன. அவருடைய தந்தை ஆஜர் விக்கிரகங்களை தெய்வங்களாகக் கருதி வணங்கி வருவதை இப்றாஹீம் நபி கண்டித்தார். அவருடைய தந்தையும் அவருடைய சமூகத்தாரும் வெளிப்படையான வழிகேட்டில் இருப்பதாக அவர் குறை கூறினார். வரலாற்றின் இந்த உண்மையை நினைவு கூறுங்கள்.
وَكَذَٰلِكَ نُرِىٓ إِبْرَٰهِيمَ مَلَكُوتَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلِيَكُونَ مِنَ ٱلْمُوقِنِينَ.
6:75. இப்படியாக இப்ராஹீம் நபி, அல்லாஹ்வின் பிரம்மாண்டமான வானங்கள் மற்றும் பூமியின் படைப்புகளின் உண்மை நிலையை நன்கு அறிந்திருந்தார். எல்லா படைப்புகளிலும் அல்லாஹ்வின் அதிகாரங்களே செயல்படுகின்றன என்பதும் அவருக்குத் தெரிந்தே இருந்தது.
فَلَمَّا جَنَّ عَلَيْهِ ٱلَّيْلُ رَءَا كَوْكَبًۭا ۖ قَالَ هَٰذَا رَبِّى ۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَآ أُحِبُّ ٱلْءَافِلِينَ.
6:76. எனவே இரவில் மின்னும் நட்சத்திரத்தைக் கடவுளாக வணங்குபவர்களைப் பார்த்து, “இதுதான் என் இறைவன் என்கிறீர்கள். அது இரவு நேரங்களில் தோன்றி பகல் நேரங்களில் மறைந்துவிடுகிறதே. எனவே அவ்வாறு மறையக் கூடியதை நான் எப்படி இறைவனாக நேசிக்க முடியும்?” என எடுத்துரைத்தார்.
فَلَمَّا رَءَا ٱلْقَمَرَ بَازِغًۭا قَالَ هَٰذَا رَبِّى ۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِى رَبِّى لَأَكُونَنَّ مِنَ ٱلْقَوْمِ ٱلضَّآلِّينَ.
6:77. அதன் பின்னர், இரவில் பிரகாசிக்கும் சந்திரனை வணங்குபவர்களை நோக்கி, “இதை நான் இறைவனாக எடுத்துக் கொண்டால், அதுவும் மறைந்து விடுகிறதே. எனவே என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டிரா விட்டால், நானும் வழி தவறிய சமூகத்தாரில் ஒருவனாக ஆகியிருப்பேன்” என்றார்.
فَلَمَّا رَءَا ٱلشَّمْسَ بَازِغَةًۭ قَالَ هَٰذَا رَبِّى هَٰذَآ أَكْبَرُ ۖ فَلَمَّآ أَفَلَتْ قَالَ يَٰقَوْمِ إِنِّى بَرِىٓءٌۭ مِّمَّا تُشْرِكُونَ.
6:78. அதன் பின்னர், பிரகாசமாக ஒளியுடன் உதிக்கும் சூரியனை வணங்குபவர்களை நோக்கி, “இதுவே எல்லாவற்றிலும் பெரியது. எனவே இதுவே என் இறைவன் என்கிறீர்கள். ஆனால் அது மாலையில் அஸ்தமித்து விடுகிறதே. எனவே அது எப்படி என் இறைவனாக இருக்க முடியும்? எனவே என் சமூகத்தாரே! நீங்கள் இறைவனின் படைப்புகளை இறைவனுக்கு இணையாக வைத்து வழிபடுவதை விட்டு நான் விலகி விட்டேன்” என்று பலதரப்பட்ட மக்களுக்கு பல முறை போதனைகளைச் செய்து வந்தார்.
ِنِّى وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِى فَطَرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ حَنِيفًۭا ۖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ.
6:79. மேலும் அவர், “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவன் காட்டிய வழிகாட்டுதலின் பக்கமே என் முழு கவனத்தையும் செலுத்துகிறேன். இறைவனுக்கு இணையாக அவனுடைய படைப்புகளை வணங்குவதை நான் ஏற்கமாட்டேன்” என்று தம் சமூகத்தாரிடம் போதித்து வந்தார்.
وَحَآجَّهُۥ قَوْمُهُۥ ۚ قَالَ أَتُحَٰٓجُّوٓنِّى فِى ٱللَّهِ وَقَدْ هَدَىٰنِ ۚ وَلَآ أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّى شَيْـًۭٔا ۗ وَسِعَ رَبِّى كُلَّ شَىْءٍ عِلْمًا ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ.
6:80. ஆனால் அவருடைய சமூகத்தார் அவருடைய உபதேசங்களை ஏற்கவில்லை. அவருடன் பல வகையில் தர்க்கம் செய்து வந்தனர். அல்லாஹ் மனிதனுக்கு அளித்துள்ள வழிகாட்டுதலைப் பற்றி அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் அவர்களிடம் அதிலும் எவ்விதத் தீர்க்கமான ஞானமும் இல்லாததால் தர்க்கம் செய்துகொண்டே இருந்தனர். தான் இறைவன் காட்டிய நேர்வழியில் இருப்பதாகவும், அதை விட்டுவிட்டு அவர்கள் வழிபட்டு வரும் வழிமுறைகளுக்குப் பணியமாட்டேன் என்றும் அவர்களிடம் தீர்க்கமாகக் கூறிவிட்டார்.
“ வணக்க வழிப்பாட்டை விட்டுவிட்டால், ஏதோ ஆபத்துகள் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகிறீர்கள். ஆனால் நன்மையோ தீமையோ அல்லாஹ்வின் நியதிப்படியே தத்தம் செயல்களுக்கு ஏற்பத் தான் ஏற்படும். ஏனெனில் இறைவன் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து செயல் படுத்தியுள்ளான். எனவே உங்கள் செயல்கள் யாவும் தம் விளைவை ஏற்படுத்தாமல் போவதில்லை. இதை நீங்கள் சிந்தித்துணர வேண்டாமா?” என்று மக்களிடம் போதித்து வந்தார்.
وَكَيْفَ أَخَافُ مَآ أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ عَلَيْكُمْ سُلْطَٰنًۭا ۚ فَأَىُّ ٱلْفَرِيقَيْنِ أَحَقُّ بِٱلْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ.
6:81. “எனவே ஆதாரமற்றதை அல்லாஹ்வுக்கு இணையாக வைத்து வணங்கி வருகிறீர்களே. நீங்கள் செய்பவற்றுக்கு அல்லாஹ்விடமிருந்து எவ்வித ஆதாரமும் இல்லையே! இருந்தும் நீங்கள் அதற்குப் பயப்படுவது ஏன்? உண்மை இவ்வாறு இருக்கும் போது, இணை வைத்து வணங்கும் சிலைகளுக்கு நான் மட்டும் ஏன் பயப்படவேண்டும்?
என் இறைவனின் வழிகாட்டுதல்கள், வளமான வாழ்வின் பக்கம் அழைக்கிறது. எனவே நம் இரு பிரிவினரில் யார் அச்சமில்லா வாழ்க்கையைப் பெறும் தகுதி உடையவர் ஆகிறார்கள் என்பதை பார்த்துக் கொள்ளலாம். உண்மையிலேயே நீங்கள் சிந்தித்து உணர்பவர்களாக இருந்தால், இதற்குப் பதிலளியுங்கள்” என்று அவர் மக்களிடம் கேட்டார்.
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَمْ يَلْبِسُوٓا۟ إِيمَٰنَهُم بِظُلْمٍ أُو۟لَٰٓئِكَ لَهُمُ ٱلْأَمْنُ وَهُم مُّهْتَدُونَ.
6:82. “ இறைவழிகாட்டுதலை ஏற்று, அதைக் களங்கப்படுத்தாமல் பாதுகாத்து, அதை கடைப்பிடித்து நியாயமான முறையில் செயல்படும் சமுதாயம், எல்லா வளங்களுடனும் சீரும் சிறப்புமாக விளங்கும். அவர்களே நேர்வழியைப் பெற்றவர்கள் ஆவார்கள்” என்று அவர் மக்களிடம் எடுத்துரைத்தார்.
وَتِلْكَ حُجَّتُنَآ ءَاتَيْنَٰهَآ إِبْرَٰهِيمَ عَلَىٰ قَوْمِهِۦ ۚ نَرْفَعُ دَرَجَٰتٍۢ مَّن نَّشَآءُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌۭ.
6:83. இதுவே இப்ராஹீம் நபி, தம் சமூகத்தாரின் மூடநம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த உண்மை சம்பவங்களாகும். யார் நம் வழிகாட்டுதலின்படி சமுதாய சீர்திருத்தங்களுக்காகப் பாடுபடுகிறார்களோ, அவர்களுக்கே உயர் பதவியும் அந்தஸ்தும் கிடைக்கும். உமது இறைவனின் வழிகாட்டுதல்கள் யாவும் முழுமையான ஞானமும் அறிவுப்பூர்வமானதும் ஆகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ ۚ كُلًّا هَدَيْنَا ۚ وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ ۖ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيْمَٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَٰرُونَ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ.
6:84. இந்த உயர் பதவியும் அந்தஸ்தும் அவரோடு முடிந்து விடவில்லை. அவருக்குப் பின் அவருடைய மகன் இஸ்ஹாக்கிற்கும், அவரது பேரன் யாஃகூப்புக்கும் கிடைத்தது. அவர்கள் அனைவரும் நம் நேர்வழியில் நின்று சமுதாய மேம்பாட்டிற்காக அரும்பாடு பட்டவர்கள் ஆவர். எனவே அவர்களுக்கும் உயர் பதவியை அளித்தோம். இப்ராஹீம் நபிக்கு முன்னர் வந்த நூஹ் நபியும் இப்படித்தான் உலகில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். மேலும் இப்ராஹீம் சந்ததியிலிருந்து தாவூது, சுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகிய நபிமார்களும் நம் நேர்வழியைப் பெற்று, சமுதாய மேம்பாட்டிற்காக உழைத்தவர்கள் ஆவார்கள். இவ்வாறே இன்றைக்கும் யாரெல்லாம் நன்மையான அழகிய முறையில் செயல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நம் புறத்திலிருந்து சன்மானங்கள் கிடைக்கும்.
وَزَكَرِيَّا وَيَحْيَىٰ وَعِيسَىٰ وَإِلْيَاسَ ۖ كُلٌّۭ مِّنَ ٱلصَّٰلِحِينَ.
6:85. மேலும் ஜகரிய்யா, யஹ்யா,ஈஸா, இல்யாஸ் ஆகிய நபிமார்களும் மிகச் சிறப்பாக ஆற்றல்மிக்க செயல்களைச் செய்து உலக வரலாற்றில் சீர்திருத்தங்களைச் செய்த "மாமேதைகள்" என்ற முத்திரை பதித்துச் சென்றவர்கள் ஆவார்கள்.
وَإِسْمَٰعِيلَ وَٱلْيَسَعَ وَيُونُسَ وَلُوطًۭا ۚ وَكُلًّۭا فَضَّلْنَا عَلَى ٱلْعَٰلَمِينَ.
6:86. மேலும் இந்த வரிசையில் இஸ்மாயீல், அல்யஸஅ, யூனுஸ், லூத் ஆகிய நபிமார்களும் உலக சாதனைப் படைத்த "மாவீரர்கள்" பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஆவர்.
وَمِنْ ءَابَآئِهِمْ وَذُرِّيَّٰتِهِمْ وَإِخْوَٰنِهِمْ ۖ وَٱجْتَبَيْنَٰهُمْ وَهَدَيْنَٰهُمْ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.
6:87. அதுமட்டுமின்றி இந்த நபிமார்களுடைய மூதாதையர்களிலிருந்தும் சந்ததியினரிலிருந்தும் சகோதரர்களிலிருந்தும் நம் தேர்வுக்கு உட்பட்டவர்களாக வாழ்ந்து காட்டினார்கள். அவர்களும் நேர்வழியில் நிலைத்து நின்று உலகில் சாதனைகளை படைத்தவர்களே.
இந்த உயர்வும் கண்ணியமும் நபிமார்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்பதல்ல. அவர்களைச் சார்ந்த உற்றார் உறவினர்களுக்கும் கிடைத்தன என்பதற்கு இந்த வாசகமே ஆதாரமாகும். எனவே அவர்களுக்கு நேர்வழி நேரடியாக இறைவனிடமிருந்து கிடைக்கவில்லை. அவர்களுடன் வாழ்ந்த நபியின் மூலம் கிடைத்த வேதத்தை பின்பற்றுவதைக் கொண்டே அந்த இலக்கை அடைந்தனர். இப்படியாக முஹம்மது நபியின் மறைவுக்குப் பின் அவரோடு இருந்த சஹாபா பெருமக்கள் கடைப்பிடித்து, சிறப்பாக சமுதாயத்தை வழிநடத்திச் சென்றார்கள். அதே போல் இன்றைய கால கட்டத்திலும் நாமும் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றினால் அந்த இலக்கை அடையலாம்.
ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۚ وَلَوْ أَشْرَكُوا۟ لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا۟ يَعْمَلُونَ.
6:88. இவ்வாறு உயர் இலட்சியங்களுடன் உழைப்பவர்களே அல்லாஹ்விடமிருந்து நேர்வழி பெறும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இப்போது அந்த நேர்வழி இந்தக் குர்ஆன் மூலம் இறக்கி அருளப்படுகிறது. யார் இதைப் பின்பற்றி நடக்க நாடுகிறார்களோ, அவர்களுக்கு நேர்வழியும் உயர்வும் கண்ணியமும் கிடைத்துவிடும். மாறாக இதற்கு இணையாக வேறு வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் அவர்களுடைய செயல்கள் எல்லாம் நிரந்தர பலன்களைத் தராமல் வீணாகிவிடும்.
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ۚ فَإِن يَكْفُرْ بِهَا هَٰٓؤُلَآءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًۭا لَّيْسُوا۟ بِهَا بِكَٰفِرِينَ.
6:89. இவ்வாறாக நேர்வழியைப் பெற நாடி அதற்காக அயராது உழைத்தவர்களுக்கே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் கிடைத்தன. அதன்படி பாடுபட்டதால் அவர்களுக்கு ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தன. அந்த ஆட்சியின் அனுபவங்களின் மூலமாக அவர்களுக்குத் தெரியாத பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார்கள். எனவே அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு மாறாக செயல்பட்டு வந்தால், ஆட்சி பொறுப்பை மற்ற சமூகத்தவர்களிடம் ஒப்படைக்கப்படும். இறைவழிகாட்டுதலுக்கு மாறு செய்யாத வரையில் ஆட்சி அதிகாரம் அவர்கள் பொறுப்பில் நீடிக்கும். (பார்க்க 8:53)
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُ ۖ فَبِهُدَىٰهُمُ ٱقْتَدِهْ ۗ قُل لَّآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ هُوَ إِلَّا ذِكْرَىٰ لِلْعَٰلَمِينَ.
6:90. மேற்சொல்லப்பட்ட நபிமார்கள் யாவரும் அல்லாஹ் காட்டிய வழியில் செயல்பட்டு உயர் அந்தஸ்துகளைப் பெற்றவர்கள். எனவே நீங்களும் இந்த இறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அவர்களைப் போல் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றை எடுத்துரைக்கிறோம். “இவ்வுண்மையை என் சுயலாபத்திற்காகவும் எடுத்துக் கூறவில்லை. உங்களுடைய நன்மைக்காகவே எடுத்துரைக்கிறேன். ஏனெனில் இந்த இறைவழிகாட்டுதல்கள் யாவும் உலக மக்கள் அனைவருக்கும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை” என்ற உண்மையை மக்களிடம் எடுத்துரையுங்கள்.
وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦٓ إِذْ قَالُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٍۢ مِّن شَىْءٍۢ ۗ قُلْ مَنْ أَنزَلَ ٱلْكِتَٰبَ ٱلَّذِى جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورًۭا وَهُدًۭى لِّلنَّاسِ ۖ تَجْعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبْدُونَهَا وَتُخْفُونَ كَثِيرًۭا ۖ وَعُلِّمْتُم مَّا لَمْ تَعْلَمُوٓا۟ أَنتُمْ وَلَآ ءَابَآؤُكُمْ ۖ قُلِ ٱللَّهُ ۖ ثُمَّ ذَرْهُمْ فِى خَوْضِهِمْ يَلْعَبُونَ.
6:91. ஆனால் மக்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஆதாரமற்ற விஷயங்களை விதவிதமாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். அதனால் அவர்கள் அல்லாஹ்வை மதித்து நடக்க வேண்டிய முறையில் மதித்து செயல்படுவதில்லை. எனவேதான் அவர்கள் தங்களைப் போல் இருக்கும் ஒரு சாதாரண மனிதருக்கு எந்த இறைவழிகாட்டுதலும் இறக்கி அருளப்படுவதில்லை என்று கூறுகின்றனர்.
அவர்களிடம் மூஸா நபி கொடுத்து விட்டுச் சென்றாரே அந்த வேத அறிவுரைகள் யாரிடமிருந்து வந்தன என்று கேளுங்கள். அவையும் மனிதனின் ஒளிமயமான வாழ்விற்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்தன. அந்த வேதத்தைக் கொண்டுவந்தவரும் ஒரு சாதாரண மனிதர்தானே.
ஆனால் அவர்கள் நடந்துகொள்ளும் முறை என்ன? அந்த இறை வேதத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து, தமக்கு சாதகமாக இருக்கும் சில விஷயங்களை மட்டும் மக்களிடம் எடுத்துரைக்கிறார்கள். அதிலுள்ள பெரும்பாலானவற்றை தாங்களே உருவாக்கிய ஷரீயத் சட்டங்களுக்கு மாற்றமாக இருப்பதால், அவற்றை மக்களுக்கு எடுத்துரைக்காமல் மறைத்து விடுகிறார்கள்.
அவர்களோ அல்லது அவர்களின் முன்னோர்களோ அறியாத விஷயங்களைப் பற்றி எல்லாம் அவ்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவ்வேதத்தை இறக்கி வைத்ததும் அல்லாஹ்தான் என்று அவர்களிடம் சொல்லி விடுங்கள். இதன் பின்பும் அவர்கள் இவ்வேதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் போக்கில் அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் வேண்டுமென்றால் வேத விஷயங்களை வைத்துக் கொண்டு தம் விருப்பம் போல விளையாடிக் கொண்டு இருக்கட்டும்.
وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلْنَٰهُ مُبَارَكٌۭ مُّصَدِّقُ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ ٱلْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا ۚ وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَهُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ.
6:92. ஆக வளம் மிக்க சமுதாயத்தை உருவாக்க மிகச் சிறந்த திட்டங்களைக் கொண்ட இவ்வேதத்தை நாம் இறக்கி அருளியிருக்கிறோம். இது அவர்களிடமுள்ள வேத அறிவுரைகளின் உண்மை விஷயங்களை எடுத்துரைக்கிறது. எனவே முதலில் நீ பிறந்து வளர்ந்த ஊர் மக்களையும், அதன்பின் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களையும், அழைத்து சமுதாயங்களின் அழிவிற்கான காரணங்களை எடுத்துரைத்து அதிலிருந்து மீண்டு பாதுகாப்பாக நடந்துகொள்ள எச்சரிக்கை செய்யுங்கள்.
ஆக இறை வழிகாட்டுதலையும், இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள் இவ்வேத உண்மைகளை நம்புவார்கள். மேலும் அவர்கள் இறைவன் காட்டிய சட்ட விதிமுறைகளை ஒழுங்காகப் பேணுவார்கள்.
இதற்காக, இறைவழிகாட்டுதல் மூலமாகக் கிடைக்கின்ற செய்திகளில் எவ்வித கலப்படமோ, நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களோ அல்லது உண்மைக்குப் புறம்பான கற்பனை கதைகளோ இருக்கக் கூடாது. அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி அப்படிப்பட்ட வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி, குழப்பங்களை உருவாக்குபவர்களை விட்டுவைப்பது சரியாகுமா?. சாந்தியும் சமாதானத்தையும் நோக்கமாகக் கொண்டு நடைபெறும் எந்த ஆட்சியமைப்பும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை அளித்தே தீரும். அவர்கள் இந்த ஆட்சியமைப்பிற்கு எதிராகக் களத்தில் இறங்கினால் அதையும் சந்திக்க தயாராக இருக்கும்.
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِىَ إِلَىَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَىْءٌۭ وَمَن قَالَ سَأُنزِلُ مِثْلَ مَآ أَنزَلَ ٱللَّهُ ۗ وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِى غَمَرَٰتِ ٱلْمَوْتِ وَٱلْمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓا۟ أَيْدِيهِمْ أَخْرِجُوٓا۟ أَنفُسَكُمُ ۖ ٱلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ ٱلْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ وَكُنتُمْ عَنْ ءَايَٰتِهِۦ تَسْتَكْبِرُونَ.
6:93. எனவே அல்லாஹ்வைப் பற்றிய கற்பனை விஷயங்களை மக்களிடம் கூறுவது அல்லது அல்லாஹ் சொல்லாததை அவன் சொன்னதாகப் பொய்யுரைப்பது - தனக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீ என்னும் வழிகாட்டுதல் நேரடியாக வருகிறது என்று கூறுவது - இந்த வேதத்தைப் போல் தன்னாலும் ஒரு சிறந்த வழிகாட்டுதலைக் கொண்டுவர முடியும் என்று முறையிடுவது - ஆக இப்படிப்பட்டவர்களை விட மோசமான அநியாயக்காரர்கள் வேறு யாராக இருக்க முடியும்?
இப்படிப்பட்ட அநியாயக்காரர்கள் மரணத்தை சந்திக்கும் போது, நீங்கள் அவர்களைப் பார்ப்பீர்களாயின், இறைவனின் தண்டனையை நிறைவேற்றும் "மலக்கு"கள் அவர்களை நோக்கி, “இப்போது உங்களுடைய ஆணவப் பேச்சு எங்கே? அதை நீங்கள் இப்போது வெளியே கொண்டு வாருங்கள். நீங்கள் இது நாள் வரை செய்து வந்தமைக்குப் பிரதிபலனாக இந்த வேதனைகளும் இழிவும் கிடைக்கின்றன. ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி உண்மை இல்லாததை மக்களிடம் பரப்பி வந்தீர்களே! மேலும் இறைவழிகாட்டுதலைத் துச்சமாக எண்ணி ஆணவத்துடன் நடந்து கொண்டீர்களே!” என்று கூறுவதாக இருக்கும்.
وَلَقَدْ جِئْتُمُونَا فُرَٰدَىٰ كَمَا خَلَقْنَٰكُمْ أَوَّلَ مَرَّةٍۢ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَٰكُمْ وَرَآءَ ظُهُورِكُمْ ۖ وَمَا نَرَىٰ مَعَكُمْ شُفَعَآءَكُمُ ٱلَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَٰٓؤُا۟ ۚ لَقَد تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنكُم مَّا كُنتُمْ تَزْعُمُونَ.
6:94. மேலும் மரணத்திற்குப் பின் அவர்களுடைய நிலைமையைப் பார்ப்பீர்களாயின், அல்லாஹ் அவர்களை நோக்கி, “நீங்கள் உலகில் பிறந்தபோதும் ஒவ்வொருவராகத் தான் பிறந்தீர்கள். அதே போல் இன்றைய தினம் உங்களில் ஒவ்வொருவரும் என்னிடம் தனித்தனியாக வந்து விட்டீர்கள். நீங்கள் சம்பாதித்த செல்வங்களை எல்லாம் விட்டுவிட்டு வந்துள்ளீர்கள். இப்போது அவற்றில் எதுவும் உங்களுக்குத் துணையாக நிற்கவில்லை. அதுமட்டுமின்றி யாரை எல்லாம் பாதுகாவலர்கள் என்று நம்பி இருந்தீர்களோ, அவர்களும் இப்போது உங்களோடு இல்லை. அவர்களுடன் இருந்த தொடர்பும் அறுந்து விட்டது. நீங்கள் நம்பி இருந்ததெல்லாம் இன்றைய தினம் வீணாகிப் போய் விட்டன” என்று கூறுவதாக அவர்களின் நிலைமை இருக்கும்.
அதாவது மரணத்திற்குப் பின் அல்லாஹ்வின் நியதிப்படி ஒவ்வொருவரின் நிலைமையும் இப்படியாகத்தான் இருக்கும் என்பதை இவ்வாசகம் சித்தரிக்கிறது. மேலும் அல்லாஹ் என்றால் யார் என்ற கேள்வியும் எழுகிறது. அதையும் நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.
۞ إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلْحَبِّ وَٱلنَّوَىٰ ۖ يُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَمُخْرِجُ ٱلْمَيِّتِ مِنَ ٱلْحَىِّ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ.
6:95. தானியங்களையும், விதைகளையும் நீங்கள் விதைக்கும் போது, அவை பூமியினுள் வெடித்து முளைக்கின்றன. மேலும் உயிரோட்டம் இல்லாத பூமி, மழை நீரைக் கொண்டு உயிர் பெற்று பசுமை நிறைந்ததாக மாறிவிடுகிறது. இப்படியொரு மாபெரும் ஏற்பாட்டைச் செய்பவன்தான் அல்லாஹ்.
இன்றைய விஞ்ஞான உலகம் இவற்றையே இயற்கைப் படைப்புகள் என்று கூறி அவை ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எடுத்துரைக்கிறது. அந்த இயற்கைப் படைப்புகளின் பின்னணியில் இருக்கும் மாபெரும் வல்லமையுடைய அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் சொல்வதில்லை. அவற்றைப் படைத்தவனைத் தான் அல்லாஹ் என்கிறோம். மேலும் அல்லாஹ் செய்வதாகச் சொல்லப்படும் இதே விஷயங்களை இயற்கைச் சட்ட ரீதியாகத்தான் செயல்படுகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சமுதாயங்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே இயற்ககைச் சட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்படும்.
فَالِقُ ٱلْإِصْبَاحِ وَجَعَلَ ٱلَّيْلَ سَكَنًۭا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ حُسْبَانًۭا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ.
6:96. அல்லாஹ் நிர்ணயித்த சட்ட விதிமுறைகளின் படியே இருள் நீங்கி பொழுது விடிகிறது. அதனால் உங்களிடம் இருந்த களைப்பு நீங்கி பகலில் உழைக்க முடிகிறது. இந்த இரவு பகல் ஏற்படுவதைக் கொண்டு நாள், வாரம், மாதம், வருடம் என்ற கணக்கை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறாக சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டு மிகத் துல்லியமாக செயல் படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் படைத்துச் செயல்பட வைக்கும் மாபெரும் வல்லமையும் அதன் செயல்பாடுகளை நன்கறியும் வல்லமை அனைத்திற்கும் உரியவன் தான் அல்லாஹ்.
وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلنُّجُومَ لِتَهْتَدُوا۟ بِهَا فِى ظُلُمَٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۗ قَدْ فَصَّلْنَا ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْلَمُونَ.
6:97. அதுமட்டுமின்றி பரந்து விரிந்து கிடக்கும் வானங்களில் தோரணங்களாக நட்சத்திரங்கள் படைக்கப்பட்டிருப்பதும், அவற்றைக் கொண்டு இரவு நேரங்களில் பாலைவனங்களிலும் கடலிலும் பயணம் மேற்கொள்ளும் போது, உங்களால் வழியை அறிந்துகொள்ள முடிகிறது. நட்சத்திரங்களின் ஆராய்ச்சிகளைக் கொண்டு மேலும் பல்வேறு வகையான பலன்களை நீங்கள் பெறலாம். அத்தகைய படைப்புகளைப் பற்றிய உண்மைகளும், அவற்றைப் படைத்த அல்லாஹ்வைப் பற்றியும் அறிவைப் பயன்படுத்தக் கூடிய மக்களுக்குத் தான் விளங்கும்.
وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ فَمُسْتَقَرٌّۭ وَمُسْتَوْدَعٌۭ ۗ قَدْ فَصَّلْنَا ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَفْقَهُونَ.
6:98. அது மட்டுமின்றி மனித படைப்பு விஷயத்தையே கவனித்துப் பாருங்கள். மனித படைப்பின் ஆரம்பம் உயிர் அணு என்ற ஒரே அடிப்படையில் உருவாகிறது. அந்த உயிரணு தாயின் கருப்பையில் செலுத்தி, ஒரு குறிப்பிட்ட காலம் (சுமார் 300 நாட்கள்) வரை தங்கி குழந்தையாக முழுமை பெறுகிறது. சிந்தித்து உணரும் மக்களுக்கு, இந்த ஏற்பாட்டை செய்தவனும் அல்லாஹ்தான் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைக்கும்.
وَهُوَ ٱلَّذِىٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجْنَا بِهِۦ نَبَاتَ كُلِّ شَىْءٍۢ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًۭا نُّخْرِجُ مِنْهُ حَبًّۭا مُّتَرَاكِبًۭا وَمِنَ ٱلنَّخْلِ مِن طَلْعِهَا قِنْوَانٌۭ دَانِيَةٌۭ وَجَنَّٰتٍۢ مِّنْ أَعْنَابٍۢ وَٱلزَّيْتُونَ وَٱلرُّمَّانَ مُشْتَبِهًۭا وَغَيْرَ مُتَشَٰبِهٍ ۗ ٱنظُرُوٓا۟ إِلَىٰ ثَمَرِهِۦٓ إِذَآ أَثْمَرَ وَيَنْعِهِۦٓ ۚ إِنَّ فِى ذَٰلِكُمْ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.
6:99. மேலும் அல்லாஹ்வின் மாபெரும் ஏற்பாட்டைக் கொண்டே வானத்திலிருந்து மழை பொழிகிறது. அந்த மழை நீரைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளும் விளைகின்றன. அவ்வாறு விளைபவற்றுள் பச்சை நிறத் தழைகளைக் கொண்ட செடிகளும் மரங்களும், அடர்த்தியான கதிர்களைக் கொண்ட செடிகளும், பேரீத்த மரத்தில் வளைந்து தொங்கும் பழக் குலைகளும் அடங்கும். அது மட்டுமின்றி திராட்சைத் தோட்டங்களும், ஒரே மாதிரியான சுவை உள்ளதும், வெவ்வேறு சுவைகளையும் கொண்ட மாதுளை, ஜைத்தூன் ஆகிய தாவரங்களும் விளைகின்றன. அவை பூத்துக் காய்ப்பதையும், கனிந்து பழம் ஆவதையும் நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்கள். அவை வளர்ந்து வரும் வேகத்தை உங்களால் கூர்ந்து உணர முடியாது. ஆனாலும் அது மெதுவாகப் பல படித்தரங்களைக் கடந்து கனிந்து பழமாகிறது. வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் மக்களுக்குத் தான் இவற்றைப் படைப்பவன் அல்லாஹ் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைக்கும்.
அதாவது இயற்கைப் படைப்புகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்த்தால், அவை எல்லாமே முறைப்படி மிகச் துல்லியமாக செயல்படுவதை நீங்கள் காண்பீர்கள். அங்கே திடீர் நிகழ்வுகள் என்ற அடிப்படையில் எதுவும் நடை பெறுவதில்லை. அதே போல் மனித வஷயத்திலும் எல்லாமே முறைப்படி நடந்து வரும். திடீர் அற்புதங்கள் என்ற அடிப்படையில் எந்த மாற்றமும் வருவதில்லை. அவரவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ற வகையில் விளைவுகளும் முறைப்படி அதனதன் கால அளவுப்படி தோற்றத்திற்கு வரும். ஆனால் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவாறு இவை ஏற்பட்டு வரும். எனவேதான் இந்த விஷயங்கள் இறக்கி அருளப்படுகின்றன.
`
وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ ٱلْجِنَّ وَخَلَقَهُمْ ۖ وَخَرَقُوا۟ لَهُۥ بَنِينَ وَبَنَٰتٍۭ بِغَيْرِ عِلْمٍۢ ۚ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَصِفُونَ.
6:100. ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் அறியாத மக்கள், கண்ணுக்குப் புலப்படாத சக்திகளை அல்லாஹ்வுக்கு இணையாக வைத்து வணங்கி வருகிறார்கள். அந்த சக்திகளைப் படைத்ததும் அல்லாஹ்தான் என்பதை அவர்கள் அறிவதில்லை. இதை அறியாத மக்கள் அல்லாஹ்வுக்கு புதல்வர்களும் புதல்விகளும் உண்டு என்று கற்பனை செய்துக் கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் வல்லமையோ அவர்களுடைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகவும், தூய்மையானதாகவும் எல்லையற்றதாகவும் உள்ளது என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
இதனால் அவர்கள் இறைவழிகாட்டுதல்களை ஏற்காமல் தம் மனம் போன போக்கில் வாழ்ந்து அழிவினைத் தேடிக் கொள்கிறார்கள். அந்த அழிவுகளும் இயற்கைப் படைப்புகள் செயல்படுவது போல உணரா வகையில் வளர்ந்து ஒரு கட்டத்தில் தோற்றத்திற்கு வருகின்றன. அப்போது அவர்களுக்கு உதவிப் புரிபவர்கள் யாரும் இருப்பதில்லை. எனவேதான் இந்த வழிகாட்டுதல்கள் முன் எச்சரிக்கையாக தரப்படுகின்றன.
மனிதனும் இயற்கைப் படைப்புகளின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தேவைக்கு ஏற்ப பல புதிய அற்புதமான பொருட்களை படைத்துக் கொள்கிறான். அதாவது மனிதனாலும் பல புதிய படைப்புகளை உருவாக்க முடியும். எனினும் மனிதனால் அல்லாஹ் படைத்துள்ள மூலப் பொருட்களை வைத்து தான் புதிய பொருட்களை உருவாக்க முடியும். ஆனால்
بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٌۭ وَلَمْ تَكُن لَّهُۥ صَٰحِبَةٌۭ ۖ وَخَلَقَ كُلَّ شَىْءٍۢ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.
6:101. அல்லாஹ்வோ எந்தப் பொருளின் துணையுமின்றி வானங்களையும் பூமியையும் படைக்கும் வல்லமையுடையவன் ஆவான். உண்மை இவ்வாறு இருக்கும் போது, அவனுக்குப் பிள்ளைகள் உண்டு என்ற சொல், கற்பனையில் வடிந்த சிந்தனையே அன்றி வேறொன்றுமில்லை. ஏனெனில் பிள்ளை பெறுவதற்கு மனைவியின் துணை அவசியமாகிறது. எனவே இப்படிப்பட்ட பேச்செல்லாம் கற்பனையில் உருவானவையே. எல்லாப் பொருட்களையும் படைத்து அவற்றில் உள்ள ஒவ்வொன்றையும் அறியக் கூடியவன் தான் அல்லாஹ். அவனுக்கு உதவி புரிய பிள்ளைகள் தேவையா?
கவனித்தீர்களா? பிள்ளையைப் பெற்றெடுக்க அல்லாஹ்வுக்கே பெண்ணின் துணை தேவைப்படுகிறது. ஆனால் ஈஸாவைப் பெற்றெடுக்க மர்யமிற்கு ஆணின் துணை தேவைப்படவில்லை என்று சொல்வது நியாயமாகுமா?
ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ خَٰلِقُ كُلِّ شَىْءٍۢ فَٱعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ وَكِيلٌۭ.
6:102. இவ்வாறாக எல்லாப் பொருட்களையும் எவ்வித மூலப் பொருளின் துணையுமின்றி படைக்கும் வல்லமை உடைய அல்லாஹ்வே, நீங்கள் அனைவரும் உயிர் வாழ்வதற்காக, எல்லா ஏற்பாடுகளையும் செய்த இறைவனும் ஆவான். எனவே அவனுடைய கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து வாழுங்கள். அதை விட்டு வேறு எந்த வழிமுறையையும் இணை வைத்து பின்பற்றாதீர்கள். காரணம் அவனுடைய வழிகாட்டுதலை விட சிறந்த வழிமுறை வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும் உங்களின ஒவ்வொரு செயலும் அவன் நிர்ணயித்த "மனித செயலுக்கேற்ற பின் விளைவுகள்” என்ற சட்டத்தின் கண்காணிப்பிலேயே உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
لَّا تُدْرِكُهُ ٱلْأَبْصَٰرُ وَهُوَ يُدْرِكُ ٱلْأَبْصَٰرَ ۖ وَهُوَ ٱللَّطِيفُ ٱلْخَبِيرُ.
6:103. எனவே புறப் பார்வையை வைத்துக்கொண்டு உங்களால் அல்லாஹ்வை ஒருபோதும் காண இயலாது. ஆனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வின் இயற்கை ஏற்பாடுகள் கண்காணிப்பவையாகவே இருக்கின்றன. மேலும் அல்லாஹ்வின் இந்த ஏற்பாடுகள் கண்மூடித்தனமான ஒன்றல்ல. முழுக்க முழுக்க மிகத் துல்லியமான ஞானத்தின் அடிப்படையில் உள்ளவையாகும்.
அதாவது மனித பார்வையும் கற்பனைகளும் ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும் அதையும் கடந்து செல்ல வாய்ப்பில்லை. எனவே அளவிலா வல்லமையுடைய அல்லாஹ்வை அளவோடு இருக்கின்ற பார்வையை வைத்துக்கொண்டு எப்படிப் பார்க்கமுடியும்? (பார்க்க 7:155)
قَدْ جَآءَكُم بَصَآئِرُ مِن رَّبِّكُمْ ۖ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ عَمِىَ فَعَلَيْهَا ۚ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِحَفِيظٍۢ.
6:104. எனவே அல்லாஹ்வைக் கண்கூடாகப் பார்க்கும் எண்ணங்களையும், அவனைக் கற்பனை வடிவில் கொண்டு வருவதையும் விட்டுவிட்டு, அவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட அறிவுப்பூர்வமான வழிகாட்டுதல்களை நீங்கள் உங்கள் அகப் பார்வையைக் கொண்டு சிந்தித்து ஏற்று அதன்படிச் செயலாற்றுங்கள். அவையே உங்கள் வாழ்விற்குப் பலனுள்ளதாக இருக்கும். யார் அவற்றைச் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக வாழ்கிறார்களோ, அவர்களுக்கு கேடுகள்தான் ஏற்படும். எனவே உங்கள் செயல்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு ஆவீர்களே அன்றி, அல்லாஹ்வோ நபியோ அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.
وَكَذَٰلِكَ نُصَرِّفُ ٱلْءَايَٰتِ وَلِيَقُولُوا۟ دَرَسْتَ وَلِنُبَيِّنَهُۥ لِقَوْمٍۢ يَعْلَمُونَ.
6:105. இப்படியாக இறைவழிகாட்டுதலை நீங்கள் நன்றாக விளங்கிக் கொண்டு சரியான வழியில் செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே நாம் ஒவ்வொரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களில் பலமுறை விளக்குகிறோம். ஆனால் கண்மூடித்தனமாக வாழ்பவர்கள் இதற்கு முன்னுள்ள வேதத்திலிருந்து பிரதி எடுத்துச் (duplicate copy) சொல்வதாக கேலி செய்கிறார்கள். இவ்வேத உண்மைகளைச் சிந்தித்து அறிந்துகொள்ள நாடுவோருக்கே இவை நன்றாக மனதில் பதியும்.
ٱتَّبِعْ مَآ أُوحِىَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ.
6:106. மேலும் உம்மிடம் இறைவன் புறத்திலிருந்து வந்துள்ள வஹீ என்னும் இறைவழிகாட்டுதலை மட்டும் பின்பற்றி வாருங்கள். அதைத் தவிர வேறு எந்தக் கட்டளைக்கும் அடிபணியாதீர்கள். மேலும் மார்க்க விஷயத்தில் மனோ இச்சையின்படி வாழும் முஷ்ரிக்குகளை விட்டு விலகியே இருங்கள். (பார்க்க 6:14)
وَلَوْ شَآءَ ٱللَّهُ مَآ أَشْرَكُوا۟ ۗ وَمَا جَعَلْنَٰكَ عَلَيْهِمْ حَفِيظًۭا ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍۢ.
6:107. மனிதர்கள் அனைவரையும் மற்ற உயிரினங்களைப் போல் ஒரே இயல்பின் அடிப்படையில் வாழ வைப்பது என்று அல்லாஹ்வின் செயல்திட்டமாக இருந்திருந்தால், அவ்வாறு அவன் மனிதனையும் படைத்திருக்க முடியும். அப்படி ஒரு நிலையில் யாரும் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவன் மனிதனுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்து விட்டதால் (பார்க்க 18:29)(10:99) வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் விஷயத்திலும் எவ்விதக் கட்டாயமும் இருப்பதில்லை (2:256). எனவே நபியே! நாம் உன்னை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை. இன்னும் நீர் அவர்களை கண்காணிக்கும் பொறுப்பாளரும் அல்லர்.
وَلَا تَسُبُّوا۟ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّوا۟ ٱللَّهَ عَدْوًۢا بِغَيْرِ عِلْمٍۢ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.
6:108. அதே சமயத்தில் அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அவர்கள் வணங்கி வருபவற்றைப் பழித்துப் பேசாதீர்கள். இதனால் உங்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்குப் பதிலாக வெறுப்பும் பகைமையும் வளரும். மேலும் அவர்கள் பதிலுக்கு ஆவேசத்துடன் அல்லாஹ்வையும் பழித்து பேசுவார்கள். ஏனெனில் அவர்கள் செய்பவை யாவும் அவர்களுக்கு மிகவும் அழகாகத் தோன்றுகின்றன. ஆனால் அவர்களுடைய செயல்களின் இறுதி விளைவுகள் இறைவன் நிர்ணயித்த இலக்கின்படியே தோற்றத்திற்கு வரும் போது, அவர்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விடும்.
وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِن جَآءَتْهُمْ ءَايَةٌۭ لَّيُؤْمِنُنَّ بِهَا ۚ قُلْ إِنَّمَا ٱلْءَايَٰتُ عِندَ ٱللَّهِ ۖ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَآ إِذَا جَآءَتْ لَا يُؤْمِنُونَ.
6:109. அல்லாஹ்விடமிருந்து ஏதாவது ஓர் அற்புதத்தை கொண்டுவந்து நிகழ்த்திக் காட்டினால், நிச்சயமாக நாமும் ஈமான் கொள்வோம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் மாபெரும் படைப்புகளின் அத்தாட்சிகள் பல அவர்கள் முன் இருக்கும் போது, அற்புதத்தைக் காட்டச் சொல்வதன் சூட்சுமம் என்ன என்பதை மூஃமின்களாகிய நீங்களும் புரிந்து கொள்ளவேண்டும். அப்படியும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினாலும் அவர்கள் வேறு ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள விரும்பவே மாட்டார்கள்.
இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பது தான் இறைத்தூதரின் தலையாய பணியாகும். மாயாஜால அற்புதத்தை நிகழ்த்திக் காட்டி மார்க்கத்தின் பக்கம் அழைப்பதல்ல அவர் பணி.
وَنُقَلِّبُ أَفْـِٔدَتَهُمْ وَأَبْصَٰرَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا۟ بِهِۦٓ أَوَّلَ مَرَّةٍۢ وَنَذَرُهُمْ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ.
6:110. இதற்கு முன்பும் இறைவழிகாட்டுதல்கள் இறைத்தூதர்கள் மூலம் அவர்களுக்கு இறக்கி அருளப்பட்டன. அவர்கள் மூதாதையர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்த காரணத்தால், இறைவனின் அறிவுரைகளை ஏற்கும் மனப்பக்குவத்தை இழந்து இருந்தார்கள். இப்போதும் இதே நிலைதான். அவர்களுடைய உள்ளங்களிலும் பார்வைகளிலும் திரை ஏற்பட்டு, அவர்களில் பெரும்பாலோர் மூடநம்பிக்கை எனும் பிரளயத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இத்தகையவர் நேர்வழி பெற வேறு எந்த வழியும் இல்லாததால் காலம் காலமாக வழிகேட்டில் தட்டழிந்து திரிய வேண்டிய நிலை தான்.
۞ وَلَوْ أَنَّنَا نَزَّلْنَآ إِلَيْهِمُ ٱلْمَلَٰٓئِكَةَ وَكَلَّمَهُمُ ٱلْمَوْتَىٰ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَىْءٍۢ قُبُلًۭا مَّا كَانُوا۟ لِيُؤْمِنُوٓا۟ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ.
6:111. இத்தகையவர்களிடம் "மலக்கு"களை அனுப்பி வைத்தாலும், இறந்தவர்களை உயிர்ப்பித்து அவர்களிடம் பேச வைத்தாலும், எல்லா செல்வங்களையும் அவர்கள் கண்முன் கொண்டுவந்து கொட்டினாலும், அவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். காரணம் அவர்கள் மாய மந்திர வித்தைகளை எதிர்பார்த்து இருப்பவர்கள். இத்தகைய மாய வித்தைகளைக் காட்டி தன் வழிகாட்டுதலை நம்பவைக்கும் அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை. யார் நேர்வழி பெற நாடி அதற்காக முயல்கிறார்களோ அவர்களுக்குத் தான் நேர்வழி அளிக்க வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். (பார்க்க 18:29) ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த உண்மையை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّۭا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍۢ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًۭا ۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ.
6:112. இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக இறைத்தூதர்கள் இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் போதெல்லாம், அச்சமுதாயத்தில் வாழ்ந்த நகர்புற மக்கள் மற்றும் நாட்டுப்புற மக்களுள் இருந்த சுயநலக்கார விஷமிகள் எதிர்க்கவே செய்தார்கள். இவ்விரு இனத்தின் தலைவர்களும் தங்களுக்கிடையே இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு மக்களை ஏமாற்றி வந்தனர். மனிதனையும் மற்ற உயிரினங்களைப் போல் தனக்குக் கட்டுப்பட்டு வாழும் இனமாக அல்லாஹ் படைக்க நாடி இருந்தால், அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விட்டதால் இவ்வாறு அவர்களால் எதிர்க்க முடிகிறது. எனவே உண்மையை எடுத்துரைத்தும், எதையும் சிந்திக்காமல் கற்பனைக் கதைகளை நம்பி வாழ்பவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள்.
وَلِتَصْغَىٰٓ إِلَيْهِ أَفْـِٔدَةُ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا۟ مَا هُم مُّقْتَرِفُونَ.
6:113. அத்தகையவர்கள், தாம் செய்து வரும் செயல்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். எனவே அவர்கள் செய்பவை யாவும் அவர்களுக்கு அழகாகக் காணப்படுவதால் அவர்கள் அவற்றைக் கொண்டு திருப்தி அடைந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அதனால் அப்படிப்பட்ட தவறானச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் இதில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது என்றும் விரும்புகிறார்கள்.
இப்படியாக வருங்கால நிலையான வாழ்க்கையைப் பற்றி கவலை கொள்ளாமல் தற்காலிக சந்தோஷங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால், சமுதாய சீரழிவுகள் ஏற்பட்டு, பல பிரச்னைகள் உருவாகி இறுதியில் அழிவை நோக்கிச் சென்றுவிடுகிறது. இதுவே சமுதாயத்தின் ஆஃகிரத்து ஆகும். தனிநபர் விஷயத்தில் வருங்கால வாழ்க்கை மரணத்திற்குப் பின்பும் தொடர்வதால் அவன் இங்கு செய்து வந்த செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களில் சில, இவ்வுலகிலும் மற்றவை மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் நிச்சயமாக கிடைத்தே தீரும். இதுதான் திருக்குர்ஆன் கூறும் தனிநபருக்கு உண்டான ஆஃகிரத்தாகும்.
أَفَغَيْرَ ٱللَّهِ أَبْتَغِى حَكَمًۭا وَهُوَ ٱلَّذِىٓ أَنزَلَ إِلَيْكُمُ ٱلْكِتَٰبَ مُفَصَّلًۭا ۚ وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْلَمُونَ أَنَّهُۥ مُنَزَّلٌۭ مِّن رَّبِّكَ بِٱلْحَقِّ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ.
6:114. எனவே மனித வாழ்வியல் சம்பந்தமான அனைத்து விஷயங்களைப் பற்றியும், எந்தெந்த செயல்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் முழு விவரங்கள் அடங்கிய குர்ஆனை அல்லாஹ் இறக்கி அருளிய பின்பும், நாம் அதை விட்டுவிட்டு வேறு வழிமுறைகளை எப்படி பின்பற்ற முடியும்? இதில் தரப்படுகின்ற வழிகாட்டுதல்கள் யாவும் உண்மையின் அடிப்படையிலேயே உள்ளன என்பதும், அவை இறைவனிடமிருந்து தான் வந்துள்ளன என்பதும், அந்த வேதக்காரர்களுக்கும் தெரியும். எனவே இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை என்று மக்களிடம் தெளிவாக எடுத்துரையுங்கள்.
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًۭا وَعَدْلًۭا ۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.
6:115. மேலும் மனிதனின் சுமுகமான வாழ்விற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதலையும் உம் இறைவன் புறத்திலிருந்து சொல்லி முடித்தாகி விட்டது. எதுவும் சொல்லாமல் விடுபடவில்லை. இனி இவ்வுலகம் நிலைத்திருக்கும் நாள் வரையில், இவ்வுலகில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளும், இறைவனின் இதே விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெற்று வரும். இதில் எக்காலத்திலும், எந்த மாறுதலும் ஏற்படாது. ஏனெனில் எல்லாவற்றையும் கேட்கும் மற்றும் அறிந்துகொள்ளும் வல்லமையும் உடைய அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். (மேலும் பார்க்க 15:9)
وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِى ٱلْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ.
6:116. இப்படியொரு விரிவான வழிகாட்டுதல் வந்த பின்பும், மக்களுள் பெரும்பாலோர் கடைப்பிடித்து வரும் வேறு வழிமுறையைப் பின்பற்றுவது சரியாகாது. அவ்வாறு நீங்கள் பின்பற்றுவீர்களானால், அல்லாஹ் காட்டிய வழிமுறையை விட்டுவிட்டு, தவறான வழியில் சென்று விடுவீர்கள். ஏனெனில் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வரும் வழிமுறைக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. எனவே அவர்கள் எதிர்பார்க்கும் நிலையான நற்பலன்கள் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்கள் வெறும் கற்பனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். எனவே அவர்கள் செய்வது அனைத்தும் சரி என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.
إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ مَن يَضِلُّ عَن سَبِيلِهِۦ ۖ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ.
6:117. நிச்சயமாக அல்லாஹ் காட்டிய வழியை விட்டுவிட்டு வழிதவறிச் செல்பவர்கள் யார் என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அதே போல் அவன் காட்டிய வழியில் செல்பவர் யார் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். இதை நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
فَكُلُوا۟ مِمَّا ذُكِرَ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ إِن كُنتُم بِـَٔايَٰتِهِۦ مُؤْمِنِينَ.
6:118. இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் வேத அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அல்லாஹ் உங்களுக்கு ஆகுமானதாக ஆக்கியதை அவன் பெயரைச் சொல்லி உண்ணுங்கள்.
ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றவே என்றிருக்க வேண்டும். எனவே எந்தச் செயலை செய்தாலும் இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். (பார்க்க-6:162)
وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا۟ مِمَّا ذُكِرَ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا ٱضْطُرِرْتُمْ إِلَيْهِ ۗ وَإِنَّ كَثِيرًۭا لَّيُضِلُّونَ بِأَهْوَآئِهِم بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِٱلْمُعْتَدِينَ.
6:119. மேலும் ஆகுமானவை மற்றும் விலக்கப்பட்டவை (ஹலால் ஹராம்) ஆகிய விஷயத்தில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது. (66:1) எனவே அனுமதி அளிக்கப்பட்டவற்றை அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உண்பதில் என்ன தடை இருக்கப் போகிறது? உடல் ஆரோக்கியம் போன்ற நிர்ப்பந்தம் இருந்தால் அதை நீங்கள் தனிப்பட்ட முறையில் தவிர்த்துக் கொள்ளலாம். மற்றபடி பொதுவாகத் தடை செய்யப்பட்டவை எவை என்று ஏற்கனவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்பட்டு விட்டது. (5:3) ஆனால் பெரும்பாலோர் இதை சரிவர புரிந்து கொள்ளாமல், தங்கள் மன இச்சைப்படி செயல்படுபவர்கள் சிலவற்றை ஆகுமானது சிலவற்றை ஆகுமானதல்ல என்று இட்டுக்கட்டி பட்டியலிட்டு, அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுகிறார்கள். (பார்க்க 16:116) இதனால் காலப்போக்கில் மற்ற விஷயங்களிலும் அவ்வாறே தலையிட்டு வழிகெட்டுப் போவதற்கு வழி உண்டாகி விடுகிறது. வரம்பு மீறிச் செயல்படுபவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்ப இயலாது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
وَذَرُوا۟ ظَٰهِرَ ٱلْإِثْمِ وَبَاطِنَهُۥٓ ۚ إِنَّ ٱلَّذِينَ يَكْسِبُونَ ٱلْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا۟ يَقْتَرِفُونَ.
6:120. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! மனித நேயம் மற்றும் ஒழுக்க மாண்புகளைச் சீரழிக்கும் பாவச் செயல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவை வெளிப்படையாக இருந்தாலும் மறைமுகமாக இருப்பினும் சரியே. இத்தகைய செயல் சமுதாயத்தில் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதையும் மீறி இதில் யார் ஈடுபடுகிறார்களோ அவர்கள் தண்டனைக்கு உரியவர்களே.
மேலும் உணவு விவகாரங்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது? அவன் பெயரைச் சொல்லாமல் அறுப்பதால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது என சிலர் நினைக்கலாம். விஷயம் சிறியதாக இருந்தாலும் அது பரவாயில்லை என்று விட்டுவிட்டால் காலப்போக்கில் மற்ற விஷயங்களிலும் அலட்சியப் போக்கு ஏற்பட்டுவிடும். எனவே
وَلَا تَأْكُلُوا۟ مِمَّا لَمْ يُذْكَرِ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ وَإِنَّهُۥ لَفِسْقٌۭ ۗ وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوْلِيَآئِهِمْ لِيُجَٰدِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ.
6:121. அல்லாஹ்வின் பெயரைச் சொல்லப்படாதவற்றை நீங்கள் உண்ணாதீர்கள். நிச்சயமாக அது நாளடைவில் மற்ற விஷயங்களிலும் வழிதவறச் செய்துவிடும். இது விஷயமாக உங்களுடன் தர்க்கம் செய்யும்படி விஷமிகள் தம் சக தோழர்களை தூண்டி விடுகிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டால், நீங்களும் இணைவைப்போரில் ஒருவராக ஆகிவிடுவீர்கள்.
أَوَمَن كَانَ مَيْتًۭا فَأَحْيَيْنَٰهُ وَجَعَلْنَا لَهُۥ نُورًۭا يَمْشِى بِهِۦ فِى ٱلنَّاسِ كَمَن مَّثَلُهُۥ فِى ٱلظُّلُمَٰتِ لَيْسَ بِخَارِجٍۢ مِّنْهَا ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْكَٰفِرِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.
6:122. இதை ஓர் உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். நடைபிணமாக வாழும் ஒருவனுக்கு நாம் உயிரோட்டமுள்ள வாழ்வைக் கொடுக்கிறோம். இதற்காக ஒளிமயமான வழிகாட்டுதல்களை அளிக்கிறோம். அவன் அதைக் கொண்டு தன் வாழ்வை பிரசாமாக்கிக் கொள்கிறான். மற்றொருவன் நடைபிணமாகவே இருந்து இருளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றானே அன்றி அதை விட்டு வெளியே வர அவன் விரும்புவதே இல்லை. இவ்விருவரும் சமமாவார்களா? இவ்வாறே இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள் செய்யும் செயல்கள் யாவும் அவர்களுக்கு அழகானவையாகவே தோன்றுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.
அதாவது இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களுக்கு கிணற்றில் வாழும் தவளை போல் இருட்டில் இருப்பதே ஆனந்தமாக இருக்கிறது. வெளிச்சத்திற்கு வர கசப்பாக இருக்கிறது. அல்லாஹ்வின் பெயரைப் பயன் படுத்தச் சொல்வதும் அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது. காரணம் அவர்கள் தாங்களே உருவாக்கி வைத்துள்ள சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்து வந்தார்கள்.
وَكَذَٰلِكَ جَعَلْنَا فِى كُلِّ قَرْيَةٍ أَكَٰبِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا۟ فِيهَا ۖ وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ.
6:123. இதுதான் சமுதாயத்தை இருளில் தக்க வைத்துக்கொள்ள விரும்பும் மதத் தலைவர்களின் மனோ நிலையாகும். இறைவழிகாட்டுதலின்படி சமுதாய மேம்பாட்டிற்காக ஓர் அமைப்பை உருவாக்க இறைத்தூதர்கள் முயன்ற போதெல்லாம், இந்த விஷமிகள் அது வளரக் கூடாது என்று பல சதி திட்டங்களைத் தீட்டி வந்துள்ளனர். அவர்கள் சற்றே சிந்தித்திருந்தால் இது எல்லோருடைய நன்மைக்காகத் தான் என்பதை விளங்கி இருப்பார்கள். ஆனால் அவர்கள் இருளில் வாழ்வதே சிறப்பு என்று எண்ணிக் கொண்டிருப்பதால், இந்த ஒளியின் பக்கம் வருவதே இல்லை. அதனால் இந்த அமைப்பிற்கு எதிராக அவர்கள் செய்யும் சதி திட்டங்கள் யாவும் அவர்களையே பாதிக்கும் என்பதை அவர்கள் உணரக் கூடியவர்களாக இல்லை.
وَإِذَا جَآءَتْهُمْ ءَايَةٌۭ قَالُوا۟ لَن نُّؤْمِنَ حَتَّىٰ نُؤْتَىٰ مِثْلَ مَآ أُوتِىَ رُسُلُ ٱللَّهِ ۘ ٱللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُۥ ۗ سَيُصِيبُ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ صَغَارٌ عِندَ ٱللَّهِ وَعَذَابٌۭ شَدِيدٌۢ بِمَا كَانُوا۟ يَمْكُرُونَ.
6:124. மேலும் அவர்களிடம் இறைச் செய்தியை எடுத்துரைப்பவர் வந்தால், இறைத் தூதருக்கு வஹீ வருவது போல் தங்களுக்கும் இறைவனிடமிருந்து நேரடியாக வஹீ வரவேண்டும். அப்படி வராத வரையில் நாங்கள் அந்த வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொல்லி விடுவார்கள். வஹீ இறக்கி அருளுவது சம்பந்தமாக முடிவு செய்வது அல்லாஹ்வின் செயல்திட்ட விஷயங்களில் உள்ளதாகும். அதன்படி யாருக்கு எங்கே எப்போது இறைச் செய்தியை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பதற்கு சாக்குப் போக்குகளைச் சொல்லி, அதற்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு இறைவனின் நியதிப்படி கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை அறிவித்துவிடுங்கள்.
மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விட்டதால் மற்ற படைப்புகளைப் போல் மனிதன் தன் இயல்புகளின் அடிப்படையில் வாழும்படி செய்யவில்லை. அவ்வாறு படைக்கப்பட்டிருந்தால் இவனும் மற்ற உயிரினங்களைப் போல் தன் இயல்பின் அடிப்படையில் வாழ்ந்திருப்பான். ஆனால் இந்த உலகில் எந்த முன்னேற்றத்தையும் மனிதன் கண்டிருக்க மாட்டான். உதாரணத்திற்கு பத்தாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த குதிரைகள் இன்றைக்கும் அதே நிலையில்தான் வாழ்கின்றன. ஆனால் மனிதனின் வாழ்க்கைத் தரம் அவ்வாறில்லை. எனவே சமுதாயத்திலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு வஹீ முலமாக இறைச் செய்தியை அளித்து, அவற்றை மக்களிடம் எடுத்துரைத்து, சமுதாய மக்களுள் ஆற்றல்களை வளர்த்து அவர்களை சீராக்கி வேகமாக வளரச் செய்வதே இறைவனின் செயல் திட்டமாகும் (பார்க்க 42:52)
فَمَن يُرِدِ ٱللَّهُ أَن يَهْدِيَهُۥ يَشْرَحْ صَدْرَهُۥ لِلْإِسْلَٰمِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُۥ يَجْعَلْ صَدْرَهُۥ ضَيِّقًا حَرَجًۭا كَأَنَّمَا يَصَّعَّدُ فِى ٱلسَّمَآءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ ٱللَّهُ ٱلرِّجْسَ عَلَى ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ.
6:125. அல்லாஹ்வின் இந்தச் செயல்திட்டத்தின்படி யார் இறைவழிகாட்டுதலைப் பெற நாடி வருகிறார்களோ அவர்களைத் தான் இந்தக் குர்ஆன் எந்தக் குறையுமில்லாத அமைதியான வளம் மிக்க வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்லும். இதுவே இஸ்லாம் என்பதாகும். இதற்கு மாறாக யார் வழிகேட்டில் செல்ல நாடுகிறார்களோ, அவர்கள் வானத்தில் காற்றில்லா மண்டலத்தில் சிக்கி எந்தப் பக்கமும் அசைய முடியாமல் தத்தளிப்பவர்களைப் போல் சடங்கு சம்பிரதாயங்களின் வலையில் சிக்கித் தவிக்கவேண்டிய நிலைதான் ஏற்படும். இதுவே இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தீய வழியில் செல்பவர்களுக்குக் கிடைக்கும் கேடுகள் ஆகும்.
وَهَٰذَا صِرَٰطُ رَبِّكَ مُسْتَقِيمًۭا ۗ قَدْ فَصَّلْنَا ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَذَّكَّرُونَ.
6:126. எனவே சிந்தனையுடன் செயலாற்றும் சமுதாயத்திற்கு இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட இவ்வேத அறிவுரைகள், மனித வாழ்வின் வளமான எதிர்காலத்திற்குச் சரியான பாதையைக் காட்டுகிறது.
۞ لَهُمْ دَارُ ٱلسَّلَٰمِ عِندَ رَبِّهِمْ ۖ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.
6:127. இத்தகையவர்கள் செய்து வரும் ஆற்றல் மிக்க செயல்களின் பலனாகத் தங்களைப் பரிபாலிக்கும் இறைவனின் நியதிப்படி சாந்தியும் சமாதானமும் கொண்ட சுவனத்திற்கு ஒப்பான சமுதாயமாக உருவெடுக்கும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் இத்தகையவர்களுக்கு எல்லா சமயங்களிலும் உறுதுணையாக நிற்கும்.
وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًۭا يَٰمَعْشَرَ ٱلْجِنِّ قَدِ ٱسْتَكْثَرْتُم مِّنَ ٱلْإِنسِ ۖ وَقَالَ أَوْلِيَآؤُهُم مِّنَ ٱلْإِنسِ رَبَّنَا ٱسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍۢ وَبَلَغْنَآ أَجَلَنَا ٱلَّذِىٓ أَجَّلْتَ لَنَا ۚ قَالَ ٱلنَّارُ مَثْوَىٰكُمْ خَٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌۭ.
6:128. இத்தகைய சமுதாயம் உருவாகும் கால கட்டத்தில், நகர்புற மற்றும் நாட்டுப்புற மக்களில் உள்ள தீயவர்களை அழைத்து விசாரணை நடக்கும். “இதுவரை நீங்கள் சமுதாயத்தை சீரழிக்கும் தீய செயல்களிலும் குற்றச் செயல்களிலும் ஒருவர் மற்றவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தீர்கள் அல்லவா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “நாங்கள் இந்த விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டது உண்மை தான். எங்கள் செயல்களின் விளைவுகளைச் சந்திக்கும் காலம் நெருங்கி விட்டது. திருந்தி வாழ எங்களுக்குக் கிடைத்த கால அவகாசமும் முடிந்து விட்டது” என்று நகர்ப்புற மக்கள் ஒப்புக் கொள்வார்கள். அப்போது, “இது வரையில் செய்து வந்த குற்றங்களுக்கு உங்கள் அனைவருக்கும் இனி வேதனை மிக்க நரகம்தான் கிடைக்கும். அல்லாஹ்வின் சட்டடிப்படி அதில் நிரந்தரமாக இருக்க வேண்டியதைத் தவிர வேறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை” என்று அவர்களிடையே தீர்ப்பு வழங்கப்படும். இவை யாவும் கண்மூடித்தனமாகத் நடைபெறுவதல்ல அல்ல. தெளிவான ஞானத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்படுவதாகும்.
وَكَذَٰلِكَ نُوَلِّى بَعْضَ ٱلظَّٰلِمِينَ بَعْضًۢا بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ.
6:129. மேலும் சட்ட விரோதச் செயல்களை பொதுவாக யாரும் தனித்துச் செய்வதில்லை. அவற்றை கூட்டாக இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. எனவே தண்டனை விஷயத்திலும் அவர்கள் அனைவரையும் இணைக்க வேண்டியதாகிறது.
அதற்கு அவர்கள் இந்த தண்டனை விஷயமாக இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று எங்களுக்குத் தெரியாது என்றும் தங்களுக்கு மன்னிப்பு அளிக்கும்படியும் மன்றாடுவார்கள்.
يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌۭ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ ءَايَٰتِى وَيُنذِرُونَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَا ۚ قَالُوا۟ شَهِدْنَا عَلَىٰٓ أَنفُسِنَا ۖ وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَشَهِدُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا۟ كَٰفِرِينَ.
6:130. அப்போது நகர்ப்புற மக்கள் மற்றும் நாட்டுப்புறத்தோர் ஆகியோரிடம், “இறைவேத அறிவுரைகளை எடுத்துரைத்து, அதற்கு மாற்றமாக நடந்தால் இப்படிப்பட்ட தண்டனைக்கு ஆளாவீர்கள் என்று முன்னெச்சரிக்கை செய்பவர்கள் உங்களிலிருந்து யாரும் வரவில்லையா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “இது உண்மையே. எங்களிடம் பல இறைத்தூதர்கள் வந்தார்கள். இதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தற்காலிக சுக வாழ்வின் மோகங்கள் எங்களை மயக்கிவிட்டன. எனவே அந்த எச்சரிக்கைகளை நாங்கள் அலட்சியப் படுத்திவிட்டோம். இப்போது எங்கள் பாவச் செயல்களே எங்களுக்கு எதிர் வினையாக வந்து நிற்கின்றன” என்று அவர்கள் தங்களுக்கு எதிராகத் தாங்களே சாட்சி கூறுவார்கள்.
அதாவது செயல்களைச் செய்யும் போது, எது நல்லது எது கெட்டது என்ற பாகுபாடு இருப்பதில்லை. அவ்வாறு தெரிந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. எனவே தற்காலிக சுகபோகங்களை அனுபவிப் பதிலேயே மூழ்கி விடுகிறார்கள். ஆனால் அந்த தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் போது, தம் தவறான செயல்களைப் பற்றி எண்ணி வருந்துவார்கள்.
இரண்டாவதாக இந்த வாசகத்தில் மனித சமுதாயம் மற்றும் ஜின் சமுதாயம் என்று வருகிறது. இவ்விரு இனங்களிலிருந்து இறைத்தூதர்கள் வரவில்லையா என்று கேட்டதற்கு நிச்சயமாக வந்தார்கள் என்று பதில் சொல்கிறார்கள். ஆக இறைத்தூதர்கள் யாவரும் மனிதர்களே அன்றி வேறில்லை என்று குர்ஆன் 12:109 வாசகம் கூறுகிறது. எனவே “ஜின்” இனத்தவர்களும் மனித இனத்தவர்களே என்று புலனாகிறது. அக்காலத்தில் வாழ்ந்த பழங்குடியினர், மலைவாழ் மக்கள் கிராமப் புறத்தோர் என்றும் பொருள் கொள்ளலாம்.
மேலும் “ஜின்” என்ற வார்த்தை கண்ணக்குப் புலப்படாதவை என்ற பொருளிலும் திருக்குர்ஆனில் ஆங்காங்கே வருகிறது. (பார்க்க 6:100) ஆனால் ‘ஜின்’ மற்றும் ‘இன்ஸ்’ என்று இணைந்து வரும்போது, ஜின் என்ற வார்த்தைக்கும் நாட்டுப் புறத்தோர், மலைவாழ் மக்கள் அல்லது ஆதிவாசிகள் என்று பொருள்படும்.
ذَٰلِكَ أَن لَّمْ يَكُن رَّبُّكَ مُهْلِكَ ٱلْقُرَىٰ بِظُلْمٍۢ وَأَهْلُهَا غَٰفِلُونَ.
6:131. ஆக சமுதாயத்தை சீர்கெடுக்கும் அநியாயமான செயல்கள் எவை என்பதை எச்சரிக்கை செய்திகள் அடங்கிய இறைவழிகாட்டுதல் அளிக்கப்படாத வரையில், அல்லாஹ் எந்தச் சமுதாயத்தையும் அழிப்பதில்லை. இவ்வாறு அளித்தும் அதை அலட்சியப்படுத்துவதன் காரணமாக, அவர்கள் அழிவினை சந்தித்துக் கொள்கிறார்கள். ஆக அல்லாஹ்வின் புறத்திலிருந்து யாருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப் படுவதில்லை.
சிந்தனையாளர்களே! நபித்துவத் தொடர் முற்றுப் பெற்றுவிட்டது. இனி இறைத்தூதர்கள் வரமாட்டார்கள். எனவே அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான் என்று எண்ணி விடாதீர்கள். திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு உலகம் முழுவதும் சமர்ப்பித்தாகி விட்டது. அதைப் படித்து ஆய்வு செய்து மக்களுக்கு எடுத்துரைத்து நல்வழிப் படுத்துவது மார்க்க அறிஞர்களின் முக்கிய கடமையாகும் (பார்க்க 3:104&110) அவற்றை அறிந்து பின்பற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். நினைவில் கொள்ளுங்கள்! அறியாமை தண்டனையிலிருந்து தப்பிக்கும் வழி அல்ல. (6:156-157) Ignorance of Law is no excuse.
وَلِكُلٍّۢ دَرَجَٰتٌۭ مِّمَّا عَمِلُوا۟ ۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ.
6:132. எனவே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஏற்படும் அழிவுகள் யாவும் அவரவர் செய்யும் செயல்களைப் பொறுத்தே அமையும். அதே போல் ஆற்றல் மிக்க நற்செயல்களைச் செய்வோருக்கு உயர்வும் கண்ணியமும் கிடைக்கும். ஆக உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டம் எப்போதும் உங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
وَرَبُّكَ ٱلْغَنِىُّ ذُو ٱلرَّحْمَةِ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنۢ بَعْدِكُم مَّا يَشَآءُ كَمَآ أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوْمٍ ءَاخَرِينَ.
6:133. அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் யாவும் தனிப்பட்ட எந்த சமுதாயத்தையும் சார்ந்து இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. மனிதனின் நல்வாழ்விற்காக இந்த வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றைக் கடைப்பிடித்து அதன்படி ஆக்கப்பூர்வமான ஆற்றல் மிக்க செயல்களை செய்யும் தகுதியினை வளர்த்துக் கொள்ளும் சமுதாயம், உயிரோட்டமுள்ள சமுதாயமாகத் திகழும். அவ்வாறு செயல்பட தகுதி இல்லாதவர்கள் இவ்வுலகில் நிலைத்திருக்க முடியாது. அவர்களுக்குப் பதிலாக வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஆற்றல் மிக்கவர்கள் இவ்வுலகில் மேலோங்கி வருவார்கள்.
إِنَّ مَا تُوعَدُونَ لَءَاتٍۢ ۖ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ.
6:134. இது வெறும் அச்சுறுத்தல் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இப்படி ஒரு நிலை ஏற்படுவது சர்வ நிச்சயம். அவ்வாறு ஏற்படுவதை யாரும் தடுக்க முடியாது. இதை மனதில் கொண்டு சமுதாய சீர்கேடுகளை நீக்க தொடர்ந்து பாடுபடுங்கள்.
قُلْ يَٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَامِلٌۭ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ مَن تَكُونُ لَهُۥ عَٰقِبَةُ ٱلدَّارِ ۗ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّٰلِمُونَ.
6:135. இதையும் மீறி அவர்கள் தம் போக்கை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றால், “நீங்கள் உங்கள் விருப்பப்படி செயல்பட்டு வாருங்கள். நாங்களும் இறைவழிகாட்டுதலின்படி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகிறோம். இறுதியில் யாருக்கு நலம் மிக்க வளமான வாழ்வு கிடைக்கிறது என்பதை வெகு விரைவிலேயே பார்த்துக் கொள்வீர்கள். நிச்சயமாக அக்கிரமம் செய்யும் சமுதாயம் ஒருபோதும் தம் இலட்சியத்தில் வெற்றி பெறவே முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு அறிவித்து விடுங்கள்.
அவர்களால் இதைப் பற்றி எல்லாம் எப்படி சிந்திக்க முடியும்? அவர்களின் பேச்சும் கவனமும் அற்பமான விஷயங்களில் தான் இருக்கிறது. அதுவும் அவர்களுடைய சடங்கு சம்பிரதாயங்கள் வியப்பூட்டும் வகையில் இருக்கும். அவர்களுடைய நிலைமை எவ்வாறு உள்ளது என்பதையும் கவனியுங்கள்.
وَجَعَلُوا۟ لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ ٱلْحَرْثِ وَٱلْأَنْعَٰمِ نَصِيبًۭا فَقَالُوا۟ هَٰذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَٰذَا لِشُرَكَآئِنَا ۖ فَمَا كَانَ لِشُرَكَآئِهِمْ فَلَا يَصِلُ إِلَى ٱللَّهِ ۖ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَآئِهِمْ ۗ سَآءَ مَا يَحْكُمُونَ.
6:136. தமக்குக் கிடைக்கின்ற விவசாய மகசூல்கள் மற்றும் கால்நடைகளிலிருந்து அல்லாஹ்வுக்கு என ஒரு பாகத்தை பிரித்து எடுக்கிறார்கள். அதுவும் மனிதனுக்கு அல்லாஹ் அளித்தது தான். ஆனால் தங்கள் மூடநம்பிக்கையின் படி இது அல்லாஹ்வுடைய பங்கு என்றும், மற்றும் ஒரு பங்கு அவர்கள் இணைவைக்கும் தெய்வங்களுக்கு எனவும் பிரிக்கிறார்கள். அல்லாஹ்வுக்கு என்று பிரித்து எடுக்கப்பட்ட பங்கு அல்லாஹ்விடம் சென்றடைகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அது அல்லாஹ் நிர்ணயித்தபடி தேவை உள்ளவர்களுக்குப் போய் சென்றடைய வேண்டியவை. ஆனால் அவ்வாறு சென்றடைவதில்லை. மேலும் தெய்வங்களுக்காக என்று பிரித்த பங்கும் அல்லாஹ்வின் அறிவுரைப்படி சென்றடைவதில்லையே! இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்.!
அதாவது அல்லாஹ்வுக்காகப் பிரிக்கப்பட்ட பங்கு அல்லாஹ் நிர்ணயித்தபடி ஏழை எளிய தேவையுள்ள மக்களுக்குப் பங்கிட்டு கொடுப்பதில்லை. அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி மதகுருமார்களும் புரோகிதர்களும் விழுங்கி விடுகிறார்கள். அது மட்டுமின்றி தெய்வங்களுக்காக என்று பிரித்து எடுக்கப்பட்டதையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் இத்தகைய செயல்கள் நல்லதா? அல்லாஹ்வின் பெயரிலும் அவ்லியாக்கள் பெயரிலும் அறுசுவை உணவு செய்து ஃபாத்திஹா, தரூத், உரூஸ் என்று சொல்லி தாமும் தம் உற்றார் உறவினர்களும் உண்டு மகிழும் பழக்கம் முஸ்லிம்கள் மத்தியிலும் நடைபெறுகிறது. எந்த பலனும் அளிக்காத இத்தகைய வழிமுறைகளை பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٍۢ مِّنَ ٱلْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَٰدِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا۟ عَلَيْهِمْ دِينَهُمْ ۖ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا فَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ.
6:137. அவர்களுடைய மூடநம்பிக்கைகள் இத்துடன் நின்றுவிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலோர், தாம் வணங்கும் கற்பனைத் தெய்வங்களின் மீதுள்ள அளவுகடந்த பாசத்தால், தாம் பெற்றெடுத்த குழந்தையையே பலி கொடுப்பதற்கும் தயங்குவதில்லை. இது மிகவும் புண்ணியமான காரியம் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். இவை யாவும் மனிதனுக்கு முழு சுதந்திரத்துடன் வாழ வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் இப்படிப்பட்ட வழிமுறைகள் உருவாயின. மனிதனே அவற்றை ஏற்படுத்திவிட்டு, அவை மிக அழகான புண்ணியமிக்க செயல்கள் என்றும் நினைத்துக் கொள்கிறான். மற்ற உயிரினங்களைப் போல் ஒரே இயல்பில் வாழவைப்பது என்று அல்லாஹ்வின் செயல் திட்டம் இருந்திருந்தால் அவன் இவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டான். எனவே இவர்களுடைய இப்படிப்பட்ட பயனற்ற மூடநம்பிக்கைகளை சமுதாயத்தை விட்டு நீக்கிவிட பாடுபடுங்கள்.
وَقَالُوا۟ هَٰذِهِۦٓ أَنْعَٰمٌۭ وَحَرْثٌ حِجْرٌۭ لَّا يَطْعَمُهَآ إِلَّا مَن نَّشَآءُ بِزَعْمِهِمْ وَأَنْعَٰمٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَٰمٌۭ لَّا يَذْكُرُونَ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهَا ٱفْتِرَآءً عَلَيْهِ ۚ سَيَجْزِيهِم بِمَا كَانُوا۟ يَفْتَرُونَ.
6:138. மேலும் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகள் மற்றும் விளைச்சல் மகசூல்களில், மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பங்கு இல்லை என்பார்கள். அவற்றை யாருக்குத் தர வேண்டும் யாருக்குத் தரக்கூடாது என்று சுயமாக ஷரீயத் சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள்.
அதே போல் கால்நடைகளில் சிலவற்றை சவாரி செய்யவும் சுமைகளைச் சுமந்து செல்லவும் தடை விதிக்கிறார்கள். இன்னும் சில பிராணிகளை அறுக்கும் போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லக் கூடாது என்றும் தடை விதிக்கிறார்கள். இவையாவும் அல்லாஹ்வின் கட்டளை என்றும் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஆனால் இவையாவும் அவர்களுடைய சொந்த கற்பனைகளே ஆகும். அவர்களின் கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவர்களே பொறுப்பாளி ஆவார்கள். அதிலிருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது.
وَقَالُوا۟ مَا فِى بُطُونِ هَٰذِهِ ٱلْأَنْعَٰمِ خَالِصَةٌۭ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰٓ أَزْوَٰجِنَا ۖ وَإِن يَكُن مَّيْتَةًۭ فَهُمْ فِيهِ شُرَكَآءُ ۚ سَيَجْزِيهِمْ وَصْفَهُمْ ۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌۭ.
6:139. அவர்கள் பின்பற்றி வரும் மூடநம்பிக்கைகளில், தாங்கள் வளர்க்கும் பிராணிகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் யாவும் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை பெண்களுக்கு சேராது என்கிறார்கள். ஒருவேளை அது செத்து பிறந்தால் அவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு என்கிறர்கள். இவை யாவும் அவர்களின் மூடநம்பிக்கையில் உதித்த சிந்தனைகளே ஆகும். இப்படி செயல்படுவதன் விளைவுகள் அவர்களுக்கு ஏற்பட்டே தீரும். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் முழு ஞானத்தின் அடிப்படையில் உருவானவையே! அவை அனைவரின் செயல்களைக் கண்காணித்த வண்ணமிருக்கும் என்பதை அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்.
قَدْ خَسِرَ ٱلَّذِينَ قَتَلُوٓا۟ أَوْلَٰدَهُمْ سَفَهًۢا بِغَيْرِ عِلْمٍۢ وَحَرَّمُوا۟ مَا رَزَقَهُمُ ٱللَّهُ ٱفْتِرَآءً عَلَى ٱللَّهِ ۚ قَدْ ضَلُّوا۟ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ.
6:140. ஆக எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைப் பலியிடுவது தெய்வச்செயல் என்று எண்ணி கொன்று விடுகிறார்களோ அவர்களும், அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்தவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் தடை விதிக்கிறார்களோ அவர்களும் வழிதவறிச் சென்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவர். அத்தகையவர்கள் பெருத்த நஷ்டத்தில் இருப்பார்கள். அதாவது அவர்களுடைய இத்தகைய சட்ட விரோத செயல்களுக்கு கடுமையான வேதனைகள் கிடைக்கும் என்பதை அறிவித்து விடுங்கள்.
۞ وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَ جَنَّٰتٍۢ مَّعْرُوشَٰتٍۢ وَغَيْرَ مَعْرُوشَٰتٍۢ وَٱلنَّخْلَ وَٱلزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُۥ وَٱلزَّيْتُونَ وَٱلرُّمَّانَ مُتَشَٰبِهًۭا وَغَيْرَ مُتَشَٰبِهٍۢ ۚ كُلُوا۟ مِن ثَمَرِهِۦٓ إِذَآ أَثْمَرَ وَءَاتُوا۟ حَقَّهُۥ يَوْمَ حَصَادِهِۦ ۖ وَلَا تُسْرِفُوٓا۟ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ.
6:141. மாறாக அனைத்துத் தரப்பு மக்களும், மற்ற எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்காக தாராளமான வாழ்வாதாரங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பந்தல்களில் பரவ விடப்பட்ட கொடிகளும், பரவ விடப்படாத செடிகளும், பேரீத்த மரங்கள் போன்ற மரங்களுள் உள்ள சோலைகளும் அடங்கும். அது மட்டுமின்றி விதவிதமான சுவை மிக்க காய்கறி தானியங்களும் உள்ளன. மேலும் ஒரே விதமாகவும், வெவ்வேறு விதமாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் என்னும் ஒலிவ மரங்களும், மாதுளை மரங்களும் படைக்கப்பட்டுள்ளன.
அவற்றிலிருந்து உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு பலனளிக்கக் கூடியவற்றை தாராளமாக உண்ணுங்கள். அவற்றை அறுவடை செய்யும் போது, அதற்குத் துணை நின்ற உழைப்பாளிகளுக்கும், மற்றும் தம் தேவைக்குப் போக மிகுதியானவற்றை அரசமைப்புக்கும் (Food Corporation) அளித்து வாருங்கள். அது அனைவரின் தேவைகளை அறிந்து அதற்குத் தகுந்தவாறு பங்கீடு செய்யும். இப்படியாக விளைச்சல்கள் வீண் விரயம் ஆவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுங்கள். மேலும் வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.
وَمِنَ ٱلْأَنْعَٰمِ حَمُولَةًۭ وَفَرْشًۭا ۚ كُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ.
6:142. மேலும் கால்நடைப் பிராணிகளில் சில, சுமைகளை சுமப்பதற்காகவும் சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்த வற்றிலிருந்து நீங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாறாக சொந்தக் கற்பனைகளில் தம் மனோ இச்சையின் படி உருவாக்கிய வழிமுறைகளைப் பின்பற்றாதீர்கள். அது உங்கள் வாழ்வின் எல்லா நலத் திட்டங்களையும் சீர்குலைத்து விடும்.
ثَمَٰنِيَةَ أَزْوَٰجٍۢ ۖ مِّنَ ٱلضَّأْنِ ٱثْنَيْنِ وَمِنَ ٱلْمَعْزِ ٱثْنَيْنِ ۗ قُلْ ءَآلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ ٱلْأُنثَيَيْنِ أَمَّا ٱشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ ٱلْأُنثَيَيْنِ ۖ نَبِّـُٔونِى بِعِلْمٍ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
6:143. கால் நடைகளில் எட்டு வகைகள் உள்ளன. செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு ஆகிய இருவகைகளில் கிடா, பெட்டை என மொத்தம் நான்கு வகைகள் ஆகின்றன. ஆனால் அவர்கள் செய்வது என்ன? கர்ப்பங்களில் உள்ள கிடா, பெண்களுக்குப் பாத்தியதை இல்லை என்றும், பெட்டையில் ஆண் பெண் ஆகிய இருவருக்கும் பங்குண்டு என்றும் கூறுகிறார்கள் (6:139). “அப்படி ஒரு தடை உத்தரவு அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதா? கிடா ஆடு ஆகுமானது, பெட்டை ஆகுமானதல்ல என்று எப்போதாவது அல்லாஹ்விடமிருந்து சொல்லப்பட்டுள்ளதா? அதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? அவ்வாறு ஆதாரங்கள் இருந்தால் கொண்டுவாருங்கள்” என்று அவர்களிடம் கூறுங்கள்.
وَمِنَ ٱلْإِبِلِ ٱثْنَيْنِ وَمِنَ ٱلْبَقَرِ ٱثْنَيْنِ ۗ قُلْ ءَآلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ ٱلْأُنثَيَيْنِ أَمَّا ٱشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ ٱلْأُنثَيَيْنِ ۖ أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ وَصَّىٰكُمُ ٱللَّهُ بِهَٰذَا ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًۭا لِّيُضِلَّ ٱلنَّاسَ بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.
6:144. மேற்சொன்ன நான்கு வகை கால்நடைகள் தவிர, மேலும் நான்கு வகை உள்ளன. அவை ஒட்டகம் அதில் கிடா பெட்டை மற்றும் மாடு அதில் பசு, காளை ஆகியவற்றில் கிடாவையோ அல்லது பெட்டையையோ அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளதையோ அல்லாஹ் தடை விதித்துள்ளானா? அல்லாஹ் அவ்வாறு தடை செய்துள்ளதாகக் கூறுகிறீர்களே (6:139) இதற்கு நீங்கள் சாட்சியாளர்களா? இதை அவர்களிடமே கேளுங்கள். மக்களை வழிகெடுப்பதற்காக சற்றும் முன்யோசனை எதுவுமின்றி அல்லாஹ் சொன்னதாகக் கற்பனை செய்து சொல்பவர்களை விட அநியாயக்காரர்கள் வேறு யாராக இருக்க முடியும்? இப்படி அநியாம் செய்பவர்களுக்கு ஒரு போதும் அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்காது.
உலகில் வாழும் மனிதன் தத்தம் பிரதேசங்களில் உள்ள பிராணிகளை உணவாக பயன்படுத்திக் கொள்கின்றான். கிழக்காசிய நாடுகளில் பாம்பு தவளை போன்ற ஊர்வனவற்றையும் புசிக்கிறார்கள். அவர்களுடைய உடல் நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அங்குச் சென்று, இவற்றைத் தடை செய்ய முடியாது. 5:3 இல் தடை செய்யப் பட்டவற்றை மட்டும் தடுக்க உரிமை உண்டு.
மாறாக உண்ணக் கூடிய பிராணிகளின் அட்டவணையை தயாரித்து வைத்துக் கொண்டு இதுதான் சரியான வழிமுறை என்று சொல்லிக் கொண்டிருந்தால், அந்த மார்க்கம் பிராந்திய மார்க்கமாக ஆகிவிடும். உலக மக்களுக்குப் பொதுவான மார்க்கமாகத் திகழாது. எனவே
قُل لَّآ أَجِدُ فِى مَآ أُوحِىَ إِلَىَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍۢ يَطْعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًۭا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍۢ فَإِنَّهُۥ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ ۚ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍۢ وَلَا عَادٍۢ فَإِنَّ رَبَّكَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.
6:145. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! “தானாக இறந்தவை, பீச்சிடும் இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகிய இவற்றைத் தவிர, புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை. ஏனெனில் இவை அசுத்தமானவை என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்காது. மேலும் அல்லாஹ் அல்லாத பெயரைச் சொல்லி அறுக்கப்படுவதும் தடை செய்யப்படுகிறது. காரணம் இது மார்க்க கட்டளையாகும்.
ஆனால் இக்கட்டான சூழ்நிலையில், அவற்றைப் புசிப்பதும் குற்றமாகாது” என்று எடுத்துரைப்பீராக நிச்சயமாக உங்களை பாபாலிக்கும் இறைவன் எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டு, உங்களின் பாதுகாப்பான வாழ்விற்கு வழிகாட்டியிருப்பது இறைவனின் மாபெரும் கிருபையாகும்.
உணவு விஷயங்களில் சிலவற்றை, குறிப்பிட்ட காலத்தில் சில இடங்களில் மக்களின் ஆரோக்கியத்தை அனுசரித்து தடை செய்யலாம். அது தனிப்பட்ட விஷயமாகும். உதாரணத்திற்கு தென்னிந்தியாவில் எருமாட்டு கறியை சாப்பிட முடியாது. காரணம் அதில் கொழுப்பு சத்து அதிகம். இதனால் விரைவில் நோய்வாய் பட்டு உயிரிழக்க நேரிடும். ஆனால் வட இந்தியாவில் அதை சகஜமாக உண்பார்கள். அங்குள்ள சீதோஷ்ண நிலை அதற்கு துணையாக உள்ளது. அது போல
وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا كُلَّ ذِى ظُفُرٍۢ ۖ وَمِنَ ٱلْبَقَرِ وَٱلْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتْ ظُهُورُهُمَآ أَوِ ٱلْحَوَايَآ أَوْ مَا ٱخْتَلَطَ بِعَظْمٍۢ ۚ ذَٰلِكَ جَزَيْنَٰهُم بِبَغْيِهِمْ ۖ وَإِنَّا لَصَٰدِقُونَ.
6:146. யூதர்களுக்கு நகத்தை உடைய அனைத்தும் உண்பதற்குத் தடை உத்தரவு இருந்து வந்தது. கால்நடைப் பிராணிகளில் உள்ள முதுகுகள், வயிறுகள், மற்றும் எலும்புகளுடன் ஒட்டியிருக்கும் கொழுப்பைத் தவிர, அவற்றில் உள்ள மற்ற கொழுப்புகளை உண்ணவும் தடை இருந்தது. அவர்களிடம் இருந்த மந்தப் போக்கையும் சோம்பலையும் நீக்கவே இந்தத் தடை உத்தரவு இருந்தது. இது உண்மையான விஷயமே ஆகும்.
சில சமயங்களில் உடல் நிலைக் காரணமாக சில உணவு வகைகளை உண்ண மருத்துவர்கள் பத்தியம் வைப்பார்கள். அது குறிப்பிட்ட நோயாளிக்குத் தரப்படுகின்ற தனிப்பட்ட தடை உத்தரவே ஆகும். அதுபோல சமய நூல்களைப் பெற்ற யூதர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனிப்பட்ட முறையில் அந்த சமுதாயத்திற்கு விதிக்கப்பட்டவை ஆகும். ஆனால் இந்தக் குர்ஆன் உலகப் பொதுமறை என்பதால் அவ்வாறு தனிப்பட்ட பிராந்திய மக்களுக்காக தனிப்பட்ட சட்டங்களை விதிக்க முடியாது.
فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمْ ذُو رَحْمَةٍۢ وَٰسِعَةٍۢ وَلَا يُرَدُّ بَأْسُهُۥ عَنِ ٱلْقَوْمِ ٱلْمُجْرِمِينَ.
6:147. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! இவையெல்லாம் பொய் என்று அவர்கள் கூறினால், உமது இறைவன் பரிபாலனதிற்காக அருட்கொடைகளை அளிப்பதில் மிகவும் விசாலமானவன் என்பதை கூறிவிடுங்கள். அவற்றைப் பயன்படுத்தாமல் தடை உத்தரவு செய்து கொண்டதில் நிலைத்திருக்கவே அவர்கள் தீர்மானித்தால் அதன் நஷ்டங்கள் அவர்களுக்கே ஏற்படும். இவ்வாறு தடை செய்து கொண்டு இம்மார்க்கத்தைப் பரவ விடாமல் தடுக்கும் குற்றவாளிகள், தண்டனையிலிருந்து தப்ப மாட்டார்கள் என்பதை அறிவித்து விடுங்கள்.
سَيَقُولُ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَآ أَشْرَكْنَا وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن شَىْءٍۢ ۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ حَتَّىٰ ذَاقُوا۟ بَأْسَنَا ۗ قُلْ هَلْ عِندَكُم مِّنْ عِلْمٍۢ فَتُخْرِجُوهُ لَنَآ ۖ إِن تَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ أَنتُمْ إِلَّا تَخْرُصُونَ.
6:148. ஆனால் தம் மனோ இச்சைப்படி வாழும் இணை வைப்பவர்களைப் பாருங்கள். நாங்கள் உணவு விஷயங்களில் தடை செய்து கொண்டது அல்லாஹ்வின் நாட்டப்படி தான் என்று கூறுகிறார்கள். அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் மற்ற சட்டங்களை இணையாக்கி இருக்க மாட்டோம் என்கிறார்கள். ஆக எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே என்கிறார்கள். (பார்க்க 43:20) இவர்கள் இவ்வாறு சொல்வது புதிதான ஒன்றல்ல. இவர்களுக்கு முன்னிருந்தோரும் இப்படித்தான் பேசி வந்தார்கள். அவர்கள் செய்து வந்த தவறானச் செயல்களின் விளைவுகளின் பிடியில் சிக்கும் வரையில் இவ்வாறு பேசினார்கள். அதன்பின் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனவே இவ்வாறு சொல்லி வருவதற்கு அவர்களிடம் ஆதாரம் இருக்கிறதா என்று கேளுங்கள். அவ்வாறு இருந்தால் அதைக் கொண்டுவரச் சொல்லுங்கள். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஷரீயத் சட்டங்கள் யாவும் வெறும் யூகங்களின் அடிப்படையில் உருவானவை தான். அவற்றைத் தவிர அவர்கள் வேறெதையும் பின்பற்றுவதில்லை. எனவே அவர்கள் வேண்டுமென்றே தர்க்கம் செய்கிறார்கள்.
قُلْ فَلِلَّهِ ٱلْحُجَّةُ ٱلْبَٰلِغَةُ ۖ فَلَوْ شَآءَ لَهَدَىٰكُمْ أَجْمَعِينَ.
6:149. “ஆனால் அனைத்து விஷயங்களைப் பற்றியும் நிரப்பமான அத்தாட்சிகளின் பதிவேடுகளும் அல்லாஹ்விடம் நிச்சயமாக உள்ளன. மற்ற உயிரினங்களைப் போல் உங்களையும் வலுக் கட்டாயமாக ஒரே இயல்பின் அடிப்படையில் வாழும்படி செய்ய அல்லாஹ்வின் செயல்திட்டம் இருந்திருந்தால், அவ்வாறே அவன் படைத்திருக்க முடியும். அப்போது ஒரே வழியில் சென்றிருப்பீர்கள்” என்பதை அவர்களிடம் விளக்கிவிடுங்கள்.
ஆனால் மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விட்டதால் அவன் தன் விருப்பம் போல், மனோ இச்சைப்படி சட்டங்களை உருவாக்கிக் கொண்டு அவையே சரியானவை என்றும் நினைத்துக் கொள்கிறான்.
قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ ٱلَّذِينَ يَشْهَدُونَ أَنَّ ٱللَّهَ حَرَّمَ هَٰذَا ۖ فَإِن شَهِدُوا۟ فَلَا تَشْهَدْ مَعَهُمْ ۚ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ وَهُم بِرَبِّهِمْ يَعْدِلُونَ.
6:150. “நீங்கள் தடைவிதித்துக் கொண்டவை அல்லாஹ்வின் அறிவுரைகளின் படிதான் என்றால் அதற்குரிய அதாரங்களைக் கொண்டுவாருங்கள்” என்று அவர்களிடம் கேளுங்கள். அதையும் மீறி அவர்கள் தம் பேச்சில் நிலைத்து இருந்தால், அவர்கள் பொய்யர்களே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உன் கூற்றுக்கு ஆதரவாக நீர் சாட்சி எதுவும் கூறத் தேவையில்லை. நம் வழிகாட்டுதலைப் பொய்ப்பித்து, “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் மனோ இச்சையை நீர் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் அவர்கள் இறை வழிகாட்டுதலுக்குப் பதிலாக, வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.
۞ قُلْ تَعَالَوْا۟ أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ ۖ أَلَّا تُشْرِكُوا۟ بِهِۦ شَيْـًۭٔا ۖ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَٰنًۭا ۖ وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَٰدَكُم مِّنْ إِمْلَٰقٍۢ ۖ نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ ۖ وَلَا تَقْرَبُوا۟ ٱلْفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۖ وَلَا تَقْتُلُوا۟ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ.
6:151. வாருங்கள். இவற்றை எல்லாம் விட்டுவிட்டு உண்மையிலே அல்லாஹ்வின் புறத்திலிருந்து தடை விதிக்கப்பட்டவை எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
(1) அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளை உருவாக்கிக் கொள்வது தடை செய்யப்படுகிறது.
(2) உங்களை ஈன்றெடுத்த பெற்றோர்களின் நலனைப் பேணிக் காப்பது உங்கள் மீதுள்ள கடமையாகும்.
(3) வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை கல்வி பயில்வதிலிருந்து தடுத்து விடாதீர்கள். இது அவர்களுடைய எதிர்காலத்தை சூனியமாக்கி விடும். இப்படியாக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்குலைத்து சாகடிக்காதீர்கள்.
(4) உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தேவையான வாழ்வாதாரங்களுக்கு இறைவின் ஆட்சியமைப்பு பொறுப்பு எடுத்துக் கொள்கிறது. (பார்க்க-11:6)
(5) மேலும் மானக்கேடான செயல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றிற்குத் தடை விதிக்கப்படுகிறது. அது வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ நடந்தாலும் குற்றம் குற்றமே. மேலும்
(6) நீதிமன்ற விவகாரங்களில் நியாயமான காரணம் இன்றி யாருக்கும் மரண தண்டனை கொடுத்து விடாதீர்கள்.
இவற்றை நன்குணர்ந்து மிகச் சரியாக செயல்படுவதற்காக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ ۖ وَأَوْفُوا۟ ٱلْكَيْلَ وَٱلْمِيزَانَ بِٱلْقِسْطِ ۖ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَإِذَا قُلْتُمْ فَٱعْدِلُوا۟ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۖ وَبِعَهْدِ ٱللَّهِ أَوْفُوا۟ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ.
6:152. (7) மேலும் அநாதைகளின் சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பு ஏற்பவர்கள், அவர்கள் முழு அளவில் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் வாலிப பருவத்தை அடையும் வரையில் அவற்றைப் பாதுகாத்து வரவேண்டும். அவற்றில் எதையும் முறை தவறி அபகரித்துக் கொள்ளாதீர்கள் (பார்க்க 4:6) அதாவது பராமரிப்புச் செலவில் நியாயமானதைப் பெற்றுக் கொள்ளலாம்.
(8) சமுதாயத்தில் ஒரே மாதிரியான அளவையும் (Unifiorm weighment and measurement system) நிறுவையும் ஏற்படுத்துங்கள்.
(9) சமுதாயத்தில் ஒருபோதும் அநியாயம் நிகழாதவாறு கவனித்துக் கொள்ளுங்கள். (பார்க்க 5:8)
(10) இவை யாவும் உங்களைச் சிரமப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காகத் தான். எனவே நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் போது, அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருப்பினும் சரியே, நியாயத்தைக் கைவிடாதீர்கள்.
(11) அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு விஷயத்தில், நீங்கள் மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள்.
இவற்றை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொண்டு அறிவுப்பூர்வமாகச் செயல்படவேண்டும் என்பதற்காக இத்தகைய அறிவுரைகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
وَأَنَّ هَٰذَا صِرَٰطِى مُسْتَقِيمًۭا فَٱتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا۟ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِۦ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَتَّقُونَ.
6:153. தான் கடைப்பிடித்து வரும் நேரானப் பாதை இவையே என்பதை உலக மக்களுக்கு பகிரங்கப்படுத்தி விடுங்கள். ஆகவே அவர்கள் அனைவரும் இதையே பின்பற்றும்படி வேண்டுகோள் விடுங்கள். இதர வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டாம். இல்லாவிடில் நேரான வழியை விட்டு திசை மாறிச் சென்று விடுவீர்கள். எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக செயல்பட்டால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை எண்ணி, அதற்குப் பயந்து செயல்படும்படி அறிவுறுத்துங்கள். இந்த உண்மைகளை உலக மக்களிடம் எடுத்துரையுங்கள்.
ثُمَّ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ تَمَامًا عَلَى ٱلَّذِىٓ أَحْسَنَ وَتَفْصِيلًۭا لِّكُلِّ شَىْءٍۢ وَهُدًۭى وَرَحْمَةًۭ لَّعَلَّهُم بِلِقَآءِ رَبِّهِمْ يُؤْمِنُونَ.
6:154. இப்படிப்பட்ட போதனைகளும் அறிவுரைகளும் தரப்படுவது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக கொடுக்கப்பட்ட ஒன்றே ஆகும் (பார்க்க 42:13) அந்த வரிசையில் மூஸா நபிக்கும் இதே அடிப்படையைக் கொண்ட வேதத்தை அளித்தோம். ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களைச் செய்வோருக்கு “மனித உழைப்புக்கு ஏற்ற பலன்கள்” என்ற நியதியின்படி அளவிலா அருட்கொடைகள் கிடைத்து வரும் என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவாக விவரிக்கப்பட்டது. அது மனிதனின் சிறப்பான வாழ்விற்கு சரியான பாதையைக் காட்டுவதாக இருந்தது. அந்த வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டால் இறைவன் நிர்ணயித்துள்ள விளைவுகளை நிச்சயமாக சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلْنَٰهُ مُبَارَكٌۭ فَٱتَّبِعُوهُ وَٱتَّقُوا۟ لَعَلَّكُمْ تُرْحَمُونَ.
6:155. ஒ மனிதர்களே! அதே அடிப்படையில் இந்த இறைவேதமாகிய குர்ஆனும் இறக்கி அருளப்படுகிறது. இதைப் பின்பற்றும் சமுதாயங்களுக்கு பாக்கியமிக்க வளமான வாழ்வு கிடைக்கும் என்று உறுதியளிக்கிறது. இதற்கு எதிராகச் செயல்பட்டால் “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற இறைவனின் நியதிப்படி எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை அஞ்சி செயல்படுங்கள். இதனால் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து சிறப்பான வழிகள் கிடைக்கும்.
أَن تَقُولُوٓا۟ إِنَّمَآ أُنزِلَ ٱلْكِتَٰبُ عَلَىٰ طَآئِفَتَيْنِ مِن قَبْلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمْ لَغَٰفِلِينَ.
6:156. இத்தகைய வேத அறிவுரைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டன. (பார்க்க 14:4) இதற்கு முன் பனீ இஸ்ராயீல் மற்றும் நஸாராக்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டன என்றும், எங்களுக்கு இறைவழிகாட்டுதல் எதுவும் வரவில்லை என்றும் நீங்கள் கூறாமல் இருக்கவே இந்த இறைவழிகாட்டுதல்கள் உங்கள் மொழியிலேயே தெளிவாகத் தரப்படுகின்றன. (பார்க்க 14:4)
أَوْ تَقُولُوا۟ لَوْ أَنَّآ أُنزِلَ عَلَيْنَا ٱلْكِتَٰبُ لَكُنَّآ أَهْدَىٰ مِنْهُمْ ۚ فَقَدْ جَآءَكُم بَيِّنَةٌۭ مِّن رَّبِّكُمْ وَهُدًۭى وَرَحْمَةٌۭ ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَّبَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَصَدَفَ عَنْهَا ۗ سَنَجْزِى ٱلَّذِينَ يَصْدِفُونَ عَنْ ءَايَٰتِنَا سُوٓءَ ٱلْعَذَابِ بِمَا كَانُوا۟ يَصْدِفُونَ.
6:157. எனவே எங்களுக்கும் வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்களும் அவர்களை விட மிக்க நேர்மையாக செயல்பட்டிருப்போம் என்று யாரும் இனி கூற இயலாது. காரணம் உங்கள் இறைவனிடமிருந்து மிகத் தெளிவான வேத அறிவுரைகளும், மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்குச் சரியான பாதையைக் காட்டும் வழிகாட்டுதல்களும் வந்து விட்டன. எனவே எந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து அவற்றை விட்டு விலகிக் கொள்ளுமோ, அது மிகப் பெரிய மடமையில் மூழ்கிவிடும். இப்படியாக இறை வழிகாட்டுதலை விட்டுவிட்டு கண்மூடித்தனமாக வாழ்பவர்களுக்கு, வேதனை தரும் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن تَأْتِيَهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ يَأْتِىَ رَبُّكَ أَوْ يَأْتِىَ بَعْضُ ءَايَٰتِ رَبِّكَ ۗ يَوْمَ يَأْتِى بَعْضُ ءَايَٰتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفْسًا إِيمَٰنُهَا لَمْ تَكُنْ ءَامَنَتْ مِن قَبْلُ أَوْ كَسَبَتْ فِىٓ إِيمَٰنِهَا خَيْرًۭا ۗ قُلِ ٱنتَظِرُوٓا۟ إِنَّا مُنتَظِرُونَ.
6:158. இந்த அறிவுரைகளை எல்லாம் ஏற்காமல், அல்லாஹ்வைப் பற்றியும் வானவர்களைப் பற்றியும் கற்பனைதான் செய்து கொண்டு, அவர்கள் வானில் பரந்து வந்து, தங்கள் குறைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்று எதிர் பார்க்கிறார்களா?. (பார்க்க 2:210) ஆனால் அவ்வாறு நேரடியாக உதவி செய்யும் எந்தத் திட்டமும் இறைவன் ஏற்படுத்தி வைக்கவில்லை.
எனவே அல்லாஹ்வின் நியதிப்படி, உங்கள் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கும், நம்பிக்கை கொண்டு எவ்வித ஆக்கப்பூர்வமான நற்செயல்களையும் செய்யாதவர்களுக்கும் எவ்விதப் பலனும் கிடைக்காது. அத்தகையவர்களுக்கு மிகப் பெரிய வேதனைகள் தான் மிஞ்சும். எனவே அவர்களிடம், “எங்களுடைய நற்செயல்களின் பலனை நாங்கள் எதிர்பார்கிறோம். நீங்களும் உங்கள் செயல்களின் பலன்களை எதிர்பாருங்கள்” என்று அறிவித்து விடுவீராக.
إِنَّ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًۭا لَّسْتَ مِنْهُمْ فِى شَىْءٍ ۚ إِنَّمَآ أَمْرُهُمْ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ.
6:159. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! எவர்கள் இந்த மார்க்க விஷயங்களில் மாறுபட்ட கருத்துகளைச் சொல்லி சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்து கிறார்களோ, அவர்களுக்கும் உமக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அவர்கள் செய்து வரும் செயல்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி விளைவுகள் ஏற்பட்டே தீரும். அந்த விளைவுகளே அவர்களின் தவறான செயல்களின் நிலையைப் பற்றி அறிவித்து விடும்.
مَن جَآءَ بِٱلْحَسَنَةِ فَلَهُۥ عَشْرُ أَمْثَالِهَا ۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰٓ إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ.
6:160. ஆக ஆக்கப்பூர்வமான அழகிய நன்மையான செயல்கள் சமுதாயத்தில் நடைபெற்று வந்தால், அவற்றின் பலன்கள் பன்மடங்காக பெருகி, அவை நன்மைகளாக வளர்ந்து வரும். எவர் ஒருவர் தீமையான செயல்களை செய்கிறாரோ அவ்வாறே தீய விளைவுகளும் பன்மடங்காகப் பெருகி வரும். இதில் யாருக்கும் எவ்வித அநியாயமும் செய்யப்பட மாட்டாது.
قُلْ إِنَّنِى هَدَىٰنِى رَبِّىٓ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ دِينًۭا قِيَمًۭا مِّلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًۭا ۚ وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ.
6:161. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பரே! “மெய்யாகவே என் இறைவன் என்னை நேரானப் பாதையின் பக்கம் வழிநடத்திச் செல்கின்றான். அது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய நிலை மாறாத அறிவுரைகளாகும். இப்ராஹீம் நபி கடைப்பிடித்த மார்க்கமும் இதுவே ஆகும். அவர் ஒருபோதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையையும் பின்பற்றியதில்லை” என்பதை மக்களிடம் எடுத்துரையுங்கள்.
قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.
6:162. “எனவே நான் கடைப்பிடித்து வரும் வேத அறிவுரைகளின் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதும், அதற்காக என்னைப் அர்ப்பணித்துக் கொள்வதும், நான் உயிர் வாழ்வதும், நான் மரணத்தைச் சந்திக்கப் போவதும், அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கியே” என்று அறிவித்து விடுங்கள்.
لَا شَرِيكَ لَهُۥ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا۠ أَوَّلُ ٱلْمُسْلِمِينَ.
6:163. “அவனுடைய வழிகாட்டுதலில் வேறு எதையும் இணையாக வைத்துப் பின்பற்ற மாட்டேன். இதுவே எனக்கு இடப்பட்டுள்ள கட்டளையாகும். மேலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியும் உங்களில் நான் முதன்மையானவனாக இருக்கின்றேன்” என்று அறிவித்து விடுங்கள்.
قُلْ أَغَيْرَ ٱللَّهِ أَبْغِى رَبًّۭا وَهُوَ رَبُّ كُلِّ شَىْءٍۢ ۚ وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ.
6:164. அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ்தான் எனும்போது, அவனை விட்டு வேறு ஒருவனை இறைவனாக ஏற்றுக் கொள்வேனா? எல்லா படைப்புகளையும் படைத்தது அல்லாஹ்தான். அவனுடைய வழிகாட்டுதலை விட்டுத் தவறான வழியில் செயல்படுபவர்களுக்கே கேடுகள் வந்தடையும். ஒருவர் செய்யும் பாவச் செயல்களின் சுமையைப் பிறிதொருவர் சுமக்க முடியாது. (மேலும் பார்க்க 17:15) மேலும் மனிதனின் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின்படி அதனதன் இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்திச் செல்கிறது. அன்படி உங்கள் செயல்களின் விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டே செல்லும். அப்படி ஒரு கால கட்டத்தில் நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவைப் பற்றிய உண்மைகள் உங்களுக்குப் புலப்பட்டுவிடும்.
وَهُوَ ٱلَّذِى جَعَلَكُمْ خَلَٰٓئِفَ ٱلْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍۢ دَرَجَٰتٍۢ لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتَىٰكُمْ ۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ ٱلْعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٌۭ رَّحِيمٌۢ.
6:165. அல்லாஹ்வின் செயல்திட்டப்படிதான் உலகை வழிநடத்திச் செல்லும் ஆற்றல்கள் மனிதனுக்கு அளிக்கப்பட்டது. கூடவே இறைவழிகாட்டுதலும் கொடுக்கப்பட்டுள்ளது. யார் இறைவழிகாட்டுதலின்படி சிறப்பாகச் சமுதாயத்தை வழிநடத்திச் செல்கிறார்கள் என்பதை பரிசோதித்துக் கொள்ளவே உங்களுக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவரவர் செயல்களைப் பொறுத்தே உலகில் உயர்வும் தாழ்வும் ஏற்படும். உமது இறைவனின் நியதிப்படி ஏற்படும் தீய செயல்களின் விளைவு களிலிருந்து யாரும் ஒருபோதும் தப்பிக்க முடியாது. அதே சமயத்தில் நீங்கள் பாதுகாப்பாக வாழ வழிமுறைகளை அறிவித்திருப்பதும் அவனது கருணையில் உள்ளதாகும்.