بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

5:0அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَوْفُوا۟ بِٱلْعُقُودِ ۚ أُحِلَّتْ لَكُم بَهِيمَةُ ٱلْأَنْعَٰمِ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى ٱلصَّيْدِ وَأَنتُمْ حُرُمٌ ۗ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ.

5:1. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் இறை வழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுவதாக இறைவனிடம் செய்து கொண்ட உறுதிமொழியை முறைப்படி நிறைவேற்றி வாருங்கள். அதன்படி உணவு விவகாரங்களில் தடை செய்யப்பட்டவற்றைத் தவிர்த்து (பார்க்க 5:3) மற்றவை அனைத்தும் ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஹஜ் சமயங்களில்,அங்கு கால்நடைகளை வேட்டையாடுவது தடை செய்யப்படுகிறது. காரணம் அங்கு வருபவர்களுக்கு அதனால் பிரச்சனைகள் பல ஏற்படும். நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு பிறப்பிக்கும் கட்டளையாகும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحِلُّوا۟ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَلَا ٱلْهَدْىَ وَلَا ٱلْقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًۭا مِّن رَّبِّهِمْ وَرِضْوَٰنًۭا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَٱصْطَادُوا۟ ۚ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ أَن تَعْتَدُوا۟ ۘ وَتَعَاوَنُوا۟ عَلَى ٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ.

5:2. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் அடையாளங்களாகத் திகழும் இடங்களை அவமதிக்காதீர்கள். அதே போல் சில மாதங்களில் போர் தடை செய்யப்படுகிறது. அதைப் பற்றியும் ஏளனமாக விமர்சிக்காதீர்கள். ஹஜ் சமயம் அங்கு வந்து கூடுபவர்களின் உணவிற்காக, அன்பளிப்பாக அளிக்கப்பட்ட பிராணிகளை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இறை வழிகாட்டுதலைப் பெற அங்கு வருபவர்களுக்குத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தாருங்கள். இவையாவும் இறைக் கட்டளைகளாகும். இவற்றைப் பேணி நடந்து கொள்ளுங்கள்.
ஹஜ் முடிவு பெற்ற பின் உங்கள் வழக்கப் படி பிராணிகளை வேட்டையாடலாம். கஅபாவை ஆக்கிரமித்து, அங்கு வருபவர்களைத் தடுத்து வந்த பகைவர்கள் மீது உங்களுக்கு அளவுகடந்த வெறுப்பு இருக்கலாம். இப்போது அந்த இடம் உங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டதால், அவர்களிடம் ஹஜ் நடைபெறும் காலத்தில் வரம்பு மீறின செயலில் ஈடுபடாதீர்கள். அவ்வாறு பிரச்சனைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். (பார்க்க-48:25) அல்லாஹ்வுக்குப் பயந்து நன்மையான காரியங்களை செய்வதில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எவ்வித தீய செயல்களிலும் ஈடுபடாதீர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டம் மிகவும் உறுதியானதாகும்.


حُرِّمَتْ عَلَيْكُمُ ٱلْمَيْتَةُ وَٱلدَّمُ وَلَحْمُ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ وَٱلْمُنْخَنِقَةُ وَٱلْمَوْقُوذَةُ وَٱلْمُتَرَدِّيَةُ وَٱلنَّطِيحَةُ وَمَآ أَكَلَ ٱلسَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى ٱلنُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا۟ بِٱلْأَزْلَٰمِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ ٱلْيَوْمَ يَئِسَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِ ۚ ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِى وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَٰمَ دِينًۭا ۚ فَمَنِ ٱضْطُرَّ فِى مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍۢ لِّإِثْمٍۢ ۙ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

5:3. மேலும் உணவு விஷயத்தில் கீழ்கண்டவை விலக்கப்படுகின்றன. தானாகச் செத்தவை, பீச்சிடும் இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ்வின் பெயரை சொல்லாமல் அறுத்தவை, கழுத்து நெரித்து செத்துப் போனவை, அடிபட்டுச் செத்தவை, கீழே விழுந்து செத்தவை, கொம்பால் முட்டப்பட்டு செத்தவை, வனவிலங்குகளால் கடிக்கப்பட்டு செத்தவை ஆகியன உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. இவற்றில் உயிரோடு இருப்பதாக நீங்கள் பார்த்தீர்களானால் அவற்றை உடனே முறைப்படி அறுத்து உண்ணலாம்.
ஆனால் உணவு விஷயங்களில் நீங்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டால், விலக்கப்பட்டதை புசிப்பதில் தவறு ஒன்றுமில்லை. (பார்க்க 2:172-174 & 6:145)
இதைத் தவிர்த்து வணக்க வழிபாட்டிற்காகப் பலியிடப்பட்டவை, பலி பீடங்களில் அறுப்பது, குலுக்குச் சீட்டு முறையில் பங்கீட்டு முறையைக் கையாளுவது, ஜோசியம் பார்ப்பது ஆகியவை யாவும் பாவச் செயல்களாகும். எனவே இவற்றுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
இப்படியாக இன்றைய கால கட்டத்தில் மார்க்க ரீதியாக, அனைத்து விஷயங்களைப் பற்றியும் தீர்க்கமாகச் சொல்லப்பட்டு விட்டது. இனி யாரும் இதில் தலையிட முடியாது. எனவே குறை பேசுவோரின் ஆட்சேபனைகளைப் பற்றி அஞ்சாது இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
இன்றைய கால கட்டத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மார்க்க அறிவுரைகள் முழுமை பெற்று விட்டன. இறைவழிகாட்டுதல் என்கின்ற அருட்கொடைகள் முழுமையாகி விட்டன. இன்னும் “அனைத்துத் தரப்பு மக்களின் நலன் காத்தல்” என்கின்ற இஸ்லாம் மார்க்கத்தையே அல்லாஹ் உங்களுக்காகப் பொருந்திக் கொண்டான். இதைத் தவிர்த்து வேறு எந்த மார்க்கமும் இவ்வுலகில் நிலைக்காது.அல்லாஹ்வின் அறிவுரைகள் யாவும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காப்பதாகவே உள்ளன. இது அல்லாஹ்வின் மிகப் பெரிய கிருபையாகும்.
மனித வரலாற்றை எடுத்துக் கொண்டால் ஆதி கால மனிதன், கற்கால மனிதன், உலோக கால மனிதன், நவீன விஞ்ஞான கால மனிதன் என்று பிரிக்கலாம். அதை மனிதனின் குழந்தைப் பருவம், விளையாட்டுப் பருவம், இளமைப் பருவம், வாலிப பருவம் என உதாரணமாகச் சொல்லலாம். குழந்தை முதல் வாலிப வயது அடையும் வரை அவனுக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. அதுபோல ஆதிகாலம் முதல் நவீன விஞ்ஞான காலம் வரையில் வாழ்ந்த மனிதனுக்கு இறைத் தூதர்களை அனுப்பி அவ்வப்போது தேவைக்கேற்ப இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. மனிதன் நவீன விஞ்ஞான காலத்தில் அடி எடுத்து வைத்த போது, முஹம்மது நபி(ஸல்) மூலமாக இறுதியாக இறைவழிகாட்டுதல் அளிக்கப்பட்டு விட்டது. இவ்வேத அறிவுரைகளை இனி வரும் எல்லா காலக் கட்டங்களிலும் உலகின் எந்த பகுதியைச் சேர்ந்தவரானாலும், இதைப் பின்பற்றி, தம் வாழ்வின் வெற்றி இலக்கை அடைந்து கொள்ளலாம். இதுவே இறைவனின் செயல் திட்டம் எனப் புலனாகிறது.
இந்தக் காலக் கட்டத்தில் மனிதனின் ஆற்றல்கள் முழு அளவில் வளர்ந்து, அவன் இந்த உலகை சீராகக் கட்டிக் காக்கும் தகுதியைப் பெற்று விட்டான். எனவேதான் நபித்துவ தொடர் முற்று பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. (பார்க்க 33:40). மனிதனிடம் விஞ்ஞான ஆற்றல்கள் ஆயிரம்தான் வளர்ந்தாலும், உலகில் மனித நேயத்தையும் ஒழுக்க மாண்புகளையும் கட்டிக் காப்பாற்ற அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இதை விட்டால் அவனுடைய சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேறு எந்த வழிமுறையும் கிடையாது. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்தால், அவன் தன் மனோ இச்சைக்கு அடிமையாகி விடுவான். இதனால்தான் இன்றைக்கும் உலகில் நாடுகளுக்கிடையே பகையும் மோதல்களும் நிலவி வருகின்றன. விஞ்ஞான கண்டுபிடிப்புகளை ஆக்கப்பூவர்மாக பயன்படுத்தாமல் பெரும்பாலும் அழிவுக்காகவே தவறாகப் பயன்படுத்துகிறான்.


يَسْـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ ۙ وَمَا عَلَّمْتُم مِّنَ ٱلْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُ ۖ فَكُلُوا۟ مِمَّآ أَمْسَكْنَ عَلَيْكُمْ وَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهِ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ.

5:4. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! உணவு வகைகளில் அனுமதிக்கப் பட்டவை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள். தடைசெய்யப் பட்டவைப் போக சுத்தமான உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த மற்ற எல்லா உணவு வகைகளும் அனுமதிக்கப் பட்டவையே ஆகும். அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தபடி வேட்டையாடும் பிராணி, வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்ட பறவைகள் ஆகியவற்றின் மூலம் உங்களுக்குக் கிடைத்த பிராணிகளையும் புசிக்கலாம். எனினும் நீங்கள் வேட்டையாடும் போது அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே என்பதை உணர்ந்து அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அவற்றை அனுப்புங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எப்போதும் பேணி நடந்து கொள்ளுங்கள். கணக்கு வழக்கு எடுப்பதில் அல்லாஹ்வின் செயல் திட்டம் மிகவும் நுணுக்கம் மிக்கவை என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இதை மக்களுக்கு எடுத்துரையுங்கள்.


ٱلْيَوْمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ ۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ حِلٌّۭ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّۭ لَّهُمْ ۖ وَٱلْمُحْصَنَٰتُ مِنَ ٱلْمُؤْمِنَٰتِ وَٱلْمُحْصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ إِذَآ ءَاتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِىٓ أَخْدَانٍۢ ۗ وَمَن يَكْفُرْ بِٱلْإِيمَٰنِ فَقَدْ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِى ٱلْءَاخِرَةِ مِنَ ٱلْخَٰسِرِينَ.

5:5. இன்றைய காலக் கட்டத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த எல்லா தூய்மையான உணவுகளும் ஆகுமானதாக அறிவிக்கப்படுகின்றன. தடை செய்யப் பட்டவைத் தவிர மற்ற வேதமுடையவர்கள் பயன்படுத்தும் உணவு வகைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். அதன்பின் குடும்ப விவகாரங்களின் பக்கம் வாருங்கள். இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட பரிசுத்தமான பெண்களை நீங்கள் மணந்து கொள்ளலாம்.
அது போல இதற்குமுன் அளிக்கப்பட்ட வேதமுடையவர்களில் இருக்கும் நல்ல கற்புள்ள பெண்களையும் நீங்கள் மணந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் அவர்களை ஆசை நாயகிகளாகவோ அல்லது விலை மாதர்களாகவோ ஆக்கிக்கொள்ளக் கூடாது. அவர்களுக்குரிய ‘மஹர்’ என்னும் அன்பளிப்புத் தொகையை அளித்து அவளை முறைப்படி மனைவியாக ஆக்கிக்கொள்ளுங்கள். யார் இக்கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்களோ, அவர்கள் தம் அழிவைத் தாமே தேடிக்கொள்வார்கள். மேலும் அவர்கள் செய்த செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டதில் பெரும் நஷ்டத்திலேயே இருப்பார்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قُمْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغْسِلُوا۟ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى ٱلْمَرَافِقِ وَٱمْسَحُوا۟ بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ٱلْكَعْبَيْنِ ۚ وَإِن كُنتُمْ جُنُبًۭا فَٱطَّهَّرُوا۟ ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌۭ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءًۭ فَتَيَمَّمُوا۟ صَعِيدًۭا طَيِّبًۭا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ ۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍۢ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ.

5:6. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இப்படியாக நீங்கள் சுத்தமான முறையில் வாழ பழகிக் கொள்ளுங்கள். வேத அறிவுரைகளைப் பெற நீங்கள் கூட்டு "ஸலாத்"துக்கு நிற்கச் சென்றாலும் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் இரு கைகளையும், கணுக்கால் வரை இரு கால்களையும் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். மேலும் தலையை வாரி சரி செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தாம்பத்திய உறவு கொண்டிருந்தால் குளித்து சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் நோய்வாய்ப் பட்டிருந்தாலோ, பயணத்தில் இருக்கும் போதோ, மல ஜலம் கழிக்க நேர்ந்து தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் சுத்தமான பொருளைக் கொண்டு தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஊடலில் ஈடுபட்டிருந்து தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் சுத்தமான மண்ணைத் தடவி முகம் மற்றும் கைகளைத் துடைத்து “தயமம்” செய்து கொள்ளுங்கள் (மேலும் பார்க்க 4:43)
நீங்கள் எப்போதும் சுத்தமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட அறிவுரைகள் தரப்படுகின்றன. அன்றி உங்களைச் சிரமப்படுத்த அல்லாஹ் நாடவில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்ள இப்படிப்பட்ட வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. நீங்கள் பரிசுத்தமாக இருப்பதைக் கொண்டே தூய்மையான எண்ணங்களும் சமுதாயத்தில் பரஸ்பர உறவும் உங்களிடையே வளரும்.


وَٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمِيثَٰقَهُ ٱلَّذِى وَاثَقَكُم بِهِۦٓ إِذْ قُلْتُمْ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.

5:7. மேலும் அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடையான “இறைவழிகாட்டுதல்” அருளி இருப்பதையும், அதன்படி வாழ்வதாக நீங்கள் அல்லாஹ்விடம் செய்துகொண்ட வாக்குறுதியையும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். “நாங்கள் அவற்றைச் செவிமடுத்து அதன்படியே வாழ்வோம்” என்று உறுதி அளித்ததற்கு ஏற்ப அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். உங்கள் மனதில் எழும் எண்ணங்களும் அல்லாஹ்வின் கவனத்திலிருந்து தப்பவே தப்பாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ عَلَىٰٓ أَلَّا تَعْدِلُوا۟ ۚ ٱعْدِلُوا۟ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ.

5:8. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைப்படி சமுதாயச் சமச் சீர்நிலையைக் கட்டிக் காக்க நீங்கள் எப்போதும் நீதியை நிலைநாட்டுங்கள். நடுநிலை வகிக்கும் சமுதாயம் என்பதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். இதில் விருப்பு வெறுப்பு என்ற பேச்சிற்கே இடமிருக்கக் கூடாது. நீங்கள், வெறுக்கும் சமுதாயத்தவராக இருப்பினும், அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால், நீதி செலுத்த உங்கள் வெறுப்புணர்வு தடையாக இருக்கக் கூடாது. நியாயத்தை எக்காரணத்தைக் கொண்டும் கைவிடாதீர்கள். வாழ்வின் உயர் இலட்சியம் பெற இதுவே சிறந்த வழிமுறையாகும். ஆக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ ۙ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌ عَظِيمٌۭ.

5:9. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சிறந்த முறையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுபவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாத பாதுகாப்பான வாழக்கை கிடைக்கும் என்பது அல்லாஹ்வின் வாக்காகும். இப்படிக் கிடைப்பது மகத்தான சன்மானமாகும் அல்லவா?


وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ.

5:10. மாறாக இறைவழிகாட்டுதலை நிராகரித்தும் பொய்ப்பித்தும் அதற்கு எதிராகச் செயல்படுபவர்களின் வாழ்வில் பிரச்சனைகள் பல ஏற்பட்டு தீர்வு காண முடியாத நரகவாசிகளாக ஆகிவிடுவார்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَن يَبْسُطُوٓا۟ إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ.

5:11. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உங்கள் வாழ்வில் பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கு ஆதாரமாக அண்மையில் பகைவர்கள் உங்களுக்கு எதிராக தீங்கிழைக்க முற்பட்டபோது, இறை ஆட்சியமைப்பு நடக்காதவாறு அதை தடுத்துவிட்டது. அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த எவ்வளவு பெரிய அருட்கொடை இது என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மீதே முழுமையான நம்பிக்கை கொண்டு நீதி நெறிமுறையைக் கை விடாதீர்கள்.


۞ وَلَقَدْ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ ٱثْنَىْ عَشَرَ نَقِيبًۭا ۖ وَقَالَ ٱللَّهُ إِنِّى مَعَكُمْ ۖ لَئِنْ أَقَمْتُمُ ٱلصَّلَوٰةَ وَءَاتَيْتُمُ ٱلزَّكَوٰةَ وَءَامَنتُم بِرُسُلِى وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا لَّأُكَفِّرَنَّ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ فَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ.

5:12. இப்படியாக உங்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்வது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக பலதரப்பட்ட மக்களிடமும் இறைத்தூதர்கள் மூலம் உறுதிமொழியை வாங்கியே இருக்கிறோம். அது போலவே நாம் பனீ இஸ்ராயீல் சமுதாயத்தினரிடமும் இத்தகைய வாக்குறுதியை வாங்கினோம். நிர்வாகப் பொறுப்புகளை பன்னிரண்டு பிரிவுகளாகப் பிரித்து அவற்றை நிர்வகிக்கத் தகுதியுடைய தலைவர்களிடம் ஒப்படைத்தோம். அவர்களும் அதன்படி செயல் படுவதாக பதவிப் பிரமாணத்தையும் எடுத்துக்கொண்டனர்.
அதாவது, “நிச்சயமாக நாம் அனைவரும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் தான் இருக்கின்றோம். இறைவனுடைய கட்டளையின்படி சமுதாய ஒழுக்க மாண்புகளைக் பேணிக் காக்க வழிமுறைகளைக் கற்றுத் தரும் “ஸலாத்” முறையை நிலைநிறுத்துவோம். சமுதாய மேம்பாட்டிற்காகத் தம் செல்வங்களிலிருந்து கொடுத்து வருவோம். சமுதாயத்தை வழிநடத்திச் செல்ல இறைத்தூதர்கள் ஏற்படுத்தும் ஆட்சியமைப்புச் சட்ட திட்டங்களையும் (By-Laws) முறைப்படி பின்பற்றுவோம்."
"அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு அழகிய முறையில் கடனுதவி செய்வோமானால் நிச்சயமாக எங்களுக்கு எவ்வித ஆபத்தோ அச்சமோ இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்க அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். மேலும் தாராள பொருளாதார வசதிகளைக் கொண்ட செழிப்பான சமுதாயமாக உருவாக வழிகள் பிறக்கும். இப்படியாக எங்களுடைய சமுதாயம் சுவர்க்க பூமியாக மாறிவரும்” என்பதே அவர்கள் எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணங்களாகும்.
எனவே எவரேனும் இந்த வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர் வழிகேட்டில் சென்று விட்டதாகவே கருதப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.


فَبِمَا نَقْضِهِم مِّيثَٰقَهُمْ لَعَنَّٰهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَٰسِيَةًۭ ۖ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ ۙ وَنَسُوا۟ حَظًّۭا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَآئِنَةٍۢ مِّنْهُمْ إِلَّا قَلِيلًۭا مِّنْهُمْ ۖ فَٱعْفُ عَنْهُمْ وَٱصْفَحْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ.

5:13. அவ்வாறே செயல்பட்டு, அந்தச் சமுதாயம் சிறப்பாக விளங்கியது (பார்க்க- 2:47) ஆனால் அவர்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதிகளை காலப் போக்கில் புறக்கணித்து விட்டதால், அவர்களுக்குக் கிடைத்து வந்த இறைவனின் அருட்கொடைகளை படிப்படியாக குறைது வந்தது. (பார்க்க 8:53)
அவ்வாறே அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய இதயங்களும் இறுகிவிட்டன. அவர்கள் வேத அறிவுரைகளுக்கு அளிக்க வேண்டிய மதிப்பை அளிக்கவில்லை. அவர்கள் பெரும்பாலான அறிவுரைகளை புறம் தள்ளிவிட்டனர். அவர்களில் பெரும்பாலோர் செய்துவரும் மோசடிகளை நீர் பார்க்காமல் இல்லை.
இதைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் அதைக் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. எனவே அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விடுங்கள். அல்லாஹ்வின் சட்டம் அவர்களை கவனித்துக் கொள்ளும். நீங்கள் உங்கள் பங்கிற்குச் செய்ய வேண்டிய அழகிய நற்செயல்களைச் செய்து வாருங்கள். அழகிய நற்செயல்களைச் செய்வோருக்கு அல்லாஹ்வின் நேசமும் உதவியும் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


وَمِنَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّا نَصَٰرَىٰٓ أَخَذْنَا مِيثَٰقَهُمْ فَنَسُوا۟ حَظًّۭا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ ٱلْعَدَاوَةَ وَٱلْبَغْضَآءَ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۚ وَسَوْفَ يُنَبِّئُهُمُ ٱللَّهُ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ.

5:14. இதுவே பனீஇஸ்ராயீல் சமூகத்தாரின் நிலையாகும். மேலும் எவர்கள் தம்மை “கிறிஸ்தவர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்களோ, அவர்களும் இதே போன்று அல்லாஹ்வுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால் அவர்களும் காலப்போக்கில் இறைவேத அறிவுரைகளில் பெரும்பாலானவற்றை கவனம் செலுத்துவதை விட்டுவிட்டார்கள். இதனால் அவர்களிடம் இருந்த ஒருமைப்பாடு சீர்குலைந்து பல பிரிவினர்களாகப் பிரிந்துவிட்டனர். அவர்களிடையே நிரந்தரமாக பகைமையும் வெறுப்பும் வளர்ந்துவிட்டன. இவ்வேத அறிவுரைகளின்படி (குர்ஆனின் படி) ஆட்சியமைப்பு உருவாகும் போது, அவர்களுடைய உண்மை நிலை என்னவென்று அவர்களுக்குத் தெரிந்துவிடும்.


يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ قَدْ جَآءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًۭا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ ٱلْكِتَٰبِ وَيَعْفُوا۟ عَن كَثِيرٍۢ ۚ قَدْ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٌۭ وَكِتَٰبٌۭ مُّبِينٌۭ.

5:15. வேதமுடையவர்களே! உங்களிடையே நிலவி வரும் வேற்றுமை பகைமைகளை நீக்கிவிட்டு, இவ்வேத அறிவுரைகளை பின்பற்றுங்கள். அவற்றை விவரமாக எடுத்துச் சொல்பவரைப் பின்பற்றுங்கள். நீங்கள் இதுவரையில் மறைத்து வந்த அறிவுரைகளின் உண்மை நிலையை அவர் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நீங்கள் கடைப்பிடித்து வரும் தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களை விட்டுவிட அறிவுறுத்துகின்றார். உங்களுடைய ஒளிமயமான வாழ்விற்குச் சரியானப் பாதையைக் காட்டும் வேதம் உங்களிடம் வந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதை ஏற்று அதன்படிச் செயலாற்றி பயன் பெறுங்கள்.


يَهْدِى بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضْوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِهِۦ وَيَهْدِيهِمْ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

5:16. இந்த வேத அறிவுரைகளைக் கொண்டு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு நேர்வழி கிடைக்கிறது. ஆக எந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் விருப்பங்களுக்கு ஏற்ப இவற்றைப் பின்பற்றுமோ, அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான நிம்மதியான வாழ்வு கிடைக்க வழிமுறைகள் தெளிவாகிவிடும். இப்படியாக அவர்கள் இருளிலிருந்து வெளியேறி ஒளிமயமான வாழ்வின் பக்கம் வந்து விடுவார்கள். மேலும் அல்லாஹ்வின் நியதிப்படி அனைவரும் நேரான பாதையில் செல்லக் கூடிய வழிமுறைகளும் பிறக்கும்.


لَّقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ ۚ قُلْ فَمَن يَمْلِكُ مِنَ ٱللَّهِ شَيْـًٔا إِنْ أَرَادَ أَن يُهْلِكَ ٱلْمَسِيحَ ٱبْنَ مَرْيَمَ وَأُمَّهُۥ وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا ۗ وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

5:17. அதே வரிசையில் மர்யமின் குமாரர் மஸீஹ் ஈஸாவும் உலக மக்களை நேர்வழிப்படுத்த வந்தவரே ஆவார். அவரையே அல்லாஹ் என்றோ அல்லாஹ்வின் புதல்வன் என்றோ பேசி வருவதில் எவ்வித உண்மையும் இல்லை. மாறாக மக்களை வழிகேட்டில் செலுத்தவே இவை வழி வகுக்கின்றன. மஸீஹோ அவரது தாயார் மர்யமோ ஒருபுறம் இருக்கட்டும் உலகிலுள்ள அனைத்தையும் அழித்துவிட அல்லாஹ் நாடினால் அதைத் தடுத்து நிறுத்த யாரால் முடியும்? வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவற்றிற்கு இடையே உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன என்பதை அவர்களிடம் எடுத்துரையுங்கள். அல்லாஹ்வின் செயல் திட்டங்களின்படியே அனைத்துப் படைப்பினங்களும் உருவாகியுள்ளன. இதில் வேறு யாருடைய துணையும் இருப்பதில்லை. அனைத்துப் படைப்புகளின் செயலாக்க விதிமுறைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள். எனவே உங்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் தீய விளைவுகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதை கிறிஸ்தவர்களுக்கு விளக்கி விடுங்கள்.


وَقَالَتِ ٱلْيَهُودُ وَٱلنَّصَٰرَىٰ نَحْنُ أَبْنَٰٓؤُا۟ ٱللَّهِ وَأَحِبَّٰٓؤُهُۥ ۚ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم ۖ بَلْ أَنتُم بَشَرٌۭ مِّمَّنْ خَلَقَ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ.

5:18. இதுவரையில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வந்தனர். (பார்க்க 2:113) இப்போதோ அவ்விரு சமுதாயத்தினரும் இணைந்து உங்களை யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ மாறிவிடச் சொல்கின்றனர். (பார்க்க 2:135) நாங்கள் தாம் அல்லாஹ்வின் பாசத்திற்குரிய செல்லப் பிள்ளைகள் என்றும் பேசிக் கொள்கின்றனர்.
அப்படியாயின் உங்களுடைய பாவச் செயல்களுக்கு அல்லாஹ் உங்களை ஏன் வேதனைப் படுத்துகிறான் என்று அவர்களிடம் கேளுங்கள். உண்மை அதுவல்ல. நீங்களும் உலகிலுள்ள மற்ற மனிதர்களைப் போன்றவர்களே அன்றி, தனிப் படைப்பு அல்ல. இதில் யாருக்கும் எவ்விதப் பாரபட்சமும் இருக்க நியாயமில்லை. ஆபத்துகள் இல்லாத பாதுகாப்பான வாழ்வு பெறுவதும், வேதனை மிக்க வாழ்வில் சிக்கிக் கொள்வதும் அவரவர் செயல்களைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இதுவே அல்லாஹ்வின் நாட்டப்படி ஏற்படுத்தப்பட்ட நிலையான சட்டமாகும்.
ஆக வானங்களிலும் பூமியிலும் அவற்றிற்கு இடையேயும் படைக்கப்பட்டவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. நீங்களும் இறுதியில் அவன் இயற்றிய சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
நபிமார்களின் தொடரில் ஈஸா நபியின் மறைவுக்குப் பின் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து சீரமைப்புச் செய்யும் இறைத்தூதர்கள் வராததால் உங்கள் செயல்பாடுகளில் மந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்குப் பின் முஹம்மது நபி வந்துள்ளார்.


يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ قَدْ جَآءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ عَلَىٰ فَتْرَةٍۢ مِّنَ ٱلرُّسُلِ أَن تَقُولُوا۟ مَا جَآءَنَا مِنۢ بَشِيرٍۢ وَلَا نَذِيرٍۢ ۖ فَقَدْ جَآءَكُم بَشِيرٌۭ وَنَذِيرٌۭ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

5:19. வேதமுடையவர்களே! அவரும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் கிடைக்கவிருக்கும் நற்பலன்களைப் பற்றிய நன்மாராயம் கூறவும், தவறான செயல்களால் ஏற்படப் போகும் தீய விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்யவும் வந்துள்ளார். நாளைய தினம் எங்களை நேர்வழிப் படுத்த யாரும் வரவில்லையே என்று நீங்கள் சொல்லக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடாகும். (பார்க்க 4:165) அல்லாஹ் அனைத்து விஷயங்களிலும் பேராற்றல் உடையவன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முஹம்மது நபியின் மறைவுக்குப் பின் இந்தப் பொறுப்பு மூஃமின்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. (பார்க்க 3:144) மேலும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் உலமாக்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை சிந்தித்துணர்ந்து தாமும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கும் ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவர்களது முக்கிய கடமையாகும். (பார்க்க 3:104)


وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَٰقَوْمِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنۢبِيَآءَ وَجَعَلَكُم مُّلُوكًۭا وَءَاتَىٰكُم مَّا لَمْ يُؤْتِ أَحَدًۭا مِّنَ ٱلْعَٰلَمِينَ.

5:20. வேதமுடையவர்களே! ஈஸா நபிக்கு முன் பல நபிமார்கள் உங்களிடம் வந்தனர். அந்த வரிசையில் மூஸா நபியும் ஒருவர் ஆவார். அவருக்கு முன்பும் பின்பும் வந்த பல நபிமார்கள் அரசர்களாகவும், சிறந்த ஆட்சியாளர்களாகவும் வாழ்ந்து இருக்கிறார்கள்.
அக்கால கட்டங்களில் நீங்கள் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றிய காரணத்தால், உலகில் மற்ற எந்தச் சமுதாயத்தினருக்கும் கிடைக்காத எல்லா வளங்களும் சிறப்புகளும் பெற்று சிறப்பாக வாழ்ந்தீர்கள். (பார்க்க 2:47) இவை யாவும் அல்லாஹ்வின் எவ்வளவு பெரிய அருட்கொடைகள் என்பதை எண்ணிப் பாருங்கள். இதைப் பற்றி மூஸா நபியும் உங்களுக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஆனால் இப்போதோ நாங்கள் தாம் அல்லாஹ்வின் செல்லப் பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு தகாத செயல்களை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்களே.


يَٰقَوْمِ ٱدْخُلُوا۟ ٱلْأَرْضَ ٱلْمُقَدَّسَةَ ٱلَّتِى كَتَبَ ٱللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا۟ خَٰسِرِينَ.

5:21. ஒரு கட்டத்தில் மூஸா நபி தம் சமூகத்தாரை நோக்கி, அல்லாஹ் அளித்துள்ள வளம் மிக்க வேறொரு பிரதேசத்திற்குச் சென்று சிறந்த சமுதாயத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார். (பார்க்க 2:58) தன்னுடைய அழைப்பை நிராகரித்து புறமுதுகு காட்டி ஓடிவிடாதீர்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு ஒடிவிட்டால் மிகப் பெரிய நஷ்டத்தில் இருப்பீர்கள் என்றும் எச்சரித்தார்.


قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوْمًۭا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدْخُلَهَا حَتَّىٰ يَخْرُجُوا۟ مِنْهَا فَإِن يَخْرُجُوا۟ مِنْهَا فَإِنَّا دَٰخِلُونَ.

5:22. ஆனால் அவர்களோ மிகவும் கோழைகளாக இருந்தனர். அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே அங்கு வாழ்பவர்கள் யாவரும் மிகவும் முரடர்களாகக் காணப்படுகின்றனர். எனவே அவர்கள் அங்கிருந்து வெளியேறாத வரையில் நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டால் நாங்கள் பிரவேசிப்போம்” என்றனர்.


قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِمَا ٱدْخُلُوا۟ عَلَيْهِمُ ٱلْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَٰلِبُونَ ۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

5:23. கோழைகள் மத்தியில் இருவர் மட்டுமே தைரியசாலிகளாக இருந்தனர். அவ்விருவரும் அல்லாஹ்வின் நியதிப்படி எல்லா தகுதிகளையும் பெற்றிருந்தனர். (அவ்விருவர் மூஸா நபியும் அவருடைய அண்ணன் ஹாரூன் நபியும் ஆவார்கள்.) அவ்விருவரும் அவர்களை நோக்கி, “நீங்கள் அனைவரும் தைரியமாக அவ்வூரின் எல்லை வரை செல்லுங்கள். அந்த எல்லையைக் கடந்து விட்டால், நீங்கள்தான் வெற்றியாளர்கள் ஆவீர்கள். நீங்கள் மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் இந்த ஏற்பாட்டின் மீது முழு நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்” என்று கூறினர்.


قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِنَّا لَن نَّدْخُلَهَآ أَبَدًۭا مَّا دَامُوا۟ فِيهَا ۖ فَٱذْهَبْ أَنتَ وَرَبُّكَ فَقَٰتِلَآ إِنَّا هَٰهُنَا قَٰعِدُونَ.

5:24. ஆனால் அவர்களோ மூஸா நபியை நோக்கி, “அவர்கள் அவ்வூரில் இருக்கும் வரையில் நாங்கள் ஒருபோதும் அங்கு செல்ல மாட்டோம். வேண்டும் என்றால் நீரும் உம் அண்ணனும் சென்று அவர்களிடம் போரிடுங்கள். அது வரையில் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்” என்று கூறலானார்கள்.
இந்த வாசகத்தில் ‘ரப்பு’ என்ற வார்த்தை வருகிறது. ரப்பு என்பதற்கு மூத்த அண்ணன் என்ற பொருளும் உண்டு


قَالَ رَبِّ إِنِّى لَآ أَمْلِكُ إِلَّا نَفْسِى وَأَخِى ۖ فَٱفْرُقْ بَيْنَنَا وَبَيْنَ ٱلْقَوْمِ ٱلْفَٰسِقِينَ.

5:25. அதற்கு மூஸா நபி இறைவனிடம், “என் அண்ணனைத் தவிர வேறு யாரையும் என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியவில்லையே. இப்படி திசை மாறிச் செல்பவர்கள் மத்தியில் நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீயே வழிகாட்டு” என்று பிரார்த்தித்தார்.


قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛ أَرْبَعِينَ سَنَةًۭ ۛ يَتِيهُونَ فِى ٱلْأَرْضِ ۚ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْفَٰسِقِينَ.

5:26. “அவ்வாறாயின் அவர்களுக்குக் கிடைக்கவிருந்த ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வின் நியதிப்படி நாற்பது ஆண்டுகள் வரையில் தள்ளிப் போய்விடும். காரணம் இவர்கள் எதற்கும் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களை அடுத்து வரும் இளைய தலைமுறையினரைத் தயாரித்து அவர்களை தகுதியுடைவர்களாக ஆக்கு. இவர்கள் அனைவரும் உலகில் தட்டழிய வேண்டியதுதான். இவர்களைப் பற்றி நீர் கவலைப்பட்டு ஒரு பலனும் இல்லை” என்று அல்லாஹ்விடமிருந்து பதில் வந்தது.
நாற்பது ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறைக்குச் சொல்வார்கள். எனவே இந்தத் தலைமுறையில் உள்ளவர்களை விட்டுவிட்டு, அடுத்து வரும் இளைஞர்களை உருவாக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.


۞ وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱبْنَىْ ءَادَمَ بِٱلْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًۭا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ ٱلْءَاخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلْمُتَّقِينَ.

5:27. மேலும் பனீ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு கதையை சொல்லி வருவது பழக்கமாக இருந்து வந்தது. அதன் உண்மை நிலை என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள். "ஆதம்" என்பவருக்கு இரு குமாரர்கள் இருந்தார்களாம். அவர்களின் நம்பிக்கையின்படி இறைவனுக்குக் காணிக்கையைச் செலுத்தி, யாருடைய காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதைப் பரிசோதித்துக் கொள்வார்களாம். அவ்வாறு ஒருவருடைய காணிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும், மற்றவரின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்றும் அந்தக் கதை கூறுகிறது. அதற்கு இரண்டாமவர் நான் உன்னைக் கொன்று விடுவேன் என்ற கோபத்தில் ஆவேசப்பட்டாராம். அதற்கு முன்னவர், “மெய்யாகவே அல்லாஹ் காணிக்கையைக் ஏற்றுக்கொள்வது பயபக்தி உடையவர்களிடமிருந்து தான்” என்று பதிலளித்தாராம்.
இது வெறும் கதையே என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம். ஏனெனில் அல்லாஹ்வின் வழிமுறையில் காணிக்கையை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாதது என்ற பேச்சிற்கே இடமில்லை.


لَئِنۢ بَسَطتَ إِلَىَّ يَدَكَ لِتَقْتُلَنِى مَآ أَنَا۠ بِبَاسِطٍۢ يَدِىَ إِلَيْكَ لِأَقْتُلَكَ ۖ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلْعَٰلَمِينَ.

5:28. அன்றியும் அவர், “நீ என்னைக் கொலையே செய்துவிட முடிவெடுத்தாலும் அது உன் விருப்பம். நான் அதைத் தடுக்க முயற்சிப்பேன். ஆனால் நான் உன்னைப் போன்று விபரீத செயலைச் செய்யமாட்டேன். ஏனெனில் நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சி செயல்படுகிறேன்” என்றார்.


إِنِّىٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثْمِى وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَٰبِ ٱلنَّارِ ۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُا۟ ٱلظَّٰلِمِينَ.

5:29. “எனவே இந்த அநியாயச் செயல் உன் புறத்திலிருந்தே இருக்கட்டும். ஏனெனில் அதைத் தடுக்கப் போய் அதனால் உனக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டாலும், அதன் பாவமும் உன்னையே சேரட்டும். நான் கொல்லப்பட்டாலும் அதன் பாவமும் உன்னையே சேரட்டும். ஆக எது எப்படி இருப்பினும் நீ நரகவாசிகளில் ஒருவனாக ஆகி விடுவாய். இதுதான் அநியாயம் செய்வோருக்குக் கிடைக்கும் தண்டனையாகும்” என்று கூறினாராம்.


فَطَوَّعَتْ لَهُۥ نَفْسُهُۥ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُۥ فَأَصْبَحَ مِنَ ٱلْخَٰسِرِينَ.

5:30. ஆனால் தம் சகோதரனின் பேச்சைக் கேட்காமல், அவனது மனம் அவரைக் கொலை செய்யவே தூண்டியதாம். எனவே அவரைக் கொன்று விட்டானாம். இப்படியாக அவன் தன் அழிவைத் தானே தேடிக் கொண்டான் என்று அந்தக் கதை சொல்கிறது.


فَبَعَثَ ٱللَّهُ غُرَابًۭا يَبْحَثُ فِى ٱلْأَرْضِ لِيُرِيَهُۥ كَيْفَ يُوَٰرِى سَوْءَةَ أَخِيهِ ۚ قَالَ يَٰوَيْلَتَىٰٓ أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَٰذَا ٱلْغُرَابِ فَأُوَٰرِىَ سَوْءَةَ أَخِى ۖ فَأَصْبَحَ مِنَ ٱلنَّٰدِمِينَ.

5:31. அந்த சமயம் அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி, எவ்வாறு குழி தோண்டி தன் சகோதரனின் பிரேதத்தை மறைக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தானாம். “இந்தக் காகத்திற்கு இருக்கின்ற அறிவாற்றலும் தமக்கு இல்லாமல் போய்விட்டதே. அப்படி இருந்திருந்தால் நானும் என் சகோதரனின் பிரேதத்தை மறைத்திருப்பேனே. நான் நஷ்டவாளிகளில் ஒருவனாக ஆகாமல் இருந்திருப்பேனே” என்று மனம் வெதும்பினாராம்.
கவனித்தீர்களா? கொலையாளிக்கு கொலை செய்ததைப் பற்றி கவலை இல்லை. கொலையுண்டவனின் பிரேதத்தை மறைப்பது பற்றிய கவலையே இருந்தது என்று கதைகளைச் சொல்லி வருகிறார்கள். இதற்காகத் தான் கீழ்கண்டவாறு சட்டத்தை பிறப்பித்ததாகவும் அவர்கள் கதைகளை சொல்கிறார்கள்.


مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍۢ فِى ٱلْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعًۭا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَآ أَحْيَا ٱلنَّاسَ جَمِيعًۭا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِٱلْبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرًۭا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِى ٱلْأَرْضِ لَمُسْرِفُونَ.

5:32. இதன் காரணமாகவே, “எவன் ஒருவன் எந்தக் காரணமும் இன்றி அநியாயமாக ஒருவரை கொலை செய்கின்றானோ, அவன் முழு மனித இனத்தையும் கொலை செய்து விட்டதாகப் பொருள் கொள்ளப்படும். அதே போல் எவர் ஒருவர் மற்றவரை துயரத்திலிருந்து காப்பாற்றி வாழ வைக்கின்றாரோ, அவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்ததாகக் கருதப்படும்” என்று ஒழுங்குமுறைச் சட்டங்கள் பனீஇஸ்ராயீல் சமூகத்தினருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இயற்றப்பட்டன என்று அவர்கள் கூறுகின்றனர்.
இறைத்தூதர்கள் ஆதாரப்பூர்வமான சட்ட திட்டங்களையே அவர்களிடம் தொடர்ந்து கொண்டு வந்தார்கள். அதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறின செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களாகவே உள்ளனர். இதற்குக் காரணம் என்ன?
அதாவது நபிமார்கள் என்னவோ அறிவுப் பூர்வமான சட்ட திட்டங்களையே அறிவித்துச் சென்றார்கள். ஆனால் காலப் போக்கில் அந்த சட்டங்கள் இயற்றப்பட்டதன் பின்னணியைப் பற்றி பல்வேறு கதைகளை சொல்லி மக்களை அவற்றை விட்டு திசை திருப்பி விடவே முயன்று இருக்கிறார்கள். அதனால்தான் மேற்சொன்ன கதைகளை சொல்லி வந்துள்ளார்கள்.
அதாவது முதலாவதாக அல்லாஹ் காணிக்கையை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்ற பேச்சிற்கே இடமிருப்பதில்லை. ஆனால் கதையில் இதற்கு நேர் மாற்றமாக சொல்கிறார்கள்.
இரண்டாவதாக அல்லாஹ் காகத்தை அனுப்பி பிரேதத்தை எவ்வாறு மறைக்கவேண்டும் என்று கற்றுக் கொடுத்ததாக சொல்கிறார்கள். ஆனால் காகம் அவ்வாறு செத்துப் போன காகத்தை பள்ளம் தோண்டி புதைப்பதே இல்லை.
மூன்றாவதாக கொலையாளி, தான் செய்த அநியாயமான கொலையைப் பற்றித் தான் கவலைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரேதத்தை மறைப்பது பற்றி கவலைப்படுகிறார். ஆக மக்களை திசை திருப்புவதற்காகவே இப்படிப் பட்ட கதைகளை சொல்லி வருகிறார்கள்.
முஸ்லிம்களிடையேயும் “ஷானெ நுஜுல்” என்று சொல்லி, இதற்காகக்தான் “இந்த வசனம்” இறக்கி அருளப்பட்டது என்று சொல்வார்கள். உலகம் நிலைத்திருக்கும் நாள்வரையில் இருக்க வேண்டிய மார்க்கத்தை குறுகிய கால வட்டறைக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். காலம் செல்லச் செல்ல மக்கள் மத்தியில் கதை தங்கிவிடுகிறது. சட்டம் அவர்களைவிட்டு மறைந்து விடுகிறது.


إِنَّمَا جَزَٰٓؤُا۟ ٱلَّذِينَ يُحَارِبُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَسْعَوْنَ فِى ٱلْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓا۟ أَوْ يُصَلَّبُوٓا۟ أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُم مِّنْ خِلَٰفٍ أَوْ يُنفَوْا۟ مِنَ ٱلْأَرْضِ ۚ ذَٰلِكَ لَهُمْ خِزْىٌۭ فِى ٱلدُّنْيَا ۖ وَلَهُمْ فِى ٱلْءَاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ.

5:33. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும், அதன் அடிப்படையில் இறைத்தூதர் உருவாக்கும் ஆட்சியமைப்புச் சட்டத்திற்கும் எதிராக செயல்பட்டு, சமுதாயத்தில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு திரிபவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும். இவற்றிற்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கிலிடுதல், மாறு கால் மாறு கை வெட்டப்படுதல் அல்லது நாடு கடத்துதல் போன்ற கடுமையான தண்டனையே அளிக்கப்படும். இது அவர்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய இழிவாகும் அல்லவா? அது மட்டுமின்றி மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் இதைவிடக் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள்.


إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ مِن قَبْلِ أَن تَقْدِرُوا۟ عَلَيْهِمْ ۖ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

5:34. எனவே இந்த ஆட்சியமைப்பு முழு அளவில் பலமடைந்து, அவர்களை நீங்கள் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் முன், அவர்கள் தம் தவறான செயல்களை விட்டு திருந்திக் கொண்டால், மேற்சொன்ன தண்டனையிலிருந்து மீளலாம். இந்த அரியதொரு வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அல்லாஹ்வின் வழிகாட்டுதல் அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவதும், இது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱبْتَغُوٓا۟ إِلَيْهِ ٱلْوَسِيلَةَ وَجَٰهِدُوا۟ فِى سَبِيلِهِۦ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.

5:35. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழுங்கள். அவன் காட்டிய வழியின் மூலமே உயர் நிலையை அடைய வழியைத் தேடிக் கொள்ளுங்கள். நீங்கள் நற்கருமங்களை செய்து கொண்டு, அதற்காக உங்களை அர்ப்பணித்து, உங்களால் இயன்ற அளவிற்கு ஆட்சி அமைப்பு சிறப்பாகச் செயல்பட உதவிக் கரங்களை நீட்டுங்கள் (17:57). இதனால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.


إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا وَمِثْلَهُۥ مَعَهُۥ لِيَفْتَدُوا۟ بِهِۦ مِنْ عَذَابِ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.

5:36. மாறாக இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் அவர்கள் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் ஈடாக கொடுத்தாலும், அதைவிட அதிகமாகக் கொடுத்தாலும் அந்தத் தீய விளைவுகளிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஒருபோதும் முடியாது. அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனை கண்டிப்பாக உண்டு.


يُرِيدُونَ أَن يَخْرُجُوا۟ مِنَ ٱلنَّارِ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنْهَا ۖ وَلَهُمْ عَذَابٌۭ مُّقِيمٌۭ.

5:37. அவர்கள் அந்த நரக வேதனையிலிருந்து வெளியே வர நாடுவார்கள். ஆனால் அதை விட்டு அவர்களால் வெளியே வரவே முடியாது. அவர்களுக்குக் கிடைக்கும் வேதனைகள் நிலையாக இருக்கும்.


وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقْطَعُوٓا۟ أَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَكَٰلًۭا مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌۭ.

5:38. அதை அடுத்து சட்டஒழுங்கு விஷயமாக திருட்டை ஒழிக்க சட்டங்களைப் பிறப்பிக்க வேண்டும். திருடனோ திருடியோ அவர் செய்த குற்றத்திற்கு ஏற்ப தண்டனை அளிக்க வேண்டும். திருட்டை ஒழிக்க அதற்கான காரணிகளை அறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியாகத் திருடும் கைகள் திருடுவதை விட்டு தடுக்கப்பட்டு விடும். அதையும் மீறி ஒருவர் திருட்டு பழக்கத்தை தொடர்ந்தால், இஸ்லாமிய நீதிமன்றம் விசாரித்து அதிகபட்ச தண்டனையாக அவன் கையை தரித்துவிட தீர்ப்பளிக்கும். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் ஞானம் மிக்கதாகவே உள்ளன.


فَمَن تَابَ مِنۢ بَعْدِ ظُلْمِهِۦ وَأَصْلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيْهِ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ.

5:39. இதுநாள் வரையில் அநியாயமாக நடந்து கொண்டிருந்தவர்கள், இனி அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று தம்மை திருத்திக்கொள்ள முன்வருபவர்களுக்கு, திருந்தி வாழ அல்லாஹ்வின் சட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாகவும் கருணைமிக்கதாகவும் உள்ளன.


أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَغْفِرُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

5:40. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டே செயல்படுகின்றன என்பதை அவர்கள் கவனிப்பதில்லையா? அல்லாஹ்வின் அதே நிலையான சட்டங்களின்படி, தவறான வழியில் செல்பவர்கள் வேதனைக்குள் ஆகிறார்கள். அவனுடைய வழிகாட்டுதலின்படி செயல்படுவோர் பாதுகாப்பான நிம்மதியான வாழ்வைப் பெறுகிறார்கள். எனவே அல்லாஹ் அனைத்துப் படைப்புகளின் மீதும் பேராற்றல் உடையவனே என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.


۞ يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحْزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِى ٱلْكُفْرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓا۟ ءَامَنَّا بِأَفْوَٰهِهِمْ وَلَمْ تُؤْمِن قُلُوبُهُمْ ۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُوا۟ ۛ سَمَّٰعُونَ لِلْكَذِبِ سَمَّٰعُونَ لِقَوْمٍ ءَاخَرِينَ لَمْ يَأْتُوكَ ۖ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ مِنۢ بَعْدِ مَوَاضِعِهِۦ ۖ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمْ تُؤْتَوْهُ فَٱحْذَرُوا۟ ۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتْنَتَهُۥ فَلَن تَمْلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيْـًٔا ۚ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ لَمْ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمْ ۚ لَهُمْ فِى ٱلدُّنْيَا خِزْىٌۭ ۖ وَلَهُمْ فِى ٱلْءَاخِرَةِ عَذَابٌ عَظِيمٌۭ.

5:41. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உம்மிடம் வருபவர்கள் பலதரப்பட்ட மனோநிலை கொண்டவர்களாக இருக்கின்றனர். “இறை வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டோம்” என்று உதட்டளவில் கூறிக்கொண்டு மனதளவில் ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் யூதர்களில் சிலரும் இருக்கிறார்கள். பொய்யான கற்பனைக் கதைகளைக் கேட்கும் பழக்கமுள்ளவர்களும் இருக்கிறார்கள். உன்னிடம் வராதவர்களிடம் சென்று, உன்னிடம் கேட்ட விஷயத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும் சிலர் வருகிறார்கள். மேலும் வேத அறிவுரைகளைக் கேட்டு, அதில் தவறான செய்திகளையும் கலப்படம் செய்து சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
“நாம் அறிவித்து வரும் மார்கத்தையே இறைத்தூதர் சொல்லும்போது, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது நமக்கு மாற்றமாக அவர் ஏதாகிலும் சொன்னால் அதை ஏற்காதீர்கள்” என்று கூறுவோரும் இருக்கிறார்கள்.
இத்தகையவர்களைப் பற்றி நீர் ஒருபோதும் கவலைக் கொள்ள வேண்டாம். (பார்க்க 18:6) இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக வழிகேட்டில் செல்ல முடிவு செய்தவரை உம்மால் திருத்த முடியாது. இத்தகையோருடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நியதிப்படி தூய்மை அடையும் வாய்ப்புகள் அரிது. இவர்களுடைய தற்காலிக வாழ்வு இழிவானதாகவும், வருங்கால நிலையான வாழ்வு கடுமையான வேதனை மிக்கதாகவும் இருக்கும்.


سَمَّٰعُونَ لِلْكَذِبِ أَكَّٰلُونَ لِلسُّحْتِ ۚ فَإِن جَآءُوكَ فَٱحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ ۖ وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْـًۭٔا ۖ وَإِنْ حَكَمْتَ فَٱحْكُم بَيْنَهُم بِٱلْقِسْطِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ.

5:42. அன்றியும் இத்தகையவர்கள் பொய்யான கற்பனைக் கதைகளையே கேட்டு பழக்கப்பட்டவர்கள். அநியாயமான முறையில் சொத்து சுகங்களைத் தேடிக் கொள்பவர்கள். இத்தகையவர்கள் உம்மிடம் வந்து தம் பிரச்சனைகளுக்குத் தீர்வு கேட்டால் அவர்களிடையே தீர்ப்பு அளிப்பது கட்டாயம் இல்லை. அதனால் உமக்குப் பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. எனினும் அவர்களிடையே தீர்ப்பளித்தால், அல்லாஹ்வின் சட்டத்தின்படி நீதியைக் கொண்டே தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக நீதிமான்களே அல்லாஹ்வின் நேசத்திற்கு உரியவர்களாக ஆகமுடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوْرَىٰةُ فِيهَا حُكْمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنۢ بَعْدِ ذَٰلِكَ ۚ وَمَآ أُو۟لَٰٓئِكَ بِٱلْمُؤْمِنِينَ.

5:43. மேலும் அவர்களிடம் தவ்ராத் இருக்கும் போது, தம் பிரச்னைகளுக்குத் தீர்வு பெற உம்மிடம் எப்படி வருவார்கள்?. அதிலும் அல்லாஹ்வின் கட்டளைகள் உள்ளன. அதிலுள்ள கட்டளைகள் தமக்குச் சாதகமாக இல்லையென்றால் உன்னிடம் வந்து அதைப் பற்றிக் கேட்பார்கள். நீரும் அவர்களுக்கு அதே கட்டளையை எடுத்துரைத்தால் அதையும் அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள். ஆக உண்மையிலேயே உம்மீது நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் இல்லை.


إِنَّآ أَنزَلْنَا ٱلتَّوْرَىٰةَ فِيهَا هُدًۭى وَنُورٌۭ ۚ يَحْكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسْلَمُوا۟ لِلَّذِينَ هَادُوا۟ وَٱلرَّبَّٰنِيُّونَ وَٱلْأَحْبَارُ بِمَا ٱسْتُحْفِظُوا۟ مِن كِتَٰبِ ٱللَّهِ وَكَانُوا۟ عَلَيْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا۟ ٱلنَّاسَ وَٱخْشَوْنِ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَٰتِى ثَمَنًۭا قَلِيلًۭا ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰفِرُونَ.

5:44. தவ்ராத் எனும் வேதத்தையும் நாம்தான் இறக்கியருளினோம். அது மனிதனின் ஒளிமயமான வாழ்க்கைக்கு மிகச் சரியான பாதையைக் காட்டக் கூடியதாக இருந்தது. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த நபிமார்கள் அனைவரும் அதனைக் கொண்டே மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.
இறைக்கட்டளைப்படி பணியாற்றி வந்த ரப்பானியூன்களும், மார்க்க அறிஞர்களும் அல்லாஹ்வின் வேத உபதேசங்களைப் பேணி நடந்து, அவற்றைப் பாதுகாத்து வரும்படி கட்டளை இடப்பட்டார்கள். மேலும் அவ்வேத அறிவுரைகளை நடைமுறைப்படுத்தி அவை ஒளிமயமான வாழ்விற்கு வழிகாட்டியாக உள்ளன என்பதற்கு அவர்களும் சான்றாக விளங்கினார்கள். எனவே அந்த வேத அறிவுரைகளின் படியே மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.
இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் மக்களுக்கு அஞ்சி செயல்படாதீர்கள். எனக்கு அஞ்சி செயல்படுங்கள். அற்ப ஆதாயங்களுக்காக என் அறிவுரைகளைப் புறந்தள்ளி விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய வேத அறிவுரைகளின் படி தீர்ப்பு அளிக்கவில்லையோ, அல்லது ஆட்சி செய்யவில்லையோ, அவர்கள் நிராகரிப்பவர்கள் பட்டியலில் இடம் பெறுவர் என்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது


وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَآ أَنَّ ٱلنَّفْسَ بِٱلنَّفْسِ وَٱلْعَيْنَ بِٱلْعَيْنِ وَٱلْأَنفَ بِٱلْأَنفِ وَٱلْأُذُنَ بِٱلْأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلْجُرُوحَ قِصَاصٌۭ ۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٌۭ لَّهُۥ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.

5:45. மேலும் நாம் அவர்களுக்கு வழங்கிய வேதத்தில் நியாயத்தை மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்து வரும்படி அறிவுறுத்தி இருந்தோம். கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை என்றும், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் என மிகவும் துல்லியமாக நேர்மையான முறையில் நீதி வழங்கும்படியும் அறிவுறுத்தி இருந்தோம். எந்த அளவுக்கு தீங்கு விளைத்தானோ, அதே அளவே தண்டனை வழங்க விதித்திருந்தோம். எனினும் சூழ்நிலையை அறிந்து பாதிக்கப்பட்டவர் விட்டுக் கொடுத்தால், அதனால் அவருக்குப் பன்மடங்கு நன்மைகள் ஏற்படும். ஆக எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய வேத அறிவுரைகளின்படி ஆட்சியும் தீர்ப்பும் நியாயமான முறையில் செய்யவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றும் அவ்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


وَقَفَّيْنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِعِيسَى ٱبْنِ مَرْيَمَ مُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلتَّوْرَىٰةِ ۖ وَءَاتَيْنَٰهُ ٱلْإِنجِيلَ فِيهِ هُدًۭى وَنُورٌۭ وَمُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَهُدًۭى وَمَوْعِظَةًۭ لِّلْمُتَّقِينَ.

5:46. அதே போல் நபிமார்கள் வரிசையில் இடம் பெற்ற மர்யமின் குமாரர் ஈஸா நபியும், அவருக்கு முன் வந்த தவ்ராத்தின் வழிகாட்டுதலை உலகார்க்கு உண்மைப்படுத்திக் காட்டவே வந்தார். அதே அடிப்படையாகக் கொண்ட ‘இன்ஜீல்’(Bible) என்ற வேத அறிவுரைகளை அவருக்கு நாம் கொடுத்தோம். அதுவும் மனித குலத்தின் ஒளிமயமான வாழ்விற்கு வழிகாட்டும் ஒளி விளக்காக இருந்தது. அது தனக்கு முன்வந்த தவ்ராத்தின் வழிகாட்டுதலையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு அது வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருந்தது.


وَلْيَحْكُمْ أَهْلُ ٱلْإِنجِيلِ بِمَآ أَنزَلَ ٱللَّهُ فِيهِ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ.

5:47. ஆதலால் இன்ஜீல் என்ற வேதமுடையவர்களிடம், அதில் இறக்கி அருளப்பட்ட அறிவுரைகளின் படி மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்ப்பு அளிக்கும்படி அல்லாஹ்வின் கட்டளை இருந்தது. யார் அல்லாஹ் இறக்கி அருளிய வேத அறிவுரைகளின் படி ஆட்சியும் நீதியும் அளிக்கவில்லையோ, அவர்கள் பெரும் பாவிகள் ஆவார்கள் என்றும் அவ்வேதத்தில் சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் இறைவழிகாட்டுதலின்படி தீர்ப்பளிக்காமல் யூதர்களும் கிறிஸ்தவர்களும் தம் மனம் போன போக்கில் ஆட்சி அதிகாரத்தை அமைத்துக் கொண்டு, அவர்களே தமக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொண்ட ஷரீயத் சட்டப்படி தீர்ப்பளித்து தவறான முன்மாதிரியை ஏற்படுத்தி விட்டார்கள் (பார்க்க 4:60)


وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ مُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلْكِتَٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ ۖ فَٱحْكُم بَيْنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ ٱلْحَقِّ ۚ لِكُلٍّۢ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةًۭ وَمِنْهَاجًۭا ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةًۭ وَٰحِدَةًۭ وَلَٰكِن لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتَىٰكُمْ ۖ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ ۚ إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًۭا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ.

5:48. இறைச் செய்திகளை எடுத்துரைப்பவரே! நீர் அவ்வாறு செய்யாதீர். மனித வாழ்வின் சரியான பாதையைக் காட்டும் அதே வேத அறிவுரைகளை நாம் உமக்கும் இறக்கி அருளியுள்ளோம். இது அவர்களிடம் உள்ள வேத அறிவுரைகளின் உண்மை நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது. எனவே அல்லாஹ் இறக்கியுள்ள இந்த வேதமான குர்ஆனின்படியே நீர் தீர்ப்பு செய்வீராக. மனிதகுலத்தின் சிறப்பான வாழ்விற்கு நேரான பாதையைக் காட்டும் இந்த வழிமுறையை விட்டுவிட்டு, மக்களுடைய மனோ இச்சையைப் பின்பற்றாதீர். இதுவரையில் உலகில் வாழ்ந்த ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும், நாம் இதே சன்மார்க்கத்தையும் வழிகாட்டுதலையும் அருளி வந்தோம். மற்ற உயிரினங்களுக்கு அல்லாஹ் விதித்த படி தம் இயல்பின் அடிப்படையில் செயல்படுவது போல், மனிதனையும் ஒரே திசையில் வாழும்படி செய்திருக்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் செயல் திட்டம் அவ்வாறு அல்ல. மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்துவிட்டு, இறைவழிகாட்டுதலை நபிமார்கள் மூலம் அளித்துவிட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் செயல்திட்டமாகும்.
எனவே உலக மக்களுள் யார் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றிச் சிறப்பாக வாழ்கிறார்கள் என்பதையும், யார் அதை நிராகரித்து அழிவைத் தேடிக் கொள்கிறார்கள் என்பதையும் பரிசோதித்துக் கொள்வதற்காகவே இப்படி ஒரு செயல் திட்டம் தீட்டப்பட்டது. (பார்க்க 67:2)
ஆகவே நீங்கள் ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களின் பக்கம் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் உலகில் சிறப்பாக வாழ இந்த இறை வழிகாட்டுதலே சிறப்பானதாக இருக்கும். இதை விட்டால் உங்களுக்கு வேறு வழிமுறை எதுவும் வெற்றி பெற துணை நிற்காது. எனவே இதன் படி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், உங்களிடம் நிலவி வரும் கருத்து வேற்றுமைகள் நீங்கி படிப்படியாக உயர் நிலைக்குச் செல்வீர்கள்.


وَأَنِ ٱحْكُم بَيْنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ وَٱحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَنۢ بَعْضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيْكَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَٱعْلَمْ أَنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ ۗ وَإِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ لَفَٰسِقُونَ.

5:49. எனவே அல்லாஹ் இறக்கியுள்ள இந்த வேத அறிவுரைகளின் படியே மக்களிடையே தீர்ப்பு வழங்குங்கள். மக்களுடைய மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் சிலவற்றை விட்டு, உங்களை திசை திருப்பிவிடவே அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு சற்றும் இடம் அளிக்காதீர்கள். மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். எனவே அவர்கள் உம் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர்களிடமுள்ள பாவச் செயல்களின் விளைவுகள் அவர்களை அழிவின் பக்கம் அழைத்துச் செல்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மக்களில் பெரும்பாலோர் நேர்வழி கிடைக்காததால் வழி தவறிச் செல்பவராகவே இருக்கிறார்கள். அவர்களை நேர்வழிப்படுத்த முயற்சிப்பது அரசின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.


أَفَحُكْمَ ٱلْجَٰهِلِيَّةِ يَبْغُونَ ۚ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ حُكْمًۭا لِّقَوْمٍۢ يُوقِنُونَ.

5:50. எனவே மக்களில் பெரும்பாலோர் இந்த வேதம் இறக்கியருளப்படுவதற்கு முன் இருந்த தம் வழக்கப்படி ஆட்சியும் நீதித்துறையும் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அல்லாஹ்வை விட ஒரு சிறந்த ஆட்சிமுறையை வேறு யாரால் தரமுடியும்? இந்த உண்மை இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே புரியும்.


۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلْيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوْلِيَآءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُۥ مِنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

5:51. எனவே இறை வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இறைவனின் ஆட்சி அதிகார விஷயங்களிலும் நீதிமன்ற விவகாரங்களிலும், பகைமையுடன் செயல்படும் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களை வழிகெடுப்பதில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். எனவே இது விஷயமாய் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இதையும் மீறி யாராவது பாதுகாப்பு கருதி அவர்களிடம் உறவு வைத்துக் கொண்டால், அவரும் அவர்களைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார். அநியாயக்கார மக்களுக்கு அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


فَتَرَى ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ يُسَٰرِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٌۭ ۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأْتِىَ بِٱلْفَتْحِ أَوْ أَمْرٍۢ مِّنْ عِندِهِۦ فَيُصْبِحُوا۟ عَلَىٰ مَآ أَسَرُّوا۟ فِىٓ أَنفُسِهِمْ نَٰدِمِينَ.

5:52. ஏனெனில் அவர்களிடையே வாழ்ந்து பழக்கப் பட்டவர்களுக்கு, இந்தக் கட்டளை மிகவும் கசப்பாக இருக்கும். எனவே அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி அவர்களிடம் விரைவார்கள். அவர்களிடம் பகை வைத்துக் கொண்டால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பார்கள். அதற்கு நாங்கள் அஞ்சுகிறோம் என்பார்கள். அல்லாஹ்வின் நியதிப்படி இந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்த அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும், அதற்குத் துணை புரிபவர்களுக்கும் நன்மைகள் பல கிடைக்கும். அப்போது இவர்கள் செய்து வந்தவையும், அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைத்து வந்தவையும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அவர்கள் செய்தவற்றை நினைத்து மிகவும் வருந்துவார்கள்.


وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ ۙ إِنَّهُمْ لَمَعَكُمْ ۚ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فَأَصْبَحُوا۟ خَٰسِرِينَ.

5:53. அப்படி இழி நிலை ஏற்படும் கால கட்டத்தில்,அவர்களை அடையாளம் கண்டு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்களும் உங்களுடன் தான் இருக்கிறோம் என்று சத்தியம் செய்தவர்கள் நீங்கள்தானே?” என்று மூஃமின்கள் அவர்களைப் பார்த்துக் கேட்பார்கள். “அவர்களுடைய செயல்கள் அழிவைத் தேடி தந்துவிட்டன. எனவே அவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டார்கள்” என்று கூறுவார்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِۦ فَسَوْفَ يَأْتِى ٱللَّهُ بِقَوْمٍۢ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُۥٓ أَذِلَّةٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلْكَٰفِرِينَ يُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَآئِمٍۢ ۚ ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ.

5:54. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உங்கள் சமுதாயம் இந்த மார்க்கத்தை விட்டு விலகிக் கொண்டால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் உங்களுக்கே அன்றி அல்லாஹ்வுக்கு அல்ல. உங்களுக்குப் பதிலாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு ஏற்றபடி செயல்படும் வேறு சமுதாயத்தினரிடம் இந்த ஆட்சிப் பொறுப்புகள் கைமாறி விடும். அவர்களுக்கே அல்லாஹ்வின் ஆதரவும் கிடைக்கும். அவர்களுடைய ஆட்சியமைப்பை ஆதரிப்பவர்களை பணிவோடு நடந்து கொள்வார்கள். அதற்கு எதிராக செயல்படுபவர்களை கண்டிப்புடன் இருப்பார்கள். புறம் பேசிப் பழிப்பவர்களின் நிந்தனைக்கு அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். ஆக அல்லாஹ்வின் நாட்டப்படி செயல்படுபவர்களுக்கு அவனது அருட்கொடைகள் அளவின்றி கிடைக்கும். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் மிகவும் விசாலமாகவும் அறிவுப்பூர்மானதாகவும் உள்ளன.


إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمْ رَٰكِعُونَ.

5:55. மேலும் உங்களுக்கு நிலையான ஆதரவை கொடுக்கப் போவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் அதனடிப்படையில் உருவாகும் ஆட்சியமைப்பும் தான். மேலும் இதற்கு துணை புரியும் மூஃமின்கள் ஒழுக்க மாண்புகளைக் கற்றுக் கொடுத்து, தீமையை விலக்கும் "ஸலாத்" முறையை நிலைநிறுத்தி, சமூக நலத் திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயலாற்ற உதவிக் கரங்களையும் நீட்டுவார்கள். இவர்கள்தாம் இறைவனுக்கு அடிபணிந்து செயல்படுபவர்கள் ஆவர்.


وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ فَإِنَّ حِزْبَ ٱللَّهِ هُمُ ٱلْغَٰلِبُونَ.

5:56. யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அதனடிப்டையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களையும், அதை நடைமுறைப்படுத்தும் மூஃமின்களையும் முழுமனதுடன் ஆதரித்து செயல்படுகிறார்களோ அவர்கள்தாம் “அல்லாஹ்வின் செயல் வீரர்கள்” (ஹிஸ்புல்லாஹ்) எனும் பட்டியலில் இடம்பெறுவர். இவர்களே மற்றவர்கள் யாவரையும் மிகைத்து வெற்றியடைபவர்களும் ஆவார்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَكُمْ هُزُوًۭا وَلَعِبًۭا مِّنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ وَٱلْكُفَّارَ أَوْلِيَآءَ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

5:57. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! இறை வழிகாட்டுதலைப் பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்பவர்கள், அதை தீங்கிழைத்த வேதமுடையவர்களுடன் இணைந்து இருப்பவர்கள், இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டு தீங்கு விளைவிப்பவர்கள் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.


وَإِذَا نَادَيْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ ٱتَّخَذُوهَا هُزُوًۭا وَلَعِبًۭا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَعْقِلُونَ.

5:58. இறைவனின் போதனைகளைப் கற்றுக் கொள்ள கூட்டு "ஸலாத்"திற்கு அழைத்தால், அதனையும் அவர்கள் பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். இத்தகையவர்களே அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் திறனை இழந்தவர்கள் ஆவார்கள்.


قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ هَلْ تَنقِمُونَ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْنَا وَمَآ أُنزِلَ مِن قَبْلُ وَأَنَّ أَكْثَرَكُمْ فَٰسِقُونَ.

5:59. “வேதமுடையவர்களே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலான இந்த குர்ஆனையும், அதே அடிப்படையைக் கொண்ட முந்தைய வேத அறிவுரைகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைத் தவிர வேறு எதற்காக நீங்கள் எங்களைப் பழித்து வருகிறீர்கள்? மனித மாண்புகளின் உயர்வையும் நேர்வழியையும் பெற நாம் உங்களை அழைக்கிறோம். ஆனால் நீங்களோ வழிதவறிச் செல்பவர்களாகவே இருக்கிறீர்களே!” என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّۢ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِ ۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ ٱلْقِرَدَةَ وَٱلْخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّٰغُوتَ ۚ أُو۟لَٰٓئِكَ شَرٌّۭ مَّكَانًۭا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ.

5:60. “அல்லாஹ்வின் நியதிப்படி மனித செயல்களின் விளைவாக, மிக மோசமான நிலைக்கு ஆளான சமூகத்தவர்களைப் பற்றி நான் அறிவிக்கட்டுமா? உங்கள் முன்னோர்களின் வரலாறே இதற்கு சான்றாக உள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளை மீறிச் செயல்பட்டதால் எல்லா அருட்கொடைகளையும் சுமுகமான சூழ்நிலையும் இழந்து தவிப்புக்கு ஆளானார்கள். இதனால் மனிதத் தன்மைகள் அவர்களை விட்டு போய்விட்டன. அவர்களுடைய வாழ்க்கைத் தரம் குரங்குகள் மற்றும் பன்றிகளின் குணங்களைப் போன்று தாழ்ந்து போயிற்று. (பார்க்க 2:65) காரணம் அவர்கள் அனைவரும் தம் மனோ இச்சையையே பின்பற்றலானார்கள். ஆக நேரான வழியிலிருந்து தவறிச் சென்றவர்களின் நிலை இப்படியாகத் தான் நாளுக்கு நாள் தாழ்ந்து போய்விடும். அப்படி ஒரு நிலை உங்களுக்கும் ஏற்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.


وَإِذَا جَآءُوكُمْ قَالُوٓا۟ ءَامَنَّا وَقَد دَّخَلُوا۟ بِٱلْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا۟ بِهِۦ ۚ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا۟ يَكْتُمُونَ.

5:61. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இத்தகையவர்கள், “நாங்களும் ஈமான் கொண்டுள்ளோம்” என்று சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்தாலும், இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் அவர்களிடத்தில் அறவே கிடையாது என்பதுதான் உண்மை. எனவே ஒப்புக்காக அவர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ்விடம் மறைக்க முடியுமா? அல்லாஹ்விடம் எதையும் மறைக்கலாகாது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.


وَتَرَىٰ كَثِيرًۭا مِّنْهُمْ يُسَٰرِعُونَ فِى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَأَكْلِهِمُ ٱلسُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

5:62. அவர்களில் பெரும்பாலோர் பாவச் செயல்களிலும் அக்கிரமங்களிலும் விலக்கப்பட்ட உணவு வகைகளை உண்பதிலும் ஈடுபட்டு இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆக அவர்கள் செய்வதெல்லாம் தீமையான செயல்களே ஆகும்.


لَوْلَا يَنْهَىٰهُمُ ٱلرَّبَّٰنِيُّونَ وَٱلْأَحْبَارُ عَن قَوْلِهِمُ ٱلْإِثْمَ وَأَكْلِهِمُ ٱلسُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا۟ يَصْنَعُونَ.

5:63. அவர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும், தடை செய்யப்பட்டவற்றை உண்ணாமல் இருக்கும்படியும், அவர்களுடைய மார்க்க அறிஞர்களும், குருமார்களும் அவர்களுக்கு அறிவறுத்தி இருக்கலாம் அல்லவா? ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. காரணம் அவர்களும் அப்படிப்பட்ட பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களாகவே இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சிறப்பாக நடைபெற கடனுதவியும் பொருள் உதவியும் செய்யும்படி மூஃமின்களிடம் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. இதைக் கேள்விப்படும் யூதர்கள் கேலியாகக் பேசுகின்றனர்.


وَقَالَتِ ٱلْيَهُودُ يَدُ ٱللَّهِ مَغْلُولَةٌ ۚ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا۟ بِمَا قَالُوا۟ ۘ بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَآءُ ۚ وَلَيَزِيدَنَّ كَثِيرًۭا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَٰنًۭا وَكُفْرًۭا ۚ وَأَلْقَيْنَا بَيْنَهُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۚ كُلَّمَآ أَوْقَدُوا۟ نَارًۭا لِّلْحَرْبِ أَطْفَأَهَا ٱللَّهُ ۚ وَيَسْعَوْنَ فِى ٱلْأَرْضِ فَسَادًۭا ۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلْمُفْسِدِينَ.

5:64. அல்லாஹ்வுக்கு மிகவும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கேலி செய்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்களின் கஞ்சத்தனம் காரணமாக, அவர்கள் கைகள் தாம் கட்டப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு பேசி வருபவர்களுக்குக் கேடுதான் மிஞ்சும். அல்லாஹ்வின் அருட்கொடைகளின் விசாலத் தன்மையோ எப்போதும் விரிவாகவே உள்ளது. அவன் நிர்ணயித்த விதிமுறைகளின்படி முறையாக உழைப்பவர்களுக்கு வாழ்வாதாரங்கள் அளவின்றி கிடைத்து வரும்.
ஒரு பக்கம் இறை வழிகாட்டுதல்கள் உங்களுக்குத் தொடர்ந்து எடுத்துரைத்து வரும் நிலையில், மறுபக்கம் நிரகாரிப்பவர்களிடம், பகைமையும் வெறுப்பும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு நிராகரிப்பதன் காரணமாக அல்லாஹ்வின் நியதிப்படி, இவை யாவும் அவர்களிடையே கடைசி வரையில் சூழ்ந்து இருக்கும்.
அவர்கள் பலமுறை யுத்த தீயை மூட்டி வந்தனர். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அவற்றை அவ்வப்போது தடுத்து வந்தன. அது மட்டுமின்றி சமுதாயம் முழுவதிலும் குழப்பங்களை விளைவித்துக் கொண்டே வருகின்றனர். இப்படிக் குழப்பவாதிளை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.


وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْكِتَٰبِ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَكَفَّرْنَا عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأَدْخَلْنَٰهُمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ.

5:65. வேதமுடையவர்கள் உளமார இறைவழிகாட்டுதலை ஏற்று அல்லாஹ்வுக்கு அஞ்சி செயல்பட்டு வந்தால், அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் தாக்கங்கள் நீங்கி சுமுகமான சூழ்நிலை உருவாகும். அவர்களும் எல்லா வசதி வாய்ப்புகளுடனும் வளம் மிக்க சுவனத்திற்கு ஒப்பான வாழ்வில் நுழைவார்கள்.


وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا۟ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِم ۚ مِّنْهُمْ أُمَّةٌۭ مُّقْتَصِدَةٌۭ ۖ وَكَثِيرٌۭ مِّنْهُمْ سَآءَ مَا يَعْمَلُونَ.

5:66. மேலும் தவ்ராத், இன்ஜீல் ஆகியவற்றில் இறக்கியருளப்பட்ட கட்டளைகளின் படி சமுதாயத்தை வழிநடத்தி இருந்தால், வானத்திலிருந்தும் பூமியின் ஆழ்பகுதியிலிருந்தும் அல்லாஹ்வின் அளவற்ற அருட்கொடைகள் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்திருக்கும். ( பார்க்க 7:96) எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் சிலரைத் தவிர பொரும்பாலோர் தீய செயல்களில் ஈடுபடும் சமூகத்தாராகவே இருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய சந்தோஷங்கள் பறிபோய்விடுகிறது.
அதே அடிப்படையைக் கொண்ட குர்ஆனையும் ஏற்று பின்பற்றுவதற்குப் பதிலாக அதையும் எதிர்க்கவே செய்கிறார்கள். இதனால் அவர்களுக்குக் கிடைக்கின்ற ஓர் அரிய வாய்ப்பை நழுவ விடுகிறார்கள்.


۞ يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغْ مَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُۥ ۚ وَٱللَّهُ يَعْصِمُكَ مِنَ ٱلنَّاسِ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ.

5:67. இறைச் செய்திகளை எடுத்துரைப்பவரே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்ட வேத அறிவுரைகளை மக்களிடம் தெளிவாக எடுத்துரைத்து வருவீராக. நீர் அவ்வாறு செய்யாவிட்டால் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பை நிறைவேற்றாதவராக ஆகிவிடுவீர். இதனால் மக்கள் நேர்வழி பெறாமல் அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்காமலே போய்விடும். இக்கடமையை நிறைவேற்றும் போது, மக்களில் சிலரிடமிருந்து எதிர்ப்புகள் எழத்தான் செய்யும். அல்லாஹ் உங்களுக்கு தக்க பாதுகாப்பு அளிப்பான். (பார்க்க 3:144) இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் சமூகத்தாருக்கு அல்லாஹ்விடமிருந்து ஒருபோதும் நேர்வழி கிடைக்காது.
நபித்துவத் தொடர் முற்று பெற்றுவிட்டதால் இறைச்செய்தியை பரப்பும் இந்தப் பொறுப்பை திருக்குர்ஆனின் ஞானத்தைப் பெற்ற ஆலிம்கள் மீது சுமத்துகிறது. (பார்க்க 3:144) அவ்வாறு செய்ய தவறிவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆலிம்களே பொறுப்பு ஏற்கவேண்டி வரும்.


قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لَسْتُمْ عَلَىٰ شَىْءٍ حَتَّىٰ تُقِيمُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ ۗ وَلَيَزِيدَنَّ كَثِيرًۭا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَٰنًۭا وَكُفْرًۭا ۖ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ.

5:68. “வேதமுடையவர்களே! நீங்கள் வெறும் வார்த்தைகளால் தம்மை யூதர்கள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் கூறிக் கொள்வதில் ஒரு பெருமையும் சேராது. எதுவரையில் தவ்ராத்தும் இன்ஜீலின் அடிப்படையில் தொடர்ந்து இறக்கி அருளப்படுகின்ற இந்தக் குர்ஆனை கடைப்பிடித்து நடக்கவில்லையோ, அதுவரையில் உங்களை நம்பிக்கைக்கு உரியவர்களாக கருத முடியாது” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள். மாறாக இந்த இறை வேதமான குர்ஆனின் பக்கம் நீங்கள் விடும் அழைப்பு, அவர்களில் பெரும்பாலோரிடம் நிராகரிப்பையும் வரம்பு மீறுதலையுமே அதிகரித்திருப்பதைக் காண்பீர்கள். எனவே இறை வழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلصَّٰبِـُٔونَ وَٱلنَّصَٰرَىٰ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَعَمِلَ صَٰلِحًۭا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

5:69. நிச்சயமாக ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், சடங்குச் சம்பிரதாயங்களை கடைப்பிடிக்காத சாபியீன்களாயினும், கிறிஸ்தவர் களாயினும் சரியே. யாரெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று, “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று, அதன்படி ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களைத் தீட்ட உழைக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் எவ்வித அச்சமோ துயரமோ இல்லாத சுகமான, பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்பதை உலக மக்களுக்கு எடுத்துரையுங்கள். (மேலும் பார்க்க:2-62)
அதாவது நீங்கள் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானதாகும். உலக மக்களின் நன்மைக்காக இறக்கி அருளப்படுகின்ற இவ்வேத அறிவுரைகளின் படி செயல்பட்டால், சமுதாயமும் செழிக்கும். உங்கள் வாழ்க்கைத் தரமும் உயரும்.


لَقَدْ أَخَذْنَا مِيثَٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَأَرْسَلْنَآ إِلَيْهِمْ رُسُلًۭا ۖ كُلَّمَا جَآءَهُمْ رَسُولٌۢ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُهُمْ فَرِيقًۭا كَذَّبُوا۟ وَفَرِيقًۭا يَقْتُلُونَ.

5:70. உண்மை வரலாறு என்னவென்றால், நம் அறிவுரைகளின்படி நடந்துகொள்ள இறைத்தூதர்கள் மூலமாக பனீஇஸ்ராயீல் சமுகத்தாரிடம் உறுதிமொழி வாங்கினோம். (பார்க்க 2:83) நபிமார்கள் பிறப்பித்த இறைக் கட்டளைகள் அவர்களுடைய பழக்க வழக்கங்களுக்கு எதிராக இருப்பதைக் கண்டதால், அவர்களில் இருந்த மதகுருமார்கள் அதைப் பொய்ப்பிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமின்றி இறைத்தூதர்களைக் கொல்லவும் முயன்றனர்.


وَحَسِبُوٓا۟ أَلَّا تَكُونَ فِتْنَةٌۭ فَعَمُوا۟ وَصَمُّوا۟ ثُمَّ تَابَ ٱللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا۟ وَصَمُّوا۟ كَثِيرٌۭ مِّنْهُمْ ۚ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ.

5:71. தங்களுடைய தீய செயல்களுக்கு எவ்வித தீங்கும் வேதனையும் ஏற்படாது என்ற எண்ணத்தினால், கண்மூடித்தனமாகவும் உணர்ச்சி வேகத்திலும் செயல்பட்டு வந்தார்கள். இதனால் அவர்கள் குருடர்களாகவும், அறிவுரைகளை ஏற்க மறுக்கும் செவிடர்களாகவும் வாழ்ந்து வந்தனர். இவ்வாறிருந்தும் இறைவழிகாட்டுதல் மூலம் திருந்தி வாழ மீண்டும் அவர்கள் வாய்ப்பு பெற்றார்கள். (பார்க்க 2:52&53) அதன்பின் காலப்போக்கில் இறைவழிகாட்டுதலை படிப்படியாக விட்டுவிட்டதால் திரும்பவும் குருட்டுத்தனமும் செவிட்டுதனமும் அவர்களுள் வளர்ந்து விட்டன. ஆக அல்லாஹ்வின் சட்ட அமைப்பு மனிதர்கள் செய்து வரும் செயல்களை எப்போதும் சூழ்ந்து கண்காணித்துக் கொண்டே வருகிறது.


لَقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ ۖ وَقَالَ ٱلْمَسِيحُ يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْ ۖ إِنَّهُۥ مَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ حَرَّمَ ٱللَّهُ عَلَيْهِ ٱلْجَنَّةَ وَمَأْوَىٰهُ ٱلنَّارُ ۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنْ أَنصَارٍۢ.

5:72. இவைதாம் யூதர்கள் நடந்து கொண்ட முறையாகும். இப்போது கிறிஸ்தவர்களைப் பாருங்கள். மர்யமுடைய குமாரர் ஈஸா தான் அல்லாஹ் என்கிறார்கள். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விஷயமாகும். இதனால் அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கிறார்கள். மஸீஹ் ஈஸாவோ அப்படிப்பட்ட போதனைகளை ஒருபோதும் தரவே இல்லை. “இஸ்ரவேலர்களே! என்னையும் உங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழுங்கள். அதற்கு இணையாக வேறு எந்த வழிமுறைகளையும் பின்பற்றாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் வாழ்வின் சந்தோஷங்களை இழந்து, சிக்கல்கள் பல ஏற்பட்டு துன்பத்திற்கு ஆளாவீர்கள். அப்படி ஒரு கால கட்டத்தில், உங்களுக்கு உதவி செய்பவர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்” என்றுதான் அவர் மக்களிடம் போதித்தார்.


لَّقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ ثَالِثُ ثَلَٰثَةٍۢ ۘ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّآ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۚ وَإِن لَّمْ يَنتَهُوا۟ عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ.

5:73. ஆனால் அவர்களோ பிதா, சுதன், பரிசுத்த ஆவி என மூன்று வகை சக்திகள் இணைந்தது தான் அல்லாஹ் என்கிறார்கள். பிரபஞ்சத்தை அடக்கி ஆளும் இறைவன் அல்லாஹ் ஒருவனே என்றிருக்கும் போது, அதை மூன்றாகப் பிரித்துப் பேசுவது சரியாகுமா? இதுவும் இறை நிராகரிப்பே ஆகும். இவ்வாறு மக்களிடம் கூறி வருவதை அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், அவர்களும் உண்மையை நிராகரிக்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அத்தகையவர்களின் வாழ்வு வேதனை மிக்கதாய் ஆகிவிடும் என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


أَفَلَا يَتُوبُونَ إِلَى ٱللَّهِ وَيَسْتَغْفِرُونَهُۥ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

5:74. இந்த உண்மையை அவர்கள் விளங்கிக் கொண்டபின் அவர்கள் பேசி வருவதை நிறுத்திவிட்டு, "அல்லாஹ்வின் வழிகாட்டுதல்" என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடக் கூடாதா? அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அவ்வாறு திருந்தி வருபவர்களுக்குப் பெருங் கருணையுடன் பாதுகாப்பு அளிப்பதாகவே உள்ளது என்பதை அறிந்து கொள்ளட்டும்.


مَّا ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌۭ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٌۭ ۖ كَانَا يَأْكُلَانِ ٱلطَّعَامَ ۗ ٱنظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ ٱلْءَايَٰتِ ثُمَّ ٱنظُرْ أَنَّىٰ يُؤْفَكُونَ.

5:75. மேலும் மர்யமின் குமாரர் மஸீஹ் ஓர் இறைத்தூதரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்பும் பல இறைத்தூதர்கள் பலர் இந்த உலகிற்கு வந்திருக்கிறார்கள். அதன் தொடரில் அவரும் ஒருவர் ஆவார். அவருடைய தாயார் மர்யம் நல்லொழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஆவார். (பார்க்க – 66:12) அவ்விருவரும் மற்ற மனிதர்களைப் போல் உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் நினைப்பது போல அவர் மலக்கு கூட்டத்தாரிலும் இல்லை (பார்க்க 17:95). அல்லாஹ்வின் இவ்வேதம் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஆதாரப்பூர்வமாக தெளிவாக்கும் போது, அவர்களோ ஈஸாவைப் பற்றி விதவிதமான கதைகளைச் சொல்லி எவ்வாறு மக்களை திசை திருப்பி வருகிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.


قُلْ أَتَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَكُمْ ضَرًّۭا وَلَا نَفْعًۭا ۚ وَٱللَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

5:76. யாதொரு நன்மையோ தீமையோ செய்ய இயலாத ஒன்றை “தெய்வ வழிபாடு” என நினைத்து அந்த வழிமுறையையா நீங்கள் கடைப்பிடித்து வருகிறீர்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அல்லாஹ்வின் பரிபாலன ஏற்பாடுகளோ, மனித உழைப்பிற்கு ஏற்ப தேவையானவற்றை அளிக்கக் கூடியதாக உள்ளன. இவ்வாறாக மனிதத் தேவைகள் அனைத்தையும் அறிந்து, அதற்கு ஏற்றவாறே படைக்கப்பட்டும் உள்ளன என்பதையும் அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لَا تَغْلُوا۟ فِى دِينِكُمْ غَيْرَ ٱلْحَقِّ وَلَا تَتَّبِعُوٓا۟ أَهْوَآءَ قَوْمٍۢ قَدْ ضَلُّوا۟ مِن قَبْلُ وَأَضَلُّوا۟ كَثِيرًۭا وَضَلُّوا۟ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ.

5:77. வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக மிகைப்படுத்திக் கூறி வரம்பு மீறாதீர்கள். உங்கள் முன்னோர்களின் வழிமுறை என்று கூறி தம் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். பலரை அவர்கள் வழிகெடுத்ததுடன், தாமும் நேர்வழியை விட்டு விலகியே சென்று விட்டனர்”. இதுதான் நடந்த மற்றும் நடக்கின்ற உண்மை என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
இப்போது இறைவேதமான திருக்குர்ஆன் வந்து விட்டது. இதை ஏற்று பின்பற்றுவதால் எல்லா இறை வேதங்களையும் ஏற்று பின்பற்றுவதற்குச் சமம் ஆகும்.


لُعِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُۥدَ وَعِيسَى ٱبْنِ مَرْيَمَ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ.

5:78. இவ்வாறு பனீஇஸ்ராயீல் சமுதாயத்தினர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதும், வரம்பு மீறின செயலில் ஈடுபடுவதும் புதிதான ஒன்றல்ல. அவர்களுடைய முன்னோர்களாகிய தாவூத் நபி முதல் ஈஸா நபி காலம் வரையில் வாழ்ந்த சமூகத்தவர்கள் இப்படி செயல்பட்ட காரணத்தினால், “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டப்படி அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து சாபத்திற்கு ஆளானார்கள்.


كَانُوا۟ لَا يَتَنَاهَوْنَ عَن مُّنكَرٍۢ فَعَلُوهُ ۚ لَبِئْسَ مَا كَانُوا۟ يَفْعَلُونَ.

5:79. இவ்வாறு செயல்பட்டு வந்ததால் இப்போது அச்சமுதாயம் மிகவும் சீரழிந்துள்ளது. இவர்களை தீமையிலிருந்து அந்த மதகுருமார்கள் தடுப்பதும் இல்லை. அதனால் அவர்கள் தீய செயல்களை விட்டு அவர்கள் விலகிக் கொள்வதும் இல்லை.


تَرَىٰ كَثِيرًۭا مِّنْهُمْ يَتَوَلَّوْنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنفُسُهُمْ أَن سَخِطَ ٱللَّهُ عَلَيْهِمْ وَفِى ٱلْعَذَابِ هُمْ خَٰلِدُونَ.

5:80. அது மட்டுமின்றி இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உங்களுக்கு எதிராகச் செயல்படுவதையும் நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு இவர்கள் செய்வதெல்லாம் பிற்காலத்தில் எந்த அளவிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்வதில்லை. எனவே அல்லாஹ்வின் நியதிப்படி, அவர்கள் நிம்மதி இழந்து வேதனையில் சிக்கிக் கொள்வார்கள்.


وَلَوْ كَانُوا۟ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلنَّبِىِّ وَمَآ أُنزِلَ إِلَيْهِ مَا ٱتَّخَذُوهُمْ أَوْلِيَآءَ وَلَٰكِنَّ كَثِيرًۭا مِّنْهُمْ فَٰسِقُونَ.

5:81. மாறாக அல்லாஹ்வையும் இந்த நபியின் மூலமாக இறக்கியருளப்படுகின்ற வேத அறிவுரைகளையும் ஏற்றுக் கொண்டிருந்தால், அவர்கள் இப்படி நிராகரிப்பவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். காரணம் அவர்களில் பலர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள்.


۞ لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةًۭ لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلْيَهُودَ وَٱلَّذِينَ أَشْرَكُوا۟ ۖ وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةًۭ لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّا نَصَٰرَىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًۭا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ.

5:82. எனவே இந்தக் கால கட்டத்தில் யூதர்கள், மற்றும் மனஇச்சையின்படி வாழும் இணை வைப்பவர்கள் யாவரும் மூஃமின்களின் பகைவர்களாக இருப்பதை நீர் காண்பீர். தம்மைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களில் சிலர், மூஃமின்களிடம் நேசத்துடன் பழகி வருவதையும் காண்பீர்கள். இதற்குக் காரணம் அவர்கள் சிலர் துறவறத்தை மேற்கொள்பவர்களாகவும், மற்றும் சிலர் ஆணவம் கொள்ளாது பணிவுடன் செயல்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.


وَإِذَا سَمِعُوا۟ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ ٱلدَّمْعِ مِمَّا عَرَفُوا۟ مِنَ ٱلْحَقِّ ۖ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّٰهِدِينَ.

5:83. மேலும் இத்தகையவர்கள் இத்தூதர் மூலமாகக் கிடைக்கின்ற விஷயங்களைச் செவியேற்றால், அதில் உண்மை இருப்பதை அறிந்து, அவர்கள் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவனே! நாங்கள் இவ்வேத அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறோம். இவை மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டுகின்றன என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இவற்றைக் கடைப்பிடித்து உலக வரலாற்றில் முத்திரை பதித்துச் சென்ற “சான்றோர்கள்” பட்டியலில் எங்களையும் இணைத்துக் கொள்வாயாக” என்று அவர்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.


وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِٱللَّهِ وَمَا جَآءَنَا مِنَ ٱلْحَقِّ وَنَطْمَعُ أَن يُدْخِلَنَا رَبُّنَا مَعَ ٱلْقَوْمِ ٱلصَّٰلِحِينَ.

5:84. மேலும் அவர்கள், “அல்லாஹ்வையும் எங்களிடம் வந்துள்ள வேத அறிவுரைகளையும் ஏற்காமலிருக்க எங்களுக்கு என்ன தடை இருக்கப் போகிறது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர்களின் கூட்டத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டுமென ஆசைப்படுகிறோம்” என்ற எண்ணங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.


فَأَثَٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُوا۟ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ.

5:85. இப்படியாக அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுடன் இணைந்து, சிறப்பாகச் செயல்பட்டதால் அவர்களுடைய வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதனால் அவர்களுடைய வாழ்க்கை தாராள பொருளாதார வசதிகளைக் கொண்டு சிறப்பாக அமைந்தது. இவை யாவும் அவர்கள் செய்து வந்த நற்செயல்களின் பலனாகக் கிடைத்தன.


وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ.

5:86. மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து, தவறான செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகிவிடும். இத்தகையவர்களே வேதனைகள் நிறைந்த நரகவாசிகள் ஆவார்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحَرِّمُوا۟ طَيِّبَٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ.

5:87. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் மனித வள மேம்பாட்டிற்குத் துணை புரியும் எந்த உபாயங்களுக்கும் தடை விதிக்காதீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த சுத்தமான உணவு வகைகளுக்கும் தடை விதிக்காதீர்கள். மேலும் வரம்பு மீறின செயல்களில் ஈடுபடாதீர்கள். வரம்பு மீறுபவர்களை அல்லாஹ்வின் நேசம் ஒருபோதும் கிடைக்காது.


وَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلًۭا طَيِّبًۭا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ أَنتُم بِهِۦ مُؤْمِنُونَ.

5:88. இறைவழிகாட்டுதலின் வட்டரைக்குள் இருந்து கொண்டு உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட சுத்தமான ஆரோக்கியமான உணவு வகைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.


لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَٰنِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلْأَيْمَٰنَ ۖ فَكَفَّٰرَتُهُۥٓ إِطْعَامُ عَشَرَةِ مَسَٰكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍۢ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٍۢ ۚ ذَٰلِكَ كَفَّٰرَةُ أَيْمَٰنِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَٱحْفَظُوٓا۟ أَيْمَٰنَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمْ تَشْكُرُونَ.

5:89. வீணாக அற்ப விஷயங்களுக்கெல்லாம் சத்தியம் செய்திருந்தால், அதை முறித்துக் கொள்வதில் அல்லாஹ் குற்றம் பிடிப்பதில்லை. எனினும் உறுதிப்பட செய்த சத்திய வாக்குகளை நிறைவேற்றா விட்டால் அது அல்லாஹ்வின் சட்டப்படி குற்றமாகும். நீங்கள் செய்த சத்திய வாக்குகளை நிறைவேற்றத் தவறினால், அதற்குப் பரிகாரமாக உங்கள் உறவினர்களில் பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும். அல்லது ஒர் அடிமையை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். இந்த மூன்று பரிகாரங்களில் எதையும் செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். ஆக உங்கள் சத்தியங்களை முறிக்காமல் பேணிக் காத்துக் கொள்ள இதுவே உங்களுக்குத் தரப்படும் பரிகாரங்களாகும். எனவே நீங்கள் செய்யும் சத்திய வாக்குகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்ள இந்த அறிவுரைகள் விளக்கமாக அளிக்கப்படுகின்றன.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّمَا ٱلْخَمْرُ وَٱلْمَيْسِرُ وَٱلْأَنصَابُ وَٱلْأَزْلَٰمُ رِجْسٌۭ مِّنْ عَمَلِ ٱلشَّيْطَٰنِ فَٱجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.

5:90. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் இப்படியாக கட்டுக் கோப்பான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்குப் பாதகமாக இருக்கும் போதைப் பொருட்கள், சூதாட்டம், சிலை வணக்க வழிபாடு, மற்றும் ஜாதகம் கணித்தல் போன்றவை சமுதாயத்தில் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை யாவும் மனோ இச்சை சம்பந்தப்பட்டவை ஆகும். எனவே இவை உங்கள் சமுதாயத்தில் நெருங்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் சமுதாயம் வேகமாக முன்னேறி வெற்றி இலக்கை எளிதில் அடையும்.


إِنَّمَا يُرِيدُ ٱلشَّيْطَٰنُ أَن يُوقِعَ بَيْنَكُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ فِى ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ.

5:91. காரணம், உங்கள் மனோ இச்சைதான் உங்களை போதைப் பொருட்கள் மற்றும் சூதாட்டங்களின் பக்கம் ஈர்ப்பை ஏற்படுத்தி, உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் காரணிகளாக அமைந்து விடுகிறது. அதனால் நீங்கள் அல்லாஹ்வின் அறிவுரைகளைப் பேணிநடக்க முடியாமல், சமுதாய சீர்கேடுகளைத் தடுக்கும் "ஸலாத்" முறையை விட்டும் விலகிச் செல்லவே நேரிடும். எனவே சமுதாயத்தில் நுழையாதவாறு அவற்றை தடுக்க மாட்டீர்களா?


وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَٱحْذَرُوا۟ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ.

5:92. நீங்கள் எப்போதும் அல்லாஹ்வின் வேத அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். மேலும் அதன்படி உருவாகியுள்ள ஆட்சியமைப்புச் சட்ட திட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படுங்கள். இதில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். இவ்விரண்டில் நீங்கள் எதை விட்டுவிட்டாலும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் உங்களுக்குத்தான். இறை அறிவுரைகளை தெளிவாக எடுத்துரைப்பதுதான் இறைத் தூதர்கள் மீதுள்ள கடமையாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அதாவது இறைத்தூதர் நிரந்தரமாக இவ்வுலகில் தொடர்ந்து உயிர் வாழ முடியாது. எனவே அவர் கொண்டுவரும் வழிகாட்டுதலைப் பின்பற்றி, நேர்வழி பெற்று, வாழ்வின் வெற்றிப் படித்தரங்களை பெறக் கூடியவர்கள் தொடர்ந்து வாழக் கூடிய மக்கள்தாம்.


لَيْسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جُنَاحٌۭ فِيمَا طَعِمُوٓا۟ إِذَا مَا ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ ثُمَّ ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ ثُمَّ ٱتَّقَوا۟ وَّأَحْسَنُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ.

5:93. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நற்காரியங்களைத் தொடர்ந்து செய்து வாருங்கள். தவறான முறையில் செல்வங்களை ஈட்டிக்கொள்வதை விட்டுவிடுங்கள். இறைவனுக்கு அஞ்சி, ஆக்கப்பூர்வமான நற்செயல்களைத் தொடர்ந்து செய்து வாருங்கள். இவ்வாறாக சமுதாய சமச்சீர்நிலை ஏற்பட பாடுபட்டு வந்தால் இதற்கு முன் செய்த பாவகர செயல்களின் தாக்கங்கள் குறைந்து வரும். இவ்வாறு சமுதாய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காகப் பாடுபடுபவர்களுக்கு அல்லாஹ்வின் அரவணைப்பு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளாதீர்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَيَبْلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَىْءٍۢ مِّنَ ٱلصَّيْدِ تَنَالُهُۥٓ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلْغَيْبِ ۚ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌۭ.

5:94. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! ஆட்சி அதிகாரம் உங்களிடம் இருக்கும் போது, மிகவும் சுலபமான முறையில் செல்வங்களை ஈட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் பல இருக்கும். அதே போல் ஹஜ் சமயங்களில் கஅபாவில் வேட்டையாடி எளிதாகக் கிடைக்கக் கூடிய பிராணிகளும் அதிகமாக இருக்கும். ஆனால் அவ்வாறு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதே அல்லாஹ்வின் கட்டளையாகும். எனவே யார் இறைக் கட்டளையின்படி செயல்படுகிறார்கள் என்பது பரிசோதிக்கப்படுகிறது. இந்த அறிவுரை வந்தபின்பும் யார் வரம்பு மீறி நடக்கிறாரோ, அவர் கடுமையான தண்டனைக்கு உரியவர் ஆவார்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْتُلُوا۟ ٱلصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌۭ ۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدًۭا فَجَزَآءٌۭ مِّثْلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحْكُمُ بِهِۦ ذَوَا عَدْلٍۢ مِّنكُمْ هَدْيًۢا بَٰلِغَ ٱلْكَعْبَةِ أَوْ كَفَّٰرَةٌۭ طَعَامُ مَسَٰكِينَ أَوْ عَدْلُ ذَٰلِكَ صِيَامًۭا لِّيَذُوقَ وَبَالَ أَمْرِهِۦ ۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَ ۚ وَمَنْ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنْهُ ۗ وَٱللَّهُ عَزِيزٌۭ ذُو ٱنتِقَامٍ.

5:95. இறை வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இந்தத் தடை உத்தரவை மீறி யாரும் பிராணிகளை வேட்டையாடாதீர்கள். அப்படி யாராவது பிராணிகளை வேட்டையாடினால், அந்தப் பிராணியை கொன்று விட்டதாகப் பொருள் கொள்ளப்படும். அதற்கு அபராதமாக அரசு நிர்ணயிக்கும் தொகையை கஅபாவின் நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும். அந்தக் கட்டளை நிறைவேற்றியதற்கு இருசாட்சிகள் அவசியமாகும். அல்லது அதற்கேற்ப அவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்குத் பரிகாரமாக விதிக்கப்பட்ட நோன்பை நோற்க வேண்டும். (பார்க்க 5:89)
இதற்கு முன் இப்படி நடந்து வந்தது பற்றி இப்போது கேள்வி இல்லை. அவை நடந்து போன விஷயம். இனி அப்படி நடக்காதவாறு தடைஉத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எவர் இந்த தடை உத்தரவை மீறிச் செயல்படுகிறாரோ, அவர் தண்டனைக்குரியவர் ஆகிறார். இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவற்றையும் மிகைத்தவையாகவும், தண்டனை அளிப்பதில் கடுமையானவையாவும் உள்ளன.


أُحِلَّ لَكُمْ صَيْدُ ٱلْبَحْرِ وَطَعَامُهُۥ مَتَٰعًۭا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ ۖ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ ٱلْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًۭا ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ.

5:96. இது நிலத்தில் வாழும் பிராணிகளுக்கு மட்டும் ஹஜ் கூடும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவாகும். நீர் வாழ் பிராணிகளை வேட்டையாடுவதில் தடை ஏதுமில்லை. ஆனால் தடுக்கப்பட்ட இடங்களில் வேட்டையாடுவதே குற்றமாகும். எந்த நிலையிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு வாழவே நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இல்லையெனில் நீங்கள் செய்து வந்தவைப் பற்றி "கேள்வி கேட்கப்படும் நாள்" கண்டிப்பாக உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


۞ جَعَلَ ٱللَّهُ ٱلْكَعْبَةَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ قِيَٰمًۭا لِّلنَّاسِ وَٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَٱلْهَدْىَ وَٱلْقَلَٰٓئِدَ ۚ ذَٰلِكَ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ.

5:97. இந்தத் தடை உத்தரவுகளைப் பிறப்பித்ததற்குக் காரணம் என்னவென்றால் கஅபா என்னும் சங்கை மிக்க இடம் உலக மக்களின் அமைதியைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட தலைமைச் செயலகமாகும். எனவே ஹஜ் மாதங்களில் போரிடுவதும் தடை செய்யப்படுகிறது. மேலும் ஹஜ்ஜுக்காக அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட பிராணிகள், அங்கு வந்து கூடும் மக்களுக்குப் பயன்படும் என்பதற்காக அல்லாஹ் அவற்றை வேட்டையாட தடை செய்துள்ளான். அகிலங்கள் அனைத்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அல்லாஹ் எவ்வாறு கட்டளைகளைப் பிறப்பிதுள்ளானோ, அதே போல் மனிதத் தேவைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு இறைவழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப் படுகின்றன. அனைத்துப் படைப்புகளின் செயலாக்க முறையை நிர்ணயிக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

5:98. நினைவில் கொள்ளுங்கள்! வரம்பு மீறிச் செயல்படுபவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் அல்லாஹ்வின் சட்டம் மிகவும் கடுமையாக இருக்கும் அதே சமயத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதி வழிகாட்டுதலை அளித்திருப்பது அவனது கருணையே அகும்.


مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ.

5:99. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைப்பதே இறைத் தூதரின் கடமையாகும். அதைப் பின்பற்றுவதும் பின்பற்றாததும் மக்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. (பார்க்க - 18:29) ஆக நீங்கள் வெளிப்படையாகச் செயல்பட்டாலும் இரகசியமாகச் செயல்பட்டாலும் அவை அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகாது.


قُل لَّا يَسْتَوِى ٱلْخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ ٱلْخَبِيثِ ۚ فَٱتَّقُوا۟ ٱللَّهَ يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.

5:100. மனிதவள மேம்பாட்டிற்காகவும், உலக அமைதிக்காகவும் செயல்படுவது நன்மையான செயல்களாகும். அழிவை ஏற்படுத்தும் செயல்கள் யாவும் பாவச் செயல்களாகும். எனவே இவை இரண்டும் சமமாகாது. ஆனால் உலகில் தீயவை அதிகமாக இருப்பதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஒரு தீய செயலை அனைவரும் இணைந்து செய்தால் அதில் தவறு ஒன்றுமில்லை என்ற கருத்து மக்களிடையே ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி அவற்றின் தாக்கங்கள் வெளி வராமல் போகாது. எனவே சிந்தனையாளர்களே! அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு முன்தரியாக மாட்டர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு செயல்படுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்வின் இலட்சிய இலக்கை அடைவதில் வெற்றி காண்பீர்கள்.
ஆக நன்மை தீமைகள் பற்றிய விஷயங்கள் கொள்கை ரீதியாக இந்தக் குர்ஆன் மூலம் இறக்கி அருளப்படுகின்றன. ஆனால் அதன் நுணுக்கங்கள் தரப்படவில்லை. உதாரணத்திற்கு மானக்கேடானவை தடை செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது (பார்க்க 7:33) ஆனால் அந்த மானக்கேடான செயல்கள் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு, அவற்றின் தோரணங்கள் மாறி வரும். அதாவது முன்பு மறைமுகமாக ஆங்காங்கே நடைபெற்றன. இப்போது தொலைகாட்சி மற்றும் இண்டெர்நெட் போன்ற ஊடகங்கள் மூலமாக உலா வருகின்றன. மறைமுகமாக நடந்தாலும் வெளிப்படையாக நடந்தாலும் அவை மானக்கேடானவை தான். எக்காலத்திலும் உலகின் எந்தப் பகுதியில் நடைபெற்றாலும் அவை தீமையே. எனவே உலகிலுள்ள அந்தந்த அரசு கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு திருக்குர்ஆனின் கொள்கைக் கோட்பாட்டிற்கு உட்பட்டு, ஒழுக்க மாண்புகளை கருத்தில் கொண்டு, சட்ட உட்பிரிவுகளை ஏற்படுத்தி, மானக் கேடானவற்றுக்குத் தடைசெய்ய வேண்டும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَسْـَٔلُوا۟ عَنْ أَشْيَآءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِن تَسْـَٔلُوا۟ عَنْهَا حِينَ يُنَزَّلُ ٱلْقُرْءَانُ تُبْدَ لَكُمْ عَفَا ٱللَّهُ عَنْهَا ۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٌۭ.

5:101. எனவே இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அவசியமில்லாத விஷயங்களைப் பற்றி கேட்டுக் கொண்டிராதீர்கள். அவற்றைப் பற்றி அறிவிக்கப்பட்டால், அவை நன்மைக்குப் பதிலாக சிரமங்களையே தரும். உலக மக்கள் அனைவரின் சிறப்பான வாழ்விற்குத் தேவையான நிலையான கொள்கை கோட்பாடுகள் மட்டுமே இந்தக் குர்ஆன் மூலம் இறக்கி அருளப்படுகின்றன. அது சம்பந்தமாக நீங்கள் கேட்டால், அவை உங்களுக்கு தெளிவாக்கப்படும். நீங்கள் இவ்வாறு கேட்டுக் கொண்டதற்கு அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்க நாடவில்லை. அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பு கருதி, நிதானத்துடன் முறைப்படி செயல்படக் கூடியதாக உள்ளன என்பதுதான் உண்மை.


قَدْ سَأَلَهَا قَوْمٌۭ مِّن قَبْلِكُمْ ثُمَّ أَصْبَحُوا۟ بِهَا كَٰفِرِينَ.

5:102. இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு, பதில் ஏதும் வராததால், அவர்கள் தாமே சட்ட திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு திசை மாறிச் சென்று விட்டார்கள். அவ்வாறு நீங்களும் செய்யாதீர்கள்.


مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٍۢ وَلَا سَآئِبَةٍۢ وَلَا وَصِيلَةٍۢ وَلَا حَامٍۢ ۙ وَلَٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ ۖ وَأَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ.

5:103. உதாரணத்திற்கு அவர்கள், ‘பஹீரதுன்’ ‘ஸாயியதுன்’ ‘வஸீலதுன்’ ‘ஹாமுன்’ என்று தெய்வங்களின் பெயரில் கால்நடை பிராணிகளை மேய விட்டு, அவற்றைத் தெய்வங்களாகக் கருதி, அவற்றை வழிபட்டு வந்தனர். இவற்றை எல்லாம் அல்லாஹ் ஒருபோதும் ஏற்படுத்தவில்லை. அவையாவும் அல்லாஹ் சொன்னதாக இட்டுகட்டிக் கொண்டு செயல்படும் அறிவற்ற செயல்களாகும்.
ஆகவே தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றியும் மூடநம்பிக்கையில் வழிபடும் விஷயங்களைப் பற்றியும் கேள்வி கேட்டால், அதற்குப் பதில் தருவதில் என்ன பயன் இருக்கப் போகிறது? அவை வாழையடி வாழையாக அவர்களாகவே ஏற்படுத்தி வழிபட்டு வருபவைகளாகும். உதாரணத்திற்கு ஃபாத்திஹா தரூத்தைப் பற்றி மார்க்க நிலைப்பாடு என்ன என்று கேள்வி கேட்டால் குர்ஆனில் பதில் கிடைக்காது.


وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُوا۟ حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۚ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْـًۭٔا وَلَا يَهْتَدُونَ.

5:104. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு இப்போது அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி வாழ சொன்னால், அவர்கள் உடனே எங்கள் மூதாதையர்கள் எதில் வழிபடுவதை கண்டோமோ, அதுவே எங்களுக்குப் போதுமானது என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மூதாதையர்களோ ஒன்றும் அறியாமல் வழிதவறிச் சென்றவர்களாக இருந்தது இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது? அதை அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்த முயலுங்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ عَلَيْكُمْ أَنفُسَكُمْ ۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهْتَدَيْتُمْ ۚ إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًۭا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

5:105. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் ஒருபோதும் இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு திசை மாறிச் சென்றுவிடாதீர்கள். இதில் மிகவும் கவனமாக இருங்கள். வழி தவறியவர்களால் உங்களுக்குப் பெரிய அளவில் தீங்கு ஒன்றும் செய்திட முடியாது. நீங்கள் அனைவரும் அமைதியான வாழ்வு பெற அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கே இறுதியாக வந்தே ஆகவேண்டும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்து வருவது பற்றிய கேள்வி கணக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
இப்போது உலகப் பொதுப்படையான விஷயங்களுக்கு வாருங்கள். இதற்கு எவ்வாறு சட்டங்களும் வழிமுறைகளும் தரப்படுகின்றன என்பதையும் கவனியுங்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ شَهَٰدَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ حِينَ ٱلْوَصِيَّةِ ٱثْنَانِ ذَوَا عَدْلٍۢ مِّنكُمْ أَوْ ءَاخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنتُمْ ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَأَصَٰبَتْكُم مُّصِيبَةُ ٱلْمَوْتِ ۚ تَحْبِسُونَهُمَا مِنۢ بَعْدِ ٱلصَّلَوٰةِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرْتَبْتُمْ لَا نَشْتَرِى بِهِۦ ثَمَنًۭا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۙ وَلَا نَكْتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذًۭا لَّمِنَ ٱلْءَاثِمِينَ.

5:106. ஒருவர் தம் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் சமயம், மரண சாஸனம் ஏற்படுத்த விரும்பினால், நம்பிக்கைக்குரிய இரு சாட்சியங்களை முன்வைத்து முறைப்படி தம் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. (2:180)
ஒருவேளை நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் போது, மரணம் சம்பவித்து விடும் என்ற அச்சம் இருந்தால், நம்பிக்கைக்குரிய வேறு இரு நபர்களை முன்வைத்து தன் சொத்துக்களின் பங்கீடு விஷயமாக தன் விருப்பத்தைத் தெரியப்படுத்தலாம்.
அதன்பின் அந்த பாகப்பிரிவினை சம்பந்தமாக பள்ளிவாசல்களில் செயல்படும் நீதிபதியிடம் சாட்சி சொல்ல தேவைப்பட்டால், அவர்களை கூட்டு "ஸலாத்" முறைக்குப் பின் பள்ளியில் நிறுத்திக் கொண்டு, அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ளலாம். காரணம் மக்கள் பிரச்சனைகளை நன்கு விசாரித்து பள்ளிவாசல்களில் தான் சிறந்த முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு சாட்சி சொல்பவர்கள், சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து எந்தப் வெகுமானமும் வாங்கிக் கொள்ளவில்லை என்றும், அல்லாஹ்வுக்கு பயந்தே சாட்சி சொல்வதாகவும், அவ்வாறு பொய்சாட்சி கூறினால் நாங்கள் குற்றவாளிகள் ஆகிவிடுவோம் என்றும் சாட்சி சொல்வதற்கு முன் சத்திய வாக்குமூலம் எடுத்துக் கொள்ளவேண்டும்.


فَإِنْ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسْتَحَقَّآ إِثْمًۭا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسْتَحَقَّ عَلَيْهِمُ ٱلْأَوْلَيَٰنِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ لَشَهَٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَٰدَتِهِمَا وَمَا ٱعْتَدَيْنَآ إِنَّآ إِذًۭا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ.

5:107. அவ்விருவரும் சாட்சி சொல்வதில் தவறு செய்து விட்டதாகத் தெரிந்தால், அச்சொத்திற்கு உரிமை கோருபவர்கள் சாட்சிக் கூடத்தில் நின்று அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவ்விருவரின் சாட்சிகளை விட நம்முடைய உரிமை கோரலே மிகவும் உண்மையானது என்றும் இதில் எள்ளளவும் வரம்பு மீறவில்லை என்றும் அவ்வாறு செய்தால் நாங்கள் குற்றவாளிகள் ஆகிவிடுவோம் என்றும் சத்திய வாக்குமூலம் செய்து வாதிட வேண்டும்.


ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يَأْتُوا۟ بِٱلشَّهَٰدَةِ عَلَىٰ وَجْهِهَآ أَوْ يَخَافُوٓا۟ أَن تُرَدَّ أَيْمَٰنٌۢ بَعْدَ أَيْمَٰنِهِمْ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱسْمَعُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ.

5:108. இவ்வாறு வெளிப்படையான முறையில் சாட்சிகளை தீவிர விசாரணைகளை செய்து, அவர்களுடைய முகபாவனைகளையும் அடையாளங் கொண்டு சாட்சியங்கள் உண்மையானதா என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதில் குற்றம் புரிபவர்களுக்குத் தண்டனை அளிக்கவேண்டும். இதனால் மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி இந்தச் சட்ட விதிமுறைகளைப் பற்றி நன்கு விசாரித்து, நேர்வழியை அறிந்து கொள்ளுங்கள். வழிதவறிச் செல்பவர்களை அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
எனவே இறைவழிகாட்டுதல்கள் என்பது உலக மக்களின் நன்மைக்காக இறக்கி அருளப்படுவதாகும். ஆனால் அவர்களோ அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு, தம் மனம்போன போக்கில் வாழ்வதும், அற்ப ஆதாயங்களுக்காகப் பொய் சாட்சி சொல்வதுமாக இருக்கிறார்கள். இவ்வுலக வாழ்வில் ஒருவேளை அவர்கள் தப்பித்து விடலாம். ஆனால் மறுமையில் நிச்சயமாகத் தப்பமுடியாது.


۞ يَوْمَ يَجْمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبْتُمْ ۖ قَالُوا۟ لَا عِلْمَ لَنَآ ۖ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلْغُيُوبِ.

5:109. அப்போது இறைத்தூதர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம் தம் சமூதாயத்தினருக்கு இறைவழிகாட்டுதலின் பக்கம் அழைப்பு விடுத்தபோது, அவர்களிடமிருந்து என்ன பதில் வந்தது என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “வெளிப்படையான விஷயத்தைத் தவிர அவர்கள் உள்ளங்களில் மறைந்திருந்தவை எதுவும் எங்களுக்குத் தெரியாது. மறைவானவற்றை எல்லாம் நீயே அறிவாய்” என்று அவர்கள் கூறுவார்கள்.


إِذْ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱذْكُرْ نِعْمَتِى عَلَيْكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلْقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًۭا ۖ وَإِذْ عَلَّمْتُكَ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ بِإِذْنِى فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًۢا بِإِذْنِى ۖ وَتُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ بِإِذْنِى ۖ وَإِذْ تُخْرِجُ ٱلْمَوْتَىٰ بِإِذْنِى ۖ وَإِذْ كَفَفْتُ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِٱلْبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌۭ.

5:110. இவ்வாறு சாட்சிக்காக அழைக்கப்படும் நபிமார்களின் வரிசையில் ஈஸா நபியும் இருப்பார். அல்லாஹ் அப்போது அவரை நோக்கி, “நான் உனக்கும் உன் தாயாருக்கும் அருளிய வேத அறிவுரைகளை நினைவுகூறும். பரிசுத்தமான முறையில் இறைவழிகாட்டுதல்களை அளித்து, நீ சிறு வயதிலும், வாலிப வயதிலும் மக்களிடம் சிறப்பாக போதித்து வந்ததையும் நினைவுகூறும். அதற்காக உனக்கு ஞானம் மிக்க வேத அறிவுரைகள் அடங்கிய தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ததைப் பற்றியும் நினைவுகூறும்.
அந்த இறைவழிகாட்டுதல்களை மக்களிடம் எடுத்துரைத்து, களிமண்ணாகப் புதைந்து கிடந்த அவர்களுடைய சிந்தனை சக்தியை வளர்த்து, வானில் பறக்கும் சுதந்திரப் பறவைகள் போல் ஆக்குவதாகவும், (பார்க்க 3:49) காலம் காலமாகக் குருட்டுத்தனமாக வாழ்ந்தவர்களை அகக் கண்களை திறக்க வைத்து, அவர்களை சிறப்பிக்கப் போவதாகவும், வெண் குஷ்டத்தைப் போல் சீரழிந்து போன சமுதாயத்தை, சிறந்த வளம் மிக்க சமுதாயமாக மாற்றி அமைப்பதாகவும் மக்களிடம் கூறி வந்ததை நினைத்துப் பாரும். சுருங்கச் சொன்னால் நடைபிணங்களாக வாழ்ந்த பனீ இஸ்ராயீல் சமுதாயத்தினரை இறைவழிகாட்டுதல் மூலம் ஜீவனுள்ள வாழ்வைப் பெறச் செய்வதாக சொன்னதையும் நினைத்து பாரும். (பார்க்க 3:49)
ஆனால் அவர்களிடம் தெளிவான வேத அறிவுரைகளை கொண்டுவந்த போது, அவற்றை அவர்கள் ஏற்க மறுத்ததோடு, அவை வெறும் சூனியமே அன்றி வேறில்லை என்று கூறி உனக்கு எதிராக சதிசெய்ய முடிவு செய்தார்கள். அந்த ஆபத்திலிருந்து நாம் உன்னை காப்பாற்றியதையும் நினைத்துப் பாரும்” என்று கூறுவான்.
ஈஸா நபியின் வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் உங்கள் நினைவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.


وَإِذْ أَوْحَيْتُ إِلَى ٱلْحَوَارِيِّۦنَ أَنْ ءَامِنُوا۟ بِى وَبِرَسُولِى قَالُوٓا۟ ءَامَنَّا وَٱشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ.

5:111. மேலும் அவரைப் பின்பற்றி வந்த ஹவாரிய்யூன் என்னும் தோழர்களிடம், என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர் மூலம் அல்லாஹ் அறிவித்த போது, அவர்களும் நாம் இறைவழிகாட்டுதலை ஏற்று உலக மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபடுவோம் என்று உறுதியளித்தார்கள். மேலும் ஈஸா நபியின் தலைமையின் கீழ் செயல்படப் போவதாகவும் வாக்களித்தார்கள்.


إِذْ قَالَ ٱلْحَوَارِيُّونَ يَٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَآئِدَةًۭ مِّنَ ٱلسَّمَآءِ ۖ قَالَ ٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

5:112. அந்த ஹவாரிய்யூன்கள் ஈஸா நபியிடம் வாழ்வாதார வசதிகள் எங்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டதற்கு அவர், நீங்கள் வானுலக வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சிறந்த சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடும் மூஃமின்களாக இருந்தால், உங்களுக்கு அப்படி ஒரு தாராளமான வசதிகள்கூடிய வாழ்வு நிச்சயம் கிடைக்கும் என்று பதிலளித்தார்.
அதாவது தற்சமயம் உணவுப் பங்கீட்டுமுறை தனியார் கைகளில் சிக்கிக் கிடப்பதால், பதுக்கல் பேர்வழிகளால் அவை பதுக்கப்படுகின்றன. (பார்க்க 3:49). அதனால் மக்களுக்கு உணவு சரிவர கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்த நிலை மாறி சிறந்த அரசமைப்பு உருவாகி அதன் மூலம் வாழ்க்கை வளங்கள் பெருகுமா என்பதே அவர்களுடைய கோரிக்கையாகும்.


قَالُوا۟ نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ ٱلشَّٰهِدِينَ.

5:113. அதற்கு அந்த ஹவாரியூன்கள், “நாங்களும் வானுலக வழிகாட்டுதலின் படியே ஒரு சிறந்த ஆட்சியமைப்பை உருவாக்கி, அதன் மூலமே நியாயமான வாழ்வாதாரங்களைப் பெற்று மன நிறைவான வாழ்வைப் பெற நாடுகிறோம். இப்படி ஒரு சிறந்த சமுதாயம் உருவாகியே தீரும் என்பதை நாங்கள் நம்புகிறோம். அதற்கு நாங்கள் சாட்சியாளர்களாக இருந்து உதவி புரிவோம்” என்றும் கூறினார்கள்.


قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ٱللَّهُمَّ رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةًۭ مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًۭا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةًۭ مِّنكَ ۖ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ.

5:114. அதற்கு மர்யமின் குமாரர் ஈஸா நபி, “அல்லாஹ்வே! நீ இந்த ஆட்சியமைப்பு மூலமாக வானளாவிய தாராளமான வாழ்வாதார வசதிகளை எங்களுக்குச் செய்து தருவாயாக. இதனால் உம்மீது ஈமான் கொள்வதில் முன்னிலை வகிப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின்னால் இதில் வந்து இணைபவர்களுக்கும் வாழ்க்கை வசதிகள் கிடைக்கச் செய்வாயாக. இவ்வாறு உம்மிடமிருந்து கிடைப்பது உலக மக்களுக்கு மிகப்பெரிய அத்தாட்சியாக இருக்கும். மேலும் எங்களுக்கு தாராளமான வாழ்க்கை வசதிகளைச் செய்து தருவாயாக. அருட்கொடைகளை அளிப்பதில் நீயே சிறந்தவன்” என்று பிரார்த்தித்தார்.


قَالَ ٱللَّهُ إِنِّى مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۖ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّىٓ أُعَذِّبُهُۥ عَذَابًۭا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدًۭا مِّنَ ٱلْعَٰلَمِينَ.

5:115. அதற்கு,“உங்கள் வேண்டுகோளின்படி உங்கள் உழைப்பிற்கு ஏற்ப வாழ்க்கை வசதிகளை பெருகச் செய்வேன். அவற்றை என் கட்டளையின்படி சரியான முறையில் பங்கிட்டு, அனைவரும் இன்புற்று வாழ வழி செய்ய வேண்டும். ஆனால் இந்த வசதிகளைப் பெற்ற பின், யாராவது என் கட்டளைக்கு மாறு செய்தால், உலகில் யாருக்குமே கிடைக்காத அளவிற்கு வேதனைகளைக் கொண்டு உங்களை வேதனைப்படுத்துவேன்” என்று அல்லாஹ்விடமிருந்து பதில் வந்தது.
நடந்த வரலாற்று உண்மைகள் இவ்வாறிருக்க நீ மக்களிடம் என்ன போதித்து வந்தாய் என்று ஈஸா நபியிடம் அல்லாஹ் மறுமை நாளில் கேட்பான்.


وَإِذْ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ءَأَنتَ قُلْتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِى وَأُمِّىَ إِلَٰهَيْنِ مِن دُونِ ٱللَّهِ ۖ قَالَ سُبْحَٰنَكَ مَا يَكُونُ لِىٓ أَنْ أَقُولَ مَا لَيْسَ لِى بِحَقٍّ ۚ إِن كُنتُ قُلْتُهُۥ فَقَدْ عَلِمْتَهُۥ ۚ تَعْلَمُ مَا فِى نَفْسِى وَلَآ أَعْلَمُ مَا فِى نَفْسِكَ ۚ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلْغُيُوبِ.

5:116. “மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வை விட்டுவிட்டு உன்னையும் உன் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ள மக்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் ஃகியாம நாளில் கேட்கும்போது, அவர், “ நீ மனித கற்பனைக் கெல்லாம் மிகவும் அப்பாற்பட்டவன். எனக்கு சிறிதும் உரிமை இல்லாத ஒன்றை நான் மக்களிடம் எடுத்துரைப்பேனா? அவ்வாறு கூறியிருந்தால் நீ நிச்சயமாக அறிந்திருப்பாய். ஏனெனில் என் மனதில் தோன்றும் எண்ணங்களையும் அறிந்து கொள்ளும் வல்லமை உடையவன் நீ. அதே சமயத்தில் உன் செயல்திட்டத்தில் உள்ளவற்றில் எனக்கு நீ எனக்கு அறிவித்ததை தவிர, வேறு எதையும் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் பதில் கூறுவார்.


مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَآ أَمَرْتَنِى بِهِۦٓ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْ ۚ وَكُنتُ عَلَيْهِمْ شَهِيدًۭا مَّا دُمْتُ فِيهِمْ ۖ فَلَمَّا تَوَفَّيْتَنِى كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيْهِمْ ۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ.

5:117. மேலும் அவர், “எனக்கு நீ கட்டளையிட்ட படி மக்களிடம், என்னையும் உங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கே முற்றிலும் கட்டுப்பட்டு வாழுங்கள் என்பதைத் தவிர, வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. மேலும் நான் அவர்களுடன் வாழ்ந்த காலமெல்லாம் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதைக் கண்காணித்து வந்தேன். என் உலக வாழ்வு முடிந்து மரணித்த பின், அவர்கள் என்ன செய்து வந்தார்கள் என்பதை நீயே கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றாய்” என்றும் அல்லாஹ்விடம் கூறுவார்.


إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ ۖ وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

5:118. மேலும் அவர், இறைவா! என் மறைவுக்குப் பின் அவர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டதற்கு அவர்களே பொறுப்பாளி ஆகிறார்கள். வேதனை அடையக் கூடிய செயல்களைச் செய்திருந்தால், உன் விதிமுறைகளின் படி வேதனையே அவர்களை வந்தடையும். மாறாக நற்செயல்களைச் செய்திருந்தால், அவர்களுக்குப் பாதுகாப்பான நிம்மதியான வாழ்வு கிடைக்கும். அவர்கள் யாவரும் உன் படைப்புகளே ஆவர். அவர்கள் மீது உன் ஆதிக்கம்தான் செல்லும். உன்னுடைய ஒவ்வொரு செயல்திட்டமும் ஞானத்தின் அடிப்படையிலேயே அமையப் பெற்றதாகும். எனவே அவர்களுடைய செயலுக்கு நான் எப்படிப் பொறுப்பாளி ஆவேன்” என்று சொல்வார்.
ஈமான் கொண்டவர்களே! மறுமை நாளில் நடக்கப் போகின்ற விஷயங்களை இவ்வாசகம் எவ்வளவு அழகாகச் சித்தரிக்கிறது என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தீர்களா? இன்றைய கால கட்டத்தில் ஈஸா நபி மக்களிடம் சொல்லாத விஷயங்களை எல்லாம் அவர் சொன்னதாகச் சொல்லிக் கொண்டு, மக்களை வழிகெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைக் கவனித்தீர்களா? மக்கள் செய்யும் பாவச் செயல்களுக்கு அவர் விமோசனம் அளிப்பார் என்ற தைரியத்தில் மனம் போன போக்கில் செயல்பட்டு வருகிறார்கள். இவை தம் வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்டு சமுதாயத்தையும் நாட்டையும் அழிவின் பக்கம் அழைத்துச் செல்கின்றன என்பதை அவர்கள் உணரக் கூடாதா?
இந்தச் சம்பவம் ஃகியாம நாளில் நடக்கும் என்கிறது திருக்குர்ஆன். எனவே இடையில் அவர் மீண்டும் இந்த உலகிற்கு வருகை தருவார் என்ற பேச்சும் அடிபட்டு போய்விடுகிறது. ஈஸா நபியைப் பற்றிய மேல் கொண்டு விவரங்களுக்குப் பார்க்க அத்தியாயம் 3:35-60, 4:157-159


قَالَ ٱللَّهُ هَٰذَا يَوْمُ يَنفَعُ ٱلصَّٰدِقِينَ صِدْقُهُمْ ۚ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۚ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.

5:119. அல்லாஹ், “இன்றைய தினம் அவரவர் செய்த செயல்களின் பலன்களைப் பெறும் கால கட்டத்தில், யார் சீரும் சிறப்புமாகச் செயல்பட்டு நாம் நிர்ணயித்த மார்க்கத்தை உண்மைப்படுத்திக் காட்டினார்களோ, அவர்களுக்கு சந்தோஷமான நிரந்தர சுவன வாழ்வு கிடைக்கும். காரணம் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பம் என்னவோ அதன்படியே செயல்பட்டவர்கள். அதனால் அவர்கள் தேவைகள் என்னவோ அவை அல்லாஹ்விடமிருந்து தாராளமாகக் கிடைக்கும். இப்படி ஒரு வாழ்வு கிடைப்பது மகத்தான வெற்றியாகும் அல்லவா? என்று கூறுவான்.


لِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا فِيهِنَّ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۢ.

5:120. ஆக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாமே அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தே செயல்படுகின்றன. அல்லாஹ் அனைத்து விஷயங்களிலும் பேராற்றலுடையவன் என்பதை ஒவ்வொரு படைப்பும் சாட்சி பகர்கின்றது.
எனவே மரணத்திற்குப் பின்புதான் சுவன வாழ்வு கிடைக்கும் என்பதல்ல. அல்லாஹ்வின வழிகாட்டுதலின் படி அனைவரும் இணைந்து செயல்பட்டால், இந்த சமுதாயமே சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவிடும். இதைத் தான் நபிமார்கள் செய்து காட்டினார்கள். காரணம் அல்லாஹ்வின் செயல்திட்டம் வானங்களிலும் பூமியிலும் செயல்படுகிறது. இதுதான் அந்த வழிகாட்டுதலின் மகத்துவமாகும். அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவதன் நோக்கமுமாகும்.
உலக மக்களே! நாம் அனைவரும் அவ்வாறே செயல்பட்டு சுவனத்தை அடைய பாடுபடுவோமாக.