بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

58:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


قَدْ سَمِعَ ٱللَّهُ قَوْلَ ٱلَّتِى تُجَٰدِلُكَ فِى زَوْجِهَا وَتَشْتَكِىٓ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَآ ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ.

58:1. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் கீழ் செயல்படும் நீதிமன்றத்தில் தன் கணவனுக்கு எதிராக, பெண்மணி தொடுத்த வழக்கையும், அது விஷயமாக உம்மிடம் செய்த வாதங்களையும் இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. உங்கள் இருவரின் விவாதங்களை அல்லாஹ்வும் செவியேற்றுக் கொண்டான். அல்லாஹ்வின் நீதிமன்றமும் நியாயமான கோரிக்கைகளை செவியேற்று அவற்றிற்கு ஏற்ற வகையில் தீர்ப்பு அளிக்கும். அந்த வழக்கு என்னவென்றால்:


ٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَٰتِهِمْ ۖ إِنْ أُمَّهَٰتُهُمْ إِلَّا ٱلَّٰٓـِٔى وَلَدْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنكَرًۭا مِّنَ ٱلْقَوْلِ وَزُورًۭا ۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٌۭ.

58:2. உங்களில் சிலர் தம் மனைவியைப் பார்த்து தாயைப் போன்று இருக்கிறாள் எனக் கூறிவிடுகின்றனர். அவர்கள் இப்படி கூறிவிடுவதால், அவர்கள் அவர்களுடைய தாயாக ஆகிவிடமாட்டார்கள். இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் தாய் ஆவார்கள். (பார்க்க 33:4) இப்படி கூறுவது வெறுக்கத் தக்க விஷயமே ஆகும். இவர்களின் கூற்றில் உண்மை எதுவும் இருப்பதில்லை. அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதி, அல்லாஹ்வின் நீதிமன்றம், அறியாமையில் செய்த சிறுசிறு தவறுகளை பெரிதுபடுத்தாது.
தம் மனைவியை தாய் என்று சொல்லிவிட்டு அவளை விவாகரத்து செயது விடுவார்கள. இவ்வாறு செய்வது இனி அனுமதிக்கப்பட மாட்டாது. யார் இவ்வாறு செய்கிறார்களோ அல்லது விளையாட்டாக சொன்னாலோ அது தண்டனைக்குரியதே ஆகும்.


وَٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِن نِّسَآئِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا۟ فَتَحْرِيرُ رَقَبَةٍۢ مِّن قَبْلِ أَن يَتَمَآسَّا ۚ ذَٰلِكُمْ تُوعَظُونَ بِهِۦ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ.

58:3. எனவே இனி யாராவது தம் மனைவியை தாய் என்றோ அல்லது வேறு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினாலோ அவருக்கு தண்டனை அளிக்கப்படும். இவ்வாறு கூறியவர் தன் மனைவியை தம்மிடம் மீட்க நாடினால், அவர் அவளை தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். இனிமேல் பொறுப்புடன் நடந்துகொள்ள அவருக்கு அளிக்கப்படுகின்ற அபராதமாகும் இது. உங்களுடைய ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
சிந்தனையாளர்களே! குர்ஆன் இறக்கியருளப்படும் காலத்தில் ஏழை எளிய மக்களை விலைக்கு வாங்கி கொத்தடிமைகளாக வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்ததாக இதிலிருந்து நமக்குப் புலனாகிறது. எனவே ஓர் அடிமையை விடுவிப்பது என்பது அவர்களுக்குக் கிடைக்கும் பெரிய தண்டனை என்றும் அடிமைத்தனத்தை அறவே ஒழிப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கையே இது என்றும் புலனாகிறது.


فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَآسَّا ۖ فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًۭا ۚ ذَٰلِكَ لِتُؤْمِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ۚ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ ۗ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ.

58:4. எனவே இப்படி அடிமையை விடுதலை செய்ய வசதி பெறாதவர்கள் அல்லது அடிமையே இல்லாத சுதந்திர நாட்டில் வாழ்பவர்கள், தம் மனைவியை தீண்டுவதற்கு முன் அவர் தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களையும் பேணி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தகைய கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும். அவற்றை யாரும் மீறி நடக்கக் கூடாது. மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.
எனவே இவர்களை நீதி மன்ற காவலில் வைத்து நோன்பு நோற்பதை கண்காணித்து திருக்குர்ஆனின் போதனைகளை எடுத்துக் கூறி சீராக்கி வைக்கும். அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யும்.


إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ كُبِتُوا۟ كَمَا كُبِتَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَقَدْ أَنزَلْنَآ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍۢ ۚ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌۭ مُّهِينٌۭ.

58:5. கடந்த காலத்தில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இழிவுக்கு அளானார்கள். அதே போல் இவர்களுடைய நிலைமையும் மோசமாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ளட்டும். இறைவன் புறத்திலிருந்து இது விஷயமாக தெளிவான கட்டளை வந்துவிட்டது. இதற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கடுமையான வேதனைகள் கிடைக்கும்.
இறைவனின் இத்தகைய ஆட்சியமைப்போ நீதிமன்றமோ இல்லையென்றால், நாம் தப்பித்துக் கொள்வோம் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இறைவனின் செயல்திட்டப் படி மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவரவர் செய்து வந்த செயல்களுக்குரிய விளைவுகளை கூலியாகக் கொடுக்கும் காலக் கட்டம் வந்தே தீரும்.


يَوْمَ يَبْعَثُهُمُ ٱللَّهُ جَمِيعًۭا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓا۟ ۚ أَحْصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ.

58:6. அத்தகைய கால கட்டத்தில் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிக்கப்படும். அவர்கள் மறந்துவிட்டு இருக்கலாம். ஆனால் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்வினைச் சட்டம்” அவற்றை பாதுகாக்கிறது. (பார்க்க 17:13-14) இப்படியாக உங்களில் ஒவ்வொருவருடைய செயலையும் கண்காணிக்கும் வல்லமையுடையவன் தான் அல்லாஹ் என்பதை அறிந்துகொள்ளுங்கள். காரணம்:


أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ مَا يَكُونُ مِن نَّجْوَىٰ ثَلَٰثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَآ أَدْنَىٰ مِن ذَٰلِكَ وَلَآ أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا۟ ۖ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُوا۟ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ.

58:7. அகிலங்களிலும் பூமியிலும் நடப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் செயல்பட்டு வருவதை அவர்கள் கவனித்துப் பார்ப்பதில்லையா? ஒருவேளை மூவர் இணைந்து இரகசிய திட்டங்களைத் தீட்டினால் அவர்களில் நான்காவதாக அல்லாஹ் இல்லையா? அல்லது ஐவர் இணைந்து இரகசிய திட்டங்களைத் தீட்டினால் ஆறாவதாக அல்லாஹ் இல்லாமல் போய்விடுவானா? ஆக அவர்களில் சிலரோ அல்லது பலரோ அவர்கள் எங்கிருந்தாலும் எப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்டினலும் அவர்களுடன் அல்லாஹ் இல்லாமல் இருப்பதில்லை. அவர்களுடைய திட்டங்களின்படி செயல்படும்போது, அல்லாஹ்வின் நியதிப்படி அவற்றின் விளைவுகளின் மூலம் அனைவருக்கும் தெரியவரும். இப்படியாக ஒவ்வொரு விஷயத்தையும் அறிந்து கொள்ளும் வல்லமை உடையவன் தான் அல்லாஹ் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ نُهُوا۟ عَنِ ٱلنَّجْوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُوا۟ عَنْهُ وَيَتَنَٰجَوْنَ بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَمَعْصِيَتِ ٱلرَّسُولِ وَإِذَا جَآءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ ٱللَّهُ وَيَقُولُونَ فِىٓ أَنفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا ٱللَّهُ بِمَا نَقُولُ ۚ حَسْبُهُمْ جَهَنَّمُ يَصْلَوْنَهَا ۖ فَبِئْسَ ٱلْمَصِيرُ.

58:8. மேலும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு எதிராக செயல்படுவதை தடை விதித்திருந்தும், அவர்கள் அதையும் மீறி இரகசிய திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். இப்படியாக அநியாய அக்கிரம செயல்களையும், சட்டவிரோத செயல்களையும் செய்ய திட்டமிடுகின்றனர். இருந்தும் நபியே! அவர்கள் உம்மை சந்திக்கும் போது, மிகவும் தாழ்மையுடனும் பணிவுடனும் நல்லவர்களைப் போல் பேசுகிறார்கள். இத்தகைய நயவஞ்சகத்தை அல்லாஹ் தடுத்திருந்தும் அவர்கள் இரட்டை வேடமிடுகிறார்கள். மேலும் தாம் இவ்வாறு செயல்படுவதற்காக அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் தண்டித்திருக்க வேண்டுமே என்றும் தமக்குள் பேசிக் கொள்கின்றனர். அவர்களுடைய இத்தகைய நயவஞ்சகமே அவர்களை வேதனை அளிக்கும் வாழ்வின் பக்கம் இழுத்துச் செல்ல போதுமானதாக இருக்கிறதே. அதற்குள் அவர்கள் நுழையவேண்டி இருக்குமே! அவர்கள் போய் சேரும் இடம் மிக மிக மோசமான இடமாக இருக்குமே! இதை அவர்கள் அறிய வேண்டாமா?


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَنَٰجَيْتُمْ فَلَا تَتَنَٰجَوْا۟ بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَمَعْصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَٰجَوْا۟ بِٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ.

58:9. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் ஒன்றுகூடி இரகசிய திட்டங்களைத் தீட்டுவதாக இருந்தால், அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகவோ இறைவனின் ஆட்சியமைப்புக்கு எதிராகவோ திட்டமிடாதீர்கள். ஆனால் பொது மக்களின் நலனுக்காகவும் இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பதற்காகவும் திட்டமிடுங்கள். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுங்கள்.


إِنَّمَا ٱلنَّجْوَىٰ مِنَ ٱلشَّيْطَٰنِ لِيَحْزُنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَيْسَ بِضَآرِّهِمْ شَيْـًٔا إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ.

58:10. நினைவில் கொள்ளுங்கள். நயவஞ்சகர்களின் திட்டங்கள் யாவும் சுயநல நோக்குடன் உள்ளவை ஆகும். இறையாட்சி அமைப்பை ஆதரித்து செயல்படும் மூஃமின்களுக்கு இடையூறுகளை விளைவிக்கவே அவர்கள் திட்டமிடுகிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி திட்டமிடுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளை கடைப்பிடித்து அவர்களுடைய திட்டங்களை முறியடித்து விடலாம். எனவே நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு திட்டங்களில் முழுமையான நம்பிக்கை வைத்து முழு வேகத்துடன் செயல்படுங்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا۟ فِى ٱلْمَجَٰلِسِ فَٱفْسَحُوا۟ يَفْسَحِ ٱللَّهُ لَكُمْ ۖ وَإِذَا قِيلَ ٱنشُزُوا۟ فَٱنشُزُوا۟ يَرْفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ دَرَجَٰتٍۢ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ.

58:11. மக்கள் நலத் திட்டங்களுக்காக சபைக்கு அழைக்கும் போது, அதில் சில நயவஞ்சகர்களும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. எனவே சபையில் அமரும்போது ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு நகர்ந்து உட்கார சொன்னால் அதன்படியே அமர்ந்து கொள்ளுங்கள். அதே போல் சபை முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டால் அதைவிட்டு கலைந்து சென்று விடுங்கள். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இவை அற்ப விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் அவையே உங்களை உயர்நிலைக்கு கொண்டு செல்ல உதவிகரமாக இருக்கும். மேலும் உங்களுடைய அறிவாற்றல் வளர்வதற்கும் அவை அடிப்படையாக விளங்கும். மேலும் நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்பதை மறவாதீர்கள்.
சபையில் நெருக்கமாக உட்கார்ந்தால், சில சமயம் உங்களுக்கிடையே பேசிக் கொள்வீர்கள். இதனால் சபையில் நடப்பவற்றை கவனிக்க தவறி விடுவீர்கள். மேலும் இப்படி முணுமுணுப்பு ஏற்பட்டால் சபை நடவடிக்கையில் பாதிப்புகள் ஏற்படும். எனவே தக்க இடைவெளி விட்டு அமர்வதே சிறந்தது. மேலும் சபை கலைந்ததும் அங்கு அமர்ந்து கொண்டிருந்தால் தேவையற்ற விவாதத்தில் ஈடுபட வேண்டி வரும். எனவே சபை கலைந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ஆகவேண்டியதை கவனிக்கலாம். இப்படியாக நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உங்களுடைய செயல்திறனும் அறிவாற்றலும் வளரும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نَٰجَيْتُمُ ٱلرَّسُولَ فَقَدِّمُوا۟ بَيْنَ يَدَىْ نَجْوَىٰكُمْ صَدَقَةًۭ ۚ ذَٰلِكَ خَيْرٌۭ لَّكُمْ وَأَطْهَرُ ۚ فَإِن لَّمْ تَجِدُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ.

58:12. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் தனிப்பட்ட முறையில் இறையாட்சி அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை (நபியை) சந்தித்துப் பேச விரும்பினால் நிர்ணயிக்கப்பட்ட அரசாங்க கட்டணத்தை செலுத்தி, முன் அனுமதி பெற்று, அதன் பின்னரே அவரை சந்திக்க செல்லுங்கள். இதனால் தேவையில்லாமல் அவரை சந்திப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். அவருடைய பொன்னான நேரமும் வீணாகாது. உங்களுக்கும் இது நன்மையாகவே இருக்கும். மேலும் எதையும் முறையோடு செயல்பட உதவிகரமாக இருக்கும். ஆனால் கட்டணத்தைச் செலுத்த வசதி பெறாதோர், தனிப்பட்ட முறையில் அதற்கேற்ற வகையில் விண்ணப்பிக்கலாம். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதியே ஏற்படுத்தப்படுகின்றன. இது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்றாலும் அதற்குண்டான கட்டணத்தை (Court Fees) செலுத்த வேண்டியுள்ளது. அல்லது “ஏழையின் மனு” (Pauper case) என்றும் விண்ணப்பிக்கலாம். அதே போன்று உயர் அதிகாரிகளை சந்திக்க நேர்ந்தாலும் அதற்குரிய கட்டணத்தை (Court Fee stamp) செலுத்த வேண்டியுள்ளது.


ءَأَشْفَقْتُمْ أَن تُقَدِّمُوا۟ بَيْنَ يَدَىْ نَجْوَىٰكُمْ صَدَقَٰتٍۢ ۚ فَإِذْ لَمْ تَفْعَلُوا۟ وَتَابَ ٱللَّهُ عَلَيْكُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ.

58:13. இறையாட்சி அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதே என்று அஞ்சுகிறீர்களா? இப்படி கட்டணத்தை செலுத்தாமல் சந்திக்க வந்திருப்பவர்கள், இனி அவ்வாறு செய்ய வேண்டாம். தெரியாமல் வந்தமைக்கு விடுவிப்பு உண்டு. இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி ஆட்சியமைப்பை நிலைநாட்ட ஒருவரையொருவர் கலந்தாலோசித்து நலத் திட்டங்களைத் தீட்டி வாருங்கள். (பார்க்க 42:38) மேலும் ஆட்சியமைப்பின் நலத்திட்டங்களை நிறைவேற்ற உதவி செய்யுங்கள். இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் பின்பற்றுங்கள். ஆக நீங்கள் செய்வது அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.


۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ تَوَلَّوْا۟ قَوْمًا غَضِبَ ٱللَّهُ عَلَيْهِم مَّا هُم مِّنكُمْ وَلَا مِنْهُمْ وَيَحْلِفُونَ عَلَى ٱلْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ.

58:14. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படும் நயவஞ்சகர்களும் உங்களுடன் நட்புறவு வைத்திருப்பதை கவனித்தில் கொள்வதில்லையா? அவர்கள் ஒருபோதும் உங்களை சார்ந்தவர்கள் அல்லர். நீங்களும் அவர்களைப் போன்றவர்கள் அல்லர். எனவே அந்த நயவஞ்சகர்களின் பேச்செல்லாம் பொய் பித்தலாட்டமே. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் பகைவர்கள் ஆவர்.


أَعَدَّ ٱللَّهُ لَهُمْ عَذَابًۭا شَدِيدًا ۖ إِنَّهُمْ سَآءَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

58:15. இத்தகைய நயவஞ்சகர்களுக்கு கடுமையான வேதனைகள் காத்து நிற்கின்றன. காரணம் அவர்கள் செய்வதெல்லாம் தீய செயல்களே ஆகும்.


ٱتَّخَذُوٓا۟ أَيْمَٰنَهُمْ جُنَّةًۭ فَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ فَلَهُمْ عَذَابٌۭ مُّهِينٌۭ.

58:16. அவர்கள், தாமும் ஈமான் கொண்டவர்கள் என சத்தியம் செய்து, அதை கேடயமாக ஆக்கிக்கொண்டு மக்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள். ஆகவேதான் அவர்களுக்கு இழிவு தரும் வேதனைகள் காத்து கிடக்கின்றன.


لَّن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًٔا ۚ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

58:17. அவர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்து செல்வங்களையும், அவர்களுடைய ஆட்பலத்தையும் வைத்து இவ்வாறு அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு எதிராக செயல்படுகின்றனர். அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டத்திலிருந்து ஒருபோதும் அவர்களை காப்பாற்ற முடியாது. அவர்கள் அனைவரும் நரகவாசிகளே ஆவர். அவர்கள் அங்கு நீண்ட ஆயுளைக் கழிக்க வேண்டிவரும்.


يَوْمَ يَبْعَثُهُمُ ٱللَّهُ جَمِيعًۭا فَيَحْلِفُونَ لَهُۥ كَمَا يَحْلِفُونَ لَكُمْ ۖ وَيَحْسَبُونَ أَنَّهُمْ عَلَىٰ شَىْءٍ ۚ أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلْكَٰذِبُونَ.

58:18. இப்போது உங்களிடம் நல்லவர்களைப் போல் சத்தியம் செய்து பேசி வருகிறார்கள். ஆனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் கால கட்டத்தில் அவர்களுடைய நயவஞ்சகம் வெளிப்பட்டுவிடும். அப்போது தாங்கள் நற்காரியங்களை செய்வதாக சொல்லிக் கொண்டு வருவதெல்லாம் எடுபடாமல் போய்விடும். எனவே அவர்கள் தாம் பொய்யர்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்து விடும்.


ٱسْتَحْوَذَ عَلَيْهِمُ ٱلشَّيْطَٰنُ فَأَنسَىٰهُمْ ذِكْرَ ٱللَّهِ ۚ أُو۟لَٰٓئِكَ حِزْبُ ٱلشَّيْطَٰنِ ۚ أَلَآ إِنَّ حِزْبَ ٱلشَّيْطَٰنِ هُمُ ٱلْخَٰسِرُونَ.

58:19. காரணம் சுயநலப்போக்கு, ஆணவம் மற்றும் கர்வம் ஆகிய ஷைத்தானிய தன்மைகள் அவர்களை ஆட்டிப் படைக்கின்றன. எனவே அவை அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் கவனம் செலுத்துவதை விட்டு தடுக்கின்றன. அத்கையவர்களே ஷைத்தானியர்களின் கூட்டத்தினர் ஆவர். ஷைத்தானியர்களின் கூட்டத்தினர் ஒருபோதும் தம் செயல்திட்டத்தில் வெற்றிபெறவே மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُو۟لَٰٓئِكَ فِى ٱلْأَذَلِّينَ.

58:20. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்புக்கும் எதிராக செயல்படுபவர்கள் அனைவரும் இழிநிலைக்கு தள்ளப்படுவார்கள்.


كَتَبَ ٱللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا۠ وَرُسُلِىٓ ۚ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ عَزِيزٌۭ.

58:21. ஏனெனில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் இப்போராட்டத்தில், தர்மமே வெல்லும் என்பது அல்லாஹ் ஏற்கனவே விதித்துள்ளான். இதற்கு சாட்சியாக நிற்கும் இறைத்தூதர் வெற்றி பெறுவது உறுதி. நிச்சயமாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் வலிமை மிக்கவை என்பதே நிலையான சட்டமாகும்.


لَّا تَجِدُ قَوْمًۭا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ يُوَآدُّونَ مَنْ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوْ كَانُوٓا۟ ءَابَآءَهُمْ أَوْ أَبْنَآءَهُمْ أَوْ إِخْوَٰنَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُو۟لَٰٓئِكَ كَتَبَ فِى قُلُوبِهِمُ ٱلْإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٍۢ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ رَضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ أُو۟لَٰٓئِكَ حِزْبُ ٱللَّهِ ۚ أَلَآ إِنَّ حِزْبَ ٱللَّهِ هُمُ ٱلْمُفْلِحُونَ.

58:22. அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் மனித செயல்களின் விளைவுகள் என்ற ஆகிரத்தையும் மனதார ஏற்றுக்கொண்டவர்கள், இறையாட்சிக்கு எதிராக சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஒருபோதும் நேசிக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற தாய் தந்தையராக இருப்பினும், தாம் பெற்ற பிள்ளைகளானாலும், உடன் பிறந்த சகோதர சகோதரிகளானாலும், நெருங்கிய உறவினர்களானாலும் சரியே. அவர்களை ஒருபோதும் நேசிக்கமாட்டார்கள். (மேலும் பார்க்க 3:118, 60:4) இப்படிப்பட்டவர்களின் உள்ளங்களில் தான் இறைவழிகாட்டுதல் வேரூன்றிருப்பதாகப் பொருள்படும். அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்று பாக்கியம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இத்தகையவர்களே இவ்வுலகிலும் மறுமையிலும் சுவனத்திற்கு ஒப்பான வாழ்வில் இடம்பெறுவார்கள். அவர்களுடைய வாழ்க்கை வசதிகள் யாவும் வற்றாத ஜீவநதி போல் பெருகி வரும். இப்படியாக எந்த சமுதாயத்தினர் இறைவழிகாட்டுதலோடு ஐக்கியமாகி விடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இத்தகைய பாக்கியமிக்க நல்வாழ்வு உண்டு. இத்தகையவர்களே ஷைத்தானிய தன்மைகளைக் கொண்ட பகைவர்களை முறியடித்து வெற்றி கண்ட அல்லாஹ்வின் படையினர் ஆவர்.