بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

57:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


سَبَّحَ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

57:1. அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்ற முழுவேகத்துடன் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையையும், அவனுடைய செயல்திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தில் அடிப்படையிலானவை என்பதற்கும் சாட்சிகளாக விளங்குகின்றன.


لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يُحْىِۦ وَيُمِيتُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ.

57:2. ஆக அகிலங்களும் பூமியும் அல்லாஹ்வின் அதிகாரங்களுக்கு உட்பட்டே செயல்பட்டு வருகின்றன. அவன் இயற்றிய அதே சட்ட விதிமுறைகளின் படியே வாழ்வும் மரணமும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் அவன் படைத்த ஒவ்வொரு படைப்பும் அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது.
தனி நபரின் பிறப்பும் இறப்பும் அல்லாஹ் இயற்றிய சட்ட விதிமுறைகளின் படியே நடைபெற்று வருகின்றன. அதே போல ஒரு சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை பின்பற்றினால் ஜீவனுள்ள ஆற்றல்மிக்க சமுதாயமாக உருவெடுக்கும். அவற்றைக் கடைப்பிடிக்காத சமுதாயங்கள் நடைபிணமாக மாறிவிடும். மேலும் அல்லாஹ்வின் செயல்திட்டப் படி தான் வரண்டு கிடக்கின்ற பூமி மழை பொழிவதைக் கொண்டு புத்துயிர் பெற்று செழிப்பான பூமியாக மாறிவிடுகிறது.


هُوَ ٱلْأَوَّلُ وَٱلْءَاخِرُ وَٱلظَّٰهِرُ وَٱلْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ.

57:3. இத்தகைய மாபெரும் பேராற்றலும் வல்லமையும் உள்ள அல்லாஹ் நேரம், காலம், இடம் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஆவான். அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தையும் தோற்றுவித்தவனும் அவனே. அவற்றை இறுதி இலக்கு வரையில் சென்றடையச் செய்பவனும் அவனே. எனவே இதுதான் அவனுடைய ஆரம்பம் என்றோ இதுதான் அவனுடைய இறுதி எல்லையென்றோ யாராலும் கணித்து கூறவே இயலாது. மேலும் வெளிப்படையான படைப்புகளும், கண்களுக்குப் புலப்படாத படைப்புகளும் அவனால் தோற்றுவிக்கப்பட்டவையே. அவன் படைத்த ஒவ்வொரு படைப்பின் செயல்திறன்கள் யாவை? அதன் இறுதி இலக்கு என்ன என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் அறிபவனும் அவனே.


هُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ.

57:4. இத்தகைய மாபெரும் வல்லமையுடைவன்தான் அகிலங்களையும் பூமியையும் ஆறு காலக் கட்டங்களில் படைத்தான். அவற்றை படைத்ததோடு மட்டுமின்றி அவற்றை கட்டுக் கோப்பாக செயல்படுத்தியும் வருகின்றான். (விளக்கத்திற்குப் பார்க்க 7:54) எனவே அவனுக்குத் தெரியாமல் இந்த பூமிக்குள் எதுவும் நுழைவதற்கோ அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கோ ஒருபோதும் முடியாது. வானத்திலிருந்து எதுவும் இறங்கவும் முடியாது. அதிலிருந்து வெளியேறவும் முடியாது. அதுபோலவே நீங்கள் உலகில் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், அவன் உங்களுடனே இருக்கின்றான். எனவே நீங்கள் செய்து வரும் ஒவ்வொரு செயலும் அவன் இயற்றிய சட்ட விதிமுறைகளின் படி விளைவுகளை ஏற்படுத்தியே தீரும். காரணம்


لَّهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ.

57:5. அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுடைய அதிகாரங்களுக்கு உட்பட்டே செயல்பட்டு வருகின்றன. எனவே நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், அவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படி விளைவுகளை ஏற்படுத்தியே தீரும்.


يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ ۚ وَهُوَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.

57:6. அவன் இயற்றியுள்ள அதே சட்ட விதிமுறைகளின் படி இரவு, பகலின் வெளிச்சத்தைப் மூடிக் கொள்கிறது. இரவின் இருட்டை பகலின் வெளிச்சம் நீக்கி விடுகிறது. இது உண்மை என்றால் உங்களின் ஒவ்வொருவரின் மனதில் தோன்றும் எண்ணங்களையும் அறியக்கூடிய பேராற்றலுடையவன் தான் அல்லாஹ் என்பதும் உண்மையே!


ءَامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُوا۟ مِمَّا جَعَلَكُم مُّسْتَخْلَفِينَ فِيهِ ۖ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَأَنفَقُوا۟ لَهُمْ أَجْرٌۭ كَبِيرٌۭ.

57:7. இத்தகைய மாபெரும் எல்லையற்ற வல்லமையுடைய அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அதனடிப்படையில் உருவாக்கப்படும் சமூக அமைப்பு சட்டங்களையும் ஏற்று செயல்படுங்கள். நீங்கள் இதை உண்மையிலேயே ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தால், அதன் அடையாளமாக உங்கள் கைவசமுள்ள உபரிச் செல்வங்களை மக்கள் நலத் திட்டங்களுக்காக அளித்து வாருங்கள். இவ்வாறு செலவிடப்படும் உங்கள் செல்வங்கள் ஒருபோதும் வீண்போகாது. அதற்குரிய நற்பலன்கள் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.


وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِٱللَّهِ ۙ وَٱلرَّسُولُ يَدْعُوكُمْ لِتُؤْمِنُوا۟ بِرَبِّكُمْ وَقَدْ أَخَذَ مِيثَٰقَكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

57:8. அல்லாஹ்வின் புறத்திலிருந்து இந்த அளவுக்கு விளக்கமும் வாக்குறுதியும் அளித்த பின்பும், இறையாட்சி அமைப்பின் வேண்டுகோளை ஏற்று அதன்படி செயல்படாதிருக்க உங்களுக்கு என்ன வந்தது? உண்மையிலேயே நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நீங்கள் அளித்த வாக்குறுதிப் படி செயல்படுங்கள்.


هُوَ ٱلَّذِى يُنَزِّلُ عَلَىٰ عَبْدِهِۦٓ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍۢ لِّيُخْرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ ۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمْ لَرَءُوفٌۭ رَّحِيمٌۭ.

57:9. இவ்வாறு செயல்பட்டு வந்தால் தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டுள்ள வழிகாட்டுதலின் நோக்கமும் என்னவென்று உங்களுக்கு தெரியும். நீங்கள் சிக்கித் தவிக்கும் இருளிலிருந்து உங்களை விடுவித்து, ஒளிமயமான நிம்மதியான வாழ்வின் பக்கம் அழைத்து செல்வதற்காகத் தான் இவை இறக்கி அருளப்படுகின்றன என்பதும் உங்களுக்கு தெளிவாகி வரும். அல்லாஹ் காட்டிய வழியில் செயல்பட்டால்தான் நீங்கள் கிருபையுடையவராகவும் அன்புமிக்கவர்களாகவும் ஆகிவிடுவீர்கள். அல்லாஹ்வின் கிருபையும் அரவணைப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.


وَمَا لَكُمْ أَلَّا تُنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ لَا يَسْتَوِى مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ ٱلْفَتْحِ وَقَٰتَلَ ۚ أُو۟لَٰٓئِكَ أَعْظَمُ دَرَجَةًۭ مِّنَ ٱلَّذِينَ أَنفَقُوا۟ مِنۢ بَعْدُ وَقَٰتَلُوا۟ ۚ وَكُلًّۭا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ.

57:10. இத்தகைய உயர் பண்புடையவர்களாக ஆகிவிட, அல்லாஹ் காட்டிய வழியில் செல்வங்களை செலவிடாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்களிலும் பூமியிலுமுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் எனும்போது, உங்களுக்குக் கிடைத்துள்ள செல்வங்கள் மட்டும் உங்களுக்கு எப்படி நிரந்தரமாக சொந்தமாகிவிடும்? அவற்றையெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி சமூக நலத் திட்டங்களுக்காக அர்ப்பணித்திருக்க வேண்டாமா?
மேலும் ஆரம்பம் முதலே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதற்காக தம் உயிரைப் பணயம் வைத்து, தம் செல்வங்களை அர்ப்பணித்தவர்கள் ஒரு பக்கம். இஸ்லாமிய ஆட்சி உருவான பின், போரில் கிடைத்த வெற்றிக்குப் பின், அந்த ஆட்சியின் சிறப்புகளை அறிந்து சமுதாய வளர்ச்சிக்காக செலவு செய்ய முன் வந்தவர்கள் மறு பக்கம். இவ்விரு பிரிவினரும் சமமாக மாட்டார்கள். இருப்பினும் இறையாட்சியை ஆதரித்தவர்களுக்கும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு ஆதரவளித்து அழகான பலன்கள் அவர்களுக்கும் கிடைக்கும்படி வழி செய்யும். ஆனால் பதவி அந்தஸ்து என்று வரும்போது முதலாம் வகையினருக்கே முக்கியத்துவம் கிடைக்கும். காரணம் நீங்கள் அனைவரும் செய்து வரும் தியாகங்களுக்கு ஏற்பத்தான் பலன்கள் கிடைக்கும் என்பது அல்லாஹ்வின் சட்டமாகும். (பார்க்க 4:95, 56:8-12)


مَّن ذَا ٱلَّذِى يُقْرِضُ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا فَيُضَٰعِفَهُۥ لَهُۥ وَلَهُۥٓ أَجْرٌۭ كَرِيمٌۭ.

57:11. எனவே அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சிறப்பாக செயல்படுவதற்கு, அழகிய முறையில் கடனுதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர் ஒரு விஷயத்தை நன்றாக அறிந்து கொள்ளட்டும். அவை கடனாகத் தான் அளிக்கப்படுவதாக கருதப்படும். ஏனெனில் அவற்றின் பலன்கள் பன் மடங்காகப் பெருகி அவர்களிடமே திரும்பி வந்தடையும்.


يَوْمَ تَرَى ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَٰنِهِم بُشْرَىٰكُمُ ٱلْيَوْمَ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.

57:12. அத்தகைய பலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இந்த ஆட்சியமைப்பு சிறப்பாக செயல்படும் போது, அங்குள்ள மூஃமினான ஆண்களும், பெண்களும் சந்தோஷத்தில் முக மலர்ச்சியுடன் காணப்படுவார்கள். காரணம் அவர்களுக்கு பல அனுகூலங்கள் நாலாப் புறத்திலிருந்து வந்த வண்ணமிருக்கும். இதுதான் வாக்களிக்கப்பட்ட சுவனத்திற்கு ஒப்பான வாழ்க்கை என்று அவர்களுக்கு அவை அறிவிப்பதாக இருக்கும். அவர்களுடைய பொருளாதார வளர்ச்சி வற்றாத ஜீவநதியாய் நிலைத்திருக்கும். இப்படியாக இறைவனின் ஆட்சியமைப்பை கட்டிக் காக்கும் வரையில் அவர்களுக்கு நிலையான சந்தோஷங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த சந்தோஷங்கள் மரணத்திற்குப் பின்பும் தொடரும். இப்படியொரு வாழ்வு கிடைப்பது மகத்தான வெற்றியாகும் அல்லவா?


يَوْمَ يَقُولُ ٱلْمُنَٰفِقُونَ وَٱلْمُنَٰفِقَٰتُ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱنظُرُونَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ قِيلَ ٱرْجِعُوا۟ وَرَآءَكُمْ فَٱلْتَمِسُوا۟ نُورًۭا فَضُرِبَ بَيْنَهُم بِسُورٍۢ لَّهُۥ بَابٌۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحْمَةُ وَظَٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلْعَذَابُ.

57:13. இப்படியாக ஆட்சியமைப்புத் திட்டங்களை ஆதரித்து செயல்படும் மூஃமின்கள் ஒருபுறம். அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதாக உதட்டளவில் சொல்லிவிட்டு அதற்கு எதிராக செயல்படும் சந்தர்ப்பவாதிகள் மறுபுறம். இந்த ஆட்சியின் பலன்களைப் பார்த்து அந்த நயவஞ்சகர்கள் ஏக்கமடையும் காலம் வரும். அப்போது இத்தகைய ஒளிமயமான வாழ்வில் தங்களுக்கும் பங்கு ஏதேனும் கிடைக்குமா என்று மூஃமின்களிடம் கேட்கும் அவலநிலை ஏற்படும். அப்போது அவர்களிடம், “இந்த ஒளி, வெளியிலிருந்து கிடைக்கின்ற ஒன்றல்ல. உங்களுக்குள் நற்செயல்கள் என்ற எண்ணெய்யிலிருந்து உருவாகி பிரகாசிப்பவையாகும். அதற்காக நீங்கள் உங்களுடைய எண்ணங்களையும் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ளவேண்டி வரும். அதற்கு தடையாகத் தான் உங்களிடையே கலாச்சாரம் என்ற திரை ஏற்பட்டு இருந்ததே! (பார்க்க 7:46) ஆக சுவனத்திற்கு செல்ல ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அதாவது இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படுவதே. அத்தகைய நற்செயல்களில் கோடி நன்மைகள் மறைந்து கிடக்கின்றன. ஆரம்ப நிலையில அது வேதனை அளிப்பது போல் தோன்றும். இதை புரிந்து கொள்ளாத நீங்கள் இப்போது ஏக்கமடைவதில் என்ன பயன்?” என்று சொல்லிவிடுவார்கள்.


يُنَادُونَهُمْ أَلَمْ نَكُن مَّعَكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ وَلَٰكِنَّكُمْ فَتَنتُمْ أَنفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَٱرْتَبْتُمْ وَغَرَّتْكُمُ ٱلْأَمَانِىُّ حَتَّىٰ جَآءَ أَمْرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ.

57:14. அப்போது அவர்கள், “நாங்களும் உங்களுடன் தானே இருந்தோம். இப்போது ஏன் எங்களை ஒதுக்கி விடுகிறீர்கள்?” என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். அதற்கு மூஃமின்கள், “நீங்கள் எங்களுடன் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொண்டு மோசம் போய்விட்டீர்கள். காரணம் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு திட்டங்களில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இருந்ததில்லை. மேலும் நாங்கள் எங்கள் திட்டத்தில் வெற்றி பெற முடியாது என்ற சந்தேகத்தில் தான் இருந்தீர்கள். உங்களுடைய சுயநலப் போக்கு உங்களை மயக்கிவிட்டது. அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படவிருந்த மறுமலர்ச்சி ஏற்பட்டுவிட்டது. இப்போது அல்லாஹ்வின் நியதிப்படி உங்களிடையே இருந்து வந்த மயக்கமும் தெளிந்து விட்டது. எனவே நீங்கள் தண்டனைக்கு உரியவர்களே” என்று கூறுவார்கள்.


فَٱلْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌۭ وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ مَأْوَىٰكُمُ ٱلنَّارُ ۖ هِىَ مَوْلَىٰكُمْ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.

57:15. ஆகவே இன்றைய தினம் உங்களிடமிருந்தோ, இறைவனின் ஆட்சியமைப்புக்கு எதிராக செயல்படும் காஃபிர்களிடமிருந்தோ நஷ்ட ஈட்டை வாங்கி, விடுவித்து விடுவது என்ற பேச்சிற்கே இடமில்லை. நீங்கள் போய் சேரவேண்டிய இடம் சிறைவாசம் என்ற நரகம்தான். இனி அதுதான் உங்களுக்கு ஏற்ற இடம். வசிக்கும் இடங்களில் மிகமிக மோசமான இடம் நரகமாகத் தான் இருக்கும்.
மரணத்திற்குப் பின்பும் இதே நிலைதான் தொடரும்.


۞ أَلَمْ يَأْنِ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلْحَقِّ وَلَا يَكُونُوا۟ كَٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ ٱلْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ ۖ وَكَثِيرٌۭ مِّنْهُمْ فَٰسِقُونَ.

57:16. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களுள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒப்புக்கு உதட்டளவில் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு இருப்பார்கள். இவர்களுடைய உள்ளங்களில் இறைவழிகாட்டுதல்கள் வேரூன்றி இருக்காது. (பார்க்க 49:14) ஆனால் நயவஞ்சகர்களுக்கும் சமூக விரோதச் செயலில் ஈடுபடுவோருக்கும் ஏற்படவிருக்கின்ற அவல நிலையைப் பற்றி 57:14-15இல் எடுத்துரைக்கப் பட்டுள்ளது. இதற்கு அஞ்சி இவர்கள் முறைப்படி நடந்துகொள்ள வேண்டும். இதற்குமுன் வேதமுடையவர்கள் செயல்பட்டு வந்தது போல் இவர்களும் ஆகிவிடவேண்டாம். (பார்க்க 2:74) அவர்கள் காலம் செல்ல செல்ல கல்நெஞ்சக்காரர்களாக ஆகிவிட்டார்கள். எனவே அவர்களில் பெரும்பாலானோர் நேர்வழியினை விட்டு தவறான வழியில் சென்று விட்டார்கள். அதுபோன்று இவர்களும் ஆகிவிட வேண்டாம்.
இவர்கள் தம் நிலையை எண்ணி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. இன்னமும் காலம் கடந்து விடவில்லை. இவர்கள் முயன்றால் நல்லவர்களாக ஆகலாம்.


ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يُحْىِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْءَايَٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ.

57:17. இதற்காக அவர்கள் அல்லாஹ்வின் நியதிப்படி வரண்டு கிடக்கும் பூமி எவ்வாறு செழிப்பாகின்றன என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும். அதை செழிப்பாக்குவதற்கு அல்லும் பகலும் உழைக்க வேண்டியுள்ளது. (பார்க்க 18:7-8) அது போலவே சிறந்த மனிதர்களாக ஆவதற்கு இறைவழிகாட்டுதலின் படி உழைக்க வேண்டியுள்ளது. நீங்கள் அறிவாற்றலுடன் சிறப்பாக செயல்படுவதற்காக அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெளிவாக இந்த குர்ஆனில் எடுத்துரைக்கப்படுகின்றன.


إِنَّ ٱلْمُصَّدِّقِينَ وَٱلْمُصَّدِّقَٰتِ وَأَقْرَضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا يُضَٰعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌۭ كَرِيمٌۭ.

57:18. நினைவில் கொள்ளுங்கள். ஆண்களோ பெண்களோ, யாரெல்லாம் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை உலக அரங்கில் நடைமுறைப்படுத்தி அவற்றை உண்மையாக்கிக் காட்டுகிறார்களோ, அவர்களே சிறந்த மூஃமின்கள் ஆவர். அத்தையவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி சமூக நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்பட, அழகிய முறையில் பொருளுதவிகளை கடனாகக் கொடுக்க முன்வரவேண்டும். (பார்க்க -2:261-262) இத்தகையவர்களுக்கே நற்பலன்கள் பன்மடங்காகப் பெருகி திரும்பக் கிடைத்துவிடும். (பார்க்க 57:12)


وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦٓ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلصِّدِّيقُونَ ۖ وَٱلشُّهَدَآءُ عِندَ رَبِّهِمْ لَهُمْ أَجْرُهُمْ وَنُورُهُمْ ۖ وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ.

57:19. மேலும் இதே அடிப்படையில் அல்லாஹ்வையும் அவனுடைய ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று அவற்றை உண்மைப்படுத்திக் காட்டுபவர்கள்தாம் உண்மையான மூஃமின்கள் ஆவர். அத்தகையவர்களே இறைவனின் நியதிப்படி சான்றோர்களின் பட்டியலில் இடம்பெறுவர். அத்தகையவர்களுக்கே ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் கிடைக்கும். இதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நிராகரித்து அவனுடைய செயல் திட்டங்களை பொய்யாக்குபவர்களின் வாழ்வில் சிக்கல்கள் பல ஏற்படும். மேலும் அவர்கள் அனைவரும் போய் சேரும் இடம் நரகமாகத் தான் இருக்கும்.


ٱعْلَمُوٓا۟ أَنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا لَعِبٌۭ وَلَهْوٌۭ وَزِينَةٌۭ وَتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌۭ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ ٱلْكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّۭا ثُمَّ يَكُونُ حُطَٰمًۭا ۖ وَفِى ٱلْءَاخِرَةِ عَذَابٌۭ شَدِيدٌۭ وَمَغْفِرَةٌۭ مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنٌۭ ۚ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَٰعُ ٱلْغُرُورِ.

57:20. இன்னும் இதையும் தெரிந்து கொள்ளுங்கள். இத்தகைய இறை நிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை என்பது வெறும் வீண் விளையாட்டாகவே இருக்கும். அவர்களுடைய சமுதாயங்களில் கேளிக்கைகளும் வேடிக்கைகளும் மிகைத்திருக்கும். அவையே அவர்களுக்கு அழகாகத் தோன்றும். அவற்றைக் கொண்டு அவர்கள் பெருமிதப்பட்டுக் கொள்வார்கள். மேலும் தங்களுடைய பிள்ளைகளுக்காக செல்வங்களைக் குவிப்பதிலேயே ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் போட்டி இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை முறையை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். வானத்திலிருந்து மழை பொழிந்து, நிலம் பசுமையடைந்து செழிப்பாகிறது. அதை காணும் விவசாயி ஆனந்த பரவசமடைகிறான். ஆனால் அதன் பயிர்கள் விரைவிலேயே உலர்ந்து கூளமாகிவிடுகின்றன. அந்த பயிர்கள் கூளமாவதற்கு முன் அவற்றை பாதுகாக்கும் திறமையோ அவனிடம் இருந்ததில்லை. எனவே அவனுடைய சந்தோஷங்கள் தற்காலிகமானதாகவே என ஆகிவிடுகிறது. அதுபோலத் தான் வருங்கால நலத் திட்டங்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல், தற்காலிக சந்தோஷங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு வருங்கால சந்தோஷங்களில் எந்தப் பங்கும் கிடைப்பதில்லை. அவர்களுடைய வாழ்வு துயர் மிக்கதாய் ஆகிவிடுகிறது. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் நிலையான, சந்தோஷமான, பாதுகாப்பான வாழ்விற்கு வழிவகுக்கிறது. ஆக வருங்கால நிலையான சந்தோஷங்களை வைத்து பார்க்கும்போது, நிகழ்கால சந்தோஷங்கள் அற்பமானவையே என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.


سَابِقُوٓا۟ إِلَىٰ مَغْفِرَةٍۢ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ أُعِدَّتْ لِلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۚ ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ.

57:21. எனவே உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள வழிகாட்டுதலின்படி செயல்பட்டு உங்களுடைய பாதுகாப்பான வாழ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள். அதனடிப்படையில் பிரச்னையில்லாத, சுவனத்திற்கு ஒப்பான சமுதாயத்தை உருவாக்க பாடுபடுங்கள். இத்தகைய சுவன வாழ்க்கை பூமியில் மட்டுமின்றி வானங்கள் வரையிலும் பரவியுள்ளது. (பார்க்க 3:133) இத்தகைய வாழ்வு அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று செயல்படுபவர்களுக்கே சித்தப்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கிருபைகளைப் பெற நாடி வருபவர்களுக்கே அத்தகைய வாழ்வு கிடைக்கும். எனவே அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களும் மகத்தான கிருபையுள்ளம் படைத்தவர்களாக ஆகிவிடுவார்கள்.


مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِىٓ أَنفُسِكُمْ إِلَّا فِى كِتَٰبٍۢ مِّن قَبْلِ أَن نَّبْرَأَهَآ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ.

57:22. எனவே உலகில் நிகழ்கின்ற துயரச் சம்பவங்களோ அல்லது தனிப்பட்ட முறையில் சம்பவிக்கின்ற துயரங்களோ, ஏற்கனவே அல்லாஹ் நிர்ணயித்த சட்ட விதிமுறைகளின் படி உங்களுடைய செயல்களுக்கு ஏற்பதான் நிகழும். (பார்க்க 4:79) அல்லாஹ்வைப் பொறுத்தவரையில் இத்தகைய சட்ட விதிமுறைகளை ஏற்படுத்துவது மிகவும் எளிதானதே ஆகும்.
அதாவது உலகில் நிகழ்கின்ற துயரச் சம்பவங்களாகிய பூகம்பம், வெள்ளம், எரிமலைப் பிழம்பு, போன்ற இயற்கை சீற்றங்கள் என்ற அடிப்படையில் நிகழ்கின்றன. இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டியது ஆட்சியமைப்பின் கடமையாக இருக்கின்றது. இதற்காகவும் பண வசதி மற்றும் மக்களின் ஒத்துழைப்பு அவசியாமாகின்றன. அதையடுத்து துயரச் சம்பவங்கள் கலகம், கலவரம், போர் போன்ற ரூபத்திலும் பல சமயங்களில் நிகழ்ந்து வருகின்றன. இவை யாவும் மனிதனின் தவறானப் போக்குகளினால் நிகழ்வதாகும். எனவே எத்தகைய துயரச் சம்பவங்களானாலும் சரி; மனிதன் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்ந்து வந்தால் அவற்றால் ஏற்படும் அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே


لِّكَيْلَا تَأْسَوْا۟ عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا۟ بِمَآ ءَاتَىٰكُمْ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍۢ فَخُورٍ.

57:23. இத்தகைய துயரங்களில் சிக்கியவர்கள், சந்தோஷங்கள் தவறிப்போனதே என்று வருத்தப்பட்டு அமர்ந்திருப்பதில் ஒரு பலனும் கிடைக்காது. எஞ்சியுள்ள ஆயுளில் இறைவழிகாட்டுதலின்படி அயராது உழைத்து தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள பாடுபடவேண்டும். அவ்வாறு வசதி வாய்ப்புகளைப் பெற்றபின், அவை தம் உழைப்பின் மூலம் கிடைத்ததால், நமக்கு மட்டுமே சொந்தமானவை என்று பெரு மகிழ்ச்சியில் ஆழ்ந்திராமல் அவற்றை இறைவனின் அறிவுரைப்படி தம் தேவைக்குப் போக மீதமுள்ளதை நலிந்தோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட, பொதுவுடமை ஆக்கவேண்டும். (பார்க்க 4:36) இறைவனின் இவ்வழிகாட்டுதலை கர்வத்துடன் புறக்கணித்து தற்பெருமைக் கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை.


ٱلَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبُخْلِ ۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ.

57:24. எனவே எவர்கள் தாமும் உலோபித்தனம் செய்துகொண்டு, இப்படி சுயநலத்துடன் வாழ்வதே தலைசிறந்தது என்று பிறரையும் வழிகெடுக்கிறார்களோ, அதன் விளைவுகள் அவர்களுக்கே வந்தடையும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழ விரும்புவோர் அவ்வாறே வாழ்ந்து கொள்ளட்டும். அதன் பாதிப்புகள் அவர்களுக்கே அன்றி அல்லாஹ்வுக்கு ஏற்படப் போவதில்லை. அல்லாஹ் இயற்றிய நன்மைக்கு நன்மை, தீமைக்குத் தீமை என்ற சட்டதிட்டங்கள் பாராட்டுக்குரியவையாக உள்ளன.


لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِٱلْبَيِّنَٰتِ وَأَنزَلْنَا مَعَهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلْقِسْطِ ۖ وَأَنزَلْنَا ٱلْحَدِيدَ فِيهِ بَأْسٌۭ شَدِيدٌۭ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلْغَيْبِ ۚ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ عَزِيزٌۭ.

57:25. மேலும் உலகிற்கு வருகைத் தந்த இறைத்தூதர்கள் யாவரும் தெளிவான ஆதாரப்பூர்வமான இறை வேதத்துடன்தான் வந்தார்கள். அவர்கள் அனைவரும் சமூக சமச்சீர்நிலையை நிலைநாட்டினார்கள். மக்கள் அனைவரும் நியாயமான முறையில் நீதியுடனும் வாழவே வழி செய்தார்கள். இதற்காக இறைவனின் ஏற்பாடுகளில் உள்ள இரும்பு போன்ற திடப் பொருட்களை பூமியிலிருந்து எடுத்து, பயன்படுத்திக் கொள்ள வழி செய்தார்கள்.. அதிலிருந்து மக்களுக்குப் பயன்படும் பாத்திரங்கள் போன்றவையும், ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள் ஆயுதங்களையும் தயாரித்துக் கொள்ள வழிகள் பிறந்தன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி இறைத் தூதருக்கு யார் உளமாற உதவி புரிகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்காக அவை பயன்படுகின்றன. எனவே நீங்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீர்களோ, அவ்வாறே விளைவுகளும் ஏற்படும். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் வலிமை மிக்கதாய் இருக்கின்றன.


وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًۭا وَإِبْرَٰهِيمَ وَجَعَلْنَا فِى ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلْكِتَٰبَ ۖ فَمِنْهُم مُّهْتَدٍۢ ۖ وَكَثِيرٌۭ مِّنْهُمْ فَٰسِقُونَ.

57:26. இவ்வாறே நூஹ் நபியும் இப்றாஹீம் நபியும் இறை வழிகாட்டுதலின் படி செயல்பட்டார்கள். அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியர்களுக்கும் நபித்துவமும் இறைவேதமும் அளிக்கப்பட்டன. அவர்களில் சிலர் நேர்வழியினைப் பின்பற்றி சிறப்பாக வாழ்ந்தார்கள். மற்றும் பலர் அவற்றைப் புறக்கணித்து வழிதவறியும் சென்று விட்டார்கள்.


ثُمَّ قَفَّيْنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ٱبْنِ مَرْيَمَ وَءَاتَيْنَٰهُ ٱلْإِنجِيلَ وَجَعَلْنَا فِى قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأْفَةًۭ وَرَحْمَةًۭ وَرَهْبَانِيَّةً ٱبْتَدَعُوهَا مَا كَتَبْنَٰهَا عَلَيْهِمْ إِلَّا ٱبْتِغَآءَ رِضْوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۖ فَـَٔاتَيْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنْهُمْ أَجْرَهُمْ ۖ وَكَثِيرٌۭ مِّنْهُمْ فَٰسِقُونَ.

57:27. இப்படியாக பல இறைத்தூதர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உலகிற்கு தொடர்ந்து வருகைத் தந்தார்கள். அதுபோலவே இஸ்ரவேலர்களுக்கு இறுதி நபியாக மர்யமின் குமாரர் ஈஸா நபியும் வந்தார். அவருக்கு இன்ஜீல் எனும் இறைவேதம் அளிக்கப்பட்டது. அவ்வேதத்தைப் பின்பற்றிய அனைவரின் உள்ளங்களில் இரக்க மனப்பான்மையும் தாராள மனப்பான்மையும் வளர்ந்தன. ஆனால் ஈஸா நபியின் மறைவுக்குப் பின், காலப் போக்கில் அவ்வேதத்தை அவர்கள் புறந்தள்ளி விட்டார்கள். அதன் விளைவாக அவர்களிடையே துறவித்தனம் வளர ஆரம்பித்தது. ஆனால் துறவித்தனத்தை இறைவேதம் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இருந்தும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடியே துறவித்தனத்தை மேற்கொள்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.* ஆனால் அதையும் அவர்களால் பேணி நடக்க முடியவில்லை. அவர்களில் இருந்த சிலர் வேத அறிவுரைகளின் படி செயல்பட்டு வந்தார்கள். அவர்களுடைய உழைப்பை அல்லாஹ் ஒருபோதும் வீணடித்ததில்லை. அவர்களுக்குரிய நற்பலன்கள் கிடைக்கவே வழி செய்தான். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் வழிதவறிச் செல்பவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
அல்லாஹ்வின் அறிவுரைகளைப் பேணி நடக்காமல் அவற்றை புறந்தள்ளிவிட்டால், நீங்களும் இறுதியில் அவர்களைப் போன்றே சன்னியாசிகளாகவும் சூஃபிக்களாகவும் ஷேக்மார்களாகவும் மாற வேண்டிது தான்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَءَامِنُوا۟ بِرَسُولِهِۦ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِن رَّحْمَتِهِۦ وَيَجْعَل لَّكُمْ نُورًۭا تَمْشُونَ بِهِۦ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

57:28. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதனடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சியமைப்பு சட்டங்களையும் பேணி நடந்து கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் பலன்கள் கிடைத்து வரும். இப்படியாக உங்கள் வாழ்க்கை ஒளிமயமானதாக ஆகிவிடும். மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கு சரியான வழிமுறையும், பாதுகாப்பான வாழ்க்கையும் கிடைத்து வரும். அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதியே உள்ளன என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்.


لِّئَلَّا يَعْلَمَ أَهْلُ ٱلْكِتَٰبِ أَلَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍۢ مِّن فَضْلِ ٱللَّهِ ۙ وَأَنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ.

57:29. இவ்வாறு செயல்பட்டு வந்தால் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எல்லா அருட்கொடைகளும் கிடைத்து வரும். தற்சமயம் வேதமுடையவர்கள் அத்தகைய அருட்கொடைகளுக்கு அவர்கள் மட்டுமே உரியவர்கள் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பொய்யாக்கி, யாரெல்லாம் இறைவழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இவை கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காட்ட முடியும். எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகள் என்பது எல்லோருக்கும் பொதுவானவையாகும். யார் அதற்காக உழைக்கிறார்களோ அவர்களுக்கே கிடைக்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம். இப்படியாக அல்லாஹ்வின் கிருபையும் பேரன்பும் அளவற்றதாக உள்ளன.