بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

56:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ.

56:1. வரவிருக்கும் எழுச்சிமிகு காலம் விரைந்து வரும்போது,


لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ.

56:2. அத்தகைய எழுச்சிமிகு காலம் வருவதைப் பற்றி இனி யாரும் மறுக்கவும் முடியாது.


خَافِضَةٌۭ رَّافِعَةٌ.

56:3. இதன் பலனாக மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் மேலோங்கிய நிலைக்கு வருவார்கள். தம்மை பலம் வாய்ந்தவர்கள் என எண்ணிக் கொண்டிருப்பவர்களின் நிலைமை மோசமாகி விடும்.


إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّۭا.

56:4. அதாவது நாட்டில் சுயநலக்கார கூட்டத்தாரின் ஆட்சியில் நசுக்கப்பட்டவர்கள் கொதித்து எழுவார்கள்.


وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّۭا.

56:5. அப்போது உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மலைகளைப் போல் செல்வங்களை குவித்து வைத்திருப்பவர்கள்


فَكَانَتْ هَبَآءًۭ مُّنۢبَثًّۭا.

56:6. ஆகியோரின் நிலைமை தரைமட்டமாகி துகள்களைப் போன்றாகிவிடும்.


وَكُنتُمْ أَزْوَٰجًۭا ثَلَٰثَةًۭ.

56:7. அப்போது நீங்கள் மூன்று பிரிவினர்களாக பிரிந்து விடுவீர்கள்.


فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ.

56:8. அவர்களில் ஒரு பிரிவினர் நற்பண்புகளுடன் சிறந்த செயல்களை செய்யக்கூடிய செயல்வீரர்களாக இருப்பவர்கள். அவர்கள் வாழ்வின் எல்லா வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக இருப்பார்கள். (பார்க்க 56:27-39)


وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ.

56:9. அதை அடுத்து இரண்டாம் பிரிவினர் மிகவும் மோசமான கேடு கெட்டவர்கள். அவர்களுடைய நிலைமை மோசமாகிக் கொண்டே செல்லும் (பார்க்க 56:40-44)


وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ.

56:10. மூன்றாம் பிரிவினர் இறை வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதோடு,அவற்றை சமுதாயத்தில் அரும்பாடுபட்டு நிலைநிறுத்த முன்னிலை வகித்த சான்றோர்கள் ஆவர்.


أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ.

56:11. அவர்கள் இறைவனின் சிறப்பு குணநலங்களை தன்னகத்தே வளர்த்துக் கொண்டவர்கள். எனவே இறைவனின் ஆட்சி அமைப்பிலும் அவர்கள் முன்னிலை வகிப்பர்.


فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ.

56:12. இத்தகையவர்களுடைய வாழ்வு பாக்கியமிக்க சுவனத்திற்கு ஒப்பானதாக வளர்ந்து வரும்.


ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ.

56:13. இப்படியாக ஆரம்பம் முதலே இறைவழிகாட்டுதலை ஏற்று, அதற்காக உழைத்து வந்தவர்களில் பெரும்பாலானவர்களும்


وَقَلِيلٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ.

56:14. ஹிஜ்ரத்துக்குப் பின் இஸ்லாத்தில் வந்து இணைந்து இறைவனின் ஆட்சியமைப்புகாக உழைத்தவர்களில் சிலரும் உயர் பதவிக்கு உரியவர்கள் ஆவார்கள்.
சிந்தனையாளர்களே! குர்ஆனிய கொள்கைக் கோட்பாடுகளை மக்கள் மத்தியில் பரப்பிய காலத்திலும், குர்ஆனிய ஆட்சியமைப்பு உருவான ஆரம்ப காலத்திலும் இஸ்லாமிய செயல்வீரர்கள் பல இன்னல்களையும் துயரங்களையும் எதிர் கொண்டனர். இருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தம் கொள்கையில் நிலைத்திருந்து அயராது உழைத்தார்கள். இத்தகையவர்களே ஆட்சியில் உயர் பதவியை வகிக்க தகுதியானவர்கள் ஆவர். ஏனெனில் அவர்களால் தான் இறைவனின் செயல்திட்டங்களை இந்த பூமியில் செயல்படுத்த முடியும். சமுதாய சமன்பாடு மற்றும் ஒழுக்க மாண்புகளையும் கட்டிக் காப்பார்கள். இதனால் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தனக்குப் பின் யார் ஆட்சியை தலைமை தாங்கவேண்டும் என்பதை சுட்டிக் காட்டவில்லை. அல்லாஹ்வின் சிறப்பு குணநலங்களை வளர்த்துக் கொண்டவர்களில் முன்னிலை வகிப்பவர்களே அதற்கு தகுதியானவர்கள் ஆவர். அத்தகையோரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம்.


عَلَىٰ سُرُرٍۢ مَّوْضُونَةٍۢ.

56:15. இத்தகைய உயர்பதவி வகிப்பவர்கள் பொன்னிழைகளால் அலங்கரிக்கப்பட்ட அரியணையில் மீது அமர்ந்த வண்ணம் -


مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ.

56:16. ஒருவரையொருவர் கலந்தாலோசித்து ஆட்சியமைப்பு அலுவல்களை கவனித்து வருவார்கள்.


يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ.

56:17. அவர்களுடைய அலுவல்களில் உதவி புரிய ஆற்றல்மிக்க இளைஞர்களும் அவர்களைச் சுற்றி பணிபுரிவார்கள்.


بِأَكْوَابٍۢ وَأَبَارِيقَ وَكَأْسٍۢ مِّن مَّعِينٍۢ.

56:18. அங்கு தெளிந்த பானங்கள் நிறைந்த குவளைகளும், அவர்களுக்கு பரிமாற கிண்ணங்களில் கெண்டிகளையும் கொண்டு வலம் வருவார்கள். தேவைப்படும் போது அவற்றை அவர்கள் பருகுவார்கள்.


لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ.

56:19. அந்த பானங்களால் அவர்களுக்கு தலை வலியோ, போதையோ ஏற்படாது. அந்த அளவுக்கு அவை பரிசுத்தமான பானங்களாக இருக்கும். (பார்க்க 37:47)


وَفَٰكِهَةٍۢ مِّمَّا يَتَخَيَّرُونَ.

56:20. மேலும் உண்பதற்கு அவர்கள் விரும்பும் கனிவகைகளும் கிடைக்கும்.


وَلَحْمِ طَيْرٍۢ مِّمَّا يَشْتَهُونَ.

56:21. மேலும் அவர்கள் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் பொறித்துக் கொண்டு வரப்படும்.


وَحُورٌ عِينٌۭ.

56:22. இப்படியாக அந்த இளைஞர்களின் சேவைகளும், பரிமாறும் விதமும், அவர்களுடைய கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவதாக இருக்கும். அத்தகைய பணிபுரிபவர்களுள் பெண்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.


كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ.

56:23. அவர்களும் மறைக்கப்பட்ட வெண்முத்துக்களைப் போன்றும் பவளத்தைப் போன்றும், பிற ஆடவரை ஏரெடுத்தும் பார்க்காத பெண்மணிகளாக இருப்பார்கள். (பார்க்க 55:58)


جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.

56:24. இத்தகைய உயர் பதவியும் சந்தோஷமான வாழ்வும் அவர்களுடைய தொடர் உழைப்புக்குக் கிடைக்கின்ற சுவனத்திற்கு ஒப்பான நிலையாகும்.
இதே நிலை அவர்களுடைய மரணத்திற்குப் பின்பும் தொடரும்.


لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا تَأْثِيمًا.

56:25. அவர்கள் உருவாக்கும் சமுதாயத்தில் வீணான அரட்டை அரங்குகளோ, பாவச் செயலைத் தூண்டும் பிரசுரங்களோ இருக்காது. அத்தகைய சம்பவங்கள் எங்கும் நடப்பதாக அவர்கள் செவியுறவும் மாட்டார்கள்.


إِلَّا قِيلًۭا سَلَٰمًۭا سَلَٰمًۭا.

56:26. அத்தகைய தூய சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அனைவரின் நலனைப் பேணிக்காக்கும் சேவை மனப்பான்மை உள்ளவர்களாகவே இருப்பார்கள்.
இதுவே உயர் பதவிகளை வகிப்பவர்களின் சந்தோஷமான வாழ்வைப் பற்றிய உண்மைகளாகும்.


وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ.

56:27. அதையடுத்து உயர் பண்புகளைக் கொண்ட செயல்வீரர்கள் விஷயத்திற்கு வாருங்கள். (பார்க்க 56:8)


فِى سِدْرٍۢ مَّخْضُودٍۢ.

56:28. அவர்களுடைய வாழ்வும் முள்ளில்லாத பூ மெத்தையில் இருப்பதற்கு சமமானதாக இருக்கும்.


وَطَلْحٍۢ مَّنضُودٍۢ.

56:29. அவர்கள் வாழும் சமுதாயங்களில் குலை குலையாக பழங்களையுடைய மரங்களின் அடியில் இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்குமோ அவ்வளவு சந்தோஷமானதாக இருக்கும்.


وَظِلٍّۢ مَّمْدُودٍۢ.

56:30. மேலும் அங்கு நீண்ட நிழல்களும் குளிர் காற்றுடன் கூடிய இடத்தில் இருப்பது போலிருக்கும்.


وَمَآءٍۢ مَّسْكُوبٍۢ.

56:31. அங்கு வாழ்வாதார வசதிகள் எவ்வித குறைவுமின்றி கிடைக்கும் வகையில்


وَفَٰكِهَةٍۢ كَثِيرَةٍۢ.

56:32. ஏராளமான கனிவகைகளும் கிடைத்து வரும்.


لَّا مَقْطُوعَةٍۢ وَلَا مَمْنُوعَةٍۢ.

56:33. அவற்றைத் தேடி அலைய வேண்டிய அவசியமிருக்காது. உண்ணத் தடையில்லாத கனிகளே விநியோகிக்கப்படும். மேலும் அவை எல்லா பருவக் காலங்களிலும் கிடைக்கும். (பார்க்க 14:25)


وَفُرُشٍۢ مَّرْفُوعَةٍ.

56:34. மேலும் அவர்களும் உன்னதமான விரிப்புகளில் அமர்ந்த வண்ணம் தம் பணிகளைத் தொடர்வர்.


إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءًۭ.

56:35. மேலும் பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி போதனைகளால் அவர்கள் உயர் பண்புள்ளவர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் ஆகிவிடுவார்கள்.


فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا.

56:36. அவர்களுடைய தோற்றமும், நடை, உடை, பாவனை யாவும் ஒரே சீராக இருக்கும்.


عُرُبًا أَتْرَابًۭا.

56:37. அத்தகைய பரிசுத்தமான பெண்கள் இளமைப் பொலிவுடன் இவர்களுடைய வாழ்க்கைத் துணைவிகளாக வருவார்கள். அங்கு கணவன் மனைவியின் வாழ்க்கை நகமும் சதையும் இணைந்திருப்பது போல் ஈருடல் ஓருயிராக இருக்கும்.


لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ.

56:38. இவை தான் நற்பண்புள்ள சான்றோர்களுக்கு கிடைக்கின்ற சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வு.


ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ.

56:39. மேலும் ஆரம்பம் முதலே இறைவழிகாட்டுதலை ஏற்று அதற்காக உழைத்து வந்தவர்களுக்கும்.


وَثُلَّةٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ.

56:40. ஹிஜ்ரத்துக்குப் பின் இஸ்லாத்தில் இணைந்து இறைவனின் ஆட்சியமைப்புகாக உழைத்தவர்களுக்கும் கிடைக்கின்ற உயர்பதவிகளும் சந்தோஷங்களும் ஆகும்.


وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ.

56:41. ஆனால் வழிகெட்டவர்கள் யார்? அவர்களுடைய நிலைமை எப்படியாக இருக்கும்?


فِى سَمُومٍۢ وَحَمِيمٍۢ.

56:42. கொடிய அனல் காற்றிலும் கொதிக்கும் நீரிலும் இருப்பது போன்ற துயரம் மிக்க வாழ்க்கை.


وَظِلٍّۢ مِّن يَحْمُومٍۢ.

56:43. அல்லது அடர்ந்த இருண்ட புகையின் நிழலும் கொண்ட சிறையில் இருப்பார்கள்.


لَّا بَارِدٍۢ وَلَا كَرِيمٍ.

56:44. அங்கு குளிர்ச்சியும் இருக்காது. நலமும் இருக்காது.


إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ.

56:45. காரணம் அவர்கள் இதற்கு முன் மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், தன் வரை சுகம் கிடைத்தால் போதும் என்று சுயநலத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.


وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ.

56:46. அதுமட்டுமின்றி அவர்கள் பிறர் உழைப்பில் சுகம் காணும் பழக்கம் உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு பலமுறை எடுத்துரைத்தும் அவர்கள் குற்றம் புரிந்தவர்களாகவே இருந்தார்கள்.


وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ.

56:47. மேலும் இறைவனின் செயல்திட்டப் படி மனித வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரும் என்று சொன்னால் அதற்கு அவர்கள், “நாம் மரணித்தபின் மண்ணோடு மண்ணாகி விடுகிறோம். எங்களுடைய உடல் எலும்புகூடுகளாக ஆகிவிடுகின்றன. அதன் பின்பும் நாம் எழுப்பப்படுவது நிச்சயமா?” என்று கேட்டவர்கள்.


أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ.

56:48.“அதுமட்டுமினறி எங்களுடைய முன்னோர்களும் தந்தைமார்களும் காலம் சென்று விட்டனர். அவர்களும் எழுப்பப்படுவார்களா? என்றும் கேலியாகப் பேசியவர்கள்
அதாவது தனது வாழ்வின் உயர் நோக்கங்களைப் பற்றியும் வருங்கால நலத் திட்டங்களைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் சுய நலத்துடன் அலட்சியமாக வாழ்பவர்கள் இப்படித் தான் விதண்டாவாதம் செய்வதோடு தீய செயல்களையும் நிறுத்திக் கொள்ளமாட்டார்கள்.


قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْءَاخِرِينَ.

56:49. அதற்கு இறைத்தூதர்கள், “முன்னோர்களும் எழுப்பப்படுவார்கள். இனி இறக்கப் போகிறவர்களும் எழுப்பப்படுவார்கள்” என்று பதில் கூறி வந்தார்கள்.


لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍۢ مَّعْلُومٍۢ.

56:50. மேலும் அவர், “நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தான் இத்தகைய மிதப்பில் இருப்பீர்கள். அதன் பின் உங்களுடைய செயல்களின் விளைவுகளை சந்திக்கும் காலம் வந்தே தீரும். நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு களத்தில் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.


ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ.

56:51. மேலும் இறைத்தூதர், “எதையும் கேட்கத் தயாராக இல்லாத அறிவிலிகளே!”


لَءَاكِلُونَ مِن شَجَرٍۢ مِّن زَقُّومٍۢ.

56:52.“நீங்கள் செய்து வரும் தீய செயல்களுக்குரிய தண்டனையாக, கள்ளி மரத்து கனிகளைப் புசித்தவனைப் போல் உங்களுடைய நிலைமை படுமோசமாகிவிடுமே!”


فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ.

56:53.“ஆகவே அதைக்கொண்டே நீங்கள் உங்கள் வயிறுகளை நிறப்பவேண்டி வருமே!”


فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ.

56:54. அதுமட்டுமின்றி உங்களுக்கு குடிப்பதற்கு கொதி நீர் தான் கொடுக்கப்படுமே!


فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ.

56:55. மேலும் அதையே நாட்கணக்கில் தாகித்தவன் தவித்துக் குடிப்பதைப் போல் குடிக்க வேண்டியிருக்குமே!


هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ.

56:56. இவை தான் அவர்கள் செய்து வந்த தீய செயல்களுக்கு கிடைக்கின்ற நியாயமான தண்டனையாகும்.


نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ.

56:57. அவர்கள் தம் இறைவனின் வல்லமைப் பற்றி சிந்தித்து, அவன் காட்டிய வழியில் செயல்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் என்ன தம்மைத் தாமே படைத்துக் கொண்டார்களா? அவர்களைப் படைத்தது இறைவன் தானே!


أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ.

56:58. கர்ப்பப் பைக்குள் நீங்கள் இந்திரியத் துளியை செலுத்துவதோடு சரி.


ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ.

56:59. அதன்பின் குழந்தை பிறக்கும் வரையில் கர்ப்பப் பைக்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்வது நீங்களா? அல்லது நாமா? நாம் செய்து வைத்துள்ள ஏற்பாட்டைக் கொண்டு தானே குழந்தை பிறக்கிறது? (பார்க்க 22:5)


نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ.

56:60. அதன்பின் நம்முடைய சட்ட விதிமுறைகளின் படி நீங்கள் மரணத்தை சந்தித்துதான் ஆகவேண்டும். அதை உங்களால் தவிர்க்க முடியுமா?
அதுபோலத் தான் மரணத்திற்குப் பின் உங்களை எழுப்புவதும் இறைவனின் செயல்திட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களாகும். நீங்கள் அதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் மீண்டும் எழுப்பப்படுவது சர்வ நிச்சயமே. நீங்கள் இல்லை என்று சொல்லிவிட்டால் அது இல்லை என்று ஆகிவிடுமா?


عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ.

56:61. அல்லாஹ்வின் வல்லமையை மனிதன் சரிவர கணிக்கவே இல்லை. மனிதப் படைப்பை போக்கிவிட்டு இதுவல்லாத வேறு படைப்பை கொண்டு வருவதற்கும் வல்லமை உடையவனே அல்லாஹ். அத்தகைய புதிய படைப்பைப் பற்றிய ஞானம் மனிதனுக்கு சற்றும் இருக்காது.
நீங்கள் இந்திரியத் துளியாக இருந்த நிலையிலிருந்து குழந்தையாக பிறக்க வைக்கவும், அதன்பின் மனிதனாக வளர்க்கச் செய்யவும் ஆற்றல் உடைய அல்லாஹ்வுக்கு உங்களை மீண்டும் படைப்பதற்கு சக்தி இல்லை என்று எண்ணுவது சரியா?


وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ.

56:62. ஆக முதன் முறையாக இறைவன் படைத்ததைப் பற்றி அறிந்திருக்கும் நீங்கள், மீண்டும் படைக்கப் போவதை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் ஏன்? மேலும் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட்டால் சிறந்ததொரு எதிர்காலம் உண்டு என் உறுதியளிக்கப்படும் போது அதை ஏற்க நீங்கள் முன்வந்திருக்க வேண்டுமே!


أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ.

56:63. இதையும் மீறி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பூமியில் நீங்கள் பயிரிடுவதை கவனித்துப் பாருங்கள். பூமியில் விதையை விதைக்கும் வரை தான் உங்கள் பணியாக இருக்கிறது.


ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ.

56:64. அதன்பின் நீங்களா அதை முளைப்பிக்கச் செய்கிறீர்கள்? இறைவன் செய்த ஏற்பாட்டைக் கொண்டுதானே அது முளைத்து செடியாகிறது.


لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًۭا فَظَلْتُمْ تَفَكَّهُونَ.

56:65. நீங்கள் விதைத்ததை கூளமாய் ஆக்கிவிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்? விசனப்பட்டு தான் இருக்க முடியும்.


إِنَّا لَمُغْرَمُونَ.

56:66. மேலும் விளைச்சல் பாதிக்கப்பட்டு விட்டதால், கடனாளிகளாக ஆகிவிட்டோமே என்றுதான் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.


بَلْ نَحْنُ مَحْرُومُونَ.

56:67. மேலும் மகசூல் கிடைக்காமல் போயிற்றே என்ற ஆதங்கமும் இருக்கும்.


أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ.

56:68. அதையடுத்து உங்களின் உயிர் நாடியாக இருக்கும் குடிநீரை எடுத்துக் கொள்ளுங்கள்.


ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ.

56:69. அந்த நீர் வானத்திலிருந்து பொழியும் மழையைக் கொண்டுதானே உங்களுக்கு கிடைக்கிறது? அதுவும் இறைவன் புறத்திலிருந்து செய்யப்பட்ட ஏற்பாடுதானே! மனிதனால் செய்யப்பட்ட ஏற்பாடா?


لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًۭا فَلَوْلَا تَشْكُرُونَ.

56:70. ஒருவேளை அந்த நீர் கசப்புள்ளதாக ஆகிவிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் இதைப்பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா? நீங்கள் ஏன் இறைக்கட்டளைக்கு இணங்கி நன்றி விசுவாசத்துடன் நடப்பதில்லை?


أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ.

56:71. அதையடுத்து நீங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பலகாரங்களை ருசிமிக்கதாய் ஆக்கும் நெருப்பை பற்றி எப்போதாவது சிந்தித்துப் பார்த்துண்டா?


ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ.

56:72. நெருப்புக்கு அடிப்படையாக விளங்கும் விறகு எங்கிருந்து கிடைக்கிறது? பெரிய பெரிய மரங்களை வெட்டித்தானே அதை எடுக்கிறீர்கள். அந்த மரங்களை நீங்கள் உண்டாக்குகிறீர்களா அல்லது அவை இறைவனின் ஏற்பாடுகளா?


نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةًۭ وَمَتَٰعًۭا لِّلْمُقْوِينَ.

56:73. இவற்றைப் பற்றியெல்லாம் எடுத்துரைப்பதன் நோக்கமே நீங்கள் சிந்தித்துணர்ந்து இறைவழிகாட்டுதலின்படி நியாயமான முறையில் செயலாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். அப்போது தான் உங்களுடைய வாழ்க்கைப் படகு சுமூகமாக பயணிக்கும்.


فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ.

56:74. அதற்காக சமுதாய மக்கள் அனைவரும் நல்லொழுக்கத்துடன் சிறந்த செயல்களை செய்யக் கூடியவர்களாக இருத்தல் மிகமிக அவசியம். எனவே உங்களுடைய இறைவன் காட்டிய வழியில் அயராது உழைத்து அவனுடைய பரிபாலன அமைப்பை செயல்படுத்தி சிறப்பிக்க செயல்படுங்கள்.
அதாவது மேற்சொன்ன நீர், நெருப்பு, காற்று, வானம், பூமி ஆகியவை உங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றின் துணையைக் கொண்டுதான் உங்கள் வாழ்வின் அடிப்படை தேவைகளாகிய உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் வசிக்க இடம் என்று எல்லாமே கிடைக்கின்றன. அவை அல்லாஹ்வின் தனிச்சிறப்பு குணநலங்களின் ஒன்றான “ரப்பு” என்ற வல்லமையை பிரதிபலிக்கிறது. அவற்றை சரியாகப் பயன்படுத்தி சமுதாயத்தை சிறப்பாக்கிக் கொள்வது மனித பொறுப்பில் விடப்பட்டுள்ளது. அதற்கு இறைவழிகாட்டுதல் ஊன்றுகோலாக இருக்கிறது. இதை விட்டுவிட்டால் மனிதன் சுயநலத்துடன் வாழ ஆரம்பித்து விடுவான். தன் உழைப்பின் மூலம் கிடைத்தவை தனக்கு மட்டும்தான் சொந்தம் என நினைப்பான். அவனுடைய உழைப்புக்குரிய உபக்கரணங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதை யோசிக்கவே மாட்டான். எனவே அவன் நட்சித்திரம், நேரம், காலம் என்றுதான் பேசி வருவான்.


۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ.

56:75. ஆனால் நட்சத்திரங்களின் உண்மை நிலை என்ன? அவை எதற்கு ஆதாரமாக விளங்குகிறது? அல்லாஹ்வின் மாபெரும் படைப்புகளின் வல்லமையை பிரதிபலிக்கின்றன. அதைத் தான் இறைத்தூதரும் ஆதாரமாக விளக்குகிறார்.


وَإِنَّهُۥ لَقَسَمٌۭ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ.

56:76. அதைப் பற்றிய உண்மைகளை வானுலக ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவற்றின் ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு மகத்தான உலோகங்களை தன்னகத்தே கொண்டுள்ளன என்ற உண்மையை அவர்கள் விளக்குவார்கள்.


إِنَّهُۥ لَقُرْءَانٌۭ كَرِيمٌۭ.

56:77. அவற்றைப் பற்றிதான் கண்ணியமிக்க இந்த குர்ஆனும் ஆதாரமாக எடுத்துரைக்கிறது.


فِى كِتَٰبٍۢ مَّكْنُونٍۢ.

56:78. நட்சத்திரங்கள் எவ்வாறு அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி கட்டுக்கோப்பாக செயல்படுகின்றதோ, அதே போல் மனிதனும் அவனுடைய அறிவுரைகளுக்கு உட்பட்டு வாழவேண்டும் என்பதற்காக இந்த வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.
அவை யாவும் அல்லாஹ்வின் நிலைமாறா கட்டளைக்கு இணங்கி செயல்படுவதால், அங்கு எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அவை மிக அழகாக செயல்படுகின்றன. அதே போல மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நிலைமாறா சட்டங்களையும் அல்லாஹ் இவ்வேதத்தின் மூலம் அறிவித்துள்ளான். எனவே


لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ.

56:79. இவ்வேதத்தை பரிசுத்தமான எண்ணங்களைக் கொண்டுதான் அணுக வேண்டும்.
ஏற்கனவே உள்ள கலாச்சார வழிபாடுகளையும், பழக்க வழக்கங்களையும் வைத்துக் கொண்டு இதை அணுகினால் இதிலிருந்து சிறந்த வழிகாட்டுதல் கிடைக்காது. இதிலுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் ஒட்டுமொத்த குர்ஆனின் நிலைபாடு என்னவென்பதையே கவனிக்க வேண்டும். சில வாசங்களை வைத்துக் கொண்டு, தாம் கடைப்பிடித்து வருவதையே குர்ஆனும் கூறுகிறது என்று சொல்லிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இருக்காது. எடுத்துக்காட்டாக ஜகாத் கொடுக்க குர்ஆனில் ஆங்காங்கே வலியுறுத்துகிறது. இரண்டரை விழுக்காடு கொடுத்து வருவது பழக்கமாக இருந்து வருகிறது. அதையே குர்ஆனும் சொல்கிறது என்றால் சரியாகுமா? எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டும் (2:219) யாருக்கு கொடுக்க வேண்டும் (2:220, 2:271-273) எதற்காக கொடுக்க வேண்டும் (2:270) அதனால் ஏற்படுகின்ற பலன்கள் என்ன? இதுபோன்ற வாசகங்கள் அனைத்தையும் வைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
மேலும் இந்த குர்ஆனைத் தொடுபவர்கள், உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் சுத்தமாக இருத்தலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில்


تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ.

56:80. இந்தக் குர்ஆன் அகிலத்தார் அனைவரையும் பரிபாலிக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்படுவதாகும். இதன் நோக்கமே மனித வாழ்வின் உயர்வும் மேம்பாடும் ஆகும்.


أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ.

56:81. உண்மை இவ்வாறிருந்தும் அதில் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கை நெறிமுறைகளைப் பற்றி அலட்சியமாக இருக்கிறீர்களே!


وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ.

56:82. இந்த வாழ்க்கை நெறிமுறைகள் சரியில்லை எனக் சொல்லி, நீங்களே உருவாக்கி வைத்துள்ள வழிமுறைகளை இறைவன் சொன்னதாக கூறுகிறீர்களா? அல்லாஹ் சொல்லாததை எல்லாம் மக்களிடம் பரப்புவதையே தன் பிழைப்பாக ஆக்கிக் கொள்கிறீர்களா? எவ்வளவு பெரிய அநியாயம் இது?
உங்களிடையே உள்ள சுயநலப் போக்கும் ஆணவமும் தான் உங்களை இப்படி செயல்பட வைக்கின்றன. நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சும் உங்கள் வாழ்வை முடித்து வருகிறது என்பதை கவனிக்கக் கூடாதா? இறுதியாக


فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ.

56:83. மரணத் தருவாயில் உங்கள் மூச்சு தொண்டையை அடைத்துக் கொள்ளுமே!.


وَأَنتُمْ حِينَئِذٍۢ تَنظُرُونَ.

56:84. அதை மற்றவர்களால் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடியும். வேறு ஏதாவது செய்ய முடியுமா?


وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ.

56:85. அப்போது இறைவன் நிர்ணயித்த “மரணம்” என்ற விதிமுறை தான் அவனுக்கு நெருக்கமாகும். ஆனால் அதை மற்றவர்களால் பார்க்க முடிவதில்லை.


فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ.

56:86. அவன் இறந்த பின் அவனால் எதுவும் செய்ய இயலாது. அவன் உலகில் செய்து வந்தவையே அவனுடைய அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும்.இப்படியொரு சட்டத்தை நாம் ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் -
எவ்வாறு மரணத் தருவாயில் இருப்பவனுக்குத் தான் அதன் கஷ்டம் என்னவென்று தெரியுமோ, அவ்வாறே வினையைச் செய்தவன் அதன் விளைவை அறுவடை செய்து கொள்வதை அவனால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். அதைப் பற்றிய முன்னறிவிப்பை, அத்தகைய விதிமுறைகளை உருவாக்கிய அல்லாஹ் மட்டுமே எடுத்துரைக்க முடியும். அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், சுட்டால்தான் தெரியும் கொசவனுக்கு, செத்தால் தான் தெரியும் சுடுகாடு என்று தான் சொல்ல முடியும். அதாவது உலகில் செய்கின்ற நற்செயல்களோ தீய செயல்களோ அதன் பலன்களையும் விளைவுகளையும் அவன்தான் அனுபவிக்க வேண்டும். ஒருவர் பாவத்தை செய்ய மற்றவனுக்குத் தண்டனைக் கிடைப்பது என்பது ஒருபோதும் நடக்காது.


تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

56:87. அத்தகைய சட்டத்தை அல்லாஹ் ஏற்படுத்தவே இல்லை என்று நீங்கள் சொன்னால், தீயவர்களுக்கு கிடைக்கும் தண்டனையிலிருந்து நீங்கள் மீட்டிக் காட்டுங்கள். அது உங்களால் முடியுமா?


فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ.

56:88. இவ்வுலக வாழ்விலும் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்விலும் கிடைக்கின்ற வேதனை மிக்க தண்டனையிலிருந்து மீள ஒரே ஒரு வழிதான் உண்டு. அதற்கு அவர் இறைவழிகாட்டுதலோடு ஒன்றி வாழ்ந்திருக்க வேண்டும்.


فَرَوْحٌۭ وَرَيْحَانٌۭ وَجَنَّتُ نَعِيمٍۢ.

56:89. அப்போது தான் அவருக்கு நல்ல உணவும் பாக்கியமிக்க சுவனமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் கிடைக்கும்.


وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ.

56:90. இத்தகைய சுவனத்து சோலையில் வாழும் சான்றோர்கள், உயர் பண்புகளுடைய செயல்வீரர்களிடம் (பார்க்க 56:27) தோழமை உணர்வுடன் செயல்படுவார்கள்.


فَسَلَٰمٌۭ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ.

56:91. மேலும் அவர்களுடைய நலனைப் பேணிக் காத்து, அவர்களுக்கும் சாந்தியும் மனநிறைவும் கொண்ட வாழக்கை கிடைக்கும்படி செய்வார்கள்.


وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ.

56:92. ஆனால் வழிகெட்டுப் போனவர்கள் மீது அவர்கள் எந்த இரக்கமும் காட்ட மாட்டார்கள்.


فَنُزُلٌۭ مِّنْ حَمِيمٍۢ.

56:93. அவர்களுக்கு சிறைவாசமும் கொதி நீரும் தான் கிடைக்கும்.


وَتَصْلِيَةُ جَحِيمٍ.

56:94. இப்படியாக அவர்கள் வேதனை மிக்க வாழ்வில் தள்ளப்படுவார்கள்.


إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ.

56:95. நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும். இப்படித் தான் நடக்கும்.


فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ.

56:96. எனவே இறைவழிகாட்டுதலின் படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! உம்முடைய இறைவன் காட்டிய வழியில் அவனுடைய மகத்தான பரிபாலன அமைப்பு சிறப்பாக செயல்பட அயராது உழைத்து வருவீராக.