بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

55:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


ٱلرَّحْمَٰنُ.

55:1. யாதொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காத அருட்கொடையாளனாக இருக்கும் ஏக இறைவனிடமிருந்து வரும் வழிகாட்டுதல் இது.


عَلَّمَ ٱلْقُرْءَانَ.

55:2. மனிதனுக்கு வேண்டிய வாழ்வாதாரம் மற்றும் ஒழுக்க மாண்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இந்த குர்ஆன் மூலம் கற்றுத் தரப்படுகின்றன.


خَلَقَ ٱلْإِنسَٰنَ.

55:3. மனிதனை படைத்த ஏக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்படும் வழிகாட்டுதல் இது.


عَلَّمَهُ ٱلْبَيَانَ.

55:4. மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகள் அனைத்தையும் மிகத் தெளிவான முறையில் எடுத்துரைக்கும் வேதமிது.


ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍۢ.

55:5. மேலும் சூரியனையும் சந்திரனையும் தத்தம் வட்டரையில் மிகச் சரியாக கணக்கிட்டு சுற்றிவரச் செய்த இறைவனின் வழிகாட்டுதலாகும்.


وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ.

55:6. கிளைகள் இல்லாத செடிகொடிகளும், கிளைகள் அடங்கிய மரங்களும், யாருடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்றனவோ, அந்த ஏக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்படும் வேதமிது.


وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ.

55:7. வானத்தை விதானமாகவும் அதிலுள்ள ஒவ்வொன்றையும் சரியான அளவுகோலுடன் சமச்சீர்நிலையில் இயக்கி வைத்த இறைவனிடமிருந்து இறக்கி அருளப்படும் வேதமிது.
அதாவது உலகப் படைப்புகளையும் (Creations) உலகைச் சுற்றியுள்ள தட்பவெப்ப நிலை மற்றும் பல்வேறு சக்திகளையும் (atmospheric or cosmic balance) ஆராய்ந்து பாருங்கள். அவை எல்லாம் தத்தம் வட்டரைக்குள் சரியான அளவுகோலின் படி (equilibrium - மில்) செயல்பட்டு வருகின்றன.


أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ.

55:8. இறைவனின் படைப்புகளில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சிறப்பாக செயல்படுவது போலவே, மனித உலகிலும் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லாத சமச்சீரான சமுதாயத்தை உருவாக்கிட இந்த வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது.


وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ.

55:9. மனித சமுதாயமே! நீ உன் சமுதாயத்தில் பொருளாதாரம் மற்றும் சமூக சமன்பாட்டை(Socio-economic Balance) ஏற்படுத்து.. அதில் ஒருபோதும் ஏற்றத்தாழ்வோ அநீதியோ ஏற்படாதவாறு சமுதாயத்தை கட்டிக் காப்பாற்று.


وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ.

55:10. இந்த பூமியில் விளையும் உணவு வகைகள் யாவும் அனைத்து உயிரினங்களுக்காகவுமே ஆகும். எனவே அவற்றை அனைவருக்கும் கிடைக்கும்படி பொது உடமை ஆக்கு.


فِيهَا فَٰكِهَةٌۭ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ.

55:11. அந்த உணவு வகைகளில் ருசி மிக்க கனி வகைகளும், பாளையுடைய பேரீத்த மரங்களும் அடங்கும்.


وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ.

55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், நறுமணம் மிக்க செடிகளும் அவற்றில் அடங்கும்.
எனவே இறைவழிகாட்டுதலின் படி சமச்சீரான சமூக அமைப்பை ஏற்படுத்தவில்லை என்றால், மக்களுள் சுயநலப் போக்கு வளர்ந்து, வாழ்வாதாரங்களையும் செல்வங்களையும் இயன்றவரையில் குவிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். இதனால் சமூக சமன்பாடு சீர்குலைந்து நலிந்த மக்கள் அவதிக்குள்ளாவார்கள். எனவேதான் இறைவனின் வழிகாட்டுதலை மக்களுக்கு கற்றுக் கொடுத்து அதன்படி சிறப்பாக வாழ இந்த குர்ஆன் வலியுறுத்துகிறது. உலகில் மனிதன் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே எண்ணற்ற அருட்கொடைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:13. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பித்து அவனுடைய கட்டளைக்கு இணங்காமல் செயல்பட எண்ணுகிறீர்கள்?


خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍۢ كَٱلْفَخَّارِ.

55:14. இறைவனின் மாபெரும் செயல்திட்டத்தின் படியே மனித படைப்பின் ஆரம்பம் ஓசைத் தரும் களி மண்ணின் சத்திலிருந்து உருவானது.


وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍۢ مِّن نَّارٍۢ.

55:15. மனித படைப்புக்கு முன்பு பூமியில் ஜின் இனமாகிய ஆதிவாசிகள், இந்த பூமி கொடிய வெப்பமாக இருந்த போது படைக்கப்பட்டார்கள். (பார்க்க 15:26-27)


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:16. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் எல்லையற்ற வல்லமைகளில் எவற்றை உங்களால் மறுக்க முடியும்?


رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ.

55:17. இறைவனின் பரிபாலன அமைப்பின்படி, சூரியன் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய இரு திசைகளில் உதித்து, தென்மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய இரு திசைகளில் மறைகிறது.
இதனால் தட்பவெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு நான்கு பருவக் காலங்கள் உருவாகின்றன. அதைக் கொண்டு பல்வேறு கனிவகைகளும் பழங்களும் தானிய வகைகளும் பூமியில் விளைகின்றன. (பார்க்க 41:10)


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:18. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இந்த மாபெரும் ஏற்பாடுகள் இல்லை என உங்களால் மறுக்க முடியுமா?


مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ.

55:19. பூமியைச் சுற்றியுள்ள கடல்களைப் பாருங்கள். அவை ஒன்றோடு ஒன்று கலந்தாற் போல் உள்ளன.


بَيْنَهُمَا بَرْزَخٌۭ لَّا يَبْغِيَانِ.

55:20. ஆயினும் அவற்றிற்கிடையே திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் ஒரு கடலில் உள்ள தண்ணீர் இன்னொரு கடலிலுள்ள தண்ணீருடன் கலப்பதில்லை. (பார்க்க 25:53, 35:12)
எனவே அவை சிறப்பாகவும் எந்த பிரச்னையுமின்றி உலகைக் கட்டிக் காத்து வருகின்றன. ஆனால் மனிதனின் நிலை அவ்வாறு இல்லை. அவனுடைய பேராசை மற்றவரின் செல்வங்களும் தம்முடன் இணைந்து விட வேண்டும் என்றே நாடுகிறது. இதைச் சரி செய்யத்தான் இந்தக் குர்ஆன் வலியுறுத்துகிறது.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:21. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய ஏற்பாடுகள் இல்லை என்று நிரூபிக்க முடியுமா?


يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ.

55:22. அவ்விரு கடல்களிலிருந்தும் முத்துக்களையும் பவளங்களையும் எடுக்கிறீர்கள்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:23. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் எந்தெந்த அருட்கொடைகளைப் பொய்ப்பிப்பீர்கள்?


وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَٰمِ.

55:24. அன்றியும் மலைகளைப் போல் உள்ள பெரிய பெரிய கப்பல்கள், அவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படி தண்ணீரில் மிதந்து வேகமாக நீந்தி செல்கின்றன.
ஆக இவற்றை மனிதன் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வதில் இறைவன் புறத்திலிருந்து எந்த தடையுமில்லை. எனவே


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:25. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவன் ஏற்பாடு செய்துள்ள கப்பல்கள் எதுவும் வேண்டாம் என்கிறீர்களா?


كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍۢ.

55:26. மேலும் பூமியில் உள்ள படைப்புகள் அனைத்திலும் மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேவரும். அவற்றில் எதுவும் இவ்வுலகில் நிலையாக இருந்து செயல்படாது.
உதாரணத்திற்கு வானொலியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் அதை எல்லோரும் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போது அதை பயன்படுத்துவதில்லை. ஆனால் அது தொலைக் காட்சிப் பெட்டிக்குள் இடம் மாறிச் சென்று விட்டது. அது போலவே தொலைப் பேசி, கை பேசி புகை வண்டி, வாகனங்கள், ஆகாய விமானம் என எல்லாமே கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறி மாறி வரும். எதுவுமே நிலையாக தங்காது


وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ.

55:27. ஆனால் இந்த மாற்றங்களால் இறைவனின் சட்டதிட்டங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. ஏனெனில் அவன் இயற்றிய சட்டங்கள் கண்ணியத்திற்கும் பெருமைக்கும் உரியவையாகவும், நிலையானதாகவும் உள்ளன.
உதாரணத்திற்கு பழைய காலத்தில் ஆபாசங்கள் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் நடந்து வந்தன. இப்போது திரையரங்குகளிலும், தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் நடைபெறுகின்றன. ஆனால் அவை எங்கு எப்படி நடந்தாலும் இறைவனின் சட்டப்படி மானக்கேடான செயல்கள்தான். அதன் பாதிப்புகள் மிகவும் மோசமாகத் தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் வராது.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:28. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய நிலையான வரையறைகள் எதுவும் இல்லை என்று சொல்லப் போகிறீர்களா?


يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍۢ.

55:29. அகிலத்திலும் பூமியிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளும், மனித இனமும் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இறைவனின் பரிபால அமைப்பை சார்ந்தே இருக்கின்றன. மாறி வரும் காலத்திற்கு ஏற்ற வகையில், தேவையான அளவு வாழ்வாதார வசதிகள் கிடைக்கும்படி இறைவன் புறத்திலிருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (மேலும் பார்க்க 35:15, 14:34)
எடுத்துக்காட்டாக முப்பது வருடங்களுக்கு முன்பு உலகின் ஜனத் தொகை இருநூறு கோடியாக இருந்தது. அப்போதும் அவர்களுடைய தேவைகள் நிறைவேறி வந்தன. இப்போது அதுவே ஏழுநூறு கோடியாக அதிகரித்தும் அவர்களுடைய தேவைகள் நிறைவேறித் தான் வருகின்றன. ஒரு கட்டத்தில் அது ஏழாயிரம் கோடியாக இருந்தாலும் அதற்கேற்ற வகையில் தேவைகள் நிறைவேறி வரும்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:30. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய மாபெரும் அருட்கொடைகள் எதுவுமில்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?


سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ.

55:31. உலகில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் செயல்களின் கணக்கு வழக்குகள் ஏக இறைவனிடம் உள்ளது.
எனவே அவரவர் செயல்களுக்கேற்ப விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த பிரபஞ்சப் படைப்புகள் செயல்பட்டு வருகின்றன. (45:22)


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:32. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்று கூறி எப்படி உங்களால் தப்பித்துச் செல்ல முடியும்? காரணம்


يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَٰنٍۢ.

55:33. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற சமுதாயத்தை சேர்ந்தவர்களே! “மனித செயல்களின் விளைவுகள்” என்ற சட்டம் அகிலங்கள் மற்றும் பூமி ஆகிய அனைத்திலும் செயல்பட்டு வருகின்றன. அந்த விளைவுகளிலிருந்து தப்பிக்க எண்ணினால், நீங்கள் அகிலத்தைக் கடந்து செல்லவேண்டி இருக்கும். உங்களுக்கு அதற்குரிய சக்தி இருந்தால் அவற்றைக் கடந்து சென்றுவிடுங்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த சட்டத்திலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது.
இந்த வாசகத்தை விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது, வானத்தை கடந்து செல்லும் தகுதி மனிதனுக்கு உண்டு என்று தெரிகிறது. காரணம், “வானங்களைக் கடந்து செல்லும் திறமை மனிதனுக்கு இருந்தால்” என்று சொல்லப்படுவது, மனித ஆற்றல்கள் வளரும் போது, அவனால் செல்ல முடியும் என்பதை குர்ஆன் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. அப்படியே கடந்து செல்வதாக இருந்தாலும், இறைவனின் படைப்புகளைப் பயன்படுத்தியே அவனால் கடந்து செல்ல முடியும். நவீன விஞ்ஞான வளர்ச்சியே இதற்கு ஆதாராம். அப்படியும் கடந்து சென்றாலும் உலகப் படைப்புகளைப் பற்றிய உண்மைகளை மட்டுமே அவனால் அறிந்து கொள்ள முடியும்.
மற்றபடி மனித வாழ்விற்கான வழிகாட்டுதலை அவனால் அங்கிருந்து பெறவே முடியாது. அந்த உண்மைகளை திருக்குர்ஆன் மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இதை விட்டு விட்டு தம்மாலும் வானத்தைக் கடந்து இறை வழிகாட்டுதலைப் பெற முடியும் என்று சொல்லிக் கொள்வதில் உண்மை எதுவும் இல்லை. மேலும் சிலர் தேவலோக உண்மைகள் என்று கற்பனை கதைகளை சொல்லிக்கொளவார்கள்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:34. நகர்பும் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவன் ஏற்படுத்தியுள்ள உறுதிவாய்ந்த இந்த சட்டத்தை உங்களால் பொய்ப்பித்து இறைச் செய்திகளை கொண்டுவர முடியுமா?


يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌۭ مِّن نَّارٍۢ وَنُحَاسٌۭ فَلَا تَنتَصِرَانِ.

55:35. இறைவனின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படும்போது, உங்களுக்கு நேரவிருக்கும் அழிவின் ஜுவாலைகள் புகை மண்டலங்களைப் போல் சூழ்ந்து கொள்ளுமே! அவ்வேதனைகளிலிருந்து தப்பிக்க உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்களே!


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:36 நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வேதனைகள் யாவும் பொய் என கூறி உங்களால் தப்பித்துச் செல்ல முடியுமா?


فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةًۭ كَٱلدِّهَانِ.

55:37. உங்களுடைய அழிவின் போது, நெருப்பின் ஜுவாலைகள் வானமே பிளந்துவிடுவது போல் இருக்கும். அவை பூமியில் விழும்போது, உருக்கிய செம்புவின் பிழம்புகளைப் போல் உங்கள் உடலை சுட்டெரிக்குமே!
நவீன காலத்து யுத்தங்களையே இந்த வாசகம் உறுதிப்படுத்துவதாக உள்ளது.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:38. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் நியதிப்படி இப்படிப்பட்ட அழிவுகள் வரும்போது அவற்றிலிருந்து தப்பிக்க முடியுமா?
அப்படியே தப்பித்தாலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில் என்ன செய்வீர்கள்?


فَيَوْمَئِذٍۢ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌۭ وَلَا جَآنٌّۭ.

55:39. அப்பொழுது அவர்களுடைய பாவச் செயல்களைப் பற்றிய கேள்வி கணக்கை நகர் புறத்தவனிடமோ நாட்டுப் புறத்தவனிடமோ கேட்கவேண்டிய அவசியமிருக்காது. காரணம் அவரவர் செயல்களின் பதிவேடுகள் அவர்களுடைய கழுத்திலேயே தொங்கப்பட்டு இருக்கும். (பார்க்க 17:13)


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:40. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவன் செய்துள்ள இந்த ஏற்பாடுகள் இல்லையெனக் கூறி அலட்சியமாக இருக்கப் போகிறீர்களா? காரணம்


يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ.

55:41. குற்றவாளிகளின் நிலையை அவர்களுடைய முகங்களே காட்டிக் கொடுத்துவிடுமே! அப்போது அவர்களுடைய தலை முடிகளைப் பிடித்து, கால்களில் விலங்கிட்டு இழுத்துச் செல்வார்களே!


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:42. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தைகைய தண்டனைகள் எதுவுமில்லை என்ற தைரியத்தில் நிரந்தரமாக இருக்க முடியுமா?


هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ.

55:43. அவர்களிடம், இதுதான் நரகம் என்றும், இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வந்த குற்றவாளிகளுக்காகவே அவை தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் சொல்லப்படுமே!


يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍۢ.

55:44. அவர்கள் இரு தலைக் கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல நரக நெருப்பிற்கும், கொதிக்கும் நீருக்கும் இடையே சுற்றிக் கொண்டிருப்பார்களே!


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:45. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய கடுமையான தண்டனையைப் பற்றி பயப்படமாட்டீர்களா? அவையெல்லாம் பொய்யென்பீர்களா?


وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ.

55:46. இறைவன் நிர்ணயித்த மனித செயல்களுக்கேற்ற விளைவுகள் என்ற சட்டத்திற்கு அஞ்சி, நற்செயல்களை செய்தோர் இவ்வுலகிலும் மரணத்திற்குப் பின் தொடரும் வாழ்விலும் சுவனத்து சோலையில் இருப்பார்கள்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:47. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய சுவனச் சோலைகள் எல்லாம் இல்லை என மறுத்து அவற்றை இழக்கப் போகிறீர்களா?


ذَوَاتَآ أَفْنَانٍۢ.

55:48. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் பல விதமான வாழ்வாதார வசதிகளும் தாரளமாக கிடைக்குமே.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:49. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய அருட்கொடைகள் எதுவும் வேண்டாம் என்று கூறுகிறீர்களா?


فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ.

55:50. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் நீரருவிகள் ஓடிக்கொண்டே இருப்பது போல் வாழ்வாதார வசதிகளில் எந்த குறைவும் ஏற்படாது.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:51. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதால் இத்தகைய வசதிகள் எதுவும் கிடைக்காது என்று கூறுகிறீர்களா?


فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٍۢ زَوْجَانِ.

55:52. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் கிடைக்கின்ற எல்லா கனிவகைகளிலும் ஜோடி ஜோடியாக இருக்கின்றன.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:53. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இந்த ஏற்பாட்டினைப் பற்றி ஆராயாமல் அவற்றை கண்மூடித்தனமாக பொய்யென கூறுகின்றீர்களா?


مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍۢ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍۢ.

55:54. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் பட்டாலான ஆடைகளை அணிந்து சாய்வு நாற்காலிகளில் அமர்ந்த வண்ணம் தம் பணிகளைத் தொடர்வார்கள். அவர்கள் விரும்பும் பழவகைகள் கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:55. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய அருட்கொடைகளைப் பெற நீங்கள் விரும்ப மாட்டீர்களா?


فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌۭ قَبْلَهُمْ وَلَا جَآنٌّۭ.

55:56. அவ்விரு சுவனத்து சோலைகளில் இருக்கும் அலுவலகங்களில் பெண்களும் பணி புரிவார்கள். அவர்கள் பரிசுத்த எண்ணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் நகர்புறத்தவனோ நாட்டுப்புறத்தவனோ ஒருபோதும் முறைதவறி நடக்கவே மாட்டான். இத்தகைய பரிசுத்தமான சமூக அமைப்பு உருவாகும்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:57. நகர்புறம மற்றும் நாட்டுப்புற மக்களே! இத்தகைய சமூக அமைப்பு இவ்வுலகிலும் மறு உலகிலும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்களா?


كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ.

55:58. அப்பெண்மணிகள் பத்திரைமாற்று தங்கம் போன்றும், பவளத்தைப் போன்றும் பிற ஆடவர்களை கெட்ட எண்ணத்துடன் ஏரெடுத்தும் பார்க்காத பரிசுத்தமானவர்களாக இருப்பார்கள். (மேலும் பார்க்க 37:48, 38:52, 55:72)


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:59. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இத்தகைய சமூக அமைப்பு இவ்வுலகிலும் மறு உலகிலும் உருவாக வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்களா?


هَلْ جَزَآءُ ٱلْإِحْسَٰنِ إِلَّا ٱلْإِحْسَٰنُ.

55:60. இறைவழிகாட்டுதலின் படி ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களை செய்யும் சமுதாயங்களில் தான் இத்தகைய சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். இதைத் தவிர வேறு எந்த வழிமுறைகளாலும் இத்தகைய சுமூகமான சூழ்நிலையை ஒருபோதும் உருவாக்கவே முடியாது.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:61. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இந்த சவாலை ஏற்று அவனுடைய வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்பட்டு இத்தகைய சமுதாயத்தை உருவாக்கிக் காட்ட முடியுமா?
இத்தகைய சமூக அமைப்பு இவ்வுலகில் மட்டும் கிடைக்கும். மரணத்திற்குப் பின் கிடைக்காது என்றோ மரணத்திற்குப் பின்பு தான் கிடைக்கும் இங்கு கிடைக்க வாய்ப்பில்லை என்றோ நினைப்பது தவறாகும். காரணம்.


وَمِن دُونِهِمَا جَنَّتَانِ.

55:62. இத்தகைய சுவனத்து சோலைகள் இவ்வுலகிலும் மறுஉலகிலும் கிடைக்கும். இது உறுதி.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:63. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய ஏற்பாடுகளை பொய்யென்று கூறுகிறீர்களா?


مُدْهَآمَّتَانِ.

55:64. அவ்விரு சுவனத்து சோலைகளும் பசுமை நிறைந்ததாய் காணப்படும்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:65. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இருக்காது என்று கூறுகிறீர்களா?


فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ.

55:66. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் நீரூற்றுகள் பொங்கிக் கொண்டே இருக்கும்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:67. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய ஏற்பாடுகளை பொய்யென்று கூறுகிறீர்களா?


فِيهِمَا فَٰكِهَةٌۭ وَنَخْلٌۭ وَرُمَّانٌۭ.

55:68. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் பல்வேறு கனிவகைகளும், பேரிச்சையும், மாதுளையும் கிடைக்கும்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:69. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய ஏற்பாடுகளை பொய்யென்று கூறுகிறீர்களா?
உலகில் பொழியும் மழை நீரை தக்க முறையில் தேக்க வைத்து, நதி நீரை சமமான முறையில் பங்கிட்டு வந்தால் மட்டுமே மேற்சொன்ன நீரூற்றுகளும் பசுமை நிறைந்த சோலைகளும் உருவாகும். இதற்கு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் உழைப்பும் அவசியம். அப்போது பிரச்சனையற்ற சமுதாயம் உருவெடுக்கும் போது, அங்கு சந்தோஷங்கள் நிறைந்து இருக்கும். அங்கு பிறக்கும் குழந்தைகளும் அழகாக இருக்கும். எனவே


فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌۭ.

55:70. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் அழகானவர்களும் நற்குணமுள்ளவர்களும் இருப்பார்கள்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:71. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வழிகாட்டுதலின் படி இத்தகைய ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகாது என்று கூறுகிறீர்களா?


حُورٌۭ مَّقْصُورَٰتٌۭ فِى ٱلْخِيَامِ.

55:72. அங்கு வாழும் பெண்கள் அழகானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அழகிய பண்புள்ளவர்களாகவும் இருப்பார்கள்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:73. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வழிகாட்டுதலின்படி இத்தகைய ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாவது பொய்யென்று கூறுகிறீர்களா?


لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌۭ قَبْلَهُمْ وَلَا جَآنٌّۭ.

55:74. எனவே அங்குள்ள பெண்களை நகர்புறத்தாரோ நாட்டுபறத்தாரோ தகாத முறையில் தீண்டுவதற்கு வாய்ப்பே இராது.
அதாவது உண்மையான குர்ஆனிய சமூக அமைப்பில் சமுதாய நலப் பணிகளில் பெண்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள் (பார்க்க 33:35) ஆனால் தகாக உறவு எதுவும் இராது.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:75 நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வழிகாட்டுதலின்படி இத்தகைய ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகாது என்று கூறுகிறீர்களா?


مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍۢ وَعَبْقَرِىٍّ حِسَانٍۢ.

55:76. மேலும் அவர்கள் பசுமையான இரத்தனங்கள் பதித்த கம்பளங்கள் மீதும், அழகுமிக்க விரிப்புகள் மீதும் அமர்ந்த வண்ணம் தம் பணிகளைத் தொடர்வார்கள்.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.

55:77. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வழிகாட்டுதலின்படி இத்தகைய வளம் மிக்க சமுதாயம் உருவாவது பொய்யென்று கூறுகிறீர்களா?


تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ.

55:78. நபியே! மிக்க சிறப்பும் கண்ணியமும் உள்ள உங்களுடைய இறைவனின் அழகான செயல் திட்டங்களை சிறப்பிக்க உழைத்து வருவீராக. அப்போது தான் இறைவனின் பரிபாலன அமைப்பு பளிச்சிடும் (பார்க்க 39:69)
இத்தகைய சிறந்த சமுதாயம் இவ்வுலகிலும் ஏற்படும் மறு உலகிலும் தொடரும். இவையே இறைவழிகாட்டுதலின் படி செயல்படும் போது கிடைக்கின்ற பாக்கியங்களாகும்.