بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
54:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ.
54:1. இதுவரையில் அளிக்கப்பட்ட வாக்குபடி புரட்சி வெடிக்கும் காலக் கட்டம் நெருங்கிவிட்டது. அப்போது சந்திரனை தேசிய சின்னமாகக் கொண்டு நடக்கும் ஏகாதிபத்திய ஆட்சியமைப்பு பிளவுபட்டுப் போகும்.
மக்கமா நகரில் குரைஷியர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. அதன் தேசிய கொடியின் சின்னம் சந்திரனாகும். இந்த வாசகத்திற்கு இந்தப் பொருளையே தந்துள்ளோம். காரணம் சந்திரனின் புவி ஈர்ப்பைக் கொண்டு தான் பூமியில் உயிரினம் வாழ முடிகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி சற்றே தள்ளிப் போனாலோ அல்லது குறைந்து விட்டாலோ இங்கு உயிரினம் உயிர் வாழ முடியாது. உண்மை இவ்வாறிருக்கும் போது, சந்திரன் பிளப்பது என்பது அல்லாஹ் உருவாக்கியுள்ள இயற்கை சட்டங்களுக்குப் புறம்பான ஒன்றாகும். எனவே நாம் குரைஷியர்கள் ஆட்சியின் சின்னமாக இருந்த சந்திரன் இரண்டாக பிளந்து போகும் என்ற பொருளை தந்துள்ளோம்.
وَإِن يَرَوْا۟ ءَايَةًۭ يُعْرِضُوا۟ وَيَقُولُوا۟ سِحْرٌۭ مُّسْتَمِرٌّۭ.
54:2. நடக்கவிருக்கும் அந்த புரட்சியைப் பற்றிய அறிகுறிகள் பல ஏற்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றை கவனிப்பதற்குப் பதிலாக, அவர்கள்
وَكَذَّبُوا۟ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍۢ مُّسْتَقِرٌّۭ.
54:3. அதை நம்பத் தயாராக இல்லை. அவர்கள் கண்மூடித்தனமாக சுய நலக்காரர்களையே பின்பற்றி நடக்கிறார்கள். ஆனால் அந்த புரட்சி நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி நடந்தே தீரும் என்பதை அவர்கள் அறியவில்லை.
وَلَقَدْ جَآءَهُم مِّنَ ٱلْأَنۢبَآءِ مَا فِيهِ مُزْدَجَرٌ.
54:4. காரணம் இத்தகைய முன்னறிவிப்பு செய்திகள் இதற்கு முன்பும் அவர்களிடம் வந்தே இருக்கின்றன.
அதாவது அந்த முன்னறிவிப்புகளை வரலாற்று ஆதாரங்களை கொண்டுதான் தர முடியும். அந்த அழிவு வந்த பின் எவ்வாறு தர முடியும்? அப்படியும் அந்த தருணத்தில் எச்சரிக்கை செய்தாலும் ஒரு பலனும் கிடைக்காதே!
حِكْمَةٌۢ بَٰلِغَةٌۭ ۖ فَمَا تُغْنِ ٱلنُّذُرُ.
54:5. இருந்தும் அவற்றை தெளிவான ஞானத்தின் அடிப்படையில் எச்சரிக்கை செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றைப் பற்றி அவர்கள் சிந்திக்காததால் அவை அவர்களுக்கு பலனளிக்கவில்லை.
فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ ٱلدَّاعِ إِلَىٰ شَىْءٍۢ نُّكُرٍ.
54:6. எனவே அவர்களுக்கு ஆதாரப்பூர்வமாக முன்னெச்சரிக்கை செய்தும், அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். அவர்களுக்கு “மனித செயல்களுக்கேற்ப விளைவுகள்” என்ற தீர்ப்பு கிடைத்து விடும். அப்போது வெறுக்கத்தக்க வகையில் அழைப்பவர்கள் அழைப்பை ஏற்று கைதிகளைப் போல் செல்லட்டும்.
خُشَّعًا أَبْصَٰرُهُمْ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌۭ مُّنتَشِرٌۭ.
54:7. அப்போது வெட்டுகிளிகள் எவ்வாறு தம் புதை குழியிலிருந்து பரவிச் செல்லுமோ, அவ்வாறே இவர்கள் தம் வசிப்பிடத்திலிருந்து திக்கற்ற நிலையில் வெட்கத்தால் கூனி குறுகி வெளியே பறந்து வருவார்கள்.
مُّهْطِعِينَ إِلَى ٱلدَّاعِ ۖ يَقُولُ ٱلْكَٰفِرُونَ هَٰذَا يَوْمٌ عَسِرٌۭ.
54:8. அழைப்பவர்களின் அழைப்பை ஏற்று விரைந்தோடி வருவார்கள். அப்போது நிராகரித்தவர்கள், இனி நமக்குக் கேடு காலம்தான் என்று புலம்பியவாறு வருவார்கள்.
۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ فَكَذَّبُوا۟ عَبْدَنَا وَقَالُوا۟ مَجْنُونٌۭ وَٱزْدُجِرَ.
54:9. இதற்கு முன்பும் நூஹ்வுடைய சமூகத்தாரும் அவர் விடுத்த முன்னெச்சரிக்கைகளை பொய்யென கூறி வந்தனர். அவருடைய அறிவுரைகளை ஏற்காமல் அவரை பைத்தியக்காரர் என்றே கூறி, விரட்டவும் செய்தனர்.
فَدَعَا رَبَّهُۥٓ أَنِّى مَغْلُوبٌۭ فَٱنتَصِرْ.
54:10. அப்போது அவர், “என் சமூகத்தாரை என்னால் நேர்வழிக்கு கொண்டுவர முடியாததால், எனக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே நீ எனக்கு உதவி செய்வாயாக!” என்று தன் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
فَفَتَحْنَآ أَبْوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٍۢ مُّنْهَمِرٍۢ.
54:11. ஆகவே இறைவனின் நியதிப்படி வானங்களின் வாயிலை திறந்து விட்டது போல் அங்கு தொடர்ந்து மழை பெய்து வந்தது.
وَفَجَّرْنَا ٱلْأَرْضَ عُيُونًۭا فَٱلْتَقَى ٱلْمَآءُ عَلَىٰٓ أَمْرٍۢ قَدْ قُدِرَ.
54:12. அதுமட்மின்றி பூமியிலிருந்து நீரூற்றுகள் பொங்கி எழுந்தன. இவை இரண்டும் அளவின்றி கலந்து அவை பிரளயமாக உருவெடுத்தன.
وَحَمَلْنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلْوَٰحٍۢ وَدُسُرٍۢ.
54:13. அப்போது பலகையினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட படகில் ஏறிக் கொள்ளும்படி அவருக்கு இறைவனிடமிருந்து வஹீச் செய்தி வந்தது. அவ்வாறே அவரும் அவரை சார்ந்தவர்களும் அவருடன் ஏறிக் கொண்டனர்.
تَجْرِى بِأَعْيُنِنَا جَزَآءًۭ لِّمَن كَانَ كُفِرَ.
54:14. இப்படியாக அவருடைய அறிவுரைகளை ஏற்க மறுத்தவர்கள் அந்த பிரளயத்தில் மூழ்கிப் போனார்கள். ஆனால் இறைவனின் நியதிப்படி அந்த கப்பல் தண்ணீரில் மிதந்தது. அதில் ஏறிக் கொண்டவர்கள் தப்பித்துக் கொண்டார்கள்.
وَلَقَد تَّرَكْنَٰهَآ ءَايَةًۭ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ.
54:15. இப்படியாக அவர்களுக்கு ஏற்பட்ட அழிவு பிற்காலத்திற்கு வருகின்ற மக்களுக்கு படிப்பினையாக இருந்தது. இதன் மூலம் நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
அதாவது வஹீச் செய்தி ,வரக்கூடிய ஆபத்தைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கிறது. அதை கவனித்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோர் அந்த பேரழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இதுதான் நூஹ் நபியின் வரலாற்றில் கிடைக்கின்ற படிப்பினையாகும்.
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ.
54:16. எனவே இறைவனின் நியதிப்படி ஏற்பட்ட வேதனைகளையும் அதற்கு முன் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைப் பற்றியும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ.
54:17. மேலும் மக்கள் அனைவரும் அறிவுரைப் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்தோம். இதிலிருந்து நல்லறிவுரைகளைப் பெறுவோர் உண்டா?
كَذَّبَتْ عَادٌۭ فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ.
54:18. அதே போல ஆது சமூகத்தாரும் இறைத்தூதர் எடுத்துரைத்த அறிவுரைகளை பொய்ப்பித்து வந்தனர். அதைத் தொடர்ந்து இறைவனின் நியதிப்படி அவர்களுக்கு ஏற்படவிருக்கும் வேதனைகளைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًۭا صَرْصَرًۭا فِى يَوْمِ نَحْسٍۢ مُّسْتَمِرٍّۢ.
54:19. அவர்கள் விடுத்த முன்னெச்சரிக்கைப் படி அந்த பிரதேசத்தில் துர்பாக்கியமான காலம் வந்து விட்டது. (பார்க்க 41:16) அங்கு பேரிரைச்சல் கொண்ட பூதக் காற்று வீசத் தொடங்கியது. அது ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் நீடித்தது (பார்க்க 69:7)
تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍۢ مُّنقَعِرٍۢ.
54:20. அதனால் அவர்கள் அனைவரும் வேரோடு பிடுங்கப்பட்ட பேரீத்த மரங்களைப் போல தலைக்குப்புற விழுந்து கிடந்தனர். மேலும் அந்த பிரதேசமே இருந்த இடம் காணாமல் போய்விட்டது.
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ.
54:21. எனவே இறைவனின் நியதிப்படி ஏற்பட்ட வேதனைகளையும் அதற்கு முன் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைப் பற்றியும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ.
54:22. மேலும் மக்கள் அனைவரும் அறிவுரைப் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்தோம். இதிலிருந்து நல்லறிவுரைகளைப் பெறுவோர் உண்டா?
كَذَّبَتْ ثَمُودُ بِٱلنُّذُرِ.
54:23. அதே போல சமூது கூட்டத்தாரும் அவர்களுக்கு விடப்பட்ட முன்னெச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவருடைய அறிவுரையை தட்டிக் கழித்தனர்.
فَقَالُوٓا۟ أَبَشَرًۭا مِّنَّا وَٰحِدًۭا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذًۭا لَّفِى ضَلَٰلٍۢ وَسُعُرٍ.
54:24. அவர்கள், “நம்மிடையே வாழ்ந்து வந்த ஒருவரை நாம் எவ்வாறு பின்பற்ற முடியும்? நாம் அவரைப் பின்பற்றினால் இருப்பதையும் இழந்து பைத்தியக்காரர்களாக வழிகேட்டில் செல்ல வேண்டியது தான்” என்றார்கள்.
أَءُلْقِىَ ٱلذِّكْرُ عَلَيْهِ مِنۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌۭ.
54:25. மேலும் அவர்கள் நம்மிடையே இருந்த ஒருவர் மீது தானா இந்த அறிவுரைகள் இறக்கி அருளப்பட வேண்டும்? இல்லை. அவரை பார்த்தால் ஆணவம் பிடித்த பொய்யர் என்றே நினைக்கத் தோன்றுகிறது” என்று ஏளனமாகக் கூறி வந்தனர்.
سَيَعْلَمُونَ غَدًۭا مَّنِ ٱلْكَذَّابُ ٱلْأَشِرُ.
54:26.“ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்கள் யார் என்ற உண்மையை விரைவில் அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டது.
إِنَّا مُرْسِلُوا۟ ٱلنَّاقَةِ فِتْنَةًۭ لَّهُمْ فَٱرْتَقِبْهُمْ وَٱصْطَبِرْ.
54:27. அச்சமூகத்தார் எந்த அளவுக்கு இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய ஒரு பெண் ஒட்டகத்தை மையமாக வைத்து சாலிஹ் நபி மூலம் ஒப்பந்தம் செய்தோம். (பார்க்க 11:64) அவர்களை முறைப்படி கண்காணித்து வரும்படியும் சொன்னோம்.
وَنَبِّئْهُمْ أَنَّ ٱلْمَآءَ قِسْمَةٌۢ بَيْنَهُمْ ۖ كُلُّ شِرْبٍۢ مُّحْتَضَرٌۭ.
54:28. அவ்வூரில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்ததால், அந்த ஒப்பந்தப்படி ஒவ்வொருவரும் முறைப்படி வரிசையில் வந்து தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். அந்த வரிசையில் அந்த ஒட்டகமும் இருக்கும். அவர்கள் இதைக் கட்டிக் காப்பாற்றினால் அவர்கள் சட்ட ஒழுங்கைப் பேணி நடப்பதாக பொருள்படும் எனக் கூறினோம்.
فَنَادَوْا۟ صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ.
54:29. ஆனால் அம்மக்களோ அந்த ஒப்பந்தத்தை முறித்துவிடவே விரும்பினார்கள். எனவே அவர்களில் ஒருவரை அழைத்து அந்த ஒட்டகத்தை தரித்துவிட கூறினார்கள். அவனும் அவ்வாறே அதன் கால்களின் நரம்புகளை தரித்துவிட்டான். அதாவது அந்த அமைப்பு நடைபெறாதவாறு தடுத்துவிட்டான்.
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ.
54:30. அதை தொடர்ந்து இறைவனின் நியதிப்படி அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைகளையும் அதற்கு முன் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைப் பற்றியும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةًۭ وَٰحِدَةًۭ فَكَانُوا۟ كَهَشِيمِ ٱلْمُحْتَظِرِ.
54:31. எனவே அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் பேரொலியுடன் கூடிய மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் காய்ந்து மிதிப்பட்ட வேலியின் கூளம் போன்று ஆகிவிட்டனர்.
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ.
54:32. இப்படியாக மக்கள் அனைவரும் அறிவுரைப் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்தோம். இதிலிருந்து நல்லறிவுரைகளை பெறுவோர் உண்டா?
كَذَّبَتْ قَوْمُ لُوطٍۭ بِٱلنُّذُرِ.
54:33. அதே போன்று லூத்துடைய சமூகத்தாரும் அவர் செய்த முன்னெச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٍۢ ۖ نَّجَّيْنَٰهُم بِسَحَرٍۢ.
54:34. எனவே லூத் நபியை சார்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அங்கு பொழிந்த கல்மாரி பொழிவில் அழிந்து போனார்கள். (பார்க்க 11:81-83) லூத் நபியும் அவரைச் சார்ந்தவர்களும் பொழுது விடிவதற்குள் அங்கிருந்து புறப்பட்டு மாற்று இடத்திற்கு சென்று விட்டனர்.
نِّعْمَةًۭ مِّنْ عِندِنَا ۚ كَذَٰلِكَ نَجْزِى مَن شَكَرَ.
54:35. இப்படியாக இறைவனின் வழிகாட்டுதல் என்ற அருளால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறே இறைவனின் வழிகாட்டுதலின்படி நடப்பவர்களுக்கு நற்பலன்கள் கிடைத்து விடுகின்றன.
وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا۟ بِٱلنُّذُرِ.
54:36. அந்த பேரழிவுகள் ஏற்படுவதற்கு முன் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் கடுமையான வேதனைகளைப் பற்றி லூத் நபி பலமுறை எச்சரித்து வந்தார். எனினும் அவர்கள் அந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தவே இல்லை.
وَلَقَدْ رَٰوَدُوهُ عَن ضَيْفِهِۦ فَطَمَسْنَآ أَعْيُنَهُمْ فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ.
54:37. இறுதியாக லூத் நபியிடம் எச்சரிக்கை செய்திகளை எடுத்து வந்த விருந்தினர்களிடமும் தீய எண்ணத்தோடு நெருங்க முற்பட்டனர். அந்த அளவுக்கு அவர்கள் ஓரினச் சேர்க்கையின் மோகத்தில் கண்மூடித்தனமாக மூழ்கியிருந்தனர். எனவே அவர்களுக்கு வந்த எச்சரிக்கைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே தயாராக இல்லை. எனவே அந்த வேதனைகளை சுவைத்துப் பாருங்கள் என்று அவர்களிடம் கூற வேண்டியதாயிற்று.
وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌۭ مُّسْتَقِرٌّۭ.
54:38. அவ்வாறே மறுநாள் காலை அவர்களுக்கு அந்தப் பேரழிவு ஏற்பட்டு விட்டது.
فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ.
54:39. இப்படியாக இறைவனின் நியதிப்படி அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைகளையும் அதற்கு முன் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைப் பற்றியும் மக்கள் கவனிக்க வேண்டாமா?
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ.
54:40. இப்படியாக மக்கள் அனைவரும் அறிவுரைப் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்தோம். இதிலிருந்து நல்லறிவுரைகளைப் பெறுவோர் உண்டா?
وَلَقَدْ جَآءَ ءَالَ فِرْعَوْنَ ٱلنُّذُرُ.
54:41. அதே போன்று ஃபிர்அவுனின் சமூகத்தாருக்கும் அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் பேரழிவுகளைப் பற்றிய முன்னெச்சரிக்கை செய்திகள் வந்தன.
كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذْنَٰهُمْ أَخْذَ عَزِيزٍۢ مُّقْتَدِرٍ.
54:42. ஆனால் அவர்களோ இறைவனின் ஆதாரப்பூர்வமான அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்ப்பித்துக் கொண்டே வந்தனர். எனவே “தவறான செயல்களால் ஏற்படும் விளைவுகள்” என்ற சக்திவாய்ந்த பிடியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.
أَكُفَّارُكُمْ خَيْرٌۭ مِّنْ أُو۟لَٰٓئِكُمْ أَمْ لَكُم بَرَآءَةٌۭ فِى ٱلزُّبُرِ.
54:43. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! கடந்துபோன வரலாற்று ஆதாரங்களை மக்களுக்கு திரும்பத் திரும்ப எடுத்துரைத்து வாருங்கள். அவர்களிடம், “கடந்து போன சமூகத்தவர்களை விட நீங்கள் சக்தி வாய்ந்தவர்களா? அல்லது உங்களுக்கு அத்தகைய வேதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என எண்ணுகிறீர்களா? அதற்கான ஆதாரம் ஏதாவது உங்களிடம் உண்டா?” என்று கேளுங்கள்.
أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌۭ مُّنتَصِرٌۭ.
54:44. நபியே! உங்களுக்கு எதிராக அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உங்களை முறியடித்து விடலாம் என்ற கற்பனையில் இருக்கிறார்களா?
سَيُهْزَمُ ٱلْجَمْعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ.
54:45. அப்படியும் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி களத்தில் சந்திக்க முன்வரட்டும். வெகு சீக்கிரத்தில் அவர்கள் சிதறடித்து புறங்காட்டி ஓடிவிடுவார்கள்.
بَلِ ٱلسَّاعَةُ مَوْعِدُهُمْ وَٱلسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ.
54:46. எனவே இறைவனின் நியதிப்படி, இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் அறிவிப்பு செய்தவாறு புரட்சி வெடிக்கும் காலம் நெருங்கி விட்டது. அதன்பின் அவர்களுடைய நிலைமை மிகவும் கடுப்பானதாகவும் கசப்பானதாகவும் ஆகிவிடும்.
إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى ضَلَٰلٍۢ وَسُعُرٍۢ.
54:47. அப்போது குற்றவாளிகள் பெரும் நஷ்டத்திலும் வேதனைகளிலும் இருப்பார்கள்.
يَوْمَ يُسْحَبُونَ فِى ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا۟ مَسَّ سَقَرَ.
54:48. அவர்களை தலைக் குப்புறமாக இழுத்துச் சென்று வேதனையளிக்கும் சிறைக்குள் தள்ளப்படும். அங்கு அந்த வேதனைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கட்டும் என்று விடப்படுவார்கள்.
إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَٰهُ بِقَدَرٍۢ.
54:49. இந்த வேதனைகள் அவர்களை வந்தடைவதற்கு காலத் தாமதம் ஏன் என்ற கேள்வி எழலாம். இறைவனின் செயல்திட்டப்படி ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் சட்ட வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே எல்லாமே முறைப்படியே நடந்து வரும். அதன் படியே அவர்களுக்கு வேதனைகளும் வந்தடையும்.
وَمَآ أَمْرُنَآ إِلَّا وَٰحِدَةٌۭ كَلَمْحٍۭ بِٱلْبَصَرِ.
54:50. அத்தகைய வேதனைகளை முறைப்படி அளிக்கும் சட்டங்களை நாம் ஏற்கனவே ஏற்படுத்தாதிருப்பின் அந்த கட்டளைகளை கண்மூடி திறப்பதற்குள் நிறைவேறும்படி செய்திருக்க முடியும். (பார்க்க 16:61)
وَلَقَدْ أَهْلَكْنَآ أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ.
54:51. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்போரே! உங்களைப் போன்ற எத்தனையோ சமுதாயத்தினர் நாம் நிர்ணயித்த விதிமுறைகளின் படி அழிந்தே இருக்கிறார்கள். இதைப் பற்றி சிந்தித்து நல்லறிவுரைகளைப் பெறும் எண்ணம் உங்களிடம் உண்டா?
وَكُلُّ شَىْءٍۢ فَعَلُوهُ فِى ٱلزُّبُرِ.
54:52. உலகில் உள்ள ஒவ்வொருவரும் செய்து வரும் செயல்களும் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன.
وَكُلُّ صَغِيرٍۢ وَكَبِيرٍۢ مُّسْتَطَرٌ.
54:53. அந்த செயல்கள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அந்த பதிவேட்டில் இல்லாமல் இருக்காது.
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَنَهَرٍۢ.
54:54. இறைவனின் இந்த சட்ட விதிமுறைகளுக்கு அஞ்சி சிறப்பாக செயலாற்றுவோர் சுவனத்திற்கு ஒப்பான சோலைகளில் வாழும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
فِى مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍۢ مُّقْتَدِرٍۭ.
54:55. இதுவே அவர்கள் செய்து வரும் நற்செயல்களுக்குரிய பதவியும் உயர் அந்தஸ்தும். இவையாவும் சர்வ வல்லமையுடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்யப்பட்ட ஏற்பாடுகளாகும்.