بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

53:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ.

53:1. விடியற்காலையில் தோன்றி மறையும் நட்சத்திரம் ஓர் உண்மைக்கு சான்று பகர்கிறது.
அதாவது நட்சத்திரங்கள் தம் பாதையை ஒருபோதும் மாற்றிக் கொள்வதில்லை. எனவே எந்த கவலையுமின்றி இரவு நேரங்களில் சரியான திசையை அறிந்து, பாலைவனத்திலும் கடலிலும் உங்களால் பயணம் செய்ய முடிகிறது. (பார்க்க 16:16) அவை தாமாக அவ்வாறு தோன்றி மறைவதில்லை. அவற்றின் பின்னணியில் அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை உள்ளது. அதனடிப்படையில் உருவான நிலைமாறா சட்டங்கள் செயல்படுகின்றன. அதனால் தான் அவை ஒருபோதும் வழி தவறிச் செல்வதில்லை. அது போலவே


مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ.

53:2. இறைத்தூதராகிய உங்கள் தோழரும் ஒருபோதும் வழி தவறிச் செல்ல மாட்டார். உங்களையும் தவறான வழியில் அழைத்துச் செல்லவும் மாட்டார். காரணம்


وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ.

53:3. அவர் எடுத்துரைக்கும் வழிகாட்டுதல்கள் சுயமாக சிந்தித்து சொல்கின்ற செய்திகள் அல்ல.


إِنْ هُوَ إِلَّا وَحْىٌۭ يُوحَىٰ.

53:4. மாறாக அல்லாஹ்வின் வஹீ எனும் வழிகாட்டுதல்கள் அடிப்படையாகக் கொண்டு எடுத்துரைப்பவையே ஆகும்.


عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ.

53:5. அவர் எடுத்துரைக்கும் வழிகாட்டுதல்கள் யாவும் சர்வ வல்லமையுடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கப் பெற்றவை ஆகும்.
அதுமட்டுமின்றி இறைவழிகாட்டுதல்கள் மனித வாழ்வின் அனைத்து விஷயங்களைப் பற்றியும் முழு அளவில் சூழ்ந்தவையாக இருக்கின்றன.


ذُو مِرَّةٍۢ فَٱسْتَوَىٰ.

53:6. எனவே இறைவழிகாட்டுதல் என்பது தனி நபர் மற்றும் ஒட்டுமொத்த மனித இனம் கடைப்பிடிக்க வேண்டிய உறுதிமிக்க வாழ்க்கை நெறிமுறைகளை உள்ளடக்கியவை ஆகும்.


وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ.

53:7. இத்தகைய மகத்துவங்களைக் கொண்ட இறை வழிகாட்டுதலை பெற்றிருப்பவர் ஞானத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்.
ஒருவர் தரையில் நின்றுகொண்டு பார்க்கும் போது, அவரை சுற்றியுள்ளவற்றை மட்டுமே அவரால் பார்க்க முடியும். அவர் உயரமான இடத்தில் நின்று பார்த்தால், விசாலமான இடங்களை பார்க்க முடியும். எந்த அளவுக்கு உயரத்தில் நிற்கிறாரோ, அந்த அளவுக்கு விரிவான இடங்களை பார்க்க முடியும். அது போல மனித அறிவு ஒர் எல்லைக்கு உட்பட்டதாகும். அது தன்னை பாதுகாக்கவே வழி சொல்லும். ஆனால் அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்விடமிருந்து அருளப்படுகின்ற வழிகாட்டுதல் என்ற ஞானம் உலகளாவிய விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றை அறிந்துக்கொள்பவர் உலக விவகாரங்களை எளிதாக அறிந்து, அவற்றை எவ்வாறு சரி செய்வது என்ற ஞானத்தின் உச்சத்தில் இருப்பர். (பார்க்க 81:23, 84:7-8)
அத்தகைய உச்சநிலையை அடைந்த பின்னர், பிரபஞ்ச படைப்புகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அவற்றை சுற்றி மனித வாழ்வின் இறுதி இலக்கு என்ன என்கிற கேள்வி


ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ.

53:8. ஆகிய இவற்றிற்கிடையே பின்னிப் பிணைந்துள்ள நெருக்கமான தொடர்பை பற்றிய ஞானத்தில் மூழ்கி விடுகிறார்.
இத்தகைய ஞானங்களைப் பெற்ற ஒருவர், மானுட உலகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற முழு செயல் திறன்களைக் கொண்டவராக ஆகிவிடுகிறார். அதாவது


فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ.

53:9. அவர் சமுதாய மேம்பாட்டிற்காக எடுக்கும் முடிவுகள் ஒரு வில்லின் இரு வளைவுகளைப் போல் இருக்கும். அவற்றின் இலக்குகள் ஒருபோதும் தப்பாது.
அதாவது இறைவனின் செயல்திட்டங்கள் ஒரு புறம் - மனிதனின் செயல்கள் மறுபுறம். இவை இரண்டும் ஒரே இலக்கை நோக்கி இருந்தால் தான், மனித உழைப்புக்கு சரியான பலன்கள் கிடைக்கும். விஞ்ஞான ஆய்வுகளே இதற்கு ஆதாரமாக விளங்கும்.


فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ.

53:10. இத்தகைய ஞானத்தின் உச்ச நிலையை அடையும் அவர், அந்த ஞான உபதேசங்களை தன் வரை வைத்துக் கொள்ளாமல் அவற்றை உலக மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
இறைவனின் செயல்திட்டங்களின் படி சமுதாயங்கள் செயல்படும்போது, அங்கு உருவாகும் சுவனத்திற்கு ஒப்பான சீர்பட்ட சமுதாயத்தைப் பற்றி தன் மனக் கண்களால் காண்கிறார்.


مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ.

53:11. அவ்வாறு அவர் காண்பவற்றையே மக்களுக்கு எடுத்துரைக்கிறாரே அன்றி அவர் பொய்யுரைக்கவில்லை.
அதாவது அவர் ஞானத்தின் உச்சத்தில் இருப்பதால் அவருக்கு உண்மை என்னவென்று தெளிவாகப் புரிகிறது. அதன்படி சமுதாய சீர்திருத்தங்களைக் கொண்டுவர பாடுபட வேண்டும் என்று மக்களிடம் எடுத்துரைக்கிறார். ஆனால் மக்களுக்கு அவருடைய நோக்கங்களைப் பற்றிய உண்மை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே


أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ.

53:12. அவர் காண்பவற்றைப் பற்றி நீங்கள் வாக்கு வாதம் செய்கிறீர்கள். இது சரியா?
மேலும் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர் காண்பது தூக்கத்தில் காணும் கனவு போன்றது அல்ல. இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருவர் காணும் இலட்சிய கனவாகும். புரியாத மக்களுக்கு அது புதிராக இருக்கலாம். ஆனால் உண்மைப் புரிந்தவர்களுக்கு அது சாத்தியமாகவே தோன்றும்.


وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ.

53:13. எனவே இறைத்தூதர் தன் இலட்சிய கனவு ஈடேறியே தீரும் என்பதை மீண்டும் மீண்டும் உறுதி கொள்கிறார்.
அந்த இலட்சியம் ஈடேறினால் தான் மனித உலகில் தோன்றியுள்ள பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறந்து, மனித வாழ்வின் இறுதி இலக்கை அடைய முடியும். ஒருவர் வெயிலின் கடுமையைத் தாக்கு பிடிக்க முடியாமல் நிழலைத் தேடி அலைந்து,


عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ.

53:14. இலந்தை மரத்தடியில் குளிர்ந்த காற்றை சுவாசிக்க இடம் கிடைத்தால் எவ்வளவு சுகமாக இருக்குமோ அதுபோல, மனிதனிடையே இருந்து வரும் பிரச்னைகள் தீர்ந்து, அவன் தேடி அலையும் நிம்மதியான வாழ்வு கிடைத்துவிடும்.


عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ.

53:15. அப்போது தான் சுவர்க்கத்து வாயில் வரையில் சென்றடையும் வாய்ப்பு மனிதனுக்குக் கிடைக்கும். அதுவே “ஜன்னதுல் மாவா” என்பதாகும். அதாவது விரும்புவது கிடைக்கும் இடம் என்பதாகும்.


إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ.

53:16. எனவே இறைத் தூதரின் இலட்சிய பயணத்தின் கனவு, வஹீயின் செயல் திட்டங்களைச் சுற்றியே இருக்கும்.


مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ.

53:17. எனவே அவர் ஒருபோதும் அதைவிட்டு விலகியதும் இல்லை. திசை மாறிச் செல்வதும் இல்லை.


لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ.

53:18. இப்படியாக அவர் தன் இறைவனின் மாபெரும் செயல் திட்டங்களைப் பற்றிய உண்மைகளை கண்டறிந்தார்.


أَفَرَءَيْتُمُ ٱللَّٰتَ وَٱلْعُزَّىٰ.

53:19. இத்தகைய உயர் இலட்சியங்கள் எதுவுமின்றி, "லாத்", "உஸ்ஸா" என்று சிலைகளுக்கு பெயரிட்டுக் கொண்டு அவற்றை ஆராதித்து வணங்கி வருபவர்களைக் கண்டீர்களா?


وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ.

53:20. மேலும் மூன்றாவது பெரிய தெய்வமாம், ‘மனாத்’தைக் கண்டீர்களா?


أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ.

53:21. உங்களுக்கு ஆண் சந்ததிகள் வேண்டும். ஆனால் இறைவனுக்கு பெண் சந்ததியா?


تِلْكَ إِذًۭا قِسْمَةٌۭ ضِيزَىٰٓ.

53:22. அப்படியானால் அது மிகவும் அநியாயமான பங்கீட்டு முறை ஆயிற்றே!


إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌۭ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ.

53:23. இவையெல்லாம் நீங்களே வைத்துக் கொண்ட பெயர்களே அன்றி வேறில்லை. நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்கள்! (12:40) இதற்கு அல்லாஹ்விடமிருந்து எந்த ஆதாரமும் வரவில்லை. இத்தகையவர்கள் வீணாண எண்ணங்களுடன் தம் மனோ இச்சையின்படி வாழவே விரும்புகிறார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு இறைவனிடமிருந்து நேரான வழி வந்தே இருக்கிறது.
அவற்றையெல்லாம் அவர்கள் புறந்தள்ளிவிட்டு இத்தகைய கதைகளை சொல்லி பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்.


أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰ.

53:24. அங்கு வரும் ஒவ்வொருவரும் தன் நேர்ச்சைகளைக் கொண்டு வருகின்றனர். அவை அவற்றை நிறைவேற்றி வைக்கும் என்று நம்புகின்றனர். அது எப்படி சாத்தியமாகும்?
உதாரணத்திற்கு நீதி மன்றத்தில் இருக்கும் வழக்கு,தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாதியும் பிரதிவாதியும் நேர்ச்சை செய்தால் அவ்விருவரின் நேர்ச்சைகளை அவற்றால் எப்படி நிறைவேற்றி வைக்க முடியும்? இவைதான் அவரவர் மனோ இச்சைப்படி நடக்கும்போது, ஏற்படும் மோதல்களாகும். இறை வழிகாட்டுதலின் படி சமுதாயம் உருவாகுமானால் இத்தகைய மோதல்களுக்கு இடமிருக்காது.


فَلِلَّهِ ٱلْءَاخِرَةُ وَٱلْأُولَىٰ.

53:25. ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மனிதனின் தற்காலிக மற்றும் வருங்கால நிலையான சந்தோஷங்களையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட வலியுறுத்துகிறது.
ஆனால் அவர்களோ பிரபஞ்ச சக்திகளை தெய்வங்களாக கருதி அவற்றை வணங்கி வருகின்றனர். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமியின் சக்தி ஆகியவற்றை பஞ்சப் பூதங்கள் என எண்ணி அவற்றிற்கு உருவம் கொடுத்து வணங்கி வருகின்றனர்.


۞ وَكَم مِّن مَّلَكٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ لَا تُغْنِى شَفَٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ.

53:26. அவ்வாறு வானளாவிய இயற்கை சக்திகளை அவர்கள் வணங்கி வருவதால், அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடுமா? மாறாக அவற்றின் ஒவ்வொன்றிலும் உள்ள தன்மைகளை அறிந்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் முறையை அறிந்து கொண்டால் மனிதனுக்கு பல பலன்கள் கிடைக்கும் அல்லவா? அவை யாவும் நிலைமாறா தன்மைகளுடன் இயங்கி வருபவை ஆயிற்றே!


إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ.

53:27. எனவே அல்லாஹ் நிர்ணயித்த “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டத்தை ஏற்காதவர்கள் தாம், இயற்கை சக்திகளுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டிக் கொண்டு அவற்றை வழிபட்டு வருவார்கள்.


وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًۭٔا.

53:28. மேலும் அவற்றைப் பற்றி தெளிவான ஞானம் எதுவுமின்றி இவ்வாறு வழிபட்டு வருகிறார்கள். எனவே அவை யாவும் வெறும் யூகங்களின் அடிப்படையில் உருவானவையே. அவற்றையே அவர்கள் பின்பற்றுகின்றனர் (பார்க்க 6:148). எனவே மூடநம்பிக்கையில் வாழ்பவர்களுக்கு அவை உண்மையாகத் தோன்றலாம். ஆனால் அவற்றை அறிவுப்பூர்வமாக ஆராயும்போது, இத்தகைய மூடநம்பிக்கைகள் இருந்த இடம் காணாமல் போய்விடும்.


فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا.

53:29. இந்த அளவிற்கு தெளிவான விளக்கங்களை அளித்தபின்பும், எவர் அல்லாஹ்வின் அறிவுரைகளை புறக்கணித்துவிட்டு, தற்காலிக சுகத்தையே நோக்கமாக கொண்டு வாழ்கிறார்களோ, அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட வேண்டியதுதான். நீங்கள் இறைவன் காட்டிய செயல்திட்டங்களின் படி செயல்பட்டு வாருங்கள்.


ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ.

53:30. காரணம் அவர்களுடைய அறிவு அத்தகைய குறுகிய வட்டரைக்குள்ளேயே செயல்பட்டு வருகிறது. அதாவது தம் கரங்களால் தயாரித்த சிலைகளை கடவுளாக பாவித்து வணங்குவதே சரி என அவர்களுடைய அறிவு சொல்கிறது. எனவே நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதும், வழிதவறிச் செல்பவர்கள் யார் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியும்.


وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى.

53:31. மேலும் அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. எனவே மனிதனின் செயல்களுக்கு ஏற்ற வகையில்தான் அவை விளைவுகளை ஏற்படுத்தி வரும். சமுதாய மேம்பாட்டிற்காக நற்செயல்களை செய்வோருக்கு அவை நற்பலன்களை அளித்து வரும். இதுவே அல்லாஹ்வின் செயல்திட்டங்களின்படி செய்யப்பட்ட ஏற்பாடுகளாகும். (மேலும் பார்க்க 11:7, 45:22)


ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌۭ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ.

53:32. மனித வாழ்வில் சிறுசிறு பிழைகள் ஏற்படுவது சகஜமே. அவற்றை மனிதனால் சரிசெய்து கொள்ள முடியும். ஆனால் அவனுடைய எதிர் காலத்தையே சீரழிக்கும் பெரிய அளவிலான தீய செயல்களையும் (பார்க்க 4:30-31) மானக்கேடான செயல்களையும் செய்து வந்தால், அவற்றை அவனால் எப்படி சரிசெய்ய முடியும்? எனவே இதுபோன்ற தீய செயல்களை அவன் தவிர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். (பார்க்க 5:90). அப்போது தான் தன்னுடைய இறைவனிடமிருந்து அவனுக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும்.
மனிதனிடம் இருக்கும் பலவீனம் என்ன? அவன் தன் தாய் வயிற்றில் சிசுவாக இருந்ததிலிருந்து பெரியவனாகும் வரையில் அவனது வாழ்வில் எப்படிப்பட்ட இடையூறுகள் எல்லாம் ஏற்படும்? அவற்றில் எதை அவனால் சரிசெய்து கொள்ள முடியும்? இது போன்ற விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
எனவே மனிதன் தன்னைத் தானே மகா புத்திசாலி என்று எண்ணிக் கொள்வதில் பயன் ஏதுமில்லை. அவனுடைய பண்புகள் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளன என்பதை கண்டறிய அவனிடம் இருக்கும் உரைகல் குர்ஆன் மட்டுமே. அதிலுள்ள வழிகாட்டுதல்களை பேணி நடப்பதை வைத்தே அவனுள் நற்பண்புகள் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும்.


أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ.

53:33. ஆதாரம். இறைவனின் அறிவுரைகளை விட்டு திரும்பி விட்டவனை கவனித்துப் பார்த்தீர்களா?


وَأَعْطَىٰ قَلِيلًۭا وَأَكْدَىٰٓ.

53:34. சமுதாய மேம்பாட்டிற்காக அவன் கொடுப்பதோ மிகக் குறைவு. அதையும் அவன் தடுத்துக் கொள்கிறான்.


أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ.

53:35. அவன் செய்வதுதான் சரி என்பதை அறிய அவனுக்கு மறைவான ஞானம் கிடைத்துவிட்டதா?


أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ.

53:36. இதற்கு முன் மூஸா நபிக்கு அளிக்கப்பட்ட வேத அறிவுரைகள் தானே இந்த குர்ஆனிலும் தரப்பட்டுள்ளன! அதையும் அவன் திறந்து பார்க்க மாட்டானா?


وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ.

53:37. வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்த இப்றாஹீம் நபியின் வாழ்க்கை வரலாற்றையாவது அவன் படித்து அறிந்து கொண்டானா?


أَلَّا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ.

53:38. ஒருவர் செய்யும் பாவங்களின் சுமைகளை பிரிதொருவர் சுமக்க முடியாதே இதைப் பற்றி முந்தைய வேதங்களிலும் சொல்லப்பட்ட விஷயங்கள் தானே. அதைப் பற்றிய பயமாவது அவனுக்கு உண்டா?


وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ.

53:39. மனிதன் எதற்காக உழைக்கின்றானோ அவை தானே அவனுக்கு கிடைக்கும்? உழைக்காதவனுக்கு என்ன கிடைக்கும்?


وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ.

53:40. ஆனால் மனித உழைப்பின் பலன்கள் எதுவும் வீண் போகாது. அவற்றின் பலன்கள் விரைந்து தோற்றத்திற்கு வரும்.


ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ.

53:41. அவனுடைய உழைப்பிற்குரிய பலன்களில் எந்த குறைவும் வைக்கப்பட மாட்டாது. அதன் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.


وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ.

53:42. மனித வாழ்வின் இறுதி இலக்கு என்னவென்றால் அவன் இறைவழிகாட்டுதலின் படி சமூக அமைப்பை ஏற்படுத்தி கூட்டாக ஒன்றிணைந்து வாழ வேண்டும். தனி நபர் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் இறைவனின் சிறப்பு குணங்களை கூடுமான வரையில் தன்னில் வளர்த்துக் கொள்ள வேண்டும். (பார்க்க 2:138) மனித வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை இறை வழிகாட்டுதலின்படி தீர்த்துக் கொள்ள வேண்டும். (பார்க்க 79:44)


وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ.

53:43. இறைவனின் இந்த கொள்கையின்படி வாழும் சமுதாயம் மகிழ்வுடன் இருக்கும். இதற்கு மாற்றமாக வாழும் சமுதாயம் அழுது புலம்பிக் கொண்டிருக்கும்.


وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا.

53:44. இறைவன் ஏற்படுத்தியுள்ள இந்த வரையறையின் அடிப்படையில்தான் அவரவர் செயல்களுக்கு ஏற்றவாறு ஆற்றலில்லாத நடைபிண வாழ்வோ, ஆற்றல்மிக்க ஜீவனுள்ள வாழ்வோ கிடைத்து வரும்.
இவை அனைத்தும் முந்தைய வேதங்களிலும் சொல்லப்பட்ட விஷயங்களே. இருந்தும் அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு, அவர்கள் மனம் போன போக்கில் வாழவே விரும்புகிறார்கள். எனவே தான் அவர்கள் அல்லாஹ்வுக்குப் பதிலாக கற்பனை தெய்வங்களை உருவாக்கி அவற்றையே வணங்கி வருகின்றனர்.


وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ.

53:45. அல்லாஹ்வின் வல்லமையை அறிந்துக் கொள்ள அனைத்து படைப்புகளிலும் ஆண் பெண் என்று ஜோடி ஜோடியாக படைத்திருப்பதை அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?


مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ.

53:46. அதுவும் பெண்ணின் கர்ப்பப் பையில் செலுத்தப்படும் இந்திரியத் துளியைக் கொண்டு தான் தன் இனப்பெருக்கம் ஏற்படுகிறது என்பதையும் அவன் கவனித்துப் பார்க்க வேண்டாமா?


وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ.

53:47. இறைவனின் செயல்திட்டப் படி மனிதனுக்கு மட்டும் தனிச் சிறப்புகள் கூடிய ஆற்றல்கள் அளிக்கப்படுள்ளதே.


وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ.

53:48. மேலும் அவனுக்குத் தேவையான அனைத்து வாழ்வாதார வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் அவன் தன்னிரைவு பெற்றவனாக ஆகிவிடுகின்றான்.


وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ.

53:49. வாழ்வாதார வசதிகளைப் பொறுத்த வரையில் மற்ற உயிரினங்களுக்கும் இதே போன்று தான் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் மனிதனுக்கு தனிப்பட்ட முறையில் சிந்தித்து செயலாற்றும் பகுத்தறிவும் அளிக்கப்படுள்ளதே.
இறைவழிகாட்டுதலின் படி பகுத்தறிவைப் பயன்படுத்தி சிறப்பாக வாழ்வதற்குப் பதிலாக, அவன் மனோ இச்சையின்படி வாழவே விரும்புகிறான். இதனால் அவனுடைய அறிவு ஆசைகளுக்கு அடிமையாகி, தாம் செய்வது சரியா தவறா என்பதைக் கூட கண்டறியும் பகுத்தறிவு இல்லாமல் போயிவிடுகிறது. இப்படி வாழ்ந்த எத்தனையோ சமுதாயங்கள் அழிந்து தான் போயின.


وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ.

53:50. அவ்வாறு அழிந்து போன சமுதாயங்களில் ‘ஆது’ கூட்டத்தாரும் அடங்குவர்.


وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ.

53:51. பலம் வாய்ந்த சமூது கூட்டத்தாராவது அத்தகைய அழிவிலிருந்து தப்பினார்களா?


وَقَوْمَ نُوحٍۢ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ.

53:52. இதற்கு முன் வாழ்ந்த நூஹ்வுடைய சமூகத்தார்தான் மிஞ்சினார்களா? அவர்கள் யாவரும் நலிந்த மக்களுக்கு எதிராக அநியாய அக்கிரம செயல்களைச் செய்து அழிந்து போனவர்கள்தானே!


وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ.

53:53. இப்படியாக அநியாய அக்கிரமங்களைச் செய்த சமுதாயங்கள் அழிவிலிருந்து தப்பவே இல்லையே!


فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ.

53:54. அவர்கள் செய்து வந்த அட்டூழியங்களே அவர்களை சூழ்ந்துகொண்டன.


فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ.

53:55. மனிதனே! உன் இறைவனின் வல்லமைகளில் எதை மறுக்கப் போகிறாய்? இன்னுமா உனக்குச் சந்தேகம்?


هَٰذَا نَذِيرٌۭ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ.

53:56. இதற்குமுன் அழிந்து போன சமூகத்தாருக்கு வந்த எச்சரிக்கை செய்திகளைப் போன்றே இதுவும் முன்னெச்சரிக்கை செய்திகள் தானே!


أَزِفَتِ ٱلْءَازِفَةُ.

53:57. மனிதனே! உன் தவறான செயல்களால் ஏற்படவிருக்கின்ற அழிவுகள் நெருங்கி வருகின்றன.


لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ.

53:58. அந்த அழிவுகள் அல்லாஹ் நிர்ணயித்துள்ள காலத் தவணைக்குப் பின் முழு அளவில் தோற்றத்திற்கு வந்தே தீரும்.


أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ.

53:59. மனிதனே! இந்த எச்சரிக்கை செய்திகள் உனக்கு ஆச்சரியத்தைத் தருகின்றதா?


وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ.

53:60. இந்த முன்னெச்சரிக்கை செய்திகளை ஏற்று தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து, சிரித்து சந்தோஷமாக வாழப் போகிறீர்களா? அல்லது அவற்றை உதாசீனப்படுத்தி அழப் போகிறீர்களா?


وَأَنتُمْ سَٰمِدُونَ.

53:61. உங்களைப் பார்த்தால் அலட்சியமாக இருப்பது போல் உள்ளதே!!


فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩.

53:62. மனிதனே! விழித்திடு. தலை நிமிர்ந்து நில். அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் தலைவணங்கு.
அவனுடைய அறிவுரைகளின் படியே சீர்திருத்த நடவடிக்கை எடு. எல்லாமே சீராகி வரும். பேரழிவிலிருந்து உன் சமுதாயத்தை காப்பாற்றி விடு.